Loading

    இரு இணைகளின் வாழ்வும் சீராக சென்றதன் சாட்சியாக திரிபுரசுந்தரி பத்மநாபன் வீட்டிற்கு இரு புது வரவுகள். 

    

    

    மூத்தவளுக்கு மகனும் இளையவளுக்கு மகளும் என்று ஆறு மாத இடைவெளியில் பிறந்திருக்க அங்கே கொண்டாட்டத்திற்கு பஞ்சமில்லை. சாரதா மருமகளை தலையில் தூக்கி வைத்து ஆடாத குறை தான். 

    

    

    தேஜஸ்வினி கருத்தரித்திருக்கிறாள் என்றதுமே பெங்களூர் வந்துவிட்டார் சாரதா. சென்னைக்கு அழைத்து கொள்கிறேன் என்று கேட்க யுகன் பதில் கூறும் முன்பே தேஜாவே வரவில்லை என்று சொல்லி இருந்தாள். 

    

    “ஒரு மாசம் தங்கினதுக்கே உங்க பையன் தாடி வளர்த்து தேவதாஸ் மாதிரி சுத்தினார். இப்போ என் பிள்ளையோட நீ எப்படி போகலாம் னு சண்டை போட்டாலும் போடுவார் நான் வரலைத்த நீங்க வேணும்னா இங்கே வந்திடுங்க”என்று கூற அவரும் கிருஷ்ணனோடு வந்து விட்டார்.

    

   வந்தவர்கள் “இது உனக்கு அது இது”என்று சொல்லியபடியே வாங்கி வந்த பொருட்களை கடைபரப்ப தேஜாவிற்கு மயக்கம் வராத குறை தான்.

    

    “எதுக்கு அத்த இவ்வளவு”என்றாள் வாங்கி வந்திருந்த புளிப்பு மிட்டாயை வாயில் போட்டு கொண்டு.

    

    

    “அஸ்வி. புளிப்பு ரொம்ப எடுக்காத. அப்புறம் இட்சிங் வரும் நீ தான் கஷ்டப்படுவ”என்று சொல்லியவன் தொலைக்காட்சியை போட்டு விட்டான்.

    

    

   சாரதா “அவன் கிடக்குறான் நீ சாப்பிடு டா இது சூப்பரா இருக்கும்”என்று மருமகளை தாங்கிக் கொள்ள 

    

    யுகாதித்தன் சிரிப்புடன் அவர்களை கவனிக்காதது போல டிவியை பார்த்து கொண்டிருந்தான். அவள் மீண்டும் அந்த மிட்டாயை தொடவில்லை.

    

    

    “வேண்டாம் அத்தை”என்று கிசுகிசுத்தாள் அவனுக்கு கேட்காமல்.

    

    

    “ஏன் உன்னை திட்டுவானா”என்று அவரும் கிசுகிசுக்க 

    

    “மாட்டாரு. ஆனா புளிப்பு மிட்டாய் சாப்பிடதுக்கு நாளைக்கு மாற்று மருந்து ஏதாவது ஜூஸை போட்டு தந்திடுவாரு குடிச்சு ஆகணும்”என்றாள் மெல்லிய குரலில்.

    

    “அதுசரி”என்றவருக்கு பெருமிதம் தான் மகனை எண்ணி. 

    

    யுகா அவர்கள் பேச்சை கவனித்தாலும் கண்டு கொள்ளாமல் இருக்க 

    

    

    “ஏங்க ஒரு ஏழெட்டு மாசம் முன்னாடி’எனக்கு கல்யாணமே வேண்டாம் னு’ சொன்ன ஒரு மானஸ்தனை எங்கேயாவது நீங்க பார்த்தீங்க”என்று கிருஷ்ணனிடம் கேட்டுக் கொண்டே மகனின் சிரிப்பை மனதில் நிறைத்தபடி அங்கிருந்து செல்ல 

    

    கிருஷ்ணனோ “அது யாராவது உன் சொந்தக்காரங்க சொல்லி இருப்பாங்க சாரதா.நம்ம வீட்டில் யாரும் சொல்லலை என்ன யுகி?”என்று கிண்டல் செய்ய 

    

    “ப்பா போதும்”என்று தலையைக் கோதியபடி அறைக்குள் சென்று விட்டான். 

    

    அவன் வேகத்தில் தேஜா வாய் விட்டு சிரித்து விட, கிருஷ்ணன் மருமகளின் தலையில் கை வைத்து “சந்தோஷமா இருடா பாப்பா”என்று மனம் நிறைந்து சொல்லிச் சென்றார். 

    

    அவர் அந்த பக்கம் நகர்ந்ததும் ஷோபாவின் பின்னிருந்து அவள் காதை திருகியவன் “உனக்கு என்ன அவ்வளவு சிரிப்பு சோடா புட்டி. என்னை டேமேஜ் பண்றது குதூகலமா இருக்குமே”என்றான் பொய்யான கோபத்துடன்.

    

    “ஸ்ஸ் ஆஆஆ வலிக்குது ஆதி”என்று வேண்டும் என்றே அவள் சத்தம் கொடுக்க 

    

    

    “அச்சச்சோ சாரி மா வலிக்குதா”என்று முன்னால் வந்தமரவும் “சும்மா உங்க ரியாக்ஷன் பார்த்தேன்”என்று கண் சிமிட்டினாள்.

    

    

    “கொழுப்பு கூடிருச்சு உனக்கு.”என்றவன் “வந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு அப்புறமா எழுப்பி விடுறேன்”என கைகொடுக்க மறுக்காமல் எழுந்து கொண்டாள்.

    

    எப்படியும் உறங்க விட மாட்டான் ஆனால் ஓய்வு ஒரு அரை மணி நேரமாவது எடுக்க வைப்பான்.மருத்துவரின் அறிவுரையின் பேரில் தான் அவளைப் பார்த்து கொண்டான்.

    

   காலை நீட்டி வாகாய் சாய்ந்து கொண்டவளை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு தலை கோதியவன்”வேலை பார்க்க கஷ்டமா இருந்தா ரிசைன் பண்ணிடு அஸ்வி. ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்க வேண்டாம்”என்றான்.

    

    “வாரத்தில் மூணு நாள் தான் ஆஃபிஸ் இதுக்கு எதுக்கு ரிசைன் பண்ணனும் அதெல்லாம் வேண்டாம். நான் மேனேஜ் பண்ணிப்பேன்”என்றவள் “ஏன் ஆதி உங்களுக்கு தம்பி வேணுமா பாப்பா வேணுமா”என்றாள் திடீரென்று.

    

    

    “யாரா இருந்தாலும் ஓகே தான். “என்றவனிடம் “லயா மாதிரி ஒரு பொண்ணு கேட்பீங்கனு எதிர்பார்த்தேன்”என்றாள்.

    

    “ம்ஹூம். பொண்ணு வேணும் தான் பட் நமக்கு கடவுள் தர்றதை தரட்டும் டா”என்றவன் அதன் பின்னர் அத்தனை பாந்தமாக பத்திரமாக அவளைப் பார்த்துக் கொண்டான். 

    

    அருண் பிரதன்யா இருவரும் இடையில் வந்து பார்த்து விட்டுச் சென்றனர். அகிலன் இரு வாரங்களுக்கு ஒரு முறை தன் பெற்றோருடன் வந்து செல்ல சுதாகரன் ஐந்தாம் மாதம் மருந்து கொடுக்கும் நிகழ்வில் மனைவி குழந்தை சகிதம் வந்து சீர் செய்து விட்டுச் சென்றான்.

    

    

    பெரியவர்கள் உடல்நிலை காரணமாக வரவில்லை. வீடியோ காலில் தான் பார்த்துக் கொண்டனர்.

    

    

    ஏழாம் மாதமே வளைகாப்பு போட்டு அழைத்துக் கொண்டார் திரிபுரசுந்தரி. இளைய மகளும் வேறு அதே நேரத்தில் நற்செய்தி சொல்லி இருக்க இருமகள்களையும் கொண்டாடி தீர்த்தார் திரிபுரசுந்தரி.

    

    

   எனினும் அவருக்கு பிரதன்யாவை சமாளிப்பது தான் பெரும்பாடாக இருந்தது.

    

    “ம்மா அக்காவுக்கு வாமிட்டே வரலை தானே எனக்கு மட்டும் ஏன் மா வருது. ம்மா எனக்கு இனிப்பா சாப்பிடணும் போல இருக்கு இல்லை மறுபடியும் ஏதாவது காரமா பண்ணி தா.”என்று ஆட்டி வைத்தாள்.

    

    

    அந்தோ பரிதாபம் அருண் தான் மாமியார் வீட்டிற்கும் தன் வீட்டிற்கும் இடையே ஸ்விகி வேவை பார்த்தான். ஒருவர் விடாமல் சாப்பிட ஏதாவது வாங்க சொல்லி நச்சரிப்பு செய்தாள்.

    

    

    கந்தசாமி மருமகள் கேட்டதை எங்கிருந்தாவது வாங்கிக் கொண்டு தான் வந்தார். உடல் வேறு நன்கு பூசினாற் போல வந்து விட அதற்கும் அருண் தான் மாட்டிக் கொண்டான் அவளிடம்.

    

    

    “பிரசாத் இனிமே எனக்கு சாப்பிட வாங்கிட்டு வராத பாரு குண்டு ஆகிட்டேன் நடக்க முடியலை. எல்லாம் உன்னால் தான்”என்று பாடாய் படுத்தி வைத்தாள்.

    

    

    “சரி எதுவும் வாங்கிட்டு வரலை”என்று மறுநாள் எதுவும் வாங்காமல் வந்தான் என்றால் அதற்கும் வாங்கிக் கட்டிக் கொள்வான்.

    

    மசக்கை போட்டு படுத்தியதில் அவனைத் தான் பித்தாக்கினாள். அத்தனையும் சளைக்காமல் ஏற்றுக் கொண்டான் அருண்.

    

    இத்தனை படுத்தினாலும் மகிழனை அவள் தான் கவனித்துக் கொண்டாள்.

    

    

    அவன் தான் புதிய வரவை ஆவலுடன் எதிர்பார்த்தான்.

    

    “ஏன் ப்பா பாப்பா என் கூட பேசுமா. எப்போ பேசும். ஐஸ்கிரீம் சாப்பிடுமா”என்று வித விதமான கேள்வி தான் மகிழிடத்தில்.

    

    “பிரசாத் நான் அக்கா மாதிரி ஏழாம் மாசம் வளைகாப்பு போட்டுக்க மாட்டேன். ஒன்பதாவது மாசம் தான் போட்டுப்பேன். நீங்க அம்மா கிட்ட பேசுங்க ஆனா என்னை மாட்டி விடக் கூடாது”என்றெல்லாம் டிமாண்ட் வைத்தாள்.

    

    

    “உன் விருப்பம் தான் தனு. நான் உன்னை பார்த்துக்குவேன்”என்று அவளைப் பார்த்தாலும் சுந்தரிக்கு மனதே கேட்கவில்லை.

    

    “பெரியவளுக்காவது சாரதா இருக்கா. சின்னவ இப்படி பொம்பளை துணை இல்லாம நீங்க மாப்ளை கிட்ட பேசி ஏழாம் மாசம் வளைகாப்பு போட கேளுங்க”என்று கணவனிடம் பேச அவரோ “நீ வேற உன் பொண்ணு தான் போக மாட்டேன் னு அவரைப் பாடா படுத்தி இருப்பா. அதான் தம்பி ஒன்பதாம் மாசம் போட்டுக்க சொல்றார்.”என்று பத்மநாபன் கூற “சொன்னாலும் சொல்லி இருப்பா”என சுந்தரியும் ஆமோதித்தார்.

    

    

    இங்கே தேஜாவோ”அருண் எல்லாம் பிரதியை ஒன்பதாம் மாசம் தான் விடுவேன் னு சொல்லி இருக்கார் நீங்க என் அம்மா கேட்டதும் ஏழாம் மாசமே தலையாட்டிட்டீங்க”என்று நொடித்துக் கொள்ள 

    

    அவனோ சற்று உரக்க சிரித்து “நானும் அப்படி சொல்ல தான் நினைச்சேன் பட் எனக்கு புது ப்ராஜெக்ட் சென்னையில் போட்டு இருந்தாங்க ஸோ ஏழாம் மாசம் ஒத்துக் கிட்டேன்”என்றான்.

    

    

    “அதானே பார்த்தேன். சார் சரியான ப்ளானிங் பிஸ்தா ல்ல”என்று கெக்களித்து சிரித்தாள்.

    

    பிரசவ நேரத்தில் தான் மற்றவர்களை விட அதிகம் பயந்து போனான்.

    

    “ஏன் மா ரொம்ப வெய்டா இருக்குமா. அஸ்வி எப்படி தாங்கி நடக்கறா. பாவமா இருக்கு மா எப்போ தான் பேபி பிறக்கும். அவளால புரண்டு கூட தூங்க முடியலை”என்று சாரதாவை தான் போட்டு படுத்தினான் யுகா.

    

    “அடேய் மகனே அநியாயம் பண்ணாத டா”என்று சாரதா ஒரு பக்கம் புலம்பினாலும் மகனின் தவிப்பைக் கண்டு மனம் மகிழவே செய்தார். பின்னே எங்கே காதல் தோற்றதில் வாழாமலேயே போய் விடுவானோ என்று பயந்தவருக்கு மன நிம்மதியை அல்லவா தந்திருக்கிறான். 

    

    அவள் குழத்தையைப் பெற்றெடுக்கும் வரை அத்தனை தவிப்பு அவனிடம். கைகள் எல்லாம் வியர்த்து பிசுபிசுத்தது.

    

    

    “டேய் நீ பயப்படுறது பார்த்தா எனக்கே பயந்து வருதுடா”என்று அருண் வேறு வருங்காலத்தை எண்ணி பயப்பட 

    

    

    “ரெண்டு பேரும் சும்மா இருங்கடா எல்லாம் என் தங்கச்சிக நல்லபடியா வருவாங்க”என்று சுதாகரன் தான் அதட்டலாய் சமாதானம் செய்தான்.

    

    

    

    

    அக்கா தங்கை இருவரும் பிள்ளை பேறு முடிந்து செல்லும் வரையில் சுந்தரியின் வீட்டில் சொந்த பந்தங்கள் இருந்த வண்ணம் தான் இருந்தனர். சுதாகரன் தாய்மாமன் சீர் செய்ய அரைஞாண் கொடி கொலுசு செயின் எல்லாம் எடுத்து வந்திருந்தான். 

    

    “எதுக்கு டா இத்தனை”என்று பத்மநாபன் கடிந்து கொண்டாலும் தன் அண்ணன் மகன் மீது அத்தனை மரியாதை பெருகியது அவருக்கு.

    

    

    “என் தங்கச்சி புள்ளைய சித்தப்பு. இன்னும் நெறய செய்ற அளவுல தான் என்னை ஆண்டவன் வச்சிருக்கான்”என்றான் அவன்.

    

    

 தேஜா ஆண்மகனை பெற்றெடுத்ததில் இருந்து அகிலனுக்கு இரவுக்கோழி போல விழித்திருக்கும் வேலை.

    

    தேஜாவின் மகன் பகலெல்லாம் உறங்கி இரவானால் அலறியே ஒருவரையும் தூங்க விடாமல் செய்தான்.

    

    “அக்கா நம்ம வீட்டில் அலாரமே தேவை இல்லை. உங்க பையன் சத்தமே போதும். பாருங்களேன் அவனுக்கு தூக்கறது கீழே படுக்க வைக்கிறது எல்லாம் தெரியுது

 “என்று அகிலன் சிரித்தாலும் பிள்ளையை அத்தனை தாங்கு தாங்கினான்.

    

    “நீயே கை சுகம் காண வச்சிடுவடா. அவ அங்கே போய் சிரமப்படணும்”என்று சுந்தரி அதட்டினாலும் கண்டு கொள்ளாமல் தூக்கிக் கொண்டு அலைந்தான்.

    

    யுகாதித்தனுக்கே குழந்தையை வாகாய் தூக்க வரவில்லை ஆனால் அகிலன் அத்தனை பாந்தமாக அக்கா மகனை தூக்கிக் கொண்டான். 

    

    பிள்ளை பிறந்ததும் கையில் வாங்கியவன் “ம்மா”என்று கண்ணீருடன் நீட்ட சாரதாவிற்கு அத்தனை பேருவகை. 

    

    

    “உன்னை மாதிரியே இருக்கான் டா யுகி. கண்ணு முழி நீயே தான். பாரேன் உருட்டி உருட்டி பார்க்கிறதை”சிலாகித்துக் கொண்டே “அண்ணி”என்று சுந்தரியையும் துணைக்கு அழைத்துக் கொண்டார்.

    “நம்ம பேரன் ண்ணி” என்று சொல்லி கண்ணீருடன் சிரிக்க “சாரதா எதுக்குமா அழுகை?” என பத்மநாபன் கடிந்து கொள்ள “மனசு நெறைஞ்சு போச்சுண்ணே அதான் அழுக வருது ” என்றார்.

    …… தொடரும் 

    

    

    

    

    

    

    

    

    

    

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
10
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. Super super super super super super super super super super ❤️