
மது தனது கண் மட்டும் வெளியே தெரியுமாறு, முழுவதுமாக துப்பட்டாவால் முக்காடிட்டிருந்தாள்.
கீழே உணவருந்திக் கொண்டிருந்த கனியமுதன், இவளைப் பார்த்துக் கொண்டே தன் அன்னையிடம் கேட்டான்.
“ஏம்மா எனக்கு தெரியாம இவளை, பக்கத்து வீட்டு சலீம் மாமாக்கு தத்துக்கான கொடுத்துட்டியா?”
“என்னடா உளர்ற?”
“உளர்றனா? அங்க பாரு, உன் பொண்ணு மதினா பேகமாவே மாறி நிற்கறா.”
“வெயிலுக்காக புள்ள இப்படி போட்டுட்டு இருக்காடா.”
“இவ்வளவு நாளா இல்லாம இப்ப என்ன திடீர்னு? நம்ப முடியலையே.”
“அய்யய்யோ இவன் இன்னும் கிளம்பலையா, வினு அவன் ஏதாவது உன்கிட்ட வாயை புடுங்கறதுக்கு பேச்சு கொடுப்பான், எதையும் உளறி தொலைச்சுராத. என்னடி மண்டைய மண்டைய ஆட்டுற, ஏதாவது சொதப்புன கொன்னுடுவேன் உன்ன.”
“வினும்மா என்னடா இது? ஆபீஸ்ல ஏதாவது ஹாலோவன் பங்க்ஷனா? இல்ல, பேன்சி டிரஸ் காம்பெடிஷன்னா? இப்படி பேய் வேஷம் போட்டு சுத்துறீங்க ரெண்டு பேரும்?”
“அப்படியெல்லாம் எதுவும் இல்லண்ணா, இது இது வெயிலுக்காக. இப்பல்லாம் ஸ்கின் ரொம்ப எரியுதுன்ணே, அதான் ரெண்டு நாளா இப்படி துப்பட்டா போட்டிருக்கோம்.”
“அப்படியாம்மா ரெண்டு நாளா சூரிய பகவான், கருமேகத்துக்குள்ள ஒளிஞ்சிகிட்டு இருக்காரு, இந்த குளிர்ல உங்களுக்கு ஸ்கின் எரியறது போலவா வெயில் அடிக்குது?”
அவள் திரு திருவென முழிக்க, மது தான் அதற்கு மறுமொழி கூறினாள்.
“சில எருமத் தோலுக்கெல்லாம் அது உரைக்காதுன்னு சொல்லுடி வினு.”
“ஏன், உன்னோட உயிரை எடுக்கிற தோழி, என்கிட்ட நேரடியா சொல்ல மாட்டாங்களாமா?”
“சொன்ன வாக்கை காப்பாத்தாதவன் கிட்ட, எனக்கு பேச்சு இல்லைன்னு சொல்லுடி, அம்மா நா வரேன்.”
நின்றால் எங்கே இன்னும் கேள்வி கேட்டு குடைவானோ என்று, வினுவை இழுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினால் மது.
“ஏய் மது மது நில்லு, இந்த பொண்ணு என்னடா கூப்பிட கூப்பிட கேட்காம இப்படி போறா.
ஒருவேளை நேத்து பேசிட்டு இருந்தாளே ஏதோ புது வேலையை பத்தி, அதுக்கு நீ அப்பா கிட்ட அவளுக்காக சப்போர்ட் பண்ணலைன்னு, கோவிச்சுட்டு போறாளோ?”
“அவ கேக்காம போகல ம்மா, நாம ஏதாச்சும் கொஸ்டின் கேட்டுருவமோன்னுட்டு எஸ்கேப்பாகி ஓடுறா. ப்ச்சு இருந்தாலும் உன் வீட்டுக்காரர் ரொம்ப ஸ்ட்ரீட் அப்பாவா இருக்காரு ம்மா.
அவ படிச்ச படிப்புக்கு வேற ஏதாவது கம்பெனில வேலைக்கு போனா, எவ்வளவு சம்பளம் கிடைக்கும் தெரியுமா? அதோட அவளுக்கும் கௌரவமான ஒரு வேலையா இருக்கும்.
ஆனா அப்பா தான் வேண்டவே வேண்டாம்னு, மதுவை இந்த வேலைல சேர்த்து விட்டுட்டார்.
இப்ப அவளாவே தன் திறமையை பயன்படுத்தி, ஒரு புது வேலையை அதுவும் நல்ல கம்பெனியா, தேடிப் பிடிச்சு செலக்ட் ஆயிருக்கா.
அந்த கம்பெனிக்கு மதுவை வேலைக்கு அனுப்புனா, என்னம்மா தப்பு? அவ கேட்கிறதும் நியாயம் தானே.”
“நானும் எவ்வளவோ அப்பாகிட்ட இது விஷயமா பேசிட்டேன், ஒத்துக்கவே மாட்டேங்கறார் டா.
காரணம் இல்லாம உங்க அப்பா இப்படி சொல்லுவாரா அமுதா?”
“அது தான் என்னன்னு கேட்கிறேன், ம்ம்ம்…உடனே அமைதியாயிடுவீங்களே என்னமோ பண்ணுங்க.”
அவன் கிளம்பி சென்றதும் லட்சுமியம்மா, தனது நினைவுகளில் மூழ்கத் தொடங்கினார்.
மது அவர் வயிற்றில் நிறைமாதமாக இருந்தபோது, கனியமுதன் சிறுவன்.
தனது சொந்த ஊரை காண ஆசை கொண்ட லட்சுமி, தன் கணவரை வற்புறுத்தி தன் மகனையும் கூட்டிக் கொண்டு, தனது சொந்த ஊருக்கு வாடகை காரில் கிளம்பினார்.
திடீரென்று பாதி வழியில் சொன்ன தேதிக்கு முன்னாதாகவே, பிரசவ வலி கண்டது.
பாதி வழியில் ஒரு கோயிலின் அருகே அவர்கள் சென்ற காரும் பழுதாகி நின்று விட்டது.
அந்த கோயிலில் நின்றிருந்த ஒரு வயதான பெண்மணி, லட்சுமியை உள்ளே அழைத்து வருமாறு கூறினார்.
சிவராமனுக்கும் அதுவே சரி என்று பட, தன் மனைவி மற்றும் மகனுடன் கோவிலின் உள்ளே சென்றார்.
பார்ப்பதற்கு தெய்வ கடாட்சமாக இருந்த அந்த வயதான பெண்மணி தான், லட்சுமிக்கு பிரசவம் பார்த்தார்.
மது பிறக்கும் போது லட்சுமி அரை மயக்க நிலையில் இருந்தார்.
அப்போது சிவராமன் அந்த வயதான பெண்மணியுடன், ஏதோ பேசி கொண்டு இருந்தார். ஒரு சில வார்த்தைகள் தான் அவரால் கேட்க முடிந்தது.
“நீ ஏதாவது எனக்கு செய்யணும்னு ஆசைப்பட்டா, எனக்கு ஒரு வாக்கு கொடு தம்பி.
எக்காரணம் கொண்டும் இந்த குழந்தையோட ஜாதகத்தை, வெளியே யாருக்கும் காட்டக் கூடாது. அதோட இப்போதைக்கு நீ இருக்க ஊரை விட்டு, வெளியே எங்கேயும் போக வேண்டாம், அது இந்த குழந்தையோட உயிருக்கு ஆபத்தா முடியும்.”
அதிர்ச்சியில் உறைந்து நின்ற சிவராமன்,
“எதுக்காக இப்படி சொல்றீங்கம்மா.”
“உலகத்தை காக்கும் கடவுளே ஆனாலும், கிரகணத்தின் போது கோயில் கதவை மூடி தான் ஆகணும்.
சாதாரண மனுசங்க நாம, தீய சக்தியோட கை ஓங்கி இருக்கும் போது, நம்மள பாதுகாத்துக்க விலகி இருப்பதுல தப்பில்ல.
ஆனா ஒரு கட்டத்துக்கு மேல உன் பொண்ணு, உன் கையை விட்டு போறத நீயே நினைச்சாலும் தடுக்க முடியாது. அவ பிறந்த லட்சியத்தை முடிக்க அதை நோக்கி போயே தீருவா.”
லட்சுமி தன் கண்களை கஷ்டப்பட்டு திறந்து பார்த்தபோது, அப்பெண்மணி லட்சுமியை நோக்கி ஒரு புன்னகையை சிந்தி விட்டு, காற்றினில் கரைந்து போனார்.
அவர் சொன்ன வார்த்தைகளை கிரகிக்க முடியாமல், தனக்குள் உழன்று கொண்டிருந்த சிவராமன், தன்னிலைக்கு வந்து பார்த்தபோது, அவர் அங்கே இல்லை.
வேலப்பன் ஐயாவின் வீடு, பொருட்கள் எல்லாம் அறையெங்கும் சிதறி கிடக்க, தன்னை சூழ்ந்து நின்ற உறவுகளிடம் கத்திக் கொண்டிருந்தாள் நிரஞ்சனா.
“நீங்க எல்லாரும் சொன்னது என்ன? இப்ப செஞ்சிருக்கறது என்ன? என் கல்யாணத்தை பத்தி ஒருத்தருக்கும் இந்த வீட்டில அக்கறை இல்ல.”
“தாத்தா நீங்க என்ன சொன்னீங்க? இந்த திருவிழால நம்ம சீரை காரணமா வச்சு, என் கல்யாணத்தை உறுதி செய்கிறதா சொன்னீங்களா இல்லையா?
இப்போ கொற்றவை கோவிலில் இருந்து, சீர் போகுதுன்னு சொல்றாங்க. அப்போ என் கதி? எனக்கு தெரியாது அத்தானோட என் கல்யாணம் இந்த வருசம் முடிஞ்சே ஆகணும்.”
வீட்டில் உள்ள ஒருவராலும் அவளை சமாதானப்படுத்தவே முடியவில்லை.
வண்டியிலிருந்து இறங்கிய மாறன், வீட்டினில் இருந்து வரும் குரலைக் கேட்டு, தங்கையின் அறையை நோக்கி சென்றான்.
அங்கிருந்தவர்களை வெளியே செல்ல சொல்லி விட்டு, தன் தங்கையின் அருகே அமர்ந்தான்.
“ரஞ்சி என்னைக்கு இருந்தாலும், வேந்தன் உனக்கு தான், என்னை நம்பு.
உன்னை தவிர வேற யாரையும் அவன் கல்யாணம் செய்ய முடியாது. நம்ம குடும்பத்துக்குள்ள இருக்கற வழக்கத்தை பத்தி, மறந்துட்டியா என்ன?
வடிவு பாட்டி கையில இருக்க அந்த பெட்டி, கண்டிப்பா உன் கைக்கு தான் வந்து சேரும். அதை விட்டா அவங்க குடும்பத்துக்கும் வேற வழி இல்ல.”
ஆம் சுந்தரமூர்த்தி தாத்தாவின் குடும்பத்தில், பரம்பரையாக ஒரு பெட்டியை பாதுகாத்து வருகின்றனர். தமது மன்னவரின் வீரவாளும் தேவியின் ஆபரணமும் அதில் உள்ளதாக கூறப்படுகிறது.
குலமகள் அவளின் கைகளில் இதை சேர்ப்பிக்க, வழி வழியாக பாதுகாத்து வருகின்றனர். இதுவரை ஒருவரும் அதில் உள்ள பொருட்களை கண்டது இல்லை.
தமது தேவி அவளின் வருகைக்காகவே அவைகள் அந்த பெட்டிக்குள் சிறைப்பட்டுள்ளன.
தேவி அவளின் பொற்கரம் பட்டாள், சிறை தானாகவே திறந்து விடும்.
அப்பெட்டியை வேலப்பன் ஐயாவின் குடும்பத்திலிருந்து, தமது வீட்டிற்கு மருமகளாக வருபவரிடம் ஒப்படைக்கின்றனர்.
திருமணத்திற்கு முந்தைய நிச்சயத்தின்போது அப்பெட்டியானது மணமகள் கையில் கொடுக்கப்படும்.
அன்றிலிருந்து இப்பெட்டி அவர்களின் பாதுகாப்பிற்குரிய பொக்கிஷமாக மாறுகிறது.
அவர்களைத் தவிர வேறு யாராலும் அதை நெருங்க இயலாது, முயன்றால் அதன் பலனை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும்.
அக்காலத்தில் இதன் மதிப்பை உணர்ந்து, கவர்ந்து செல்ல முயன்ற பலர் இம்மண்ணுலகை விட்டு பிரிந்த கதைகளும் பல உண்டு.
முள்ளு காட்டிற்கு சற்று தள்ளி இருந்த மரத்தின் மறைவான இடத்தில், கீழே அமர்ந்து கொண்டு வேந்தன், தீபன், வெற்றி மற்றும் மூர்த்தி ஆகிய நால்வரும், காட்டை கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
“வெற்றி நீ சொல்றது நிஜமா? கண்டிப்பா அவங்களை பார்த்தயா?”
“நிஜமாதான் சொல்றேன் வேந்தா, இன்னைக்கு காலைல மாறன் வாட்ட சாட்டமான மூணு ஆசாமிங்களை, கூட்டிட்டு கோவிலுக்கு வந்தான். அவங்க மூணு பேரையும் பாக்குறதுக்கு, ஏனோ சந்தேகமாவே இருந்தது.
கொற்றவைக் கோயிலுக்கு போற பாதையை, சரி செய்வதற்காக கூட்டிட்டு வந்ததா, மாறன் சொன்னான்.
ஊருக்கு வெளியே காட்டை ஒட்டி இருக்கிற ஒரு வீட்ல, ஊர் சார்பாக இவங்களை தங்க வெச்சு, நாளைக்கு காலைல இருந்து வேலையை ஆரம்பிக்க சொன்னாங்க ஊர் பெரியவங்க.
அவங்களை பார்க்கும்போது எனக்கு டவுட்டா இருந்துச்சு. அதனால அங்கே மறைவா இருந்து கண்காணிச்சிட்டு இருந்தேன்.
சரியா நைட்டு ஒரு ஏழு மணி இருக்கும், அவனுங்க மூணு பேரும் முகத்த மூடிக்கிட்டு, இந்த காட்டுக்கு பின்னாடி போனானுங்க.
நானும் பின்னாடியே அவங்களுக்கு சந்தேகம் வராது போல, ஒளிஞ்சு ஒளிஞ்சு போனேன்.
ஆனா எப்படி சட்டுனு அவங்க மூணு பேரும், திடீர்னு மறைஞ்சு போனானுங்கன்னு தெரியல, அங்க இருந்து வெளியே வந்த மாதிரியும் எனக்கு தெரியல, அதனால தான் உனக்கு உடனே போன் பண்ணி கூப்பிட்டேன்.”
வெற்றி வேந்தனுக்கு போன் செய்யும் போது, தீபனும் மூர்த்தியும் உடன் இருந்தனர். அதனால் அவர்களும் அவனுடன் புறப்பட்டு வந்து விட்டனர்.
“ஏன்டா உங்க இன்வஸ்டிகேஸன பகல்ல வச்சுக்க மாட்டிங்களா? ஒருத்தன் மொகரையும் தெரியல, குத்து மதிப்பா தான், ஒரு சைடு பார்த்து பேசிட்டு இருக்கேன். இந்த இருட்டுல காலுக்கு அடியில, பாம்பு போனா கூட தெரியாதுடா.”
“அய்யய்யே இந்த பெருச எதுக்குடா வேந்தா கூட்டிட்டு வந்தே? வயசான காலத்துல அமைதியா இல்லாம, எப்ப பாரு ஒரே புலம்பல்.”
“எதே, அடேய் வெட்டிப் பயலே இதை நீ மட்டும், எம் பொண்டாட்டி முன்னாடி சொல்லி இருந்த?”
“சொல்லியிருந்தா தங்கச்சியும் சேர்ந்து, ஆமாண்ணேன்னு சொல்லி இருக்கும்.”
வேந்தன் ஏதோ நினைவு வந்தவனாக தனது மொபைலை எடுத்து, அதில் அன்று தீபனை கண்காணித்த பைக் ஆசாமியின் புகைப்படத்தை, வெற்றியிடம் காட்டினான்.
“அந்த மூணு பேருல இந்த ஆள் இருந்தானான்னு பாரு?”
“ஆமாம் டா, அதுல இவனும் ஒருத்தந்தான். கூட இருந்த மத்த ரெண்டு பேரும், இவன் சொன்னதை தான் கேட்டு நடந்துக்கிட்டாங்க. ஆமாம் வேந்தா இவன் போட்டோ உன்கிட்ட எப்படி வந்தது?”
தீபன் கண்காணிக்கப்பட்ட அந்த நிகழ்வை வெற்றியிடம் கூறத் தொடங்கினான் வேந்தன்.
வேந்தன் அன்று அந்த பைக் ஆசாமியையும், அவன் பைக் நம்பரையும் போட்டோ எடுத்து வைத்திருந்தான். அதை வைத்து அவனின் பின்புலத்தை அறிந்து கொண்டான்.
அமைச்சரின் கையாலாக இருந்து கொண்டு, எதற்காக ஒரு போலீஸ் அதிகாரியை பின் தொடர்கிறான் என்று குழப்பத்தில் இருந்தான்.
அன்று மாரியப்பனோடு இருந்தவன் இவன் தானோ, என்ற சந்தேகத்தை முனியண்ணணிடம் காட்டி, இவன்தான் என்பதையும் தெளிவு படுத்திக் கொண்டான்.
ஆனால் இதெல்லாம் எதற்காக, அப்படி இந்த காட்டிற்குள் என்ன தான் ரகசியம் பொதிந்து இருக்கின்றது, என்பது மட்டும் விளங்கவில்லை.
இப்போது வந்த இம்மூவரும் கூட அமைச்சரின் ஆட்களோ? அவர்கள் திருவிழாவை நிறுத்த வந்தவர்களோ? என்று வினாவும் மனதில் எழ தவறவில்லை. இதே எண்ணங்கள் தான் தீபனின் மனதிலும் ஓடிக் கொண்டிருந்தது.
திடீரென்று பூமிக்கடியில் இருந்து சிறிது சிறிதாக வெளிச்சம் பரவுவது போல தோன்றியது.
“அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா? சூரியன் எப்போ இந்த சைடுல இருந்து உதிக்க ஆரம்பிச்சது?”
“அடேய் கூமுட்ட மூர்த்தி, நல்லா பாருடா அது தீபந்த வெளிச்சம்.”
“அதான் வெளிச்சம் கம்மியா இருக்குது. என்னடா இது? நான் நம்ம ஊர்ல தான் இருக்கேனா? பதுங்க குழி எல்லாம் வச்சிருக்கானுங்க?”
“எனக்கு தெரிஞ்சு இது சுரங்கப்பாதையா தான் இருக்கணும். இது நேரா காட்டுக்குள்ள போகும்னு நினைக்கிறேன்.”
“இப்பவே இவனுங்களை கையும் களவுமா புடிச்சு, ஊர் முன்னாடி நிறுத்தணும் வேந்தா.”
“இல்ல நாம அவசரப்பட கூடாது. நமக்கு முதல்ல அவங்களோட திட்டம் என்னன்னு முழுசா தெரியணும்.
அதுவரைக்கும் நாம பொறுமையா தான் இருந்தாகணும்.”
அந்த பைக் ஆசாமிக்கு முன் ஒருவன் தீப்பந்தம் பிடிக்க, அவனுக்கு பின்னே வரும் நால்வரையும் திட்டிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தான்.
“இன்னும் எவ்வளவு நாள் தாண்டா அந்த சிலையை தேடுவீங்க? தலைவர் அங்க கத்திக்கிட்டு இருக்காரு, பார்ட்டிக்கு வேற சரக்கு அனுப்பியாகணும்.
உங்க எல்லார்கிட்டயும் அந்த சிலையோட போட்டோ இருக்கில்ல. அந்தக் கொற்றவை கோயில சுத்தி தான், ஏதோ ஒரு இடத்துல அந்த சிலை இருக்கறதா குறிப்பில் இருக்கு.
இந்த ஊர்காரனுங்க கோவிலுக்கு வர்றதுக்குள்ள, நாம அதை எப்படியாவது கண்டுபிடிச்சே ஆகணும். அவனுங்க வரப்போக இருந்தானுங்கன்னா, நம்மளால இதுக்கப்புறம் அந்த சிலையை கண்டுபிடிக்கவே முடியாம போயிடும்.”
“அண்ணே நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணிட்டோம். எங்க சுத்தினாலும் ஒரே இடத்துலயே வந்து நிக்கிற மாதிரி இருக்கு. இதுக்கும் நாங்க எல்லோரும் பிரிஞ்சு வேற வேற திசையில போய் தான் தேடுறோம்.
அதோட அந்த மாரியப்பனுக்கு நடந்ததை நேர்ல பார்த்ததிலிருந்து, பசங்க எல்லாம் பயந்து போய் இருக்கானுங்க…”
“அறிவு கெட்டவனுங்களா உங்களை யாரு அந்த மோகினி பள்ளத்து வழியா போக சொன்னது. குருஜி தான் சொல்லி இருக்காரு இல்ல, அம்மாவாசை நைட்டு அந்த பள்ளத்தை நெருங்க கூடாதுன்னு, அப்புறம் எதுக்குடா போனீங்க.”
“மாரிதான் இதுதான் பக்கமுன்னு கூட்டிட்டு போனான். அன்னைக்கு நடந்தது இன்னும் எங்க கண்ணுக்குள்ளேயே இருக்குங்கண்ணே.
நாங்க பள்ளத்த நெருங்கும்போதே கருப்பா ஒரு உருவம் பள்ளத்துல இருந்து வெளியே வந்துச்சு. அது நாக்கு ஒரு அடிக்கு மேல தொங்கிட்டு இருந்ததுண்ணே, நாங்க எல்லாரும் ஓட ஆரம்பிச்சிட்டோம் ஆனா மாரி மட்டும் அது கிட்ட மாட்டிகிட்டான். மாரிக்கு என்ன நடந்ததுன்னு அடுத்த நாள் காலையில தான் எங்களுக்கெல்லாம் தெரியும்.”
“இப்ப தெரிஞ்சிருச்சு இல்ல இனியாவது ஜாக்கிரதையா இருந்து தொலைங்க.”
“அண்ணே பசங்க பயப்படுறாங்கண்ணே.”
பொலேர் என்று ஒரு அரை விழுந்தது பேசியவனுக்கு,
“கட்டு கட்டா பணம் வாங்கும் போது மட்டும் இனிச்சுதோ, வாய மூடிக்கிட்டு சொல்ற வேலைய பாக்கணும். அவனுங்க உசுருக்கும் சேர்த்து தான் பணத்தை வாங்குறானுங்க.
புரிஞ்சுதா? என்னடா மண்டைய மண்டைய ஆட்டறே?”
“புரிஞ்சதுண்ணே.”
“இப்ப தற்காலிகமா இந்த பாதையை எதையாச்சும் போட்டு மறைச்சு விடுங்க. நாளைக்கு கொற்றவை கோயிலுக்கு பாதை அமைக்கிற வேலை ஆரம்பிக்கிறதால ஊர்காரங்க கண்டிப்பா காட்ட சுத்தி வருவானுங்க. எவன் கண்ணுலையும் இது பட்டுற கூடாது.
கூடிய சீக்கிரம் ஊர்ல எவனையாச்சும் புடிச்சு கழுத்தறுத்து அந்த பக்கம் போட்டு விடுவோம், அதுக்கப்புறம் எவனும் அங்கிட்டு வரமாட்டான்.”
கேட்டுக் கொண்டிருந்த நம்மவர்கள் நால்வருக்கும் இங்கு நடந்த கொலைகளுக்கான காரணம் புரிய தொடங்கியது.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


பயங்கர சஸ்பென்ஸா கதை போகுது … மன்னவன் … தேவி … அப்புறம் … அவனோட வாள் இதெல்லாம் படிக்கும் போது Goosebumps ஆ இருக்கு … முன் ஜென்ம கதை பத்தி படிக்க ஆர்வமா இருக்கு … வேந்தன் மன்னனா மாற வேண்டிய நேரம் எப்போ வருமோ …
விரைவில் வரும் சிஸ். நன்றி 🙂