Loading

அத்தியாயம் 4

பள்ளி நுழைவிலிருந்து ஒவ்வொரு இடத்தையும் பார்வையால் அளந்தபடி அகனிகா, சுகனுடன் நடந்து சென்றாள்.

“ஸ்கூல் நல்ல ஸ்பேஷியஸா இருக்கு மேம்…” என்ற சுகன், “அந்த லாஸ்ட் பில்டிங்” என்று கைக்காட்டினான்.

“ஸ்கூல் லீவ் விட்டாச்சா?” அகனிகா ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக மரத்தடியில், வகுப்பு முன் வராண்டாவில் நின்று கொண்டிருந்த மாணவர்களை பார்த்தபடி வினவினாள்.

“ஆனுவல் டே மேம்… அந்த பில்டிங் மட்டும் ப்ளாக் பண்ணியாச்சு” என்ற சுகன், “மர்டரா இருக்க சான்ஸ் இல்லை மேம்” என்றான்.

ஒரு நொடி நடையை நிறுத்தி சுகனை ஏறிட்ட அகனிகா எதுவும் சொல்லாது நடையை எட்டி வைத்தாள்.

பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவியாளர், இன்னும் பிற ஆசிரியர்கள் மற்றும் இரு டாணாக்காரர்கள் அந்த வகுப்பின் முன் நின்றிருந்தனர்.

அகனிகாவை பார்த்ததும் தலைமை ஆசிரியர் ராஜசேகர் அருகில் வந்து நிலைமையை சுமூகமாக முடித்து தருமாறு பேசிட, அவள் அவரை கண்டுகொள்ளவே இல்லை.

இருக்கையில் அமர்ந்த நிலையில் இறந்திருந்தார் குணசீலன். வயது ஐம்பது இருக்கலாம். நல்ல ஆரோக்கியமானத் தோற்றம். மேசையில் இரு கரமும் நீண்டிருக்க, அவரின் கையில் அலைபேசி இருந்தது. மேசை மீது இரண்டு கரங்களையும் வைத்து, அலைபேசியை பிடித்து அதனை பார்த்தவாறு அமர்ந்திருக்கும் நிலை.

வகுப்பறையின் வாயிலில் நின்றபடியே அவரின் இறப்பு எவ்வாறானதென அவதானித்துக் கொண்டிருந்தாள் அகனிகா.

“ஃபாரன்சிக் ஏன் இன்னும் வரல?” என அவள் கேட்ட நொடி, அங்கே தடவியலாளர் துறையைச் சேர்ந்த பெஞ்சமினின் உதவியாளர் சுனில் வேகமாக வந்தார்.

“பெஞ்சமின் எங்க?”, அகனிகா.

“அவர் இன்னொரு லொகேஷன் போயிருக்கார் மேம்” என்ற சுனில் தன்னுடைய வேலையைத் துவங்கியிருந்தார்.

“ஸ்கூல் எத்தனை மணிக்கு?” அங்கு நின்றுகொண்டிருந்த உதவியாளரிடம் தனது விசாரணையை ஆரம்பித்திருந்தாள்.

“பத்து, பண்ணெண்டு பிள்ளைங்களுக்கு எட்டு பத்துக்கு ஸ்பெஷல் வகுப்பு ஆரம்பமாகிடும் மேடம். பிரேயர் எட்டு ஐம்பதுக்கு. ஒன்பது பத்துக்குலாம் பாடம் ஆரம்பிச்சிடும் மேடம்” என்றார்.

“இவர் எத்தனை மணிக்கு ஸ்கூல் வந்தார்?” இறந்திருந்த உடலைப் பார்த்துக் கேட்டாள்.

“அது…” என்று அவன் தெரியாத பாவனைக்காட்டி, அருகில் நின்றிருந்த வாயிற் காவலாளியை பார்த்தான்.

“இன்னைக்கு பண்ணெண்டாவது பசங்களுக்கு அவரோட சிறப்பு வகுப்புங்க. ஏழு முப்பதுக்கு வந்துட்டாருங்க” என்று வேகமாகக் கூறினான் காவலாளி. அவனிடம் சிறு கள்ளத்தனம்.

மனதில் குறித்துக் கொண்டவளாக,

“எயிட் டென்க்கு கிளாஸ். அவரெதுக்கு அவ்ளோ ஏர்லியா வரணும்? எப்பவும் இப்படித்தான் வருவாரா?” என்றவளின் பார்வை அங்கு நின்றிருந்த ஒவ்வொருவரையும் எடைப்போட்டது.

“இன்னைக்கு பள்ளி ஆண்டுவிழா. அப்புறம் எதுக்கு ஸ்பெஷல் கிளாஸ் வச்சிருக்கீங்க?” எனக் கேட்டாள். தலைமை ஆசிரியரைப் பார்த்து.

“அவர் எப்பவும் இப்படித்தான் மேம்… பள்ளியில் எதும் ஃபங்ஷன் அப்படின்னாலும் அவரோட வகுப்பை விட்டுக் கொடுக்கமாட்டார். முடிச்சிட்டு அனுப்பி வைக்கிறேன் சொல்வார். அதுவுமில்லாம பிளஸ் டூ பசங்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிடுச்சே… சோ, அவங்க பார்ட்டிசிபேஷன் கிடையாது. விழா பார்க்க மட்டும் தான் அனுமதி” என்று பெரியதாய் விளக்கம் கொடுத்த தலைமை ஆசிரியர், “இவரோட க்ளாஸ் ஸ்டூடண்ட்ஸ் எங்க? யார் ஃபர்ஸ்ட் பார்த்தது?” என்று வினவினாள்.

கேள்விகள் கேட்டாலும் நடந்தபடி ஒவ்வொருவரையும் கூர்ப்பார்வையால் அலசிக் கொண்டிருந்தாள்.

தலைமை ஆசிரியர் கண்காட்டிட, உதவியாளர் சென்று அங்கிருந்து சற்று தள்ளியிருந்த மரத்தடியில் நின்றிருந்த ஒரு மாணவனை கையோடு அழைத்துவர, அவருக்குப் பின்னால் அவ்வகுப்பு மற்ற மாணவர்களும் வந்தனர்.

“இந்தப் பையன் தான் மேடம் பர்ஸ்ட் பார்த்தது” என்று கூறிட…

“உன் பெயர் என்னப்பா?” எனக் கேட்டாள் அகனிகா.

“ராக்கி மேம்” என்ற சிறுவன் உடல்மொழியில் பயம்.

“பயப்படமா உங்களுக்குத் தெரிஞ்சதை சொல்லுங்க” என்ற அகனிகா, “நீங்க வரும்போதே அவர் இறந்திருந்தாரா?” எனக் கேட்டாள்.

“எப்பவுமே மார்னிங் ஸ்பெஷல் கிளாஸ் இருக்கும்போது எங்களுக்கு முன்னவே வந்திடுவார் மேம். நான் கிளாஸ் மானிட்டருங்கிறதால ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் வரதுக்கு முன்ன வந்து, ரிஜிஸ்டர் எடுத்து வரது, போர்ட் க்ளீன் பண்ணி சாக் எடுத்து வைக்கிறது எல்லாம் செய்வேன் மேம்” என்ற ராக்கி, “சார் ரொம்பவே ஸ்ட்ரிக்ட் மேம், நான் உள்ள வரும்போதும் இப்படித்தான் இருந்தாரு. அவர்கிட்ட போகவே பயப்படுவோம் மேம். அதனால விஷ் பண்ணிட்டு, அவர் கையில மொபைல் இருந்ததால, அதுல எதோ பார்த்திட்டு இருக்காருன்னு என் வேலையெல்லாம் முடிச்சிட்டு உட்கார்ந்தேன். என் ஃபிரண்ட் டில்லி வந்தான் மேம். அவன் தான் சார் முகமே சரியில்லைன்னு கிட்ட போய் பார்த்திட்டு கத்தினான்” என்றான்.

“ம்ம்…” என்ற அகனிகா, “ஸ்ட்ரிக்ட் அப்படின்னா எந்தளவுக்கு?” என்றவள், தான் காவலாளியிடம் விசாரித்துக் கொண்டிருக்கும்போது வந்து சேர்ந்த மருத்துவர் நிரூப் “அகா” என அழைத்ததில் அவன் அருகில் சென்றாள்.

“இவர் செத்து பனிரெண்டு மணி நேரத்துக்கு மேல இருக்கும்” என்றான்.

“வாட்?”

அங்கிருந்து பள்ளி பணியாளர்கள் அனைவரையும் பார்வையால் சுட்டெரித்தவளாக தனது நொடி நேர அதிர்வை சட்டென்று மறைத்திருந்தாள்.

“எஸ். பாடி டெம்ப் வச்சு அவர் நைட்டே இறந்திருக்கணும். அட்டாப்சியில் க்ளியர் டைம் எக்ஸாமின் பண்ணிடலாம்” என்ற நிரூப், “கார்டியாக் அரெஸ்ட் மாதிரி தான் தெரியுது” என்றான்.

“ஸ்பெசிபிக்கா சொல்ல எதுவுமில்ல மேம். தேர் இஸ் நத்திங் ஸ்ட்ரேஞ் திங்க்” என்ற சுனில், “அவருக்கு கீழ ஒரு அட்டைபெட்டி மட்டும் இருக்கு. அவருக்கு எதோ பார்சல் வந்திருக்கும்போல. அதுல என்ன வந்ததுன்னு தெரியல. ஃப்ரம் அட்ரஸ் இல்லை” என்றான்.

“ஓகே” என்றவள், தன்னருகில் நின்றிருந்த ராக்கியை, “நீங்க போங்க” என்று சொல்ல, அவனோ தயங்கி நின்று, “சார் நேத்து போட்டிருந்த ட்ரெஸ்சே போட்டிருக்கார் மேம். நைட்டு வீட்டுக்கு போகல நினைக்கிறேன்” என்றான்.

நிரூப் அவர் இறந்த நேரத்தைக் குறிப்பிடவுமே அவர் இரவு வீட்டிற்கு செல்லவில்லை என்பதை அகனிகா யூகித்துவிட்டாள்.

“இவரோட வீடு எங்கயிருக்கு. இன்னும் இவர் வீட்டிலிருந்து ஏன் யாரும் வரல?” எனக் கேட்ட அகனிகாவின் உள் பல கேள்விகள் சுழலத் துவங்கின.

“பக்கத்து ஏரியா தான் மேம். இவர் மட்டும் தான் தனியா இருக்கார். ரிலேட்டிவ்…” என தலைமையாசிரியர் தெரியாது என்பதைப்போன்று மற்ற ஆசிரியர்களைப் பார்த்தார்.

“அவருக்கு குடும்பம் இல்லை மேம். இங்க எங்ககிட்டையும் யாரோடவும் ஒட்டுதல் இல்லை. அவர் இங்க டிரான்ஸ்ஃபரில் வந்து ஆறு மாசம் தான் ஆகுது” என்று ஒரு ஆசிரியர் முன் வந்து சொல்ல,

“இவரோட பேமிலி டீடெயில் என்னன்னு விசாரிங்க” என்று சுகனிடம் கூறினாள்.

வாயிற் காவலாளியை அருகில் அழைத்தவள்,

“அவர் மார்னிங் ஸ்கூல் வந்ததை நீங்க பார்த்தீங்களா?” எனக் கேட்டாள். மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவள் கேட்ட தோரணை அவரை நடுங்க வைத்தது.

“அது… மேம்…” அவர் தயக்கத்தோடு இழுத்திட…

“எனக்கு பதில் வேணும் மிஸ்டர்” என்றவள் தலைமையாசிரியரை பார்க்க, அவரும் பதற்றத்துடன் அருகில் வந்து, “குமார் சொல்லுங்க… என்ன தயங்குறீங்க?” என்றார்.

“நைட்டு அவரை கிளாசிலே வச்சு பூட்டிட்டேன் சார். காலையில வந்து திறக்கும் போது தான் பார்த்தேன். அவர் என்னைப் பார்த்தா நைட்டு உள்ள வச்சு பூட்டிட்டு போனதை கேட்டு திட்டுவாருன்னு பயந்து, போன் பார்த்திட்டு இருக்காருன்னு சத்தமில்லாம போயிட்டேன் சார்” என்றார்.

“இடியட்” என்ற தலைமையாசிரியர், “எல்லாரும் போயிட்டாங்களா இல்லையான்னு பார்த்திட்டு லாக் பண்ண மாட்டீங்களா?” என்று அந்நபரைத் திட்டினார்.

“இதெல்லாம் அப்புறம் வச்சுக்கோங்க” என்ற அகனிகா, “என்ன நிரூப் மர்டர் அப்படின்னு டவுட் வர எதும் நோட் இருக்கா?” எனக் கேட்டாள்.

“பார்த்தா மர்டர் மாதிரி தெரியல அகா. நைட் முழுக்க தனியா இருந்ததால பயத்துல கார்டியாக் அரெஸ்ட் ஆகியிருக்கலாம்” என்ற நிரூப், “அட்டாப்சியில் எல்லாம் சொல்லிடறேன்” என்றான்.

“ஓகே” என்றவள், “பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள். அவ்வகுப்பைத் தாண்டி இரண்டடி சென்றிருப்பாள், சென்ற வேகத்தில் மீண்டும் வந்து, “கார்டியாக் அரெஸ்ட் அப்படின்னா, அவர் அந்த நேரம் பெயின் ஃபீல் பண்ணியிருப்பார்ல?” என நிரூப்பிடம் கேட்க, அவனும் ஆமென்றான்.

“அப்போ எப்படி இந்த பொசிஷன். நம்ம உடம்புல ஒரு இடத்தில் பெயின் வருதுன்னா, அங்க தானா நம்ம கை போகும்ல… இல்லையா இந்த டேபிள் மேலயே தலை வச்சி சாய்ஞ்சிருக்கலாம். இப்படி எப்படி சிலை மாதிரி உட்கார்ந்திருக்கு முடியும்? வாய்ப்பிருக்கா?” எனக் கேட்டாள்.

“ஃபிரீஸ் அரெஸ்ட்டா இருக்கலாம். மே பீ, வலி வந்ததும் யாருக்கும் கால் பண்ண ட்ரை பண்ணியிருக்கலாம். அப்படியே உயிர் போயிருக்கலாம்” என்று நிரூப் சொல்ல, “அப்போ ரூம் லாக் ஆனதுமே அவர் யாருக்கும் கால் பண்ணியிருக்கலாமே?” என்றாள்.

அவளையே பார்த்த நிரூப், “இதை நீதான் கண்டுபிடிக்கணும் அகா” என்றான்.

“அப்போ இது மர்டர் தானில்லையா?”

“மே பீ” என்ற நிரூப் தன்னுடைய மருத்துவ ஆட்களுக்கு கண்காட்டிட, அவர்கள் குணசீலனின் உடலை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து மருத்துவமனை கொண்டுச்சென்றனர்

“ஸ்கூல் முழுக்க சிசிடிவி இருக்குல?” வரும்பொழுதே கவனித்திருந்தாள்.

“இருக்கு மேம்” என்ற தலைமையாசிரியர், “இன்னைக்கு விழா நடத்த முடியாதா மேம்?” எனக் கேட்டார்.

அவரை புருவங்கள் இடுங்க பார்த்த அகனிகா, “உங்க ஸ்கூல் ஸ்டாஃப் தான இவரு. அதுக்கான வருத்தம் கொஞ்சமும் இல்லாம ஃபங்ஷன் பத்தி கேட்கிறீங்க?”என்றாள். 

“ஃபங்ஷனுக்கு எம்.எல்.ஏ வரார் மேம்” என்று அவர் சொல்ல,

“இங்க ஒரு கொலை நடந்திருக்குன்னு சொல்லுங்க. அவரோட அல்லக்கைக்கூட எவனும் வரமாட்டான்” என்றவள், “எதுவும் கிடைக்கலையா சுனில்?” என்றாள்.

“எத்தனைமுறை பார்த்தாலும் எம்டி(empty) தான் மேம்” என்றவன், “ரூம் லாக் பண்ணி சீல் வச்சிடலாம் மேம். மே பீ சயின்ஸ் யூஸ் பண்ணி கொலை பண்ணியிருந்தா, லேட்டா எதுவும் தடயம் கிடைக்கலாம்” என்றான்.

“ஹ்ம்ம்” என்றவள் தலையசைக்க, “பெஞ்சமின் சார் எதுக்கும் ஒருமுறை இந்த இடத்தை எக்ஸாமின் பண்ண சொல்லலாம்” என்றான் சுனில்.

“உங்க மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?” என்று புருவம் உயர்த்தி வினவியவள், “எதும் சந்தேகப்படுறீங்களா சுனில்?” எனக் கேட்டாள்.

“இந்த அட்டை பாக்ஸ்” என்ற சுனில், “டூ அட்ரஸ்சில் அவரோட முழு விவரமும் பக்காவா இருக்கு… ஈவன் அவரோட கிளாஸ் கூட மென்ஷன் ஆகியிருக்கு. இது வேற யார் கைக்கும் போயிடக்கூடாதுங்கிறதுல செண்டர் அவ்ளோ கவனம் வச்சிருந்திருக்காங்க” என்றான்.

“என்ன சொல்லவரீங்க சுனில்?”

“பாக்ஸ் இருக்கு… பட் இதுக்குள்ள என்ன இருந்ததுன்னு தெரியலையே. அவர்கிட்டவும் எதுவும் இருக்க மாதிரி தெரியல. இதுல என்ன இருந்ததுன்னு தெரிஞ்சா ஏதும் பிரிடடிக்ட் பண்ண முடியலாம்” என்றான்.

“ஹ்ம்ம்” என்ற அகனிகாவின் முகம் தீவிரம் காட்டியது. சுனில் கையிலிருந்த அட்டை பெட்டியை வாங்கியவள், அப்படி இப்படியெனத் திருப்பிப் பார்த்தாள்.

“மர்டர் அப்படிங்கிறதுக்கு எந்தவொரு தடயமும் இல்லையே மேம். அப்புறம் ஏன் இவ்வளவு ரிசர்ச் பண்றீங்க. ஹார்ட் அட்டாக்ன்னு முடிச்சிடலாமே” என்று அருகில் வந்து கூறிய தலைமையாசிரியர் ராஜசேகரை தீயாக முறைத்தாள் அகனிகா.

அதில் அரண்டு அவர் இரண்டடி பின் வைத்திட…

“வந்ததிலிருந்து நானும் பாக்கிறேன்… உங்க ஆக்ஷன்ஸ் எல்லாம் தப்பா இருக்கு. நீங்க தான் இவரை கொலை பண்ணதா?” என்று அவள் நேரடியாகக் கேட்டதில், அவர் நெஞ்சில் கை வைத்து தன்னுடைய அதிர்ச்சியைக் காட்டினார்.

“மேம்…?”

“பின்ன என்ன சார்… அந்தாளு செத்துட்டாருன்னு நீங்க யாரும் கவலைப்பட்ட மாதிரியே தெரியலையே. ரொம்ப நெருக்கம் வேணாம் சார்… அட்லீஸ்ட் கூட வொர்க் பண்ண ஆளுங்கிற சின்ன வருத்தம் கூட யார் முகத்துலயும் தெரியலையே” என்றாள்.

“கொலைன்னா ஸ்கூல் பேர் அடிபடுமேன்னு நினைச்சேன் மேம். மத்தபடி ஒண்ணுமில்லை” என்ற தலைமையாசிரியர், “இப்போ நாங்க என்ன பண்ணும் மேம்?” எனக் கேட்டார்.

“இந்த சிட்டுவேஷனில் ஃபங்ஷன் பண்ணீங்ககன்னா வர கூட்டமெல்லாம் ஸ்டேஜ் பார்க்காம இங்க தான் விசிட் பண்ணுவாங்க. சோ, கேன்சல் தட்.”

“ஓகே மேம்…”

“இந்த ரூம் லாக் பண்ணுங்க. இந்த பில்டிங் சரவுண்டிங் முழுக்க எங்க கண்ட்ரோல். உண்மை என்னன்னு தெரியுற வரை யாரும் இந்த சைட் வரக்கூடாது. முக்கியமா ஸ்டூடண்ட்ஸ்” என்றவள், “டீச்சர்ஸ் எல்லாரையும் தனித்தனியா விசாரணை பண்ணுங்க சுகன்” எனக்கூறி வெளியேறினாள்.

“ஆனுவல் டே நடக்காது போல…” ஒரு மாணவி தன்னுடைய தோழியிடம் வருத்தமாகக் கூறுவது, அவ்வழியே கடந்து சென்ற அகனிகாவின் காதில் விழுந்தது.

“இந்தாளுக்கு செத்தும் நம்ம சந்தோஷமா இருக்கிறது பிடிக்கல” என்று அவர்களின் அருகில் நின்றிருந்த மற்றொரு மாணவன் பதில் கொடுக்க, நடையின் வேகத்தை சட்டென்று நிறுத்தி அம்மாணவியர் இருவரும் யாரென்று பார்த்த அகனிகா… பெரும் யோசனையோடு அங்கிருந்து சென்றிருந்தாள்.

அவள் செல்லும் முன்னர் தனது காவல் நிலையத்திலிருந்து இரு பெண் காவலர்களை வரவழைத்து, பெண் மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியரை தனியாக விசாரிக்குமாறு உத்தரவிட்டிருந்தாள்.

இங்கு நடந்த ஒரு உயிரின் இழப்பு கொலையா அல்லது இயற்கையான மரணமா என்று கணிக்க முடியாதிருக்க, மற்றொரு இடத்தில் இறந்து போன வேறொரு ஆசிரியரின் மரணம் அகனிகாவின் மூளையை மேலும் குழப்பியடித்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
16
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்