Loading

அத்தியாயம் 19

பயிற்சி நிலையத்தின் உரிமையாளர் எனும் அடிப்படையில் கூட இல்லாது, தீபிகாவின் நிலை கண்டும் ரங்கராஜன் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காது அமைதியாக நின்றிருப்பது புவித்திற்கு தவறாகப்பட்டது.

அந்நேரம் நீனாவும், “நீங்களே கால் பண்ணுங்க அண்ணா” என்று சொல்லவும், ரங்கராஜன் பதற்றம் கொண்டார்.

“என்னாச்சு?”

ரங்கராஜன் கைக்குட்டையால் முகத்தை துடைத்திட, அவரின் பதற்றம் குறித்து புவித் வினவினான்.

“ஆம்புலன்ஸ் வேண்டாம்ப்பா. சாதாரண மயக்கமாத்தான் தெரியுது. கொஞ்ச நேரம் பார்ப்போம்” என்றார்.

“முகத்துல தண்ணி தெளிச்சும் எழலையே சார்” என்ற புவித், ஆம்புலன்ஸ்க்கு அழைக்க முற்பட,

“ஆம்புலன்ஸ் வந்துட்டுப்போனா பெரிய இஷூ ஆகும்ப்பா. நான் அந்தப் பொண்ணோட பேரண்ட்டுக்கே கால் பண்றேன்” என்று ரங்கராஜன் தடுத்தார்.

“எதும் பெரிய பிரச்சினையா இருந்தா உயிருக்கே ஆபத்தா முடியுமே சார். ஆம்புலன்சுக்கு கால் பண்றது பெட்டர்” என்று புவித் சொல்லும்போதே தீபிகாவின் தந்தை அவளை அழைத்துச்செல்ல வந்துவிட்டிருந்தார்.

“இதோ தீபிகா அப்பா வந்தாச்சே” என்று ரங்கராஜன் கை காண்பிக்கவும், புவித்தும் நீனாவும் அவர் காட்டிய திசையில் பார்க்க, தீபிகாவிடம் மென் அசைவு.

இமைகள் பிரிக்க முடியாது பிரித்து கண்கள் திறந்தாள்.

“தீபிகா.” தன்னுடைய மகளைச் சுற்றி மூவர் நின்றிருக்கவே வேகமாக நெருங்கினார் அவர்.

“பயப்படாதீங்க… மயக்கமாகிட்டாங்க. எதனாலன்னு தெரியல. ஆனா இப்போ கண் முழிச்சிட்டாங்க” என்றான் புவித்.

“ரெண்டு நாளைக்கு முன்னதான் காய்ச்சல் வச்சு சரியாச்சு. அதனால எதுவும் இருக்குமோ?” என்றவர், “எப்படிடா இருக்கு? என்ன பண்ணுது?” என்று மகளின் கன்னம் தட்டி வினவினார்.

“ரொம்ப டயர்டா இருக்குப்பா” என்று குழறிய தீபிகா, “தண்ணி… தண்ணி வேணும்” என்று சைகை செய்தாள்.

நீனா தன்னுடைய போத்தலிலிருந்த தண்ணீரை புகட்டினாள்.

“அதான் கான்சியஸ் வந்திருச்சே! நீங்க கிளம்புங்க. தீபிகா கொஞ்சம் நார்மல் ஆனதும் அவங்க கிளம்புவாங்க” என்ற ரங்கராஜன், தங்களை அனுப்புவதிலே முனைப்புக் காட்டுவதாக நினைத்த புவித், “நீங்க எதுக்கும் ஒருமுறை ஹாஸ்பிடல் போயிட்டு என்னன்னு செக் பண்ணிக்கோங்க அங்கிள்” என்றான் தீபிகாவின் தந்தை சுந்தரிடம்.

ரங்கராஜன் தன்னுடைய முகமாற்றத்தை மறைக்க ரொம்பவே சிரமம் கொண்டார்.

“நீங்க ஏன் சார் ஒரு மாதிரி டிஸ்டப்டாவே இருக்கீங்க?” என்று புவித் கேட்க, “சென்டர் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகுது. எதுவும் பிரச்சினையாகிட்டா பேர் கெட்டிடுமே! அந்த பயம் தான்” என ரங்கராஜன் கூறிய காரணம் ஏற்புடையதாக இருக்க, புவித்தார் அதற்கு மேல் அவர் மேல் துளிர்த்த சந்தேகத்தை ஆராய்ந்து பார்க்கத் தோன்றவில்லை.

“ஆனாலும் உங்ககிட்ட படிக்கிற ஸ்டூடண்ட்ஸ் உங்க பொறுப்புதான சார். உங்களை நம்பித்தான அனுப்பி வைக்கிறோம். அப்போ அவங்களுக்கு ஒண்ணுன்னா என்னன்னு காப்பாத்த முயற்சி பண்ணுங்க சார்” என ரங்கராஜனிடம் தான் கணித்த தவறை சுட்டிக்காட்டினான் புவித்.

“இந்தமாதிரி இதுவரை நடந்தது இல்லை. முதல்முறை. எப்படி ஹேண்டில் பண்றதுன்னு கொஞ்சம் தடுமாறிட்டேன்” என்ற ரங்கராஜன், தன்னுடைய சிறு அசைவிலும் எதிர்மறை உணர்வினை பிரதிபலிக்கவில்லை.

அந்நேரம் ரங்கராஜனின் மொத்த கோபமும் நீனா மீதுதான். அவள் மட்டும் இல்லையென்றால், இந்த நொடியில் அவரின் எண்ணம் நடந்தேறியிருக்கும்.

“அப்போ நான் கூட்டிட்டு கிளம்புறேன் சார்” என்ற சுந்தர், “ஹாஸ்பிடல் போயிட்டு வீட்டுக்கு போவோம்டா” என்று தீபிகாவிடம் சொல்லியவராக, அவளின் கரம் பிடித்து அழைத்துச் சென்றார். அவருக்கு உதவியவராக நீனாவும் சென்றிட, புவித்தும் ரங்கராஜனிடம் புறப்படுவதாகக் கூறி வெளியேறினான்.

அவர்கள் சென்றதும் கதவினை அடைத்து தாழிட்ட ரங்கராஜன், பின்னங்கழுத்தில் இரு கைகளையும் கோர்த்துக் கொண்டு, அவ்விடம் அதிர ஆவெனக் கத்தினார்.

அந்நேரம் அவரின் அலைபேசி ஒலிக்க, எடுத்துப் பேசினார்.

“இன்னைக்கு மிஸ் ஆகிடுச்சு. நாளைக்குப் பார்ப்போம். இன்னைக்கு இதைவிட இன்னொரு முக்கியமான வேலை ஒன்னு இருக்கு” என்றவர் நேராகச் சென்றது தீபிகாவின் இல்லம்.

ரங்கராஜன் தான் வந்த வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்த அடுத்த நிமிடம் நீனாவின் அலைபேசிக்கு புகைப்படம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.

அப்போது தான் உறங்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த நீனா அவரின் எண்ணிலிருந்து தகவல் வரவும், திறந்து பார்க்கவே அஞ்சியவளாக அலைபேசியை அணைத்து வைத்து போர்வைக்குள் சுருண்டு கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

பயமென்றால் அப்படியொரு பயம் அவளுக்கு.

ஒவ்வொரு முறையும் அவளை ரங்கராஜன் மிரட்டுவது இவ்வாறுதான்.

ரங்கராஜன் இப்படியென்று தெரிவதற்கு முன்புவரை நீனாவுக்குமே விருப்பமான ஆசிரியர்களில் ரங்கராஜனும் ஒருவர்.

ரங்கராஜன் அப்படியொரு காணொளியை தானே, தன்னுடைய அலைபேசியில் காட்டிராவிட்டால், நிச்சயம் நீனாவே அவர் அப்படிப்பட்டவரென்று நம்பியிருக்கமாட்டாள்.

“சார் தப்பு பண்ணா கண்டிக்கிறன்னு கிள்ளுறது பின்னாடி அடிக்கிறதெல்லாம் தப்பாப்படுது” என்று ஒரு சில தோழிகள் சொல்லும்போதெல்லாம், “எல்லாம் நம்ம எண்ணம் தான் காரணம். ஆனால் நாம நல்லா படிக்கணும்னு கண்டிக்க அடிச்சா, அதை தப்பா சொல்லுவீங்களா?” என்று நீனாவே ரங்கராஜனுக்கு துணையாக பேசியிருக்கிறாள். எல்லாம் அந்த ஒருநாள் வரைதான்.

அதன் பின்னர் ரங்கராஜனின் நிழலென்றாலும் உடலில் தானாய் ஒரு நடுக்கம், மனதில் அப்பட்டமான பயம் யாவும் தன்னைப்போல் குடியேறிவிடும்.

யாரிடமும் சொல்ல முடியாது தவிப்பவளுக்கு… சில நேரத்தில் சொல்லிவிடலாமென்றும் தோன்றும். ஆனால் முடியாது. ரங்கராஜன் அந்தளவிற்கு வார்த்தையால் மட்டுமல்லாது, தன்னிடமிருக்கும் ஒன்றை வைத்தும் நீனாவை தன்னுடையக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார்.

வகுப்பில் அனைத்து மாணவிகளிடமெல்லாம் ரங்கராஜன் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதில்லை. தனக்கு யார் வேண்டுமோ அவர்களிடம் தன்னை முழுமையாய், தனது எண்ணத்தை வெளிப்படையாய் காட்டிக்கொள்வார்.

அவருக்கு தற்போது நீனாவின் மீது கண். ஆதலால் அவளிடம் தனது எண்ணத்தை நேரடியாகவே கூறியிருந்தார்.

மறுத்து, கோபம் கொண்டு தைரியமாக பள்ளி நிர்வாகத்திடமும், வீட்டிலும் சொல்லிவிடுவதாக எதிர்த்துக் கூறியவளின் முன்பு தனது அலைபேசியை ஓடவிட்டுக் காண்பித்தார்.

பள்ளி விழா ஒன்றின் போது, நாடகத்திற்காக நீனா ஆடை மாற்றும் காணொளி ஓடியது.

உடல் கல்லாய் அசைவற்று நிற்க, அதிர்ந்து மூச்சுவிடவும் மறந்தவளாய் வாயில் கை வைத்து பார்த்தவளின் கண்கள் அகல விரிந்திருக்க, கண்ணீர் கோடென கன்னம் வழிந்தது.

“********”

நீனாவின் உடல் தோற்றம் குறித்து ரங்கராஜன் அருவருப்பு மிகுந்த ரசனையில் கூறிட, காதுகளை இரு கைகளாலும் பொத்திக்கொண்டு தரையில் முட்டியிட்டவள்…

“அய்யோ வேணாம்” என்று வெடித்துக் கத்தினாள்.

“இதை நான் மட்டும் பாக்கணுமா இல்லை உன் வீட்டில் உன் அப்பா, சித்தப்பா, மாமா, அண்ணன்னு எல்லாரும் பாக்கணுமா?” என அவள் முன்பு குத்திட்டு அமர்ந்து, அவளின் கன்னத்தை புறங்கையால் தீண்டியவராகக் கேட்க…

முகம் சுளித்தவளாக பின்னால் நகர்ந்திருந்தாள். வேகமாக.

“இதுக்கேவா?” என்ற ரங்கராஜன், “வெளியில சொல்லணும்னா சொல்லிக்கோ. ஆனால் அதுக்கு முன்ன இதையும் பார்த்திடு” என்று மற்றொரு காணொளி ஓட்டிக் காட்டினார்.

பார்த்ததும் பதறி வேகமாக பின்னால் நகர்ந்து சுவற்றில் ஒண்டியிருந்தாள்.

“அது நான் இல்லை… நான் இல்லை” என்றவள் அழுது அரற்றியவள், “அது பொய்” என்றாள்.

ஓடியக் காட்சியில் ரங்கராஜனுடன் இருக்கும் பெண் அவளே!

“பொய்ன்னு உனக்கும் எனக்கும் தான் தெரியும். இந்த மாதிரி வீடியோவுக்கு எவ்வளவு மவுஸ் தெரியுமா? இணையத்துல இதுக்குன்னு தனி கூட்டமே இருக்கு. அவங்களுக்கெல்லாம் இது உண்மையா பொய்யான்னு தேவையில்லை. பாக்குற வீடியோவில் இருக்கும் பொண்ணுங்க எல்லாம் தன்னோட” என்று அவர் முடிக்கும் முன்,

“அய்யோ வேணாம்… நான் எதுவும் கேட்க வேணாம்” என்று கத்தினாள்.

“அப்போ உனக்கு ஆப்ஷனே இல்லை. நான் சொல்றதை கேட்டுதான் ஆகணும்” என்ற ரங்கராஜன், “நான் ரொம்பவே ஸ்மூத்தா ஹேண்டில் பண்ணுவேன். பயப்பட வேணாம். வேணும்னா உன்கூட சுத்திட்டு இருந்துச்சே அவந்திகா… அவளைக் கேட்டுப்பாரு” என்க, “அவர் தொடுறது, கிள்ளுறது எல்லாம் தப்பா இருக்கு நீனா” என்று இரு மாதங்களுக்கு முன்பு அவந்திகா கூறியது நினைவு வந்தது.

தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதாள்.

“அதுக்கு அப்புறம் ஸ்கூல் வந்திருக்கலாம். நான் ஒன்ஸ் யூஸ் பண்ணதை திரும்ப யூஸ் பண்ணமாட்டேன். வேற ஊருக்கு போய்ட்டாள்ல அவள்?” என்றார்.

அவந்திகாவின் தந்தைக்கு திடீர் வேலை மாற்றம். அதனால் ஊரைவிட்டுச் சென்றதாகக் கூறிய செய்திக்குப் பின்னால் இப்படியொரு சம்பவம் அரங்கேறியிருக்குமென்று நீனா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

அவளால் இதிலிருந்து எப்படி வெளியில் வருவதென்று தெரியவில்லை. மனமும் மூளையும் முற்றிலும் குழம்பியிருந்தது. அதீத பயம் அவளை செயலிழக்கச் செய்திருந்தது.

“இது ரொம்பவேத் தப்பு சார். நீங்க இப்படி பண்ணலாமா?” எனக் கேட்ட நீனா, “என்ன பண்றது? தப்புன்னு தெரியுது. ஆனாலும் தப்புன்னு தெரிஞ்சும் அதை செய்யுறது செம கிக்” என்று கண்ணடித்தார்.

“உங்களுக்கு நாங்க சின்னப்பசங்கன்னு தெரியலையா?” எனக் கேட்ட நீனாவுக்கு, தனியாக ஆய்வுக் கூடத்தில் மாட்டிகொண்ட பயம் வேறு அதிகரித்தது. இங்கு வைத்தே ஏதும் செய்துவிடுவாரோ என்று.

தனக்கு முன்னால் ஒரு இன்ச் இடைவெளியில் ரங்கராஜன் குத்திட்டு அமர்ந்திருக்க, இனி நகர்வதற்கு இடமில்லை என்றபோதும் சுவற்றோடு தள்ளி தள்ளி அமர்ந்தாள்.

“வயசுல மட்டும் தான் நீங்க சின்னப்பொண்ணுங்க” என்று நீனாவின் கேள்விக்கு பதில் சொல்லிய ரங்கராஜன், “சுவத்தை இடிச்சிடாத” என்றார்.

“வேணாம் சார் விட்டுடுங்க” என்று நீனா கை குவித்து வேண்டிட, “நான் கேட்டதை செய்தா விட்டுடுறேன்” என்றார். இரக்கமில்லாப் பார்வையோடு.

அந்நேரம் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டு ரங்கராஜன் எழுந்து விலகி நிற்க, விட்டால் போதுமென்று நீனா வேகமாக இன்னொரு வாயில் வழியாக ஓடியிருந்தாள்.

“என்ன சார் நீங்க கெமிஸ்ட்ரி லேப்ல?” ஆய்வுக்கூடத்துக்கு உரித்தான ஆசிரியர் கேட்க, “இந்தப்பக்கம் போகும் போது ஏதோ சத்தம் கேட்டுச்சுன்னு உள்ள வந்துப் பார்த்தேன்” என்று சிரித்தபடி பதில் சொல்லி சமாளித்திருந்தார் ரங்கராஜன்.

அடுத்தடுத்த நாட்கள் வெளிப்படையாக ரங்கராஜன் நீனாவை சீண்டுவதும் தொல்லை செய்வதுமாக இருந்திட, யாரிடம் சொல்ல வேண்டுமென்று தெரியாது பள்ளிக்கு செல்லவே பயந்து அஞ்சினாள்.

ரங்கராஜன் வகுப்பென்றாலே தவிர்க்கத் துவங்கினாள். அது அத்தனை எளிதாகவும் இருக்கவில்லை. அடிக்கடி உடல்நிலை சரியில்லை எனக்கூறி தப்பிக்கவும் முடியாதுபோனது.

வீட்டில் சொல்லிவிடலாமென அவள் நினைக்கும் தருணங்களிலெல்லாம் ரங்கராஜன் காட்டிய காணொளி நினைவில் வந்து அவளை கட்டுப்படுத்திவிடும்.

சில நேரங்களில் பயத்தை ஒதுக்கி வைத்து நடப்பது நடக்கட்டுமென்று உண்மையை சொல்லிவிடலாமெனத் தோன்றும் எண்ணம் தோன்றும் கணமே காணமல் போய்விடும்.

பள்ளி படிப்பின் இறுதியிலிருக்கும் சிறு பெண்ணவளுக்கு இத்தகைய சூழலை எப்படி கையாள்வதென்று தெரியவில்லை.

நீனாவின் மாற்றங்கள் வைத்து அகனிகா கேட்கும்போதெல்லாம், தொண்டைக்குழி வரை வந்துவிடும் வார்த்தைகளை, தனது உடலை தானே பார்க்க கூசும் வகையில் இருக்கும் காட்சிகள் கண்முன்னே வந்து தடை செய்திடும்.

முள் மேல் நடக்கும் பயணமாக நாட்கள் நகர,

அந்த மாதத் தேர்வில் ரங்கராஜன் பாடத்தில் தோல்வி பெற்றிருந்தாள்.

நன்றாக எழுதியபோதும் மதிப்பெண் வராதது, அதிலும் தோல்விபெற்றது எதற்கென காரணம் அறிந்தவள், அவரிடம் ஏனென்று கேட்கக்கூட அருகில் செல்லவில்லை.

ஒவ்வொரு மாதத் தேர்விலும் இதுவே தொடர வீட்டில் அழுத்தம் கூடியது.

ஒரு கட்டத்தில் தாங்க முடியாது,

“நான் நல்லாதான் எழுதுறேன். அப்புறம் ஏன் சார் மார்க் போட மாட்டேங்கிறீங்க?” என்று நீனா கேட்க, “என் இஷ்டம்” என்றவர், “தினமும் ஈவ்வினிங் என் டியூஷன் வா. மார்க் தானா வரும்” என்றார்.

நீனா முடியாதென அடமாக நின்றபோதும், அகனிகாவால் அவள் ரங்கராஜன் பயிற்சி நிலையம் செல்லும்படி ஆனது.

நீனாவின் நாட்டம் படிப்பில் குறைகிறதென்று குடும்பத்தினர் வருத்தப்பட, அகனிகா தான் பல இடங்கள் விசாரித்துவிட்டு ரங்கராஜன் பயிற்சி நிலையம் நன்றாக உள்ளதென்று பரிந்துரை செய்தது.

அதுமட்டுமில்லாது காலமும் சூழலும் யாரும் எதிர்பாராத நிகழ்வொன்று அரங்கேறியதற்க்கு அகனிகாவை காரணமாக்கியிருந்தது.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
11
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்