அத்தியாயம் 21
அடுத்தநாள் பள்ளிக்கு வந்த நீனாவுக்கு, வழக்கத்திற்கு மாறாக மாலை எப்போதடா பயிற்சி நிலையம் செல்வோமென்று தான் இருந்தது.
காரணம்… நிவேதா.
அவளின் நிலையை அறிய வேண்டும். அவள் வேறு பள்ளி என்பதால், அவளை மாலை பயிற்சி நிலையத்தில் சந்திப்பது மட்டுமே சாத்தியம். அதற்கான நேரத்திற்காக பெரும் தவிப்போடு காத்திருந்தாள் நீனா. அன்று ரங்கராஜன் பள்ளி வராததால் வெகு நாட்களுக்குப் பின்னர் அந்நாள் அத்தனை அமைதியாக கழிந்தது.
பள்ளி முடித்து வீட்டிற்கு வராது, நேராக பள்ளியிலிருந்து பயிற்சி நிலையம் சென்றிருந்தாள்.
நீனா பள்ளிக்கு அலைபேசி கொண்டு செல்வதில்லை. ஆதலால் பயிற்சி நிலையம் வந்து பின்னர், அங்கு இருந்த மற்றொரு பள்ளித் தோழியிடம் அலைபேசி வாங்கி, அகனிகாவுக்கு அழைத்தாள்.
மூன்று நான்கு முறை அழைத்தும் அகனிகா அழைப்பை ஏற்கவில்லை. அவள் அந்நேரம் கல்லூரியில் முக்கிய வகுப்பில் இருந்ததால் அலைபேசியை சத்தமின்றி வைத்திருக்க அழைப்பு வந்ததே தெரியவில்லை.
வகுப்பு முடித்து வெளியில் வந்த பின்னரே நேரமாகிவிட்டதை உணர்ந்து, அலைபேசியை எடுத்துப் பார்த்தாள். எப்போதும் வீட்டிற்கு செல்லும் நேரத்திற்கு அரைமணி நேரம் அதிகமாகியிருந்தது.
அப்போது தான் இரண்டு புது எண்களிலிருந்து தவறவிட்ட அழைப்புகள் நிறைய இருக்கவே இரண்டிற்கும் முயற்சித்தவாறு பார்க்கிங் பகுதிக்கு வந்து சேர்ந்தாள்.
இரண்டு எண்ணும் முழு அழைப்புச் சென்றும் எடுக்கப்படவில்லை.
“யாரா இருக்கும்?” எனக் கேட்டுக்கொண்டவளாக, அவ்விரு எண்களில் ஒரு எண்ணிலிருந்து குரல் பதிவு வந்திருப்பதாக திரையின் மேல் அறிவிப்பு சுட்டிக்காட்டிட, என்னவென்று திறந்து கேட்டவளின் உடல் வெளிப்படையாக உதறத் துவங்கியது.
அன்று புவித் மற்றும் ஜானவிக்கு இண்டஸ்ட்ரியல் விசிட் என்பதற்காக நகரத்தை தாண்டி வேறொரு இடம் சென்றிருக்க, வேகமாக வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். அகாவிடம் அதீத பதற்றம். எப்படி வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தாலென்றே அவளுக்குத் தெரியவில்லை.
இதயத்தின் துடிப்புகள் சீரற்றுத் துடித்தது. பெரும் பெரும் மூச்சுக்களை வெளியேற்றி தன்னை நிலைப்படுத்த முயன்றாள்.
வீட்டிற்கு வரும் வழி முழுக்க நீனா வீட்டிலிருக்க வேண்டும், பயிற்சி நிலையம் சென்றிருக்கக் கூடாதெனும் வேண்டுதல்.
அகா வீட்டிற்கு வந்ததும், வண்டியை கூட சரியாக நிறுத்தாது வீட்டிற்குள் ஓடி வந்தாள்.
“நீனா” எனும் அழைப்போடு.
“நீனா நேரா டியூஷன் போயிட்டாளாம் அகா. போன் பண்ணி சொன்னா” என்று அகிலா சொல்ல,
“வாட்?” என்று சத்தமாக அதிர்ந்த அகா, “எப்போ கால் பண்ணா? எவ்வளவு நேரமிருக்கும்?” என்று பதறி வினவினாள்.
“ஒருமணி நேரமிருக்கும். உனக்கு கால் பண்ணாலாம். நீ எடுக்கலையாம்” என்று அகிலா கூறிட, தலையில் அடித்துக்கொண்டாள் அகனிகா.
அகனிகா கத்தியதிலே வீட்டிலிருந்த மற்றவர்களும் கூடத்திற்கு வந்திருந்தனர்.
“என்னாச்சு அகா?” என்று வர்ஷினி கேட்க, வீட்டில் மூத்த ஆண்கள் யாரும் இல்லாமலிருக்கு, இவர்களிடம் சொல்லி பதற்றமடையச் செய்ய வேண்டாமென நினைத்த அகனிகா, “நத்திங்” என்றாள்.
“சரி நான் டியூஷன் போயிட்டு அவளை கூட்டிட்டு வர்றேன்” என்று அகா நகர, “அவளுக்கு இன்னும் ஒருமணிநேர கிளாஸ் இருக்கே அகா. இப்போ போனாலும் நீ அங்க வெயிட் தான பண்ணனும். கொஞ்ச நேரம் கழிச்சுப்போ” என்று அகிலா கூற, “ஆமா” என்றார் சந்தியா.
“இல்லை. நான் போகவே இருபது நிமிஷம் ஆகுமே” என்றவள் நிற்காது, சார்ந்திருந்த வண்டியைக் கிளப்பிக் கொண்டு கேட்டினைத் தாண்டிட, அவளின் வண்டியை இடிப்பதுபோல உள் நுழைந்தான் புவித்.
“ஹேய் கனி என்ன அவசரம்?” என்று புவித் கேட்டதையோ, அவனின் வருகையையோ கவனிக்கும் நிலையில் அவளில்லை. தனது வண்டியை ஒடித்து திருப்பி வேகமாகச் சென்றிருந்தாள்.
“இவ்வளவு வேகமா எங்கப்போறா” என்ற புவித், அவளின் முகமே சரியில்லை என்பதை அவதானித்தவனாக அவளைப் பின்தொடர்ந்து சாலையில் சீறினான்.
அகனிகாவின் பின்னாலே சென்று கொண்டிருந்த புவித்,போக்குவரத்து சமிக்கையில் அவளைத் தவறவிட்டு சில நிமிடங்கள் பின்தங்கித் தொடர்ந்தான்.
செல்லும் பாதையை வைத்து பயிற்சி நிலையம் தான் செல்கிறாள் என்பதை அவதானித்து, அவள் முன்னால் தென்படுகிறாளா என்று வேகத்தை அதிகரித்த புவித், சாலையின் நடுவில் கூட்டமாக இருக்க, வண்டியை நிறுத்திவிட்டு என்னவென்று கூட்டத்தை விலக்கி எட்டிப்பார்க்க…
தலையில் மற்றும் காலில் ரத்தம் வழிய தரையில் வண்டிக்கு அடியில் கிடந்தாள் அகனிகா.
சர்வமும் அடங்க, “கனி” என்ற கூவலோடு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நபர்களைத் தள்ளிவிட்டு விழுந்து கிடந்தவளின் அருகில் சென்ற புவித், வண்டியை நகர்த்தித் தள்ளிவிட்டு, தரையில் மடிந்து அமர்ந்து அகாவை மடியில் கிடத்தி, அவளின் கன்னம் தட்டினான்.
“கனி… கனி… என்னைப்பாரு. கனி நான் பேசுறது கேட்குதா” என்றவன் குரல் முற்றிலும் உடைந்திருக்க, அவனது கண்களும் உடைபெடுத்தது.
புவித்தின் குரலுக்கு கண்கள் சொருக பாதி இமை திறந்த அகனிகா, “மாமா” என்று ரத்தம் தோய்ந்த கையை மெல்ல உயர்த்தி அவனது மார்புச் சட்டையை இறுகப்பற்றி கசக்கியவள், “நீ… ந்..” என்று விக்கி அடைத்தத் தொண்டையை எச்சில் கூட்டி விழுங்கி, “நீ….னா” என்று காற்றாகியக் குரலில் மொழிந்தவள், அதற்குமேல் சொல்ல முடியாது கண்களை மூடியிருந்தாள்.
“கனி” என்று அவ்விடம் அதிர கத்தியவனின் குரலில் அஞ்சி நடுங்கி சூரியனும் தனது பொற்கரங்களை முழுதாய் மறைத்திருந்தான்.
மெல்ல இருள் படரத் துவங்கியிருந்தது.
புவித் ஸ்தம்பித்து உறைந்தது சில கணங்கள் தான், அடுத்த நொடி உதவும் மனமின்றி சுற்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களை விரக்தியாய் ஏறிட்டவன், தானே அலைபேசியை எடுத்து ஆம்புலன்சுக்கு அழைத்து மருத்துவமனை ஏற்றிச் சென்றான்.
ஆம்புலன்ஸ் வருவதற்குள் கூடியிருந்த கூட்டம் அத்தனை பேசியிருந்தனர். மனிதாபிமானம் எனும் அடிப்படையில் உச்சிக் கொட்டலுடன் நடந்த நிகழ்வை விமர்சித்திருந்தனர்.
“அந்தப்பொண்ணு தான் அவ்வளவு வேகமா வந்துச்சு.”
“பொம்பளை பிள்ளைக்கு எதுக்கு இவ்வளவு வேகம். இப்போ இப்படியாகிப்பொச்சே!”
“சிறுவயசா இருக்கே!”
“உயிர் பிழைக்குமா தெரியல.”
“கார் தான் மோதுச்சு… ஆனா அந்தப்பொண்ணு வந்த வேகத்துக்கு வண்டியோட சேர்ந்து நாலஞ்சு உருண்டு உருண்டுருச்சு.”
புவித் என்ன நடந்ததென்று விசாரிக்காமலே கூடியிருந்தவர்களின் பேச்சினை வைத்து என்ன நடந்ததென்று அறிந்துகொண்டிருந்தான்.
மருத்துவமனை வந்து அவளுக்கு சிகிச்சைத் துவங்கிய பின்னரே மிதுனுக்கு அழைத்தவன் அகனிகாவின் நிலையைத் தெரிவிக்காது,
“எங்கடா இருக்க?” எனக் கேட்டு, மிதுன் வெளியில் இருப்பதாகக் கூறவும், நீனாவை பயிற்சி நிலையத்திலிருந்து அழைத்து வருமாறு சொல்லி வைத்திட்டவன், அடுத்து அழைத்தது சிதம்பரத்திற்கு.
அகனிகா கண்கள் மூடும் முன்பு நீனா பெயரை சொல்லியது, அவளை எப்போதும்போல அழைத்துவரச் சொல்வதற்காக என்று எண்ணிக்கொண்டான் புவித்.
அங்கு தங்கை தனியாகக் காத்துக் கிடப்பாள், அகனிகாவின் நிலைத் தெரிந்தால் மிதுன் நேராக மருத்துவமனை வந்துவிடுவான், இங்குதான் தான் இருக்கின்றோமே என நினைத்தே மிதுனிடன் அகாவின் நிலைப்பற்றித் தெரிவிக்காது விட்டான்.
சிதம்பரத்திடம் மேலோட்டமாக விஷயத்தைக் கூறிய புவித்,
“மாமாவை மட்டும் கூட்டிட்டு வாங்கப்பா. இப்போதைக்கு யாருக்கும் தெரியவேணாம். என்ன கண்டிஷன் பார்த்திட்டு சொல்லிக்கலாம். எல்லாரையும் கலவரப்படுத்த வேண்டாம்” என்றான்.
புவித் இந்நேரத்தில் திடமாக சிந்தித்துக் கூறுவதே பெரிய விஷயமாக நினைத்த சிதம்பரம்,
“அவசரவேலை ஒன்னு வந்திருச்சு. வெளியப்போயிட்டு வருவோம் மச்சான்” என்று ராஜேந்திரனை வேலையைக் காரணம் காட்டி மருத்துவமனை அழைத்து வந்தார்.
“இங்கென்ன வேலை மாமா? யாருக்கு என்ன?” என்று கேட்டுக்கொண்டே சிதம்பரத்துடன் அவசரசிகிச்சைப் பிரிவுக்குள் வந்த ராஜேந்திரன், அங்கு ரத்தக் கறை படிந்த ஆடையில் கண்கள் மூடி சுவற்றில் சாய்ந்தபடி நின்றிருந்த புவித்தைக் கண்டு பதறியவராக அருகில் ஓடிச் சென்றார்.
“ஆருஷ்… என்னப்பா? யாருக்கு அடிபட்டிருக்கு?” என பதற்றத்துடன் வினவினார்.
“கனிக்கு” என்று அவன் முடிக்கும் முன்னர்…
“அய்யோ என் பிள்ளைக்கு என்னாச்சு” என்று இடிந்துப்போனவராக இருக்கையில் தொப்பென்று துவண்டு அமர, சிதம்பரம் வேகமாக அருகில் அமர்ந்து தன்னுடைய தோள் சாய்த்துக் கொண்டார்.
“டாக்டர் என்னப்பா சொல்றாங்க?” மகனிடம் வினவினார் சிதம்பரம்.
“தலையிலும், காலிலும் அடிப்பா. ரத்தம் நிறைய போயிருக்கு…” என்றவன் வார்த்தைகள் தடுமாறி வெளிவந்தன.
சிகிச்சை முடிந்தப் பின்னர் வெளியில் வந்த மருத்துவர்,
“தலையில காயம் சின்னதுனாலும், பலமான அடி. நல்லவேளை கிளாட் எதுவும் ஆகல. ரத்தம் நிறைய லாஸ் அதான் உடனே மயங்கிட்டாங்க. கால்ல பிராக்ச்சர் இல்லை. இருந்தாலும் வன் வீக்காவது பெட் ரெஸ்டில் இருக்கணும்” என்று சொல்லிய பின்னரே புவித்திற்கு மூச்சு சீரானது.
ராஜேந்திரன் மகளை பார்க்க வேண்டுமெனக் கேட்க, “இப்போ முடியாது” என்று மருத்துவர் சென்றிட,
“பெருசா எதுவுமில்லன்னு ஆசுவாசப்படுங்க மச்சான்” என்று சிதம்பரம் தேற்றினார்.
மூவரும் சமநிலை அடைந்த பின்னரே வீட்டிற்கு சொல்லலாமென அழைக்க இரவு ஒன்பது மணி ஆகியிருந்தது.
அதற்கு முன்னர் வீட்டிலிருந்து மாற்றி மாற்றி அழைப்புகள் வந்திருக்க சிதம்பரம் ஏற்கவில்லை.
ஆதலாம் சிதம்பரம் அகிலாவுக்குத்தான் அழைத்தார்.
அகிலா அழைப்பை எடுத்ததும்,
“ஏங்க இன்னும் அகா வீட்டுக்கு வரலங்க. நீனாவை கூட்டிட்டு வரேன்னு போனா” என்று அகிலா முடிக்கும் முன்பு,
“அகாவுக்கு ஆக்சிடன்ட் ஆகிடுச்சும்மா” என்றார்.
“அய்யோ என்னாச்சுங்க” என்று பதறி அகிலா கேட்க, “இப்போ ஓகே சொல்லிட்டாங்க டாக்டர். பயப்பட ஒண்ணுமில்லை” என சிதம்பரம் கூறிட, மெல்லிய ஆசுவாசத்தோடு, “நீனா உங்ககூடத்தான் இருக்காளா?” என்று கேட்டார் அகிலா.
“நீனா?” என்று சிதம்பரம் கேள்வியாக இழுக்க…
அவரிடமிருந்து அலைபேசியை வாங்கிய புவித்,
“மிதுன் கூட்டிட்டுவர போனாம்மா. இன்னும் வரலையா?” எனக் கேட்டான்.
“இல்லையே ஆருஷ்” என்ற அகிலா, “பயமா இருக்குப்பா” என்க, “அண்ணா இருக்காங்கலாம்மா?” என்றான்.
“இன்னும் வரலையென்னு இப்போதான் டியூஷனிலே பார்த்துட்டு வரேன்னு போனான்” என்றார்.
“ஹ்ம்ம்… பயப்படாம இருங்கம்மா. அண்ணா ரெண்டு பேரையும் கூட்டிட்டு வந்துடுவாங்க” என்று சொல்லி புவித் வைத்த கால் மணி நேரத்தில் மற்றவர்கள் மருத்துவமனை வந்து சேர்ந்தனர்.
அகனிகாவுக்கு விபத்து ஏற்பட்டது பதற வைத்து கவலையில் ஆழ்த்தினாலும், சிறிதளவு காயத்தோடு போய்விட்டதே என்று நிம்மதியும் ஏற்பட்டிருந்தது.
சந்தியாவைத் தேற்றத்தான் போதும்போதுமென ஆகியது.
எப்படி விபத்து நடந்தது என்பதை புவித்தின் மூலம் அறிந்திட, “பொம்பளை பிள்ளைக்கு அப்படியென்ன வேகம்” என்று அந்நிலையிலும் பவானி பேசத்தான் செய்தார். இளங்கோவின் பார்வையில் அடுத்த வார்த்தை பேசாது வாயை மூடிக்கொண்டார்.
பயிற்சி நிலையம் சென்ற விதார்த், அகாவின் நிலையறிந்து நேராக மருத்துவமனைக்கே வந்தான்.
விதார்த்தைக் கண்டதும் அவனுக்குப் பின்னால் நீனாவும், மிதுனும் வருகிறார்களா என்று அனைவரும் பார்த்திட ஏமாற்றமே சூழ்ந்தது.
“எங்கப்பா அவங்க ரெண்டு பேரும்?” சிதம்பரம் கேட்க,
“நீனா டியூஷன் வரலன்னு அந்த சார் சொல்றாருப்பா” என்ற விதார்த்தின் முகம் யோசனையில் சுருங்கியிருந்தது.
சட்டென்று அனைவரிடத்திலும் பதற்றம் எழுந்தது.
“நீங்க நல்லா விசாரிச்சீங்களா?” புவித் கேட்க,
“ரங்கராஜன் இல்லைடா. ஆனால் இன்னொரு சார் கிளாஸ் எடுத்துட்டு இருந்தார். பாய்ஸ் செக்சன் போயிட்டு இருந்துச்சு” என்றான் விதார்த்.
அப்போதுதான் புருவ முடிச்சோடு நெற்றியில் எழுந்த வரிகளின் சுவட்டோடு ஆழ்ந்து சிந்தித்த புவித்,
“கனி கண்ணை மூடுறதுக்கு முன்ன நீனான்னு ஏதோ சொல்ல வந்தாள். அவளை பிக்கப் பண்ண சொல்லவரான்னு நினைச்சேன்” என்று நெற்றியைத் தேய்த்தான்.
“அப்போ அகாவுக்கு நீனா எங்கன்னு தெரியும் போலிருக்கே” என்று பவானி இழுக்க…
“அய்யோ எனக்கு பயந்து வருதுப்பா. எம்பொண்ணு எங்கன்னு கண்டுபிடியுங்களேன்” என்று அகிலா அழுகையில் துடித்தார்.
அந்நேரம் விபத்து குறித்து விசாரணை செய்திட காவல்துறை ஆய்வாளர் அங்குவர, அவர்களின் கவனம் மாறியது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
9
+1
+1
1