
தழல் 32:
அடிவானம் இருட்டிக் கொண்டு பெரும் இரைச்சலோடு காற்று சுழன்று சுழன்று வீசியது. மழை வரும் முன்னமே மின்னல் வெட்டி இடி பெரிதாய் முழங்கியது. அந்த இரைச்சலும் திடீரென உண்டான குளுமையையும் உணர்ந்தவர் வேகமாய் பதறி எழுந்தார். ஆராவின் கைகளை பற்றியபடியே ஆழ்ந்த உறக்கத்தில் அவரும் அமிழ்ந்துப் போயிருக்க வேண்டும். இடையில் அமுதன் இரண்டு முறை விழித்துப் பார்த்திருந்தான். அவனைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு பெரிதாய் எதுவும் இருக்காது என நம்பிக்கை தந்திருந்தார் அனு. நெடு நேரமாய் அப்படியே அமர்ந்திருந்த படியால் குறுக்கு அதிகமாய் வலியெடுத்தது. நேர் எதிரில் மாட்டியிருந்த சுவர் கடிகாரம் ஆறுமணி நேரம் கடந்து விட்டதாய் கூறியது.
சட்டென்று ஆராவின் முகத்தில் படிந்தது அவரின் பார்வை. சலனமில்லாத மயக்கத்தையும் தாண்டிய அப்படியொரு ஆழ்ந்த உறக்கம் அவளிடம். இத்தனை வருடங்களாய் தவறவிட்ட கணங்கள் அத்தனைக்கும் ஈடு செய்பவளைப் போன்ற அமைதியான ஆழ்ந்த உறக்கம். அது வள்ளியம்மை உடன் இருப்பதால் உண்டான நிம்மதி, தான் பாதுகாப்பாய் இருக்கிறோம் என்ற எண்ணத்தில் விழைந்த உறக்கமாய் தான் இருக்க வேண்டும். அதைக் கண்டவரின் முகத்தில் சின்னதாய் ஒரு புன்னகை கீற்று. ஆதுரமாய் அவளின் தலை வருடியவரின் விரல்களில் மெல்லிய நடுக்கம் இழையோடியது.
“ஏதாவது சாப்பிடறீங்களா மேடம்…” என்றார் பர்வதம் கொஞ்சமாய் விரிந்த இதழ்களுடம்.
“இந்த மேடத்தை கடைசி வர விடவே மாட்டீயா பாரு…” என்றார் அலுப்பாய் வள்ளியம்மை. பதிலாய் புன்னகை கீற்றொன்று விரிந்தது அவரிடம்.
“ரொம்ப நேரம் தூங்கிட்டேனா..? பச்… எழுப்பி இருக்கலாமில்ல… எதுவும் போன் வந்ததுதா..?” என்றபடியே கால்சராயில் கைப்பேசியை தேடினார் அவர்.
“அதெல்லாம் ஒன்னுமில்ல… ரொம்ப டையர்டா இருக்கீங்க… அம்மா தூங்கட்டும்னு வேந்தன் தம்பி தான் உங்க போனை எடுத்துட்டு போயிருக்கு…” என்றார் பர்வதம் மென் புன்னகையுடன்.
“இடியட்… வரட்டும் இன்னைக்கு… என் போன எதுக்கு அவன் எடுத்துட்டு போறானாம்… ராஸ்கல்…” என்றார் முகத்தை சுருக்கிக் கொண்டு சிடுசிடுவென்று. அவரின் படபடப்பில் கீற்றாய் விரிந்தது பர்வதத்தின் புன்னகை.
“பச்… எல்லாத்துக்கும் சிரிப்பு தானா… இப்படி சிரிக்க எனக்கும் சொல்லிக் குடேன் பாரு… சின்ன சின்ன விசயத்துக்கும் இப்ப எல்லாம் ரொம்ப டென்ஷன் ஆகிடறேன் நான்…” என்றபடியே அந்த அறைக்குள்ளேயே இருந்த ஓய்வறைக்குள் நுழைந்தார் அவர்.
“இப்ப மட்டும் தானா..?” என்றார் பர்வதம் அதே புன்னகையுடன்.
“என்ன கிண்டல் பண்ணற நீ… இரு வந்து வச்சுக்கறேன் உன்ன…” என்றபடியே அந்த அறைக்குள் நுழைந்துக் கொண்டார் அவர். அடுத்த கொஞ்ச நேரத்தில் முகத்தில் சொட்டும் நீரை கைக்குட்டையால் துடைத்தபடியே வெளியே வந்தவர் முறைப்பை இழுத்துப் பிடித்திருந்தார். அதற்குள் வெளியே சடசடவென மழை வலுக்க தொடங்கி இருந்தது.
“என்ன கிண்டல் பண்ண தானே நீ..?” என்றார் அதே முறைப்புடன் முகத்தை சுருக்கி.
“பில்டர் காபி வித் மிளகா பஜ்ஜி… வேணுமா..? வேண்டாமா..?” என்றார் பர்வதம் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி.
“என்ன டைவர்ட் நீ…” என்றார் அவர் பீங்கான் கப்பில் ஊற்றிய காபியை கையிலெடுத்து அதன் மணத்தை ஆழ்ந்து நாசிக்குள் நிறைத்தபடியே.
ஒரு மிடறு பருகியவர், “ஃபர்பெக்ட்… அதே மணம்… அதே திடம்… அதே சுவை…” என்றார் அதன் சுவையை ரசித்தபடி.
“காபி போட்டது நானு…” என்றான் கையைக் கட்டிக் கொண்டு அவரை முறைத்துக் கொண்டே வேந்தன்.
“நான் இல்லைனு சொல்லலையே…” என்றார் வள்ளியம்மை அலட்டிக் கொள்ளாமல் ரசித்துப் பருகியபடியே.
“உன்ன என்ன பண்ண சொன்னா… என்ன பண்ணி இருக்க…” என்றார் பஜ்ஜியில் ஒன்றை எடுத்துக் கடித்தபடியே.
“பச்… புள்ள இப்படி மழையில நனைஞ்சு வந்திருக்கானேனு கொஞ்சங்கூட அக்கறையில்ல உங்களுக்கு…” என்றான் லேசாய் நீர் சொட்டிய முடியை சிலுப்பி விட்டுக் கொண்டே.
“நனைஞ்சா ஒன்னும் கரைஞ்சுட மாட்டே…” என்றார் அதற்கும் அவர் அலட்டிக் கொள்ளாமல்.
“அத்தே…” என்று சிணுங்களுடன் உடனே பர்வதத்திடம் தஞ்சமடைந்தான் அவன்.
“என்னடா… அத்தே… சொத்தே… உன்னை செல்லம் குடுத்து கெடுக்கறதே இந்த அனுவும் பாருவும் தான்… சொன்ன வேலைய செய்யாம இங்க என்ன பஜ்ஜி பாயசம்னு பந்தி பரிமாறிட்டு இருக்க நீ..? ஹான்…” என்றார் மிரட்டலாய் வள்ளியம்மை.
“பஜ்ஜி ஒன்னும் உங்களுக்கில்லை… ஆரா இந்த நேரத்துக்கு கண்ணு முழிச்சுடுவானு அனும்மா சொன்னாங்க… அதனால அவளுக்கு புடிச்சத செஞ்சு எடுத்துட்டு பாக்க வந்தேன்… அவ்வளவு தான்… அதுக்கு என்னவாம் இப்போ…” என்றான் அவனும் வீஞ்சிக் கொண்டு.
ஒரே ஒரு நொடி கண்கள் இடுங்க அவனைப் பார்த்தவர், “ஆராவுக்குனா நாங்க சாப்பிட கூடாதுனு சட்டமா இருக்கு… வேலை என்னாச்சுனு கேட்டேன்… அத சொல்லாம பேச்சை மாத்துற நீ…” என்றார் கண்டிப்புடன்.
“அப்பப்பா… வந்த புள்ளைய கொஞ்சம் மூச்சு விட விடுங்களேன் மேடம்…” என்றபடியே அவனிடம் ஒரு பூந்துவலையை எடுத்து நீட்டினார் பர்வதம்.
“அப்படி சொல்லுங்க அத்தை… ஆனாலும் இந்த அம்மா ரொம்ப தான் போலீஸ்கார அம்மாவா இருக்காங்க…” என்றான் வேந்தன் முகத்தை சுருக்கிக் கொண்டு.
ஒரு குவளையில் சூடாய் காபியை ஊற்றி அவனிடம் கொடுத்தார். பஜ்ஜியை எடுத்து கடித்தபடியே அதை வாங்கிக் கொண்டவன், சவதானமாய் நாற்காலியில் அமர்ந்து மிடறு மிடறாய் அதை ரசித்து பருக தொடங்கினான்.
“பச்… விருந்து உபச்சாரமெல்லாம் முடிஞ்சுட்டா… நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு வேந்தா… யார் இத்தனை நாளும் ஆராவுக்கு இந்த கிப்ட்ஸ அனுப்புனதுனு கண்டுபிடிச்சுட்டீயா… அந்த கல்பிரீட் யார்னு தெரிஞ்சுதா..?” என்றார் பொறுமையை இழுத்து பிடித்தபடியே வள்ளியம்மை.
“அத நீங்க தான் சொல்லணும்…” என்றான் வேந்தன் அலட்டிக் கொள்ளாமல் பஜ்ஜியை கடித்தபடியே.
கண்கள் இடுங்க அவனை கேள்வியாய் பார்த்தார் வள்ளியம்மை. அவனின் பார்வை ஒரே ஒரு நொடி பர்வதத்தில் படிந்து மீண்டது.
அதை உணர்ந்துக் கொண்டவராய், “நீங்க பேசிட்டு இருங்க… நான் போய் அமுதன் எப்படி இருக்கானு பாத்துட்டு கனிக்கும் காபி குடுக்கறேன்…” என்றபடியே பிளாஸ்கோடு அங்கிருந்து கிளம்பிவிட்டார் பர்வதம்.
“இப்ப சொல்லுங்க அம்மா… யார் அந்த கல்பிரீட்…” என்றான் அன்னையை ஊடுருவிப் பார்த்தபடியே.
“என்ன கேட்டா… நீ தான் கண்டு பிடிக்கணும்…” என்றார் அவர் சிறு தோள் குலுக்கலுடன்.
ஒரு நொடி அவரை ஆழ்ந்துப் பார்த்தவன், “இட்ஸ் எ வெல் பிளான்டு கிரைம்… ஆராவுக்கு நடந்தது முழுசா தெரிஞ்ச யாரோ திட்டமிட்டு கனகச்சிதமா காய் நகர்த்தி இருக்காங்க… யாரோ ஒரு மூனாவது மனுஷங்க இவ்வளவு துல்லியமா இதை செய்ய முடியாது… அந்த கிப்ட்ஸ்… அது கூட வந்த கார்ட்ஸ்… அந்த போன் கால்… எல்லாமே வெல் பிளான்டு… ஏற்கனவே அந்த கிரைம்ல ஒரு பார்ட்டா இருந்த யாரோ தான் இதை திட்டமிட்டு பண்ணி இருக்கணும்… இப்ப நீக்க சொல்லுங்க… அந்த நாலுப் பேருல யார் அந்த கல்பிரீட்… யார் அதுல உயிர் பிழைச்சுருக்க சான்ஸ் இருக்கு…” என்றான் அவரை அளந்தபடியே வேந்தன்.
“கண்டிப்பா அந்த நாலுப் பேருல யாருமே இருக்க முடியாது… அந்த பையர் ஆக்ஸிண்ட்ல இந்த வீடு மொத்தமும் கொலாப்ஸ் ஆகிட்டு… அந்த நாலு பேரு உடம்புமே 85 சதவீதம் எரிஞ்சுப் போச்சு… ஒருத்தரும் உயிரோட இல்லை… அவங்க யார் யாருனு அடையாளம் கண்டு பிடிக்கறதே கஷ்டமா தான் இருந்துச்சு… அதனால கண்டிப்பா இது அவங்களா இருக்க வாய்ப்பேயில்லை… இத பத்தி நல்லா தெரிஞ்ச அவங்களுக்கு சம்பந்தபட்ட வேற யாரோ இதை செஞ்சிருக்காங்க…” என்றார் தீர்க்கமாய் வள்ளியம்மை.
“வெல்… நீங்க சொல்லறது படி வச்சுக்கிட்டா… இது ரொம்ப மோசமான பையர் ஆக்ஸிண்ட் இல்லையா…” என்றான் புருவத்தை இடுக்கி அவன்.
அவன் கேட்ட விதத்தில் கேள்வியாய் அவனைப் பார்த்தார் வள்ளியம்மை. “என்னக்கென்னவோ இது வெல் பிளான்டு மார்டரா இருக்குமோனு சந்தேகமா இருக்கு… அதுல நீங்களும் ஆராவும் சம்பந்த பட்டிருப்பீங்களோனு கூட சந்தேகமா இருக்கு…” என்றவனை மெச்சுதலுடன் பார்த்தார் வள்ளியம்மை.
“யாருக்கு வேணாலும் யார் மேல வேணாலும் சந்தேகம் வரலாம் மகனே… ஆனா நிரூபிக்க ஆதாரம் வேணும்…” என்றார் கேலியுடன் வள்ளியம்மை.
“அப்ப என் சந்தேகம் சரிதானு சொல்லறீங்க இல்லையா..?” என்னான் வேந்தன் விடாபிடியாய்.
“இருக்கலாம்… இல்லாமலும் இருக்கலாம்…” என்றார் வள்ளியம்மை குறும்பு தொனிக்கும் குரலில்.
“அம்மா…” என்ற கண்டிப்புடன் ஆழ மூச்சை உள்ளிழுத்து வெளியிட்டான் அவன். “என்ன போலவே இத பண்ண அந்த கல்பீரிட்க்கும் இந்த சந்தேகம் வந்திருக்கணும்… இல்ல உறுதி படுத்திக்கற அளவுக்கு ஏதாவது ஆதாரம் கூட கிடைச்சுருக்கலாம்… ” என்றவன் ஒருநொடி நிறுத்தி அவரைப் பார்க்க, ‘மேலே சொல்…’ என்றபடி கையைக் கட்டிக் கொண்டு அவனைப் பார்த்திருந்தார் அவர்.
“அதுக்கு பழிவாங்கற விதமா இதை அவன் செஞ்சிருக்கலாம்… செஞ்சுட்டு இருக்கலாம்… வெல்… அவன் நினைச்சுருந்தா ஒரே நிமிஷத்துல ஆராவ இதை சொல்லி பயமுறுத்தி இருக்கலாம்… ஆனா அவன் அல்டிமேட் கோலே ஆராவ கொஞ்ச கொஞ்சமா கஷ்டபடுத்தி பாக்கறதா தான் இருக்கணும்… அவ பயந்து தவிச்சு அழறதுல ஒரு குரூர திருப்தி உண்டாகி இருக்கணும்… ஐ திங் ஹீ இஸ் மெண்டலி இல்… அந்த எண்ணத்துல தான் ஆரம்பத்துல இங்க வேலை பாக்கற பீயூன் ஒருத்தவன் மூலமா அந்த கிப்ட் எல்லாம் அனுப்பி இருக்கான்… அவன்தான் நேரடியா அதை ஆரா ரூம்லையே வைக்க வச்சுருக்கான்… கடைசியா அமுதன அங்க வச்சதும் அவன் தான்… இப்போ வெளிய விசயம் தெரிஞ்சதும் அந்த பீயூன் தலை மறைவாகிட்டான்… அவன ஒரு பக்கம் தேடிட்டு இருக்கோம்… அவனை கண்டுபிடிச்சுட்டா இதை செய்ய சொன்னது யாருனு தெரிஞ்சுடும்…
ஆரம்பத்துல அவன் நினைச்ச மாதிரி ஆராவும் ரியாக்ட் பண்ணிருக்கா… பயந்து அழுது தவிச்சு… இப்படி அவன் எதிர்பார்த்தது அவனுக்கு கிடைச்சு இருக்கு… ஆனா இதுவே தினமும் தொடரவும் ஆராவை அது பாதிக்கல… அந்த கிப்டையே அவ பிரிச்சு பாக்கல… அத தெரிஞ்சுகிட்டதும் தன்னோட அடுத்த மூவ்வா அமுதன கடத்தி இருக்கான்… சரியா அதை அவ பிறந்த நாள்ல எக்ஸ்கீயூட் பண்ணி இருக்கான்… ஆரா பயந்து அழுது தவிக்கறத எங்கையோ பக்கத்துல இருந்தே பாத்து இருக்கான்… எனக்கென்னவோ அந்த கல்பிரீட் இன்னமும் ரொம்ப பக்கத்துல தான் இருக்கணும் தோணுது… ரொம்ப ரொம்ப நெருக்கமா… ஆராவோட பேமிலி கூட ரொம்ப க்ளோஸா இருக்கணும்னு தோணுது…” என்றவன் நினைவில் ஒரு முகம் மின்னி மறைந்தது.
ஆழ்ந்த யோசனையுடன் அவனை தான் பார்த்திருந்தார் வள்ளியம்மை. “எனக்கு யார் மேலையாவது சந்தேகம் இருக்கா வேந்தா…” என்றார் அதே யோசனையுடன். ஆம் என்னும் விதமாய் அவன் தலை மட்டும் அசைந்தது.
அதே நேரம், “அம்மா…” என்ற பெரும் கேவலுடன் எழுந்து அமர்ந்திருந்தாள் ஆரா. அவளின் உடலெல்லாம் வெடவெடவென நடுங்கிக் கொண்டிருந்தது. கண்களில் சரசரவென கண்ணீர் இறங்கிக் கொண்டிருந்தது.
“ஆரும்மா…” ஒரே மாதிரியான கூவலுடன் அவளை நெருங்கி இருந்தனர் வேந்தனும் வள்ளியம்மை. ஒரே ஒரு அடி வள்ளியம்மையை முந்தி இருந்தான் வேந்தன்.
அவளை இழுத்து தன் மார்போடு பொதித்துக் கொண்டவன், “ஒன்னுமில்ல… ஒன்னுமில்ல ஆரும்மா… நான் உன் கூட தான் இருக்கேன்… உன் வேந்தன் உன் கூடவே தான் இருக்கேன்… இது ஜெஸ்ட் கனவு தான்டா… என்னைப் பாரு… உனக்கு ஒன்னுமில்ல… என்னை பாரும்மா…” என்றான் அவளை இறுக்கியபடி பரிதவிப்புடன். கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு அவனை முறைத்துக் கொண்டிருந்தார் வள்ளியம்மை.
அவனுன் அணைப்பிற்குள் இருந்தவளிடம் மெல்லியதாய் ஏதோ முனகல்.
“என்னம்மா… என்ன சொல்லற..?” என்றபடியே அவளின் வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்தான் வேந்தன்.
“வெற்றி… வெற்றி… அந்த டெவிள்… அமுதனை கடத்துனது அந்த வெற்றிதான்…” தான் என்றாள் தந்தியடிக்கும் குரலில் அவள். உடல் இன்னுமே அதிகமாய் உதற துவங்கி இருந்தது. அவனை இறுக்கியபடியே இன்னுமே அதிகமாய் அவனுடன் ஒன்றினாள் அவள். நான் எதிர்பார்த்தது தான் என்பதைப் போல எவ்வித சலனமும் காட்டது அமைதியாய் இன்னும் அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டான் அவன்.
– பற்றி எரியும்…

