Loading

தழல் 29:

விட்டத்தை வெறித்துப் பார்த்தபடியே தரையில் அமர்ந்திருந்தாள் ஆரா. அவளின் ஒரு பக்கம் கனியும் இன்னொரு மக்கம் பர்வதமும் அமர்ந்திருந்தனர். இத்தோடு ராஜன் இறந்து முழுதாய் ஒருநாள் கடந்து விட்டிருந்தது. உடனுக்குடன் உடற்கூறாய்வு செய்து மின்தகனும் முடிந்திருந்தது. அத்தனையும் வள்ளியம்மை தான் அவர்களுக்கு பெரிதும் துணையாய் இருந்தார்.

இன்னமுமே பர்வதத்தால் ராஜன் இல்லை என்பதை நம்ப முடியவில்லை. அவரின் கூடவே இருத்தனை காலமாய் வாழ்ந்தவரால் அவரின் தற்கொலையை ஏற்றுக் கெள்ளவே முடியவில்லை. பெற்றோர் இல்லாமல் எத்தனையோ அவமானங்களையும் கஷ்டங்களை தாங்கிக் கொண்டு தானே வளர்ந்த சுயம்பு அவர். அவரின் எல்லா செயல்களிலும் ஒரு தெளிவிருக்கும் நிதானமிருக்கும். அவர் தடுமாறும் ஒரே இடம் மகள்கள் மட்டும் தான். ஏன் ஆராவை வீட்டிற்கு அழைத்து வரும் வரை கூட திடமாய் தானே இருந்தார். அதன்பின் எங்கே தவறிப் போனார் என்றே தெரியவில்லை. ஒரு வேளை ஆராவின் ஒதுக்கம் தான் அவரின் தற்கொலைக்கு காரணமாய் இருக்குமா என்பதையும் முழுதாய் நம்ப முடியவில்லை.

அழைப்பு மணியின் ஓசைக் கேட்கவும் கனியைப் பார்த்தார் பர்வதம். அவர் பார்வையின் அர்த்தம் உணர்ந்தவளாய் ஆராவை அறைக்குள் அழைத்துச் சென்று கதவைச் சாற்றி தாழிட்டுக் கொண்டாள் கனி.

‘யார் வந்திருப்பார்களோ..? இன்னும் இவர்களை என்னவாய் வதைக்க போகிறார்களோ..?’ என்ற எண்ணமே பர்வதத்தை அலைக் கழித்தது. ஏதாவது பெயர் தெரியாத தேசத்தில் சென்று ஒழிந்துக் கொண்டால் என்ன என்றுக் கூட தோன்ற ஆரம்பித்து விட்டது. ராஜனின் இறப்பிற்காக துக்கம் விசாரிக்க வந்தவர்கள் அனுசரணையாய் விசாரித்த விதம் அப்படி.

மீண்டும் மீண்டும் அழைப்புமணி ஒலிக்கவே தன் எண்ணத்தில் இருந்து களைந்தவராய் எழுந்துச் சென்று கதவைத் திறந்தார். வெளியில் பணக்கார தோரனையுடன் ஐவர் நின்றிருந்தனர். அதில் மையமாய் நின்றிருந்த ஆராவின் பள்ளி தலைமை ஆசிரியரை மட்டும் தான் பர்வதத்துக்கு அடையாளம் தெரிந்தது. மற்றவர்கள் யாரென்றும் தெரியவில்லை; இப்பொழுது இங்கே எதற்காக வந்திருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.

அவரின் தோளில் கைவைத்து விலக்கிக் கொண்டு அனுமதியில்லாமலே உள்ளே நுழைந்தார் ஒருவர். அவரை தொடர்ந்து மற்ற நால்வரும் உள்ளே நுழைந்திருந்தனர்.

உள்ளே சென்றவர்கள் சோபாவில் அமர்ந்து வீட்டை நோட்டம் விடவும், கதவுகளை அகலமாய் திறந்து வைத்தப்படி கேள்வியாய் அவர்களின் முன்சென்று நின்றார் பர்வதம்.

“இவரு நம்ம ஸ்கூல் சேர்மன்…” என்றார் முதலாவதாய் பர்வதத்தை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தவரை கைக்காட்டி அந்த தலைமை ஆசிரியர்.

பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாய் என்னவென்று சொல்லி முடியுங்கள் என்பதைப் போல பார்த்திருந்தார் பர்வதம்.

“ராஜன் தவறிட்டாராமே… கேள்விப்பட்டோம்… அதுல ரொம்ப வருத்தம் எங்களுக்கெல்லாம்…” என்றவரின் குரலில் வருத்தம் துளியும் இருப்பதற்பதைப் போல் தெரியவில்லை.

“ஆரா எங்க… இங்க தானே இருக்கத கேள்விப்பட்டேன்… இல்ல வெளியூருக்கு எதுவும் அனுப்பி வச்சுருக்கீங்களா..?” என்றார் மறுபடியும் அவர் கண்களை சுழற்றி அவளை தேடியபடியே. அவரின் ஒவ்வொரு வார்த்தையும் அந்த குடும்பத்தை அவர்கள் கண்காணிப்பதாய் கோடிட்டு காட்டியது.

“என்ன வேணும் உங்களுக்கு…” என்றார் நேரடியாய் எரிச்சலோடு பர்வதம்.

“நீங்களே நேரடியா விசயத்துக்கு வந்துட்டீங்க… நல்லது… நீங்க சொல்லுங்க… எவ்வளவு பணம் வேணும் உங்களுக்கு…” என்றார் அவர்.

புரியாமல் கேள்வியாய் அவர்களை பார்த்தார் பர்வதம். “பசங்க மேல போட்டிருக்க கேஸ வித்ட்ரா பண்ண உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னு கேக்கறேன்…” என்றார் அழுத்தமாய் அவர்.

பதில் எதுவும் சொல்லாமல் பர்வதம் அழுத்தமாய் நின்றிருக்க, ஒரு இளக்கார முறுவலுடன் அவரைப் பார்த்தார் அந்த பள்ளியின் நிர்வாகி.

“நீயூஸ் பேப்பர் பார்த்து இருப்பீங்களே…” என்றார் அவர் கேள்வியாய். பர்வதத்தின் புரியாத பார்வையில், “ஓஓஓ… பார்க்கலையா..? இந்தாங்க பாருங்க…” என்றபடியே சில நாளிதழ்களை அவரின் டீ மேசையில் விசிறியடித்தார்.

இன்னுமே பர்வதம் அழுத்தமாய் அப்படியே நின்றிருக்க, ஒரு செய்தி தாளை எடுத்து பக்கங்களை புரட்டி அவரிடம் நீட்டினார் அவர்.

“சர்ச்சைக்குரிய பாலியல் வழக்கில் தீடிர் திருப்பம். கைது செய்யபட்ட நான்கு வாலிபர்ளுடன் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஏற்கனவே பழக்கமிருந்ததா..? விரும்பியே தான் அந்த பெண் அவர்கள் நால்வருடன் சென்றிருக்கிறாயர். அவரும் போதை பழக்கத்திற்கு அடிமையானவரா..? அவர்களை கைது செய்தப் போது பாதிக்கபட்டதாய் சொன்ன பெண்ணும் போதையில் இருந்ததாகவும் அதைத் தொடர்ந்து அதற்காக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றதாகவும் தெரிய வருகிறது…” இன்னும் என்னென்னவோ திரித்து எழுதப்பட்டிருந்தது அந்த நாளிதழில். இரண்டு தினங்களுக்கு முந்தைய பத்திரிக்கை அது.

விசயம் பரவி விட்டதென தெரிந்தவர்களுக்கு அது என்ன மாதிரியாய் பரவியிருக்கிறது என்று அறியும் எண்ணமில்லை. அதுப்பற்றிய சிந்தனையுமில்லை. அநேகமாய் இந்த நாளிதழ்களில் ஒன்றை ராஜன் பார்த்திருக்க வேண்டுயென்று தோன்றியது. மற்றவற்றோடு அதுவும் சேர்ந்து அவரை பெரும் அழுத்ததிற்கு தள்ளியிருக்க வேண்டும். அந்த அழுத்தம் மரணம் வரை இழுத்துச் சென்றிருக்க வேண்டும்.

பர்வதத்தின் முகம் மாறுவதை அணு அணுவாய் ரசித்தபடியே அமர்ந்தவர், “எதையும் உங்களுக்கு விளக்கி சொல்லணுங்கற அவசியம் இருக்காது… இந்த கேஸ நீங்க தொடர்ந்து நடத்துனாலும் உங்களுக்கு எதிரா திருப்பறது எங்களுக்கு ரொம்ப சுலபம்… நல்லா யோசிச்சு எவ்வளவு பணம் வேணும்னு எந்த நாட்டுக்கு போகணும்னு சொல்லி அனுப்புங்க… அப்ப நாங்க கிளம்பறோம்…” என்றபடியே அந்த பள்ளியின் நிர்வாகி எழுந்துக் கொள்ள, மற்றவர்களும் எழுந்துக் கொண்டனர்.

“எங்க பிள்ளைக்காக நாங்க எந்த எல்லைக்கும் போவோம்… ஆம்பளை இல்லாத வீடு… தேவையில்லாம பணக்காரங்கள பகைச்சுக்காதீங்க… நடந்ததையே வேற விதமா திரிச்சு நீயூஸா போட வச்ச எங்களுக்கு நடக்காத விசயத்த நீயூஸா போடறது ஒன்னும் பெரிய விசயமில்லை… அந்த அளவுக்கு வச்சுக்க மாட்டீங்கனு நினைக்கறேன்…” என்றவர் கிளம்பிவிட, மற்றவர்களும் அங்கிருந்து நகர்ந்திருந்தனர்.

‘எத்தனை வெளிப்படையாய் மிரட்டுகிறார்கள்… அவரை மிரட்டவே கூட்டம் சேர்த்துக் கொண்டு வந்திருப்பார் போல…’ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை அவரால்.

அவர்கள் சென்ற கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவசரமாய் அடித்து பிடித்துக் கொண்டு அங்கே ஒடி வந்திருந்தார் வள்ளியம்மை

“என்ன… என்ன சொன்னானுங்க அந்த ராஸ்கல்ஸ்… என்கிட்ட அவனுங்க ஜம்பம் பளிக்கலைனு உங்கள மிரட்ட வந்துட்டானுங்களா…” என்றவர் ஓயாமல் பொறிந்துக் கொட்ட, அவரை அமைதியாய் பார்த்திருந்தார் பர்வதம்.

வேகமாய் சோபாவில் அமர்ந்தவர், அழுந்த நெற்றியை நீவி விட்டுக் கொண்டார். “பச்… ரொம்ப டென்ஷன்ம்மா… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் என் ஆபிஸ்க்கு வந்து என்னையே மிரட்டிட்டு போனானுங்க… உடனே இங்க வந்திருக்கானுங்கனு தெரியவும் பதறிட்டு எனக்கு… யாருக்கும் ஒன்னுமில்ல தானே… நீங்க சேப் தானே… ஆரா எப்படி இருக்கா இப்போ..?” மூச்செடுக்கவும் மறந்தவறாய் அவர் படபடக்க,

“பணம் தரேன்… கேஸ வித்ட்ரா பண்ணிடுங்கனு சொல்லிட்டு போறாங்க…” என்றார் அமைதியாய் பர்வதம்.

அந்த நால்வரையும் வள்ளியம்மை கைது செய்து அழைத்துப் போனதோடு சரி. அவர்கள் என்ன ஆனார்கள்? எங்கே இருக்கிறார்கள்? ஏன் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்றே கண்டு பிடிக்க முடியவில்லை அவர்களால். வள்ளியம்மையை மீறி ஒரு துரும்பும் துப்பாய் கிடைக்கவில்லை அவர்களுக்கு. அவரிடம் முட்டி மோதி ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை என்றதும் தான் பர்வதத்தின் பக்கம் திரும்பி இருக்கிறது அவர்களின் கவனம்.

கெட்ட வார்த்தை ஒன்றை வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டவர், “நினைச்சேன்… இவனுங்களால வேற என்ன பண்ண முடியும்… மிரட்ட தான் முடியும்…” என்றார் கடுப்பாய் வள்ளியம்மை.

உடனே நினைவு வந்தவர் போல அவசரமாய், “நீங்க என்ன முடிவு எடுத்து இருக்கீங்க..?” என்றார்.

“என்ன முடிவு எடுக்கணும்னு சொல்லறீங்க..?” என்றார் விரக்தியாய் பர்வதம்.

“நினைச்சேன்… அவனுங்களுக்கு பயந்துட்டு பெட்டிய கட்டிட்டு கண் காணத இடத்துக்கு போகலாம்னு முடிவே பண்ணிட்டீங்க இல்ல… ரொம்ப சந்தோஷம்… அதானே உங்க பொண்ணு உயிரோட வந்துட்டா… இனிமே யாரு எக்கேடு கெட்டுப் போனா என்ன..? அவனுங்க நாளைக்கே வெளிய வந்து ஸ்கூல படிக்கற இன்னொரு பொண்ணோட வாழ்க்கைய கெடுக்கட்டும்… நமக்கனென்ன வந்துச்சு… நம்ம வரைக்கும் நம்ம நிம்மதியா இருந்தா போதாதா..?” எண்ணையில் இட்ட மிளகாயாய் காயத் துவங்கிவிட்டார் அவர்.

“நான் வேற ஊருக்கு பெட்டிய கட்டறேன் உங்கிட்ட சொல்லவேயில்லையே..?” என்றார் நிதானமாய் பர்வதம்.

“ஐய்யையோ… நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டேன் போல… நீங்க என்ன முடிவெடுக்கணும்னு கேட்டதும்… அப்படி நினைச்சுட்டேன்…  சாரி… சாரி… ரியலி ஐ அம் வெரி சாரி…” என்றார் அடுத்த நொடியே உணர்ந்து.

“ஆனாலும் இந்த கேஸ்ல ஜெயிப்போனு எனக்கு நம்பிக்கை இல்லை…” என்றார் பர்வதம் தீவிரமான குரலில்.

சட்டென்று அமைதியாகிப் போனார் வள்ளியம்மை. அவரின் மனதையும் இந்த எண்ணம் தான் அரித்தது. இந்த நொடியே அந்த நால்வரையும் துடிக்க துடிக்க கொன்றுப் போட வேண்டும் என்று தோன்றுகிறது தான். ஆனால், சட்டத்தின் முன் அவர்களை முழுதாய் நிறுத்த வேண்டுமே! எல்லா விதத்திலும் அவர்களுக்கு எதிரான ஆதாரத்தை திரட்டிக் கொண்டிருக்கிறார். கூடவே குற்றம் செய்தவர்களே அதை ஒப்புக் கொள்ளும் போது தண்டனையிலிருந்து எப்படி தப்ப முடியும்.

“சத்தியம் ஜெயிக்கும்னு நம்புங்க பர்வதம்… நான் அவங்களுக்கு எதிரான எல்லா சாட்சியையும் ரெடி பண்ணிட்டேன்… கேஸ் அவங்களுக்கு சாதகமாக சான்ஸ் ரொம்ப ரொம்ப கம்மி…” என்றார் உறுதியாய் அவர்.

“நீங்க நினைக்கறது நடக்கணும்னு தான் நானும் ஆசைப்படறேன்…” என்றார் பர்வதமும்.

“நடக்கும் பர்வதம்… ஆரா எங்கனு கேட்டேனே… எப்படி இருக்கா இப்போ..?” என்றவர் குரலில் கவலை இருந்தது.

“இருக்கா… தூங்காம சாப்பிடாம விட்டத்தையே வெறிச்சு பாத்துட்டு… எங்க கொஞ்ச நேரம் தனியா விட்டாலும் ஏதாவது பண்ணிப்பாளோனு பயமா இருக்கு… தூக்க மாத்திரை குடுத்து தான் தூங்க வைக்கறோம்… எங்க நாங்க அழுதா இன்னும் உடைஞ்சு போய்டுவாளோனு ரொம்ப பயமா இருக்கு…” என்றவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழியே, ஆதரவாய் அணைத்துக் கொண்டார் வள்ளியம்மை.

“காலம் எல்லா துன்பத்துக்கும் சிறந்த மருந்து… அது ஆராவ மீட்டு பழையபடி நம்மகிட்ட கொடுக்கும்னு நம்புங்க… அந்த நம்பிக்கை மட்டும் தான் அவளுக்கான தெம்பு…” என்றார் ஆதரவாய்.

“இனியொரு நாள் என் பொண்ணால பழைய மாதிரி இருக்க முடியும்… சிரிக்க முடியும்னு எனக்கு தோணவே மாட்டேங்குதே…” என்றார் பர்வதம் பாவமாய்.

“ஆரா எனக்கும் பொண்ணுதான்… இத பேச்சுக்கு சொல்லைல நான்… அவள நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டியது என் பொறுப்பு… என்னை நீங்க நம்பணும்…” என்றார் வள்ளியம்மை. அதற்கு பதிலொன்றும் சொல்லி விடவில்லை பர்வதம். ஆனால், வள்ளியம்மை தான் சொன்னதை பின்னால் நடத்திக் காட்டியிருந்தார்.

சற்று நேரம் பர்வதத்திடம் மற்ற விசயங்களை பேசிக் கொண்டிருந்தவர், ஆராவையும் சென்றுப் பார்த்து வருவதற்காக சென்றார். தூக்க மாத்திரையின் உதவியுடன் உறக்கத்தில் அமிழ்ந்திருந்தாள். கனி அவளுங்கு காவலாய் பக்கத்திலேயே அமர்ந்துக் கொண்டிருந்தாள்.

கனியைக் கண்டதும் தான் நினைவு வந்தவராய், “நீ இந்த வருஷம் பத்தாவது தானே…” என்றார். ஆம் என்னும் விதமாய் ஆடியது அவளின் தலை.

“இன்னும் எத்தனை நாள் இருக்கு எக்ஸாம்க்கு… ஸ்கூல் போனா தான் பிக்கப் பண்ண முடியுமா..? இல்ல வீட்டுல இருந்தாலும் படிச்சுப்பீயா..?”

“இல்ல நான் இந்த வருஷம் எக்ஸாம் எழுதல…” என்றாள் கனி உறுதியாய்.

“நான் எழுதறீயானு கேட்கல… வீட்டுல இருந்தே படிச்சுப்பீயானு கேட்டேன்…” என்றார் அதட்டலாய் வள்ளியம்மை.

“ம்ம்ம்… படிச்சுப்பேன்…” என்றாள் மெல்லிய குரலில் கனி.

“அப்போ சரி… நீ வேற ஊர்ல எக்ஸாம் மட்டும் எழுதற மாதிரி நான் ஏற்பாடு பண்ணறேன்…” என்றபடியே வெளியே வந்துவிட்டார் வள்ளியம்மை.

“பர்வதம் எனக்கு நீங்க ஒரு ஹெல்ப் பண்ணனுமே…” என்றவரை என்னவென்பதைப் போல நிமிர்ந்து கேள்வியாய் பார்த்தார் அவர்.

“நீங்க எல்லாரும் என்னோட என் வீட்டுக்கு வந்திடணும்… ரொம்ப நாள் இல்ல இந்த கேஸ் நடக்கற வரைக்கும் தான்… உங்களுக்கு எப்போ என்ன ஆகும்னு நினைச்சு பதறிட்டே இருக்க முடியல என்னால… அதுவுமில்லாம வேற இடத்துக்கு போறது ஆராவுக்கு பெரிய சேஞ்சா இருக்கும்… யோசிக்க…” என்றார் வள்ளியம்மை.

சட்டென்று பர்வதத்தின் மனதில் இதுவரை ஆரா விட்டத்தை வெறித்தபிடி அமர்ந்திருந்த காட்சி தான் நிழலாடியது. “எப்ப நாங்க வந்தா உங்களுக்கு வசதிப்படும்…” என்றார் யோசனையாய் பர்வதம்.

ஒரு நொடி அவரை இறுக அணைத்துக் கொண்ட வள்ளியம்மை, “ரொம்ப தேவையான பொருள மட்டும் எடுத்து வச்சுட்டு கிளம்புங்க… நானே உங்கள வீட்டுல விட்டுட்டு போறேன்…” என்றபடி அங்கேயே அமர்ந்துவிட்டார் வள்ளியம்மை. அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவர்கள் மூவரும் வள்ளியம்மையின் வீட்டிற்கு இடம் பெயர்ந்திருந்தனர்.

நாட்கள் விரைவாக நகர்ந்திருந்தது. இன்றைய தினம் ஆராவின் வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது. குற்றம் சாற்றப்பட்ட நால்வரும் பதினெட்டு வயது நிரம்பாத மைனர்களாய் இருப்பதாலும், அவர்களின் பெயரில் இதுவரை எந்த குற்ற பின்னனியும் இல்லாதிருப்பதையும் அவர்களுக்கு சாதகமாக்கி, ஆளுக்கு ஐம்பதாயிரம் அபராத தொகையும், பழ மரக் கன்றுகளை பொதுவெளியில் நட்டு வேலியிட்டு பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளோடு அவர்கள் நால்வரையும் ஜாமீனில் விடுதலை செய்திருந்தது நீதிமன்றம்.

                    பற்றி எரியும்…

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்