Loading

அத்தியாயம் 11

மகேந்திரனின் உடலருகே மிதுன் முழங்காலில் அமர்ந்து, அவனது கைகளைக் கவனமாகத் திருப்பிப் பார்த்தான். கடிகாரத்தின் அமைப்பில் மணிக்கட்டின் பக்கவாட்டிலும் சிதறியிருந்த சிவப்புத் தடத்தைப் பார்த்தவுடன் அவன் புருவம் சற்றே நெருங்கின.

“இறுக்கிக் கட்டிய வாட்ச் மார்க் மாதிரி தெரியலை,” என்றான் மிதுன் மெதுவாக.

தான் கேட்ட கேள்விக்கு பதில் வேண்டி அவனை நோக்கி காத்திருந்த அகனிகா, “அப்படின்னா…?” என்று தூண்டினாள்.

“சான்ஸ் இருக்கு. Radial artery, மணிக்கட்டில் ஓடும் முக்கிய நரம்பு. அதைக் கொஞ்ச நேரம் தடுக்கும்போது, ஹார்ட் பீட் கொலாப்ஸ் ஆகும். குறிப்பா, அப்படியே அதிக அழுத்தத்தில் கொஞ்ச நேரம் நீடித்தால், கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட வாய்ப்பு இருக்கு” என்றான்.

அவன் கூறிய விளக்கத்தை சுகனும், பெஞ்சமினும் ஆச்சரியமாகக் கேட்டனர்.

“அப்போ வாட்ச் மூலமா கில்லர் கொலை பண்ணிட்டு இருக்கான் ரைட்?” என்றாள் அகா.

“மே பீ” என்ற மிதுன், “இப்படியும் ஆகியிருக்கலாம் சொல்றேன். அதுக்காக இதையே கன்பார்ம் பண்ண முடியாது” என்றதோடு, “நிரூப் நெர்வோடிக் பாதிப்பால் தான் ஹார்ட் ஸ்டாப் ஆகியிருக்குன்னு ப்ரீவியஸ் டெத்தில் சொன்னான். சோ, ரிஸ்ட் ப்ரெஸ்ரால் உண்டான டெத் இல்லை” என்றான்.

“புரியல” என அகா அவனது விழிகளை குழப்பமாக ஏறிட, “சில மெடிக்கல் டெர்ம்ஸ் இப்படி ஓப்பனா சொல்ல முடியாது” என்று அழுத்தமாக உரைத்தான் மிதுன்.

“ஓகே” என்று அகா முறைத்துக்கொண்டுக் கூற,

“நெர்வ் பாதிப்பு அடைய வாட்சும் ஒரு காரணம்” என்றான்.

“நல்லா குழப்புரடா நீ” என்ற பெஞ்சமின், “வாட்ச் தான் கில்லரோட ஆயுதம்ன்னு உறுதியா சொல்ல முடியாது தானே” என்றான்.

“கையில வாட்ச் கட்டியிருந்தா… இப்போ அந்த வாட்ச் எங்க?” எனக் கேட்டான் சுகன்.

“லாஸ்ட் ரெண்டு டெத்லயும் கூட வாட்ச் எதுவும் கிடைக்கலையே” என்றான் சுனில்.

“நாம சரியா நோட் பண்ணலையா மேம்?” என சுகன் கேட்க, கண்கள் மூடி குணசீலன் இறப்பு நிகழ்ந்த இடத்தை மனதில் வலம் வந்தாள்.

“நிச்சயம் வாட்ச் எதுவும் க்ரைம் சீனில் இல்லை சுகன்” என்றாள். பட்டென்று விழிகளைத் திறந்து.

“அப்போ இதை யாராவது திட்டமிட்டுப் பண்ணிருக்கலாம்…?” என்று பெஞ்சமின் கூறினான்.

“கில்லர் நேரடியா வந்து வாட்ச் எடுத்திட்டு போயிருந்தால்?” சுனில் சந்தேகமாக வினவினான்.

“அதுக்கு வாய்ப்பில்லை. சிசிடிவி ஃபுட்டேஜ் செக் பண்ணோமே அதுல யாரும் அந்த நேரத்துக்கு வந்த மாதிரி தெரியல. அதை விடுங்க… இப்போ எல்லார் கண் பார்க்க மகேந்திரன் இறந்திருக்கார். அப்படி அவரோட இறப்புக்கு வாட்ச் தான் ரீசன் அப்படின்னா… இப்போ வாட்ச் எங்க?” என அவ்விடத்தை பார்வையால் அலசினாள்.

“லாஸ்ட் ஹவர் சார்கிட்ட ரெக்கார்ட் சைன் வாங்க போயிருந்தேன் மேம். அப்போ அவர் வாட்ச் கட்டியிருந்தார்.” வெளியில் நின்றிருந்த மாணவன் ஒருவன் இவர்களின் பேச்சினை கவனித்தவனாக முன்வந்து பதில் கூறினான்.

“உங்க சார் ரெகுலரா வாட்ச் கட்டுவாரா?” சுகன் கேட்க, அம்மாணவன் இல்லையென தலையசைத்தான்.

“சுகன் வெயிட்” என்ற பெஞ்சமின், “வாட்ச் தான் காரணம் அப்படின்னு இன்னும் நாம கன்பார்ம் பண்ணவே இல்லை” என்றான்.

“அப்புறம் இந்த பாக்ஸ்குள்ள வேறென்ன வந்திருக்கப் போகுது பெஞ்சமின். அவருக்கு வாட்ச் கட்டும் பழக்கமில்லை. புதுசா இன்னைக்கு கட்டியிருக்கார். அதுக்கு அவரோட கையிலிருக்க தடம் சாட்சி. இப்போ அந்த வாட்ச் காணோம். அப்போ நடந்திட்டு இருக்க கொலைகளில் இந்த வாட்ச் முக்கிய ரோல் பிளே பண்ணுது” என்றாள் அகனிகா.

“உறுதியாசொல்ல முடியாது,” என்ற மிதுன், “ஆனா நரம்பில் நீண்ட நேரம் அழுத்தம் கொடுத்தால் இதுபோல திடீர் மரணம் வருவது சாத்தியம் தான். மேலும்இதோ பாருங்க…” என்கிறவாறு, மகேந்திரனின் கையில் கைக்கடிகார்த்தின் தடத்தின் அருகே விரல்களின் தடத்தை காண்பித்தான்.

“ஏதோ எதிர்த்து போராடின மாதிரி இருக்கா?” எனச் சுகன் கேட்டான்.

“எஸ்… அப்படித்தான் தெரியுது” என்ற பெஞ்சமின், “இது அவரோட இன்னொரு கை விரல்களோட மார்க்காவும் இருக்கலாம். அதை டாக்டர் தான் க்ளியர் பண்ணனும்” என்றான்.

“கொலைக்கான தடம் எதுவும் இல்லை. வெளிப்புற காயம் எதுவும் இல்லாததால, சாதாரண ஹார்ட் அட்டாக் மாதிரி தான் தோணும். ஆனால் உண்மையில் இது கொலை” என்ற அகா, “வெளியூரிலும் இதுபோல நடக்கும் கொலைகளில் வாட்ச் சம்பந்தப்பட்டிருக்கா நோட் பண்ணனும்” என்றாள்.

“அவரோட டெத் கன்பார்ம் பண்ணியாச்சு. இனி அட்டாப்சி பண்ணா தான் எதுவும் சொல்ல முடியும்” என்ற மிதுன், “பாடியை ஹாஸ்பிடல் கொண்டுபோகட்டுமா?” என்றான்.

“ம்ம்” என்ற அகாவின் நெற்றி சுருங்கி விரிந்தது.

“இந்த பாக்ஸ் எந்த ஷாப்ஸ்ல யூஸ் பண்றாங்க செக் பண்ணுங்க சுகன்” என்றாள்.

அவ்வறையை விட்டு வெளியே சென்ற மிதுன் நின்று திரும்பி, “அட்டை பெட்டி காமன் தானே” என்றான்.

“பாக்ஸ் காமன் தான். பட் இதோட மூடியில் பாதி லோகோ இருக்கு பாருங்க. அதை வச்சு எதுவும் செய்ய முடியுமா பார்ப்போம்” என்றாள்.

மிதுன் தன்னுடைய இதழ்களை குவித்தவனாக பார்வையின் பொருளை உள்ளுக்குள் மறைத்தவனாக வெளியேறியிருந்தான்.

“இவங்க வீட்டுக்கு இன்பார்ம் பண்ணலையா?”

“இவரோட வைஃப்க்கு காலேஜ் மேனேஜ்மென்டிலிருந்தே இன்பார்ம் பண்ணிட்டாங்க மேம்” என்ற சுகன், “இப்போ காஞ்சிபுரம் போயிட்டு வந்திடலாமா மேம்?” எனக் கேட்டான்.

நேரத்தைப் பார்த்தவள், மாணவர்களை விசாரித்துக் கொண்டிருந்த மாலதியை அழைத்து,

“எதும் முக்கியமான தகவல் இருக்கா மாலதி?” எனக் கேட்டாள்.

“நோ மேம்” என்ற மாலதி, “அங்க ரெட் டாப் போட்டிருக்க பொண்ணு ஏதோ சொல்ல வந்தாள் மேம். பட் அந்த பிங்க் சாரி மேம் கண் காட்டியதும் வாய் மூடிக்கிட்டாங்க” என்றாள்.

“அந்த ரெட் ட்ரெஸ் பொண்ணு டீடெயில்ஸ் யாருக்கும் தெரியாம கலெக்ட் பண்ணுங்க மாலதி. குணசீலன் கேசில் ஒரு பொண்ணு அன்னைக்கு ஸ்கூல் வரல சொன்னது என்னாச்சு?” என்ற அகா, “ரெண்டு பேரையும் அவங்க வீட்டில் நேரா போய் விசாரிங்க” என்றாள்.

பெஞ்சமின் அருகில் வர,

“கிளம்பியாச்சா?” என்றாள்.

“ஹ்ம்ம்… இன்னொரு கொலை நடந்தாலும் அங்க நமக்கு கிடைக்கப்போறது சின்னதா ஒரு அட்டைப்பெட்டி தான்” என்ற பெஞ்சமின் சுனிலுடன் கிளம்பிட, மகேந்திரனின் உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டது.

வண்டி கல்லூரி வாயிலைவிட்டு வெளியேற, புவித் காயத்ரியுடன் அங்கு வந்து சேர்ந்தான்.

தன்னுடைய வாகனத்தில் ஏற முயன்ற அகா, புவித்தின் வாகனம் உள்ளே வர புருவம் சுருக்கி நின்றாள்.

“மேம்…”

அகா நின்றுவிட்டதை கவனித்து சுகன் அருகில் வந்தான்.

அகாவின் பார்வை சென்ற இடத்தில் சுகன் தனது பார்வையை பதிக்க, மகிழுந்திலிருந்து புவித் இறங்கினான். உடன் பின் நாற்பதிலிருக்கும் ஒரு பெண்மணி.

பெண்மணி யாரென்று அகா யோசிக்க,

“சார் இந்த காலேஜிலா வொர்க் பண்றார் மேம்?” எனக் கேட்டிருந்தான் சுகன்.

“இல்லை சுகன். கூட வரவங்க யாருன்னு தெரியல” என்று தன்னை நோக்கி வரும் புவித்தை நோக்கி அகா சென்றாள்.

“நீங்க இங்க…?” அகா புவித்திடம் கேள்வியாக வார்த்தையை இழுத்தாள்.

“இவங்க காயத்ரி.”

புவித் பெயர் சொல்லியதும் அவர் யாரென்று அகாவிற்கு தெரிந்தது. அகா பேசவில்லை என்றாலும் புவித் எதையும் அவளிடம் மறைப்பது இல்லையே! காயத்ரியைப் பற்றி அவன் சொல்லிய நினைவிருக்கிறது அவளிடம்.

“அவங்களுக்கு எதுவும் ப்ராப்ளமா?” என அகா புவித்திடம் கேட்டுக் கொண்டிருக்க, கல்லூரியின் மற்றொரு பேராசிரியர் அகாவின் அருகில் வந்து, “இவங்க இறந்துபோன மகேந்திரன் சாருடைய மனைவி மேம்” என்றார்.

அகாவிடம் சிறு அதிர்வு. ஆனால் அதனை அவள் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

“மிஸ்டர்.மகேந்திரனுடைய பாடி ஹாஸ்பிடல் கொண்டுப்போயாச்சு” என்றவள், “அட்டாப்சி பண்ணப் பிறகு தான் உங்ககிட்ட பாடியை கொடுப்பாங்க” என்றாள்.

காயத்ரி உணர்வுகளற்று அகாவை பார்த்தார். விஷயம் கேள்விப்பட்டு எழுதியிருப்பார் போலும், கண்கள் தடித்து சிவந்திருந்தன.

“எப்படி? என்னாச்சு?” புவித் மனைவியிடம் மகேந்திரனின் இறப்புக் குறித்து கேட்டான்.

“கார்டியாக் அரெஸ்ட்” என்று காயத்ரியை பார்த்துக்கொண்டே கூறியவள், “ஹாஸ்பிடலில் பாடியை கலெக்ட் பண்ணிக்கோங்க” என்றாள்.

மாலதியை அழைத்தவள், “பாடியை ஹேன்ட் ஓவர் பண்ற வரை கூட இருங்க” என்றவள், புவித்திடம் பார்வையால் விடைபெற்று கிளம்பிவிட்டாள்.

“அப்புறமா மாலதிக்கு கால் பண்ணி, காயத்ரி கொஞ்சம் நார்மல் ஆனதும் அவங்ககிட்ட, மகேந்திரன் மெடிக்கல் ஹிஸ்டரி விசாரிக்க சொல்லுங்க சுகன்” என்று வண்டியில் ஏறி அமர்ந்தாள். பின்னிருக்கையில் சுகன்.

“காஞ்சிபுரம் போகணும் சார்.”

ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த ஆனந்தன், “இப்போ மேம்?” எனக் கேட்டார்.

“த்ரீ தானே ஆகுது. நைட் ரிட்டர்ன் ஆகிடலாம்” என்றாள் அகா.

அகா காஞ்சிபுரம் சென்றிருந்த நேரத்தில் மற்றொரு இடத்தில் சத்தமில்லாது இன்னொரு மரணம் நிகழ்ந்திருந்தது.
___________________________

“ரொம்ப நேரம் அரட்டை அடிக்காம சீக்கிரம் தூங்குங்க” என்ற வர்ஷினி, நறுக்கி கொண்டுவந்த பழங்கள் அடங்கிய கிண்ணத்தை ஐவருக்கும் முன்னிருந்த டீபாயின் மீது வைத்தவளாக அவ்வறையை விட்டு வெளியேறினாள்.

“ரொம்ப நாளாச்சு இப்படி ஒண்ணா உட்கார்ந்து” என்ற பெஞ்சமின், “நீதாண்டா சொல்லணும்” என மிதுனிடம் கூறினான்.

“நான் சொல்ல என்ன இருக்கு. ஹாஸ்பிடல், ரூம் இதைத்தாண்டி இத்தனை வருஷத்தில் சொல்ற மாதிரி ஒன்னும் பெருசா பண்ணல” என்றான் மிதுன்.

“அதான் இப்போ பண்ணிட்டு இருக்கியே மச்சான்” என்று மிதுனைப் பார்த்து கண்ணடித்தான்.

“என்ன பண்ற நீ?” என்று அவர்களை கவனித்தவனாக நிரூப் வினவினான்.

“அவன் எதோ சும்மா உளறிட்டு இருக்கான்” என்ற மிதுன், தன்னுடைய பழச்சாறு அடங்கிய குவளையை எடுத்துக்கொண்டவனாக பால்கனி பக்கம் சென்றான்.

அங்கு விதார்த் யாருடனோ அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தான்.

“அவன் சொல்லலன்னா என்ன? நீ சொல்லுடா” என்று புவித்திடம் நிரூப் கேட்க, “மிதுன் அவன் லைனில் ஒரு ரிசர்ச் ஸ்டார்ட் பண்ணியிருக்கான்டா. அதைத்தான் மீன் பண்ணேன்” என்றான் புவித்.

“வேறொன்னும் இல்லையா?” பெஞ்சமின் சந்தேகமாக பார்த்தான்.

“அடேய்… நிஜமா வேறெதுவும் இல்லடா. உங்களுக்குத் தெரியாம என்னடா சீக்ரெட் இருக்கு எங்களுக்குள்ள” என்ற புவித், “இப்போ நடந்திருக்கு கொலைகளுக்கு என்ன காரணம் எதுவும் தெரிஞ்சுதா?” எனக் கேட்டான்.

“அகா தான் சொல்லணும்” என்றான் நிரூப்.

“ஹோ” என்ற புவித், “எவனோ உங்களை நல்லா ஓடவிடுறான் போல” என்றான்.

“அதென்னவோ உண்மை தான்” என்ற பெஞ்சமின், “ரொம்பநாள் அப்புறம் ஒண்ணா மீட் பண்ணதே, ஜாலியா பேசத்தானடா? அப்புறமும் என்ன வேலையைப் பற்றியப் பேச்சு” என்றான்.

“என்னதான் சொல்றியா?” என்று வந்த விதார்த், “எப்படிடா இருக்கீங்க நீங்க ரெண்டு பேரும். ஒரே ஊரில் தான் இருக்கீங்க… ஆனாலும் பார்த்துக்க முடியுறதில்லை” என்று நிரூப்பின் அருகில் அமர்ந்து, பழத்துண்டுகளை எடுத்து சுவைக்க ஆரம்பித்தான்.

“எல்லாம் வேலை வேலைன்னு ஓட வேண்டியதா இருக்கு விதுண்ணா” என்ற பெஞ்சமின், பால்கனி இருளில் நின்றிருந்த மிதுனை திரும்பிப் பார்த்துவிட்டு, “இவனை மாத்த எதுவும் வழி இருக்கா?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.

“நாலு கொலை பண்ணா அவன் சரியாகிடுவான்” என்று புவித் சிரியாது கூற, பெஞ்சமின் அவனை முறைத்துப் பார்த்தான்.

“இப்போலாம் கொலை பண்றது சர்வசாதாரணமாகிப்போச்சு. நாலு நாளில் நம்ம சிட்டியில் மட்டும் மூணு கொலைகள்” என்று தலையை உலுக்கினான் நிரூப்.

“இதே மாதிரி இன்னும் ரெண்டு ஊரில் நடந்திருக்கு” என்று பெஞ்சமின் சொல்ல, “நேத்து ஒரு வீடியோ காட்டினனே அந்த ஆளும் இறந்துட்டார் ஆருஷ்” என்றான் விதார்த்.

“அவன் சாக வேண்டியது தான்” என்று சாதாரணமாக சொல்லிய புவித், “இந்த கொலைகளைப் பற்றி பேசத்தான் பார்டி வச்சோமா?” எனக் கேட்டு, தொலைக்காட்சியில் என்ன படம் போடலாமென்று நகர்ந்தான்.

“இதுதான் பார்ட்டின்னு வெளியில சொல்லிடாதீங்கடா… அவன் அவன் பார்ட்டின்னு என்னென்னவோ பண்றான்” என்று சிரித்தபடி பால்கனி பக்கமிருந்து உள் வந்தான் மிதுன்.

“நமக்கு எந்த விஷயத்தில் என்ஜாய்மென்ட் இருக்கோ… அதுதான் பார்டி” என்ற புவித், “லெட்ஸ் என்ஜாய் த பார்ட்டிஈஈஈ” என்று பழச்சாறு அடங்கிய கண்ணாடி குவளையை கையிலெடுத்து உயர்த்திப் பிடித்தான்.

“ஒரு ஜூஸ் குடிக்க இவ்வளவு சத்தம் வேணுமா?” என்று சிரித்த விதார்த், தொலைக்காட்சித் திரையில் ஓடிய படத்தைப் பார்த்து, “இதை ஏன்டா போட்ட?” என்றான்.

“இதுக்கென்ன? நல்ல க்ரைம் மூவி விதுண்ணா” என்றான் புவித்.

“பாக்குற படம் கூட கொலையாடா?” என்ற பெஞ்சமின், “அதுபாட்டுக்கு ஓடட்டும். UNO விளையாடலாம்” என்றான்.

“எஸ்…” என்று ஆமோதித்தான் நிரூப்.

“கார்ட் என் ரூமில் இருக்கு. கொண்டுவரேன்” என்ற புவித், அலைபேசியை எடுத்து அகாவிற்கு அழைப்பு விடுத்தவனாக தன்னுடைய அறைக்குச் சென்றான்.

நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்க அவள் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்ற கவலை அவனுக்கு.

அவளது ஓட்டம் நேரங்காலமின்றி ஓடிக்கொண்டிருக்க ஓட்டத்திற்கான காரணம் அறிந்தவனுக்கு அதனை சரி செய்திட வேண்டுமென்கிற எண்ணம் மட்டுமே! அதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயக்கம் கொள்ளாது தனக்கென ஒரு பாதை வகுத்து சென்றுகொண்டிருக்கிறான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
18
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்