Loading

தழல் 10:

காலை நேர பரபரப்பு அவளைத் தொற்றிக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் குக்கரில் கறியை வேக வைத்திருந்தவள், இன்னொரு பக்கம் வாணலியில் எதையோ வதக்கிக் கொண்டிருந்தாள். சமையல் மேடை முழுவதும் நறுக்கிய காய்கறிகளும் மாசாலா டப்பாக்களும் நிறைத்துக் கிடந்தது.

“என்ன  பண்ணற ஆரும்மா…” என்ற பர்வதத்தின் குரலில் சிறு மலைப்பு.  அப்பொழுது தான் எழுந்து வந்தவருக்கு அவள் பரத்தி வைத்திருந்த பொருட்களை பார்க்கவும் அப்பட்டமான அதிர்ச்சி தான்.

“மதியத்துக்கு மட்டன் பிரியாணி… சிக்கன் 65… மட்டன் குருமா… காலைக்கு இட்லி… உங்களுக்கு டீய பிளாஸ்க்ல ஊத்தி ஓரமா வச்சிருக்கேன் பாருங்க… எடுத்துக்கோங்க…” கவனத்தை சமையலில் வைத்தபடியே பதில் தந்தாள் அவள்.

“மணி ஆறுதான் ஆகுது ஆரும்மா…” சுவர்கடிகாரத்தைப் பார்த்தபடியே சொன்னார் அவர்.

“ஓஓஓ… ஆறாகிட்டா… சீக்கரம் செஞ்சு முடிக்கணுமே… நேத்தும் வானவில்லுக்கு லேட்டா தான் போனேன்… அதுக்கே இந்த யுவா குட்டி கலாட்டாவே பண்ணிட்டான்…  இன்னைக்கும் லேட்டா போனா அவ்வளவு தான்…” என்றவளுக்கு சட்டென்று வேந்தனின் முகமும்,  சிடுசிடுக்கும் எரிச்சல் குரலில் தாமதமாக வந்ததற்கு அவளை கடிந்ததுக் கொண்டதும்  தான் நினைவில் நிழாலாடியது.

‘இன்னைக்கும் லேட்டா போனா திட்டுவானோ..? திட்டிதான் பாக்கட்டுமே… அப்போ தெரியும் இந்த ஆரா யாருனு… முதல அவன் இன்னைக்கு வருவானா..? அவன் வந்தா என்ன..? இல்ல வராட்டி தான் நமக்கென்ன..? யார்கிட்ட எப்படி பேசணும்னு ஒரு இது வேண்டாம்… ரொம்பதான் வாய் பேசறான் இடியட்… அவன் ஏ.சி.பினா, அப்படியே எல்லாரும் பயந்து நடுங்கி பதில் சொல்லுவாங்கனு நினைச்சுட்டான் போல…’ அவனை மனதிற்குள் தாளித்தபடியே, வாணலியில் வெங்காயத்தை வதக்கிக் கொண்டிருந்தாள் அவள். வழமைக்கு மாறாய் ஒருவன் செயலும் பேச்சும் அவளின் மூளையில் அழுந்த பதிந்து போனதால் தான், அவனை சாடுகிறோம் என்ற எண்ணமேயில்லை அவளுக்கு. ஒருவேளை அவளின் செயல் உரைத்திருந்தால் அவளின் செய்கை அவளுக்கே கூட அன்னியமாய் தோன்றியிருக்கும். அவளறியாமலே அவளின் எண்ணத்திற்குள் முதல் அடியை அழுத்தமாய் எடுத்து வைத்திருந்தான் வேந்தன்.

“ஆரும்மா… உன்னதான்…” பர்வதம் சத்தமாய் அவளின் தோளைப் பற்றி அழைக்கவும் தான் தன் நினைவுகளில் இருந்து கலைந்து, “ஹான்… என்னம்மா கேட்டீங்க…” என்றாள்.

“எப்ப போய் இதெல்லாம் வாங்கிட்டு வந்தேனு கேட்டேன்…”

“நைட் சரியா தூக்கமே வரலைம்மா… அதான் சீக்கரமே போய் வாங்கிட்டு வந்து சமைக்க ஆரம்பிச்சுட்டேன்…” என்றவள் கவனமாய் எத்தனை மணி என்பதை தவிர்த்திருந்தாள்.

காலை மதியம் என இரு வேளை உணவுகளையும் கூட தவிர்த்து அவள் உறங்கிய நாட்களும் உண்டு. பக்கத்தில் இடியே விழுந்தாலும் தெரியாத அளவிற்கு அப்படியொரு ஆழ்ந்த உறக்கம் அது. அவளாய் எழுந்துக் கொண்டால் மட்டும் தான் உண்டு. அதெல்லாம் ஒரு காலம். இப்பொழுது எல்லாம் முழுதாய் நான்கு மணி நேரம் அவள் ஆழ்ந்து உறங்கி எழுந்தாலே அது பேரதிசயம். கதவை மெலிதாய் திறக்கும் சத்ததிற்கே விழிப்பு தட்டிவிடுகிறது அவளுக்கு. வாழ்க்கை எப்போதும் அவளை விழிப்பு நிலையில் வைத்திருக்கவே வலிக்க வலிக்க பழக்கி இருக்கிறது.

என்றாவது ஒரு நாள் மீண்டும் அப்படி உறங்க முடியுமா என்ற ஏக்கம் அவளுக்கு இருக்கிறதோ இல்லையோ, ‘என்றாவது ஒருநாள் எல்லாவற்றையும் மறந்து கவலைகளை துறந்து மகள் அப்படி உறங்கிட மாட்டாளா..?’ என்ற அவா அந்த அன்னைக்கு உண்டு.

அடுப்பின் தீயை குறைத்து வைத்தவள், தேனீரை ஒரு குவளையில் ஊற்றி தாயின் கைகளில் திணித்துவிட்டு, நெற்றியில் அரும்பிய வியர்வை துளிகளை புறங்கையால் துடைத்தபடியே மீண்டும் சமையளில் மும்முரமானாள்.

“யாருக்கு ஆரும்மா இத்தனை காலையில இவ்வளவு சமைக்கற..?” தெரியாதவரா அவர். இருந்தாலும் மகளை ஆழம் பார்க்கவென்றே இந்த கேள்வியை கேட்டிருந்தார்.

“யாருக்குனா… இதென்ன கேள்விம்மா..? நமக்கு தான்…” என்றவளின் பதிலில் சிறு தடுமாற்றம். நமக்கு என்பதில் கனியும் அடக்கமில்லை, கனிதான் பிரதானம் என அவரும் அறிந்து தானே இருந்தார்.

ஆரா தனக்கென்று எதையுமே இதுவரை சமைத்ததில்லை. அவள் சமைக்கும் அத்தனையும் மற்றவர்களின் விருப்பத்தை தொட்டே இருக்கும். அதில் கனி பிரதான இடம் பிடிப்பாள். இன்றைய உணவு பிரத்தியேகமாக நேற்றைய அவளின் கோபத்தை தணிக்க தானென்று சொல்லாமலே புரிந்தது.

ஆனால், உரியவளை அது சேர வேண்டுமே. உண்மைக்கும் சொல்ல வேண்டுமென்றால், ஆராவைக் காட்டிலும் கனி வெகு அழுத்தக்காரி. ஆராவின் இந்த அழுத்தமும் நிதானமும் கூட அவளைத் தொட்டு தான் இவளுக்கு வந்தது எனலாம். பிள்ளைப் பேற்றை தவிர இதுவரை உடைந்து அழுததே இல்லை அவள். பொங்கிவரும் அழுகையைக் கூட அப்படியே இமைகளுக்குள் நிறுத்தி விழுங்கிக் கொள்ளும் சுபாவமுடையவள். ஆனால் , நேற்றைய அவளின் கதறல் ஆராவை சில்லு சில்லாய் உடைத்துப் போட்டிருந்தது. மூடிய கதவுக்குள்ளும் கேட்ட அவளின் அழுகுரலும் கதறல் மொழியும் நெஞ்சை இளக்காத அளவிற்கு ஆராவின் மனம் இன்னும் மரித்துப் போயிருக்கவில்லை. அவளை தேற்றி அழைத்துப் போவதற்குள் அறிவு தான் ஒரு வழியாகி போயிருந்தான். இளைய மகளின் அந்த கண்ணீர் தான் என்றைக்கும் இல்லாத திருநாளாய் பர்வதத்தைக் கூட ஆராவிடம் அதுப்பற்றிய கேள்வியை எழுப்ப வைத்திருந்தது.

எட்டு மணிக்குள் சமைத்து முடித்திருந்தவள், அதற்குள் எத்தனை முறை வாசலைப் பார்த்தாள் என்று கணக்கே இல்லை. ஒவ்வொரு முறையும் சின்னதாய் ஒரு ஏமாற்றம் அவளின் கண்களில் மின்னி மறையும்.

“கனி எப்போதும் ஒம்போது மணிக்கு தான் வருவா ஆரும்மா…” சின்ன கேலி இழையோட சொன்னார் பர்தவம்.

“அவ எப்ப வந்தா எனக்கென்னவாம்… நான் சும்மா ஏதோ கார் போற மாதிரி இருக்கேனு பாத்தேன்…” என்றவள் அவசர அவசரமாய் தனது அறைக்குள் சென்று அடைந்துக் கொண்டாள்.

குளித்து முடித்து, வழமைப் போல பூஜையையும் முடித்துக் கொண்டு, இவளும் பர்வதமும் உண்டு முடிக்கும் வரையுமே கனி வருவதுப் போல் தெரியவில்லை. நேரமாக ஆக இவள் பார்வை வாசலை தொட்டு வரும் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேப் போனது.

‘என்ன பண்ணிட்டு இருக்க ஆரா…’ மானசீகமாக தலையில் கொட்டிக் கொண்டவளால் பார்வையை மட்டும் வாசலில் இருந்து பிரிக்க முடியவில்லை.

“நேரமாகலையா உனக்கு… கிளம்பிட்டு வாசல வாசல பாத்துட்டு நிக்கற…” மதியத்திற்கான சாப்பாட்டு பையை அவளிடம் கொடுத்தபடியே வினவினார் பர்வதம்.

“ஹான் அது வந்தும்மா… யுவாவுக்கு பிரியாணினா ரொம்ப புடிக்குமே… எடுத்து வைக்க மறந்துட்டேன்… அதான் நித்திக்கும் யுவாவுக்கும் எடுத்து வைப்போனு…” இழுத்து நிறுத்தியவள் பார்வை தவிப்பாய் வாசலை தான் தொட்டு நின்றது. கனி வழமையாய் வரும் நேரத்தையும் தாண்டி பதினைந்து நிமிடங்கள் கடந்திருந்தது.

“நான் எடுத்து வச்சுட்டேன் ஆரும்மா… அவ எங்க போய்டுவா… இங்க தானே வருவா… நான் பேசிக்கறேன்… நேரமாகுது பாரு… நீ கிளம்பு…” பர்வதம் சொல்லவும், மனதே இல்லாமல் தான் இவள் கிளம்பி வரும்படி ஆனது.

இவள் கனியை தன்னை விட்டு தள்ளி வைக்கும் போது, கனியால் அதை தாங்கிக் கொள்ள முடிந்தது. அலுக்காமல் சலிக்காமல் ஓயாது இவளைத் தேடி படையெடுக்கவும் முடிந்தது. ஆனால், பதிலுக்கு அவள் ஆராவை தள்ளி வைத்தால், இவளால் தாங்க முடியுமா?

                    ✻✻✻✻✻

வேகமாய் அரக்கட்டளையின் உள்ளே வாகனத்தை நுழைத்து உரிய இடத்தில் வண்டியை நிறுத்தினாள் ஆரா. எத்தனை வேகமாய் வந்தும் ஐந்து நிமிடங்கள் தாமதமாகி இருந்தது. கைப்பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டவள் பார்வை அவசரமாய் சுற்றத்தை தான் ஆராய்ந்தது. எங்கும் அவன் பார்வையில் தட்டுபடவில்லை. அவளை அறியாமலே ஒரு ஆசுவாசம் உள்ளுக்குள் பரவியது. பின்னே, இதுவரை இப்படி அவளை நிறுத்தி வைத்து இங்கே யாரும் கேள்வி எழுப்பியதில்லையே. அவளும் அப்படி ஒரு சந்தர்பத்தை உருவாக்கியதில்லை என்பது குறிப்பிட வேண்டிய விடயம்.

வேகமாய் அவளின் கால்கள் வகுப்பறைகள் நிறைந்த கட்டிடங்களை நோக்கி நகர்ந்தது. இவளின் வகுப்பில் யுவாவையும் சேர்த்து மொத்தம் பதினேழு நபர்கள். அத்தனை பேருக்குமே வேறுபட்ட வயது.

பொதுவாக ஆட்டிசத்தால் பாதிக்கபட்ட குழந்தைகளின் கற்றல் திறனும் குறைபாட்டின் தீவிரமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனாலேயே அவர்களுக்கு ஒரு பொதுவான குழுவோடு இணைந்து பயிலும் முறை சாத்தியம் அற்றதாகிறது.  ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட முறையில் கவனம் எடுத்துக் கொள்வதும் அவசியமாகிறது.

சிலர் தனது அன்றாட வாழ்வில் பணிகளை செய்யவே பெரிதும் தடுமாறுகிறார்கள். இன்னும் சிலரே குறிப்பிட்ட ஏதோ ஒன்றில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு அதி மேதாவிகளாகவும் இருக்கிறார்கள்.

அவள் வகுப்பிற்குள் நுழைந்தும், சின்ன ஒரு தலைநிமிர்த்தல். சிலரிடம் சிறு புன்னகை. பலரிடம் அதுவுமில்லை. அதுவரை எதை செய்துக் கொண்டிருந்தார்களோ அதை அப்படியே தொடர்ந்தார்கள். யுவா நேற்று அவள் கொடுத்த தூரிகையை கொண்டு ஓவியம் ஒன்றை தீட்டிக் கொண்டிருந்தான். நிமிர்ந்து அவளைப் பார்த்தவன்,வேறு எவ்வித அலட்டலும் இல்லாது படத்தை தொடர ஆரம்பித்துவிட்டான்.

மெல்லிய மனதை இதமாக்கும் மேற்கத்திய இசையை கசியவிட்டவள், ஒவ்வொருவராய் தனிப்பட்ட முறையில் கவனிக்க, கற்றலில் அவர்களின் முன்னேற்றம் குறித்து பரிசோதிக்க துவங்கி இருந்தாள். அடுத்த அவளின் இரண்டு மணி நேரத்தை அழகாய் அந்த வகுப்பு விழுங்கிக் கொண்டது.

மணிமுள் பன்னிரண்டை தொட்டதும் வேறு ஒருவர் வந்து வகுப்பை பொறுப்பெடுத்துக் கொள்ள, அந்த வகுப்பறையில் இருந்து வெளியேறினாள் இவள். அதே நேரம் தான் நித்யாவும் தனது வகுப்பில் இருந்து வெளியில் வந்திருந்தாள். சின்னதாய் அவளை நோக்கி கையசைத்தவள், சாப்பிடுவதுப் போல சைகை செய்து, அவளின் அலுவலக அறை இருக்கும் பக்கத்தை விழிகளால் தொட்டு காட்டி, இமைகளை மூடி திறந்தாள். அதற்கு அர்த்தம், ‘உனக்கும் சேர்த்து நான் சாப்பாடு எடுத்து வந்திருக்கிறேன்… என் அறைக்கு சாப்பிட வந்துவிடு…’ என்பது. சரியென்பதாய் அவள் கட்டை விரலை உயர்த்திக் காட்டவும் சிறு தலையசைப்போடு இருவரும் அவரவர் வேலையைப் பார்க்க கிளம்பிவிட்டனர்.

அங்கே ஒரு ஓரமாய் சுவரில் சாய்ந்தபடி நின்றிருந்த வேந்தனுக்கும், விளக்கமின்றியே ஒரே முறையில் அவளின் விழிமொழி புரிந்தது தான் ஆச்சரியம். அப்பொழுது தான் கொஞ்சம் காலார நடந்துவிட்டு வரலாமே என்று வகுப்பறைகளின் பக்கம் வந்திருந்தான் அவன். இது வகுப்பு முடியும் நேரம் என்பதும் ஒரு ரகசிய காரணம். எவ்வித மெனகெடல்களும் இன்றி அனாசமாய் அவனின் விழிகளில் வந்து விழுந்தது தான் இந்த காட்சி. விழிகளில் இருந்து அவள் மறையும்  வரை அவளிலேயே பார்வை பதித்திருந்தவனுக்கு அது ஏன் என்று தான் புரியவில்லை. குறைந்தது அவளை இமைக்காது பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதையாவது  உணர்ந்தானா என்றும் தெரியவில்லை. அவளைப் பார்க்க பிடிக்கிறது, பார்க்கிறோம். அது தான் அவனின் மனநிலை. அதைத் தாண்டி இந்த நொடி வரை அவன் எதுவுமே யோசிக்கவில்லை.

நேரே அவளின் அலுவலக அறையில் நுழைந்தவளின் கண்களில் முதலில் விழுந்தது ஒய்யாரமாய் அவளின் மேசை முது வீற்றிருந்த, சிவப்பு வண்ண மினுமினுக்கும் தாள் சுற்றபட்ட அந்த பரிசுப் பொருளில் தான்.

நேற்றைப் போல் இந்த முறை அவளின் இதயம் படபடத்து பயம் கொள்ளவில்லை. கேள்வியாய் ஒரு புருவ சுழிப்புடன் அதைப் பார்த்திருந்தாள் அவள். அடுத்த நொடி வேகமாய் வரவேற்பரையில் நின்றிருந்த பெண்ணிடம் விரைந்தவள், “என் ரூம்ல ஒரு கிப்ட் இருக்கே அது யார் வச்சது..?” என்றாள் சிறு அதட்டலுடன்.

அவள் வினவிய வேகமும், அதட்டல் தோணியும் சட்டென்று எதைக் கேட்கிறாள் என்றே பிடிபடவில்லை அந்த பெண்ணிற்கு.

அவள் திருதிருத்து விழிக்கவும், “என் ரூம்ல ரெட் கலர் பேப்பர் ராப் பண்ண கிப்ட் ஒன்னு இருக்கே… அது யார் கொண்டு வந்து என் ரூம்ல வச்சானு கேட்டேன்…” என்றாள் நிதானமாய்.

“ப்யூன் தான் மேம் லெட்டர் பாக்ஸ்ல உங்க பெயர் போட்டு இருந்துச்சுனு வந்து வச்சுட்டு போனாரு…” என்றாள் அந்த பெண் பதற்றதுடன். ‘ஏன்… எதுவும் பிரச்சனையா மேம்…’ என உடன் வந்து விழ இருந்த வார்த்தைகளை தொண்டை குழிகுள்ளேயே விழுங்கிக் கொண்டாள் அந்த பெண். அதைக் கேட்டால் ஆராவிடமிருந்து பதிலாய் ஒரு கண்டனப் பார்வை தான் வந்து விழும் என அவளுக்கும் தெரிந்திருந்தே!

“சரி… ப்யூன நான் கூப்பிட்டதா வர சொல்லுங்க…” என்றவள் மீண்டும் அறைக்கு திரும்பி இருந்தாள்.

சில நிமிடங்கள் அந்த பரிசுப் பொருளையே இமைக்காது பார்த்திருந்தவளின் கவனமெல்லாம் அதில் சின்னதாய் எழுதி ஒட்டப் பட்டிருந்த அவளின் பெயரில் தான் நிலைத்திருந்தது. ஒரே ஒரு பெயரில் அந்த கையெழுத்து யாருடையது என்பதை இனம் காண முடியாது தான். ஆனால் அது அவளுக்கு வெகு பரிச்சயமான கையெழுத்தாய் இருக்கும் பட்சத்தில் இனம் கண்டுக் கொள்வது இயல்பு தானே.

எவ்வித அவசரமுமின்றி மெதுவாய் நிதானமாய் அதைப் பிரித்தாள் அவள். அவளின் எண்ணத்தை பொய்யாக்க விரும்பாது உள்ளே பாந்தமாய் வீற்றிருந்தது அந்த பொருள். அழகிய தங்க பிரேமிட்ட கருப்பு நிற குளிர் கண்ணாடி. அதன் கீழே சின்னதாய் ஒரு வாழ்த்து அட்டை.

“யுவர் கார்ஜியஸ் ஐஸ் ஆர் கில்லிங் மீ… ப்ளீஸ் கவர் இட் வித் தியூஸ் கிளாஸ் அண்ட் சேவ் மீ – பை யுவர் லவ்வபிள் டெவிள்…” (Your gorgeous eyes are killing me… Please cover it with these class and and save me.) என்ற வாசகம் சிவப்பு நிற மையால் எழுதப்பட்டிருந்தது.

அதிலேயே சில நொடிகள் பார்வையை பதித்தவள் சிந்தனை எங்கும், ‘எப்படி இது சாத்தியம்..?’ என்ற ஒற்றைக் கேள்விதான் சுழன்றுக் கொண்டிருந்தது.  அவசரமாய் நேற்று தவறவிட்ட வாழ்த்தட்டையையும் தேட துவங்கினாள். எங்கே தேடியும் அந்த அறையில் அது கிடைக்கவில்லை. அந்த கண்ணாடியையும் வாழ்த்து அட்டையையும் பத்திர படுத்தியவள் தனது கைப்பேசியில் யாரையோ அழைத்தபடியே, அந்த அறையில் பிறர் கண்களில் சட்டென்று விழாத இடம் நோக்கி நகர்ந்திருந்தாள்.

                            பற்றி எரியும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்