
மதுவும் வினுவும் வாசு புரமோட்டர்ஸ் அண்ட் பில்டர்ஸ் என்னும், பதாகையை தாங்கிய கட்டிடத்திற்கு முன்பு, தம் ஸ்கூட்டியில் வந்து இறங்கினர். இது தான் அவர்கள் பணிபுரியும் அலுவலகம்.
இங்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும், அவர்களுக்கு தகுந்த முறையில் வீடு கட்டித் தருவதோடு, பேங்க் லோன் வேண்டுமென்றால் அதற்கான அனைத்து சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு, குறிப்பிட்ட பேங்க்களில் இருந்து பைனான்ஸ் வாங்கிக் கொடுத்து, இஎம்ஐ ஆப்ஷனில் வீடு கட்டித் தரப்படும்.
அதற்காக சரிபார்க்கப்படும் அக்கவுண்ட் செக்ஷனில் தான் தோழிகள் இருவரும் பணி புரிகின்றனர்.
ஒரு சில சிறிய கடைகளில், வருடக் கடைசியில் ஏற்படும் ஆடிட்டிங் பிரச்சனைகளும், இவர்களிடம் வருவதுண்டு.
அதையும் இவர்கள் இருவரும் தான் சரி பார்த்துக் கொடுக்கின்றனர். இங்கு இவர்களோடு சேர்த்து இன்னும் நான்கு பேர், அலுவலகத்தில் இருந்து வேலை செய்கிறார்கள்.
வெளிவட்டாரத்தில் கமிஷன் அடிப்படையில், நிறைய பேர் வெவ்வேறு துறையில் வேலை செய்கிறார்கள்.
இங்கு வாடிக்கையாளர்களிடம் அக்ரீமெண்ட் போடப்பட்டு, வேலைக்கான முன்பணத்தை பெற்றுக் கொண்டு தான், வேலையை ஆரம்பிப்பார்கள்.
ஒருவேளை வாடிக்கையாளர்களுக்கு இவர்களின் வேலை பிடிக்காமல், வேலையை நிறுத்த சொல்லி விட்டு கொடுத்த அட்வான்ஸ் திரும்பக் கேட்டால், நிறுவனத்தில் இருந்து கொடுக்கும் செக்குகள் அனைத்தும் பவுன்ஸ் ஆகி தான், திரும்ப வரும்.
அதையும் மீறி சிலர் அலுவலகம் தேடி வந்து கலர் கலர் வார்த்தைகளால் சண்டையிட்டால், வாசுதேவனிடமிருந்து வரும் ஒரே வார்த்தை,
“வேறொரு பார்ட்டியை, இங்க சேர்த்து விட்டுட்டு, நீ உன் பணத்தை வாங்கிக்கோ. அதைத் தவிர வேற எந்த ஆப்ஷனும் இல்ல.”
இங்கு தினம் தினம் தொலைபேசியிலும் நேரிலும் கேட்கும் கலர் கலர் பொன்மொழிகளாலேயே, தோழிகள் இருவரும் வெளியில் வேறு நல்ல வேலையாய் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
வாசுதேவன் மதுவின் அப்பாவான சிவராமனுக்கு நல்ல நண்பர். வேலை விஷயத்தில் எப்படியோ, ஆனால் பழக்கவழக்கத்தில் நேர்மையான மனிதர்.
அதனால்தான் தன் மகளின் பாதுகாப்பிற்கு ஒரு குறையும் இருக்காது என்று, இங்கு தன் மகளை வேலையில் சேர்த்துள்ளார்.
இவர்கள் அலுவலகத்தினுல் நுழையும் போதே, பணம் திரும்ப கிடைக்க பெறாத வாடிக்கையாளர் ஒருவர், சாபத்தையும் நிறைய கலர் கலர் வார்த்தைகளையும், அள்ளி வீசிக் கொண்டிருந்தார்.
அத்தனையையும் கேட்டுக் கொண்டு, அவரை தாண்டிக் தான் இவர்களுடைய இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.
“காலையிலேயே நல்ல வார்த்தைங்களா…கேட்டாச்சு, இன்றைய நாள் அமோகமா இருக்கும் போ.”
“ஆமா, ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு மது, அது எப்படி டி உங்க அப்பா இந்த மாதிரி ஒரு இடத்தில, உன்னை வேலைக்கு சேர்த்து விட்டு இருக்காரு?
ஓனர் உங்க அப்பாவோட ஃப்ரெண்டுனா, இவர் செய்ற எல்லா போர்ஜரி வேலையும் உங்க அப்பாக்கு தெரிஞ்சிருக்குமே. அதையும் மீறி உங்க அப்பா எப்படி, இங்க உன்னை சேர்த்தார்?”
“என் அப்பாக்கு இவர் மட்டும் தெரிஞ்சவங்க இல்லை, நம்ம பில்டிங்க்கு அடுத்த பில்டிங்ல இருக்க டீக்கடை அண்ணாச்சியும், இரண்டு கடைக்கு அந்த பக்கம் இருக்க பழமுதிர் நிலைய ஓனரும்,நம்ம ஆபீஸ்க்கு எதிர்ல இருக்க பேக்கரி ஓனரும், அடுத்த தெருவுல தள்ளு வண்டியில பழம் விற்கிறவரும் தெரிஞ்சவங்க தான்.
வேலைக்கு சேர்ந்த மறுநாளே, எங்க அப்பா என்னை கூட்டிட்டு போய், இவங்க எல்லார்கிட்டயும் அறிமுகப்படுத்தி வச்சு, என்னை பாத்துக்க சொல்லிட்டு தான் விட்டுட்டு போனார்.”
“அப்போ, உன்ன சுத்தி உங்க அப்பா ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி வெச்சிருக்கார்னு சொல்லு.”
“தவறு மன்னா, தங்கள் கூற்றில் பிழை உள்ளது. ஒரு நல்ல பாதுகாப்பு வளையமா பார்த்து, என்னை பொருத்தி வச்சிருக்கார்ன்னு சொல்லலாம்.”
“நான் உன்ன கூண்டுக்கிளின்னு சொல்றதுல தப்பே இல்ல. சரி முறைக்காதே…முறைக்காதே…”
அப்போது வாசுதேவன் அலுவலகத்திற்கு விஜயம் புரிந்து, நேராக அவருடைய அறைக்கு சென்றார்.
அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் அதை ஆச்சரியமாக பார்த்திருந்தனர்.
“என்ன அதிசயமா இருக்கு. இன்னைக்கு இவர் சைட் விசிட்டிங் போற நாள் தானே? எப்பவும் இந்த மாதிரி, சைட் விசிட்டிங்கை விட்டுட்டு ஆபீஸ்க்கு வந்ததில்லையே.”
“வினு நம்ம ஆபீஸ் கூகுளை கூப்பிட்டு விசாரி, ஏதாவது பிரச்சனையா, இல்ல புதுசா பெரிய வாத்தா ஏதாச்சும் இவர்கிட்ட மாட்டி இருக்கான்னு?”
இவர்கள் ஆபீஸ் கூகுள் என்று கூறுவது, இங்கு பணிபுரியும் ராகுலை தான், இவனுக்கு ஆபீஸின் உள்ளும் வெளியேவும் நடைபெறும் விஷயங்கள் அத்தனையும் அத்துப்படி.
எங்கு என்ன நடக்கிறது என்பதை விரல் நுனியில் வைத்திருப்பவன். அதனாலயே இவர்கள் வைத்த பெயர் ஆபீஸ் கூகுள்.
ராகுலின் குடும்பத்தார் அவர் அப்பாவின் காலத்திலேயே, வட இந்தியாவில் இருந்து பிழைப்புக்காக இங்கு புலம்பெயர்ந்தவர்கள்.
அவன் தந்தையின் இறப்பிற்கு பின், குடும்ப வருமானத்திற்காகவும், தம் அக்கா தங்கையின் திருமணதிற்காகவும் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு கிடைத்த வேலையில் சேர்ந்தான்.
சிறிது காலத்தில் வாசுதேவனிடம் வேலைக்கு சேர்ந்தவன்,இதன் நுணுக்கங்களையும் வளைவு நெளிவுகளையும் தெரிந்து கொண்டு, இந்த தொழிலை கெட்டியாக பிடித்துக் கொண்டான்.
அலுவலகத்தில் உள்ள பெண்களை உடன்பிறப்பாக நினைப்பவன். அதனாலேயே இவர்களின் பாதுகாப்பே முக்கியம் என்று கருதுபவன். இவனை மீறி அலுவலகத்திற்குள் நுழைந்து, இங்குள்ளோருக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது.
“என்ன கூகுள் அண்ணே, அதிசயமா இருக்கு. உங்க குருஜி சைட் விசிட்ட விட்டுட்டு, ஆஃபீஸ் பக்கமா வந்து இருக்காரே, ஏதாச்சும் பிரச்சனையா?”
“பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லம்மா, ஒரு பெரிய பார்ட்டியோட ப்ராஜெக்ட் நம்மகிட்ட வந்திருக்கு. அதுதான் சார் அதைப் பத்தி டிஸ்கஸ் பண்ண இங்க வந்திருக்கார்.”
வாசு தன் கேபினில் இருந்து இவர்கள் மூவரையும் அழைக்க, அங்கு சென்றனர்.
“மது, வினோதினி உங்க ரெண்டு பேத்துக்கும் உங்களுக்கு பிடிச்ச துறையில், உங்களை நீங்களே நிரூபிக்க ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு.”
மதுவும் வினுவும் ஒருவரை ஒருவர் குழப்பமாக பார்த்துக் கொண்டனர்.
“ராகுல் உங்ககிட்ட சொல்லி இருப்பான்னு நினைக்கிறேன். ஒரு பெரிய கம்பெனியோட கன்ஸ்ட்ரக்ஷன் வொர்க் பண்ற வாய்ப்பு, இப்போ நமக்கு கிடைச்சிருக்கு.
அது இனி அடுத்தடுத்து கண்டின்யூ ஆகிறது, உங்க ரெண்டு பேர் கையில் தான் இருக்கு.”
“சார் இதுல எங்களோட ஹெல்ப் என்ன இருக்கு?”
“எதுவா இருந்தாலும் சொல்லுங்க. எங்களால முடிஞ்சா, கண்டிப்பா செய்யறோம்.”
“அவங்க, அவங்களோட கம்பெனி கணக்குகளை எல்லாம் ஒரு டைம் ரீவைண்ட் பண்ணி பாக்கணும்னு சொல்றாங்க ம்மா.
அதுக்கு யாராச்சும் நம்பிக்கையான ஒர்க்கர்ஸ் கிடைப்பாங்களான்னு என்கிட்ட கேட்டு இருந்தாங்க.
நான் உங்க ரெண்டு பேரை தான், ரெக்கமண்ட் பண்ணி இருக்கேன். இது உங்களுக்கு கிடைச்ச ஒரு நல்ல சான்ஸ்.
அது ஒரு பெரிய கம்பெனி. வெளிநாட்டு கம்பெனியோட வியாபாரம் செய்யறவங்க, இங்கேயே அவங்களோட கம்பெனிஸ் ரெண்டு மூணு இருக்கு.”
“சார் இவ்வளவு பெரிய கம்பெனின்னு சொல்றீங்க, கண்டிப்பா அதுக்கு தனியா ஆடிட்டர்ஸ் வச்சிருப்பாங்களே?”
“இவ்வளவு நாளா அதோட ஓனரே பார்த்துட்டு வந்தாங்களாம். இவரோட வேலை பிசில அதுல நிறைய பெண்டிங் வச்சுட்டாராம்.
மத்தவங்க கிட்ட வெளியே கொடுத்தா, முதல்ல இருந்து பார்க்க ஆரம்பிக்கணும். ஏதாவது டவுட்ஸ்னா இடையில் இவரால போயிட்டு இருக்க முடியாது.
அந்த பெண்டிங் ஒர்க்ஸ் எல்லாம் முடிச்சு கொடுக்க, யாராவது கிடைப்பாங்களான்னு கேட்டாரு. நான் உங்களை சிபாரிசு பண்ணி இருக்கேன். மேக்ஸிமம் நீங்க அவங்க ஆபீஸ்ல இருந்து வேலை பார்க்கிற மாதிரி இருக்கும்.
கவலைப்படாதீங்க நம்ம ராகுலும் அந்த கன்ஸ்ட்ரக்ஷன் வொர்க்கிற்காக உங்க கூடவே இருப்பாரு. நீங்க அங்கேயே உங்களோட ஒர்க் எல்லாம் வச்சுக்கலாம்.
அப்பறோம், நான் என்ன தான் உங்களை ரெகமெண்ட் பண்ணி இருந்தாலும், அவங்க உங்ககிட்ட சில கேள்விகள் கேட்டு திருப்தியா இருந்தா மட்டும் தான், வேலைக்கு எடுத்துக்கறதா சொன்னாங்க, இதுல உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே.”
“இதுல என்ன சார் இருக்கு எல்லா கம்பெனியிலும் இருக்கிறது தானே, ஸ்டாப்ஸ் புதுசா எடுக்கும்போது அவங்களோட திறமை என்னன்னு தெரிஞ்சா தானே, அவங்களுக்கான வேலையை கொடுக்க முடியும். ஆனா சார் அப்பா இதுக்கு ஒத்துக்க மாட்டாரே”
“உங்க அப்பாகிட்ட நான் பேசிக்கிறேன் மதுமா. முதல்ல உங்க ரெண்டு பேத்துக்கும் சம்மதமான்னு சொல்லுங்க”
மதுவும் வினுவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க,
“சரி நீங்க வேணும்னா இன்னைக்கு வீட்ல போய், டிஸ்கஸ் பண்ணிட்டு வந்து நாளைக்கு உங்க பதிலை சொல்லுங்க. ஆனா உங்களுக்கான நல்ல வாய்ப்பு இது, தவற விட்டுறாதீங்க.”
அவரிடம் தலையை தலையை ஆட்டிக் கொண்டு, வெளிவந்தனர் தோழிகள் இருவரும்.
“என்ன வினு பண்ணலாம்?”
“ஒருவேளை நாம வெளிய வேலை தேடிட்டு இருந்த விஷயம், நம்ம ஓனர்க்கு தெரிஞ்சிருச்சோ? அதான் அவரே நம்மள பிளாக் பண்ணி, வேற ஆபீஸ்க்கு தள்ளி விட்டுட்டாரோ?”
“ஆமா அவருக்கு வேற வேலை இல்ல பாரு, உன்னையும் என்னையும் கண்காணிக்கிறது தான் வேலை. ஐயோ எங்க அப்பா கிட்ட போய் சொன்னா எப்படி ரியாக்ட் பண்ணுவாருன்னே தெரியலையே.
ஒருவேளை நீ வேலைக்கே போக வேண்டாம் சாமி, வீட்டிலேயே இருந்துக்கோன்னு சொல்லிட்டாருன்னா?
இதுதான் சாக்குன்னு என் ஜாதகத்தை கையில் தூக்கிடுவாங்களே, நானே என் அப்பா அம்மாகிட்ட கெஞ்சி, ஒரு வருஷம் டைம் வாங்கி வேலைக்கு வந்துட்டு இருக்கேன், அதுவும் போச்சா.”
வாசுதேவன் சிவராமனுக்கு அழைத்து இது பற்றி பேசினார். அவர் சற்று தயங்கினாலும் ஏற்கனவே, புதிதாக தன் மகளின் திறமைக்கு கிடைத்த நல்ல வேலையை, வேண்டாம் என்று சொல்லி விட்டோம்.
சரி, இதற்காவது அனுப்பி வைப்போம் என்று, தன் நண்பன் மேல் உள்ள நம்பிக்கையில் இதற்கு சிவராமன் ஒத்துக் கொண்டார்.
அவர் கூறிய நிறுவனமும் தற்போது வளர்ந்து வரும், நற்பெயர் எடுத்த நிறுவனம்தான். தன் மகளின் திறமைக்கு கிடைக்கப் போகும் அங்கீகாரமாகவே இதை நினைத்தார்.
அதனாலேயே அவர் ஒத்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் அதற்குப் பின், அவர் மனம் ஒரு நிலையில் இல்லை.
மது பிறந்த அந்த கோவிலில் இருந்தார் சிவராமன். அந்த தெய்வத்தின் முன்பு கண்களை மூடி அமர்ந்து விட்டார். முற்பகல் நேரம் என்பதால் அவ்வளவாக மக்கள் கூட்டம் அங்கு இல்லைபோலும்.
அவரின் விழி மூடியிருந்தாலும், மனதில் வாதிட்டுக் கொண்டிருந்தார், எதிரில் சிலையாக அமர்ந்திருந்த மாகாளியம்மனோடு.
“தாயே காளியம்மா நீ சொன்ன ஒரு காரணத்துனாலே தான், என் பொண்ணோட படிப்பிலிருந்து இப்ப பார்க்கிற வேலை வரைக்கும், என்னோட கண்காணிப்பில் இருக்கிற மாதிரி பார்த்துகிட்டேன்.
இப்போ அவ திறமைக்கேற்ப வேலை கிடைக்கும் போது மறுக்கவும் முடியல, போன்னும் சொல்ல முடியல.
நான் சரின்னு சொல்லிட்டாலும் என் மனசு ஏனோ பதட்டமாவே இருக்கு. அதுதான் உங்களை தேடி வந்து இருக்கேன்.
பொண்ணுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பாக்கணும்னு நாங்க ஆசைப்படறோம். நீ தான் அதுக்கு ஒரு நல்வழி காட்டணும் தாயே.”
தன் கண்களை மூடி மனதில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த சிவராமன், கண்விழித்துப் பார்த்தபோது எதிரே அன்று மது பிறந்த போது கண்ட அதே வயதான பெண்மணி, மஞ்சள் பூசிய முகத்தோடு நெற்றி நிறைய பொட்டோடு, புன்னகை மின்ன அவரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
“என்னப்பா மத்தவங்க குறை தீர்க்க பிறந்த மகராசிய பெத்துட்டு, இப்படி மருகி நிற்கலாமா?”
அவருக்கு பேச வாய் வரவில்லை. அந்த தாய் பேசுவதை மட்டும் பயபக்தியுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
“எந்த ஒரு விஷயமும் காரணம் இல்லாம நடப்பது இல்ல மகனே, இது அவள் சென்று சேர வேண்டிய பாதை தான். விதியை யாராலும் மாற்ற முடியாது நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்றே நினைத்து கொள்.
கூடிய சீக்கிரமே உன் மகளின் திருமண செய்தி உன்னை வந்து எட்டும்.”
“செய்தி கிட்டுமா? அப்போ, பொண்ணோட திருமணத்த பார்க்குற கொடுப்பினை, அவளைப் பெத்த எங்களுக்கு இல்லையா?”
அந்த தாய் சிரிக்கும் கண்களில், கூர்மையுடன் அவரை நோக்கி,
“அந்த கொடுப்பினையை, உன்னை பெற்றவர்களுக்கு நீ கொடுத்தாயா?”
தன்னை யாரோ உலுக்கியதை போல இருக்க, கண்களை தேய்த்துக் கொண்டு பார்த்தார்.
தன் மனைவி, அருகில் காபி கோப்பையுடன் இருக்கவே அப்போதுதான் புரிந்தது, அவருக்கு தான் கண்டது கனவு என்று.
இனி அந்த தாய் விட்ட வழி என்று மதுவின் வரவிற்காக காத்திருந்தார்.
மது வந்ததும் அவளை அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டவர்
“மதுமா வாசு மதியம் எனக்கு கூப்பிட்டு இருந்தான்.”
மதுவிற்கு என்ன சொல்லப் போகிறாரோ என்று மனதிற்குள் பயபந்து உருண்டு கொண்டிருந்தது.
“உனக்கு அந்த புது வேலைக்கு போக விருப்பமா?”
“உங்க இஷ்டம் தான் ப்பா. நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்குறேன் ப்பா.”
சிவராமனுக்கு மனது நெகிழ்ந்து போனது தனது மகளை நினைத்து,
“அப்பாக்கு சம்மதம் தாம்மா. உனக்கு பிடிச்சிருந்தா, நீ அங்க போய் வேலை செய்.”
மதுவிற்கு இது உண்மைதானா என்று நம்ப முடியவில்லை. தான் சற்றும் எதிர்ப்பாராத இந்த முடிவை, தன் தந்தை எடுப்பார் என்று அவள் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


திருமண செய்தியா … எப்டிலாம் ட்விஸ்ட் வைக்கிறாங்க … எங்கேயோ இடிக்குதே
நன்றி சிஸ் 🙂