Loading

    வானவில்-09

அருணை கடிந்து பேசிய பிறகு பிரதன்யா அவனைக் கண்டு கொள்ளாமல் இருக்க அவனுமே முடிந்த அளவிற்கு அவளிடம் பேசுவதை தவிர்த்தான். ஏன் வம்பு என்று அவன் யோசித்து இருக்க, இருவருக்குமான பேச்சு வார்த்தை முற்றிலும் குறைந்து போனது. இப்போது மகிழன் வந்து பேசவும் அகிலன் பிரதன்யாவை பார்த்தான்.

    “ஓய் சில்வண்டு நான் உனக்கு பிரதரா நறுக்குன்னு கொட்டினேன்னு வை”என்று மிரட்ட

    மகிழன் விழிகளை உருட்டிப் பார்த்தவன் “நா இப்டி கதிச்சேன்”என்று மிரட்டி லேசாக கன்னத்தில் கடிக்கவும் செய்ய அகிலன் சிரித்து விட்டான்.

    “அடேய் ஏன்டா”என்று கிண்டலாக சொல்லி விட்டு மகியைத் தூக்கிக் கொள்ள அகிலனை முறைத்து விட்டு திரும்பி கொண்டாள் பிரதன்யா.

    டேமிற்கு சென்றதும் அவரவர் குழுவாக பிரிந்து ஆங்காங்கே செல்ல சுதாகரன் தான் மாலை ஐந்து மணிக்கு எல்லாம் இவ்விடம் வந்து சேர வேண்டும் என்று சொல்லி அனுப்பினான்.

    தேஜா புத்தகத்துடன் ஓரிடத்தில் அமர அகிலனும் அருணோடு மகியை அழைத்துக் கொண்டு விளையாட சென்றனர்.

    பிரதன்யா தன் வயது பெண்களோடு செல்ல பெரியவர்கள் தண்ணீரை பார்த்தபடி அமர்ந்து கொண்டனர்.

   யுகாதித்தன் கைபேசியில் அதுவரை உரையாடிக் கொண்டிருந்தவன் தனது அம்மாவை தேடி வந்தான்.

    “ம்மா ஏதாச்சும் வேணும் னா கால் பண்ணுங்க”என்றவன் அங்கிருந்து செல்ல”யுகி ஸ்நாக்ஸ் ஏதாவது வாங்கித் தந்துட்டு போ வரும் போது சமோசா கடை பார்த்தேன்”என்றதும் அன்னையை முறைத்தான் அவன்.

    “ம்மா ஆயில்”என்றதுமே “எனக்காக கேட்கலை இதோ உங்க அத்தை தான் ஆசைப்பட்டாங்க என்ன அண்ணி சொல்லுங்க”என்று திரிபுரசுந்தரியை கோர்த்து விட அவரோ வேறு வழி இல்லாமல் ஆமென்று தலையசைத்தார்.

    “வாங்கிட்டு வர்றேன்”என்றவன் எத்தனை பேர் என்று எண்ணிக் கொண்டான்.

    சிறிது நேரத்தில் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து விட்டு “மறக்காம ஹாட் வாட்டர் குடிக்கறீங்க ஆன்ட்டீஸ் நீங்களும் தான்”என்று சொல்லி விட்டு அங்கிருந்து அகல தேஜா புத்தக உலகத்தில் சஞ்சரித்திருந்தாள்

    திரிபுரசுந்தரிக்கு யுகாவைப் பார்க்க பார்க்க தன் மகள் மட்டும் அன்று அப்படி செய்யாமல் இருந்திருந்தால் இன்று இவனின் மனைவியாக அல்லவா இருந்திருப்பாள் என்று ஆதங்கமாய் இருந்தது

“அண்ணி”என்றழைத்த யுகாவின் தாய்க்கும் அதே ஆதங்கம் தான். இன்று வரை மகன் திருமணம் வேண்டாம் என்று மறுப்பதற்கு காரணம் தேஜாவை தான் நிராகரித்ததால் விதி இதுபோல் விளையாடுகிறது என்ற ஆதங்கம் அவருள்.

    “என்ன படிக்கற தேஜ்”என்ற குரலில் நிமிர்ந்த தேஜா எதிரில் நின்றவனைக் கண்டு அதிர்ந்தாள்.

    பிரகாஷ் தான் நின்றிருந்தான். முகத்தில் சோகம் டன்னாய் வழிந்தது. சட்டென்று எழுந்து கொண்டவள் அங்கிருந்து செல்ல முற்பட “என்னை மன்னிச்சிடு தேஜ் இதுக்கெல்லாம்”எனும் போதே யுகாவும் அருணும் அங்கே வந்து விட்டனர்.

    “ஏய் நீ எங்க இங்க”என அருண் அதட்ட பிரகாஷ் நிதானமாக “எப்படி இருக்க அருண்”என்றான் ‌

    “அதை தெரிஞ்சு நீ என்ன செய்ய போற”என்றான் எரிச்சலாக.

    “ஏன் டா கோபமா பேசற என் சிச்சுவேஷன் தெரிஞ்ச நீயே”என்று சொல்லி கொண்டிருக்கும் போதே “என்ன பெரிய வெங்காய சிச்சுவேஷன். அதான் எல்லாம் முடிஞ்சு போச்சு தானே மறுபடியும் எதுக்கு அவளை பார்க்கணும் நீ”என்றான் யுகா கோபமாக.

    “என் நிலையை சொல்ல தான் டா வந்தேன் ஏன் கோபப்படுறீங்க”என்ற பிரகாஷ் மீண்டும் தேஜாவிடம் பேசப் போக அவளை யுகா அழைத்துச் சென்று விட்டான்.

    “லவ் பண்ண பொண்ணுக்காக வெய்ட் பண்ண துப்பு இல்ல இப்ப வர்றான் ரீசன் சொல்ல”என்று முணுமுணுக்க

   தேஜஷ்வினி எதுவும் பேசாமல் வரவும் “நீ எழுந்து வர மாட்டியா அவன் வந்து பேசற வரை உட்கார்ந்து இருக்க. உன்னை ரெண்டு அடி போடணும்”என்றதும் சிரித்து விட்டாள்.

    “இப்போ எதுக்கு சிரிக்கிற நீ”என்று அதட்ட

    “இல்லை என்ன சொல்ல வந்திருப்பான்னு யோசிச்சேன் சிரிப்பு வந்திடுச்சு”என்றாள்.

    “என்ன சொல்ல வந்திருப்பானாம்?” இலகுவானான் யுகாதித்தன்.

    “என்ன சொல்ல வந்திருப்பார் கட்டாயம் செஞ்சு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க னு சொல்ல வந்திருப்பார் அவ்வளவு தான்”

    “இதால அவனுக்கு என்ன பிரயோஜனம்”என்று கேட்க

    “தெரியலை பட் இதைத்தான் சொல்ல வந்திருப்பார். கல்யாணம் தான் கட்டாயம் பண்ணி செஞ்சு வச்சிருப்பாங்க பிள்ளை கூடவா கட்டாயத்தில்”என்றவள் “அதுவும் சீரான இடைவெளியில்”என்றாள்.

    யுகாதித்தன் சத்தமாக சிரித்து விட்டான்.

    “ஆளைப்பாரு சோடா புட்டி”என்றவனின் கிண்டலில் முறைக்க காதை பிடித்து கொண்டு மன்னிப்பு போல நிற்க அவளுமே இயல்பாய் பேசினாள்.

    இருவரும் பேசிக் கொண்டு வருவதை கண்டதும் திரிபுரசுந்தரிக்கும் யுகனின் அன்னை சாரதாவிற்கும் அத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது.

    இருவருக்குமே தேஜா யுகா ஜோடி சேர்ந்தால் என்னவென்ற எண்ணம் தான் ஆனால் நடக்குமா என்ற ஏக்கத்தோடும் குழப்பத்துடனும் ஒருவரையொருவர் பார்த்து நின்றனர்.

    *********

    “அன்னைக்கு எதுவோ பேச வந்துட்டு அருண் வந்ததும் சொல்லாம விட்டுட்டீங்க மச்சான்”என்று பத்மநாபன் கந்தசாமிக்கு நினைவூட்ட

    “சொன்னா என்ன நினைச்சுப்பீங்கனு தெரியவில்லை ஆனாலும் கேட்க தோணுது மச்சான்”என்ற கந்தன்

    “உங்களுக்கே என் வீட்டு நிலைமை தெரியும். அண்ணன் கடமை அத்தனையும் அருணு தான் சுமக்குறான் ஆனாலும்”என்று இழுத்து பின் “உங்க மகளை என் மகனுக்கு கட்டித் தர்றீங்களா மச்சான்”என்று ஒரு வழியாக கேட்டுவிட பத்மநாபனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. திகைத்துப்போய் பார்த்தார் கந்தசாமியை.

    “நானும் என் பேரனும் வேணும்னா இங்கனயே இருந்துக்கிறோம் மச்சான். அருணுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் நாங்க இருக்கோம். நீங்க உங்க பொண்ணை தாராளமாக கட்டிக் குடுக்கலாம்.”என்றதில் சுயம் பெற்ற பத்மநாபன்”என்ன பேசுறீங்க மச்சான். பெத்த பிள்ளை கூட நீங்க இருக்காம அப்புறம் என்ன நீங்க” என்று கடிந்து கொண்டார்.

    “இல்லை நாங்க அவனுக்கு பாரமா இருக்கோம். அவன் நிம்மதியா கல்யாணம் பண்ணி இருந்தா போதும்னு இருக்கு”என்றார் தயக்கம் காட்டி

   “அதுக்கு இப்படியா இதை அருண் கேட்டா எவ்வளவு சங்கடப்படுவார்”என்றவர் “என் மக பத்தி உங்களுக்கே தெரியும். அவளை நிறைஞ்ச மனசோட ஏத்துக்கிறதுனா சொல்லுங்க கண்டிப்பாக சம்மந்தம் பேசிக்குவோம்”என்று சொல்லி விட கந்தசாமிக்கு அத்தனை மகிழ்ச்சி அதில்.

    பத்மநாபன் கையைப் பிடித்துக் கொண்டு கண்கலங்கிப் போனார் மனிதர்.

    “இதை விட வேற என்ன வேணும் எனக்கு. நான் எம்மவன் கிட்ட பேசறேன் மச்சான்”என்றார் உறுதியாக.

    தந்தையர் நினைப்பது நடக்குமா அன்னையர் நினைப்பது நடக்குமா ??

    ********

    இங்கு பிரகாஷை எச்சரித்து அருண் அனுப்பி இருக்க அங்கே பிரதன்யா மகிழனோடு வந்தாள்.

    “விளையாடி முடிச்சிட்டியாடா”என்று மகனை தூக்கிக் கொண்டு பிரதன்யாவை பாராமல் அவன் நடக்க “ஐம் சாரி”என்றாள் பிரதன்யா.

    “எதுக்கு”என்றவன் “சரியா தானே சொன்னீங்க நான் தான் கொஞ்சம் ஓவர் அட்வான்டேஜ் எடுத்துட்டேன் ஐம் சாரி”என்றான் அவளைப் பார்த்திடாமல்

    “சாரி உங்களை ஹர்ட் பண்ண பேசலை அப்படி.”

    “இல்லைங்க பரவாயில்லை இருக்கட்டும்”என்று அங்கிருந்து செல்ல சங்கடமாய் உணர்ந்தாள் பிரதன்யா.

    அனைவரும் உற்சாகமாக விளையாடி விட்டு வீடு திரும்பி இருக்க கோவிலில் மாவிளக்கு எடுத்து வர சொல்லவுமே பரபரப்பானார்கள்.

    ஆண்கள் எல்லாம் கோவில் வாசலில் நின்றிருக்க பெண்கள் மாவிளக்கு தட்டோடு கிளம்பி இருந்தனர் கோவிலுக்கு.

    அப்பத்தா பெண்கள் அனைவரையும் புடவை தான் கட்ட வேண்டும் என்று தீர்மானமாக சொல்லி விட அனைவரும் புடவையில் தான் தயாராகினர்.

    “ம்மா இன்னொரு ஷேப்டி பின் தாங்க”என்று பிரதன்யா இடுப்பு தெரிகிறதா என்று அசூசையாக பார்த்தபடி கேட்டாள்.

    “இனிமே குத்த அங்கே இடம் இல்லடி”என்று சலித்த சுந்தரி மகள் விட மாட்டாள் என்று புரிந்து இடைப் பக்கத்திலும் பின்னை குத்தி விட்டார்.

    பச்சை வண்ணத்தில் அரக்கு பார்டர் வைத்த அந்த சில்க் காட்டன் அத்தனை பாந்தமாய் பொருந்தி இருந்தது பிரதன்யாவிற்கு.

    தேஜஸ்வினிக்கு இளஞ்சிவப்பு வண்ண பட்டுப்புடவை தந்திருக்க மேனியோடு ஒட்டிக் கொண்டது போல கட்டி இருந்தாள் தேஜஸ்வினி.

    இரு பெண்களையும் கண் குளிர பார்த்த சுந்தரிக்கு அத்தனை மகிழ்ச்சி.

    “எம்பேத்தி எல்லாம் அந்த மீனாச்சி கணக்கா அம்சமா இருக்காளுக”என்று நெட்டி முறித்தார் அப்பத்தா.

    “அம்மத்தா இப்புடியே நின்னா மாவெளக்கு போயிரும் நாங்க கெளம்புதோம்”என்றதும் பெண்களை அனுப்பி வைத்தார் அவர்.

    பெரிய வீட்டுப் பெண்களின் கூட்டம் என்றால் சும்மாவா. அங்கே பூந்தோட்டமென நின்றிருந்தனர்.

    பிரகாஷ் வேறு தேஜாவை அவ்வபோது பார்த்து கொண்டிருக்க யுகா அருண் இருவருமே எரிச்சல் ஆனார்கள்.

    சுதாகரனை அழைத்து மற்றவர்களை பெண்களோடு இணைந்து நடந்து வரும்படி கூற அரணாய் இளசுகள் அனைவரும் வந்தனர். அருண் யுகா முறைப்பைக் கண்டு கொண்ட பிரகாஷ் கூட்டத்தில் இருந்து நழுவி சென்றான்.

    அம்மனுக்கு மாவிளக்கு படைக்க குலவை சத்தம் ஒலிக்க ஒலிப்பெருக்கி வேறு பக்தி மயத்தைப் பெருக்க என்று அவ்விடமே தெய்வீக மணம் கமழ்ந்தது.

    சுந்தரியை தான் அத்தனை பேர் விசாரித்தனர் மகள்களை அறிமுகம் செய்தே ஓய்ந்து போனார் அவர்.

    “அந்த பிரகாசம் பயலுக்கு குடுத்து வைக்கலை பாரு புள்ள எம்புட்டு அம்சமா இருக்கு”என்று தேஜாவைக் கண்டு கிசுகிசுப்பாய் பேசிச் செல்ல ஒரு பெண் மட்டும் அவளை முறைப்பது போல பார்த்து விட்டு சென்றாள்.

    “அக்கா உங்களை முறைச்சு பார்த்தாங்களே அவங்க தான் அந்த”என்று சொல்லும் போதே உதட்டில் விரல் வைத்து எச்சரித்த தேஜா “தேவை இல்லாததை பேசாத ப்ரது”என்றாள்

    “சாரிக்கா”என்று சொல்லியபடி “அக்கா பலூன் வாங்கலாமா ப்ளீஸ் ப்ளீஸ்”என்று கெஞ்ச தங்கையின் கெஞ்சலில் மறுக்காமல் அவளோடு நடந்தாள்.

    பலூன் விற்கும் இடத்தில் அருண் மகனோடு நின்றிருக்க இப்போது வேண்டாம் என்றாள் பிரதன்யா.

    “அவங்க நின்னா உனக்கு என்ன நீ வா”என்றதும் அக்காவோடு நின்று பலூன் எதை வாங்கலாம் என்று தேட அதற்குள் மகிழன் “பெதர் பிங்க்”என்று சொல்லவும் அருண் அவன் வாயை மூடவும் சரியாக இருந்தது.

    அருண் பரிதாபமாக முழிக்க மகிழனோ தந்தையின் கையை எடுத்து விட்டு தான் சிரிப்பதை காட்டிக் கொடுத்தான்.

    “வாயிலேயே போடுவேன்”என்று மிரட்டியவள் அங்கிருந்து செல்ல “பிரதன்யா சாரி மகி சாரி சொல்லுடா”என அருணும் அவள் பின்னால் சென்றான்.

    “தனு ப்ளீஸ் சாரி நான் தம்பியை கண்டிக்கிறேன்”என்று இறங்கிய குரலில் கூற பிரதன்யா சிரித்து விட்டாள்.

    …… தொடரும்

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்