Loading

குறிப்பு: போன அத்தியாயத்தில் வந்த தீர்ப்பை அபத்தம் என்று எண்ணுபவர்களுக்கு, ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கான சிறு விளக்கமிது. அந்த தீர்ப்பு 2020ல் நவம்பர் மாதம் மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் நீதிமன்றத்தில் பாலியல் வழக்கொன்றில் வழந்தப்பட்ட தீர்ப்பு. இப்படி இன்னும் தீர்ப்புகள் வழங்கியும் வழங்கப்பாடதும் பல வழக்குகள் உள்ளது.

 

தழல் 30:

 

கொஞ்சம் கொஞ்சமாய் இருள் கவிழ துவங்கி இருந்தது. பால்கனியின் கீரில் கம்பிகளைப் பற்றியபடியே தொலை தூரத்தில் தெரிந்த தொடுவானத்தை இமைக் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆரா. மனம் வெறுமையாகி காலியாகிவிட்ட உணர்வு.

 

இப்படி பார்க்க இந்த வானம் எத்தனை அருகில் இருப்பதாக தோன்றுகிறது. கொஞ்ச தூரம் ஓடிப் போய் ஏட்டிப் பிடித்தால் கைக்குள் அடக்கி விடலாம் போல எவ்வளவு பெரிய ஆசையை உண்டாக்கிறது. நிஜத்தில் என்றுமே இந்த பரந்த வானை தொட்டு விடவே முடியாது. உண்மைக்கு அந்த தொடு வானத்தை விட பெரும் மாயை சட்டம் தான் என்று தோன்றியது.

 

பாதிக்கப்பட்ட அவள் கண் முன்னே உயிரோடு சாட்சியாய் நிற்கிறாள். குற்றம் செய்தவர்களும் இருக்கிறார்கள். ஆதரங்களும் சாட்சியங்களும் இருக்கிறது. இன்னும் என்ன தான் வேண்டுமாம் இந்த இந்திய நீதி தேவதைக்கு?

 

அப்படியே இந்த வழக்கு நடந்தாலும், தீர்பாக எத்தனை நாளாகுமோ இல்லை வருடங்கள் ஆகுமோ? அப்படியே இவள் பக்கம் சதாகமாக தீர்ப்பு வழங்கப்பட்டாலும் அதிகபட்ச தண்டனை ஏழு ஆண்டுகள். அதுவும் உறுதியில்லை. அப்படியே ஏழு வருடங்கள் கிடைத்தாலும் கருணையின் அடிப்படையிலும் நல்லொழுக்கத்தின் அடிப்படையிலும் வெகு சீக்கிரமே வெளியில் வந்துவிட போகிறார்கள். அவையெல்லாம் இவள் ஒரே ஒரு நொடி உடலாலும் மனதாலும் அனுபவிக்கும் வேதனைக்கு ஈடாகுமா?

 

அப்பா என்ற சொல்லே அத்தனை சந்தோஷத்தை தருமே அவளுக்கு. அவரை நினைத்தாலே மனதில் உற்சாகம் குமிழியிடும். அத்தனை அத்தனை இனிமையான தருணங்கள் மனமெங்கும் படரும். ஆனால், இப்பொழுதெல்லாம் அப்பாவென்று நினைத்தால் எல்லா சந்தோஷ தருணங்களையும் பின்னுக்கு தள்ளி அவரின் மரணகாட்சி அல்லவா கண் முன் நிழலாடுகிறது. சாகும் கடைசி நொடியிலாவது அந்த காட்சியிலிருந்து அவளுக்கு விடுதலை கிடைக்குமா தெரியவில்லை. ஆண்களை கண்டாலே உடல் நடுங்கி அருவறுத்து கூசிப் போகிறதே அந்த உணர்வு அவர்களுக்கு சொன்னாலும் புரியுமா? இத்தனையை தாண்டியும் அவள் வழக்காட தான் வேண்டுமா? அதில் உண்மையில் அவளுக்கு கிடைத்துவிட போவது தான் என்ன? நீதியா? அப்படியானால் உள்ளதிலேயே ஆகப் பெரும் வேடிக்கை இதாக தான் இருக்க முடியும். தாமதமாக வழங்கப்படும் நீதியும் கூட அநீதிக்கு ஒப்பானது தானே! அந்த அநீதிக்காக இவளேன் இத்தனை போராட வேண்டும். சிந்தனை வலையில் சிக்குண்டிருந்தாள் ஆரா.

 

“பர்வதம் நான் சொல்லறேனு நீங்க தப்பா நினைக்க கூடாது…” என்றார் வள்ளியம்மை சற்று தூரத்தில் நின்றிருந்த ஆராவையே கலக்கமாய் பார்த்தபடி.

 

பர்வதத்தின் பார்வையும் அங்கேதான் இருந்தது. எந்த நொடியில் அங்கிருந்து குதித்து விடுவாளோ என்பது மாதிரியான ஒரு கலவரம் அவர் முகத்தில். அவளைவிட்டு அப்படி இப்படி பார்வையை திருப்பவில்லை அவர்.

 

“பர்வதம் உங்களை தான்…” அவரின் தோள் தொட்டு அழைக்கவும் தான் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தார் அவர்.

 

“ஹான் என்ன சொன்னீங்க…” என்றார் மீண்டும் மகளிடம் பார்வையை திருப்பிக் கொண்டு.

 

“இன்னும் சொல்லவே இல்லையே பர்வதம்… ஆராவுக்கு  சைகலாஜிக்கல் ட்ரீட்மெண்ட் தேவைப்படுதோனு எனக்கு தோணுது… இப்படியே ஒருத்தர் மாத்தி ஒருத்தர் எத்தனை நாளைக்கு அவளுக்கு காவலா இருக்க முடியும்..? ராஜனோட தற்கொலை அவளை ரொம்ப பாதிச்சுருக்கு… அதுக்கு தான்தான் காரணம்னு ஆழமா நம்பறா… அதோட இன்னைக்கு வந்த தீர்ப்பும் அவள ரொம்ப டிஸ்டர்ப் பண்ணியிருக்கும்… அவ கத்தி ஆர்பாட்டம் பண்ணி அழுது தீர்த்தா கூட மனச தேத்திப்பானு நினைக்கலாம்… ஆனா எல்லாத்தையும் தனக்குள்ளேயே போட்டு அழுத்திக்கறா… ஒரு நாள் அது எக்ஸ்ட்ரீமாகி வெடிச்சு சிதறுனா என்னகுமோனு ரொம்ப பயமா இருக்கு… அப்படி ஒரு நாள் வரத்துக்கு முன்னாடி அவளை சரிப் பண்ணிடறது நல்லது இல்லையா..? நான் என்ன சொல்லறேனு உங்களுக்கு புரியுது தானே…” என்றார் கலக்கம் நீங்கதவராய் வள்ளியம்மை. ஆராவினுள் அந்த அழுத்தம் எல்லைக் கோட்டை தொட்டு தழும்பி நிற்கிறது என்பதை உணராதவராய்.

 

பர்வதத்திற்கும் அவர் சொல்ல வருவது புரியத்தான் செய்தது. மனநல மருத்துவரிடம் செல்பவர்கள் எல்லாம் பைத்தியங்கள் என்று நினைப்பவர்கள் தானே இங்கே அதிகம். அதுதான் வள்ளியம்மையின் கலக்கத்திற்கு காரணமென்றும் புரிந்தது. அவரை பர்வதத்தால் புரிந்துக் கொள்ள முடிந்தது. இப்படியான ஒரு சூழ்நிலையில் மனதளவில் தேறி கொள்வது எவ்வளவு அவசியம் என்பதை செவிலியராய் பர்வதமும் அறிவாரே.

 

“நானும் அத பத்தி யோசிச்சுட்டு தான் இருக்கேன்… ஆனா ஆரா கோ-ஆப்ரேட் பண்ணுவாளா சந்தேகமா இருக்கு… அதோட ஏற்கனவே சுத்தி உள்ளவங்க அவள பத்தி என்னென்னமோ பேசறாங்க… இப்ப பைத்தியம்னு பேச ஆரம்பிச்சுடுவாங்களோனு பயமா இருக்கு…” என்றார் யோசனையாய் பர்வதம்.

 

“நான் ஆராகிட்ட பேசறேன்… நிச்சயம் ஒத்துப்பா… நாம இங்க பாக்க வேண்டாம்… என் சிஸ்டர் அனுராதானு… சைக்கார்டிஸ்ட் தான்… கோவை பார்டர்ல வானவில்னு ஆட்டிசம் குழந்தைகளுக்காக ஒரு அறக்கட்டளையும் மருத்துவமனையும் நடத்தறா… ஆராவ அவகிட்ட காட்டுனா நல்லா இருக்கும்னு எனக்கு தோணுது… அதுவும் இல்லாம புது இடம் புது மனுஷங்கனு கொஞ்ச நாள் இடம் மாறி இருந்தா ஆரா இன்னும் கூட பெட்டரா பீல் பண்ணுவானு தோணுது… உங்களுக்கு விருப்பம் இருந்தா, வேற இடத்துல செட்டில் ஆகற ஐடியா இருந்தா நீங்களும் அங்கேயே கூட வேலையில ஜாயின் பண்ணிக்கலாம்…”

 

சில நிமிடங்கள் ஆழந்த மௌனம் இருவருக்குமிடையே. தீவிர யோசனையில் இருந்தார் பர்வதம். எப்படியும் மீண்டும் இதே ஊரில் இதே இடத்தில் இதே மனிதர்களுடன் வாழும் எண்ணம் அவருக்கு இருக்கவில்லை. “எனக்கும் இது சரினு தான் படுது… முதல ஆரா கொஞ்சம் தேறட்டுமே… அப்பறமா அங்கையே வேலைப் பாக்கறத பத்தியோ செட்டில் ஆகறத பத்தியோ நானே சொல்லறேனே…” என்றார் தயக்கமாய் பர்வதம்.

 

வள்ளியம்மை போன்றவர்களால் தான் இன்னுமே உலகம் உயர்ப்போடு இருப்பதாய் தோன்றும் அவருக்கு. அதுவும் அவர் ஆராவிடம் காட்டும் பரிவும் அன்பும் அக்கறையும் சமயத்தில் பிரமிக்க கூட வைக்கும். ‘அவருக்கு தாங்கள் யார்..? தங்களுக்காக இத்தனை ஏன் மெனக்கெட வேண்டும்..?’ என்ற எண்ணம் அடிக்கடி எழுவதை தவிர்க்க முடியாது அவரால்.

 

❀❀❀❀❀

 

நேரம் இரவு ஒன்று என்றது கடிகாரம். மனதிலிருந்த சஞ்சலமோ என்னவோ மாத்திரைகள் கூட நிம்மதியான ஆழந்த உறக்கத்தை தரவில்லை ஆராவுக்கு. கனவில் கூட தந்தையின் மரணகாட்சியே விரிய, தூக்கி வாறிப் போட எழுந்துவிட்டாள் அவள். உடல் வியர்வையில் குளித்திருந்தது. சமீப காலமாய் இது அவளுக்கு அடிக்கடி வரும் கனவு தான்.

 

முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்தபடி எழுந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்தாள். மனம் நிலைக் கொள்ளாமல் தவித்தது. இதிலிருந்து அவளுக்கு ஒரு விமோச்சனமே இல்லையா? இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் பர்வதமும் கனியும் அவளின் இருபக்கமும் உறங்குவது தெரிந்தது.

 

எத்தனை நேரம் இப்படியே அமர்ந்திருந்தாளோ மனதில் ஒரு தீர்க்கமான தீர்மானம் உண்டானதும், மனம் தெளிந்தவளாய் எழுந்துக் கொண்டாள். அந்த அறையின் ஒரு மூலையில் மாட்டியிருந்த அவள் ஸ்கூட்டியின் சாவிவில் பதிந்தது பார்வை. அந்த சாவிக் கொத்தின் மினுக்கியது இதயவடிவில் உள்ளே இருந்த இரண்டு பூனை பொம்மை. அவளின் முறுவல் கசிந்து வழிந்தது. எத்தனை அடிமுட்டாள் போனோம் என்று நினைக்க நினைக்க பெரும் துக்கம் நெஞ்சத்தை அடைந்தது. விம்மிக் கொண்டு வெடித்து கிளம்பியது அழுகை. எச்சிலோடு சேர்த்து அந்த கேவலையும் அழுகையையும் விழுங்கிக் கொண்டாள் அவள்.

 

இங்கே அவர்கள் வரும் போது வெளியில் செல்லும் தேவை ஏற்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம் என பர்வதம் எடுத்து வந்திருந்தார். ஆனால், இன்று தான் அது அவளுக்கு உபயோகப் படுகிறது.

 

அதை எடுத்துக்கொண்டு விறுவிறுவென வெளியேறிவள் வாயிற்காவலனைப் பார்த்து யோசனையுடன் நின்றுவிட்டாள். தூரத்தில் இருந்தே அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது தெரிந்தது. மெல்ல வண்டியை தள்ளிக் கொண்டு வந்தவள் தன்னிடமிருந்த சாவியைக் கொண்டு வெளிக்கேட்டை திறந்தவள் கொஞ்ச தூரம் தள்ளிக் கொண்டே சென்று, வண்டியை இயக்கி கிளம்பிவிட்டாள். அவளின் கைகளில் வாகனம் பறக்கத் துவங்கியது.

 

அந்த வீதியே ஆள் அரவமின்றி வெறிச்சோடி கிடந்தது. வெகு தூரத்திலேயே வண்டியை நிறுத்திவிட்டு அந்த வீட்டை நோக்கி வேகமாய் நடக்க துவங்கியிருந்தாள் ஆரா. அவளின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அந்த இரவிலும் பிரகாசமாய் விளக்குகள் எரிந்துக் கொண்டிருந்தது அந்த வீட்டில்.

 

அன்றுப் போல் இன்றும் அந்த வீட்டின் வாசலில் காவலுக்கென்று யாருமில்லை. எப்பொழுதும் இருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. இது பெண்களை ஏய்பதற்கு அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட வாசதியாய் கூட இருக்கலாம். இன்று அவளுக்கும் அது வசதியாய் தான் போய்விட்டது.

 

அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருக்க துவங்கினாள். மீண்டும் மீண்டும் அழுத்திய பின் வெகு நேரம் கழித்து கதவை திறந்திருந்தான் தீபக். நிற்கவே முடியாமல் தள்ளாடியது அவனின் உடல். கண்களை கசக்கிக் கொண்டு காட்சிகளை உள்வாங்க முயன்றான். முடியவில்லை. அநேகமாய் இது அவர்களின் விடுதலைக்கான கொண்டாட்டமாய் இருக்க வேண்டும்.

 

அவனை உறுத்துப் பார்த்தபடியே நின்றிருத்தாள் அவள். சில நிமிட போராட்டத்திற்கு பிறகு அவள் யாரென்ற தெளிவு ஏற்பட்டிருக்க வேண்டும் அவனுக்கு.

 

“ஹேய்… பேபி…” என்றான் ஆர்பரிப்பாய் அவன்.

 

“வெல்கம் பேக் பேபி… நீ வருவேனு நினைக்கவே இல்லை…” என்றான் குளறலாய் அவன். தடுமாறி ஓரடி தள்ளி நின்று அவளுக்கான வழியை விட்டான்.

 

எத்தனை சாந்தமான பிள்ளை முகம் இவனுக்கு. இவனா இப்படியெல்லாம் செய்தான் என்ற எண்ணம் தான் அவளுக்கே தோன்றியது. இகழ்ச்சியான முறுவல் ஒன்று அவளிடம்.

 

“ஹேய்… உள்ள வா…” என்றபடியே அவளின் கையை பிடித்து இழுத்து உள்ளே நிறுத்தினான். இவனுக்கு ஏதாவது மறக்கும் வியாதி இருக்குமோ? எத்தனை பெரிய பிரச்சனை போய் கொண்டிருக்கிறது. அத்தனையும் மறந்துவிட்டு கொஞ்சம் கூட குற்றவுணர்வில்லாமல் எப்படி இவளை உள்ளே அழைக்க முடிகிறது இவனால்.

 

தள்ளாடிய படியே அவளை அணைக்க முயன்றான் அவன். வேகமாய் தள்ளி நின்றாள் அவள்.

 

“ஹேய் பேபி… என்னாச்சு…” என்றான் குளறலாய்.

 

“நீயே சொல்லு அன்னைக்கு உன்ன நாங்க கொஞ்சமாச்சும் ஹார்ட் பண்ணோமா..? எவ்வளவு என்ஜாய் பண்ணோம்… இப்ப இல்லாம எப்ப என்ஜாய் பண்ணறதாம்… இதுக்கு போய் யாரவது கேஸ் குடுப்பாங்களா..? நீயே சொல்லு… நீ குடுக்கல தானே… உன் பேரண்ட்ஸ் கம்பெல் பண்ணி இருப்பாங்க… பச் என் அப்பாவும் இப்படி தான்… எவ்வளவு திட்டினாரு தெரியுமா..? அடிக்க கூட செஞ்சாரு…” என்றபடியே அந்த அறையே நோக்கி நடக்க துவங்கி இருந்தான் அவன். வார்த்தைகளின்றி அவனை தொடர்ந்தாள் அவள்.

 

அந்த அறைக்குள் மற்றவர்களும் ஆளுக்கு ஒரு பக்கமாய் சோபாவில் கவிழ்ந்துக் கிடந்தனர். முழு உறக்கமின்றி போதையில் ஏதோ உளறிக் கொண்டிருந்தனர்.

உண்மையில் இவர்களுக்கு உணர்வுகள் மறத்து விட்டதா? இல்லை இந்த போதை இவர்களின் உணர்வுகளை மனசாட்சியை மழுங்கடித்து விட்டதா?

 

ஒரு குவளையில் உயர் ரக மதுவை ஊற்றி அவளிடம் நீட்டியவன் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது. அதை வாங்காமல் அவனையே குரூரமாய் பார்த்தபடி நின்றிருந்தாள் அவள்.

 

“ஹேய் வாங்கிக்கோ… ஒன்ஸ் யூஸ் பண்ணிட்டோனா விடவே முடியாது… உனக்கும் வேணும்னு தோணுதுல… அதானே இங்க வந்திருக்க… இந்த புடி… லெட்ஸ் என்ஜாய்…” என்றான் அவள் கரத்தில் மதுவை திணித்தபடி.

 

அவளை ஒரு கையால் விலக்கியபடியே இன்னொரு கரத்தால் மேசையில் இருந்த மதுப் பாட்டிலை எடுத்திருந்தாள் அவள். என்ன செய்கிறாள் என்பதை அவன் உணரும் முன்னமே கையிலிருந்த பாட்டிலால் அவனின் பின் தலையில் ஓங்கி அடித்திருந்தாள் அவள். சில்லு சில்லாய் கண்ணாடி உடைந்து நாலாப் பக்கமும் தெரித்தது. நொடியில் அவனின் தலையிலிருந்து கழுத்துப் பக்கமாய் இரத்தம் வழிய தொடங்கி இருந்தது.

 

சற்றே தாமதமாய் தான் அவனுக்கு வலி உரைத்திருக்க வேண்டும். அவள் என்ன செய்துவிட்டாள் என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.

 

தலையை பற்றியபடியே தரையில் சரிந்திருந்தான் அவன். அவனை தாண்டிக் கொண்டு முதுப் பாட்டில்கள் அடுக்கப்பட்டிருந்த அந்த ரேக்கின் முன் வந்து நின்றாள் அவள். தன் மொத்த பலத்தையும் திரட்டி அதனை கிழே தள்ளியிருந்தாள். பாட்டில்கள் உடைந்து காலப்பக்கமும் சிதறியது. மது நீராய் பெருகி ஓடியது.

 

வேகமாய் தீபக்கிடம் வந்தவள் அவனை இழுத்துக் கொண்டு வந்து அதன் மீது தள்ளினாள். தொடர்ந்து மற்றவர்களையும் இழுத்து வந்து அங்கே தள்ளினாள். அவர்கள் புகைப்பதற்காக வைத்திருந்த லைட்டரைக் கொண்டே அந்த மதுப்பானத்தில் தீ மூட்டினாள். ஆல்கஹால் என்பதால் சட்டென்று பற்றிக் கொண்டது அது. நொடியில் அவர்களையும் விழுங்கிக் கொண்டது அது. கண்களில் மிளிரும் குரூரத்துடன் வெகு திருப்தியாய் ரசனையுடன் சில நொடிகள் அதனை பார்த்து நின்றாள் அவள்.

 

மறுநொடி வேகமாய் வெளியில் வந்து கதவை சாற்றி அதன் மீதே சாய்ந்து அமர்ந்துவிட்டாள். உள்ளே அவர்கள் கதறி துடிப்பது கேட்டது. அநேகமாய் இந்நேரம் அவர்களுக்கு எல்லாம் முழுதாய் போதை தெளிந்திருக்க வேண்டும். ஆனால் உடம்பெல்லாம் பற்றிக் கொண்ட தீயினை அணைக்கும் வழியின்றி திரணின்றி கதறிக் கொண்டிருந்தனர் அவர்கள்.

 

அவர்களின் கூச்சல் கதறல் அவளுள் பெரும் ஆசுவாசத்தை நிம்மதியை உண்டுப் பண்ணியிருக்க வேண்டும். நிம்மதோடு கண்களை முடியபடி அணு அணுவாய் ஆழ்ந்து உள்வாங்கி அவர்களின் கதறலை ரசிக்க துவங்கினாள் அவள்.

 

     – பற்றி எரியும்…

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்