
மீண்டும் செந்தாளம்பட்டியின் பெரிய வீடு சொந்தங்களால் சூழப்பட்டு சந்தோஷமும், கலகலப்புமாய் நிரம்பிக் கிடந்தது.
சொன்னபடியே பத்மநாபன் தமது பெண்களின் திருமணத்தை செந்தாளம்பட்டியிலேயே நடத்த ஏற்பாடு செய்திருந்தார்.
சென்னையில் தேஜா வேலை செய்த மண்டபத்திலேயே நிச்சயத்தை வைத்துக் கொள்ள அனைவரும் சென்னை வந்து சேர்ந்திருந்தனர்.
நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தேற திருமணத்தை அதற்கு மாறாக வெகு விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தார் வெங்கடாசலம்.
ஊரையே அழைத்திருந்தார் அவர்.
தேஜாவையும் பிரதன்யாவையும் அவர்களின் அத்தை மகள்கள் தயார் செய்ய இங்கே அருணையும் யுகாவையும் சுதாகரன் ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தான்.
“மீசையை நல்லா முறுக்கி விடு மாப்ளை.ஹ்ம்ம் இன்னும் கொஞ்சம் கூரா”என்று சொல்லிக் கொண்டிருக்க
“மச்சான் படுத்தாதய்யா இதுக்கு மேல ஒரு அலங்காரம் தேவையா”என்று சலித்தான் அருண்.
“பின்ன கம்பீரமா ராசா மாதிரி இருக்க வேணாம். அதுக்கு தான் சொன்னேன் பியூட்டி பார்லர் போகலாம்னு”என்று அலுத்துக் கொண்டவனை இருவரும் ஆனவரைக்கும் முறைத்தனர்.
“சரி சரி விடுங்க”என்றவன் நிச்சயத்தில் செய்த அலப்பறையை நினைத்து பம்மினான்.
ஒரு வழியாக மணமகன்களை தயார் செய்து விட்டு அகிலனும் சுதாகரனும் உறவினர்களை வரவேற்க வாசலில் சென்று நின்றனர்.
அருண் தனது டீம் மெம்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்திருக்க யுகா தனது நெருங்கிய நண்பர்கள் சிலரை மட்டும் அழைத்திருந்தான்.
அவர்களைக் கூட சாரதா தான் அழைத்திருந்தார். அவர்கள் அனைவருக்குமே லயாவுடனான அவன் காதல் நன்றாக தெரிந்திருந்தது.ஆனால் யாரும் அதனை வெளிக்காட்டுவது போல் நடந்து கொள்ளவில்லை.
“இப்பவாவது மேரேஜ் பண்ணிக்க மனசு வந்ததேடா உனக்கு”என்று அவனைத் தான் அன்புடன் கடிந்து கொண்டனர்.
அனைவருக்கும் அதில் மகிழ்ச்சியே எங்கே தனியாகவே இருந்து விடுவானோ என்று பயந்திருக்க அதற்கு மாறாக அவன் திருமணம் செய்து கொள்ள போவது அத்தனை சந்தோஷம்.
இரு மணமேடைகளும் தயாராக இருக்க மங்கள வாத்தியம் அவ்விடத்தையே மங்களகரமாக மாற்றியிருந்தது தன் இசைக் கச்சேரியால்.
பாரம்பரியம் எதையும் கைவிடாது அனைத்தும் சரியாக நடக்க வேண்டும் என்று கெஜலட்சுமி அத்தனை பார்த்து பார்த்து ஏற்பாடுகள் செய்திருந்தார்.
பத்மநாபன் இரண்டு மகளுக்கும் சீர்வரிசைகளை நிரப்பி இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
சாரதாவே “எதுக்குண்ணே இவ்வளவு”என்று மகிழ்ச்சியும் சிறு கோபமுமாய் கேட்டிருந்தார்.
“இருக்கட்டும் மா. என் மனசுக்கு நிறைஞ்ச மாதிரி செஞ்சிருக்கேன் எதுவும் கம்மியா இருந்தா மட்டும் சொல்லு”என்றார் பத்மநாபன்.
“அது சரி இதையே உங்க மருமகன் இங்கே வீட்டுல தான் வச்சுட்டு போகப் போறான் இதுல இன்னமுமா”என்றார் சந்தோஷ சலிப்புடன்.
பேச்சும் சிரிப்பும் நிறைந்திருக்க இரு இணைகளும் மணமேடையில் அமர்ந்து விட்டனர்.
சிலர் “என்ன இருந்தாலும் பிரதியை இப்படி கட்டி குடுக்க வேண்டாம். போகும் போதே அந்த பயலோட பொறுப்பு அவ தலையில் விடியப் போகுது. வேற மாப்ளை யே கிடைக்காத மாதிரி சுந்தரி இப்படி பண்ணிட்டாளே”என்ற பேச்சும் எழத் தான் செய்தது.
அதை விட சாரதா எல்லாம் தெரிந்து ஏன் தேஜாவை பெண் கேட்கிறார் யுகாவுக்கு என்ன குறையோ தெரியவில்லை என்றும் பேசத் தான் செய்தனர் சிலர்.
அனைத்தையும் தாண்டி தான் இரு திருமணமும் நடந்தேறியது.
கந்தசாமிக்கு மனதில் சொல்லொணா மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது. மகன் பெரிய வீட்டு மருமகன் ஆனதில் அத்தனை மகிழ்ச்சி. அவரின் நெருங்கிய சொந்தங்கள் யாரும் அவனுக்கு பெண் தர மறுக்க பத்மநாபன் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் பெண்ணை திருமணம் செய்து தர ஒப்புக் கொண்டதே அவர் மட்டிலும் பெருத்த நிம்மதியை தருவித்திருந்தது. ஏனெனில் அவருக்கு கடன் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதனாலேயே பெண் தர யோசித்தனர் என்றால் மற்றொரு பக்கம் மகிழனின் பொறுப்பு வேறு இருக்க அவனை ஏற்க யாரும் தயாராக இல்லை.
எல்லாம் தெரிந்து பின் பெண் தருவது பெரிய விஷயம் அல்லவா.
இவர் இப்படி என்றால் சாரதாவிற்கு மகனை குறை கூறியது வருத்தமாக இருந்தது.
“ம்மா யார் என்ன சொன்னாலும் கண்டுக்காதீங்க. உங்களுக்கு இந்த முடிவு சரின்னு படுது தானே அதோடு விடுங்க. இதை எல்லாம் பெருசா நினைக்காதீங்க ச்சில் மா”என்று சமாதானம் செய்திருந்தான் யுகாதித்தன்.
அவனுக்குமே எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கவலை இருக்கிறது தான் அதற்காக அடுத்தவர்கள் என்ன கூறினாலும் அதை மனதில் ஏற்றி இன்னும் வருத்தம் கொள்ள பிடிக்கவில்லை. தேஜாவின் கடந்த காலம் அவனுக்கு எப்போதுமே ஒரு விஷயமாக இருந்ததில்லை. ஏன் தனக்கு இல்லையா கடந்த காலமும் நிகழ்காலமும் என்று நினைத்துக் கொண்டவன் பேசுபவர்களுக்கு விளக்கம் கூறும் மனநிலையில் இல்லை.
********
“எங்கே மகி அவனையும் பக்கத்தில் நிக்க வைங்க”என்று அருணிடம் முணுமுணுத்தாள் பிரதன்யா.
“அப்பா வச்சிருந்தாங்க தனு”என்றவன் தன்னருகில் நின்ற அகிலனிடம் மகிழனை அழைத்து வரும்படி கூறினான்.
“அவனுக்கு புகை கண்ணு எரியுதாம் மாமா அதான் கீழ உட்கார வச்சிருக்காங்க நீங்க இங்க கவனிப்பீங்களாம்”என்று கந்தசாமி கூறியதை ஒலிபரப்பினான் அகிலன்.
அருண் தனக்கு எதிரே அமர்ந்து இருந்த தந்தையையும் மகனையும் ஒரு சேர பார்த்தபடி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தான்.
இவர்கள் திருமணம் நடந்தேறிய பிறகு தான் தேஜா யுகா திருமணம் நடக்கவிருந்தது. முதல் முகூர்த்தம் அருண் பிரதன்யாவிற்கும் இரண்டாம் முகூர்த்தம் தேஜா யுகா ஜோடிக்கும் என ஜோதிடர் குறித்துக் கொடுத்திருந்தார்.
அதனால் அவர்கள் இருவரும் அங்கே மற்றவர்களோடு அமர்ந்திருந்தனர்.
“ஏன் இன்னும் டென்ஷனாவே இருக்கீங்க”என்று யுகாவிடம் பேசிக் கொண்டே திருமணத்தை பார்த்திருந்தாள் தேஜா.
“ஹ்ம்ம் எதுவும் இல்லை. கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகிட்டேன்”என்றவனுக்கு லயா தங்கள் திருமணம் எப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று சொல்லிய நினைவுகள் தான் நிரம்பி இருந்தது.
எத்தனை கனவுகள் எத்தனை ஆசைகள் எல்லாம் தந்தவள் இன்று எங்கும் இல்லாது போனாளே என்ற துக்கம் அவனிடம்.
“அஸ்வி”என்று அவளின் கையைப் பிடித்துக் கொண்டவன் மூச்சை இழுத்து விட்டான்.
“அட்சதை வந்திடுச்சு எடுங்க”என்று தானும் எடுத்து கொண்டாள்.
“ஹ்ம்ம்”என்றவன் சிறிதாக எடுத்துக் கொண்டு மணமேடையை பார்க்க அருணின் கைகள் மாங்கல்யத்தை வாங்கியிருந்தது.
“தேங்க்ஸ் தனு”என்றவன் அனைவரின் ஆசிர்வாதத்துடனும் அவளின் கழுத்தில் மங்கள நாணைப் பூட்டி இருந்தான்.
இரு கரம் கூப்பி வணங்கி அவனின் மாங்கல்யத்தை ஏற்றுக் கொண்டவளுக்கு மனதில் ஒரு நிறைவு தோன்றியது.
கண நேரத்தில் கைநழுவி செல்லவிருந்த வாழ்க்கை தமக்கையின் உதவியால் தன் கை சேர்ந்ததை எண்ணி கண்ணீர் துளிர்க்க புதிய வாழ்வில் அவனோடு சேர்ந்து காலடித் தடம் பதித்தாள் பிரதன்யா.
அடுத்தடுத்து நிகழ்ந்தது எல்லாம் பரபரப்பின் உச்சங்கள் தான். பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று மணமக்கள் ஒரு அறைக்குள் இருக்க வைக்கப்பட அடுத்ததாக யுகாவும் தேஜாவும் மணமேடைக்குச் சென்றனர்.
கன்னிகாதானம் நடக்கும் வேளையில் சாரதா விசும்பி அழுதுவிட்டார். இப்படி ஒரு நிகழ்வு தன் மகன் வாழ்வில் நடக்காமலேயே போய் விடுமோ என்று பயந்தவருக்கு இன்று மகன் மணமேடை ஏறவுமே அத்தனை நெகிழ்ச்சி.
“ம்மா”என்று அதட்டியவனை தோள்தட்டி “அம்மாவுக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா”என்றார் கண்களை துடைத்து விட்டு.
தேஜா புன்னகையுடன் அவரைப் பார்க்க”எல்லாம் என் மருமகளால தான்”என்று சொல்ல யுகா தன் அம்மாவின் மகிழ்ச்சியை விட வேறென்ன வேண்டும் என்பதைப் போல தலையாட்டினான்.
திரிபுரசுந்தரி கன்னிகாதானம் செய்யும் போதே கணவனின் தோளில் லேசாக சாய்ந்து விட்டார். காலம் முழுவதும் ஓடிப் போனவள் என்ற கெட்டப் பெயருடன் இருந்து விடுவாளோ என தவித்து வாழ்ந்தவருக்கு இந்தத் திருமணம் மூலமாக பெரும் நிம்மதியை பரிசளித்திருந்தாள் தேஜா.
சின்னவளை கன்னிகாதானம் செய்து தரும் போது கூட திடமாக நின்று வார்த்துக் கொடுத்தவர் இப்போது நெஞ்சை முட்டும் சந்தோஷத்தில் கணவனின் தோளில் சாய்ந்து விட்டார்.
மங்கள நாண் பூட்டி தேஜாவை தன் மனைவியாக ஏற்கும் வேளையில் கூட யுகாவிற்கு தவிப்பு கூடிப் போனது.
பக்கவாட்டாய் அமர்ந்து நிமிர்ந்து பார்த்தவளைக் கண்டு கண்களை மூடித் திறந்தவனுக்கு துளி கண்ணீர் கோடாக இறங்கியது.
‘எனக்கு தாலி கட்டினதும் கன்னத்தில் கிஸ் பண்ணனும் யுகி. அப்புறம் தான் நெத்தி வகிட்டில் குங்குமம் வைக்கணும் நீ’என்றெல்லாம் லயா சொல்லியது நினைவில் வர இத்தனை காதலும் ஆசையும் என்னை விட்டு செல்வதற்காகவா என்று நொந்து கொண்டான்.
“பொண்ணு கழுத்தை சுற்றி கைபோட்டு பொட்டு வைங்கோ”என்று புரோகிதர் சொல்லவும் சுயம் வந்து குங்குமத்தை வைத்து விட்டான்.
எதையோ நினைத்து மறுகிறான் என்று மட்டும் தேஜாவிற்கு புரிந்தது. அவனைப் பார்க்க பரிதாபமாகவும் இருந்தது தான். இந்த திருமணம் எத்தனை பேருக்கு நிம்மதியை தந்திருக்கும் என்று உணர்ந்தவளாய் யுகாவை மாற்ற முடியும் என நம்பிக்கை கொண்டாள்.
அந்த நம்பிக்கையோடு அவனின் கரம் பிடிக்க மெலிதாய் புன்னகைத்து அவளது கரத்தை தானே பற்றிக் கொண்டான்.
“மச்சான் அப்படியே ஒரு போஸ்”என்று நண்பர்கள் தங்கள் கைபேசியில் இருவரையும் படம் பிடித்துக் கொண்டனர்.
அதன் பின்னர் வந்த உறவினர்களை உணவருந்த அனுப்ப நலம் விசாரிக்க என்று மற்றவர்களை வேலைகள் இழுத்துக் கொண்டது என்றால் இரு ஜோடிகளையும் ஒரே மேடையில் நிறுத்தி உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்து சொல்ல வந்ததற்கு அடையாளமாக புகைப்படங்கள் பிடிக்க என்று நேரம் கடந்தது.
மணமக்களோடு இணைந்து அதிக புகைப்படத்தில் இருந்தவர்கள் மகிழனும் அகிலனும் தான். இருவரும் தனியே வேறு புகைப்படங்கள் எடுக்க அவர்களோடு சிறிது நேரத்தில் சுதாகரனும் இணைந்து கொண்டான். இளைய பட்டாளங்கள் ஒன்றாக சேர்ந்து புகைப்படங்கள் வீடியோக்கள் எடுத்து முடித்த பிறகு இரு ஜோடிகளையும் நிற்க வைத்து ஆளுயர கேக்கை வெட்ட செய்தனர். காலையில் எடுத்த திருமண நிகழ்வு சுடச்சுட சில மணி நேரங்களிலேயே லேமினேஷன் செய்யப்பட்ட புகைப்படமாய் இரண்டு ஜோடிகளின் கைகளிலும் தவழ்ந்தது.
“சரி சரி நாலு பேரையும் சாப்புட வைப்போம்”என்று சுதாகரன் கூற இளைய பட்டாளம் ஓஹோ என்று கூக்குரலிட்டது.
“அடேய் நீங்க போடுற சத்தமே பீதிய கிளப்புதுடா”என்று அருண் அலற
“இன்னிக்கு நீங்க தான் எங்க என்டர்டெயின்மென்ட்” என்று சிரித்தனர் அனைவரும்.
சொன்னபடியே இரு இணைகளையும் கேலியும் கிண்டலுமாய் உணவருந்த வைத்து இரு ஜோடிகளையும் ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட வைத்து என்று அட்டகாசம் செய்து விட்டனர்.
“டேய் போதும் டா” என்றான் யுகா பரிதாபமாக
“இன்னும் மோர் இருக்கே மாப்பு” என்று சுதாகரன் எடுத்து கொடுக்க “இதுக்கு மேல தாங்காது மச்சான்” என்று சரண்டர் ஆனார்கள் யுகாவும் அருணும். சற்று நேரத்தில் அங்கிருந்து குலதெய்வ கோவிலுக்கு கிளம்பி இருந்தனர் நால்வரும் அவர்களோடு இளவரசி சுதாகரன் அவனின் மனைவி நந்தினி சென்றனர்.
….. தொடரும்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
6
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Super super super super nallapadiya marriage mudinchu