அத்தியாயம் 17
“நான் போகமாட்டேன்.” முகத்தை உம்மென்று வைத்து, மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த நீனாவதி யார் சொல்வதையும் கேட்காது தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தாள்.
“உங்க சார்கிட்ட நான் பேசிட்டேன் நீனா குட்டி. உன்னை கணக்குப் பாடத்தில் நூத்துக்கு நூறு வாங்க வைக்கிறது அவர் பொறுப்புன்னு சொல்லிட்டாரு” என்ற சிதம்பரம், அந்த மாதத் தேர்வில் தோல்வியை தழுவியதற்காக திட்டாாது அழும் மகளை தேற்றிக் கொண்டிருந்தார்.
“இப்படியே செல்லம் கொடுங்க. போர்ட் எக்ஸாமில் பெயிலாகிட்டு வந்து நிக்கப்போறா” என்ற அகிலா, “அகாவும் நீ படிச்ச ஸ்கூல் தான். உனக்கு வர டீச்சர்ஸ் தான அவளுக்கும் பாடம் எடுத்தாங்க. அவ மட்டும் எப்படி கிளாஸ் பர்ஸ்ட் வந்தா” என்று நீனாவை அதட்டினார்.
“இப்போ எதுக்கு கம்பேர் பண்றீங்க அத்தை. எல்லாரும் ஒன்னு கிடையாது. அதுவும் அகா அவளுக்கு முன்னாடி செட். இப்போ அவங்க டீச்சிங் ஸ்டைல் மாறியிருக்கலாம்” என்று நீனாவுக்கு துணையாக முன் வந்தான் மிதுன்.
“அவளை ஒன்னும் சொல்லிடக் கூடாதே உனக்கு” என்ற பவானி, “இப்படியே எல்லா பரீட்சையிலும் பெயில் ஆகிட்டு இருக்கிறது நல்லாவாடா இருக்கு” என்றார்.
“அவதான் போகலன்னு சொல்றாளே அப்புறமும் ஏன் கம்பல் பண்ணிட்டு இருக்கீங்க?” என்ற விதார்த், “அகா அவளுக்கு சொல்லிக்கொடுப்பா” என்றான்.
“நான் நிறைய ட்ரை பண்ணிட்டேன் மாமா. என்கிட்ட நல்லாதான் பண்றா… அப்புறம் எப்படி பெயில் ஆகுறான்னு தெரியல” என்று முகத்தைச் சுருக்கிய அகனிகா, “டியூஷன் போக உனக்கென்ன பயம் நீனா? நான் டெய்லி போயிட்டு வந்தனே” என்றாள்.
“எதுக்கு ஸ்கூல்ல அடிக்கிறது, திட்டுறது பத்தாதுன்னு ட்யூஷனிலும் அந்த சார் என்னை அடிக்கவா. நீ போனது வேற டியூஷன்” என்ற நீனா கண்களில் ஒருவித கலக்கம்.
“நான் போகமாட்டேன்” என்று பிடிவாதமாய் பிடிவாதம் பிடித்தாள்.
“இப்படி சொன்னா எப்படி நீனா? படிக்கலன்னா எப்படி பாஸ் பண்றது?” என்று கேட்ட சந்தியா, “அகா உன்னோடவே தான் இருப்பா. நீ முடிக்கிறவரை வெயிட்பண்ணி கூட்டிட்டு வருவாள்” என்றார்.
“ஏன் எல்லாரும் ஃபோர்ஸ் பண்றீங்க?” என்று நீனாவின் அழுகை அதிகரிக்க, “நான் வீட்டிலே சொல்லிக் கொடுக்கிறேன். அவள் அடுத்த எக்ஸாம் நல்லா எழுதுவா” என்றான் மிதுன்.
அகிலா மீண்டும் ஏதோ சொல்லவர,
“அவன் தான் சொல்லித்தரேன் சொல்றானே. ட்ரை பண்ணட்டும்” என்றான் புவித்.
“ஹான்… நான் மிதுன் மாமாகிட்டவே படிச்சிக்கிறேன்” என்ற நீனா, அகா தன்னை ஆராய்வாய் பார்ப்பதை தவிர்த்தவளாக அங்கிருந்து ஓடிவிட்டாள்.
“அவளை ஏன் அப்படி பாக்குற?” புவித் கேட்க, “சும்மா” என்று தோள்களைக் குலுக்கிய அகனிகா, “உங்ககிட்ட ஒன்னு சொல்லணுமே” என்றாள்.
“நீ எதுவும் சொல்ல வேணாம். ஒழுங்கா படிக்கும் வேலையைப் பார்” என்று அவளின் தலையில் கொட்டிவிட்டுச் சென்றுவிட்டான்.
“அப்படியென்ன சொல்லணும்? பய இந்த ஓட்டம் ஓடுறான்.” விதார்த் தன்னுடைய தம்பி சென்ற வேகம் கண்டு அகனிகாவிடம் வினவினான்.
“புவி மாமாவை நான் லவ் பண்றேன். அதை அவங்க எப்படியோ கேட்ச் பண்ணிட்டாங்க. அதை சொல்லிடுவேன்னு தான் ஓடுறாங்க” என்று அகனிகா முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு உரைக்க விதார்த் அவள் சொல்லியதில் அதிர்ந்து நின்றான்.
அங்கிருந்தவர்களும் ஒரு கணம் தடுமாறிப் பார்த்தனர்.
“என்ன எல்லாரும் அப்படி பாக்குறீங்க?” எனக் கேட்ட அகனிகா, “விளையாட்டுக்கெல்லாம் சொல்லல. உரிமை இருக்கே” என்றாள்.
“அடியே எங்க முன்னாடியே இப்படி சொல்ற?” அகிலா அவளின் காதை வலிக்காது திருக, “பையனை விரும்புறேன்னு அவங்க அம்மாகிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்றதாம்” என்ற அகனிகா, “நான் கேட்டா கட்டித்தர மாட்டீங்களா?” என்றாள்.
“வயசுக்கேத்த மாதிரி பேசு அகா” என்று சந்தியா அதட்டிட, “விடும்மா… அதான் சொல்றாளே. உரிமை இருக்குன்னு” என்று சிரித்தார் சிதம்பரம்.
“அப்போ உங்களுக்கு நான் மருமகளா வர ஓகேவா?” அகனிகா சிதம்பரத்திடம் ஆர்வமாய் கேட்டிட, “முடியாதுன்னு சொன்னாலும் விடமாட்டபோலயே” என்று சிரித்தார்.
“அதென்னவோ உண்மை தான். தூக்கிட்டுப்போய் கல்யாணம் பண்ணிக்கவும் நான் ரெடிதான்” என்றாள்.
“என்ன பேச்சுப் பேசுற நீ” என்ற அகிலா, “உன்கிட்டேர்ந்து என் பையனை பாதுகாத்து வைக்கணும்” என்று அவளின் கன்னம் இடித்தார்.
“எனக்கே எனக்குன்னு கொடுங்க. உங்களைவிட பத்திரமா பாத்துக்கிறேன்” என்றவள், “இப்போவே இல்லை. மாமா இந்த வருஷம் படிப்பு முடிக்கணும். வேலைக்குப் போகணும். நானும் படிக்கணும். அப்புறமா” என்றாள்.
“எல்லாம் பக்கா பிளான்” என்று இளங்கோ சிரிக்க, “வாழ்க்கைக்கு திட்டமிடுதல் ரொம்பவே முக்கியம் மாமா” எனக் கூறினாள்.
“சரிம்மா” என்ற இளங்கோ, “இந்த திட்டமிடுதல் ரொம்பவே சூப்பர்” என்றார்.
“தேங்க் யூ” என்றவள், “அப்புறம் என்ன? மீட்டிங் ஓவர். சங்கம் களையட்டும்” என்றாள்.
“வாயாடி” என்று அகிலா அவளின் கன்னம் தட்டி நகர, அனைவரும் நகர்ந்தனர்.
அகனிகா நேராகச் சென்ற இடம் நீனாவின் அறை.
அறைக்குள் பாட்டுச் சத்தம் அதிர, நீனா துள்ளலாக நடனமாடிக் கொண்டிருந்தாள்.
“ரொம்ப நல்லாயிருக்கு.” பாடலை நிறுத்திய அகனிகா கைகளைக் கட்டிக்கொண்டு கூறிட,
“ஏன் அகா இப்படி பண்ற?” என்று முகம் சுருக்கிய நீனா மெத்தையில் தளர்ந்து பொத்தென்று அமர்ந்தாள்.
“படிக்க கிடைக்கிற நேரமெல்லாம் இப்படி ஆட்டம் போட்டுட்டே இருந்தா எப்படி பாஸ் பண்ணுவ?” எனக் கேட்ட அகனிகா, “என்கிட்ட என்ன மறைக்கிற நீ?” என்று விழி உயர்த்தினாள்.
“நானா!” என்று பாவனையில் அதிர்வைக்காட்டிய நீனா, “எதுவுமில்லையே” என்று தோள்களை குலுக்கினாள்.
“அப்படியா?” என்ற அகனிகா, “எதுவாயிருந்தாலும் மறைக்காம சொல்லு நீனா” என்றாள்.
“அதெல்லாம் அவ்ளோ பெரிய விஷயமில்ல” என்ற நீனா தன்னுடைய விரல்கள் கொண்ட நடுக்கத்தை சட்டென்று மறைத்துக்கொண்டாள்.
“சரி டியூஷன் போறதுல உனக்கென்ன ப்ராப்ளம்?”
“அதான் சொன்னானே… ஸ்கூல்லையும் அவர்கிட்ட அடி வாங்கணும். ட்யூஷனிலும் வாங்கணுமா?”
“அது மட்டுந்தான் ரீசனா?”
“அஃப்கோர்ஸ்” என்ற நீனாவின் கருவிழிகள் அங்குமிங்கும் உருண்டது.
“உன்னோட எனிமிஸ் யாரும் அங்க டியூஷன் போறாங்களா?”
“அச்சோ அகா… ஏன் இவ்ளோ கேள்வி கேக்குற? ஸ்கூல் முடிஞ்சு வரவே அஞ்சு மணி ஆகிடுது. அதுக்கு அப்புறம் டியூஷன் போன நான் எப்போ என்னோட வெப் சீரிஸ் எல்லாம் பாக்குறது” என்று அலுத்துக்கொள்ளும் தேற்றம் காட்டினாள்.
“இந்த வருஷம் வெப் சீரிஸ் விட பாஸ் பண்றது முக்கியம். பார்த்துக்கோ” எனக் கூறியிருந்தாலும் அகனிகா நீனாவை கவனித்தபடியே இருந்தாள்.
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்துக் கொண்டிருந்தது.
அன்று குடும்பத்தார் அனைவரின் முன்னிலையிலும் தன்னுடைய விருப்பத்தை சொல்லியிருந்தாலும், தன்னுடைய காதல் தெரிந்தும் தனக்கு சொல்லும் வாய்ப்பினை அளித்திட மறுத்து விலகி ஓடும் புவித்திடம் காதலை எப்படி சொல்வதென்று தெரியாது தவித்தாள்.
சொன்னதுபோன்றே மிதுன் நீனாவிற்கு பாடம் சொல்லிக்கொடுக்கத் துவங்கயிருந்தான்.
மிதுனுக்கு நீனாவை அதிகத்துக்கும் பிடிக்கும். அவனுக்கு மட்டுமல்ல வீட்டில் அனைவருக்கும் அவள் தான் செல்லப்பிள்ளை. வீட்டின் கடைக்குட்டி என்ற ஒன்றே அதற்கு போதுமானது. எப்போதும் யாரையும் ஏதேனும் குறை சொல்லும் பவானிக்குக்கூட நீனாவின் மீது அன்பு அதிகம்.
அந்த அதீத அன்பு தான் தனக்குள்ளிருக்கும் கவலையை, பயத்தை குடும்பத்தாரிடம் சொல்வதற்கு அவளுக்கு தடையாக இருந்தது. அவளுக்கு ஒன்றென்றால் கண்மூடித்தனமாக துடிப்பவர்களுக்காக தனது தற்போதைய பிரச்சினையை தனக்குள்ளேயே மூடி வைத்துக்கொண்டாள்.
தன்னால் தனது குடும்பத்தாருக்கு கவலை சூழ்ந்திடுமோ என்று நினைத்து உண்மையை சொல்லாதிருந்தவளுக்கு, அவர்களை மொத்தமாக கவலையில் மூழ்கச் செய்திடுவோம் என்பது தெரியாதுப் போனது.
எப்போதும் சிரித்துக்கொண்டு சேட்டைகள் செய்துகொண்டு இருப்பவளின் உள்ளம் மட்டுமே அறிந்த வேதனையை, கவலையை, இரண்டும் சேர்ந்த பயத்தை தானாக சொல்லிட திடமில்லை என்றாலும், அகனிகா கேட்டபோதாவது சொல்லியிருக்க வேண்டுமென்று காலம் கடந்து நினைத்து வருந்தினாள்.
நீனா பள்ளியின் இறுதி வருடம் என்பதால் வீட்டில் இருப்பவர்களின் அனைவரின் வேண்டுதலாகவும் இருந்தது அவள் நல்லமுறையில் தேர்வில் தேர்ச்சிப்பெற வேண்டுமென்பது மட்டுமே!
மிதுன் தன்னால் முடிந்தளவுக்கு முயற்சி எடுத்து நீனாவிற்கு தினமும் மாலை பாடம் கற்பித்தான். அவனிடம் நன்றாக கணக்குகளை போட்டு காண்பிப்பவளுக்கு தேர்வு எழுதுவதில் என்ன பிரச்சினையோ… அந்த மாதத் தேர்விலும் தோல்வியைத் தழுவியிருந்தாள்.
அம்முறை நீனா எப்படியும் தேர்வில் முழு மதிப்பெண் எடுத்திடுவாள் என்று மிதுன் தனது உறவுகளிடம் அதீத நம்பிக்கையோடு சொல்லியிருக்க, அவள் காட்டிய தேர்வு முடிவில் வருத்தம் கொண்டு திட்டியிருந்தான்.
“ம்ப்ச்… விடுண்ணா” என்று மிதுனை தடுத்த அகனிகா, “எல்லா பாடத்திலும் நல்லாதான மார்க் வாங்கி மேத்ல மட்டும் உனக்கென்ன கஷ்டம் நீனா?” என்று அவள் முன்னமர்ந்து பரிவுடன் வினவினாள்.
“லாஸ்ட் இயர் வரை மேத்ல நீ குட் ஸ்டூடண்ட் தான். இந்த ஐயர் எவ்ளோ இம்போர்டண்ட் தெரியும்தான. சிங்கிள் டிஜிட்டில் மார்க் எடுத்துட்டு இருக்க? என்னாச்சுடா உனக்கு?” என்று தங்கையின் அருகில் அமர்ந்து நீனாவின் கரம் பற்றி அக்கறையாய் கேட்டிருந்தேன் புவித்.
“தெரியலண்ணா” என்று விசும்பிய நீனா, “அண்ணா” என்று எதையோ சொல்ல வந்து நிறுத்த, “சொல்லுடா?” என அவளின் அழுத முகம் துடைத்தான் புவித்.
“இப்படியேப்போனா சரிவராது ஆருஷ். இன்னைக்கே இதுக்கு ஒரு வழி பண்ணுங்க” என்றார் அகிலா.
“டியூஷன் சேர்த்திடலாம்” என்றாள் அகனிகா.
“இல்லை வேணாம். நான் அங்க போகமாட்டேன்” என்று புவித்தின் தோளில் முகம் மறைத்து அரற்றினாள்.
“உனக்கு அந்த டியூஷன் வேணாம்னா வேற சென்டர் போகலாம்” என்றான் விதார்த். எதற்கும் பயம் கொள்ளாதவள் பயிற்சி நிலையம் செல்ல வேண்டுமென்பதற்கு மட்டும் ஏன் இத்தனை பயம் கொள்கிறாள், மறுப்பதில் அடமாக இருக்கின்றாள் என்று யாருக்கும் தெரியவில்லை.
“வேறலாம் வேணாம் மாமா. ரங்கராஜன் சார் டியூஷனுக்கே அனுப்பலாம். ஸ்கூலில் அவர்தான் இவளுக்கு கிளாஸ் டீச்சர். சோ, இவள் என்ன மிஸ்டேக் பண்றான்னு அவருக்கு நல்லாவே தெரியும். அதுகேத்த மாதிரி சொல்லிக்கொடுப்பார். அதோட, இவ ஸ்கூல் ஸ்டாஃப்ஸ் தான் அங்கையும் கிளாஸ் எடுக்கிறாங்க” என்று அகனிகா கூறினாள்.
அகா சொல்வதிலிருந்த கருத்து ஏற்புடையதாக இருக்க, நீனா ரங்கராஜனின் பயிற்சி நிலையம் செல்வதென்று முடிவெடுக்கப்பட்டது.
ஆனால் தினமும் அங்கு செல்ல மறுத்து ஏதாவது ஒரு காரணம் சொல்லிடும் நீனாவை சமாளிப்பது பெரும்பாடாகிப் போனது. அனைவருக்கும்.
“தினமும் போராட்டமா உன்னோட” என்று அன்று அகிலா கோப முகம் காட்டிட, “விடுங்க அத்தை” என்று அவரை சமாதானம் செய்த அகா, “இன்னைக்கு நான் உன்னை கூட்டிட்டுப்போறேன் வா” என்று அழைத்துச் சென்றாள்.
பயிற்சி நிலையத்தின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திய அகனிகா, மிகுந்த தயக்கத்தோடு, முகத்தில் ஒருவித பதற்றத்தோடு வண்டியிலிருந்து இறங்கி உள்ளே செல்பவளை ஆராய்வாக நோக்கினாள்.
“நீனா!”
வாயிலில் நின்றபடி நீனா திரும்பிட,
“எதுவும் சொல்லணுமாடா?” எனக் கேட்டிருந்தாள் அகனிகா.
தொண்டைக்குழி ஏறியிறங்க இல்லையென இருபக்கமும் தலையசைத்த நீனா…
“எனக்கு கிளாஸ் முடியுற வரை இங்கவே வெயிட் பண்ண முடியுமா?” எனக்கேட்டாள்.
நீனாவின் குரலிலிருந்த மாற்றமோ அல்லது அவளின் விழிகள் காட்டிய இனம் புரியா அச்சத்தின் வெளிப்பாடோ ஏதோவொன்று அகனிகாவை சரியென சொல்ல வைத்தது.
சொன்னது போன்று இரண்டு மணிநேரமும், பயிற்சி நிலையத்தில் வாயிலுக்கு அடுத்து உள்ளிருக்கும் தாழ்வாரப் பகுதியில் நீனாவிற்காகக் காத்திருந்தாள் அகனிகா.
தாழ்வாரம் கடந்த அடுத்தப்பகுதி வகுப்பு பரப்பு என்பதால் உள்ளே நடக்கும் யாவும் அகனிகாவுக்கும் காட்சியானது.
அகனிகாவும் நீனா பள்ளியில் படித்தவள் தான். ஆனால் ரங்கராஜன் அவளுக்கு எந்தவொரு வகுப்புக்கும் வந்தது இல்லை. அவரின் வகுப்பு பிள்ளைகள் அவர் பாடம் நடத்துவது நன்றாக இருக்குமென்று சொல்லிக் கேட்டு இருக்கின்றாள்.
இன்று ரங்கராஜன் பாடம் நடத்துவதை நேரில் பார்த்த அகனிகா, நீனாவின் படிப்பு சம்மந்தப்பட்ட கவலை தீர்ந்தது என்று மகிழ்ந்தாள்.
வகுப்பு முடிய முதல் ஆளாக வெளியில் ஓடிவந்திருந்தாள் நீனா.
“என்ன அவசரம்? பொறுமையா வா. இப்படி ஓடி வந்து விழுந்து வைக்காத” என்ற அகனிகா, “நல்லா நடத்துறார். என்ன கையில கிள்ளுறது, பின்னாடி அடிக்கிறதை அவாய்ட் பண்ணலாம்” என்று கண்கள் சுருக்கினாள்.
“ஆமா” என்று விறைத்த குரலில் மொழிந்த நீனா, “வா போலாம்” என்று அகாவை இழக்காத குறையாக இழுத்து வந்து வண்டியை எடுக்க வைத்தாள்.
“உங்க டியூஷனில் பாய்ஸ் யாரும் இல்லையா? ஒரு பையனையும் காணோம்?” வண்டியை ஓட்டிக்கொண்டு சாலையை கவனமாக நீனாவிடம் பேச்சுக்கொடுத்தாள் அகனிகா.
“பாய்ஸ்க்கு வேற டைமிங். கோ கிளாஸ் கிடையாது” என்ற நீனாவின் வார்த்தையிலிருந்த பொருள், குரல் பேதத்தின் அர்த்தம் எதுவும் அகனிகாவுக்கு புரியாது போனது. சிறு கவனித்தலையும் கொடுக்காது போனது யார் செய்த விதியோ?
அந்த விதி நினைத்தும் பார்க்காத நிகழ்வை அரங்கேற்றியிருந்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
13
+1
+1