அத்தியாயம் 18
தினமும் நீனாவை பயிற்சி வகுப்பிற்கு அழைத்துச் செல்லும் பணி அகனிகாவுடையதாகியது.
நீனாவின் வற்புறுத்தலால் அங்கேயே காத்திருந்து அழைத்து வருதலும் வாடிக்கையானது. இதனால் அகனிகாவின் கல்லூரி பாட வேலைகள் செய்திட காலதாமதமாகியது. இரவு வெகுநேரம் விழித்திருந்து அவளது பாடங்களை செய்வதால் சரியான உறக்கமின்றி வெகுவாக சோர்ந்து காணப்பட்டாள்.
“நீயென்ன இவ்வளவு டல்லா வர?” கல்லூரியில் அன்றைய தினம் வகுப்புகள் முடிந்து, அகாவிற்காக வாகனங்கள் தருப்பிக்கும் இடத்தில் காத்திருந்த புவித், ஓய்ந்துப்போய் வரும் அகாவிடம் கேட்டிருந்தான்.
“நீனா டியூஷன் போக ஸ்டார்ட் பண்ணதுல இருந்து என் தூக்கம் போச்சு. இன்னைக்கு முழுக்க லேப்… நிக்க வச்சே முடியல” என்று புவித்தின் தோள் சாய்ந்தாள்.
“தூக்கமா வருது. இதுல நின்னுட்டே தூங்கி விழ போயிட்டேன். சுதாரிச்சு நிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு” என்றவள், “கொஞ்ச நேரம் இப்படியே இரு மாமா. தூங்கிக்கிறேன்” என்றாள்.
“ஏன் நைட்ல தூங்க லேட் பண்ற?” என்ற அகனிகாவை தள்ளி நிறுத்த முயன்றான்.
“நீனாவுக்கு டியூஷன் முடிஞ்சு வரவே எட்டுக்கு மேல ஆகுது. அதுக்கு அப்புறம் சாப்பிட்டு படிக்க உட்காரவே ஒன்பதுக்கு மேல ஆகுது. எனக்கும் செமஸ்டர் வர இருக்கே” என்றவள் மீண்டும் அவனின் தோள் சாய்ந்தாள். புவித் தள்ளி நிறுத்தினான்.
“இப்போ உங்க மேல சாய்ஞ்சா என்ன?” என்று அவள் இடுப்பில் கைகள் வைத்துக்கொண்டு முறைத்தாள்.
“யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க கனி. தள்ளி நில்லு, ஜானு வந்ததும் கிளம்பிடலாம்” என்றான்.
“நான் உங்க பக்கத்தில் நின்னா உங்களை தப்பா நினைப்பாங்களா?”
“ஆமா.”
அவள் கேட்ட தொனியை அவன் கவனிக்கவில்லை.
“ஏன்? நீங்க உங்க கேங் கேர்ள்ஸ் கூட நின்னதே இல்லையா?”
“அவங்க என் பிரண்ட்ஸ் அப்படின்னு தெரியும்.”
“ஹோ” என்ற அகனிகா, “அப்போ நான் உங்க சொந்தம்ன்னு நிறைய பேருக்குத் தெரியுமே! தப்பா நினைக்க என்ன இருக்கு?” என பார்வையில் கூர்மையைத் தேக்கி வினவினாள்.
“நீ என் அத்தைப்பொண்ணு. அந்த ஒரு காரணம் போதாதா? ரெண்டு பேரும் தனியா நிக்கிறதை பார்த்தா காசிப் பேச” என்ற புவித், கேன்டீன் சென்றிருந்த ஜானவி வரவும், அவளருகில் சென்று அவளிடமிருந்த தனது புத்தகத்தை வாங்கிக்கொண்டு திரும்பிட அகனிகாவை காணவில்லை.
“இவ எங்க?” என்று அவ்விடத்தை அலசிய புவித், ஜானவி கைகாட்டிய திசையில் பார்க்க, அங்கிருந்த மைதானத்தின் மேடையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாள் அகனிகா.
“என்னடா சொன்ன? ஏன் அங்கபோறா?”
“தெரியல” என்று புவித் தோள்களை உயர்த்தி இறக்கிட…
சற்று முன்னர் தான் மைதானத்தில் கால்பந்து விளையாட்டு முடிந்திருந்தது. வெற்றி பெற்ற அணிக்கு பரிசு கொடுத்து முடிய, வந்திருந்த விருந்தினர், கல்லூரி விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் அனைவரும் சென்றிருக்க. மாணவர்களும் கலையத் துவங்கியிருந்தனர். மேடையில் இருந்த பொருட்களை அகற்ற ஆரம்பித்திருந்தனர்.
அங்கிருந்த ஒலிபெருக்கி முன்பு சென்று நின்றவள்…
“ஹாய் காய்ஸ்” என்று தன்னுடைய இரு கரங்களையும் உயர்த்தி துள்ளி அசைத்தாள்.
“என்னடா பண்றா இவள்?” ஜானவி கேட்க, “எதோ பண்ணட்டும். நமக்கென்ன” என்ற புவித், ஒலிபெருக்கியில் மொத்த கல்லூரியையும் நிறைத்த அகாவின் வார்த்தைகளில் மேடையை நோக்கி வேகமாக ஓடினான்.
“ஹாய் ஃபிரண்ட்ஸ். இங்க நிறைய பேருக்கு என்னைத் தெரியாம இருக்கலாம். வெகு சிலருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அது இப்போ விஷயமில்லை” என்றவள், “அதோ அங்க பார்க்கிங்கில் நிக்கிற புவித்… புவித் ஆருஷ் என்னோட மாமா. மாமா பையன். அவங்களை நான்” எனும்போதே அவளின் வாயினை கை வைத்து மூடியிருந்த புவித், “சாரி ஃப்ரெண்ட்ஸ்” என்று அவளை மேடையை விட்டு நகர்த்திக் கொண்டு வந்தான்.
“கொஞ்சம் கூட சென்ஸ் இல்லையா கனி?” எத்தனை முயன்றும் அவனுக்கு கோபமாகக் கேட்டிட வரவில்லை.
“ஆமா என்ன சொல்ல வந்த?” ஜானவி ஆர்வமாகக் குறுக்கிட்டாள்.
“ஹேய் ஜானு” என்ற புவித், “உனக்கு பெரிய கும்பிடு. இந்த வருஷம் நான் போயிடுவேன். அதுக்கு அப்புறம் உன் சேட்டையை எல்லாம் வச்சுக்கோ. காலேஜில் எனக்குன்னு ஒரு நேம் இருக்கு” என்றான் அனிகாவிடம்.
“லவ் பண்ணா தப்பா மாமா?” அகனிகா ஒன்றும் அறியாதவள் போன்று கேட்க,
“சத்தியமா எனக்கு முறைக்கக்கூட வரல கனி” என்று ஆயாசமாகக் கூறினான் புவித்.
“லவ்வா?” ஜானவி விழிகள் விரித்துக் கேட்க,
“ஆமாக்கா… லவ் தான். எனக்கு உங்க ஃப்ரண்ட் மேல” என்று அகனிகா புவித்தைப் பார்த்து கண்கள் சிமிட்டிக் கூறினாள்.
“டேய் ஆருஷ் சொல்லவே இல்லை” என்ற ஜானவியை, “நீ கொஞ்சம் சும்மா இரு ஜானு” என்றான் புவித்.
“என்ன கனி இது விளையாட்டு?” புவித் கடினப்பட முடியாது வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்தான்.
“என் லவ் அக்செப்ட் பண்ணுங்க. எத்தனை நாளுக்கு தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருப்பீங்க?” என்று உதட்டைச் சுளித்தாள்.
“படிக்கிற வயசில் எனக்கு லவ்வுல உடன்பாடில்லை” என்றான் புவித்.
“ஓ… அப்போ கல்யாணம்?”
“என்ன உளர்ற?”
“படிச்சிட்டு பண்ணுவீங்களா?”
உண்மைக்கும் அவளை எப்படி சமாளிப்பதென்று தெரியாது அவள் கேட்கும் விதத்தில் வாய்விட்டே சிரித்திருந்தான் புவித்.
அவனுக்கும் அவளை பிடிக்கும். ஆனால் காதலென்று நினைத்தது இல்லை. இருப்பினும் அவள் தன்னிடம் காட்டுக் பிடிவாதத்தில் அவனுள் ஒரு சுவாரஸ்யம். அது அவளின் முகம் காட்டும் காதலில் ஈர்ப்பைக் கூட்டியது.
“சிரிக்காம பதில் சொல்லுங்க. லவ் வேண்டாம். கல்யாணம் பண்ணிப்பீங்களா?” அகனிகா விரல் நீட்டி கேட்க,
“ஓகே சொல்லுடா. நம்மளை விரும்புற ஆள் கிடைக்கிறதெல்லாம் பெரிய சந்தோஷம்” என்றாள் ஜானு.
“அதான் நிரூப்புக்கு ஓகே சொல்லாம சுத்தவிட்டுட்டு இருக்கியா?” என ஜானுவை வாரிய புவித், தன்னுடைய பதிலுக்காக எதிர்பார்ப்பாகக் காத்திருக்கும் அகனிகாவின் விழிகளை ஆழ்ந்து நோக்கினான்.
“லவ் பண்ண முடியாது ஓகே. ஆனால் கல்யாணம் பண்ணா என்னதான் பண்ணனும் ஓகேவா?” என மீண்டும் கூறினாள். கண்களை சுருக்கி, உதடு குவித்து, கெஞ்சல் பாவனையில்.
“சரி… கல்யாணம் உன்கூடத்தான்” என்ற புவித், ஜானவி பார்த்த பார்வையில் பின்னந்தலையை அழுந்த வருடியவனாக தன்னுடைய வண்டியை நோக்கி நகர்ந்தான்.
அகனிகா மகிழ்ந்து துள்ளி குதிக்க…
“ரொம்ப குதிக்காத. அவனும் உன்னை லவ் பண்றான். லவ் இல்லாம கல்யாணத்துக்கு ஓகே சொல்ற ஆளா அவன்” என்று ஜானவி சொல்லிடவே அகனிகாவுக்கும் இந்த கோணம் பிடிபட்டது.
“மாமா” என்று அவனிடம் ஓடியவள்,
“நிஜமாவா?” எனக் கேட்டாள்.
“சொன்னா தான் தெரியுமா?” என்றவன், “வண்டியில ஏறு. ரெண்டு பேரும் ஒண்ணா போக வேண்டிய தூரம் ரொம்ப இருக்கு” என்றான்.
அகனிகாவுக்கு, அவளைப்போன்று அவன் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், அவனது காதலை உணர முடிந்தது. அதுவே போதுமாகவும் இருந்தது.
இருவரும் வீட்டிற்கு வர, உள் நுழைந்ததும் எதிர்ப்பட்ட வர்ஷினியை கட்டிக்கொண்டு ஆர்ப்பரித்தவளாக தனது மகிழ்வை வெளிப்படுத்தியிருந்தாள்.
புவித் புன்னகையோடு வர,
“கொஞ்சம் அலைய விட்டிருக்கலாம். இனி இந்த வீடு ஒரு ஆட்டம் ஆடும்” என்று சொல்ல, “அக்கா” என்று வர்ஷியை சுற்றி விட்டாள் அகனிகா.
வர்ஷினி தடுமாறி விழப்போக, சந்தியா வந்து பிடித்துக் கொண்டார்.
“என்ன விளையாட்டு அகா இது” என்று மகளை கடிந்துகொண்ட சந்தியா, “வர்ஷினி பிரெக்னென்ட்டா இருக்கா. இப்போ தான் ஹாஸ்பிடல் போயிட்டு வந்தாங்க” என்றார்.
“நிஜமாவா அக்கா?” என்று அகனிகா கேட்க, புவித் வாழ்த்து கூறினான்.
“சாரிக்கா… எனக்கு இப்படின்னு தெரியாதே. ரியலி வெறி சாரி” என்றாள்.
“இட்ஸ் ஓகே” என்று அகாவின் கன்னம் தட்டிய வர்ஷினி… “நீனா வெயிட் பண்ணிட்டு இருக்கா. டியூஷன் கூட்டிட்டு போயிட்டு வந்திடு” என்றாள்.
“மாமா, மிதுன் அண்ணா யாருமில்லையாக்கா?” அயர்ந்து கேட்டவள், நீள்விருக்கையில் தளர்வாக அமர்ந்தாள்.
அவளை கவனித்த புவித்,
“இன்னைக்கு நான் கூட்டிட்டுப் போறேன்” என்றான்.
“தேங்க்ஸ் புவி.”
அகா புவியென பெயர் சொல்லியதை புவித் மட்டுமல்ல சந்தியா, வர்ஷினியும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.
சிறு வயதிலிருந்தே பெயர் சொல்லாது உறவு முறை சொல்லியே பழக்கப்பட்டவள் இன்று புதிதாக, அதுவும் வீட்டில் மற்றவர்கள் கூப்பிடுவதுப் போன்றில்லாமல் அழைக்க புதிதாக நோக்கினர்.
“என் ஹஸ்பெண்டை பேர் சொல்லிக் கூப்பிடணும் ஆசை. அதான் இப்போலேர்ந்தே கூப்பிட்டு பழகிக்கிறேன்” என்று புவித்தை பார்த்து ஒற்றை கண்ணடித்தாள்.
“ரைட்… ரைட்…” வர்ஷினி நகர்ந்திட, சந்தியா மகளின் தலையில் கொட்டியிருந்தார்.
“ஒழுங்கா வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோ” என்று மீண்டும் கொட்டிவிட்டுச் சென்றார்.
புவித் தலையை தேய்த்தபடி இருந்தவளையே பார்த்து நிற்க,
“என்ன உங்களுக்கும் பேர் சொல்லிக் கூப்பிடக்கூடாதா?” என்றாள்.
“பொண்டாட்டி என் பேர் சொல்லிக் கூப்பிடுறதுல எனக்கு அப்ஜெக்ஷன் இல்லை” என்றவன், அவளின் விழிகள் கவிபாடும் முன் அங்கிருந்து சென்றிருந்தான். தனது முகம் காட்டும் செம்மையை மறைக்கும் பொருட்டு.
____________________
அன்று அகனிகாவால் முடியாததால் புவித் தங்கையை பயிற்சி நிலையம் அழைத்துச் சென்றான்.
“அகா இங்க தான் வெயிட் பண்ணுவாண்ணா. நீங்களும் இங்கேவ் உட்கார்ந்திருங்க” என்று நீனா இருக்கையை காண்பிக்க, “என்னால ரெண்டு மணி நேரம் ஒரே இடத்துல உட்கார்ந்திருக்க முடியாதுடா. ரொம்ப கஷ்டம். நான் முடியிற நேரம் சரியா இங்க இருப்பேன்” என்றவன், உள்ளே செல்லத் தயங்கித்தயங்கி நின்றவளை அனுப்பி வைத்துவிட்டு கிளம்பியவன், தங்கையின் பார்வையில் என்ன உணர்ந்தானோ, மனம் நெருடிட பயிற்சி நிலையம் வந்து நீனா காட்டியிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டான்.
பாடம் சென்று கொண்டிருந்தது. புவித்தின் பார்வை தங்கையின் மீது தான். அவளது உடல் மொழியில் ஒருவித சீரற்றத் தன்மை.
‘மேத் அவ்வளவு பயமா?’ என தனக்குத்தானே கேட்டுக்கொண்டவனுக்கு தங்கை மாட்டிக் கொண்டிருக்கும் சூழல் தெரியவில்லை.
தற்செயலாகத் திரும்பிய நீனா, புவித் அமர்ந்திருப்பதைக் கண்டதும், நடுக்கம் துறந்து நிமிர்ந்து அமர்ந்தாள்.
ஒரு மணிநேர இடைவேளையில் மாணவியருக்கு பயிற்சி நிலையம் சார்பாகவே தினமும் சிற்றுண்டிகள் கொடுக்கப்படுவது வழக்கம். அன்றும் வழங்கப்பட்டது.
அடுத்த வகுப்பும் முடிந்திட, மாணவியர் ஒவ்வொருவராக கிளம்பிட, நீனாவின் தோழி தீபிகா இருக்கையை விட்டு எழ முடியாது தடுமாறினாள்.
நிமிடத்தில் வகுப்பே காலியாகியிருந்தது.
“தீபி என்னாச்சு?” என்ற நீனா, வெளியில் நின்றிருந்த புவித்தை கைக்காட்டி அழைத்தாள்.
“என்ன நீனா?” என்று வந்த புவித், அரை கண்கள் மூடிய நிலையில் இருக்கையில் சார்ந்திருந்த தீபிகாவை பார்த்ததும், சில நிமிடங்களுக்கு முன்பு பாடம் நடத்திவிட்டுச் சென்ற ரங்கராஜனை உட்பகுதிக்குச் சென்று அழைத்து வந்தான்.
ரங்கராஜனை பார்த்ததும் நீனா தன்னைப்போல் சகோதரனின் கையைப் பற்றிக்கொண்டாள்.
தோழிக்கு ஒன்றென பயம் கொள்கிறாளென எண்ணிய புவித், தங்கையின் கையை தட்டிக் கொடுத்தவனாக,
“ஒன்னும் இருக்காது நீனா. பயப்படாத” என்றான்.
ரங்கராஜன் நீனாவை அடர்த்தியாய் பார்த்துவிட்டு,
“இவங்க பேரெண்ட்ஸ்க்கு இன்ஃபோர்ம் பண்ணி வரவழைத்து இவங்களை அனுப்பி வச்சிடுறோம். நீங்க கிளம்புங்க. உங்களுக்கு டைம் ஆச்சே” என்றார். புவித்திடம்.
“ம்ம்… ஓகே சார்” என்ற புவித், “அண்ணா இல்லை. அவள் அப்பா வரட்டும். நாம இருப்போம்” என்ற நீனா ரங்கராஜனை பார்ப்பதை தவிர்ப்பவளாக புவித்தை தடுத்து நிறுத்தினாள்.
“அதான் சார் பார்த்துக்கிறேன் சொல்றாங்களே” என்ற புவித், “பிளீஸ்ண்ணா… அவள் என் ஃப்ரெண்ட்” என நீனா கண்ணீரோடு சொல்ல…
“ஓகே… இருப்போம்” என்றான்.
“நாங்க வெயிட் பண்றோம் சார். நீங்களும் தனியா இருக்கீங்க. இவங்களும் இன்னும் கண்ணு திறக்கல. அவங்க அப்பா வரதுக்குள்ள எதுவும் எமர்ஜென்சி அப்படின்னா ஹெல்ப்பா இருக்கும்” என்று ரங்கராஜனிடம் கூறிய புவித்,
“முகத்தில் தண்ணி தெளிச்சுப் பாரு நீனா” என்று தானே அங்கு தண்ணீர் பிடித்து தீபிகாவின் முகத்தில் தெளித்தான்.
தீபிகாவிடம் மென் முனகல் மட்டுமே! கண்களை திறக்க முயற்சி செய்கிறாள். ஆனால் முடியவில்லை.
“ஏதோ ஹெல்த் இஷூ இருக்கும் போல சார். நாம ஆம்புலன்ஸ்கு கால் பண்ணுவோம்” என்றான் புவித்.
ரங்கராஜன் சட்டென்று எழுந்த பதற்றத்துடன் கைக்குட்டையை எடுத்து நெற்றியில் துளிர்த்த வியர்வையை துடைத்தார்.
“உன்கிட்ட போன் இருக்கே. நீங்களே கால் பண்ணுங்கண்ணா” என்ற நீனா, ரங்கராஜன் தன்னை முறைப்பதை உணர்ந்த போதும், அவர் புறம் கொஞ்சமும் திரும்பவில்லை.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
17
+1
+1