அத்தியாயம் 20
பயிற்சி நிலையம் விட்டு வீட்டிற்கு வரும் வழியில்…
“எல்லாரும் இங்க சுயநலமா இருந்தாதான் வாழ முடியும் நினைக்கிறாங்க” என்று புவித் மிகவும் வருத்தத்தோடு நீனாவிடம் கூறினான்.
ரங்கராஜன் ஆம்புலன்சிற்கு அழைக்கவிடாது தடுத்துக் கூறிய காரணத்தை மனதில் வைத்து அவ்வாறு கூறினான்.
நீனாவிடம் பதிலேதும் இல்லை.
அவள் வெகு அமைதியாக வர,
“நீ அவருக்கு ரொம்ப பயப்படுற நீனா” என்றான் புவித். ரங்கராஜன் அருகிலிருந்த வரை அவள் தன்னுடைய முதுகுக்குப் பின்னாலே நின்றிருந்ததை கவனித்தவனாக சொல்லியிருந்தான்.
“ஹான் அண்ணா…” அவளிடம் சட்டென்று சிறு தடுமாற்றம்.
“அவருக்கு நீ ஏன் பயப்படணும். இப்போ நல்லாதான படிக்கிற? விட்ட இடத்தைப் பிடிச்சிட்டியே!” என்றான்.
நீனா பயிற்சி வகுப்பு வரத் துவங்கியதுமே ரங்கராஜன் நீனாவின் விடைத்தாள்களை சரியான முறையில் திருத்தி மதிப்பெண் வழங்கியிருந்தார்.
புவித் எளிதாகக் கூறிவிட்டான். ஆனால் அதற்கு பின்னான அவளின் வலி அவள் மட்டுமே அறிந்தது.
“நான் கேட்டுட்டே வரேன். நீ அமைதியா வரியே” என்று புவித் கேட்க,
“சின்ன மிஸ்டேக் அப்படின்னாலும் அடிப்பார் அண்ணா. அதான் பயம். வேறொன்னும் இல்லை” என்ற நீனா, “அவரு” என தன்னுடைய மனதை அழுத்திக் கொண்டிருக்கும் விடயத்தை சொல்ல முயல, “வீடு வந்திருச்சு” என்று வண்டியை நிறுத்தினான் புவித்.
ஒரு நொடி உந்துதல் அடுத்த நொடி தகர்ந்திருந்தது.
வண்டியை விட்டு இறங்கியவள் வீட்டிற்குள் நுழைய,
“என்ன சொல்ல வந்த நீனா?” எனக் கேட்டிருந்தான் புவித்.
நின்று திரும்பியவள, “ஒன்னுமில்லண்ணா” என்று தலையை இருபக்கமும் அசைத்துவிட்டு உள் சென்றிருந்தாள்.
அதன் பின்னர் குடும்பத்தினருடன் தன்னை இயல்பாகக் காட்டிக்கொண்டு அவள் நடமாடிட, உணவு நேரத்தின் போது புவித் பயிற்சி நிலையத்தில் நடந்ததை அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்ள…
இன்று மட்டும் புவித் உடனில்லாமல் போயிருந்தால், தீபிகாவுடன் இறுதியாக எஞ்சி நின்ற தனக்கும் விபரீதம் நேர்ந்திருக்கும் என்ற நினைப்பிலே மனதில் மேலும் மேலும் சுருண்டு தவித்தாள் நீனா.
“பசங்க மேல இப்படி கன்ச(ர்)னா இல்லாத ஆளுக்கிட்ட எப்படி பிள்ளையை படிக்க அனுப்புறது?” என்று அகிலா ஆதங்கப்பட,
“இன்னும் ரெண்டு மாசம் தான். எக்ஸாம் முடிஞ்சிட்டா அவருக்கும் நமக்கும் சம்மந்தமே இல்லை. எக்ஸாம் நேரத்துல அவளை டியூஷன் நிறுத்து டவுன் பண்ண வேண்டாம்” என்று அகனிகா கூற மற்றவர்களுக்கும் அது ஏற்புடையதாக இருந்தது.
நீனாவுக்குமே தற்போதிருக்கும் சூழலில் பயிற்சி வகுப்பு செல்லாது தவிர்ப்பது முடியாத காரியம்.
தொடர்ந்து மாதத் தேர்வுகளில் தோல்விபெற்றால், பொதுத்தேர்வு எழுதிட பள்ளி நிர்வாகம் அனுமதிக்காது. பயிற்சி நிலையம் செல்லாவிட்டால் ரங்கராஜன் மீண்டும் மதிப்பெண்ணில் கை வைப்பார். இதற்கு இருக்கும் ஒரேவழி, அங்கு தினமும் செல்லத்தான் வேண்டும் அவள்.
தினமும் தனக்கு வகுப்பு முடியும்வரை அகனிகா அங்கு தானே காவல் போல் காத்திருக்கிறாள். அவனால் ஒன்றும் செய்ய முடியாது என்ற குருட்டுத் தைரியம் அவளுள்.
அந்த தைரியம் அறைக்குள் வந்து படுத்த பின்னர், ரங்கராஜனிடமிருந்து வந்த தகவலில் மொத்தமாக சிதறியிருந்தது.
இரவு முழுக்க ஒருவித பயத்தோடு நேரத்தைக் கழித்தவள், அடுத்தநாள் பள்ளி விடுமுறையாக இருக்கவே, பத்து மணியளவில் பயிற்சி வகுப்பிற்கு செல்லவே விருப்பமின்றி கிளம்பிச் சென்றிருந்தாள்.
அவளுக்கு தீபிகாவின் நலன் பற்றி தெரிய வேண்டியிருந்தது.
அகனிகாவுடன் வகுப்பிற்கு வந்து சேர்ந்த நீனா,
“கிளாஸ் முடிஞ்சதும் அப்பா, மாமா யாருக்காவது கால் பண்ணு நீனா. வருவாங்க” என்று நிற்காது சென்ற பின்னரே, இன்று அகனிகாவிற்கு கல்லூரி என்பதே நினைவில் வந்தது.
நெஞ்சம் நடுங்க அப்படியே வாயிலிலே நின்றுவிட்டாள்.
“என்ன நீனா இங்கவே நின்னுட்ட” என்று அவளின் தோழி முதுகில் கை வைத்திட, பதறி துள்ளி விலகினாள்.
நீனா விலகி நின்ற விதம், தோழியை மேலும் ஆச்சரியப்பட வைத்தது.
“அடிப்பாவி… ஏன் இவ்வளவு பயப்படுற?” என்றாள் தோழி.
“ஒன்னுமில்லை…” என்று சொல்லிக்கொண்டே, சற்றே சிரிக்க முயன்றாள் நீனா. ஆனால் அவளின் கை விரல்களில் மென் நடுக்கம்.
வகுப்பறைக்குள் நுழைந்தபோது, சூழல் வழக்கம்போல சத்தமில்லாமல் இருந்தது. சிலர் தங்கள் பைகளிலிருந்து புத்தகங்களை எடுக்க, சிலர் மெல்ல உரையாடிக் கொண்டிருந்தனர். ரங்கராஜனின் காலடி சத்தம் வரும்வரை அனைவரும் அமைதியாகக் காத்திருந்தனர்.
தீபிகாவை நீனாவின் விழிகள் தேடின. அவள் வந்ததற்கான அடையாளமில்லை.
‘வரலையோ!’ நீனா நினைத்திட,
“இனி எப்பவும் தீபிகா வரமாட்டா” என்று நீனாவின் அருகிலிருந்த நிவேதா கூறியிருந்தாள்.
தனது இடத்தில் அமர்ந்து, முகத்தில் மங்கலான வெளிச்சமில்லாமல் புத்தகத்தைப் புரட்டியபடி இருந்த நிவேதா…
“நேத்து நைட்டு சார் தீபிகா வீட்டுக்கு வந்தார். ஏன்னு தெரியல. ஆனால் காலையில தீபிகா வீடு பூட்டியிருந்துச்சு. எங்கம்மா அவங்க நைட்டே ஊரை விட்டு போயிட்டதா சொன்னாங்க” என்றாள்.
“ரங்கராஜன் ஏதாவது மிரட்டியிருப்பாரா?” என்று நீனாவின் குரல் துடித்தது. தோழிக்காக.
“தெரியல” என்ற நிவேதா, “நேத்து தீபி மயக்கம் போட்டப்ப, நீ உன் அண்ணாவை கூப்பிட்டியே! நான் அப்போ தான் வெளியப்போனேன். எனக்கு ஏதோ தப்பா பட்டுச்சு அதான். வீட்டுக்கு சீக்கிரம் போயி, தீபிகா வீடு பக்கத்துல தான என் வீடு. அவள் அப்பாகிட்ட தீபிகாவுக்கு உடம்பு சரியில்லை. உங்களை கூட்டிட்டுப்போக வரச்சொன்னான்னு சொல்லி நான்தான் அனுப்பி வச்சேன்” என்றாள்.
“உனக்கு என்ன தப்பாப்பட்டுச்சு?” என்ற நீனா, ரங்கராஜன் அவளிடமும் தவறாக நடந்துகொள்ள முயல்கிறாரா என்பதை தெரிந்துக்கொள்ள நினைத்துக் கேட்கவர,
“தீபி கொஞ்சநாளாவே டிஸ்டப்டா இருந்தா. என்னன்னு கேட்டதுக்கு சொல்லல” என்று நிவேதா சொல்லியபோதே, கதவு பக்கத்தில் ரங்கராஜனின் காலடி சத்தம் கேட்டு, இருவரும் உடனே வாயை மூடிக்கொண்டனர்.
ரங்கராஜன் உள்ளே வந்து, வழக்கம்போல புன்னகை காட்டியபடி, “காலை வணக்கம்,” என்று சொன்னாலும், அந்த புன்னகை கண்களில் வரவில்லை. அவர் பார்வை நேராக நீனாவைத் தாக்கியது. நேற்று அவளால் அல்லவா அவரின் எண்ணம் தடைபட்டது.
அந்த பார்வை வெறும் நொடிப்பொழுதுதான், ஆனால் நீனாவின் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.
வகுப்பு தொடங்கியது. ரங்கராஜன் கேள்விகளை வினவ, மாணவர்கள் பதிலளித்தனர். ஆனால் நீனாவின் கவனம் இல்லாமல் போயிருந்தது. பதில் சொல்லும் போதும் குரல் நடுங்கியது.
அந்நேரம் அவர் திடீரென,
“நீனா… நேத்து உன் பதிலில் இன்னொரு பிழை இருந்திருக்கிறது. அதையும் திருத்தி வரணும் சொல்லியிருந்தேன்?” என்றார்.
நீனா எழுந்து நின்றாள். முகம் வெண்மையடைந்தது.
“சார்… நான்… திருத்திட்டேன்…”
“அப்படியா? சரி, இன்னொருமுறை பிழை இல்லாம இருக்கணும் பார்த்துக்கோ” என்றார். அவரின் வார்த்தைகளில் வெளிப்படாத மிரட்டல் இருந்தது.
“இதே மாதிரி தான் சார் ஒரு வாரமாவே எதுக்கெடுத்தாலும் தீபி போடுற சம்ஸ் எல்லாம் தப்பு தப்புன்னே சொல்லிட்டு இருந்தார். இப்போ நீ மாட்டிக்கிட்ட” என்று நிவேதா சொல்ல, நீனாவிடம் விரக்தி முறுவல்.
“சார் மிஸ் பிஹேவ் பண்றதா தோணுது எனக்கு” என்று நிவேதா சொல்ல, நீனா அதிர்ந்து நோக்கினாள்.
“உன்கிட்டயுமா?”
“அப்படின்னா அதுதான் உண்மையா?” என்ற நிவேதாவிடம் பெரும் அதிர்வு.
“தீபிகா சார் பக்கத்துல போகவே பயந்தாள். காரணம் இப்போ புரியுது” என்றாள்.
“இதைப்பத்தி பேசுறதையே நிறுத்து நிவே. உனக்குத் தெரியும் தெரிஞ்சிட்டாலே அவன் உன்னையும் கார்னர் பண்ண ஆரம்பிச்சிடுவான்” என்று நிவேதாவை இதிலிருந்து விலக்கி வைக்கவே நீனா நினைத்தாள்.
“இப்படி பயந்தா எப்படி?” என்ற நிவேதா,
“வீட்டுல சொல்லலாமே” என்க,
“அது முடியாது. சார் மொபைல்ல” என நீனா கூற முடியாது உதடுகள் துடிக்க கண்கள் கலங்கப் பார்த்தாள்.
“அந்த ஃபோன் தான் பிரச்சினையா? அதை தூக்கிடலாம்” என்ற நிவேதா, இடைவேளைக்குப் பின்னரான அடுத்த வகுப்பில் சந்தேகம் கேட்பதைப் போன்று ரங்கராஜன் அருகில் சென்று, அவரது மேசை மீது தன்னுடைய புத்தகத்தை வைத்து எடுக்கும்போது, அங்கிருந்த அவரின் அலைபேசியையும் எடுத்துகொண்டு வந்துவிட்டாள்.
“இப்போவே புவித் அண்ணாவுக்கோ, இல்லன்னா அம்மாவுக்கோ சொல்லணும்னு தோணுது. ஆனால் என்ன நடக்கும் தெரியல.”
“பயந்தா ஒன்னும் ஆகாது நீனா. எல்லாருக்கும் இருக்கிறது தான். இதுல பயந்து அமைதியா இருக்கிறது அவனுக்குத்தான் அட்வான்டேஜ்” என்ற நிவேதாவின் தைரியம் நீனாவுக்கு கொஞ்சமும் இல்லை.
“அவனுக்கு கோபம் வரக்கூடாது நிவே. சொல்றது, கேட்கிறது வேற. அந்த இடத்தில் நிக்கிற என் எண்ணத்தை விளக்க முடியாது” என்ற நீனா, நாம எடுத்தது அவனுக்குத் தெரிஞ்சா…” என்று அவள் நடுங்கிப் பார்த்தாள்.
“தெரிஞ்சா தான. வீட்டுக்குப் போற வழியிலே எங்கயாவது இந்த போனை தூக்கிப் போட்டுட்டு ஃப்ரீயா இரு. இனி நான் இங்க டியூஷன் வரமாட்டேன். இப்படியொருதன்கிட்ட படிக்கிறதுக்கு படிக்காமலே இருக்கலாம்” என்ற நிவேதாவின் கையை இறுகப் பிடித்து தன்னுடைய நன்றியைத் தெரிவித்தாள் நீனா.
நிவேதா போன்று இங்கு வர முடியாதென நீனாவால் முடிவெடுக்க முடியாது. அவளுக்கு பள்ளியிலும் ரங்கராஜனே ஆசிரியர்.
“நீ வேற ஸ்கூல். ஈசியா முடிவு பண்ணிட்ட… ஆனால் நான்” என்ற நீனா, “இந்த போன் இல்லன்னா நான் பயப்பட வேணாம். நீ சொன்ன மாதிரி இதை தூக்கிப்போட்டுட்டு இன்னைக்கே வீட்டுல சொல்லிடுறேன்” என்றாள்.
வகுப்பு முடிந்து, மாணவர்கள் வெளியேறும்போது, ரங்கராஜன் தனது மேசையில் ஏதோ தேடி நின்றார். நீனா வெளியில் வரும்போது, அவரது குரல் அவளின் காதில் விழுந்தது.
“நீனா… ஒரு பத்து நிமிஷம் இரு. உனக்கு மட்டும் சில ஹோம்வோர்க் கொடுக்கிறேன்” என்று அவளை நிறுத்தினார்.
எல்லோரும் சென்றிருக்க, ரங்கராஜனைப் பற்றித் தெரிந்தும் நீனாவை தனித்து விட்டுசெல்ல மனமின்றி நிவேதாவும் உடன் நிற்க,
தன்னுடைய உதவிக்கு வந்து நிவேதா மாட்டிக்கொள்ளக்கூடாதென நினைத்த நீனா,
“நீ போயிடு நிவே” என்றாள்.
“பார்த்துக்கலாம். நாம ரெண்டு பேரு” என்று நிவேதா தரியமாகவே நின்றாள்.
ரங்கராஜன் நிவேதாவை அழுத்தமாக பார்த்தவாறு,
“உன்கிட்ட சொல்லிட்டாளா?” எனக் கேட்டார்.
நீனா அதிர்ச்சியில் படபடத்தாள்.
நிவேதா ஆமென்று சொல்லவர,
“அய்யோ சார் என்ன நீங்க? நான் எதுவும் அவகிட்ட சொல்லல” என்று வேகமாகக் கூறிய நீனா, “நீ போ நிவே” என்று கெஞ்சுதலாய் அவளை வெளியே தள்ளிவிட்டாள்.
நிவேதா நீனாவை முறைத்திட,
“உனக்கு தெரிஞ்சிடுச்சுன்னு தெரிஞ்சா என் நிலைமை தான் உனக்கும். ப்ளீஸ் போ” என்று ரங்கராஜனுக்கு கேட்டுவிடாது மென்குரலில் நிவேதாவிடம் மன்றாடினாள் நீனா.
“நீங்க ஹொம்வொர்க் குடுங்க சார். கிளம்புறோம்” என்று நிவேதா, நீனா தன்னை வெளியே தள்ளுவதை பொருட்படுத்தாது ரங்கராஜனிடம் நேரடியாகக் கேட்டிருந்தாள்.
“உன் ஃப்ரெண்ட் தான் உனக்கு துணையா வரேன்னு சொல்றாங்களே. நீ ஏன் வேணாம் சொல்ற நீனா” என்ற ரங்கராஜனின் குரல் மாறுபாட்டை இருவராலும் உணர முடிந்தது.
நீனா உடலெங்கும் ஒரு குளிர்ச்சியை உணர்ந்தாள்.
ரங்கராஜன் இரு பெண்களையும் நோக்கி தனது இடைவெளியை மெல்ல மெல்ல அடி வைத்துக் குறைத்திட,
“நீங்க பண்றது ரொம்ப தப்பு சார்” என்றிருந்தாள் நிவேதா.
“நிவே” என்று நீனா அவளின் பேச்சை தடுக்கப் பார்க்க, “எனக்குத் தெரியும்னு அவருக்குத் தெரிஞ்சிடுச்சு நீனா” என்றாள் நிவேதா.
“எஸ்… ஷீ இஸ் கரெக்ட்” என்று சத்தமின்றி சிரித்த ரங்கராஜன், “உன் மேலயும் எனக்கொரு கண்ணு தான். நீனாவை முடிச்சிட்டு உன் பக்கம் வரலான்னு இருந்தேன். நீயா வந்து சிக்கிட்ட” என்று கண்ணடித்தார்.
அந்த நொடியில், மிதுனின் குரல் பக்கத்தில் கேட்டது.
“நீனா! கிளாஸ் முடிஞ்சுதா?”
மிதுன் அங்கு வந்திருப்பதைப் பார்த்த ரங்கராஜனின் முகம் ஒரு நொடி மங்கியது.
உடனே ரங்கராஜன் முகத்தை மாற்றி புன்னகைப் பூண்டு, “கரெக்ட் டைம் வந்துட்டீங்க. கூட்டிட்டுப் போங்க ” என்றான்.
நீனா தப்பித்தால் போதுமென ரங்கராஜனை முறைத்தபடி நின்றிருந்த நிவேதாவின் கையைப் பிடித்து இழுக்க…
“என்னோட போன் கொடுத்துட்டு போங்க நீனா” என்று கை நீட்டினார் ரங்கராஜன்.
மிதுன் புரியாது பார்க்க…
“டியூஷன் முடிஞ்சதும் வீட்டுக்கு கால் பண்ணனும் என் மொபைல் கேட்டாங்க கொடுத்தேன். அதான் திருப்பிக்கொடுக்க மறந்து எடுத்துட்டுப் போறாங்க” என்றார்.
“ஹோ” என்று மிதுன் நீனாவை பார்க்க, அவளோ நடுங்கும் கரத்தோடு அலைபேசியை ரங்கராஜனிடம் கொடுத்தாள்.
அக்கணம் ரங்கராஜன் அடி கண்களால் காட்டிய பார்வை, சுளீரென நீனாவின் முதுகுத்தண்டில் அனலாய் தாக்கியிருந்தது.
மிதுன் வந்துவிட்டான் என்பதில்,
நீனாவின் இதயம் கொஞ்சம் இலகுவானாலும், அவளுக்குள் நிழல்போல் அந்த பயம் அதிகரிப்பாய் சுழன்றது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
10
+1
1
+1