Loading

தழல் 31:

ஆரா சென்ற கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பர்தத்திற்கு விழிப்பு தட்டிவிட்டது. அறையில் மகள் இல்லையென்றதும் பதறி துடித்துப் போனார் அவர். கடிவாளமில்லாத மனம் எங்கெங்கோ அலைந்து அவரை அச்சமூட்டியது. அவசரமாய் வீடு முழுவதும் அவள் இல்லையென்றதும் அதே அவசரத்தோடு வள்ளியம்மையின் அறை கதவை தட்டிக் கொண்டு நின்றார்.

பர்வதம் விசயத்தை சொன்ன போது, இன்றைக்கு நீதிமன்றத்தில் அவர்கள் ஜாமீன் என்று தீர்ப்பு வழங்கிய போது, குரோதம் வழியும் விழிகளோடு அந்த நால்வரின் மீது படிந்திருந்த அவளின் பார்வை தான் கண்முன்னே வந்து நின்றது. அந்த நிமிடமே அவள் எங்கே சென்றிருப்பாள் என்ற யூகம் உண்டாகிவிட்டது. அன்றி தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணத்தோடு இருப்பவள் வீட்டிற்குள்ளேயே ஆயிரம் வழி இருக்கும் போது வண்டியை எடுத்துக் கொண்டு வெளியில் ஏன் செல்ல வேண்டும்.

அந்த எண்ணம் தோன்றிய நொடி, பர்வதத்திற்கு சமாதானம் செய்துவிட்டு ஆராவை தேடிக் கிளம்பிவிட்டார். அவரின் எண்ணத்தை பொய்யாக்காமல், அந்த வீட்டினுள் கண்களை மூடி கதவில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள் ஆரா. சுற்றி எங்கும் வேகமாய் தீ பரவிக் கொண்யிருந்தது.

“ஆரும்மா…” பெரும் சத்ததோடு அவளை கூப்பிட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார் அவர். அவள் அமர்ந்திருந்த நிலைக் கண்டு உள்ளுக்குள் பெரும் திடுக்கிடல்.

விழி மலர்ந்திர அவரைப் பாத்தவளின் முகத்தில் அத்தனை நிறைவு. ஒரு குரூர திருப்தி. இரண்டே எட்டில் அவளை நெருங்கியவர் தன்னோடு சேர்த்து இறுக அணைத்திருந்தார். அப்பொழுதும் கூட உள்ளே நால்வர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பார்கள் என்று தோன்றவில்லை.

“ஒன்னுமில்லை ஆரும்மா… ஒன்னுமில்லை… இப்போ வீட்டுக்கு போய்டலாம்…” என்றார் ஆறுதலாய் முதுகை தட்டிக் கொடுத்தபடியே.

“நான் அவங்க நாலு பேருக்கும் நெருப்பு வச்சுட்டேன் வள்ளிம்மா… அவங்க தொட்டப்ப என் உடம்பு எப்படி அருவெறுப்புல எரிஞ்சுதோ இப்போ அவங்க உடம்பும் அப்படி எரியுது… எரியட்டும்… நல்லா எரியட்டும்… எரிஞ்சு சாம்பலாகட்டும்…” என்றாள் குரூரமாய் ஆரா.

“ஆரா…” என்றார் அதிர்ந்து அதட்டலாய் வள்ளியம்மை.

“நான்… நான்… நானும் அவங்களோட இங்கையே எரிஞ்சுப் போறேன்… நீங்க போய்டுங்க வள்ளிம்மா… நீங்க இங்கயிருந்து போய்டுங்க…” என்றாள் அவசரமாய் அவள்.

அவர் அதிர்ந்து செயலற்று நின்றதெல்லாம் சில நொடிகள் தான். மறுநொடியே வர மறுத்தவளை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வெளியே வந்திருந்தார்.

“இல்லூ வள்ளிம்மா… நான்… நான் சாகணும்… எனக்கு வாழ வேண்டாம்… நான் அப்பாகிட்ட போறேன்… என்ன விடுங்க…” என்றாள் பெரும் கதறலோடு. தந்தையின் இறப்பின் போதுக்கூட சிந்தாமல் தேக்கி வைத்திருந்த கண்ணீரை மொத்தமாய் கொட்டியது அவளின் விழிகள்.

அவள் வராமல் வெகுவாய் அடம் பிடிக்கவும், அவளை அறைந்திருந்தார் அவர். சட்டென்று நின்றுப்போனது அவளின் கண்ணீர். அதிர்ந்து அவரை நிமிர்ந்துப் பார்த்தாள் அவள்.

“பைத்தியமாடி உனக்கு… உன்ன சாவு குடுக்கவா நான் உயிர கொடுத்து போராடிட்டு இருக்கேன்… மூச்… ஒரு வார்த்தை வெளியில வரக்கூடாது… இங்க நீ வரவுமில்லை… இங்க நடந்த எதுவும் உனக்கு தெரியாது… புரிஞ்சுதா…” என்றார் அதட்டலாய் வள்ளியம்மை. பாவமாய் அவரைப் பார்த்து அலங்கமலங்க விழித்தாள் அவள்.

“ஆனா… நான்… நான்… கொலை பண்ணி இருக்கேன்…” என்றாள் நடுங்கிய குரலில் மெலிதாய் அவள்.
ஒரு நொடி அவளை கூர்ந்துப் பார்த்தார் அவர்.

“இட்ஸ் எ பையர் ஆக்ஸிடண்ட்… நீ யாரையும் கொலை பண்ணல… புரியுதா உனக்கு… இப்ப வண்டியில ஏறு முதல… வேற யாரும் பாக்கறதுக்கு முன்னாடி கிளம்பணும் இங்கயிருந்து…” அவர் சொல்லவும் அமைதியாய் ஏறி அமர்ந்துவிட்டவள், “அங்க என் வண்டி இருக்கு…” என்றாள் இருட்டில் தூரமாய் காட்டி.

“இருக்கட்டும்… நான் பாத்துக்கறேன்… எல்லாத்தையும் உன் வள்ளிம்மா பாத்துக்கறேன்… நீ தைரியமா இருக்கணும்… இங்க இப்ப நடந்ததை மறந்திடணும்…” என்றவர் வேகமாய் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். அவர் சொன்னதுப் போலவே பின்னாளில் அதை மிக கச்சியதமாக ஒரு விபத்தாய் மாற்றி இருந்தார். அவரை தாண்டி யாராலையும் அவளை நெருங்க முடியவில்லை. அதையும் கூட அவளின் மீது சந்தேகமென்று ஒன்று வந்தால் அல்லவா நெருங்க முயற்சிக்க வேண்டும்.

                     ❀❀❀❀❀

அடர்ந்து படர்ந்திருந்தது அந்த மயில்கொன்றை மரம். பச்சை வர்ண இலைகளே தெரியாத அளவிற்கு செந்திற பூக்கள் கிளையெங்கும் பரவிக் கிடந்தது. பரந்த அதன் அடி மர தூரில் மண்ணில் அமர்ந்தபடியே மூன்று வயது யுவாவையேப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆரா. மண் துகள்கள் கை கால்களில் அப்பிக் கொள்ளும் படி மண்ணில் அமர்ந்துக் கொள்ளும் போது இனம்புரியாத ஆசுவாசமும் ஒரு நிம்மதியும் இதயத்திற்குள் பரவுகிறது. ஏதோ அன்னை மடி சாய்ந்த பிள்ளை போல.

சின்ன சின்ன நெகிழி உருளைக்களைக் (Building block) கொண்டு ரயில் பொட்டிப் போன்ற நீளமான தோற்றத்தில் ஏதையோ ஒன்றை வெகு சிரத்தையாய் உருவாக்கிக் கொண்டிருந்தான் அவன். கொஞ்சமும் அவன் கவனம் சிதறவில்லை. சுற்றி நடக்கும் எதைப் பற்றியும் அவனுக்கு கவலையில்லை.

எப்பொழுதாவது நினைத்துக் கொண்டவன் போல் ஆரா அங்கிருக்கிறாளா என்று பார்த்துக் கொள்வான். இருக்கிறாள் என்றதும் மீண்டும் அவனின் கவனம் அந்த பிளாஸ்டிக் உருளைகளிடம் திரும்பிவிடும். இதுவரை அவள் அங்கில்லை என்றால் என்ன செய்வான் என்று யாருக்கும் தெரியாது. அப்படியான சூழ்நிலையை ஆரா உருவாக்கவில்லை.

இங்கு வந்த ஆறு மாத காலத்தில் அவளிடம் இருந்த ஒரே முன்னேற்றம் யுவா மட்டும் தான். அவனின் சிறு உலகம் யுவாவை மட்டும் தான் உள்ளிழுத்துக் கொண்டது. அவனைத் தாண்டி யாரிடமும் அவள் அங்கே பேசுவதே இல்லை. எவ்வித விகல்பமும் இல்லாமல், வித்தியாசம் பாராட்டமால், பார்வையில் அனுதாபத்தை கொட்டாமல், ‘மற்றவர்களைப் போல தான் நீயும்’ என அவளை இயல்பாய் அவன் ஏற்றுக் கொண்டதும் காரணமாய் இருக்கலாம்.

இங்கு வந்த ஆறு மாதங்கள் எதிலுமே ஒட்டுதல் இல்லை யுவாவுக்கு. இங்கே ஒன்ற முடியவில்லை அவனால். அமைதியாய் அத்தனையிலும் இருந்து ஒதுங்கி வேடிக்கை மட்டும் பார்ப்பான். இரண்டு வயது பிள்ளையிடம் இவ்வளவு இறுக்கமா என்று தோன்றும். அவன் நோயையும் தாண்டிய பெரும் ஏமாற்றம் ஒன்று அவன் மனதை வியாபித்திருக்க வேண்டும். ஆரா வந்த பிறகு தான் அவனிடம் ஒரு மாற்றம் தெரிகிறது. பெரிதாய் அவளிடம் ஒட்டிக் கொண்டான் என்று சொல்லிவிட முடியாது. இருவரும் ஒருவரை ஒருவர் மனதால் இறுக பற்றிக் கொண்டு தங்கள் இறுக்கத்திலிருந்து வெளிவர முயன்றனர்.

அனுராதாவும் கவுன்சிலிங் என்ற பெயரில் மணிக் கணக்காய் பேசித்தான் பார்த்தார். அத்தனையும் கேட்டபடி அமர்ந்திருப்பவள், அவர் பேச்சை நிறுத்தியதும் அமைதியாய் எழுந்து வந்து விடுவாள். மனக்கதவை இறுகப் பூட்டிக் கொண்டு அதில் தன்னையும் உள்ளே வைத்து அடைத்துக் கொண்டவளை அவளையன்றி யாரால் மீட்டுக் கொண்டுவர முடியும்.

அவளின் அருகே அரவம் கேட்க தலையை நிமிர்த்திப் பார்த்தாள் ஆரா. வள்ளியம்மை ஒரு முறுவலுடன் “எப்படி இருக்கே ஆரும்மா…” என்றபடியே அவளருகே அமர்ந்தார். அவரைக் கண்டதும் கொஞ்சமாய் மலர துடித்தது அவளின் அகம். அவரின் கேள்விக்கு மையமாய் தலையை உருட்டி வைத்தாள்.

“இந்த இடமெல்லாம் எப்படி இருக்கு… உனக்கு புடிச்சு இருக்கா..?” என்னதற்கும் ஒரு மையமான தலை உருட்டல் அவளிடம்.

அமைதியாய் அவளுடன் யுவாவை வெறித்துக் கொண்டிருந்தவர்  “உங்க அப்பா சூசைட் பண்ணிக் கிட்டதுக்கு என்ன காரணமாயிருக்கும்னு நினைக்கற ஆரா..?” என்றார் தீடிரென. இந்த கேள்வி அவளிடம் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்தே தான் கேட்டிருந்தார் வள்ளியம்மை.

கேட்ட பின் அவளின் வந்துப் போகும் உணர்வுகளை அவதானிக்க வேண்டி அவளின் முகத்தையே கூர்மையாய் பார்த்துக் கொண்டிருந்தார். அவளின் முகத்தில் எவ்வித உணர்வுகளும் வெடிக்கவில்லை. இலக்கில்லாமல் தூரத்தில் எதையோ வெறித்தபடி நீண்ட நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள் அவள்.

எதையோ நினைத்துப் பார்க்கிறவள் போல, நொடி நேரம் இருளடைந்துப் போனது அவளின் முகம். மரண வேதனையை சுமக்கும் ஒருவத்தின் பாவம் அந்த கண்களில்.

“நான்… நான்… நான்தான் அப்பாவ கொன்னுட்டேன்…” என்றாள் மிக தீனமான குரலில்.

“எத வச்சு அப்படி சொல்லற நீ..? உனக்கு இப்படி நடந்ததுக்கு நீ எந்த விதத்துலையும் பொறுப்பாக முடியாது ஆரா… இட்ஸ் எ ஆக்ஸிடண்ட்…” என்றார் அவளை ஆழம் பார்க்கவென்றே வள்ளியம்மை. மறுப்பாய் ஆடியது அவளின் சிரம்.

“இல்ல… நான்… நான்… அவர பாத்து அப்படி பயந்துருக்க கூடாது… அப்படி விலகியிருக்க கூடாது… அதுதான்… அதுதான் அவரை கொன்னுடுச்சு…” என்றாள் கண்களில் வலியை நிரப்பியபடி.

“எதனால அப்படி நினைக்கற நீ..?”

“அந்த நிமிஷம் அப்பா கதறுனத பார்த்திருந்தா நீங்களும் அப்படிதான் நினைப்பீங்க…” என்றாள் ஆரா.

சின்னதாய் ஒரு மென்னகை படர்ந்தது அவர் வதனத்தில். “நீ அவர் பொண்ணு ஆரா… அன்னைக்கு இல்லைனாலும் அதுக்கு மறுநாளோ… இல்லையோ கொஞ்ச நாள் கழிச்சோ அப்பானு அவர்கிட்ட தான் போய் நின்னுருப்ப… அது தெரியாதவரா அவரு… அந்த நிமிஷம் அவரோட அழுகைக்கு காரணம்… ஐய்யோ என் பொண்ணுக்கா இப்படி ஆகணும்… இதுல இருந்து எப்படி என் பொண்ண நான் மீட்டுக் கொண்டு வர போறேங்கறதா தான் இருந்திருக்கும்…” என்றார் உறுதியாய் வள்ளியம்மை.

புரியாத பாவத்தில் நெடு நேரத்திற்கு பிறகு கேள்வியாய் அவரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் அவள்.

“அதுக்கு பிறகு உன் அப்பாவுக்கு ஏதோ ஒரு வழியில என்ன விதமா உன் விசயம் ஊர் பூரா பரவியிருக்குனு தெரிஞ்சு இருக்கணும்… சின்ன வயசுல இருந்தே அப்பாம்மா இல்லாம இந்த சமூகத்தோட கோர முகத்தை பார்த்து பார்த்தே வளர்ந்தவர் உங்கப்பா… நிறைய அவமானங்கள் கஷ்டங்களை அனுபவிச்சு இருக்கணும்… அது இந்த சமூகத்து மேல ஒரு வெறுப்பையும் பயத்தையும் உண்டாக்கி இருக்கணும்… உன் விசயத்துல மறுபடியும் அந்த பயம் விஸ்வரூபம் எடுத்திருக்கணும்… இதுக்கு மேல இந்த சமூகத்துல என் மக நிம்மதியா வாழவே முடியாதுனு நினைச்சுருப்பாரு… இந்த சமூகம் உன்னை குத்திக்காட்டிட்டே இருக்கும்… மீண்டே வர விடாதுனு முடிவுப் பண்ணி இருப்பாரு… அது வரைக்கும் உன்னை எப்படியாவது மீட்டுக் கொண்டு வந்திடலானு இருந்தவரோட நம்பிக்கைக்கு அது மிகப்பெரிய அடி… இந்த சமூகத்தோட கோர முகமும் அது உன்னை வாழவே விடாதோங்கற பயமும் தான் இவரை தற்கொலைக்கு தூண்டிருக்கணும்…” என்றார் உறுதியான குரலில் வள்ளியம்மை.

அவரின் வாதத்தை அவள் முழுதாய் ஏற்றுக் கொண்டதைப் போல் தெரியவில்லை. அமைதியாய் அவரைப் பார்த்திருந்தவள் முகத்தில் சின்ன சஞ்சலம். அவள் தான் காரணமென உறுதியாய் நம்புகின்ற அவளின் எண்ணத்தில் முதல் கல் எறிந்திருந்தார் வள்ளியம்மை.

“உங்கப்பா நினைச்சது தான் சரி… அவர் தற்கொலை பண்ணிகிட்டது நூறு சதவீதம் சரிங்கற மாதிரி தான் இருக்கே நீ இப்போ…” என்றவரை அதிர்ந்து திடுக்கிடலுடன் பார்த்தாள் ஆரா.

“யார்கிட்டையும் பேசாம… யார்கிட்டையும் பழகாம… வாழ்க்கை அந்த ஒருநாளோட முடிஞ்சுட்ட மாதிரி… இனி உனக்கு வாழ்க்கைனு ஒன்னு இல்லவே இல்லங்கற மாதிரி… உன்னோட துன்பம்தான் பெருசுனு ஒரு சுயநலத்தோட… அதேயே நினைச்சு நினைச்சு அதுலேயே அமிழ்ந்துப் போய்ட்டு இருக்க நீ…” என்றவர் அவள் அவரின் கருத்தை உள்வாங்கி யோசிக்ககறாள் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு மீண்டும் தொடர்ந்தார்.

“அப்போ உங்க அப்பா செஞ்சது சரினு தானே ஆகுது… இல்ல நீங்க நினைச்சது தப்புப்பானு அவருக்கு காட்ட வேண்டாமா நீ… பாருங்க இந்த சமூகத்தை எதிர்த்து போராடி உங்க பொண்ணு அவ வாழ்க்கைய தக்க வச்சுட்டானு காட்ட வேண்டாமா அவருக்கு… அவரு ஆசைப்படி நீ டாக்டராக வேண்டாமா..? உங்க அப்பாவுக்காக இதுலயிருந்து மீண்டு வந்து சந்தோஷமா வாழ்ந்துக் காட்ட வேண்டாமா ஆரும்மா..?” என்றார் அன்பொழுகும் அமைதியான குரலில் வள்ளியம்மை. ஏனோ அவளின் தந்தையே நேரில் நின்று கேள்விக் கேட்பதைப் போலிருந்தது ஆராவுக்கு.

அதே நேரம் சிறு ஆர்பரிப்போடு கர்வமாய் ஆராவை நிமிர்ந்துப் பார்த்தான் யுவா. வேகமாய் அவளிடம் ஓடி வந்தான். அவனின் விழிகள் அவன் விளையாடிக் கொண்டிருந்த இடத்தை தொட்டு நின்றது. விதவிதமான பச்சை நிறத்தில் சின்னதும் பெரிதுமாய் விரிந்திருந்தது மலைதொடர் ஒன்று. மெச்சுதலாய் விரிந்தது ஆராவின் பார்வை. அவனை அள்ளி தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டவள், அழுத்தமாய் கன்னத்தில் முத்தம் பதித்தாள். கூச்சம் ஏற்பட்டவனைப் போல் லேசாய் மலர்ந்தது அவன் அதரங்கள்.

“எவ்வளவு அழகா அடுக்கி இருக்க… நிச்சயமா நீ ஒரு பெரிய இஞ்சினீயரா வருவடா…” என்றவள் குரலில் ஏகத்துக்கும் பெருமை. தன் குழந்தையை உச்சி முகரும் தாயின் கர்வம் அவளிடம்.

சில நொடிகள் அவர் உருவாக்கி இருந்த மலை தொடர்களையே பார்த்திருந்த வள்ளியம்மை, “இல்ல ஆரும்மா… அவன் மிகப் பெரிய ஆர்டிஸ்டா வருவான்… ரவிவர்மா… பிகாசோ மாதிரி…” என்றார் உறுதியான குரலில். அவனை கீழே இறக்கி விளையாட விட்டவள் பார்வை கேள்வியாய் வள்ளியம்மையை தொட்டது.

வள்ளியம்மை பார்வை ஒரு இடத்தை தொட்டு நின்றது. இவளின் பார்வை அத்திசையில் விரிய, பூங்காவின் காம்பவுண்ட் சுவரை அடைத்தபடி வரையபட்டிருந்தது நீண்ட மலைதொடரும் மரங்களும்.

“இதை தான் பில்டிங் பிலக்ஸ் வச்சு அவன் பண்ணிருக்கான்… ஏனோ தானோனு ஏதோ ஒரு கலர யூஸ் பண்ணாம அவன்கிட்ட இருந்த வச்சு எத்தனை நேர்த்தியா முடியுமோ அத்தனை நேர்த்தியா பண்ணிருக்கான்… நிறத்தௌ தேர்ந்தெடுக்கறதுல இயற்கையாவே அவனுக்கு ஒரு அறிவு இருக்கு ஆரா… அதான் சொல்லறேன்… அவன சரியான வழியில கைட் பண்ணா மிகப் பெரிய ஆர்டிஸ்டா வருவான்… சாதரணமா பார்க்கும் போது ஒரு அர்த்தத்தை தர எந்த விசயமும் உண்மையிலேயே அதே அர்த்துல இருக்கிறதில்ல…” என்றார் மென்னகையுடன் வள்ளியம்மை.

“பாரு… யுவா எவ்வளவு அறிவான குழந்தை… நிச்சயமா அவனோட ஐ.கியூ நம்மளவிட அதிகமா இருக்கும்… ஆனா அவன ஒரு ஆட்டிசம் குழந்தையினு பெத்தவரே ஒதுக்கி வச்சுட்டாரு தானே… இதே காரணம் சொல்லி நாளைக்கு இந்த சமூகமும் அவனை ஒதுக்கி வைக்கும்… இன்னைக்கு அவனுக்கு இது புரியலைனாலும் வளர்ந்த பின்ன நிச்சயமா புரியும் இல்லையா..? ஒரு அறிவான குழந்தைக்கே இதான் கதினா ஆட்டிசத்தால மோசமா பாதிக்கப்பட்டவங்க நிலைமை என்ன..? அவங்களுக்காக உன் யுவாவுக்காக உனக்கு ஏதாவது செய்யமுனு தோணலையா ஆரும்மா… கடைசி வரைக்கும் உன் தன வேதனை தான் பெருசுனு உன்னை நீயே அழிச்சுக்கணும்னு முடிவு பண்ணிட்டீயா..?” என்றார் தீர்க்கமாய் அவளைப் பார்த்தபடி. பதிலெதும் அவள் சொல்லிவிடவில்லை. அதை அவரும் எதிர்பார்க்கவில்லையோ? ஒரே நாளில் ஒரே பொழுதில் எதுவும் சரியாகி விடாதே!

“இந்த உலகத்திலேயே யாரும் பூரண நிம்மதியா சந்தோஷமா இல்லை ஆரா…” என்றவர் சிறு மௌனத்திற்கு பிறகு தொடர்ந்தார்.

“எங்கப்பா ஒரு மில்ட்ரி மேன்… என்னையும் சரி அனுவையும் சரி எதுக்குமே கட்டுபடுத்தினதில்லை… இரண்டு பேரும் இஷ்டபட்ட படிச்சோம்… விரும்பனவர கட்டிக்கிட்டோம்… பிள்ளைங்க பிறந்தாங்க… ரொம்ம சந்தோஷமான வாழ்க்கை அது… திடீருனு ஒரு நாள் அனுவோட பையனுக்கு ஆட்டிசம்னு தெரிஞ்சுது… எல்லாருமே உடைஞ்சுப் போய்ட்டோம்… எவ்வளவோ வைத்தியம் பாத்தோம்… ம்ம்கூம்… அவனோட இருக்கற பாக்கியம் எங்களுக்கு இல்லை… அனு ரொம்ப உடைஞ்சுப் போய்ட்டா… அந்த சமயத்துல நான் இரண்டாவது கன்சீவ் ஆகியிருந்தேன்… கண்டிப்பா குழந்தை பிறந்ததும் அனுகிட்டையே குடுத்திடணும்னு தான் நானும் என் ஹஸ்பெண்டும் முடிவு பண்ணி இருந்தோம்…

அப்போ அவர் அசிஸ்டன்ட் கமிஸ்னர்… அந்த நேரத்திலே காஷ்மீர்லே வேலையில இருந்தார்… ஒரு கலவரத்துலே இறந்துந் போயிட்டாருனு செய்திதான் எனக்கு வந்துச்சு… அந்த அதிர்ச்சியோ என்னவோ எட்டாவது மாசத்துலையே பிரசவ வலி வந்துடுச்சு… பொண்ணு பிறந்தா… அந்த சமயம் நிச்சயமா அவளை அனுவுக்கு குடுக்க எனக்கு விருப்பமில்லை… சுயநலம்… வெண்டிலேட்டர்ல வச்சு எவ்வளவோ பாதுகாப்பா தான் பாத்துக்கிட்டாங்க… ஆனா அவளுக்கு ஆயுசு இரண்டு நாள்னு தான் இருந்திருக்கு…

குடும்பம் மொத்தமும் நிலை குலைஞ்சு போச்சு… யாராலையும் இதிலிருந்து வெளிய வர முடியல… அந்த நேரத்துல தான் என் பையன அனுவுக்குனே குடுத்துட்டேன்… எல்லாருக்கும் அது தியாகமா தெரியும்… மேலோட்டமா பார்த்தா உனக்கும் அப்படிதான் தோணும்… ஆனா அது அப்படியில்லை… என் பையனுக்கு ஒரு குடும்பம் வேணும்… அவன் குடும்ப சூழ்நிலையில வளரணும்… கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் பையன இழந்திருக்க அனு அவன தன் பையனாவே வளப்பானு நினைச்சேன்…

ஆனா அவனுக்காக தான் குழந்தையே பெத்துக்காம இருப்பானு நினைக்கல… எங்கயே தனக்கொரு குழந்தை பிறந்த வேந்தன் அவளவிட்டு விலகிடுவானோனு நினைச்சுருக்கா… அத தெரிஞ்சப்பறம் தான் நான் எத்தனை சுயநலவாதியா இருந்துட்டேனு புரிஞ்சுது… அது தெரிந்து தான் வேந்தனும் விலகி நின்னுட்டானோ என்னவோ..? இன்ஜினியரிங் தேர்ட் இயர் படிக்கறான் இப்போ… காலேஜ் சேந்ததுக்கு அப்பறம் இங்க வரதில்லைனு ஒரே புலம்பல்… ஆனா இத்தனை வருஷத்துக்கு அப்பறம் திரும்பவும் அனு கன்சீவ் ஆகியிருக்கா… அதை கேட்டதும் தலைகால் புரியல எனக்கு… அதான் உடனே அவள பாக்க கிளம்பி வந்துட்டேன்…

ஒருவேளை அனு தன்னோட கஷ்டம் தான் பெருசுனு தனக்குள்ளேயே சுருண்டிருந்தா இன்னைக்கு இத்தனை பேருக்கான வாழ்க்கை கிடைச்சுருக்காது ஆரா… நீ அனு மாதிரி வரணும்னு நான் ஆசைப்படறேன்… உன் வாழ்க்கைகான ஒரு அர்த்தமிருக்கணும்னு ஆசைப்படறேன்…” என்றார் கலங்கிவிட்ட குரலில். அனுவை, பிள்ளை உண்டாகியதில் சந்தோஷ விளிம்பில் நின்றிருந்தவரை கண்டபின், மனதை இறுக்கிக் கொண்டிருந்த பெரும்பாரத்தை இறக்கி வைத்த உணர்வு அவருக்கு. அதை ஆராவை தவிர வேறு யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள முடியுமென்று அவருக்கு தோன்றவில்லை. ஒருவேளை இதுவும் கூட அவளின் மன முன்னேற்றத்திற்கு காரணமாய் இருக்கலாம் என்ற எண்ணத்தில் நீண்ட யோசனைக்குப் பின் தான் சொல்லியிருந்தார். இனி யோசித்து தெளிந்துக் கொள்ள வேண்டியது அவள் கடமை என்பதை போல அன்றே அங்கிருந்து கிளம்பியும் விட்டிருந்தார்.

ஆனால் அதுதான் உண்மையில் அவளிடம் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. அனுவின் மீது மரியாதையை உண்டாக்கியது. தானும் மற்றவர்களின் நல்வாழ்வுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று தூண்டியது.  அடுத்த ஒரு வாரத்திலேயே தான் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுத விரும்புவதாய் சொல்லிக் கொண்டு அனுராதாவின் முன் சென்று நின்றிருந்தாள் அவள்.

                           பற்றி எரியும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்