அத்தியாயம் 1
நள்ளிரவைத் தொடும் நேரம்…
இரவு நேர வாடைக்காற்றின் குளுமையில் மேலும் சில்லிப்பை வாரி இறைத்துக் கொண்டிருந்தது வானத்து நீர்ப் பூக்கள்.
பெரும் பெரும் தூறலாகவும் அல்லாது, தொடர் மழைத் துளிகளாகவும் இல்லாது தூவானமாய் சிதறிக் கொண்டிருந்த இளஞ்சாரல், வாகனத்தின் சன்னல் வழி முகத்தில் மோத, உடலின் தோற்றத்தில் அதுவரை இருந்த கடுமை மறைந்து அவளிடம் தானாக இளக்கம் பரவியது.
ரோந்து பணியின் காரணமாக சுற்றுப்புறத்தில் பார்வையை ஓட்டியபடி இருந்தாலும், வெளிப்பக்கமாக வைத்திருந்த அவளின் கை விரல்கள், வாகனத்திற்கு உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் பாடலுக்கு ஏற்ப தாளமிட்டுக் கொண்டிருந்தன.
“நீ நான் மட்டும் வாழ்கின்ற உலகம் போதும்.
உன் தோள் சாயும் இடம் போதுமே…
உன் போ் சொல்லி சிலிா்க்கின்ற இன்பம் போதும்,
இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன்.
ஒன்றோடு ஒன்றாய் கலக்க… என்னுயிரே!
காதோரம் காதல் உரைக்க…”
பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தாலும், அவளிடம் பாடலை ரசிக்கும் லயிப்பில்லை… மாறாக அப்பாடலை விரும்பி ரசிப்பவனின் மீது தீரா ரசனை. அவன் மீதான அன்பில், அவனது விருப்பப்பாடல் அவளுக்கும் விருப்பமானது.
‘அப்படியென்ன இந்தப் பாட்டுல இருக்குன்னு உருகி உருகி கேட்கிறார்ன்னு தெரியல.’
மனதோடு முனகியவளுக்கு அப்பாடலின் வரிகளின் ஆழம் புரியவில்லை. அதன் இசையில் உருகும் காதலின் ராகம் தெரியவில்லை.
பாடல் முடிந்து அடுத்தப் பாடல் துவங்க, இசை இயக்கியை (Music Player) நிறுத்தியிருந்தாள்.
வண்டியில் அவள் ஏறும் போதே பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, இசைத்த இசை அவளவனை நினைவுபடுத்த நிறுத்தாது கேட்டிருந்தாள். அதற்காகத் தொடர்ந்து பாடல்களை கேட்கும் ரகமில்லை அவள்.
அவனுக்கு பிடித்தது எல்லாம் அவளுக்கும் பிடிக்கும். அந்த பிடித்தத்திற்கு தன்னகத்தே கொஞ்சமே கொஞ்சம் இடமளிப்பாள்.
அகனிகா பாடலெல்லாம் கேட்கமாட்டாள். சின்ன சின்ன அழகியலுக்கும் கூட அவளிடத்தில் இடமில்லை. இன்று அவள் வண்டியில் ஏற முனைந்ததும், தானாக அணைக்க முயன்றவரை தடுத்திருந்தாள். அதிலே அவருக்கு ஆச்சரியம் தான். இப்பொழுது அவளே அணைத்துவிட, அவளின் இயல்புகள் அவளுடன் பல வருடங்களாக பணி புரிவதால் தெரியும் என்பதால் சன்னமாக சிரித்துக் கொண்டார். வாகன ஓட்டியான டாணாக்காரர் ஆனந்தன்.
“இந்த கேஸ் இவ்வளவு சீக்கிரம் முடியும் எதிர்பார்க்கல மேடம்” என்றார் அவர்.
“விக்டிம் உயிர் பிழைப்பான்னு அக்யூஸ்ட் எதிர்பார்க்கல. லாஸ்ட் மினிட் நேரடியா வந்து சாட்சி சொல்லுவாங்க நினைத்திருக்கமாட்டான். அவனோட அலட்சியம் நமக்கு சாதகமாகிடுச்சு” என்ற அகனிகா குரலில் வழமைப்போல் எவ்வித உணர்வுகளும் இல்லை.
“இந்த மாதிரி ஆளுங்க செய்யுற தப்புக்கு வருந்தவேமாட்டாங்களா? ஒவ்வொரு முறையும் இப்படியொன்னு நடக்கும் போது மக்களும் உச்சிக்கொட்டி, பரிதாபப்பட்டு கடந்து மட்டுமே போறாங்களே!” என்றார் ஆனந்தன். அவரின் வார்த்தைகளில் மிதமிஞ்சிய வேதனை.
“போலீஸ் நம்மளாலே ஒன்னும் பண்ண முடியல… மக்கள் என்ன பண்ணுவாங்க சார்” என்றவளின் தொண்டையை கவ்விப்பிடித்தது, அவள் கண்கள் முன் அரங்கேறிய முன் நிகழ்வின் காட்சி ஒன்று.
மனதிலிருந்து விரட்டிட முயன்றும் முடியாத நிகழ்வினை கண்கள் மூடி நினைவுகளின் அடி ஆழம் சேர்பிக்க முயன்றவள், இருக்கையின் பின் தலை சாய்த்திட, ஒற்றை கண்ணிலிருந்து உருண்ட கண்ணீர் செவி தீண்டியதன் ஈரத்தில் உடல் விறைக்க நிமிர்ந்து அமர்ந்தாள்.
“வலிதான் இல்லைன்னு சொல்லல்ல. ஏன் எனக்கில்லையா? அவங்களை கொன்னுப்போடனும் தோணுது… ஆனால் நம்ம மனசை மீறி நம்மால் ஒருத்தங்களுக்கு வலி கொடுத்திட முடியுமா? உன்னை மறந்திடுன்னு சொல்லல. மறக்கக்கூடியதும் இல்லையே. வலியோட வாழ பழகிடு. அவ்வளவு தான். இந்த வலியும் ஒருநாள் பழகிடும்” என்று அவளின் மென் கரத்தினை தன்னுடைய வலிய கரங்களுக்குள் புதைத்து வைத்தவனாக அவன் சொல்லிய ஆறுதல்… இந்நொடியும் அவளை அமைதிப்படுத்தியது.
அவனால் மட்டும் எப்படி முடிகிறது? எந்தவொரு சூழலிலும், அவனிடம் மட்டும் எப்படி இத்தனை அமைதியும், கனிவும்? அவனிடம் அவள் தொலைந்து கொண்டிருப்பதற்கு காரணமும் அவனின் மென்மையான மனம் தானே காரணம்.
அவனிடம் மட்டுமே அமைதிக்கொள்ளும் அவளின் மனம் இப்பொழுதும் மெல்ல அமைதியடைந்தது.
“மேடம்…”
கண்கள் மூடி நிகழ் மறந்து இருந்தவளை கலைத்தது ஆனந்தனின் அழைப்பு.
அகனிகா இமைகள் திறந்திட,
“வீடு வந்திருச்சு மேம்” என்றார் அவர்.
“ம்ம்… நீங்க மார்னிங் நேரா ஸ்டேஷன் வந்திடுங்க” என்றவள், டேஷ்போர்டின் மீது வைத்திருந்த தன்னுடைய தொப்பியை கையில் எடுத்துக் கொண்டவளாக கீழிறங்கினாள்.
அகனிகா ஐபிஎஸ். உதவி ஆணையர் (ACP). தன்னுடைய இருபத்தி ஐந்து வயதில், மனதின் தீரா கொதிப்பு அடங்குவதற்காக பொது சேவை தேர்வெழுதி காவல்துறையில் சேர்ந்தாள். இரண்டு வருடங்கள் சென்றும் அடங்கியபாடில்லை. தினம் தினம் காணும் குற்றங்கள் கோபத்தின் அளவையும், கொதிப்புகளையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
என்று தணியும் இந்த வேட்கை எனும் அவளின் ஆழ்மனக் கேள்வியின் பதில் அறிந்தும், பதவியை வைத்தும் ஒன்றும் செய்ய முடியாத தன்மீதே அவளின் கோபங்கள், இப்போதெல்லாம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
வண்டி சத்தம் கேட்டதும், அவளின் வருகையை உணர்ந்து வாயிலின் பெரிய இரும்பு கதவினை திறந்துவிட்ட காவலாளி விறைப்பாக வணக்கம் வைத்திட, சிறு தலையசைப்பைக் கூட தராது உள் நுழைந்தாள்.
இரண்டு மாடிகள் கொண்ட பெரிய வீடு. அவளது மொத்த குடும்பமும் ஒன்றாக ஒரே வீட்டில். வீட்டின் அளவும், குடும்பத்தின் அளவும் பெரியதாக இருப்பினும்… அங்கிருப்பவர்களிடம் பெரியதான மகிழ்வென்பது இல்லை.
காயம்பட்ட இதயங்கள் தங்களின் ஒற்றுமையில் மட்டுமே ஜீவிக்கின்றன.
அன்றைய ஓர்நாள் மட்டும் வராதிருந்திருந்தால் இவ்வீடு இப்படியா அமைதியில் இருந்திருக்கும். எந்நேரமும் ஆட்டமும் பாட்டமுமாய் அத்தனை கொண்டாட்டமாய் இருந்திருக்கும். இரவு நேரமும் பேச்சுக்கள் நிறைந்து ஆர்ப்பரிப்பாய் கழியும். சிரிப்புக்கு பஞ்சமின்றி வாழ்ந்த மனிதர்கள், சிரிப்பையே தொலைத்து வாழ்கின்றனர்.
காரணம்? அகனிகா. அவளளவில் மட்டுமல்ல.
வீட்டைப் பார்த்தபடி நின்றுவிட்டவளை நிகழ் மீட்டது புவித்தின் குரல்.
“என்ன நின்னுட்ட? இங்கவே தூங்கிடலாம் பிளானா?”
கணவனது குரலில் தன்னை நிலைப்படுத்தி திரும்பியவள், தோட்டத்தின் பக்கமிருந்து வந்து கொண்டிருந்தவனின் அமைதியானத் தோற்றத்தில் தொலைந்திட அடம் பிடிக்கும் இதயத்தை கட்டியிழுத்து அடக்கி வைத்தாள்.
நடையில் கூட பூமி அதிர்ந்திடாத மென்மை. மழலையின் மென் அடிகளாய். அவனது உயரத்திற்கு எப்படி சாத்தியமென்று தான் தோன்றும்.
“இன்னும் தூங்கலையா நீங்க?”
“தூங்கியிருக்கலாம். ஆனால் வீட்டில் எல்லாரும் அவங்கவங்க ஆளோட தூங்கிட்டு இருக்கும்போது நான் மட்டும் சிங்கிளா தூங்கினா நல்லாயிருக்காதே! சோ கிங் வெயிட்டிங் ஃபார் ஹிஸ் குயின்” என்றான் வெண்முத்து பற்கள் பளிச்சிட.
“ஹ்ம்ம்” என்றவள் அவனையே பார்த்திருக்க, அவளின் நெற்றியில் ஒற்றை விரலால் அழுத்தம் கொடுத்து எடுத்தவன்,
“மேடம்க்கு என் வார்த்தை புரிஞ்சுதா?” எனக் கேட்டான்.
“ஹான்… என்ன மாமா?” அவள் விழித்திட…
“சுத்தம்” என்றவன், “உள்ள போலாம் சொன்னேன்” என்றான்.
வீட்டிற்குள் நுழைய வீடே இருளில் ஆழ்ந்திருக்க ஆங்காங்கே இரவுநேர விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அவ்விருட்டு பழக்கம் என்பதைப்போன்று அவள் விறுவிறுவென நடந்து மாடிச்செல்லும் படியில் கால் வைத்திட…
“சாப்டியா நீ?” என்ற புவித்தின் கேள்வி அவளை நிறுத்தியது.
அவன் புவித் ஆருஷ். கல்லூரி பேராசிரியர் மற்றும் விரிவுரையாளன்.
கணவனிடம் பொய்யுரைக்க முடியாது அவளால்.
“பசிக்கல” என சொல்ல வந்தவள், அவன் பார்வையில், “ட்ரெஸ் சேன்ஞ் பண்ணிட்டு வரேன்” என்று மாடியேறினாள்.
“கேட்கலனா அப்படியே போய் படுத்திருப்பாள். எப்படித்தான் சாப்பிடாம இருக்க முடியுது தெரியல” என்ற முணுமுணுப்பிற்கு இடையே அடுப்பினை பற்ற வைத்து தோசை வார்க்க ஆரம்பித்தான்.
இரண்டாவது தோசைக்கு நெய் விட்டுக் கொண்டிருக்க, அரவமின்றி புவித்தின் பின்னால் வந்து நின்றாள்.
திரும்பாது அவளை உணர சுவாசம் ஒன்றே போதுமென்றவனாக, அவள் வரவை அறிந்து, “குட் கேர்ள்” என்றவன், அவள் உணரும் முன்பு திரும்பி, இடையோடு கையிட்டு தூக்கி அடுப்பு மேடையில் அமர வைத்தான்.
“அச்சோ மாமா” என்றவள், அவனது ஒரு புருவம் ஏறிய பார்வையில் அமைதியாகி பார்வையை தோசை மீது பதித்தாள்.
“ரைஸ் இல்லையா?” சில நிமிட மௌனத்தை முடித்து வைக்க அவளே பேசினாள்.
“பரவாயில்லை… மேடமுக்கு தன்னால பேச வருதே” என்ற புவித், “ரைஸ் வேணுமா?” எனக் கேட்டான்.
“நீங்க தோசை சுடுறீங்களேன்னு கேட்டேன்” என்ற அகனிகா, “நானே சுட்டுப்பேனே” என்றாள்.
“ஓகே ஃபைன்… இந்தா” என்ற புவித், அவளிடம் கரண்டியை நீட்டியவனாக நகர்ந்து நிற்க, அவள் முழித்த முழிப்பில் சத்தமின்றி நகைத்தான்.
“அது… அது வந்து, நான் சும்மா கேட்டேன். நிஜமாவே குடுத்திடுவீங்களா?” என்றாள். திக்கித் திணறி.
“ஸ்டவ் ஆன் பண்ணவே தெரியாது. இதுல நானே செய்துப்பேன்னா? என் பொண்டாட்டிக்கு திடீர்னு சமைக்க வந்திடுச்சோன்னு நினைச்சிட்டேன்” என்றவன், “உனக்காக நான் செய்யுற சின்ன சின்ன விஷயம் தான் என்னோட சந்தோஷம் கனி” என்று அவளின் இரு புருவங்களின் மத்தியில் ஒரு விரலால் அழுத்தியவன், “சாப்பிடு” என்று அவளிடம் தட்டினை நீட்டினான்.
“தேங்க்ஸ்” என்றவள் முன் சிரம் தாழ்த்தி ஒரு கால் பின் வைத்து, கரண்டியை பிடித்திருந்த கையை இடது பக்க நெஞ்சில் வைத்தவன், “இட்ஸ் மை டியூட்டி மேடம்” என்றவன், அடுத்த தோசையை கல்லில் திருப்பிப்போட்டான்.
தோசையை சிறிது பிய்த்தெடுத்தவள், “நீங்க சாப்டீங்களா?” எனக் கேட்டாள்.
“டைம் என்ன ஆகுதுங்க மேடம்? இவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருப்பேனா நான்” என்ற புவித், “ஒரு நாளாவது பொண்டாட்டியோட சேர்ந்து சாப்பிடணும் நினைக்கிறேன். ஆனா பாரு, பேய் பிசாசெல்லாம் தூங்கப்போன அப்புறம் தான் அவள் வருவாள். அதுவரை பட்டினியா கிடந்தா, என் பெருங்குடல் சிறுகுடலை தின்னுடும்” என்றான். சிறு சிரிப்போடு.
அகனிகா அவனை பாவம் போல் பார்க்க…
கரண்டியால் அவளை வலிக்காது தட்டியவன்,
“சும்மா சொன்னேன். சாப்பிடு” என்றான்.
தன் கையிலிருந்த உணவை அவனது வாயில் வைத்தவள், “ஊட்டி விடுறியா மாமா?” கண்ணில் பனித்துவிட்ட நீரோடு கேட்டிருந்தாள்.
அடுப்பை அணைத்தவன், எதுவும் பேசாது உணவினை எடுத்து அவளுக்கு ஊட்டத் துவங்கினான்.
விழிகள் நிறைந்திட்ட கண்ணீர் இமை தாண்டாது அணைக்கட்டியவள், அவன் முகம் பார்த்தே உணவினை வாங்கிக் கொண்டாள்.
முழுதாய் ஊட்டி முடிக்கும் வரை அவளின் பார்வையில் மாற்றமில்லை. இருவருக்குமிடையே பேச்சுமில்லை.
கையை கழுவி, தட்டையும் கழுவியபடி, “பார்வை பலமா இருக்கே! சைட் அடிக்கிறியா பொண்டாட்டி?” எனக் கேட்டவன் அவளின் தடுமாற்றத்தில் ஒற்றை கண்ணடிக்க,
“இதெல்லாம் எங்க நடக்கும்?” என்று மகனின் செயலில் அதிருப்தி கொண்டவராக கத்தினார், புவித்தின் அன்னை அகிலா.
“என்னம்மா? இப்போ எதுக்கு கத்துறீங்க?” என சத்தமின்றி கேட்ட புவித், தட்டை கழுவியதோடு அதனை துடைத்தும் அதற்குரிய இடத்தில் வைத்திட, “தோசை சுட்டு, ஊட்டி விட்டது போதாதாமா உன் பொண்டாட்டிக்கு. தட்டையும் நீதான் கழுவனுமா?” என்று அகனிகாவை முறைத்துக் கொண்டு கேட்டார்.
“இவ்வளவு நேரம் இங்க என்ன நடக்குதுன்னு மறைஞ்சு நின்னு பார்த்திட்டு இருந்தீங்களாம்மா?” ஓசையில் கூடுதல் இல்லையென்றாலும், வார்த்தையில் அத்தனை அழுத்தம்.
புவித் கேட்டதில் அகிலா தடுமாறினாலும்,
“இதுல மறைஞ்சு நின்னு பார்க்க என்னயிருக்கு ஆருஷ்? தண்ணி பாட்டில் எடுக்க வந்தேன்… இப்படி சமையக்கட்டில் உட்கார்ந்து எல்லாம் பண்ணிட்டு இருந்தால் பார்க்கத்தான் செய்வாங்க. அப்படி இருந்தும் இங்கெல்லாம் முடியுற வரை வெளியவேதானே நின்னுட்டு இருந்தேன்” என்றார்.
“நீங்க அங்கவே நின்னதுதான் தப்பும்மா” என்ற புவித், “இதுக்குமேல உங்ககிட்ட பேசினால் பிரச்சினை தான்” என்றதோடு, “என் பொண்டாட்டி அவள். நான் செய்யாம வேற யார் செய்வா? உங்களுக்கு உங்க புருஷன் செய்தது இல்லைன்னா, நான் செய்யுறது தப்புன்னு சொல்வீங்களா நீங்க?” எனக்கேட்டு, “நீ வா” என்று மனைவியையும் கையோடு கூட்டிச் சென்றுவிட்டான்.
தண்ணீர் எடுக்கச் சென்ற மனைவி இன்னும் வரவில்லையென அங்கு வந்த சிதம்பரம், அவர்களின் உரையாடலைக் கேட்டிருக்க, தன்னை கடந்து சென்ற மகனிடம்,
“இப்படி என்னை கோர்த்துவிட்டுட்டியேடா” என்றார் பாவம் போல்.
“அவங்களை சமாளிக்க நீங்கதான் கரெக்ட் டாட்” என்று சிரித்தவன், “ஆல் தி பெஸ்ட் டாட். சேதாரம் அதிகமாகமல் பார்த்துக்கோங்க” என்று மாடியேறியிருந்தான்.
“பார்த்தீங்களா உங்க பிள்ளையை? பேசுனா சத்தமே வராது… பொண்டாட்டின்னு வந்துட்டா மட்டும் என்னமா பேசுறான் பாருங்க?” என்று கணவரிடம் அங்காலாய்ப்பாகக் கூறினார் அகிலா.
“அவங்க பெர்சனல் ஸ்பேஸ்குள்ள நீ போனது தப்புதானே அகிலா?” என்ற சிதம்பரம், “அவனால மட்டும் தான் அவள் உயிர்ப்போட இருக்கா. நீ அகாவை பேசுறதை குறைச்சிக்கப் பாரு. இல்லைன்னா உன் மகனை இழந்திடுவ” எனக்கூறினார்.
“எப்படிங்க பேசாம இருக்க முடியும்?” என்று நொடியில் தொண்டை அடைக்க வினவிய அகிலா, “என்னால எதையும் மறக்க முடியலங்க” என்று தழுதழுத்தார்.
“நினைச்சு வருந்திக்கிட்டே இருந்தா மறக்க முடியாது தான். உங்க வலிக்கு அவளை பேசுவீங்களா நீங்க?” என்று அவர்களின் அருகில் வந்திருந்தான் புவித்.
மேலே சென்றவன் கீழே வந்ததை இருவருமே கவனித்திருக்கவில்லை.
“இவன் வந்ததை கவனிக்கலையே” என்று அகிலா முனக,
“விடுப்பா! அவள் ஏதோ ஆதங்கத்தில் பேசுறா” என்று மகனை சமாதானம் செய்ய முயன்றார் சிதம்பரம்.
“விடுறதுக்கு இன்னைக்கு மட்டுமா பேசுறாங்க அவங்க” என்றான். என்னதான் கோபமாக பேசினாலும் அவனது சத்தம் அவர்கள் மூவரை கடந்து அதிகரிக்கவில்லை. எந்நிலையிலும் அத்தனை அமைதியானவன் அவன். குரலில் மட்டுமல்லாது நிதானத்திலும்.
“அதிகமா சப்போர்ட் பண்ணாத ஆருஷ்… அவளால் தான் எல்லாம். அன்னைக்கு யார் சொல்றதையாவது கேட்டாளா அவள்?” என்று அகிலா முடிக்கும் முன்பு, அங்கிருந்து வேகமாக சமையலறைக்குள் புகுந்திருந்தான்.
“வேணாம் அகிலா. குடும்பம் உடைஞ்சிடும்” என்ற சிதம்பரம், தானே தண்ணீர் போத்தலை எடுத்துச் சென்றார். செல்லும் முன்பு அடுப்பில் பாலினை சூடு செய்து கொண்டிருந்த மகனின் முதுகில் மென்மையாய் தட்டிச் சென்றார்.
கண்ணாடி குவளையில் பாலினை எடுத்துக்கொண்டு புவித் வரும் வரையிலும் அகிலா அங்கு தான் நின்றிருந்தார்.
“எனக்கு உங்கமேல கோபமில்லை. போய் தூங்குங்கம்மா” என்ற புவித், அவர் முகத்தை திருப்பவும்,
“உங்களுக்கு பிடிக்கலனாலும் அவள் தான் என் பொண்டாட்டி. மாறிடுமா அது?” என்றான்.
அகிலா எதுவும் சொல்லாது சென்றுவிட்டார்.
இதழ்கள் குவித்து காற்றினை ஊதியவனாக, இரண்டு பக்கமும் தலை அசைத்து ஆசுவாசம் கொண்டவனாக அங்கிருந்து நகர்ந்தான்.
புவித் அறைக்குள் வர, அகனிகா வழக்கு கோப்பு ஒன்றை விரித்து வைத்து படித்துக் கொண்டிருந்தாள்.
“டைம் இப்போவே ரெண்டாகப் போகுது” என்ற புவித் அவள் முன் பால் நிரம்பிய குவளையை நீட்டினான்.
“இப்போதான் சாப்பிட்டேன்.” அவள் மறுத்திட,
“தோசை கொடுக்க கொடுக்க நீ போதும் சொல்லவே இல்லை. நானா தான் நைட்ல இவ்வளவு போதும்னு ஸ்டாப் பண்ணேன். பசி மரத்துப்போற அளவுக்கு அப்படியென்ன வேலை. குடி இதை” என்றான். அதட்டும் குரல். உடல்மொழியில் சற்றும் அந்த பாவனை இல்லை.
அவன் நீட்டியபடியே இருக்க, வாங்கிக் குடித்தவள்,
“நீங்க குடிச்சீங்களா?” எனக் கேட்டாள்.
“பாதி குடிச்சிட்டு குடுத்தா நல்லாதான் இருக்கும்” என்றவனின் பேச்சில் அதிர்ந்தவளிடம், “இந்த சீன் அன்னைக்கே நமக்குள்ள நடக்கல. இன்னும் பெண்டிங்கில் தான் இருக்கு” என்று கண்ணடித்தான்.
அதில் வேகமாக குடித்து முடித்து, வெறும் குவளையை மேசையில் வைத்தாள்.
அகனிகாவின் செயலில் புவித்திடம் மலர்ந்த புன்னகை.
அவன் தன்னருகில் நின்றுகொண்டே இருக்க, “நீங்க படுங்க. எனக்கு தூக்கம் வரல” என்று கோப்பில் முகம் திருப்பினாள்.
அவனோ மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியவனாக அவளை ஆழ்ந்து பார்த்தான்.
கடைக்கண்ணில் அவனை பார்த்தவள், அவன் அசையாது நிற்கவும்,
“என்ன… என்ன மாமா?” என்று தடுமாறி வினவினாள்.
“எனக்கு தூக்கம் வருது கனி!” புவித்தின் அக்குரல் போதும், அவளை சாய்த்திட. கனி எனும் உச்சரிப்பில் மொத்த காதலையும் காண்பித்திடுவான்.
“மாமா!” அவள் விழிகள் அகண்டது. இமை இழைகள் புருவம் தொட்டது.
“உன்னை எதுவும் பண்ற ஐடியா எனக்கில்லை. லவ் பண்ணத்தான் உன் அனுமதி தேவையில்லை. ஆனால், மத்ததுக்கு நீ ஓகே சொல்லணும். தினமும் இந்த டயலாக் பேச வைக்காம வந்து படுடி. கல்யாணமாகி ஒரு வருஷமாகியும் குட் பாயாத்தானே இருக்கேன்” என்றவன், “என்ன தூக்கிட்டுப் போகணுமா?” எனக் கேட்டதும்,
“இல்…இல்லை… நானே” என்றவள் மடியிலிருந்த கோப்பினை சிதறவிட்டவளாக எழுந்து சென்று கட்டிலில் விழுந்தாள்.
நொடியில், மெத்தையில் சுருண்டு படுத்தவளை இளம் முறுவலுடன் பார்த்தவன், சிதறிய தாள்களை எடுத்து கோப்பில் அடுக்கி வைத்தான்.
புவித் சென்று படுத்த கணம், அவனது கனியின் தலை அவனின் மார்பில் தஞ்சம் அடைந்திருந்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
46
+1
+1