Loading

     நாச்சி அம்மன் கோவிலில், ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில், சாமி ஆடி குறி சொல்வது வழக்கமான ஒன்று.

  வேடந்தூரை சுற்றியுள்ள ஊர்களில் இருந்து, குறி கேட்பதற்க்காகவும் பிரச்சனைகளை சொல்லி பரிகாரம் கேட்பதற்க்காகவும், நிறைய மக்கள் இங்கு வருவதுண்டு.

   இந்த முறை திருவிழாவை பற்றி கேட்க, ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடியிருந்தனர்.

     திருவிழாவை பற்றி கேட்டதுமே, சாமி வந்து ஆடிக் கொண்டிருந்த பூசாரி, ஆங்காரமாக ஆட ஆரம்பித்து விட்டார்.

   என்ன செய்தும் அவரை அமைதி படுத்த முடியவில்லை.

  பெண்கள் குலவையிட்டு வேண்டிட ஆரம்பித்தனர்

       “ஆத்தா மகமாயி, ஆயிரம் கண்ணுடையாளே, உம் பிள்ளைங்க மேல இத்தனை கோபம் வேண்டா தாயி, அது இந்த ஊரையே அழிச்சிடும்.”

       “நாங்க ஏதாவது தப்பு பண்ணி இருந்தா அதை மன்னிச்சு அருள் புரிங்க தாயே.”

   மஞ்சள் நீர் ஊற்றப்பட்டு, தீப ஆராதனை மற்றும் சூடம் ஏற்றி காட்டப்பட்டது, கொஞ்சம் கொஞ்சமாக மனம் இறங்கி வந்தால் அன்னையவள்.

   “இந்த வருஷம் கொற்றவை தேவி கோவில்ல இருந்து தான் எனக்கு சீர் வரணும்.

       கெட்ட  சக்திங்க ரத்த காவு கேக்குதுடா, அதை தடுக்கனும்னா எத்தனை தடை வந்தாலும், இது மட்டும் தான் நடக்கணும்.”

   அருள் வந்த பூசாரி வாயில், எரியும் சூடத்தை போட்டுக் கொண்டு மலை இறங்கி, மயங்கி விழுகிறார்.

  ஊர்மக்கள் அதிர்ந்து தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர்.

     “இதெல்லாம் சாத்தியமாப்பா?.”  

       “ரொம்ப வருஷம் ஆயிடுச்சே? காட்டுல இருந்து சீர் கொண்டு வர்றதை நிறுத்தி.”

        “அந்த இடத்துல உயிருக்கு உத்தரவாதம் இல்லைன்னு தானே, இந்த நடைமுறைய நமக்கு முன்னே இருந்தவங்க மாத்தினாங்க?”

  திருவிழாவின் ஒரு பகுதியான அம்மன் அழைத்து வருதல் நிகழ்ச்சி, முன்பெல்லாம் காட்டினில் அமைந்துள்ள, கொற்றவை கோயிலில் இருந்து தான் நடைபெறும்.

  ஆனால் காலப்போக்கில் இங்கு வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்ததால், சில உயிர் இழப்பை சந்திக்க வேண்டி இருந்தது. அதனால் இம்முறை கைவிடப்பட்டது.

    அதற்கு பதிலாக வேடந்தூரின் பக்கத்து கிராமமான, மேலூரில் இருந்து அம்மன் அழைத்து வருதல் நடைபெறுகிறது.

  கொற்றவை தேவி கோயிலின் அருகே காட்டில் வசித்த மக்கள், இந்த மேலூர்க்கு சில காரணங்களால் புலம்பெயர்ந்தனர்

    அதனால் மேலூரில் உள்ள ஊர் தலைவரான வேலப்பன் ஐயா, அவர்களின் இல்லத்தில் இருந்து தான், அம்மன் அழைத்து வருதல் வைபவம் நடைபெறுகின்றது.

     மேலூரை சேர்ந்த சில ஊர் பெரியவர்களும் அங்கு தான் இருந்தனர்.

    ஆனால் வேலப்பன் ஐயா குடும்பத்தின் சார்பாக, ஒருவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

   வேலப்பன் ஐயா குடும்பத்திற்கும், சுந்தரமூர்த்தி தாத்தா குடும்பத்திற்கும் இடையே, பெண் கொடுத்து பெண் எடுக்கும் பழக்கம் வழிவழியாக இருந்து வந்தது.

   வடிவுப்பாட்டியும், வேலப்பன் ஐயாவும் கூட உடன் பிறந்தவர்கள் தான். வடிவுப்பாட்டியின் மகள்களான சுமதியும் சுகந்தாவும் வேலப்பன் அய்யாவின் மருமகள்கள்.

    வேலப்பன், பூவாத்தா தம்பதியருக்கு மூன்று புதல்வர்கள் மூத்தவர் தாமோதரன்.

    இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று என்று இரு குழந்தைகள் மாறன் மற்றும் நிரஞ்சனா.

  ஆளுங்கட்சியின் இம்மாவட்ட செயலாளரான மாறன், பாதி நாட்கள் வெளியூரிலும், பாதி நாட்கள் உள்ளூரிலும் வசிப்பவன். இவன் ஒரு அதிரடி பேர்வழி.

   அரசியல் என்ற போர்வையில், கட்டப்பஞ்சாயத்து செய்து வருபவன்.

   இவன் மனைவி காயத்ரி அவனுக்கு நேர் எதிர், அமைதியின் சுபாவம்.

   இவர்களுக்கு நான்கு வயதில் ஆதித்யன் என்ற, ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    நிரஞ்சனா கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, வீட்டில் தான் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறாள்.

  வேலப்பன் ஐயாவின் கடைசி புதல்வர் வாசுதேவன், இவர் மனைவி சுகந்தா இவருக்கு மகேந்திரன் மற்றும் மணிகண்டன் என்ற இரண்டு ஆண் குழந்தைகள்.

  மகேந்திரன் கல்லூரியிலும் மணிகண்டன் பள்ளியிலும் படித்துக் கொண்டிருக்கின்றனர்.

  வேலப்பன் ஐயாவின் இரண்டாவது புதல்வர், தனது அன்னை அவரது அண்ணாவிற்கு கொடுத்த சத்தியத்திற்காக, அவரது மகளை கை பிடித்ததால், தனது தந்தையின் கோபத்திற்கு உள்ளாகி, அவரால் வீட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டார்.

  சுந்தரமூர்த்தி ஐயாவின் வீட்டில், மதிவாணன் நிரஞ்சனாவை விட பத்து வயது மூத்தவர்.

   பெரியவர்கள் எல்லோரும் திருமணத்தை பொறுத்தவரை, இந்த வயது வித்தியாசம் சாதாரணம் தான் என்று எடுத்துக் கூறினாலும்,

    “ஆசிரியராக இதை ஒரு நாளும் என்னால் ஏற்க முடியாது. நான் பிறருக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர, அதை விடுத்து தவறான பாதையை காட்டக் கூடாது.” என அந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.

      அடுத்து யுவேந்திரனுடன் திருமணம் செய்ய பேச்செடுக்க, அதை யுவேந்திரன் முற்றிலுமாக மறுத்து விட்டான்.

     கவிநிலாவிற்கு திருமணம் முடிக்காமல், தான் செய்து கொள்ள முடியாது என்று மறுத்து விட்டான்.

   இதில் வேலப்பன் ஐயா குடும்பத்திற்கு சற்று வருத்தம் தான்.

   நாச்சியம்மன் கோயில் வேடந்தூர் மட்டும் அல்லாது, அதனை சுற்றியுள்ள ஊர்களுக்கும் பொதுவான ஒரு திருத்தலம்.

    ஆகவே அனைத்து ஊர் மக்களுக்கும் நாச்சியம்மன் கோவில் பிரகாரத்தில், திருவிழாவை பற்றி கலந்து ஆலோசிக்க, முறையாக அழைப்பு விட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

    வேந்தனது காரி, இனிமையான காதல் பாடல்களால் மிதந்து கொண்டிருந்தது.

   வேந்தன் தனது காரின் பின் இருக்கையில் கால் மேல் கால் போட்டபடி, தலைக்கு ஒரு கையை முட்டுக் கொடுத்து இன்னொரு கையால் மணிகள் கோர்க்கப்பட்ட ரப்பர் பேண்டை சுற்றிக் கொண்டே, அலெக்சாவுக்கு அடுத்தடுத்து காதல் பாடல்களை ஆணையிட்டு கொண்டிருந்தான்.

    மூர்த்தி காரை ஓட்டிட தீபன் அவன் அருகில், முன்னிருக்கையில் அமர்ந்திருந்தான்.

  இவர்கள் ரோட்டை ஒரு பார்வையும், இவனை ஒரு பார்வையுமாக தான், பார்த்துக் கொண்டிருந்தனர்.

    இவர்களின் மனதில் சற்று முன் நடந்த நிகழ்வு தான் ஓடிக் கொண்டிருந்தது.

   மதுவின் கைவண்ணத்தில் வேந்தனது ஜாக்குவார், தனது ஒற்றைக் கண்ணை இழந்தது.

     வேந்தன் சுதாரிக்கும் முன்பே, மது  வினுவின் ஸ்கூட்டியை நோக்கி ஓட ஆரம்பித்தாள்,

“அடியே எலி குஞ்சு என் கையில மாட்டுன செத்தடி நீ.”

           “போடா கடுவன் பூனை.”

வேந்தன் மதுவை நெருங்கும் முன்பே, அவள் வினுவின் ஸ்கூட்டியில் சென்று அமர்ந்து விட்டாள்.
 
  வேந்தன் அவளை எட்டிப் பிடித்திட முனைகையில், அவள் கூந்தலின் நுனி தான், கைக்கு கிட்டியது.

  ஸ்கூட்டி நகர்ந்திடவே அவளின் நுனி முடியில் இருந்த ரப்பர் பேண்ட் அவன் கைக்குள் வந்து சேர்ந்தது.

      அதை கைக்குள் வைத்துக் கொண்டு, காரின் பின் சீட்டில் சென்று அமர்ந்தவன் தான்.
 
   மூர்த்தியும் தீபனும் தான் தாங்கள் வந்த வண்டியை, தெரிந்தவரை அழைத்து கொடுத்து அனுப்பிவிட்டு, அவன் வண்டியை எடுத்துக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர்.

   “டேய் தீபா இவனுக்கு எகத்தாளத்தை பாத்தியா, அவன் காருக்கு நம்மள செக்யூரிட்டி ஆக்கிட்டு, வேந்த மகராசா காதல் உலகத்துல பவனி வர்றார் பாரு.”

  “அந்த புள்ள செஞ்ச வேலைக்கு இவன் ருத்ர தாண்டவம் ஆடுவான்னு பார்த்தா, இவன் என்னடா காதல் மன்னனா மாறி கிருஷ்ண அவதாரம் எடுத்து நிக்கிறான்.”

“மேலூர்காரனுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சது ரணகளம் தான் போ.”
  
       அமைச்சர் பொன்னுரங்கத்தின் வீடு, அரசியல்வாதியின் வீடு என்பதற்கு சான்றாக கரை வேட்டிகளும் சில காக்கிச்சட்டைகளும் வலம் வந்து கொண்டிருந்தது.

        கேட்டில் இருந்து பார்க்கும் போதே ஒரு குட்டி வெள்ளை மாளிகை போன்று, தோற்றத்தைக் கொண்டிருந்தது.

    வீடு முழுவதும் வெள்ளை மார்பில் கற்களால் இழைக்கப்பட்டிருந்தது.

   இது பல ரத்தக் கறைகளை மறைப்பதற்காகவே இப்படி போடப்பட்டதோ என்னவோ!

    நடு வீட்டில் சிரித்த முகத்தோடு சாந்த சொரூபமாக, கைகளை கூப்பியபடி இருந்த, அமைச்சரின் புகைப்படம் நம்மை வரவேற்கின்றது.

  படிக்கட்டுகள் ஏறி மேல் பகுதிக்கு சென்று பார்த்தால், அமைச்சர் யாரோ இருவரை கலர் கலர் வார்த்தைகளால், விகாரமான கோப முகத்தோடு, அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்.

  “ஏண்டா அறிவு கெட்டவனுங்களா, உங்களை என்ன புடுங்கறதுக்காக அந்த ஊர்க்கு அனுப்பி வச்சேன்.”

“காட்டுக்கு பின்னாடி வழி அமைக்கிறதுக்கே பல மாசம் ஆகிப் போச்சு.

     அங்க பூஜை செஞ்சு மந்திர கட்டு போட்டு இருக்கோம், தெரியும்ல? இவனுங்க உள்ள போய் பார்த்தானுங்கன்னா கதையே  கெட்டிடும்.

     கண்டிப்பா இந்த விஷயம் குருஜி காதுக்கு போயிருக்கும். இது விஷயமா நான் அவர்கிட்ட பேசி தான் முடிவு எடுக்கணும்.

   ப்ச்சு ,இன்னும் நம்ம வேலையே அங்க ஆரம்பிக்கல, அதுக்குள்ள ஊர்காரனுங்க கொற்றவை கோவிலுக்கு போக போறதா சொல்லிட்டு இருக்க?

    ஏற்கனவே அந்த வெளிநாட்டுக்காரனுங்க வேற, எப்ப சரக்கு கைக்கு வரும்னு கேட்டுகிட்டே இருக்கானுங்க, இதுல இந்த பிரச்சனை வேறயா?

  ஊர்காரனுங்க ஒருத்தனோட நிழல் கூட அந்த காட்டுப் பக்கம் போகக் கூடாது.

   என்ன செய்வீங்களோ, ஏது செய்வீங்களோ அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனா, ஊர்காரனுங்க ஒருத்தனோட கால் கூட அந்த காட்டுக்குள்ள படக் கூடாது.”

  “தலைவரே உங்களுக்கே தெரியும், யாரும் அந்த காட்டுக்குள்ள வரக் கூடாதுன்னு தான், ஊர்க்காரங்க சில பேர் சோலிய முடிச்சு அந்த பள்ளத்து கிட்ட போட்டு வெச்சோம்.

    அதனால எவனும் காட்டுக்குள்ள வரவே பயப்பட்டான்.

    இப்படி திடீர்னு கோவில் மூலமா பிரச்சனை வரும்னு, நாங்க எதிர்பார்க்கவே இல்ல தலைவரே.”

   “எனக்கு அதெல்லாம் தெரியாது, எவனை வெட்டுவியோ எவனை குத்துவியோ, இல்ல நீயே போய் சாவையோ, ஒருத்தனும் அந்த காட்டுப் பக்கம் போக கூடாது. அந்த கோயில் பக்கமும் தான்.”

  அவன் தலையை ஆட்டிவிட்டு நகர,

      “டேய் ஒரு  நிமிஷம் இரு, இப்ப காட்டுக்குள்ள இருக்க கோவிலுக்கு போக கூடாதுன்னு பிரச்சனை பண்ணா, ஏன்னு ஒரு கேள்வி வரும்.

    அந்த ஊர்காரனுங்க இந்த விசயத்தில கண்டிப்பா சும்மா இருக்க மாட்டானுங்க.

  இதை வேற வழியா தான் போய் முடிக்கணும்.

    நம்ம கட்சியில் இருந்து அந்த ஊர் கோவிலுக்கு உதவி செய்ற மாதிரி பேசி, கடைசி நேரத்துல காட்டுக்குள்ள போக முடியாதபடி பண்ணிடுவோம்.

   அதுக்கு நம்ம ஆள் ஒருத்தன் அங்க  இருக்கணும்.ம்ம்ம்…. இதுக்கு அவந்தான் சரியா இருப்பான்.”

   அமைச்சர் தனது தொலைபேசியில் இருந்து யாருக்கோ அழைப்பு விடுத்தார்.
 
“தம்பி, ம்ம்ம் வணக்கம் ப்பா, நல்லா இருக்கியா? ம்ம்ம்.”

“நான் கொஞ்சம் உன்னை நேர்ல பார்க்கணுமே. ம்ம்ம் ஆமா இப்ப வேண்டாம்.”

  “நீ நேரா சாயங்காலம் வீட்டுக்கு வந்துடு.”

  “சரிப்பா ஞாபகம் இருக்கு, அதெல்லாம் நேர்ல பேசிக்கலாம் நீ வா. ம்ம்ம் சரி.”

       நாச்சியம்மன் கோயில் திருவிழா வேடந்தூர் மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள ஊர்களுக்கும் இது முக்கியமான திருவிழாவாகும்.

    இங்கே சப்தகன்னியரும் காட்சி தருகின்றனர்.

    வீட்டில் சுபகாரியங்கள் நிகழ வேண்டும் என்றாலோ, அந்த முறை விவசாயம் செழிக்க வேண்டும் என்றாலோ,சப்தகன்னியர்களுக்கும் நாச்சியம்மனுக்கும் புது வஸ்திரம் சார்த்தி தீபாராதனை காட்டினால், அதில் மனம் குளிர்ந்து பூமியையும் இல்லத்தையும் நிறைக்க செய்வாள் இந்த அன்னை, என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கை.

  வம்சத்தைக் காப்பவள் என்றும் மக்களால் போற்றப்படுகிறாள்.

   நாச்சியம்மன் கோயில் பிரகாரத்தில் வேடந்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பிற ஊர் பொதுமக்களும் ஊர் பெரியவர்களும் கூடி இருந்தனர்.

   வேலப்பன் ஐயாவும் அவர்களின் இரு மகன்களும் கூட அங்கு தான் இருந்தனர்.

   பத்து நாட்கள் நடக்கும் திருவிழா வைபவங்களுக்கான பொறுப்பாளர்களையும், வழிநடத்தி செல்லும் உறுப்பினர்களையும், ஒவ்வொரு ஊரின் சார்பாகவும் தீர்மானித்து கொண்டு இருந்தனர்.

   ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் இருந்து பூச்சட்டி மற்றும் அலகுகுத்தி, நேர்த்தி கடன் செலுத்துதல் போன்றவை நடைபெறும்.

    இத்தோடு மாவிளக்கு,முளைப்பாரி மற்றும் கரகம் எடுத்து வருதல் போன்றவையும் நடைபெறும்.

   இங்கு கோயிலின் இதுவரையிலான வரவு செலவுகளும், அனைவரது முன்பும் விளக்கமாக தெரிவிக்கப்பட்டது.

    அடுத்து அம்மன் அழைத்து வருதல் பற்றி பேச்சு எழும்போது,  முந்தைய தினம் நடந்த நிகழ்வுகள் விரிவாக அனைவரின் முன்பும் தெரிவிக்கப்பட்டது.

  ஒவ்வொரு கூட்டத்திலும் பிறர் கருத்துக்களை புரிந்து கொண்டு, ஒத்துப் போவோரும் உண்டு. வேண்டும் என்றே எதிர்மறையாக கருத்துக்களை கூறி வழக்காடுபவர்களும் உண்டு.

    அவர்களில் ஒருவன் பற்ற வைக்க ஆரம்பித்தான்.

   “ஏப்பா சாமி சொல்லுதுங்கிறதுக்காக, எங்களை எல்லாம் காட்டுக்குள்ள போய் சாகச் சொல்றீங்களா?

   ஏற்கனவே காட்டுக்குள்ள போனவங்க எல்லாம், பள்ளத்துக்கிட்ட செத்து கிடக்கிறதா புரளி இருக்கு.

    இதுல தெரிஞ்சே போய் சாக சொல்றீங்களா?

    எப்பா யாராச்சும் ஏதாச்சும் பேசுங்கப்பா? எல்லாரும் இப்படி வாய மூடிக்கிட்டு இருந்தா எப்படி?”

      “இங்க பாருப்பா வாசு, உன்னை யாரும் வந்து இங்க சாக சொல்லல, சும்மா எல்லாரையும் ஏத்தி விட்டுக்கிட்டு இருக்காத.”

       “உன்ன பத்தி இந்த ஊருக்கே தெரியும். இது அம்மனோட வாக்கு, அவ சொல்லு தான் எங்களுக்கு எல்லாம் வேத வாக்கு. அதை நிறைவேத்த வேண்டியது எங்க கடமை.”

   “அப்போ நீங்களாவே பாத்துக்கறீங்கன்னு சொல்றீங்க.”

  “எப்பா சும்மா குதர்க்காம பேசிட்டு
இருக்காதே, இது நம்ம நாச்சியம்மனோட கட்டளை, இதை கண்டிப்பா  நிறைவேத்தனும். வேடந்தூர் சார்பா நாங்கள் இதுக்கு ஒத்துக்கறோம்.

  மத்த ஊர்க்காரங்க எல்லாரும் இது வேணாம்னு ஒதுங்கிக்கிட்டாலும் சரி, இல்ல பக்கபலமா எங்களோட நின்னாலும் சரி .
  
     இது அந்த ஆத்தா உத்தரவுப்படி கண்டிப்பா நடக்கும், நடத்திக் காட்டுவோம். ஆத்தா சொல்ல மீறி இந்த ஊர்ல எதுவும் நடக்காது.”

     அந்த நேரத்தில் கோயிலின் முன்பு கிரீச்சிட்ட சத்தத்துடன் வந்து நின்ற கருப்பு டாடா சுமோவின் மேல், அனைவரது கவனமும் செல்கின்றது.

   மாறன் சில கரைவேட்டிக்காரர்களுடன் பக்கா அரசியல்வாதியாக, அதிலிருந்து இறங்கி வருகிறான்.

    வேலப்பன் ஐயா சற்று குழப்பத்துடன் தான் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

    கோவில் பக்கமே தலை வைத்து படுக்காதவன், இப்படி தன் புடை சூழ கோவிலை நாடி வந்திருப்பது, அவர் மனதிற்கு ஏனோ நெருடலாக இருந்தது. 

   அவர் அறிய மாட்டாரா தனது பேரனை பற்றி, நெற்றியில் புருவ முடிச்சுக்கள் விழ அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. அந்த காட்டுக்குள்ள ஏதோ மர்மம் இருக்கு … அது வெளில வரணும்… ஏதோ பெரிய பொக்கிஷம் இருக்கு …

    1. Author

      பொக்கிஷம் மட்டும் இல்ல பேயும் துணைக்கு இருக்கே சிஸ்

  2. Story supera pokuthu sis.. எப்படி தடைகளை மீறி திருவிழா நடக்க போகிறது என்பதை பார்க்க waiting sis…