Loading

அத்தியாயம் 15

கிடைத்த ஆதாரங்கள் வைத்து இறந்து போனவர்கள் நல்லவர்கள் இல்லையென்று உலகத்திற்கு காட்ட முடியுமே தவிர, அவர்களுக்கு சட்டத்தால் தண்டனை வாங்கிக் கொடுத்திட முடியாதே!

அடுத்த நொடி ஆணையர் மகேஷிடம் தகவல் அளித்து அவரின் பார்வைக்கு கிடைத்த ஆதாரங்களின் நகல் ஒன்றை அனுப்பி வைத்தவள், மற்றொரு நகலை நகரத்தின் முக்கிய செய்தி ஊடகங்கள் அனைத்திற்கும் அனுப்பி வைத்தாள்.

இந்தச் செய்தியால் மாநிலமே அதிக பரபரப்புக்கு உள்ளானது.

அப்பொழுதும் செய்தி ஊடகங்கள் அனைத்தும், “இறந்தவர்கள் தவறானவர்களாகவே இருந்தாலும், அவர்களுக்கு மரணத் தண்டனை கொடுக்க கொலையாளி யார்? அவன் தனது குற்றத்தை மறைக்க இறந்தவர்களின் தவறை தனக்கு சாதகமாக்க முயல்கிறான். காவல்துறையால் தன்னை பிடிக்க முடியாது என சவால்விடும் நோக்கில் அவர்களுக்கு எதிரான ஆதாரங்களை அனுப்பி வைத்துள்ளான். இன்னும் கொலையாளியை பிடிக்காது காவல்துறை தூங்கிறதா?” என தாறுமாறாக கேள்விகள் கேட்டு தங்களின் முன்னிலைப் புள்ளிகளை உயர்த்திக் கொண்டிருந்தனர்.

மகேஷின் தலை மேலிடத்தில் அதிகம் உருள, அவரோ அகனிகாவை காய்ச்சி எடுத்துவிட்டார்.

“இதுக்கு மேல இந்த கேஸ் நம்மகிட்ட இருக்கும் எனக்குத் தோணல. இப்போவே சிபிஐ’க்கு மூவ் பண்றதா டிஜிபி சொல்றார்” என்ற மகேஷுக்கு புன்னகையையே பதிலாகக் கொடுத்தாள் அகனிகா.

“உன்னை இந்த கேஸிலிருந்து ரிலீவ் பண்றேன் அகனிகா” என்று கூறிய மகேஷ் அவள் கூறியதில் அதிர்ந்து பார்த்தார்.
__________________________________

அகனிகா வழக்கமாக வரும் நேரத்திற்கு முன்னதாகவே இரவு வீட்டிற்கு வந்துவிட்டாள்.

அவளின் ஓய்ந்தத் தோற்றம் முகத்திலேயே தெரிய, அவளிடம் பேச வேண்டுமென்று காத்திருந்த அகிலா எதுவும் பேசாது அறைக்குள் சென்றுவிட்டார். என்னயிருந்தாலும் அவரிடம் அவளுக்கான முந்தைய பாசம் அவ்வப்போது எட்டிப்பார்க்கத்தான் செய்தது.

அவளுக்காக எப்போதும் காத்திருக்கும் புவித் காய்ச்சலின் காரணமாக மருந்தின் உபயத்தால் விரைந்து உறங்கியிருக்க, அவளின் வருகை அறிந்து வர்ஷினி வந்தாள்.

“என்ன நின்னுட்ட?” என்று அகாவின் தோளினைத் தொட்ட வர்ஷினி, “வா சாப்பிடலாம்” என்றாள்.

“அத்தை என்கிட்ட பேசணும் வெயிட் பண்ணாங்களா?” என்ற அகா, அகிலா சென்று மறைந்த அறையை விழியால் தொட்டு மீண்டாள்.

“இருக்கலாம்” என்ற வர்ஷினி, “ஆருஷ் தூங்கிட்டான். ரொம்பவே டல் ஆகிட்டான். அதான் நீ வரவரைக்கும் நான் முழிச்சிருக்கேன் சொல்லி அவனுக்கு மருந்து கொடுத்து தூங்க சொல்லிட்டேன்” என்றாள்.

“ஹ்ம்ம்” என்ற அகா, “ஃபீவர் விடலையாக்கா?” எனக் கேட்டாள். குரலில் தென்பட்ட வருத்தத்தை முகத்தில் காட்டாது லாவகமாக மறைத்திருந்தாள்.

“ஒரே நாளில் எப்படி சரியாகும். சூடு குறையுது ஏறுது. சரியாகிடும்” என்ற வர்ஷினி, தட்டில் உணவை எடுத்து வைக்க…

“ட்ரெஸ் மாத்திட்டு வரேன்” என்று நகர்ந்த அகாவின் கையை பிடித்து இழுத்து இருக்கையில் அமர வைத்தாள் வர்ஷினி.

“ரூமுக்குள்ள போனால் வெளிய வரமாட்டன்னு தெரியும். ஒழுங்கா சாப்பிடு” என்ற வர்ஷினி தானே ஊட்டியும் விட்டாள். அகா மறுக்க மறுக்க.

“இப்போ மட்டும் உன் அத்தை பார்க்கணும்” என்று வந்த விதார்த், மற்றொரு இருக்கையில் அமர்ந்தான்.

“ஏன் உங்க அம்மா சொல்ல மாட்டீங்களா?” என்ற வர்ஷினி, “பசங்களைத் தனியா விட்டு வந்திருக்கீங்க” என்றாள்.

“நல்லா தூங்குறாங்க வர்ஷா” என்ற விதார்த், “என்னடா நம்ம ஸ்டேட்டே பயங்கர அதிர்வில் இருக்குபோல?” என்றான். அகாவிடம்.

அகனிகா விதார்த்தை ஆழ்ந்துப் பார்த்தாள்.

“என்னாச்சு?”

“நத்திங்” என்ற அகனிகா, “ரீனா, ரித்விக்கு நீங்க தான் ஹீரோ… அவங்களுக்கு மட்டுமில்ல, எனக்கு, மிதுன் அண்ணா, புவிக்கு” எனக்கூறியவள், அடைத்த தொண்டையை சரிசெய்து, “அவளுக்கும்” என்றாள்.

விதார்த்தின் பார்வை கூர்மைப் பெற்றது. மேல் விழிகளால் அவளை ஆழ்ந்துப் பார்த்தான்.

“இப்போ தேவையில்லாம இந்தப் பேச்சு எதுக்கு?” என்று வர்ஷினி கேட்டிட, விதார்த்திற்கு நன்கு புரிந்தது.

தட்டு காலியாகிட வர்ஷின் சமையலறைக்குள் சென்றாள்.

மனைவியின் உருவம் மறைந்ததும்,

“ஹீரோன்னா தப்பை தட்டிக் கேட்கணும்ல” என்றான் விதார்த்.

“இது சரியா மாமா?” அவளிடம் பெரும் ஆதங்கம்.

“நீ செய்ய நினைக்கிறது சரியா அகா… எங்களைவிட ஆருஷ்க்கு நீ முக்கியம். உனக்காக அவன் செய்ய நினைச்ச செயலுக்கு நாங்க துணை நிற்கிறோம்” என்றான்.

விதார்த் சொல்லிய உனக்காக எனும் வார்த்தை அவளை பெரிதாய் தாக்கியது.

வேகமாக எழுந்துச் சென்றுவிட்டாள்.

“என்ன திருட்டுவேலை பாக்குறீங்க?” என்று புடவைத் தலைப்பில் ஈர கைகளைத் துடைத்துக் கொண்டே வந்த வர்ஷினி கேட்டாள்.

“எல்லாம் நல்லதுக்குத்தான்” என்ற விதார்த், “அகா நார்மலாக ஆருஷ் என்னவும் செய்வான்” என்றான்.

என்னவும் என்பதில் அவன் கொடுத்த மறைபொருள் வர்ஷினி அறிய வாய்ப்பில்லை.
_______________________________

அறைக்குள் வந்த அகனிகா ஆழ்ந்த உறக்கத்திலிருந்த புவித்தின் கன்னம், கழுத்தென கை வைத்துப் பார்த்து காய்ச்சலின் சூட்டினை ஆராய்ந்தாள்.

உடல் முழுக்க வியர்த்திருக்க சில்லென்று இருந்தது.

ஆடைமாற்றி வந்தவள் அவனருகில் படுத்துக் கொண்டாள். அவனையே பார்த்தவாறு.

சில நிமிடங்கள் நீடித்த அவளின் பார்வை தழுவல், அவள் அவனது நெற்றியில் அழுத்தமாக வைத்த முத்தத்தில் முற்றுபெற்றது. அப்படியே அவனது மார்போடு ஒண்டியவளாக எதற்கோ பயந்து அஞ்சுபவளைப் போன்று கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

தன்னைப்போல் அவனை அனைத்து கைகளில் அழுத்தம் கூட்டியிருக்க, புவித் உறக்கம் கலைந்தான்.

“என்னாச்சு கனி?” என்ற புவித், “தள்ளிப்படு. உனக்கும் ஃபீவர் வரப்போகுது” என்றான்.

அகனிகா எதுவும் பேசாது விலகிப்படுத்து கண்களை மூடிக் கொண்டாள்.

புவித் அவளையே பார்த்திருக்க,

அவனின் முகம் பாராது, “என்கிட்ட எதுவும் சொல்லணுமா மாமா?” எனக்கேட்டாள்.

“உனக்கே தெரியுங்கிறப்போ… நான் சொல்ல என்னயிருக்கு கனி?” என்ற ஆருஷ், “சொல்லணும்… ஆனா இப்போ இல்லை” என்றான்.

தானாக அறிந்த விசாயமென்றாலும், அவனாக சொல்லிக் கேட்கும் கணத்தை அவளால் எதிர்நோக்க முடியவில்லை.

அவளாக அவனறிய தன்னுடைய முகம் பதிந்திருந்த அவனின் மார்பில் இதழ் தீண்ட நெருக்கம் கொண்டு உறக்கத்தையும் தழுவியிருந்தாள்.

“இன்னும் கொஞ்ச காலம் நாம சேர காத்திருக்கணும் கனி” என்று மனைவியை கைகளால் சுற்றிக் கொண்டான்.

இருவருக்குமிடையேயான இந்த அமைதி விடியலில் தொலைந்திருந்தது.

_________________________________

தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த செய்தியை வெறித்திருந்த சிதம்பரத்தின் கண்கள் கோவைப்பழமென சிவந்திருந்தன.

பெண்கள் சமையலறையில் காலை நேர பரபரப்பில் இருந்திட, சிதம்பரத்தினை கவனிப்பார் யாவரும் இல்லை.

அவரின் கையில் தொலைக்காட்சியின் ரிமோட் உடையும் நிலையில் அழுத்தம் பெற்றிருந்தது.

அக்கணம் நடைப்பயிற்சி முடிந்து வீட்டிற்குள் ஒன்றாக வந்த ராஜேந்திரன் மற்றும் இளங்கோ, சிதம்பரத்தின் தோற்றம் கண்டு பயந்தவர்களாக அருகில் வந்தனர்.

“அண்ணா என்ன?” என்ற இளங்கோ சிதம்பரத்தின் தோள் பிடித்து உலுக்கிட…

“மச்சான் என்ன பண்ணுது?” எனக்கேட்ட ராஜேந்திரன், அருகிலிருந்த தண்ணீரை எடுத்து பருக வைத்து சிதம்பரத்தை ஆசுவாசப்படுத்திட முயற்சித்தார்.

சிதம்பரம் பெரிய பெரிய மூச்சுக்களை வெளியேற்றியவராக, தொலைக்காட்சியை நோக்கி கைக்காட்டினார்.

திரையை பார்த்த இருவரும் ஒரே கணத்தில் விறைத்து நின்றனர்.

“சாக வேண்டியவன் தான. சாவட்டும்” என்ற இளங்கோ தொலைக்காட்சியை நிறுத்தியிருந்தார்.

“நமக்கு நியாயம் கிடைச்சிருச்சு. அவனுக்கு வேண்டிய தண்டனையை கடவுளே கொடுத்துட்டாரு” என்ற ராஜேந்திரன், “இவனோட இறப்பு நமக்கு சந்தோஷம் தான்” என்றார்.

அவரின் பேச்சினைக் கேட்டபடி வந்தமர்ந்த விதார்த்,

‘கடவுள் தண்டனை கொடுக்கல. உங்க மகன் தான் கொடுத்தான்’ என மனதோடுக் கூறினான்.

“இவன் கெட்ட கேடுக்கு நல்லாசிரியர் விருது ஒன்னுதான் குறை” என்று எரிச்சலாக மொழிந்த சிதம்பரம், “பண்ண பாவத்துக்கான வினையை அனுபவிக்கத்தான வேணும்” என்றவராக எழுந்து சென்றுவிட்டார்.

“யாரை சொல்லிட்டுப்போறார்?” அங்கு வந்த மிதுன் கேட்க,

“அந்த ரங்கராஜன் நேத்து தான் நல்லாசிரியர் விருது வாங்கியிருக்கான் டெல்லியில். இன்னைக்கு அவனோட பள்ளியில் அவனுக்கு விழா எடுத்திருக்காங்க. அங்க மேடையிலே அட்டாக் வந்து செத்திருக்கான். இப்போ நடந்திட்டு இருக்கே கொலைகள். அதுவா இருக்கும்ன்னு சந்தேகப்படுறாங்களாம்” என்றார் இளங்கோ.

“நேத்து தான கொலை செய்யப்பட்டவங்க எல்லாரோட தவறுக்கான டீடெயில்ஸ் கொலையாளி அனுப்பி வச்சு, அந்தப்பேச்சு அடங்காம போயிட்டு இருக்கு. அதனால இவனுக்கும் எதிரா எதுவும் அந்த கொலையாளி அனுப்பி வைப்பானோ… கொலையாளி அனுப்புற தகவல் அவங்க தப்பானவங்கன்னு காட்டுதே! இப்படிப்பட்டவருக்கு எப்படி அரசு நல்லாசிரியர் விருது கொடுத்துச்சின்னு கவர்மெண்டை வம்புக்கு இழுத்துகிட்டு இருக்கு இந்த மீடியா” என்றார் ராஜேந்திரன்.

“ஓ…” என்ற மிதுன், விதார்த் அருகில் அமர்ந்தவனாக, “அப்புறம் மாம்ஸ்” என்றான்.

“உனக்கு இது தெரியவே தெரியாதுல?” விதார்த் கேட்க,

“அஃப்கோர்ஸ் மாம்ஸ்” என கண்சிமிட்டினான் மிதுன்.

“எப்படியும் தெரியத்தான போகுது!”

“அதுவரை மெயின்டெய்ன் பண்ணுவோமே” என்ற மிதுன், “அவன் தான் எப்படி சமாளிக்கப்போறான்னு தெரியல” என்றான்.

“நம்மளை சேவ் பண்ணத்தான் அவனே எல்லாம் தனியா பார்த்தது” என்ற விதார்த், “அவனுக்கு துணையா நிக்கணும்” என்றான்.

“விட்டுடுவானா?” என்ற மிதுன், அகிலா வரவும் வாயினை மூடிக் கொண்டான்.

“அவன் இறந்துட்டான்.” அகிலாவிடம் இதனை சொல்லும்போது மிதுனின் கை விரல்கள் உள்ளங்கையில் குவிந்து அத்தனை இறுக்கம் கொண்டது.

“யாரு?” அகிலா புரியாது வினவ,

“நம்ம குடும்பம் இப்போ இப்படி இருக்கக் காரணமானவன்.” பற்களைக் கடித்துக்கொண்டுக் கூறினான் விதார்த்.

அகிலாவின் கண்கள் மின்னியது. நொடி நேரம் மட்டுமே!

“அவன் இறந்துட்டான்னு நிம்மதியானா மட்டும் போன உயிரு திரும்ப வந்திடுமா?” என்றவர் அமைதியாகச் சென்றிட, “கடந்து வர்றது அவ்வளவு ஈசி இல்லை. இங்க எல்லாரும் மறைச்சு வாழப்பழகியாச்சு” என்று பக்கம் வந்தாள் வர்ஷினி.

இவ்வாறு அக்குடும்பத்தினர் அனைவரும் அன்றைய நிகழ்வின் தாக்கத்தில் ஆளுக்கொரு இடமாக தனித்திருந்தனர்.

தங்களின் மகிழ்வுக்கு காரணமானவனின் இறப்பு ஆசுவாசம் அளித்தபோதும், அமிழ்ந்திருந்த ரணத்தைக் கீறி நினைவுக் கூர்ந்தது.

விஷயமறிந்து சந்தியாவும் வேதனையில் மூழ்கியிருக்க…

“விடிஞ்சு இவ்வளவு நேரமாகியும் போலீஸ்காரிக்கு விஷயம் தெரியலையா? இன்னும் ரூம்விட்டு வரல” என்று அகிலாவிடம் ஜாடை பேசினார் பவானி.

ஏற்கனவே வருத்தத்தில் துவண்டிருந்த சந்தியா, பவானி தன்னுடைய மகளை பேசியதில் கண்கள் கலங்கிவிட்டிருந்தார்.

“இந்த சூழ்நிலையிலும் உங்க வாய்க்கு அவல் வேணுமா மெல்ல?” எனக் கேட்ட வர்ஷினி, “ஆருஷ்க்கு காய்ச்சல் இருந்துச்சே. அவனை கவனிச்சிட்டு இருந்திருப்பா” என்று அகனிக்காவுக்கு ஏதுவாகக் கூறினாள்.

“ம்க்கும்” என்று நொடித்த பவானி, “அவளாலதான் எல்லாம். ஒருத்தர் முகம் பார்த்து ஒருத்தர் சிரிக்க முடியுதா?” என்று அகிலாவை ஏத்திவிட்டார்.

“அண்ணி போதும்” என்று கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்த சந்தியா, “அன்னைக்கு அந்த சூழ்நிலையில் அகா தான் காரணம்னு தோணிருக்கும். ஆனால் இத்தனை வருஷத்தில் ஒருநாள் கூடவா அவமேல தப்பில்லைன்னு உங்களுக்குத் தோணல?” எனக் கேட்டார்.

பவானி மௌனித்துப் பார்த்தார்.

“தப்பு செய்யாதவளை இன்னும் எத்தனை காலத்துக்கு வதைப்பீங்க அண்ணி?” எனக் கேட்டார்.

“தப்பு பண்ணலன்னா நீயேன் பெத்த பொண்ணுக்கிட்டவே பேசாம இருக்கியாம்?” என்ற பவானி, “நான் என்ன பேசினாலும் குத்தம். இனி வாயேத் திறக்கல… போதுமா” என்றார். பொடுபொடுவென அமர்ந்திருந்தார்.

அவர் வெறும் பேச்சு தான் என்று வர்ஷினி மற்றும் சந்தியா அவரது கோபத்தைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அகிலாவுக்கு, பவானியின் வார்த்தைகள் தூபமாகத்தான் இருந்தது. முதல்நாள் இரவு தான் நினைத்ததை அகனிகாவிடம் பேச முடியாமல் விட்ட தன்மீதான கோபமும் அவருக்கு இக்கணம் மனதின் பழைய வருத்தத்தோடு இணைந்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
18
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்