அத்தியாயம் 22
நள்ளிரவுக்கு மேல் அகனிகா கண்களைத் திறந்தாள்.
முதலில் தான் எங்கிருக்கிறோம் என்பதை பார்வையை சுழற்றி அவதானித்தவள், தனக்கு அருகில் நாற்காலியில் அமர்ந்தபடி வெளி வாயிலையே பார்த்தவாறு இருந்த சந்தியாவை நோக்கி நடுங்கியபடி கரம் நீட்டினாள்.
“அம்மா…”
சத்தமின்றி ஒலித்தக் குரலில் திரும்பி மகளை ஏறிட்ட சந்தியா முதலில் கேட்டது,
“நீனா எங்க அகா?” என்றுதான்.
வேகமாக முன் நிகழ்வுகள் மண்டைக்குள் சுளீரென்றுத் தாக்கிட…
“அம்மா நீனா…” எனது கதறி வெடித்து அழுத அகனிகா தலையில் தெறித்த வலியை இரு கரம் கொண்டு அழுத்திப் பிடித்தவளாக படுக்கையைவிட்டு இறங்கிட முயன்றாள்.
“உன்னால இப்போ ஒழுங்கா நடக்க முடியாது அகா. ட்ரிப்ஸ் ஏறிட்டு இருக்கு” என்று சந்தியா அவளைத் தடுத்து நிறுத்தப் பார்த்தார். அவை யாவும் அகனிகாவின் திமிரளில் பலனற்றுப் போனது.
கையில் சொருங்கியிருந்த வெயினை பிய்த்தவள், அவ்விடத்தில் ரத்தம் வருவதையும் பொருட்படுத்தாது, தடுக்க வந்த செவிலியரையும் தள்ளிவிட்டு மருத்துவமனை ஆடையோடு அறையைவிட்டு வெளியில் வந்தாள்.
இரவு நேரத்தில் மருத்துவமனையே அரவமின்றி இருக்க தன்னைப் பிடிக்க வந்த யாரையும் பொருதட்டாகக்கூட கருதாது முயன்று வரவழைத்த பலம் கொண்டு தாக்கி மருத்துவமனையிலிருந்து வெளியேறியிருந்தாள்.
அவளுக்கு பின்னால் ஓடிவந்த சந்தியாவுக்கு, இந்தநிலையில் இவளுக்கு எப்படி இவ்வளவு ‘பலம்’ என்று ஆச்சரியமாக இருந்தது.
ஐந்தாறு மணிநேரமாக நீனா மற்றும் மிதுனை காணாது மொத்த குடும்பமும் அவர்களைத் தேடிக்கொண்டிருக்க, அகாவுடன் சந்தியா மட்டும் மருத்துவமனையிலிருந்தார்.
சாலையில் நின்று ஆட்டோவிற்கு கையைக் காட்டிக்கொண்டிருந்த அகாவின் அருகில் சென்ற சந்தியா,
“என்னாச்சு அகா. ஏன் இப்படி பிகேவ் பண்ற?” என்று அவளின் கையை பிடித்தார்.
சாலையென்றும் பாராது, மண்டியிட்டு அமர்ந்த அகனிகா, இரு கைகளாலும் முகத்தை மூடி,
“அய்யோ அம்மா… ” என்று வெடித்துக் கதறினாள்.
மகளின் அழுகையில் என்ன கண்டாரோ, அவளை அணைத்துப் பிடித்த சந்தியா,
“என்னாச்சு அகா. எனக்கு பயமா இருக்குடி” என்று தழுதழுத்தார்.
“எனக்கும் என்னாச்சு தெரியலம்மா. நீனாவுக்கு ஏதோ ஆச்சும்மா” என்று அடி வயிற்றிலிருந்து அழுகை பிரிவாகமெடுக்க கதறித் துடித்தாள்.
“நான் கேட்ட விஷயம்” என்று கண்களைத் துடைத்தவள், “நீனா… நீனா… வீட்டுக்கு வரலயாம்மா?” என்று தெம்பியபடி வினவினாள்.
“வந்திருப்பா… வந்திருப்பாடா. அவளைத்தேடித்தான் உன் மாமா, அப்பா எல்லாரும் போனாங்க. வந்திருப்பா.” மகள் அழும் நிலை காண முடியாது தேற்றினார்.
என்னவோ விபரீதமாக அரங்கேறியிருக்கிறது என்று மட்டும் அவருக்குப் புரிந்தது.
“வீட்டுக்கு போலாம்மா. எனக்கு நீனாவை பார்க்கணும்.”
“போலாம்… போலாம் அகா. நீ அழறதை நிறுத்து” என்றவர், அப்போதே ஆட்டோ பிடித்து வீட்டிற்கு அழைத்து வந்தார்.
முன் அதிகாலை மூன்று மணியளவிலும் வீட்டில் யாரும் உறங்காது வெளிவாயிலில் தோட்டத்தில் கேட்டிற்கு உள்ளே ஆங்காங்கே அமர்ந்திருந்தனர்.
கேட் திறக்கும் சத்தத்தில் அனைவரும் நீனாவைத்தான் அழைத்து வந்துவிட்டதாக ஆர்வமாக நோக்க, அங்கு ஓய்ந்தத் தோற்றத்தில் மருத்துவமனை ஆடையுடன் வந்து நின்ற அகனிகாவை யாரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“என்ன இப்படியேவா வந்த நீ?” என்று பவானி கேட்க,
“நீனா பத்தி எதுவும் தெரிஞ்சுதா?” எனக் கேட்டார் சந்தியா.
“இல்லையே” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுகையோடு கூறிய அகிலா, “அவளை ஏன் இப்போ கூட்டிட்டு வந்த?” என்று அகாவைச் சுட்டிக்காட்டி சந்தியாவிடம் வினவினார் அகிலா.
“அவள் கண்ணு முழிச்சதும் நீனாவை கேட்டு ஆர்ப்பாட்டம் பண்ணிட்டா அண்ணி” என்று சந்தியா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வர்ஷினியின் கையிலிருந்த அலைபேசியைப் பறித்த அகனிகா, புவித்திற்கு அழைத்தாள்.
தலையில் போடப்பட்டிருந்த கட்டை அவ்வவ்போது அழுத்திக் கொடுத்தபடி இருந்தாள்.
“என்ன பண்ற அகா நீ” என்று அகிலா எழுந்து வந்து நிற்கவே தடுமாறுபவளைத் தாங்கிப் பிடித்து அமர வைத்தார்.
புவித் அழைப்பை ஏற்க,
“நீனா எங்கன்னு தெரிஞ்சுதா மாமா?” என முனகல் ஓசையில் கேட்டிருந்தாள்.
“கனி… நீ?” அவளெப்படி வர்ஷினி எண்ணிலிருந்தென்று புவித் யோசித்திட,
“டியூஷன்ல நல்லா பாருங்க” என்று வலியால் கண்களை இறுக மூடி அழுத்திக் கூறினாள்.
“அங்க பார்த்தாச்சு கனி. அவருக்கு நீனா பத்தி ஒண்ணுமே தெரியல. மிதுனும் எங்கன்னு தெரியல. நீனா இன்னைக்கு டியூஷனுக்கே வரலன்னு சொல்றார்” என்றான்.
“இப்போ நீங்க எங்க இருக்கீங்க?”
அவள் வலியைப் பொறுத்துக்கொண்டு பேசுவது, வார்த்தைகள் பற்களின் அழுத்தத்தில் வெளிவருவதில் அவனால் உணர முடிந்தது.
“என்ன பண்ற கனி? எதுக்கு இவ்வளவு ஸ்ட்ரெயின் பண்ற நீ? அண்ணிகிட்ட போனை குடி” என்று புவித் அதட்டுவதையெல்லாம் அகனிகா பொருட்படுத்தவே இல்லை.
“நான் சொல்றதை செய் மாமா நீ?” என கத்தலுடன் கூறியவள், “ட்யூஷனில் ஒரு இடம்விடாம தேடுங்க” என்றாள்.
“எல்லாம் தேடியாச்சு கனி. அங்க இல்லை. நீயேன் அங்கவே பார்க்க சொல்லிட்டு இருக்க கனி?” என்று அகாவின் பிடிவாதத்தில் பொறுமை இழந்திருந்தான் புவித்.
தங்கை காணவில்லை எனும் தவிப்பு ஒரு பக்கம். அவளைத் தேடிச்சென்ற மிதுன் என்னவானான் என்றே தெரியாத கவலை ஒரு பக்கம். கடந்த சில மணி நேரங்களாக நிற்காது ஓடிக் கொண்டிருக்கும் ஓட்டமென மிகுந்த அழுத்தத்தில் இருப்பவனுக்கு, அகனிகா முடியாத நிலையில் இத்தனை பிடிவாதம் பிடிப்பது எரிச்சலாக இருந்தது.
“அவளோட ஃப்ரெண்ட்ஸ் வீடு. ஸ்கூல், டியூஷன் எல்லாம் தேடியாச்சு கனி. யாருக்கும் ஒண்ணும் தெரியல. ஸ்கூல்விட்டு நீனா வெளியப்போறதை அவளோட ஃபிரண்ட்ஸ் பார்த்திருக்காங்க. அதுக்கு மேல ஒரு தகவலும் இல்லை. இனியும் பொறுமையா நாமளே தேடிட்டு இருக்க முடியாது. அப்பாவும் போலீஸ் ஸ்டேஷனில் கம்பளைய்ன்ட் கொடுக்கலாம் சொல்றார்” என்று முடிந்தளவுக்கு அவளுக்கு பொறுமையாக விளக்கிக் கூறினான்.
“அய்யோ மாமா ஏன் நான் சொல்றதை கேட்கமாட்டேங்கிறீங்க” என்று அழுகையோடு கேட்ட அகனிகா தன்னைச் சுற்றி நின்றிருந்த பெண்கள் நால்வரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மூச்சினை ஆழ்ந்து உள்ளிழுத்து…
“நீனா நமக்கு உயிரோடவாது வேணும் மாமா” என்றாள்.
அவளது அவ்வார்த்தைகளில் பெண்களுக்கு உயிரை யாரோ உருவியதுப் போலிருக்க, புவித் ஸ்தம்பித்துப்போனான்.
“என்ன சொல்ற கனி நீ?” வார்த்தை தடுமாறி வந்தது புவித்திடம்.
“ரங்கராஜன் நல்லவன் இல்லை மாமா” என்றவள் அலைபேசியை தவறவிட்டவளாக மடிந்து அமர்ந்து தரையை கைகளால் தட்டியபடி, “எல்லாம் தெரிஞ்சும் என் நீனாவை காப்பாத்த முடியாம இருக்கனே” என்று சிதறி துடித்து கண்ணீர் வடித்தாள்.
“எனக்கு உயிரே போற மாதிரி இருக்கே! எம் மகளுக்கு என்னாச்சு சொல்லு அகா” என்று கதறி அழுபவளை பிடித்து உலுக்கியவராக அகிலா கேட்க…
“அத்தை நான் போகணும்… நான் போகணும்” என்று கண்களைத் துடைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்ற அகனிகா அடுத்த இரண்டு நிமிடங்களில் ஆடை மாற்றி வந்தாள்.
வந்தவள் தன்னை கேள்வி சுமந்தபடி பார்த்திருந்த யாரையும் கருத்தில் கொள்ளாது, அங்கு நின்றிருந்த காரினை கிளப்பிக்கொண்டு சென்றிருந்தாள். செல்லும்போது வர்ஷினியின் அலைபேசியை கொண்டுச் சென்றாள்.
உடல் முழுவதுமாக முடியாத நிலையிலும் நீனாவிற்காக முயன்று தன்னை நிலைபடுத்தியிருந்தாள் அகனிகா.
மன உறுதிக்கு முன்னால் உடல் சோர்வு ஒன்றுமேயில்லை என்பதை உண்மையாக்கியிருந்தாள்.
செல்லும் வழியில் விதார்த்துக்கு அழைத்தவள்,
“நான் டியூஷனுக்கு போயிட்டு இருக்கேன் வந்துடுங்க” என்றவள், “போலீஸ் வேணாம். நீனா என்ன நிலையில் இருக்கான்னு தெரியாம அவங்களை அங்க வரவச்சா, அவளை காட்சிப்பொருளக்கிடுவாங்க” என்று வைத்திட்டாள்.
விதார்த்துடன் சிதம்பரமும், ராஜேந்திரனும் இருக்க, அகனிகா பேசிய வார்த்தைகளில் நீனாவிற்கு என்ன நடந்திருக்குமென்று யூகித்தவர்கள் கூடுவிட்டு ஆவி பிரிவதை உயிர் உடலில் ஒட்டியிருக்கும் கணத்திலும் உணர்ந்தினர்.
“அகா என்னப்பா சொல்றா?” என்ற சிதம்பரம், நீனாவின் வகுப்பு மாணவி வீட்டிற்கு விசாரிக்க வந்த இடத்தில் முடித்துக்கொண்டு வெளி வந்திருக்க, வாயிலில் தொய்ந்து சரிந்தார்.
“ஒண்ணும் இருக்காதுப்பா” என்று தந்தையை தூக்கி நிமிர்த்திய விதார்த்துக்கு கண்கள் நீரை சுரந்திருந்தது.
அதற்குள் ராஜேந்திரன் காரிலிருந்து தண்ணீர் பாட்டிலை கொண்டுவந்து கொடுத்து நீரைப் பருகச் செய்து அவரை தெளிய வைத்திட முயன்றார்.
அக்கணம் புவித்திடமிருந்து விதார்த்துக்கு அழைப்பு வர, பதறும் நெஞ்சத்தோடு ஏற்று காதில் வைத்தான்.
“டேய் ஆருஷ்…” என்ற விதார்த்தின் குரலோசை அழுகையில் தோய்ந்து வந்திருந்தது.
“கனி என்னென்னவோ சொல்றாண்ணா. எனக்கு என்ன பண்றது தெரியல” என்ற புவித்தின் நடுக்கம் விதார்த்தால் உணர முடிந்தது. மூத்தவனாக அவனைத் தேற்றும் கடமை இருப்பதை கிரகித்த விதார்த் நொடியில் தன்னை திடப்படுத்திக்கொண்டு, “அப்படிலாம் எதுவும் இருக்காது ஆருஷ்” என்றான்.
“இந்த நிலையில அப்பா அங்க வரவேணாம் அண்ணா. மாமாவோட வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டு வாங்க” என்றான் புவித்.
விதார்த்துக்கும் சரியெனப்பட, “சித்தப்பா உன்னோடதான இருக்கார். அவர் வரட்டும். நம்மாள தனியா சமாளிக்க முடியுமா?” என்றான்.
புவித் சரியென்க, சிதம்பரம் மறுக்க மறுக்க அவரை ராஜேந்திரனுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு விதார்த் பயிற்சி நிலையம் இருக்கும் பகுதிக்கு வந்து சேர்ந்தான். விதார்த் பக்கமாக இருந்ததால் சிறிது நேரத்திலே அங்கு வந்திருந்தான்.
தான் வந்துவிட்டதாக புவித்திற்கு அழைத்துச் சொல்ல,
“கனி சொல்றதை பார்த்தா ரங்கராஜன் ரொம்பவே டேஞ்சர் மாதிரி தெரியுது. நீ தனியா போகவேணாம். தனியா போய் தான் மிதுன் மாட்டிக்கிட்டிருக்கான்” என்றார் இளங்கோ.
“ம்ம்” விதார்த் அமைதியான இருளில் வண்டியின் விளக்கை அணைத்துவிட்டு பயிற்சி நிலையத்திற்கு சில அடிகள் முன்பு நின்றுகொண்டான்.
விதார்த்தின் விழிகள் பயிற்சி நிலையக் கட்டிடத்தையே வெறித்திருக்க… அதுநாள் வரை தனித்து நிற்கும் கட்டிடத்தின் மீது எழாத சந்தேகம் அந்த நொடி எழுந்தது.
“மாணவர்கள் படிப்பதற்கு இப்படியான அமைதியான சூழல் மிகவும் முக்கியம். அதுக்காகத்தான் ஜனரஞ்சகம் அதிகம் இல்லாத இந்த இடத்தில் டியூஷன் வச்சிருக்கோம்” என்று பயிற்சி நிலையம் பற்றி விசாரித்தபோது ரங்கராஜன் கூறியதாக அகனிகா சொல்லியிருந்தாள்.
“அத்தோடு அவரின் வீடும் மேல் தளத்தில் தான் இருக்கு. எந்த நேரத்தில் வந்து டவுட்டுன்னு பசங்க கேட்டாலும் கிளியர் பண்ணுவாராம்” என்றிருந்தாள்.
ஆனால் இன்று அதன் காரணம் அனுமானிக்க முடிகிறது.
உள்ளே தங்கை எந்த நிலையில் இருக்கின்றாள் எனும் பயம் நொடிக்கு நொடி அதிகரிக்க மிகுந்த தவிப்போடு காருக்குள் அமர்ந்திருந்தான் விதார்த்.
அந்நேரம் அதி வேகத்தில் கார் ஒன்று அவனைத் தாண்டிச் சென்று நின்றது. பயிற்சி நிலையத்தின் முன்.
அது தங்கள் வீட்டு காரென்று கண்டுகொண்ட விதார்த், காரிலிருந்து இறங்கியது அகனிகா என்றதும் வேகமாக காரிலிருந்து இறங்கி அவளருகில் ஓடினான்.
விதார்த் பக்கம் வருவதற்குள்,
அத்தனை ஆக்ரோஷமாக கதவினை தட்டியவள், அழைப்பு மணியையும் அழுத்தியிருந்தாள்.
“அகா…” விதார்த் வந்த அரவத்தில் கதவினைத் தட்டிக்கொண்டே திரும்பியவள்,
“எல்லாம் என்னால தான்” என்று அவன் மீதே சரிந்து உடைந்து அழுதாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
11
+1
+1