Loading

அத்தியாயம் 2

தூங்கும் மனிதர்களின் சுவாச ஓசையில் கூட ஒலி நிகழாதபடி அமைதியாய் இருந்தது அந்த வீடு.

இரண்டு தளம் கொண்டு கட்டப்பட்ட அளவான வீடு. வீட்டைச் சுற்றி கண்களுக்கு இதம் தரும் பசுமை நிறைந்த தோட்டம். வீட்டின் வாயிலுக்கு முன் அமைந்திருக்கும் செயற்கை நீரூற்றுக்கு நடுவில் அமைதியின் உருவமான புத்தர் சிலை. பார்க்கும் நொடி மனதில் இதத்தை பரப்பிவிடும்.

அந்த இதம் அவ்வீட்டில் இருப்பவர்களின் மனதில் இருக்கிறதா என்றால்? அவர்கள் மட்டுமே அறிந்தது.

விடியல் புலர்ந்திட,

வீட்டின் மூத்த பெண்மணியாய் அகிலாவின் அரவம் சுழலத் தொடங்கியது.

அகிலா அடுப்பில் பாலினை ஏற்றி காய்ச்சிட… பவானி சமையலறை உள்ளே வந்தார்.

“காலை டிஃபனுக்கு என்னக்கா?” என்று கேட்ட பவானி, அகிலாவுக்கு உதவியவராக காலை உணவிற்கு தயார் செய்யத் துவங்கினார்.

குளிர்சாதனப் பெட்டியிலிருந்து காய்கறிகளை எடுத்துக் கொண்டிருந்த பவானி,

“நைட்டு எப்போ வந்தாள்? நாம உட்கார்ந்திருந்த வரைக்கும் வரலையே” என்ற பவானி, “பட்டும் திருந்தமாட்டா போலவே! போலீசா இருந்தாலும் பொண்ணுங்கிற அச்சம் இருக்க வேண்டாமா?” என்றவர் அகிலாவின் முகம் பார்த்தார்.

அகிலாவின் முகம் பவானி எதிர்ப்பார்த்த கோபத்தை காட்டாது இருக்க…

“நீங்க இப்படியே இருந்தா, நம்ம ஆருஷை மொத்தமா கைக்குள்ள போட்டுக்குவா. அப்புறம் நம்ம பிள்ளை நமக்கில்லை” என்று போலி அக்கறையை வெளிக்காட்டினார் பவானி.

“இதையேதான் நேத்து நைட்டு உன் மாமாவும் சொன்னாரு. என்ன சொன்ன விதம் தான் வேற வேற” என்ற அகிலா, “என்னதான் வருத்தமிருந்தாலும், அவளும் நம்மவீட்டுப் பொண்ணு பவானி. ஆதங்கத்தில் பேசுற நேரம் பேசினாலும், அவளும் நல்லா இருக்கணும் நினைக்கத்தான் தோணுது” என்றார்.

“நீங்க இப்படியே நல்லது நினைச்சிட்டே இருங்க. அதான் நம்ம பிள்ளையை கொன்னவ, இந்த வீட்டுல சீராடிட்டு இருக்காள்” என்று வராத கண்ணீரை துடைத்துக் கொண்டு, கீழ் கண்களால் அகிலாவை பார்த்து வைத்தார் பவானி.

அதுவரை இருவரின் பேச்சுக்களையும் கவனியாது போன்று, பிள்ளைகளுக்கு பால் கலந்து கொண்டிருந்த வர்ஷினி,

“நடந்த விஷயங்கள் தெரிந்தும் இப்படி பேசுறது தப்பு அத்தை” என்றிருந்தாள்.

மருமகளின் கண்டிப்பில் முகத்தை வெட்டிய பவானி, இம்முறை தான் எதிர்பார்த்த பாவம் அகிலாவின் முகத்தில் தென்பட,

‘இனி பொழுது நிம்மதியா கழியும்’ என மனதில் நினைத்தவாறு, “நேரம் போறதே தெரியாம சட்டுன்னு ஓடிப்போவும். ஆளாளுக்கு வேலைக்குப் போறேன்னு லைனா வந்துடுவாங்க. நீங்க கொஞ்சம் தள்ளி நின்னு டீ ஆத்துங்க. நான் சாம்பாருக்கு பருப்பை வைக்கிறேன்” என்றார்.

வர்ஷினி வெளிப்படையாக தலையில் தட்டிக்கொண்டாள்.

அகிலாவுக்கு பவானியின் குணம் தெரியாமலில்லை. அகிலா சிதம்பரத்தை மணம் முடித்து வந்த இரண்டாம் வருடம், சிதம்பரத்தின் தம்பி இளங்கோவை திருமணம் செய்து அங்கு வந்தார் பவானி.

என்னதான் கூட்டுக்குடும்பம் அனுசரித்துப்போக வேண்டுமென்ற எண்ணமிருந்தாலும், இப்படி ஒருவருக்குள் ஒருவர் மூட்டி விடும் பழக்கம் அப்போதிலிருந்தே பவானிக்கு உள்ளது. அதனை அகிலா நாசூக்காக மாற்றிக்கொள்ள சொல்லி அறிவுறுத்தினாலும், பவானியின் இயல்பான குணம் அவரை விட்டுப் போகவில்லை. மாற்ற முடியாது என்று அறிந்த பின்னர், அந்நேரப் பேச்சுக்களிலிருந்து அகிலா விலகிவிடுவார்.

ஆனாலும் மறக்க நினைக்கும் ஒன்றை அவரின் பொழுதுபோக்கிற்காக மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்துவதைப் போன்று, வருத்தத்தின் சாயலில் பேசுவதாக, அகனிகாவுக்கு எதிராக தூண்டிவிடுவது எரிச்சலை உண்டுபண்ணிவிடும். அக்கணம் பதில் கொடுத்தால் தானே பவானியின் எண்ணம் ஈடேறுமென அகிலா முடிந்தமட்டில் வாயினை இறுக மூடிக்கொள்வார்.

“என்னம்மா இங்கவே நின்னுட்ட?” என்று சமையலறை பகுதிக்கு முன் நின்றிருந்த சந்தியாவிடம் இளங்கோ கேட்டார்.

பவானி சமையலறைக்குள் நுழைந்த கணமே அங்கு வந்துவிட்ட சந்தியா, அவரின் பேச்சின் ஒலி கேட்கவுமே உள்ளே செல்லாது திரும்பிச்செல்ல முயல,

“புல்லட் காஃபி வேணும் அத்தை” என்று விதார்த் உணவு மேசை இருக்கையில் வந்து அமர்ந்துகொண்டான்.

அவனின் தேவைக்காக சமையலறை உள்ளே செல்லவும் முடியாது, பவானியின் பேச்சில் செல்லாமல் இருக்கவும் முடியாது தவித்து நின்றிருந்த சந்தியா, தன்னுடைய இரண்டாவது அண்ணனின் கேள்வியில் மலங்க மலங்கப் பார்த்தார்.

“ஒதுங்கியே நின்னுட்டு இருந்தா நமக்கெதிரானப் பேச்சுக்கள் தொடர்ந்துட்டேதான் அத்தை இருக்கும். இன்னும் எத்தனை நாளுக்கு?” என்ற விதார்த்தின் பேச்சு அவருக்காக இருந்தாலும், அவனது பார்வை என்னவோ கையிலிருந்த அலைபேசியில் தான் நிலைத்திருந்தது.

“உன் சின்ன அண்ணியா?” இளங்கோ கேட்டிட, ஆமெனக் கூறமுடியாது சந்தியா அப்பாவியாக நின்றிருந்தார்.

“ஆமான்னு சொல்லக்கூட இவ்ளோ யோசிச்சா?” என்று நிறுத்திய விதார்த், “ரொம்ப கஷ்டம்” என்று எழுந்து அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

“காஃபி கேட்டியே விது?” சந்தியா தயக்கமாகக் கேட்க,

“இப்போ கிச்சன் உள்ள போயிட்டு போட்டுக் கொண்டுவரீங்கன்னா சொல்லுங்க… குடிக்கிறேன்” என்றான். மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு மேல் கண்களால் அவரைப் பார்த்தான்.

“அது…” என்று அவர் தயங்கிட,

“உங்க மருமகன் வருவான் அவன்கிட்டவும் இப்படியே தயங்கி நிக்கிறீங்களா பார்க்கிறேன்” என்று சென்றிருந்தான் விதார்த்.

சந்தியா திருவிழாவில் தொலைந்த சிறுமியாக இளங்கோவை ஏறிட்டார்.

“விது சொல்ற மாதிரி நான் பதிலுக்கு பேசினா உறவுக்குள்ள தேவையில்லாத மனஸ்தாபம் வருமே அண்ணா” என்றார் சந்தியா.

“உன்னை மாத்த முடியாது” என்ற இளங்கோ, “ஒரே குடும்பத்தில் ஆள் மாத்தி ஆள் போட்டுக்கொடுக்கிற வேலை பார்க்காதன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். கேட்க மாட்டேங்கிறா. அப்படி இதுல என்ன சந்தோஷம் கிடைக்குதுன்னு தெரியல” என்றார்.

“அண்ணிக்கும் சண்டை உண்டாக்கணும் எண்ணமில்லைண்ணா. அவங்களுக்கு பேச எதுவும் இருந்துட்டே இருக்கணும். அவ்வளவு தான்” என்று இளங்கோவை சமாதானம் செய்தார் சந்தியா.

“என்னயிருந்தாலும் உன் மனசு அவளுக்கு வராதும்மா” என்ற இளங்கோ, “அண்ணி வர்றாங்க” என்றார்.

கையில் தேநீர் குவளைகள் அடங்கிய தட்டோடு வந்த அகிலா,

“எடுத்துக்கோங்க தம்பி” என்று இளங்கோவிடம் நீட்டியவர், அடுத்து சந்தியாவிடம் நீட்டினார். எதுவும் பேசவில்லை.

சந்தியா எடுத்துக்கொள்ளவும்,

“ஒருத்தரை நமக்கு நல்லா தெரியுங்கிறப்போ, அவங்க பேச்சுக்கெல்லாம் மதிப்புக் கொடுத்து வருத்தப்பட்டு நிக்கக்கூடாது” என்று பொதுவாக சொல்லியவராகச் சென்றார்.

இளங்கோ மௌனமாக சிரித்தவராக கூடத்திற்குச் செல்ல, சந்தியா செல்லும் அகிலாவையே பார்த்தவாறு நின்றிருந்தார்.

அகிலா, சந்தியா தோழியர் போன்று அத்தனை நெருக்கம். அவர்களின் அந்த நெருக்கம் தொலைந்து காணாமல் சென்று ஏழு வருடங்கள் ஆகிறது.

அன்று நடந்த நிகழ்வில் நெஞ்சின் வலி தாங்காது அகிலா வார்த்தைகளை விட்டிருக்க, தன்னுடைய மகளை அகிலா பேசியப் பேச்சின் வீரியம் தாங்காது இருவரின் பேச்சுக்கள் நின்றிருந்தது.

“நின்னுட்டே இருந்தா என்ன அர்த்தம்? இருக்க வேலையெல்லாம் யார் செய்வா?” என்று வந்த வர்ஷினி, “இந்தாங்க உங்க மருமகன் கேட்ட காஃபி. நீங்க கொடுக்கிறீங்களா? நானே எடுத்துட்டு போகட்டுமா?” என்றாள்.

“நானே” என்றவர் கோப்பையை வாங்கிட வர, “முதலில் உங்க டீயை குடிங்க” என்ற வர்ஷினி, அவர் குடிக்கவும், “நீங்களா பேசுவீங்கன்னு அத்தை எதிர்ப்பார்க்கிறாங்க சித்தி. பேசிப்பாருங்களேன்” என்றாள்.

வர்ஷினி கையிலிருந்த காஃபியை வாங்கிய சந்தியாவிடம் பெருமூச்சு மட்டுமே!

“ஒருத்தரும் இறங்கி வராம எப்படி பேச வைக்கிறது?” என்று கடந்த ஏழு வருடங்களாக யோசிப்பதைப் போன்று இப்போதும் ஏதும் வழிகிட்டிவிடாதா என்ற யோசனையோடு, தன்னுடைய பிள்ளைகளை பள்ளிக்கு கிளப்ப மாடியேறிய வர்ஷினி எதிர்ப்பட்ட புவித்தை முறைத்து அளவம் காட்டியவளாக கடந்தாள்.

“அவ்வளவும் சேட்டை அண்ணி” என்று புவித் பாதி படியில் நின்று சொல்ல, மேல் படிக்கு சென்றுவிட்ட வர்ஷினி, “நீங்க எதுக்கு என்கிட்ட பேசுறீங்க? உங்களுக்கும் எனக்கும் தான் எப்பவோ உறவு இல்லைன்னு ஆகிப்போச்சுதே” என்றாள்.

“அப்படியா?” என்று அதிர்ச்சியை போலியாய் காண்பித்த புவித், “பிரேக்கப் டாக்ஸ் வச்சிருக்கீங்களா? காட்டுங்க” என்று அவளை நோக்கி ஒரு படி முன்னேற,

“என் புருஷனை மதிக்காதவங்ககிட்ட எனக்கென்ன பேச்சு” என்று வேகமாக சென்றிருந்தாள் வர்ஷினி.

அதில் சிரித்தபடி கீழ் வந்த புவித், இளங்கோவிடம் தொழிலைப்பற்றி பேசிக்கொண்டிருந்த விதார்த்தின் அருகில் சென்று அமர்ந்தான்.

விதார்த் தன்னுடைய தம்பியை நொடிக்கும் குறைவாக பார்த்துவிட்டு தள்ளி அமர,

“ரொம்பத்தான்” என்ற புவித் மேலும் ஒட்டி அமர்ந்தவனாக, விதுவின் கையிலிருந்த கோப்பையை பிடிங்கி தான் குடித்தான்.

“உனக்கு வேணும்னா கேட்டு வாங்கிக்க வேண்டியது தானேடா!” என்ற விதார்த், “இவன்கிட்ட சொல்லி வைங்க சித்தப்பா. இவனுக்கும் எனக்கு பேச்சு கிடையாது” என்றான். இளங்கோவிடம்.

“கேட்டுக்கோ ஆரூஷ். உன் அண்ணன் உன்மேல கோவமா இருக்க மாதிரி தெரியுது” என்றார் இளங்கோ. புவித்திடம்.

“மாதிரிலாம் இல்லை. உண்மையிலே கோபமா இருக்கேன்” என்ற விதார்த், முகத்தை உம்மென்று வைத்திட,

“கோபம் கூட உங்களை க்யூட்டா காட்டுது விதுண்ணா” என்ற புவித், விதார்த்தின் கன்னங்கள் இரண்டையும் பிடித்து இழுத்தவனாக, “இப்படியே கோபமா இருந்துக்கோங்க” என்று வெளிப்பக்கம் ஓடியிருந்தான்.

“அதிர்ந்து பேசக்கூட வராது. ஆனால் வால் மட்டும் எட்டு முழத்துக்கு இருக்கு. ஒரு ப்ரொஃபெஸர் மாதிரியா இருக்கான். இவன் பசங்களை அதட்டி பாடம் நடத்துவானா” என்று சிரித்த இளங்கோ, “மிதுன் வரான்” என்றார்.

“ம்ம்… கால் பண்ணான் சித்தப்பா” என்ற விதார்த், “ரெண்டு வருஷமா கூப்பிட்டு வராதவன் இப்போ வரான். என்னன்னு கேட்டீங்களா?” எனக் கேட்டான்.

“ஆருஷ்க்கு தெரிஞ்சிருக்குமே!”

“அவன் சொல்லிட்டாலும். ரெண்டும் மாமன் மச்சாங்கிறதை தாண்டி ப்ரெண்ட்ஸ் ஆச்சே! சொல்லிடுவானா?” என்ற விது, “வரட்டும். தெரியும்தானே” என்றான்.

“ஃபேக்டரி போகலையா விது?” என்று கேட்டுக்கொண்டே வந்த சிதம்பரம், “இந்தமுறை டிஜிட்டல் வாட்சில் ஏதும் புது அப்டேட் கொடுக்க முடியுமா பாருப்பா” என்றார்.

“உங்க சின்ன மகன்கிட்ட சொல்லுங்க அதை” என்ற விதார்த், “அவன் எதுக்காக மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிச்சான். இப்போ என்ன வேலை பார்த்திட்டு இருக்கான். டெக்னிக் லெவல் அப்டேட் எல்லாம் அவன் கண்ட்ரோல்ல எடுத்துக்கணும் சொல்லித்தானே படிச்சான். அவன் ஸ்டார்டிங்கில் டிசைன் பண்ண வாட்சஸ் எவ்வளவு ஹிட் ஆச்சு. திரும்ப ஒரு ஹைப் வேணும். உன் வாத்தியார் வேலையை விட்டுட்டு வாடான்னு கூப்பிட்டால் முடியாதுங்கிறான். மொத்தமா என்னை மேனேஜ் பண்ணவிட்டுட்டு ஜாலியா இருக்கான்” என்றான்.

“அவன் ஆரம்பத்தில் கேட்டப்போ நீதானப்பா சரின்னு சொன்ன. இப்போ இப்படி சொன்னா எப்படி?” என்ற சிதம்பரம், “திரும்ப வந்திடுவான்” என்றார்.

“என்னவோ போங்க. குட்டியா பிரேக் வேணும் கேட்டான். சரின்னு சொன்னேன்” என்ற விதார்த், “நான் பாக்குற தொழில் எனக்கு மட்டுந்தான்னு மொத்தமா நான் மட்டுமே எல்லாம் எடுத்துக்கப்போறேன் பாருங்க” என்று சொல்லி முடிக்கும் முன்பு,

“எல்லாமே உங்களுக்குதான் விதுண்ணா. மிதுன், கனி, உத்ரா கூட போட்டிக்கு வரமாட்டாங்க” என்று உள் வந்திருந்தான் புவித். விதார்த் அப்பட்டமாக முறைத்து வைத்தான்.

“நானுமே உங்களுக்கு தான்” என்று கண்ணடித்தான் புவித்.

“போடா” என்ற விதார்த், “இப்போ நீ நம்ம கம்பெனிக்கு திரும்ப வர முடியுமா? முடியாதா?” என கறாராகக் கேட்டான்.

“இன்னும் கொஞ்ச நாள் விதுண்ணா” என்று முகம் சுருக்கிய புவித், விதார்த்தின் தோளில் கைகளைச் சுற்றி கட்டிக்கொண்டவனாக, “இந்த ஜாப் மைண்ட்க்கு ரிலாக்ஸா இருக்குண்ணா. மார்கெட்டிங், சேல், நெம்பர் ஒன் பிளேஸ் இப்படி எந்தவொரு டென்ஷனும் இல்லமா நல்லாயிருக்கு” என்றான்.

“உனக்கு பிடிச்சிருக்கே! அதுக்காக மட்டும் தான் நானும் இவ்வளவு வருஷம் விட்டிருந்தேன்” என்ற விதார்த்தின் கன்னத்தில் முத்தம் வைத்த புவித்,

“அதேமாதிரி இனியும் விடுங்களேன்” என்று கண்கள் சிமிட்டினான். இதழில் ஒட்டி நின்ற புன்னகையுடன்.

“இப்படி ஏதும் செய்தே ஏமாத்து” என்ற விதார்த், “அட்லீஸ்ட் டெக்னிகல் வொர்க்காவது பாருடா” என்றான்.

“வில் ட்ரை” என்று சிரித்த புவித், “காலேஜூக்கு டைம் ஆச்சு” என்று ஓடிவிட்டான்.

அவர்களது குடும்பத் தொழில் சுவர்கடிகாரம் மற்றும் கைக்கடிகாரம் உற்பத்தி செய்வது. சிதம்பரமும், இளங்கோவும் சேர்ந்து சிறிய அளவில் தொடங்கியது. வெளியில் டிஜிட்டல் வடிவம் வாங்கி உற்பத்தி செய்து விற்பனை செய்து கொண்டிருந்தவர்கள், வருடங்கள் செல்ல செல்ல வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் இயந்திரங்கள் அனைத்தும் சொந்தமாக உற்பத்தி செய்யத் துவங்கியிருந்தனர். இதில் சந்தியாவிற்கு திருமணம் ஆனதும், அவரின் கணவர் ராஜேந்திரனும் இணைய, மூவரும் சமமாக தங்களது உழைப்பை போட்டு தொழிலை வளர்த்தனர்.

விதார்த் தொழிலுக்கு வந்த பின்னர் சொந்தமாக தொழில்நுட்ப வடிவத்தை தாங்களே உருவாக்கி இந்தியாவின் முதன்மை பிராண்டாக உயர்ந்து நிற்கிறது அவர்களது நிறுவனமான ராயல்டி டைம்ஸ்.

தற்சமயம் கடிகாரங்கள் மட்டுமில்லாது கணினி, மடிக்கணினி, அலைபேசி மற்றும் இன்னும் பிற இவர்களது ராயல்டி டைம்ஸ் கீழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. வேறெந்த நிறுவனமும் கொடுத்திடாத அம்சங்கள் ராயல்டி டைமில் வந்திட, இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் அசைக்க முடியாத நிறுவனமாக வளர்ந்துள்ளது.

“ராயல்டி டைம்ஸ்” சிதம்பரம் குடும்பத்தின் அடையாளம்.

படிப்பை முடித்த புவித் இந்நிறுவனத்தில் தான் தொழில்நுட்ப வடிவ பிரிவில் அமர்ந்து பல புதிய வடிவங்களை தயாரித்திருந்தான்.

திடீரென ஏற்பட்ட வலி நிறைந்த நிகழ்வு, அவனது மனதுக்கும் மூளைக்கும் அமைதியை வேண்டிட, இரண்டுக்கும் அதிக உழைப்பு வேண்டுமான தொழிலைவிட்டு ஆசிரியர் பணிக்கு சென்றிருந்தான்.

***************

காலையில் கனிந்த வெயில் இல்லை. வானம் முழுக்க பனித்தூவி இருக்க, அகனிகா எப்போதும் போல தன்னுடைய வழமையான நேரத்திற்கு எழுந்துகொண்டாள்.

இமைகள் திறந்ததும் அவளது பார்வை தனக்கு அருகில் மெத்தையில் கணவன் படுக்கும் வெற்றிடத்தைப் பார்த்துவிட்டு, படுக்கையைத் தாண்டி உள்ள சிறு மேசையில் வீற்றிருக்கும் தங்களின் திருமணப் புகைப்படத்தில் சிலநிமிடங்களுக்கு நிலைத்திருந்தவள் மீண்டும் கண் மூடி இருந்தாள்.

புவித்தின் மார்பில் சாய்ந்திருந்ததன் அமைதியை அவளது உள்ளம் ஏற்க மறுத்தாலும், உடல் அதை விட்டு விலக மறுத்தது. அவள் அமைதி கொள்ளும் ஒரே இடம் புவித் மட்டுமே!

பிடிவாதம் பிடிக்கும் குழந்தை போல், நிழலில் நிம்மதியடையும் பயந்த மனிதர் போல, அவன் அருகில் இருப்பது அவளுக்குள் சிறு அழுத்தங்களை விலக்கித் தந்தது.

எழும் நேரம் கடந்தும் கண்கள் மூடியே இருந்தவளுக்கு மூளையெல்லாம் ஒன்றை மட்டுமே சிந்தித்து ஓடிக் கொண்டிருந்தது.

என்ன நினைத்து காக்கி உடை அணிந்தாளோ? இன்றுவரை அந்த எண்ணம் மட்டும் ஈடேறவில்லை.

தேடி கிடைக்காத தகவல்களை இரண்டு வருடங்களாக தேடிக்கொண்டு மட்டுமே இருக்கின்றாள்.

கடிகாரத்தின் ஓசையில் கடக்கும் நேரம் உணர்ந்து மெல்ல எழுந்தமர்ந்தாள்.

மேசையில் இருந்த வழக்கு கோப்புகள் மூடிய நிலையிலிருந்தன. நேற்றைய இரவு புவித்தின் கடைசி செயல் அது என்பதை உணர்ந்தவளது இதயம் ஓரளவு நெகிழ்ந்தது. அவளது சிறு செயலிலும் அத்தனை கவனமிருக்கும் அவனிடத்தில்.

டிரெஸ்ஸிங் டேபிளில் அவனது ஆடைக்கு அருகில் அவளின் காக்கி உடையும் அயர்ன் செய்யப்பட்டு மடித்து வைக்கப்பட்டிருந்தது.

பார்த்ததும் கணவனின் அவளுக்கான உரிமை செயலில் இதழை எட்டாத புன்னகை அவளிடம்.

அவனால் மட்டுமே மறந்து, மரத்துப்போன இதம் அவ்வவ்வபோது அவளுள் ஊடுருவி மறைகிறது.

புவித் கதவினை திறந்துகொண்டு வர வேகமாக மெத்தையிலிருந்து இறங்கி குளியலறைக்குள் நுழைந்திருந்தாள்.

“இவ்வளவு நேரம் வெட்டியா உட்கார்ந்திருந்துட்டு என்னை பார்த்ததும் ஓடுற நீ?” என்றவன், “மேடம் வெளியில் வந்துதான் ஆகணும். ஆனா வெளியில் வரவும் என் உதவி வேணும்” என்று கல்மிஷமாகக் கூறினான்.

எப்போதுமே அவனிடம் தன்னையறியாது தாவி ஓடும் மனதின் மீது அவளுக்கு அத்தனை பயம். எங்கே அவனிடம் காதலில் மூழ்கிப்போனால் தன்னுடைய எண்ணத்தில் பின்வாங்கிவிடுவோமோ என்ற எண்ணம். அவளின் எண்ணம் அறிந்துதானோ என்னவோ அவளது மறுப்புகளையெல்லாம் ஒரு பொருட்டாவே ஏற்காது அடம் பிடித்து அவளை மனைவியாக்கிக் கொண்டான்.

புவித்தின் பேச்சில் தான் அவனை கண்டதும், மாற்றுடை கூட எடுக்காது உள்ளே புகுந்தது நினைவு வந்தது. மூடிய கதவில் சாய்ந்து நின்றிருந்தவள் நெற்றியில் தட்டிக் கொண்டாள்.

“தட்டுற தட்டுல இருக்க கொஞ்சூண்டு மூளையும் வெளிய குதிச்சிடப் போகுது.”

அவளின் செயலை உள்ளிருந்து பார்த்தவாறு அவன் சொல்ல, இந்த நொடி… தான் என்ன செய்வோம் என்பது வரை அனுமானிக்கும் அவனது காதலில் அவளின் வலி மேலும் மேலும் கூடியது.

மதிப்பு மிக்க நேசத்தை விலக்கி வைக்கும் வலி அது.

அப்படியே கதவில் சாய்ந்தவாறு கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்துவிட்டவளுக்கு அழுவதற்கு கூட இடமின்றி கண்கள் வறண்டு போயிருந்தது.

வாழ் முழுமைக்குமான அழுகையை அவள் முன்பே ஒருநாள் அழுது தீர்த்திருந்தாள்.

“கனி எனக்கு டைம் ஆகுது. காலேஜ் கிளம்பனும்.” புவித் குரல் கொடுக்கவே, முகத்தை கைகளால் தேய்த்து சரிசெய்து வெளியில் வந்தாள்.

உள்ளே சென்ற நிலையிலேயே வெளியில் வந்திருந்தாள்.

“ஃபீல் பண்ணிட்டு இருந்தியா?” அவளின் முன் கைகளைக் கட்டிக்கொண்டு அழுத்தமாக வினவினான்.

“அது… மாமா… நான்” என்றவள், தானாக அவனை இடையில் கையிட்டு அணைத்து, அவனது மார்பில் முகம் புதைத்திருந்தாள்.

தானும் அணைத்து அவளின் முதுகை ஆறுதலாக நீவி கொடுத்தவன், ஒருவார்த்தை பேசவில்லை. அவனுக்கும் அந்நேரம் பழைய நினைவுகள் மனதின் ரணத்தைக் கீறியிருந்தது.

“நீங்க மட்டும் ஏன் மாமா என்னை வெறுக்கல.” சிவந்த விழிகளோடு முகம் உயர்த்தி தன்னை பார்த்தவளின் நெற்றியில் முட்டியவன், “இப்போ யாரு உன்னை வெறுத்தாங்களாம்?” என்று அவளின் மூக்கை பிடித்து ஆட்டினான்.

“எனக்கேத் தெரியும்” என்ற அகனிகா, “என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதால் தான் உங்க வாழ்க்கையும் வீணாப்போகுது” என்றாள். அவனிலிருந்து பிரிந்து நின்று.

அவளை ஆழமாக ஒரு நொடி பார்த்தவன்,

“வீணாப்போகுது தெரியுதுல? அப்போ சரிபண்ண என்ன செய்யணும் யோசிங்க காக்கி மேடம்” என்றுவிட்டு குளியலறைக்குள் சென்று கதவடைத்தான்.

புவித் கூறிச் சென்றதில் அகனிகா தான் திகைத்து நின்றாள்.

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
28
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்