Loading

தழல் 8:

அடர் பச்சை வர்ண இரும்பு வாயிற்கதவு. அதனை தொடர்ந்து வாகனம் நிறுத்துவதற்கென விஸ்தாரமான முகப்பு. அதன் ஓரத்தில் ஒரு குண்டுமல்லிகை செடி. அதை மேலே பால்கனியில் ஏற்றி இருந்தார்கள். அதனை அடுத்து சின்னதாய் ஒரு முன் கூடம். அதில் நீண்ட வேலைப்பாடுகளுடன் கூடிய மரப்பலகை ஒன்று அமரும் வகையில் சுவரை ஒட்டிப் போடப்பட்டிருந்து. பலரை அதைத் தாண்டி அனுமதித்ததில்லை ஆரா.

 

பெரிய இரண்டாய் பொருத்தப்பட்ட தேக்குமர நிலை கதவு. இணைந்த நிலையில் மயில் ஒன்று தோகை விரிக்கும் அழகிய காட்சி. அதன் மேலே கஜலெட்சுமியின் உருவம் செதுக்கபட்டு கண்ணாடி கூண்டுக்குள் அடைக்கபட்டிருந்தது. அதனை தொடர்ந்த விஸ்தாரமான கூடம். அதன் வலது பக்க மூலையில் ஒரு படுக்கை அறையும் சின்னதாய் ஒரு பூஜையறையும். அதற்கு அடுத்து விசாலமாய் விரிந்த சமயலறை. அதன் ஒரு பக்க மூளையில் மேலே செல்வதற்கான படிகட்டுகள். அதை ஒட்டிய இன்னொரு பெரிய படுக்கையறை. அதுதான் ஆராவின் தனியறையும் கூட. இரண்டு படுக்கையறைகளிலும் கழிப்பறை வசதி உண்டு. மேலே பாதி இடத்தை ஆக்கிரமித்தபடி, வாசல் பக்க பால்கனியுடன் கூடிய மிகப் பெரிய படுக்கையறை ஒன்று. அது கனியின் விருப்பபடி அவளுக்கென்றே பிரத்தியேகமாக பார்த்து பார்த்து கட்டிய அறை. கட்டிய தினத்திலிருந்து இன்று வரை அவளின் வருகைக்காக புழங்கப்படாமல் அப்படியே தான் இருக்கிறது அது. ஆரா பேசாமல் இங்கே வந்து தங்குவதாய் இல்லை என்ற உறுதியில் அவள் இருக்கிறாள். ‘அது உனக்கானது; உபயோகிப்பதும் ஒதுக்கி தள்ளுவதும் உன் உரிமை.’ என்ற பிடியில் இவள் இருக்கிறாள். இருவருக்கும் மத்தியில் பர்வதம் தான் மத்தளம் ஆகிக் கொண்டிருக்கிறார்.

 

பின்பக்கம் பொதுவாய் ஒரு கழிவறையும் குளியலறையும். சின்ன மேடையுடன் ஒரு சலவைகல்லும், அதேப் போன்ற மேடையில் அம்மியும் ஆட்டுக்கல்லும். அதுவரை சிமெண்ட் தரை விரிந்திருந்தது. சுற்றி சுவர் எழுப்பி பின்புறத்திற்கும் ஒரு இரும்பு வாயில் பொறுத்தப்பட்டிருந்தது. அதன் பின்னே பரந்து விரிந்த நீண்ட தோட்டம். வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் தாயின் தேவைக்கும் தங்கையின் ஆசைக்கும் ஏற்ப தன் மொத்த உழைப்பையும் கொட்டி பார்த்துப் பார்த்துக் கட்டிருந்தாள் ஆரா. ஒவ்வொரு அடியிலும் அவளின் உழைப்பு மிளிர்ந்தது.

 

வெளிர் பச்சை நிறத்தில், அரக்கு சிவப்பு நிற கரைப் போட்ட சில்க் கார்ட்ன் சேலையில் ஆங்காங்கே மயில்கள் தோகை விரித்து ஆடியது. சேலையில் கீழ் மடிப்பை சரிசெய்தபடியே வெளியே வந்தவளைக் கண்டு, ஆசையாய் விரிந்தது கனியின் கண்கள். வெகுவாய் ஆரா புடவை அணிவதில்லை. அப்படி என்றாவது அணிந்தால், அது அவளுக்கு அத்தனை பொறுத்தமாய் அழகாய் இருக்கும்.

 

பெரிதாய் அலங்காரமோ ஒப்பனையோ இன்றி வெகு சாதரணமாய் வந்து நின்றாலும் அவள் அழகு தான். ஆர்பாட்டமில்லாத அழகு. அதிக நிறமில்லை தான். ஏன் கனியைவிடவும் அவளின் நிறம் சற்றே மட்டுப்பட்டது தான். ஆனால், அந்த முக வடிவமும் நேர்த்தியும் கற்பகிரகத்திற்குள் வைக்க வேண்டிய மூலவர் கற்சிலைப் போல் அத்தனை நேர்த்தியாய் இருக்கும். துருத்தி நிற்கும் பருக்கள் கூட ரோஜாவில் பனித்துளியாய் அவளுக்கு அத்தனை அழகு சேர்க்கும். அழகு பார்ப்பவரின் விழிகளின் வழியாக அல்லவா அளக்கப்படுகிறது. கனியின் விழிகளுக்கு என்றுமே அவள் சிறகு முளைக்காத தேவதை தான்.

 

“கழுத்துக்கு இன்னொரு செயினாவது போடலாம் இல்ல ஆரும்மா… இந்த குட்டி ஜிமிக்கி கண்ணுக்கே தெரியல பாரு… கொஞ்சம் பெருசா கல்லு வச்ச ஜிமிக்கி இருக்குமே… அத போட்ட உன் முகத்துக்கு இன்னும் எடுப்பா இருக்குமில்ல…” இவளைக் கண்டுக் கொள்ளாமல் நடக்க முற்பட்டவளின் காதிற்குள் தனது அபிப்பிராயத்தை ஓதிக் கொண்டிருந்தாள் கனி.

 

“அடியே ராங்கி… இந்த காபியையாவது எடுத்துட்டு போடி… இல்லைனா அம்மா என்ன உண்டு இல்லைனு பண்ணிடுவாங்க.. சொல்லுறத காதுல வாங்கறாளா பாரேன்…” அவளின் பின்னோடு காபி தட்டை தூக்கிக் கொண்டுப் போனாள் கனி.

 

அவள் சென்ற திசையிலேயே விழி பதித்து  ஆர்வமாய் காத்திருந்தவன் கண்கள், அவளைக் கண்ட மாத்திரத்தில் ஆசையில் விரிந்தது. லஜ்ஜையின்றி அவளின் பாத நுனி முதல் உச்சி கேசம் வரை அவனின் பார்வை வருடிச் சென்று முகத்தில் அப்படியே நிலைத்தது.

 

“காபிய வாங்கி எல்லாருக்கும் குடு ஆரும்மா…” பர்வதம் அவள் காதில் கிசுகிசுக்க, மறுப்பின்றி அதை வாங்கிக் கொண்டவள், வரிசையாய் ஒவ்வாருவரிடம் தந்தபடியே வந்தாள்.

 

வெற்றியின் முறை வந்ததும், அவனிடம் அவள் காபி தட்டை நீட்ட, எடுக்காமல் அவளின் முகத்திலியே பார்வையை பதித்திருந்தான் அவன். நிமிர்ந்து அவளும் அவன் விழி நோக்கினாள். அந்த நொடி, அவன் கண்களில் ஒரு மின்னல் வெட்டு. இன்னும் இன்னும் ஊடுருவி அந்த முகத்தை, கண்களை தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அந்த முகத்தின் பாவணைக் கொண்டு அவள் உள்ளங்கொண்ட செய்தியை அறிந்திட முடியவில்லை அவனால். அதை அறிந்திடும் முனைப்பில் இன்னும் ஆழமாய் அவள் விழிகளுக்குள் அவன் பார்வையை பதித்திட, அதை களைத்திடும் விதமாய் சுளீரென்ற வலி அவன் முதுகை துளைத்தது.

 

“கல்யாணம் பண்ண பிறகு, கூட இருந்து பார்த்துட்டே தானே இருக்க போறீங்க வெற்றி… இப்ப காபிய எடுங்க… எங்க வீட்டு பொண்ணு எவ்வளவு நேரம் தான் கால் கடுக்க நிக்கறதாம்…” என்ற அறிவின் கேலி இழைந்தோடும் குரல் அங்கிருந்த அனைவரின் முகத்திலும் புன்னகையை வரவழைத்திருந்தது வெற்றியை தவிர.

 

காபியை எடுத்துக் கொண்டவன், கேள்வியாய் திரும்பி அறிவை பார்க்க, வார்த்தைகளில் இழைந்தோடிய கேலி, பார்வையில் இல்லை. அது முழுக்க முழுக்க கண்டிக்கும் தோரனை கட்டியது. அவனுக்கு சிறு எச்சரிக்கையும் விடுத்ததோ? அவன் அடித்த இடத்தில் இன்னுமே வலி இருந்தது. நிச்சயமாய், சந்தேகத்திற்கு இடமின்றி அவன் அடித்த இடத்தில் விரல்கள் பதிய சிவந்துக் கன்றிப் போயிருக்கும். சபை நாகரீகம் கருதி பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் வெற்றி.

 

அவள் சற்றே அகன்றதும், பிறர் கவனைத்தை ஈர்க்காத விதமாய், மிக மெல்லிய குரலில், “நீங்க என்ன தப்பா புரிஞ்சுகிட்டீங்கனு நினைக்கறேன்… ஐ லவ் ஹேர்…” என்றவன் ஒரு நொடி நிறுத்தி ஆழ்ந்து அவன் முகம் பார்த்தபடியே தொடர்ந்தான். “டூ தி பார்ட்டம் ஆப் மை ஹார்ட்… அவங்க என் முன்ன வரும் போது… ஐ காண்ட் கண்ட்ரோல் மை செல்ப்…” இதயத்தை தொட்டு, சிலாகித்த குரலில் உணர்ந்து சொன்னவனுக்கு, அறிவிடம் தன்னை விளக்குவிடும் வேகம்.

 

அவன் விழிகளை நேருக்கு நேர் எதிர்கொண்டவனுக்கு அந்த விழிகளில் வழிந்த காதலும் புரியதான் செய்தது. “இருக்கலாம்… ஆனா அது உங்க பக்கம் மட்டும் தானே… இன்னும் எங்க பொண்ணு கல்யாணத்துக்கு சம்மதம்னு வாய் திறந்து சொல்லையே… அப்படியே சம்மதம் சொன்னாலும் கூட… நீங்க அவங்கள அளவுக்கு அதிகமா நேசிச்சாலும் கூட… சபைக்கு நடுவுல ஒரு பொண்ண நிறுத்தி வச்சு இப்படி பாக்கறது நாகரீகமா இருக்காதுங்கறது என்னோட அபிப்பிராயம்…” அவன் குரலில் தான் எத்தனை திண்மை. தன் செயலில் தவறெதுவும் இல்லை என்பதில் அத்தனை உறுதி அந்த குரலில். சட்டென்று சாதாரணம் போல் வேறுப் பக்கம் தலையை திருப்பிக் கொண்ட வெற்றி, மேலும் அதைப் பற்றிய வார்த்தையாடலை தவிர்த்திருந்தான்.

 

“அப்பறம் என்ன… பொண்ணு வரட்டும்… பொண்ணு வரட்டும்னு சொன்னீங்க… பொண்ணும் வந்தாச்சு… கேட்கவே அவசியம் இல்லாம இரண்டு பேர் பார்வையுமே சொல்லிடுச்சு அவங்களுக்கு இதுல பரிபூரண சம்மதம்னு… அப்பறம் என்ன… மேற்கொண்டு நடக்க வேண்டிய விசயத்த பத்தி பேசலாங்களா தம்பி…” என்றார் வெற்றியின் தந்தை அறிவிடம்.

 

திரும்பி மனைவியிடம் பார்வையை பதித்தபடி, “என்ன இருந்தாலும் எங்க பொண்ணு வாய திறந்து சம்மதம்னு ஒரு வார்த்தை சொல்லிட்டா எங்களுக்கும் திருப்தியா போயிடும்…” என்றவன் சொல்லி முடிக்கும் முன்னமே,

 

“எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்ல… எல்லாரும் என்ன மன்னிச்சுடுங்க…” சுவரில் சாய்ந்து, கைகளைக் கட்டியபடி மொழிந்தவளின் பார்வை என்னவோ வெற்றியிடம் தான் இருந்தது. ‘இதை நான் உன்னிடம் எதிர் பார்த்தேன்…’ என்பதைப் போன்ற முறுவல் ஒன்று அவன் இதழ்களில்.

 

“உங்க பையன பாத்து காலையிலையே நேருக்கு நேரா இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பமில்லைனு சொல்லிட்டேன்… கண்டிப்பா உங்கள கூட்டிட்டு வர மாட்டாருனு நினைச்சேன்… ஆனா வந்துட்டீங்க… வந்தவங்கள உடனே போங்கனு சொல்லறது மரியாதையா இருக்காதே… அதனால… இருந்து சாப்பிட்டு தான் போகணும்… நட்பு ரீதியா…” என கைகூப்பி நின்றவளை விழி விரித்து நோக்கியது வெற்றியின் மொத்த குடும்பமும்.

 

நொடியில் அவர்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்ளும் பரபரப்புக் குரல். அனைவரின் எரிக்கும் பார்வையும் வெற்றியை தான் தொட்டு நின்றது. அதையெல்லாம் அவன் கண்டுக் கொண்டதைப் போலவே தெரியவில்லை.

 

“எங்கள தப்பா எடுத்துக்காதம்மா… விசயம் தெரியாம இந்த பய சொன்னானேனு ஊர்ல இருந்து கிளம்பி வந்துட்டோம்… அப்ப நாங்க வரோம்…” கை கூப்பியபடியே வெற்றியின் தந்தை எழுந்துக் கொள்ள, அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் எழுந்துக் கொண்டனர். வெற்றி மட்டும் அதே இடத்தில் அப்படியே அமர்ந்திருந்தான்.

 

“இன்னும் என்னடா இங்க… அதான் கூட்டி மொத்த குடும்பத்தையும் சந்தியில நிறுத்திட்டீயே… இன்னும் மிச்சம் மீதி எதுவும் இருக்கா என்ன..? வாடா…” வெற்றியின் கைப்பற்றி அவனின் அன்னை இழுத்துக் கொண்டு செல்ல, அவரின் இழுப்புக்கு உடன்பட்டான் அவன்.

 

ஆராவை கடக்கும் நொடி, அவரிடமிருந்து தனது கையை உருவிக் கொண்டவன், அவளை நெருங்கி நின்று மிக மெல்லிய குரலில், “அத்தனை சீக்கரம் என் காதல்ல பின்வாங்கற எண்ணம் எனக்கு இல்ல ஆரும்மா… நிச்சயம் என் காதல் ஒருநாள் உன்னையும் காதலிக்க வைக்கும்…” என்றான் உறுதியான குரலில். அசட்டையாய் தோள் குலுக்கிக் கொண்டாள் அவள். அதை கண்டவன் இன்னும் விரிந்த புன்னகையுடன் கிளம்பிவிட்டான்.

 

“என்ன தான்டி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல…” அவர்கள் அங்கிருந்து செல்வதற்காகவே காத்திருந்தவள் போல், அடுத்த நொடி ஆங்காரமாய் அவளிடம் கேள்வி எழுப்பி இருந்தாள் கனி.

 

“போனா போகுது… போனா போகுதுனு உன் விருப்பத்துக்கு வளைஞ்சு குடுத்தா இஷ்டத்துக்கு ஆட்டம்ம ஆடிட்டு இருக்கீயே… என்னங்கறேன்..?” அவளின் ஆங்கார குரலில் பயந்துப் போய் அமுதன் தந்தையின் கால்களோடு ஒன்றினான்.

 

“கனி… என்ன பண்ணற நீ… கொஞ்சம் அமைதியா பேசு…” என்றான் அறிவு கண்டிக்கும் குரலில்.

 

“நீங்க கொஞ்சம் சும்மா இருங்க… எங்க அக்காகிட்ட எப்படி பேசணும்னு நீங்க ஒன்னும் எனக்கு கிளாஸ் எடுக்க வேண்டாம்…”

 

“கனிம்மா…” என அவளை அடக்கும் பொருட்டு பாவமாய் அழைத்தபடி அவள் முகம் பார்த்து தவித்து நின்ற தாயை, முறைத்துப் பார்த்தாள் கனி.

 

“எல்லாம் உன்னால வரதும்மா… பொண்ணு பொண்ணுனு நீ குடுக்கற செல்லம் தான் அவ உன் தலை மேல ஏறி மொளகா அரைக்கறா… ஊரு உலகத்துல யாரும் கல்யாணம் பண்ணிட்டு நல்லா வாழலையா..? ஏன் இவளுக்கு சின்னவ நானே காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டு ஒரு புள்ளையையும் பெத்துட்டு சந்தோஷமா தானே இருக்கேன்… கல்யாணம் பண்ணிக்கறதுல இவளுக்கு என்ன பிரச்சனைனு கேக்கறேன்… கல்யாணம் வேணாங்கறதுக்கு ஒரே ஒரு உருபடியான காரணம் சொல்ல சொல்லும்மா அவள…” அவள் அன்னையிடம் கத்திக் கொண்டிருக்க, கண்டுக் கொள்ளாது தனது அறையை நோக்கி நடக்க துடங்கியிருந்தாள் ஆரா.

 

அவளின் கைப்பிடித்து தடுத்து நிறுத்தியவள், “நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்… நீ பாட்டுக்கு போய்ட்டே இருந்தா என்னடி அர்த்தம்… வெற்றிய பிடிக்கலையா ஓ.கே… வேற மாப்பிள்ளை பாப்போம்… ஆனா கல்யாணமே வேண்டானு சொன்னா ஏத்துக்க முடியாது என்னால… ஒரு வேளை உனக்கும் கல்யாணம் ஆகிட்டா அம்மாவ யாரு பாத்துப்பானு பயப்படறீயா..? நான் பாத்துக்கறேன் ஆரும்மா… என் உயிர் இருக்கற வரைக்கும் அம்மாவுக்கு சின்ன குறைக்கூட வராம நான் பாத்துக்கறேன்… என்மேல நம்பிக்கை இல்லையா உனக்கு… ப்ளீஸ்டி கல்யாணத்துக்கு மட்டும் ஓ.கே சொல்லு…” கோபமாய் ஆரம்பித்து கெஞ்சலில் முடித்திருந்தாள் கனி.

 

தீர்க்கமாய் அவளைப் பார்த்தபடியே, “அவ வாழ்க்கைய பத்தின முடிவ எடுங்க மட்டும் தான் அவளுக்கு உரிமை இருக்கு… என் வாழ்க்கைய எனக்கு பாத்துக்க தெரியும்னு உங்க சின்ன பொண்ணுகிட்ட சொல்லும்மா…” அன்னையிடம் சொன்னாலும் வார்த்தைகள் கனிக்கானது தானே!

 

“அப்போ உனக்கு நல்லது சொல்லற உரிமைக்கூட எனக்கு இல்லையா..?” விடாமல் அவளை நிறுத்தி வைத்து நேருக்கு நேர் பார்த்து வினவினாள் கனி.

 

“இல்ல…” ஒற்றை வார்த்தையில் அவளுக்கான பதிலை நேரடியாகவே உரைத்துவிட்டு விறுவிறுவென அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள் ஆரா. அடைத்த கதவுகளை வெறித்தபடி நின்றிருந்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் கோடாய் இறங்க தொடங்கி இருந்தது.

 

                              – பற்றி எரியும்…

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்