Loading

அத்தியாயம் 6

நிரூப்பின் அறையிலிருந்து அகா வெளியில் வர, சுகன் அங்கு வந்தான்.

“ஸ்டேஷன் போயிருக்கலாமே சுகன்” என்றவள், கேண்டீன் பக்கம் சென்றாள்.

“குணசீலனுக்கு ஒரு அண்ணா இருக்காங்க மேம். இன்ஃபார்ம் பண்ணியாச்சு. இங்க வர சொல்லியிருக்கேன். பாடியை ஹேன்ட் ஓவர் பண்ணனும்” என்றான்.

“ஹ்ம்ம்” என்றவள், மாதுளை பழச்சாறு ஒன்று சொல்லியதோடு, “உங்களுக்கு சுகன்” எனக் கேட்டாள்.

சுகன் வேண்டாமென்றிட, கேண்டீன் இருக்கையில் சென்றமர்ந்தாள். உடன் சுகன்.

மார்னிங் பெஞ்சமின் இன்னொரு ஸ்பாட் போயிருக்கிறதா சுனில் சொன்னாரே. அதோட டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணுங்க சுகன்” என்றவள், “ஸ்கூலில் கேர்ள்ஸ் விசாரணை பண்ணீங்களா? எனி யூஸ்ஃபுல்?” என்றாள்.

“குணசீலன் பத்தி அவரோட கிளாஸ் கேர்ள்ஸ் அவ்வளவு நல்லதா சொல்லல மேம். அவர் கேரக்ட்டர் தப்பாதான் தெரியுது” என்றான்.

சட்டென்று அகாவிடம் மெல்லியம் பயம் சூழ்ந்திட, கண்களை இறுக மூடித் திறந்து தன்னை திடமாக உணரச் செய்தாள்.

“நேத்து கூட ஸ்பெஷல் க்ளாஸ் முடிஞ்சு, ஒரு பொண்ணை மட்டும் கடைசியா நிக்க வச்சு பிராக்டிகல் ஃபெயில் பண்ணிடுவதா சொல்லி மிரட்டியிருக்கார். அந்தப்பொண்ணுக்கு துணையா நின்ன பொண்ணையும் போகச்சொல்லிட்டு பத்து நிமிஷம் கழிச்சு தான் விட்டிருக்கார். அந்தப்பொண்ணு இன்னைக்கு ஸ்கூல் வரல. இன்னொரு பொண்ணு இந்த தகவலை சொல்லியிருக்காங்க. மே பீ அந்தப்பொண்ணு சைட்ல இருந்து எதுவும் நடந்திருக்கலாம்” என்றான்.

“வாய்ப்பில்லை சுகன். அந்தப்பொண்ணு நிச்சயமா வீட்டுல சொல்லியிருக்கமாட்டாள். குணசீலனுக்கு பயந்து தான் ஸ்கூல் வரமா இருந்திருக்கணும்” என்ற அகா, “குணசீலன் ஏதோ பர்ப்பஸா தான் கிளாஸ் ரூமுக்குள்ளவே இருந்திருக்கார். என்ன காரணம் தெரிஞ்சா மேற்கொண்டு மூவ் பண்ணலாம்” என்ற அகா யோசனையில் மேசையின் மீது விரல்களைத் தட்டினாள்.

“ஈவ்னிங் ஸ்பெஷல் கிளாஸ் முடிஞ்ச டைம் என்ன?”

“6.20 மேம்… நாம ஓவர் திங்க் பண்றோம் தோணுது மேம். சீன்ஸ் எல்லாம் நேச்சுரல் டெத் மாதிரி தான் இருக்கு. கேஸ் க்ளோஸ் பண்ணிட்டு, இந்த கேர்ள்ஸ் மேட்டர் மட்டும் ஸ்கூல் ஹெட்க்கு இன்ஃபார்ம் பண்ணி ஆக்ஷன் எடுக்க சொல்லலாம்” என்று சுகன் கூற, இல்லையென இருபக்கமும் தலையை அசைத்த அகா, “எனக்கு இது பிளான்ட் மர்டர்ன்னு தான் தோணுது சுகன். நீங்க நான் சொன்னதை என்னன்னு பாருங்க. அந்த ஏரியா என் கண்ட்ரோல்ல வருதுன்னா, அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரை என்கிட்ட பேச சொல்லுங்க” என்றவள், பழச்சாறு வரவே எழுந்துகொண்டாள்.

“ஓகே சுகன்… ஸ்டேஷனில் பார்ப்போம்” என்று அவனிடம் விடைபெற்று, புவித் ரத்தம் கொடுத்துக் கொண்டிருந்த அறைக்கு வந்தாள்.

“முடிஞ்சுதா?”

புவித்தின் கையில் ஊசி குத்திய தடத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டிருந்த செவிலியிடம் கேட்ட அகா, புவித்திடம் பழச்சாற்றை நீட்டினாள்.

செவிலி அங்கிருந்து நகர, அவருக்கு “தேங்க்ஸ்” என்றவன், அகா நீட்டிய பழச்சாற்றை வாங்கியபடி அவளுடன் நடந்தான்.

“பாருடா திடீர்னு பொண்டாட்டிக்கு என்மேல அக்கறை” என்ற புவித், பழச்சாற்றோடு சேர்த்து மனைவியின் முறைப்பையும் பருகினான்.

பாதி குடித்தவன், தன்னையே பார்த்து நின்றவளிடம் வேணுமா என்று காகித குவளையை நீட்டி வினவினான்.

அதில் அகா வேகமாக முகத்தை திருப்பிக் கொண்டு முன்னால் செல்ல,

“ஜூஸ்க்கும் நோ தானா?” என்றவன் ஒரே மூச்சில் காலி செய்து, கோப்பையை குப்பைக் கூடையில் போட்டுவிட்டு வேக எட்டுக்கள் வைத்து மனைவியை நெருங்கியிருந்தான்.

“ஏன் இவ்வளவு வேகம்?” என்றவன், “இப்படியே வெளிய எங்கயும் போலாமா?” எனக் கேட்டான்.

“எனக்கு டியூட்டி இருக்கு” என்று புவித்தின் முகம் பாராதுக் கூறிய அகா, “நீங்க காலேஜ் போகலையா?” என்றாள்.

“இனி எங்க போறது. நீ ஹாஸ்பிடல் மட்டும் சொல்லிட்டு வச்சிட்ட. உனக்கு என்னவோன்னு ஜானுவ லீவ் சொல்ல சொல்லிட்டு ஓடி வந்தேன்” என்றவன், அவள் தனது முகம் பார்த்து அசைவற்று நிற்பதைக் கண்டு, “சாப்டியா நீ?” என வினவினான்.

“மூச்சு முட்டுது மாமா. நீங்க என்னைவிட்டு போயிடுங்களேன்” என்றவள் விறுவிறுவென சென்றிருந்தாள்.

முன் செல்பவளின் இமை தாண்டாத கண்ணீர் அவன் உணர்வதாய்.

அதுவரை அவளருகில் புன்னகை முகமாக நின்றிருந்தவன் சட்டென்று வாடி நின்றான்.

“சீக்கிரம் மாத்திடலாம். இதுக்கே டயர்டாகி நின்னா எப்படி புவி?” சில நொடிகளில் தன்னை மீட்டுக் கொண்டவனாக தன்னுடைய கார் நிற்குமிடம் நோக்கிச் சென்றவன், அப்போது தான் அகாவிடம் கொடுத்த தன்னுடைய அலைபேசியை வாங்க மறந்தவனாக, அவள் எங்கென்று தேடினான்.

அவளை அதே வாகனங்கள் தருப்பிக்கும் இடத்தில் அவளது வாகனத்திற்கு முன்னிருந்த கல் மேடையில் கண்டுவிட்டு அருகில் சென்றான்.

கால்களில் கைமுட்டி குற்றி, தலையை தாங்கியவளாக முகம் தாழ்த்தி அமர்ந்திருந்தவள் தனக்கு பக்கவாட்டில் யாரோ வந்து நின்றதில், பாதம் வைத்தே யாரென்று அறிந்தவள், நின்றிருந்த புவித்தின் இடையோடு கையிட்டு, அவனது வயிற்றில் முகம் புதைத்தாள்.

“கனி…” என்றவன் அவளின் தோளில் கையிட்டு தட்டிக்கொடுக்க…

“இன்னைக்கு செத்துபோனவனுக்கு ஐம்பது வயசு இருக்கும். ஆனாலும் அவன் கிளாஸ் பொண்ணுங்ககிட்ட, இவனுங்களாம் திருந்தவே மாட்டானுங்களா மாமா?” என்றவள் முகத்தை மேலும் அழுத்தமாக அவனுள் புதைத்தாள். வெளிவரத் துடிக்கும் கண்ணீரை உள்ளுக்குள்ளே அடக்க தனக்குள் போராடினாள்.

“டேய் கனி…” என்று அவளருகில் அமர்ந்தவன், அவளை தனது தோளில் சாய்த்துக்கொண்டான்.

“ஜஸ்ட் ரிலாக்ஸ்டா’ம்மா…” என்ற புவி, அவளது கைகளின் நடுக்கத்தை உணர்ந்தவனாக, தனது விரல்களோடு அவளின் விரல்களைக் கோர்த்து இறுக்கிப்பிடித்தான்.

“நல்லவேளை எனக்குத் தெரியும் முன்ன செத்துட்டான். இல்லை நானே கொன்னிருப்பேன். சின்ன சின்ன பிள்ளைங்க மேல கூட எப்படி இவனுங்களுக்கு இப்படி அசிங்கமான எண்ணம் வருது?” என்றவளின் கோபம் அதிகரிப்பதை அவளது பற்கள் அழுந்தி வெளிவரும் வார்த்தைகளில் அறிந்த புவித்,

“டேய்… காம் டவுன். கனி… கனி…” என அவளின் கன்னம் தட்டினான்.

“இப்போ நீயெதுக்கு உன்னை பிரஷர் பண்ணிக்கிற?” என்ற புவித், “எழுந்திரு வீட்டுக்கு போகலாம்” என்றான்.

“நம்ம வீட்டிலே என்னால நார்மலா இருக்க முடியாததுக்கு இந்த மாதிரி ஆளுங்க தானே காரணம்” என்றவள், “அன்னைக்கு எம்மேல எந்த தப்புமே இல்லை மாமா” என
தேம்பினாள்.

முதல் முறையாக தன்மீது தவறில்லை என்பதை வாய் திறந்து கூறுகிறாள். அன்று அவளை பழிச்சொல்லி திட்டிய போதும் மறுக்காது ஏற்று நின்றவள், இன்று கூறுகிறாள். அவளின் வலியின் அளவை உணர்ந்தவனுக்கு மனம் கனத்துப் போனது.

“இப்போ உன்னை யாரு தப்பு சொன்னாங்க” என்று அவளின் முகத்தை அழுத்தமாகத் துடைத்த புவித், “இதிலிருந்து நீ வெளிய வரவே மாட்டியாடி?” எனக் கேட்டான்.

“முடியலையே” என்றவள், “உங்களுக்கும் என்னை பிடிக்காம போகுதுல… எனக்குத் தெரியும்” என்றாள். சிறு வயதில் அவனிடம் எதும் கேட்டும் நிற்கும் பாவம் அவளிடத்தில்.

“என்னை நீயும் வெறுத்திடமாட்டல மாமா” என்றவளை மார்போடு சேர்த்து அணைத்திருந்தான்.

அவனுக்கும் கண்கள் கலங்கிவிட்டிருந்தது. அவர்களது பழைய நெருக்கத்தின் நினைவில்.

பிடிக்கும் பிடிக்காது எனும் வார்த்தைகளுக்கு இடமின்றிய நேசம் அவர்களுடையது. ஆனால் இன்று அதில்… எதிர்பார்த்திராத பெரும் இடைவெளி. நிரப்பும் காதல் நிறையவே இருந்தும், விலகிச் செல்கிறாள். செல்பவளை விலகவிடாது இழுத்துப் பிடித்து தன்னுடன் நிறுத்தி வைக்கின்றான் புவித்.

நேர்ந்துவிட்ட நிகழ்வால் மொத்த தவறும் அவள் பக்கம் நின்றிட, அவளாகவே குடும்பத்தினர் அனைவரிடமுமிருந்து தள்ளி நின்றுகொண்டாள்.

மீண்டும் மீண்டும் பேச்சினால் வதைபட முடியாது எனும் பயத்தால்… அரவணைக்க அத்தனை உறவுகள் இருந்தும், தனித்து நிற்க பழகிவிட்டவளை தன்னுடன் வலிய சேர்த்து வைத்திருக்கின்றான் அவளவன்.

“உன்னை மட்டுந்தான்டி பிடிக்கும். பிடிக்குது” என்றவன், அவளை மாற்றும் பொருட்டு, “உனக்குத்தான் என்னை பிடிக்கல. அதான் என்கிட்ட சரியா பேசுறது கூட இல்லை” என்றான். உம்மென்ற முகத்துடன்.

அவனது வார்த்தையில் பட்டென்று தன்னிலை மீண்டிருந்தாள் அகனிகா.

அவனிலிருந்து பிரிந்து தள்ளி அமர்ந்தாள்.

“தெளிஞ்சாச்சுப் போல” என்ற புவித், “உனக்குள்ளேயே அப்பப்போ ஏன் உடைஞ்சுப்போற கனி?” எனக் கேட்டான்.

“அப்படிலாம் எதுவுமில்லை” என்றவள், அங்கிருந்து எழ, அவளின் கையை பிடித்து அமர்த்தினான்.

“இன்னும் உன் தேடுதல் முடியலையா?” எனக் கேட்டான்.

புவித்தின் கேள்வியில் அகனிகாவின் கண்கள் அலைப்புற்றன. மெல்லிய பதற்றம் அவளிடம்.

“நான் என்ன தேடுறேன்? எதுவுமில்லையே” என்று தடுமாறிக் கூறியவள், “நீங்களே எதுவும் நினைக்காதீங்க” என்றாள்.

“ஆஹான்… அப்படியா? அப்போ நானா தான் நீ அந்த ரெண்டு பேரையும் தேடுறதுக்காகத்தான் போலீஸ் வேலையில சேர்ந்தன்னு தப்பா நினைச்சிட்டு இருக்கேனா?” என்றவன், அவளின் விழிகள் அதிர்வை பிரதிபலிக்கவும்,

“அப்படி இல்லைன்னா ஓகே தான். குட். நீ போ” என்றான்.

“மாமா…”

“அதான் இல்லைன்னு சொல்லிட்டியே கனி. போ, உனக்கு நிறைய வேலை இருக்கும். கொலை வேற நடந்திருக்கு. இன்வெஸ்டிகேட் பண்ணனும்” என்றான்.

அகனிகா அசையாது நிற்க,

“எனக்கு உன்னைத்தான்டி அதிகம் தெரியும்” என்றான்.

“எனக்கு என்ன பண்ணனும் தெரியலையே மாமா! அவனுங்க இல்லாம போனா தான் என் மனசு அமைதியாகுமோ என்னவோ” என்றவள் அவளது வண்டியில் ஏற முயல,

“மொபைல்” என்றான் புவித்.

“ஹான்…”

“என்னோடது.”

தன்னுடைய பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்து அவன் முன் அகா நீட்ட, மிதுனின் தகவல் திரையில் விழுந்து ஒளிர்ந்தது.

மிதுன் என்ற பெயரில் நிலைத்த அகனிகாவின் பார்வை, அப்பெயருக்கு கீழ் மிளிர்ந்த வாசகத்திலும் படிந்திருந்தால், அவளின் போராட்டம் முடிவுக்கு வந்திருக்குமோ?

அலைபேசியை வாங்கிய புவித், மிதுன் அனுப்பிய தகவலைப் படித்துக்கொண்டே,

“என் மச்சான்கிட்ட மேடம் எப்போ பேசப்போறீங்க?” எனக் கேட்டான்.

“பேசாம இருக்கிறது அவங்கதான்” என்றவள், அடுத்தநொடி, மின்னலென வண்டியில் ஏறி சென்றிருந்தாள்.

அவளது வாகனம் கண்ணைவிட்டு மறைந்ததும் மிதுனுக்கு அழைத்த புவித்,

“என்னா டைமிங்டா மச்சான் உன்னோடது” என்றவனாக, “ஜஸ்ட் மிஸ்ட். நீ மெசேஜ் பண்ணப்போ மொபைல் உன் தங்கச்சி கையில் தான் இருந்தது” என்று பேசியவனாக தங்களது அலுவலகம் வந்து சேர்ந்தான்.
_________________________________

அகனிகா காவல்நிலையம் வந்து சேர, சுனில் அவளுக்கு அழைத்திருந்தான்.

“யாப் சுனில்…”

…….

“வாட்?”

“எஸ் மேம்… சேம் பாக்ஸ். பெஞ்சமின் சார் பிக் காட்டினாங்க. அந்த பாக்ஸ்லையும் எதுவுமில்லை. டூ அட்ரஸ் மட்டும் தான் பின் பண்ணிருக்கு” என்றான்.

“பெஞ்சமின் எங்க?”

“ஸ்பாட்ல கலெக்ட் பண்ண திங்க்ஸ் வாங்க இன்ஸ்பெக்டர் வந்திருக்கார். பேசிட்டு இருக்காங்க” என்றான்.

“ஓகே… நான் இப்போ அங்க வரேன்” என்றவள், அடுத்த கால் மணி நேரத்தில் தடவியலாளர் பெஞ்சமின் முன் அமர்ந்திருந்தாள்.

“இந்த கேஸ் உன்னை ரொம்பவே சுத்தலில் விடும் நினைக்கிறேன். சுனில் சொன்னான்” என்ற பெஞ்சமின், “இது சைக்கோ ஆர் சீரியல் கில்லிங்கா இருக்க வாய்ப்பிருக்கு. இடம் தான் வேற வேற, பட் கனெக்ட்டிங் அப்படின்னு பார்த்தா நிறைய மேட்ச் ஆகுது. ரெண்டு டெத்தும் நடந்த இடம் சிமிலர் தான், அவர் யாரு?” என யோசித்து, “ஹான் குணசீலன் ரைட்? அவர் இறந்தது ஸ்கூல். நான் பார்த்த கேஸ் கோச்சிங் சென்டர். தென் காலி அட்டை பாக்ஸ். கார்டியாக் அரெஸ்ட். ரெண்டு பேரும் டீச்சர், இதயம் செயலிழுப்பு வேணும்னா கோ இன்சிடன்டா இருக்கலாம். ஆனால், அந்த அட்டை பாக்ஸ் அண்ட் அந்த கோட் (quote)” என்று பெஞ்சமின் இழுத்து நிறுத்தினான்.

“என்ன கோட் அது?” அகனிகா புரியாது வினவினாள்.

“யூர் டெத் இஸ் அ லெஸன் ஃபார் யூ (Your death is a lesson for you.)” என்ற பெஞ்சமின், “நீ கவனிக்கலையா?” எனக் கேட்டான்.

அவள் சுனிலை ஏறிட்டாள்.

“அப்படி அந்த பாக்ஸில் எதும் இல்லை மேம்” என்றவன், தான் புகைப்படம் எடுத்திருந்ததை ஆராய்ந்தான்.

பெஞ்சமின் தான் ஆராய்ந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அட்டை பெட்டியின் புகைப்படத்தை அகாவிடம் காட்டினான். இதே பாக்ஸ் தானே குணசீலன் டெத் பிளேசிலும் இருந்ததுன்னு சுனில் காட்டினான்?” என்றான்.

“எஸ்… சேம் ஒன்” என்றவள், “பட் கோட் எதுவும் இல்லையே” என்றாள்.

“கோட்… பாக்ஸில் தனியா எழுதி வைக்கல அகா, டூ அட்ரஸ் எழுதி பேஸ்ட் பண்ணியிருந்த பேப்பர் பின்னாடி எழுதியிருந்தது” என்ற பெஞ்சமின், “இந்த பாக்ஸ் பாரு, இதில் அப்படி என்ன வைக்க முடியும்? மிஞ்சிப்போனா டென் இஞ்ச் அளவுள்ள திங்ஸ் எதுவும் வைக்கலாம். ஒரு உயிரை எடுக்கிற அளவுக்கு அப்படியென்ன திங்க் அதுன்னு தெரியல. அதைவிட, இந்த பாக்ஸ் லிட் பாரு, பாட்டம் அட்டையா இருந்தாலும் மூடி டிரான்ஸ்பரன்ட்டா இருக்கு. அதாவது உள்ள இருக்கிறது வெளியில் தெரியிர மாதிரி. அதனால தான் மூடி மேல அட்ரஸ் இன்னொரு சீட்டில் எழுதி ஒட்டினாலும், பின்னாடி எழுதியிருக்க கோட் மூடியை திறந்தா நல்லாவே தெரியுது” என்றான்.

“புரியுது பெஞ்சமின். பட் மார்னிங் எங்களுக்கு கிடைச்ச பாக்ஸில் அந்த மாதிரி எதுவும் இல்லையே… ஆனாலும், ரெண்டு டெத்தும் நேச்சுரல் கிடையாது கொலைதான் அப்படிங்கிறதுக்கு இந்த பாக்ஸ் மட்டுமே போதும்” என்றாள்.

“போதும் தான்… ஆனால் சரியான ஆதாரம் இல்லாம கன்பார்ம் பண்ண முடியாது” என்ற பெஞ்சமின், “உன் கண்ட்ரோல் ஏரியா தான். உன்கிட்ட தான் சார்ஜ்ஷீட் ஃபைல் ஆகும்” என்றான்.

“அவர் பெயர் என்ன?”

“நந்தகோபாலன். தர்ட்டி டூ ஏஜ் தான். அவருக்கு எப்படி நேர்வோஜெனிக் கார்டியாக் அரெஸ்ட்ன்னு தான் எனக்கு புரியல” என்றான்.

“அவர்கிட்டேர்ந்து மொபைல் எடுத்தீங்களா?”

“ம்ம்… இதோ இருக்கே” என்ற சுனில் நந்தகோபாலன் மற்றும் குணசீலன் இருவரின் அலைபேசியையும் மேசையின் மீது வைத்தான்.

“இதுல எதாவது லீட் கிடைக்குதா பாருங்க பெஞ்சமின். ஐ மீன், இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எதுவும் கனெக்ட் இருக்கா செக் பண்ணுங்க. இதுல யூசர்ஸ் தவிர்த்து வேற யாரோடதும் ஃபிங்கர் மார்க் இருக்கா பாருங்க. நான் அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கிட்ட சுகனை விசாரிக்க சொல்லியிருக்கேன். அவன் வந்து சொல்றது வச்சு அடுத்து என்ன பண்ணலாம் யோசிப்போம்” என்றவள், “நீங்க ஒருமுறை குணசீலன் டெத் பிளேஸ் சர்ச் பண்ணிப் பாருங்க” என்றாள்.

“ஷ்யூர்” என்ற பெஞ்சமின், “ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத அகா” என்றான் அவளின் உடல் நலனில் அக்கறை கொண்டவனாக.

அதில் அகா கண்ணுக்குத் தெரியாத சிரிப்பினை உதிர்க்க,

“உனக்காக சொல்லல. என் ஃப்ரெண்ட்காக சொல்றேன்” என்றான்.

“என்னோட ஜாப் ரிலேட்டட் இடம் எல்லாத்துலையும் அவங்க ஃப்ரெண்ட்டாவே எல்லாரும் இருந்துட்டு, என்னை போலீசாவே பார்க்க மாட்டேங்கிறீங்க” என்று பொய்யாகக் குறைபாட்டாள்.

மென்மையாகப் புன்னகைத்த பெஞ்சமின்,

“ஆருஷ் மட்டுமில்ல… நாங்களுமே பழைய அகாவை ரொம்பவே மிஸ் பண்றோம்” என்றான்.

சட்டென்று அவளிடம் விறைப்புத் தன்மை. முகம் கடினம் கொள்ள…

“வரேன்” என்று வெளியேறியவள் தன்னுடைய அலைபேசி தாங்கி வந்த அழைப்பில் நெற்றிச் சுருக்கம் கொண்டாள்.

புருவச் சுளிப்போடு அழைப்பை ஏற்றிருந்தாள்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
19
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்