
அமைச்சர் பொன்னுரங்கத்திடம், தொலைபேசியில் உரையாடியது மாறன் தான்.
மாறன் அமைச்சரை சந்திக்க தன் சகாக்களுடன், மாலை மரியாதையோடு சென்றிருந்தான்.
நேரே சென்று பணிவுடன் அமைச்சரின் கால்களில் விழுந்து வணங்கி, மாலை அணிவித்தான்.
அவனை வரவேற்று உபசரித்த அமைச்சர், சில பல விசாரிப்புகளுக்கு பிறகு, நேரடியாக அவனிடம் விஷயத்திற்கு வந்தார்.
“என்ன மாறா உன் ஊருல ஏதோ கோயில் திருவிழான்னு கேள்விப்பட்டேன்?”
“ஆமா தலைவரே நாச்சியம்மன் கோவில் திருவிழா, சுத்துப்பட்டு கிராமம் எல்லாம் அங்க தான் இருக்கும். நம்ம சைடுல இது பெரிய திருவிழா தான்.”
“சரி, நம்ம கட்சி சார்பா என்ன பண்ணலாம்னு இருக்கீங்க.”
மாறன் குழப்பத்தோடு அவரை பார்த்து,
“புரியலயே தலைவரே?”
“என்னப்பா நீ, இன்னும் கொஞ்ச நாள்ல தேர்தல் வரப் போகுது, எம்எல்ஏ போஸ்ட் வேணும்னு கேக்குற, ஆனா மக்களை எப்படி கவர் பண்ணனும்னு தெரியலையே உனக்கு”
“என்ன சொல்ல வர்றீங்க தலைவரே.”
“கோவில் திருவிழாக்கு நம்ம கட்சி சார்பாக, பெருசா ஏதாவது உதவி செய்யணும்.
ஏன்னா உங்க ஊர்ல தான், நம்ம கட்சிக்கு ஓட்டு கம்மியா விழுகுது. அதை சரி செய்யணும்னா, இப்படி ஏதாவது செஞ்சு தான் ஆகணும்.”
இப்போதும் மாறன் பதில் ஏதும் கூறாமல், அவரை தான் யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கு தன் பக்த கோடிகளுடன் பிரசன்னமானார், ஸ்ரீ ஸ்ரீ ஜகஷ்டக ஸ்படிகலிங்க சாமியார் என்னும் அமைச்சரின் குருஜி.
குருஜியாகபட்டவர் தூய வெண்ணிற ஆடையில், நெற்றியில் சந்தன பொட்டிட்டு மொட்டை தலையுடன், பூமாலைதனை தோள்களில் தாங்கி, ஒரு கையில் கமண்டலமும் மறுக்கையில் ஜெபமாலையும் வைத்திருந்தார்.
குருஜியை கண்டதும் அமைச்சர் எழுந்து நின்று, கைகட்டி பயபக்தியுடன் அவரை வணங்கி நின்றார்.
மாறனும் இவர் அமைச்சரின் மரியாதைக்குரியவர் என்பதை புரிந்து கொண்டு, அவரை வணங்கி நின்றான்.
தன் கூர்மையான கண்களால் மாறனை அளவிட்டவாரோ, புன்னகை சிந்திய படி ஆசனத்தில் வந்தமர்ந்தார் குருஜி.
“குருஜி தம்பி பேரு மாறன். வர்ற தேர்தல்ல எம்எல்ஏ கேண்டிடேட்டா, நம்ம கட்சி சார்பில் நிறுத்தலாமான்னு ஒரு யோசனை. அது பத்தி பேச தான் தம்பிய கூப்பிட்டு இருந்தேன்.”
“யோசனை என்ன ரங்கா? அவன் முகத்திலேயே தெரிகிறதே, அவன் ஒரு வெற்றி திருமகன் என்று.
உறுதிப்படுத்திக் கொள் உன் முடிவை, ஜெயமே அது நிச்சயம்.”
சுவாமிஜியின் வார்த்தைகள் மாறனுக்கு, பண குவியலுக்குள் விழுந்து எழுந்தது போல இருந்தது.
நேராக சென்று குருஜியின் காலடிகளில் சாஷ்டாங்கமாக விழுந்தான் மாறன்.
“சுவாமி நீங்க தான் என் தெய்வம், உங்க ஆசிர்வாதம் எனக்கு எப்பவும் வேணும்.”
அவன் சுவாமிஜியின் காலில் விழுந்த நேரம், குருஜியும் அமைச்சரும் ஒரு மர்ம புன்னகையுடன், கண்களில் சைகை செய்து கொண்டனர்.
“எழுந்திரு மகனே, எனது நல்லாசி உனக்கு என்றும் உண்டு.”
“நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரன் மாறா, குருஜியோட வாயால நல்ல வாக்கு வாங்கி இருக்க.”
“எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான் தலைவரே, நீங்க என்னை கூப்பிட்டு விட்டதால தான், இவ்ளோ பெரிய மகான நான் சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது.”
“யார் யாருக்கு என்ன கிடைக்க வேண்டுமோ, அது கிட்டயே தீரும்.
விதி பயனை யாராலும் மாற்ற முடியாது. உனக்கானது உன்னையே வந்து சேரும் மகனே.”
“மாறா என்ன பொருத்தவரைக்கும் குருஜி பேச்சுக்கு, மறுவார்த்தையே இல்லை.
அதனால வர்ற தேர்தல்ல எம்எல்ஏ கேண்டிடேட்டா, உன்னையவே மேலிடத்தில் சிபாரிசு பண்றேன்.
நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும் மாறா.
உனக்கு உதவி செய்றதுக்காக நம்பிக்கையான நம்ம கட்சி ஆளுங்க அஞ்சு ஆறு பேரை, அங்க அனுப்பி வைக்கிறேன். ம்ம் இப்ப நீ கெளம்பு.”
“ரொம்ப நன்றிங்க தலைவரே.”
அவன் மீண்டும் ஒரு முறை அமைச்சரின் காலிலும் குருஜியின் காலிலும் விழுந்து வணங்கி விட்டு சென்றான்.
“குருஜி நான் தான் சொன்னேன்ல, இந்த முட்டாப் பய, அடிதடிக்கு தான் லாய்க்குன்னு.”
“ரங்கா நீ கேள்விப்பட்டது இல்லையா? சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று, இவன் நமக்கு நிச்சயம் தேவைப்படுவான்.
நமது திட்டத்துக்கு சிந்தித்து செயல்படும் புத்திசாலி தேவையில்லை, சொல்வதை செய்து முடிக்கும் முரட்டு முட்டாள் தான் தேவை.”
மாறன் நாச்சியம்மன் கோவில் பிரகாரத்தில் நுழைந்த போது, அங்குள்ள ஊர் மக்கள் அனைவரும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவன் கோயிலில் தற்போது நடந்து கொண்டு இருக்கும் பிரச்சினையில், வேடந்தூர் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தான். பின்ன வேடந்தூர்ல வாக்காளர் எண்ணிக்கை ஜாஸ்தியாச்சே.
அங்கிருந்தவர்கள் அனைவரும் வாயை பிளந்து கொண்டு தான், அதிர்ச்சியோடு கேட்டுக் கொண்டிருந்தனர்.
எதிர்ப்பு குரல் தெரிவித்த ஒரு சிலரும், மாறனின் ஆதரவிற்கு பிறகு வாயை திறக்கவில்லை.
அவனின் கட்டப்பஞ்சாயத்து தான் ஊரறிந்த விஷயமாயிற்றே.
“ஐயா கொற்றவை தேவி கோவில்ல இருந்து சீர் கொண்டு வர்றது, முதல்ல நாம கடைப்பிடிச்சிட்டு இருந்த வழக்கம் தானே.
ஏதோ இப்ப இடையில சில காரணத்தால பழக்கம் மாறிடுச்சு.
ஆத்தாவே இப்ப திரும்ப அந்த நடைமுறையை கேட்கறா, அப்ப நம்மளும் மாறித் தானே ஆகணும்.
இதுல என்ன உதவி வேணும்னாலும் தயங்காம எங்க கிட்ட கேளுங்க, இல்ல ஏதாச்சும் செய்யணும்னாலும் நாங்க ரெடி தான்.”
சுந்தரமூர்த்தி ஐயா மாறனை பார்த்து நாசுக்காக பேச ஆரம்பித்தார்.
“ரொம்ப சந்தோஷம்பா. நீங்க உதவி செய்றேன்னு சொன்ன அந்த ஒரு வார்த்தையே எங்களுக்கு போதும்.
இது ஜாதி, மதம், கட்சின்னு பாகுபாடில்லாம, ஊரே சேர்ந்து கொண்டாடுற திருவிழா. கண்டிப்பா உங்க ஒத்துழைப்பு எங்களுக்கு எப்பவும் வேணும். உதவி தேவைப்படும்போது கண்டிப்பா கூப்பிடுறோம்.”
கூட்டத்திலிருந்து தள்ளி வந்து, வேந்தனுக்கு தொலைபேசியில் அழைத்தான் வெற்றிச்செல்வன் என்னும் வெற்றி.
வெற்றி, வேந்தன் மற்றும் தீபனுடன் பள்ளியில் படித்த அவர்களின் தோழன் ஆவான்.
தன் மண்ணின் மீது கொண்ட பிடிப்பினால், அக்ரி படித்து இயற்கை விவசாயம் செய்யும், வளர்ந்து வரும் ஒரு இளம் விவசாயி.
இங்கு கோயிலில் நடந்தவற்றையும், மாறனின் வரவையும் அவன் கூறிய அனைத்தையும் வேந்தனிடம் தெரிவித்தான்.
“சரி வெற்றி, நீ அங்க போய் கவனி. ஏதாச்சும் ஒன்னுன்னா எனக்கு உடனே கூப்பிடு.”
“சரி வேந்தா நான் பார்த்துக்கிறேன்.”
வேந்தன் தீபனுக்கு தொலைபேசியில் அழைத்தான்.
“தீபா நாம நெனச்சபடி, எலி எலிப்பொறிய நோக்கி வந்துகிட்டு இருக்கு, கூடிய சீக்கிரமே பொறியில சிக்கிடும்.”
“அதுக்குத்தானே வேந்தா நாம காத்திருந்தோம், அதை ஒரு கை பார்த்திடுவோம்.”
இவனுங்க பேசிக்கிறத பார்த்தா ஏற்கனவே இது பத்தி தெரியும் போலயே!
சுந்தரமூர்த்தி தாத்தாவின் மறுப்பில் மனதில் கோபம் மூண்டாலும், அதை முகத்தினில் காட்டாமல் சிரித்துக் கொண்டே, மாறன் மறுமொழி கூறினான்.
“சரிதாங்கய்யா ஒரு கட்சிக்காரனா இல்லாம, மேலூர்காரனா கொற்றவை தேவி கோயிலுக்கு போற ஊர்க்காரங்களுக்கு, உதவி செய்யவாவது எங்களுக்கு அனுமதி கொடுப்பீங்களா?”
அவன் பேசிய தொனியிலேயே புரிந்தது, அவன் மனதின் கோபம். இதற்கு மேல் மறுப்பு கூற முடியாமல், சுந்தரமூர்த்தி தாத்தா சரி என்று தலையாட்டினார்.
தனது பிரதிபின்பமாக வளர்ந்து நிற்கும் பேரனை பார்த்து, வேலப்பன் ஐயா கவலை கொண்டார் .
அவரும் மாறனை போலவே இளம் வயதில், எந்த வேலைக்கும் செல்லாமல், வீட்டையும் கவனிக்காமல் கட்சி அரசியல் என்று சுற்றி வந்தவர் தான்.
பூவாத்தா தனது மூன்று மகன்களையும் வயது வந்த பெண்ணான நாத்தனாரையும் வைத்துக்கொண்டு, வாழ்க்கை நடத்த போராட, அவர்களுக்கு துணையாக நின்றவர் தான் பூவாத்தாவின் அண்ணன் மருதுசாமி.
வேலப்பன் ஒரு நாளும் தன் மைத்துனரை, மதித்து நடந்து கொண்டது இல்லை.
அவர் தான் தன் குடும்பம் செயல்பட காரணமாக இருக்கிறார் என்று, நினைத்துப் பார்த்ததும் இல்லை.
வேலப்பனின் செயல்பாடுகளைக் கண்டு சுந்தரமூர்த்தியின் குடும்பம், அவன் தங்கையை பெண் எடுக்க தயங்கியது.
மருதுசாமி தான் வடிவு தன் தங்கையை போன்றவள் என்றும், அவள் குணநலன்களை எடுத்துக் கூறியும், சுந்தரமூர்த்தியின் குடும்பத்தில் பேசி இத்திருமணத்தை முடித்து வைத்தார்.
மருதுசாமியின் மனைவி பிரசவத்திலேயே இறந்துவிட, அவர் மகளை பூவாத்தா தான் கவனித்துக் கொண்டார்.
பூவாத்தா தன் அண்ணன் மகளே, தனக்கு மருமகளாக வர வேண்டும் என்று ஆசை கொண்டார்.
இதை தன் அண்ணனிடமும் எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார்.
ஒரு விபத்தில் மருதுசாமி அடிபட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையில் சேர்க்கப்பட்டார்.
அவர் உயிர் பிரியும் நிலையில், தன் மகளின் எதிர்காலத்தை நினைத்து, கலங்கினார்.
தன் இரண்டாவது மகனுடன் மருத்துவமனைக்கு அண்ணனை காண வந்திருந்த பூவாத்தா, அழுது கொண்டு இருந்த அண்ணன் மகளின் கையை தன் மகனோடு சேர்த்து வைத்து, கண்ணீரோடு வாக்கு கொடுத்தார்.
“அண்ணே என்னைக்கு இருந்தாலும் எம்மவனுக்கு இவ தான்ணே பொண்டாட்டி, இவ என் மருமக இல்லண்ணே மகளப் போல பார்த்துப்பேன். இது சாமியா கும்படற அந்த குலதேவி மேல சத்தியம்.”
இதனைக் கேட்ட பிறகே அந்த உயிர், நிம்மதியாக தனது இறுதி யாத்திரையை தொடங்கியது.
பூவாத்தா தனது அண்ணன் மகளை, தனது பாதுகாப்பிலேயே நன்கு வளர்த்து வந்தார்.
அவளுக்கு திருமண வயது வந்த போது வேலப்பனிடம் இந்த திருமணத்தைப் பற்றி பேச்சு எடுக்க, அவரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அவர் தன் மகன்களுக்கு பெரிய இடத்தில் சம்பந்தம் செய்ய விரும்பினார். தன் மைத்துனர் செய்த உதவிகளை நினைக்க மறந்தார்.
தன் மனைவியின் எதிர்ப்பையும் மீறி தன் மகன்களுக்கு வெளி இடத்தில் பெண் தேடினார்.
ஆனால் அவரது இரண்டாவது புதல்வன், அவர் பேச்சையும் மீறி தன் மாமன் மகளை கரம் பிடித்தார்.
இதனால் ஆத்திரம் கொண்ட வேலப்பன், தம் இரண்டாம் புதல்வனை வீட்டை விட்டே வெளியேற்றி விட்டார்.
இதனால் மனமுடைந்த அவர் மனைவி பூவாத்தா, அன்று முதல் அவரிடம் பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொண்டார்.
முதலில் நீ பேசாவிட்டால் எனக்கு என்ன என்று இறுமாப்பில் இருந்த வேலப்பன், தனது வயதான காலத்தில் தான், தன் துணையின் அருமையை உணர்ந்தார்.
தனது தவறுகளும் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது. தன் மனைவி தன்னிடம் ஒரு வார்த்தையாவது பேசிவிட மாட்டாளா என்று ஏங்கினார்.
தன் இரண்டாவது மகனையும் தேடிக் கொண்டு தான் இருக்கிறார். அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை
பூவாத்தா தனது மகன்கள் ஒருநாளும் அவர்களின் தந்தையின் வழியில், சென்று விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
எனவே சற்று கண்டிப்புடனும் நற்பண்புகளுடனுமே, அவர்களை வளர்த்து ஆளாக்கினார்.
சுந்தரமூர்த்தி தன் மகள்களை இக்காரணத்திற்காகவே, அவர்களுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
ஏனோ மாறனை மட்டும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் வேலப்பன் ஐயாவின் குணத்தை ஒத்து இருப்பதாலோ என்னவோ?
மதுவின் அறையில், அவள் கட்டிலில் துணி குவியல்களுக்கு நடுவே, கன்னத்தில் கை கொடுத்து மதுவின் அட்டகாசங்களை தாங்க முடியாமல், அவளை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தால் வினு.
மது ஒவ்வொரு துப்பட்டாவாக எடுத்து தன் தலை மீது முக்காடு போல போடுவதும், பிறகு அது சரியில்லை என்று, கட்டிலின் மீது வீசிவிட்டு அடுத்ததை எடுப்பதுமாகவே இருந்தாள்.
ஒரு கட்டத்தில் அவளின் அக்கப்போர் தாங்காமல் வினு பொங்கி விட்டாள்.
“அடியே அது தான் ஹெல்மெட் போட்டு தானே வண்டி ஓட்டறோம்.”
“அப்புறம் எதுக்கு துப்பட்டாவால முகத்தை கவர் பண்ணிகிட்டு, அதுக்கு மேல ஹெல்மெட் போட சொல்ற?”
“நீ எல்லாம் என்னத்த தான் படிச்சியோ, வெயிலில் இருந்து நம்ம முகத்தை பாதுகாக்க தான், இந்த துப்பட்டாவ முக்காடு மாதிரி போடச் சொல்றேன்.”
“வெயிலில இருந்து பாதுகாத்துக்கவா இல்ல, வெளி ஆளுங்க யாரும் நம்ம முகத்தை அடையாளம் கண்டுபிடிச்சிடக் கூடாதுங்கறதுக்காகவா?
இவ்வளவு பயம் இருக்கவ எதுக்குடி, அவர் கார் மேல கல்லை தூக்கி போட்ட?”
“எது பயமா? யாருக்கு பயம்? இதுக்கு பேரு முன் ஜாக்கிரதைடி செல்லம்.”
“ஓஹோ அப்புறம் எதுக்கு நல்லா இருந்த வண்டிய மெக்கானிக் ஷாப்ல விட்டுட்டு, ரெண்டு பேர் வீட்லயும் பைக் ரிப்பேர்னு பொய் சொல்லி, அடுத்த நாள் பஸ்ஸில் போனோம்.
சரி அத விடு, இப்போ பைக்ல போகும்போது ஹெல்மெட் போதுமே நீ எதுக்கு முகத்தை மறைச்சிகிட்டு முகமூடி கொள்ளைக்காரி மாதிரி வெளியே சுத்துற?”
“யோசிக்கிறேன்னு சொல்லி, இல்லாத மூளைய ரொம்ப கசக்கற போலயே வினு குட்டி. அந்த மல குரங்கு என்ன பேச்சு பேசுறான்? எவ்வளவு தைரியம் இருந்தா எங்க அப்பாவை திட்டுவான்? அதனால தான் நான் அப்படி செஞ்சேன்.”
இவள் தான் முதலில் பேசவே ஆரம்பித்தது என்பதை, வசதியாக மறந்துவிட்டாள் போல.
“ஹம்ம்ம், ஆமா மது நம்ம இன்டர்வியூ அட்டென்ட் பண்ணுனோமே, அங்கிருந்து கூட ஆர்டர் வந்து இருந்துச்சே, அத பத்தி வீட்ல பேசுனியா?”
“ப்ச்சு, எங்க அப்பா வேற வேலைக்கு போறதா இருந்தா, நீ வீட்டிலேயே இருந்துக்கம்மான்னு சொல்லிட்டாரு.
என் கூட பிறந்த தடிமாட்ட, அண்ணான்னு சொல்லி ஐஸ் எல்லாம் வச்சு, எனக்காக அப்பாகிட்ட பேச சொன்னேன்.
அந்த எருமை மாடு, அப்பா கிட்ட இதுக்காக ஒரு வார்த்தை கூட பேசலயே.
ஆனா அப்பா உன் நல்லதுக்காக தான் பாப்பா சொல்லுவாருன்னு, அவர் முன்னாடியே ஒரு பெர்ஃபாமன்ஸ வேற போட்டுட்டான்.”
“இது தெரிஞ்ச விஷயம் தானே, உங்க அப்பா தான், உன்ன கூண்டுக்கிளி மாதிரி தானே வளர்க்கறாரு.
சரி சரி முறைக்காத, இந்த துப்பட்டா அவதாரம் எத்தனை நாளைக்கு? இத போட்டுகிட்டு எத்தனை நாளைக்குடி சுத்துறது?”
“ஒரு இரண்டு நாள் எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கோ செல்லம். அதுக்குள்ள கண்டிப்பா அவன் நம்மள மறந்திடுவான்.”
மிஸ் மதுரயாழினி உங்க கணிப்பு ரொம்பபப தப்பு. வேந்தன் ஆல்ரெடி உங்களுக்கு ஸ்கெட்சு போட்டுட்டான். அத என்னன்னு பாக்க நாங்களும் வெயிட் பண்றோம்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஆமா வெயிட் பண்றோம் … ஹீரோ ஹீரோயின் மோதல் காதலா மாற வேண்டாமா …
நன்றி சிஸ்🙂