
தழல் – 11
கதவை மிக மெல்லியதாய் தட்டிவிட்டு, இரண்டு அங்குல அளவிற்கு மட்டும் திறந்து வெளியில் நின்றபடியே, “மே ஐ கமின் மேம்…” என்றார் பியூன். தப்பி தவறி கொஞ்சமாய் தலையை உள்ளே நீட்டினாலும் தொலைந்தான். ஆராவிடம் அதற்கான விளக்கத்தை சொல்லி முடிக்கும் முன் வெலவெலத்து வியர்த்துப் போகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவன் இங்கு வேலை செய்கிறான்.
அலட்டல் இல்லாத ஆர்பாட்டம் இல்லாத ஒரு ஆளுமை. அதுதான் ஆரா. ஒரு வார்த்தை கூட உரத்து ஒலிக்காது. அவளின் பார்வை தான் எதிரில் இருப்பவரை கூறுப் போடும். அதே நேரம் எதிராளிக்கும் தன் தரப்பு நியாயத்தை சொல்ல வாய்ப்பிருக்கும். அதேநேரம் அந்த பார்வையை மீறி தப்பி தவறிக்கூட பொய் சொல்லிவிட முடியாது. அதே நேரம் அவள் ஒன்றை முடிவு செய்துவிட்டால், அதில் திருத்தமே இருக்காது. ‘ஆரா சொன்னால் சரியாக தான் இருக்கும்…’ அனைவரின் ஒருமித்த கருத்தாய் இருக்கும். இந்த அரக்கட்டளையின் நிர்வாகி அனுராதாவாய் இருந்தாலும் நிர்வாகம் முழுவதும் ஆரா தான். அதற்கு இந்த ஆளுமை அத்தியாவசியம் மட்டும் அல்லது அழகும் சேர்த்தது.
பேசிக் கொண்டிருந்தவரிடம் அவசரமாய் விடைப்பெற்று கைப்பேசியை அணைத்தவள் முகம் பழைய ஆளுமைக்கு திரும்பி இருந்தது. முன்பைவிட அத்தனை தெளிவு அந்த முகத்தில்.
“எஸ் கமின்…” என்றபடியே தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள்.
“எஸ் மேம்…” என்றபடியே உள்ளே வந்த புயூனிடம் ஆசாத்திய அமைதி. அவளே சொல்ல காத்திருந்தான்.
சில நொடிகள் அவனைப் பார்வையில் அளவெடுத்தவள், “இந்த கிப்ட் பாக்ஸ என் ரூம்ல நீங்க தான் வச்சீங்க இல்லையா..?” என்றாள் தெரிந்த கேள்விக்கு பதிலை எதிர்பார்த்தபடி.
“ஆமான் மேடம்… வாசல் கேட்டுல இருக்க லெட்டர் பாக்ஸ்ல இருந்தது… உங்க பேர் போட்டு இருந்ததால நான் தான் கொண்டு வந்து இங்க வச்சேன்…”
“அப்போ நேத்தும் இத மாதிரி ஒரு கிப்ட் பாக்ஸ் இருந்ததே அத நீங்க தான் இங்க வச்சதா..?”
“ஆமான் மேடம்…”
“யார் இத லெட்டர் பாக்ஸ்ல வச்சதுனு தெரியுமா..?”
“இல்ல மேடம்… நான் வேலைக்கு வரும் போதே இருந்தது… மத்த லெட்டர் எடுக்கும் போது இதையும் எடுத்துட்டு வந்தேன்…”
எப்பொழுதும் வேலைக்கு வரும் போதே அன்றைக்கு கடித பெட்டியில் இருப்பவற்றை எடுத்து வந்து அவரவர் இடத்தில் வைத்துவிடும் வேலை அவனுடையது தான்.
“சரி நீங்க கிளம்புங்க…” என்றவள் புருவம் யோசனையில் முடிச்சிட்டு நின்றது.
“ஓ.கே மேடம்…” என்றுவிட்டு வாசல்வரை சென்றவனை ஆராவின் குரல் தடுத்து நிறுத்தியது.
“ஒரு நிமிஷம்… நேத்தும் இன்னைக்கும் கேட்ல ட்யூட்டிக்கு யார் இருந்தா..?”
“பத்துல இருந்து காலையில ஆறு மணி வரைக்கும் எப்பவும் நைட் டீயூட்டிக்கு வர ரகு அண்ணா இருந்தாரு மேம்… நேத்து காலையில ஆறு மணிக்கு மேல மணி அண்ணா இருந்தாரு…” என்றவனிடம் சிறுதடுமாற்றம். “இன்னைக்கு ரகு அண்ணாவே காலையில பத்து மணி வரைக்கும் இருந்தாங்க… அதுக்கு அப்பறம் ஶ்ரீதர் அண்ணா வந்து சார்ஜ் எடுத்துக்கிட்டாங்க…”
“ஓ.கே வாங்க…” என்று அவள் சொல்லவும் கிளம்பிவிட்டான் அவன்.
மணி, ரகு, ஶ்ரீதர் மூவரும் வாயில் காவல் பணியில் இருப்பவர். எட்டு மணிநேர வேலை. நிர்வாகம் தான் வேலை நேரத்தை ஒதுக்கும். ரகு என்பவர் மட்டும் பகலில் இன்னொரு பணியில் இருக்க, தொடர்ந்த இரவு பணியை எடுத்துக் கொண்டிருந்தார். இதில் மணி என்பவரை தான் ஆரா வேலையில் இருந்து நிறுத்தி இருந்தாள். ‘தவறுகள் மன்னிக்கப் படலாம் அலட்சியங்கள் மன்னிக்கப்பட கூடாது’ என்பது அவள் கொள்கை. இப்பொழுது ரகுவிற்கு தான் பணிசுமை அதிகமாய் இருக்கும். விரைந்து ஒருவரை வேலைக்கு அமர்த்த வேண்டும் என மனதில் மட்டுமல்லாது எதிரே இருக்கும் உடனடியாக செய்ய வேண்டிய பட்டியலிலும் குறித்து வைத்தவள் அடுத்த வேலையை கவனிக்க துவங்கிவிட்டாள்.
நித்யாவும் யுவாவும் வந்து அழைக்கும் வரையுமே முழுதாய் அலுவலில் மூழ்கி போயிருந்தாள் அவள்.
“சாரி… சாரி… மறந்துட்டேன் நித்தி… கேரீயர் வண்டியில இருக்கு எடுத்துட்டு வந்துடறேன்…” என அவசரமாய் எழுந்துக் கொண்டாள் அவள்.
“சாப்பிட மறந்துடு… தூங்க மறந்துடு… ஒருநாள் இல்லை ஒருநாள் என்னையே மறக்க போற பாரு…” என்றபடியே அவள் மேசையின் மீது உணவு பையை வைத்தாள் நித்யா.
“என்னை மறந்தாலும் உயிர் பிரிந்தாலும் உன்னை மறவேன் அன்பே…” இதயத்தில் கைவைத்து கண்மூடி திறந்து உருக்கும் குரலில் பாவணையாய் சொன்னவளை முறைக்க முயன்று முடியாது சிரிப்பை தெளித்தாள் அவள்.
“இதே டயலாக்க யாராவது ஜென்ஸ்கிட்ட சொல்லி இருந்தா… இன்நேரம் இடுப்புல ஒன்னு தோள்ல ஒன்னு இருந்துருக்கும்…” என நொடித்தவள், “ஏய் நேத்து பொண்ணு பாக்க வந்தாங்களே… என்னாச்சு… கல்யாணம் பிக்ஸ் ஆகிட்டா… அதுக்குதான் இந்த ட்ரீட்டா…” என்றாள் மறுநொடி ஆர்பரித்து.
“இல்ல ஊத்திகிச்சு… அதுக்குதான் இந்த ட்ரீட்…”
“இந்த மாப்பிள்ளைக்கிட்ட என்ன சொன்ன…”
“உண்மைய சொன்னேன்…” என்றவளை, இடுப்பில் கை வைத்தபடி முறைத்துப் பார்த்தாள் நித்யா.
“லிவிட் நித்தி… சாப்பிடலாமா..? யுவா பசி தாங்க மாட்டான்…” என்றபடியே மேசையில் இருந்த உணவு பையை எடுத்துக்கொண்டு போய், அவளின் ஓய்வறையில் நால்வர் அமரும்படி இருந்த உணவு மேசையின் மீது வைத்தாள்.
இங்கே அனைத்து மருத்துவர்களுக்குமே அவர்களின் அறையோடு இணைந்த ஓய்வறை உண்டு. ராதாவினுடையுதும் இவளுடையதும் இன்னும் கூடுதல் வசதிகளோடு சற்றே பெரிய அறை.
“ரொம்ப வெயிட்டா இருக்கு… என்ன மெனு…” என்றபடியே அவளுக்கு எதிரில் அமர்ந்தாள் நித்யா.
யுவா அமர தனக்கு அருகே உள்ள இருக்கையை இழுத்துப் போட்டவள், “யுவாக்கு பிடிச்ச பிரியாணி…” என்றாள் அவனைப் பார்த்து மலர்ந்துப் புன்னகைத்தபடி. அவன் விழிகளும் முகமும் ஒருசேர மலர கண்டவள் அகமும் மலர்ந்தது. வாரத்தில் நான்கு நாட்களாவது நடக்கும் நிகழ்வுதான் இது.
“தேங்க்ஸ்…” என்றான் யுவா.
“பாருடா… என் தம்பி பயலுக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்ல தெரிஞ்சுருக்கு…” என்றபடியே கேரியரை பிரித்து, தட்டில் அவனுக்கான உணவை வைத்து முதலில் அவனிடம் கொடுத்தாள் அவள்.
அவன் ஆசையாய் உண்ண தொடங்கவும் தான், அதன் சுவையில் அவன் முகம் திருப்தியுறுவதை கண்டபின் தான், நித்யாவுக்கு பரிமாறி தட்டினை அவளிடம் நீட்டினாள்.
“ட்ரீட் எல்லாம் உங்களுக்கு மட்டும் தானா..? எங்களுக்கு இல்லையா..?” என்றான் வேந்தன் கதவில் சாய்ந்து நின்று, அவர்கள் மூவரையும் தோரணையாய் பார்த்தபடி.
என்ன சொல்வதென்று தெரியாது தடுமாறி, மறுநொடி அவசரமாய் “உங்களுக்கு இல்லாமையா சார்… ப்ளீஸ் ஜெயின் வித் அஸ்…” என்றாள் நித்யா சிறு பதற்றத்துடன்.
அதே நேரம், தனது தட்டில் உணவினை இட்டு நிரப்பியபடியே, “கூப்பிடலைனா இல்லைனு தான் அர்த்தம்…” அலட்டிக் கொள்ளாமல் சொன்ன ஆராவின் வார்த்தைகளில் இருந்தது முழுக்க முழுக்க கேலி மட்டுமே. மலர துடித்த அதரங்களை, உண்ணுவது போல் தலைக் கவிழ்த்து மறைத்துக் கொண்டாள் அவள்.
அவளின் வார்த்தைகளில் வேந்தன் வாடினானோ இல்லையோ உண்மைக்குமே நித்யா பதறி தான் போனாள். “ஆரா… என்ன பேசற நீ…” என மெல்லிய குரலில் அவளைக் கடிந்தவள், “அவ சும்மா விளையாட்டுக்கு சொல்லறா சார்… நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க… ப்ளீஸ்… சாப்பிட வாங்க…” என்றவளின் குரலில் பதற்றமும் இரைஞ்சலும். பதற வேண்டியவளோ முதல் கவள உணவை அள்ளி வாயில் வைத்தபடியே, ரசித்து உண்ண தொடங்கி இருந்தாள்.
“சில்… சில்… உங்க ப்ரண்ட் சீரியஸாவே சொல்லி இருந்தாலும் எனக்கொன்னும் கோபமெல்லாம் இல்ல… இன்னைக்கு அவங்க சமையல சாப்பிட்டு பாத்திடறதுனு முடிவு பண்ணிட்டு தான் வந்திருக்கேன்.” சொன்னபடியே நித்யாவின் அருகில் கிடந்த நாற்காலியை இழுத்து ஆராவின் அருகில் போட்டு அமர்ந்தவன், அவளின் தட்டை தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.
நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், கையிலிருந்த இரண்டாவது கவள உணவை வாயில் போட்டபடியே, சின்னதொரு தோள் குலுக்களுடன் இயல்பாய் கேரியர் மூடியில் தனக்கான உணவை மீண்டும் வைத்துக் கொண்டாள்.
“என்ன ஸ்பெஷல் இன்னைக்கு பிரியாணி வாசம் பக்கத்து ரூம் வரைக்கும் வருது…” என்றபடியே உண்ண தொடங்கி இருந்தான் வேந்தனும். என்ன செய்கிறோம் என்ற பிரஞ்சையே இல்லாது அவன் அவளை சீண்ட தான் அத்தனையும் செய்தான். ஆனால் அவர்கள் இருவரின் செயலில் நித்யா தான் பேயறைந்துப் போல் அதிர்ந்து உறைந்துப் போய் அமர்ந்திருத்தாள்.
“உங்கள தான் மேடம்… என்ன ஸ்பெஷல்னு கேட்டேன்…” அவன் உறைந்து போய் அமர்ந்திருந்தவளின் முன் சொடுக்கிட்டு அவன் வினவ,
திடுக்கிட்டு திருதிருத்து விழித்தவள், “ஹான்… அது நேத்து ஆராவ பொண்ணு பாக்க வந்திருந்தாங்க…” என உளறி இருந்தாள்.
ஒரு நொடி சாப்பிட்டுக் கொண்டிருத்தவன் கை அந்தரத்தில் அப்படியே நின்றுப் போயிருந்தது. ஏனென்றே தெரியாத எரிச்சல் ஒன்று அவன் மனதில் பரவியது.
“என்னவாம்… எல்லாம் பிக்ஸ் ஆகிட்டா…” என்றான் அதுவரை குரலில் இருந்த இலகுதன்மை மாறி.
தோழியை கண்டன பார்வை பார்த்தவள், “அது எதுக்கு உங்களுக்கு… சாப்பிட தானே வந்தீங்க… சாப்பிடுங்க…” என்றாள் ஆரா சின்ன அதட்டல் குரலில்.
‘இவளாவது கல்யாணத்துக்கு ஒத்துக்கறதாவது…’ என்ற எண்ணம் தான் அடுத்த நொடி அவனுள் உதயமானது. ஒருபக்கம் பர்வதம் என்றால் இன்னொரு பக்கம் ராதாவும் தானே அவளுக்கு மணமகனை தேடி வலைவீசிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு முறை அவள் மறுக்கும் போதும் எத்தனை இவனிடம் புலம்பி தீர்த்திருப்பார்.
“நல்லா இருந்தா சாப்பிட மாட்டோமா..? உப்பும் இல்ல… உரைப்பும் இல்ல…” என்றான் வேந்தன் அவளைப் பார்த்து கேலியாய் இதழை சுழித்தபடி.
“இல்ல நல்லா இருக்கு… ஆராக்கா சமைச்சா எப்பவும் நல்லா இருக்கும்…” அமைதியாய் சாப்பிட்டுக் கொண்டிருந்த யுவா ஆராவிற்காக போர்கொடி தூக்க,
“அடே தம்பி பையா… இதான் பிரியாணினு சொல்லி உங்க அக்கா உன்ன ஏமாத்தி வச்சிருக்கா… நானெல்லாம் ஹாஸ்டல் படிக்கற காலத்துல…” அவன் ஆர்பாட்டமாய் தற்பெருமை பாட ஆரம்பிக்க,
அவனின் தட்டில் தீர்ந்திருந்த வெங்காய பச்சடியை இயல்பாய் வைத்தபடியே, “எது காந்தி தாத்தா இந்தியாவுக்கு சுகந்திரம் கிடைக்க போராடினாரே அந்த காலத்துலையா..?” என்றவள் குரல் சாதரணம் போல் இருந்தாலும் கேலி இழையோடியது உண்மை.
“ஹலோ மேடம்… ஐ அம் ஜெஸ்ட் டுவென்டி எய்ட்…” அவசரமாய் விரைப்பாய் வந்து விழுந்தது அவன் வார்த்தைகள்.
அவனையே அழுத்தமாய் பார்த்தபடி, “ஆஹான்…” என்றாள் புருவங்கள் இரண்டையும் ஏற்றி இறக்கி நம்பாத பாவணையில் அவள்.
“டுவெண்டி எட்ய்னா டுவெண்டி எய்டேவா… கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம்… ஒரு தேர்டி கூட வச்சுக்கலாம்…” என்றான் சிறு தடுமாற்றத்துடனும் ‘போதும்… விட்டுவிடேன்…’ என்ற ரீதியிலான சரணடையும் பார்வையுடனும்.
“ஓகோ…” மீண்டும் பாவணையாய் ஏறி இறங்கியது அவளின் இரு புருவங்களும்.
“தேர்டி திரி… போதுமா..?” அவன் அவளை முறைத்துக் கொண்டே கடுப்பாய் சொல்லி வைத்தவன் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டான் சிறுப்பிள்ளை போல. குபீரென்று வெடித்துக் கிளம்பிய சிரிப்பை கஷ்டபட்டு அடக்கிக் கொண்டாள் பெண்.
“அதெல்லாம் இல்லை… அக்கா சமைச்சா நல்லா இருக்கும்…” திரும்ப திரும்ப அதையே முணுமுணுப்பாய் சொல்லிக் கொண்டிருந்தனிடம், “அந்த அண்ணா சும்மா சொல்லறாங்க யுவா… நீ சாப்பிடு…” என்றாள் ஆரா.
“நீ என்னடி சாப்பிடாம வாய் பாத்துட்டு இருக்க… சாப்பிடு…” என தோழியையும் அதட்டவும் தான் அதிர்ச்சியில் உறைந்துப் போய் அமர்ந்திருந்த நித்யாவிற்கு உணர்வே வந்தது.
இன்னமுமே, கண்டதை கண்கள் கண்டு கொண்டிருப்பதை அவளால் நம்ப முடியவில்லை. உண்மையில் ஆரா தான் இது. அவளே அவளை கிள்ளிக் கூடப் பார்த்துக் கொண்டாள். வலித்து வேறு தொலைத்தது. அப்படியென்றால் கனவில்லை என்று தெளிந்தபின்னும் நம்ப முடியவில்லை.
கிட்டதட்ட ஆறு வருடங்களாய் அவளுக்கு ஆராவை தெரியும். அவளறிந்த ஆரா அநாவசியமாய் ஒரு வார்த்தை கூட அடுத்தவரிடம் பேச மாட்டாள். அதுவும் கிண்டல் கேலியெல்லாம் சாத்தியமே இல்லை. இங்கே அவள் இயல்பாய் இருப்பது அவளிடம் யுவாவிடம் தான். ஏன் ராதாவிடம் கூட ஒரு மரியாதையுடன் கூடிய விலக்கம் இருக்கும். அப்படியானவள் வேந்தனிடம் இப்படி பழகுவதுதான் நித்யாவிற்கு பேரதிர்ச்சியாய் இருந்தது.
இயல்பாகவே யுவாவின் தட்டையும் நித்யாவின் தட்டையும் நிரப்புவதுப் போல தான், தீர தீர வேந்தனின் தட்டையும் நிரப்பினாள் ஆரா. நித்யாவின் கவனம் உணவிலோ அவர்கள் பேசிக் கொள்வதிலோ படியேவே இல்லை. உண்டு முடிக்கும் வரை ஆராய்ச்சியாய் அவளின் பார்வை தோழியிடம் தான் பதிந்திருந்தது.
முதலில் உண்டு முடித்த வேந்தன், கையோடு தட்டையும் கழுவி வந்து உணவு மேசையில் கவிழ்த்துவிட்டு, “இனிமே மதியம் உங்க கூடவே சாப்பிடலானு முடிவு பண்ணிட்டேன்… எனக்கும் சேத்தே எடுத்துட்டு வந்துடுங்க ஆரா மேடம்…” என்றபடியே, அவள் பதில் சொல்லும் முன் கைகுட்டையில் கையை துடைத்தபடியே வெளியேறிச் சென்றுவிட்டான்.
‘வேலை வேற இல்லை பாரு எனக்கு…’ சிடுசிடுப்பாய் முணுமுணுத்துக் கொண்டவள் பார்வை, அவன் சென்ற பின்னும் வாசல் கதவுகளில் தான் பதிந்ததிருத்தது.
“ஆரா உனக்கு அவங்கள முன்னாடியே தெரியுமா..? ரொம்ப நாள் பழக்கமா..?” தீடீரென தீவிர குரலில் வினவிய தோழியை கேள்வியாய் பார்த்தாள் அவள்.
“இல்லையே நித்தி… ஏன் கேக்கற…” என்றாள் அவளை திரும்பி பார்த்து.
“ஏன் கேக்கறனு உனக்கே தெரியலையா ஆரா..?” என்றவள் இப்போது தோழியை நேர்கொண்டுப் பார்க்க, “என்ன கேக்கனுமோ நேரா கேளு நித்தி…” என்றாள் ஆராவும் அதேப் பார்வை பார்த்தபடி.
“நீ அவங்க கிட்ட ரொம்ப க்ளோஸா இருக்க மாதிரி இருக்கு… அவங்களுள் உன்கிட்ட ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கறாங்க… உனக்கது தெரியலையா… பழக்கம் இல்லைனா இது எப்படி சாத்தியம்..?”
சில நொடிகள் யோசனையில் நெற்றிப் பொட்டை தட்டிக் கொண்டவள், “அனு மேம் அவங்கள பத்தி நிறைய பேசுவாங்க நித்தி… கிட்டதட்ட டெய்லியும்… அவங்கள பத்தி மேக்சீமம் எனக்கு எல்லாமே தெரியும் நித்தி… அதனால என் மைண்ட் அவங்கள எனக்கு ரொம்ப நெருக்கமானவரா நினைச்சுருக்கலாம்… அவருக்கும் அப்படி தானு தோணுது…” என்றபடியே எழுந்துக் கொண்டவள், உண்ட பாத்திரங்களையும் கழுவதற்காக அள்ளிக் கொண்டு போய்விட்டாள். அவளின் கல்வி ஞானம் அப்படி இருக்க சாத்தியம் அதிகம் என்று கூறினாலும், அவளின் ஆழ்மனம் அதையும் தாண்டி அவர்களுக்குள் ஏதோ ஒன்று இழையோடுவதாக அடித்துக் கூறியது.
– பற்றி எரியும்…

