
மதுரா தன் முகத்தில் அவனின் மீது தான் கொண்டிருந்த அளவு கடந்த காதல், வெளிப்பட்டு விடக்கூடாது என்று மனதை கட்டுப்படுத்திக் கொண்டு, கவனமாக இருந்தாள்.
என்னதான் மகாராணியும் அரசரும் இவளை ஏற்றுக் கொண்டு விட்டதாக கூறினாலும், இந்த வாழ்க்கை மெய்யாகி விடுமா என்பது கேள்விக்குறி தான். அதே அச்சம் ஏந்திழை அம்மையாரை போல் இவளுக்கும் மனதில் தோன்றி கொண்டு தான் இருக்கின்றது.
அதனாலேயே மித்ரனிடம் இருந்து சற்று தள்ளி இருக்கவே அவள் முடிவு செய்தாள்.
அதற்காகவே, அவள் தனது மனதை மறைத்து கொண்டு, மித்ரனை நோக்கி அப்படியொரு கேள்வியை எழுப்பினாள்.
“நீங்கள் என்பது சரிதான், ஆனால் எதற்காக வந்தீர்கள் என்று கேட்பதுதான் மரியாதையாக இல்லையே?”
“இந்த மரியாதை கூட எனது தாயார் கூறிய காரணத்தினால் தான், தங்களுக்கு வழங்கப்படுகின்றது இளவரசே…”
தன்னவளின் விழி பாஷையையே புரிந்து கொள்பவன், அவளது முகமாற்றத்தையும் மனமாற்றத்தையும் புரிந்து கொள்ள மாட்டானா என்ன…?
அவள் மனதை வெளிப்படுத்துவதற்காகவே, அவன் ஒரு மார்க்கமாக தலையை சாய்த்துக் கொண்டு, அப்படியா என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கண்களாலே வினவ, மதுரா முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“தாங்கள் வந்த விஷயத்தை கூறிவிட்டு சீக்கிரம் இங்கிருந்து செல்கிறீர்களா? என் அறியாத வயதில் நான் செய்த சிறு காரியத்தால், இவ்வளவு வருடமாக என்னையே உயிராக நினைத்து வளர்த்த எனது அன்னையார் அவர்கள், என் மீது வைத்திருந்த நம்பிக்கையையே குலைத்து விட்டது.
ஏற்கனவே அதை எவ்வாறு மீட்டெடுக்க போகிறேன் என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றேன். இப்போது தாங்கள் வந்த விஷயம் தெரிந்தால் வேறு வினையே தேவையில்லை. தயை கூர்ந்து இங்கிருந்து சென்று விடுங்கள் இளவரசே…”
மித்ரன் தனது கால்களின் கீழே தண்ணீரை அலசி எதையோ தேடி கொண்டே இருந்தான். பொறுமை இழந்த மதுரா,
“என்ன தேடுகிறீர்கள்?”
“இல்லை,… சற்று நேரத்திற்கு முன்பு, இங்கு ஒருத்தி தீரா தீரா என்று உருகிக் கொண்டிருந்தாளே…. அவளைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை உருகி உருகி அப்படியே தண்ணீரில் கலந்து விட்டாளோ…?ஹிம்ம்ம் இந்த நீல விழியில் தோன்றும் கோபம் கூட அழகுதான்! அதனால்தான் இப்படி மாட்டிக் கொண்டு தவிக்கின்றேன், அதுமட்டுமா இந்த ஜென்மம் போதாது என்று, அடுத்த ஜென்மத்துக்கும் சேர்த்தல்லவா வாக்குறுதி அளித்து விட்டேன்.”
“ஆஹா அப்படி ஒன்றும் தாங்கள் மனதை இப்படி வருத்திக்கொண்டு, அந்த வாக்குறுதியை காப்பாற்ற தேவையேயில்லை. தாங்கள் இந்த ஜென்மத்தில் நடத்திய புதுமையான திருமணத்தை அடுத்த ஜென்மத்திலும் தொடர வேண்டுமா என்ன…? என்ன முழிக்கிறீர்கள்? மணப்பெண்ணுக்கே தெரியாமல் நடந்த திருமணம், உலகத்திலேயே இது ஒன்றாக மட்டும் தான் இருக்கும். இதை அடுத்த ஜென்மத்திலும் நிறைவேற்ற காத்திருக்கிறீர்களா?”
“மதுரா…, நீ அதை விடவே மாட்டாயா…? இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அதையே பிடித்துக் கொண்டே தொங்கப் போகின்றாய். என் அத்தை மகள் என்னை சுற்றி சுற்றி வந்தாள், அவளை எல்லாம் விட்டுவிட்டு நீதான் வேண்டும் என்று உன் பின்னே வந்தேனே…?நீ இப்படியே பேசிக் கொண்டிருந்தாள் நான் என் அத்தை மகளை பார்க்க சென்று விடுவேன்…”
“என்ன கூறினீர்கள்?”
“ஆமாம் பின்பு என்ன செய்ய?.., இந்த கடும் குளிரையும் பொருட்படுத்தாது உன்னை காண ஆசையாக ஓடி வந்தால், நிற்க வைத்து இப்படி கேள்வியாய் கேட்டுக் கொண்டிருக்கிறாய், அதுமட்டுமா நடந்து முடிந்த கதையை திரும்பத் திரும்ப கூறி என் மனதை புண்படுத்துகிறாய்… எவ்வளவு வலிக்கின்றது தெரியுமா?”
என்ன இவ்வளவு கூறுகின்றேன் ஒரு வார்த்தை கூட எதுவும் பேசாமல் அப்படியே நிற்கின்றாள். மித்ரன் நிமிர்ந்து அவளை பார்த்த போது, அவள் காளி தேவியின் மறு அவதாரமாக தான் அவன் முன்பு நின்று கொண்டிருந்தாள்.
“ஆமாம் ஆமாம் அதுதான் நன்றாகவே தெரிகின்றதே…,தங்களின் வருத்தம் எத்தகையது என்று…,உங்களுக்கும் உங்களது அத்தை மகளுக்கும் இடையே பிரச்சனையாக நான் எக்காலத்திலும் வரமாட்டேன் இளவரசே…,இங்குள்ள பிரச்சனைகள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்த பிறகு, நானே ஊரறிய இந்த உறவுக்கு ஒரு முடிவு கட்டி விடுகிறேன்.”
அதற்கு மேல் மதுரா அங்கு நில்லாது குகையின் வாசலை நோக்கி செல்ல தொடங்கினாள்.
தேவையில்லாமல் வாயைக் கொடுத்து நானே அவளை மேலும் கோபப்படுத்தி விட்டேனோ! என்று நினைத்த மித்ரன், அவளை சமாதானப்படுத்த அவளின் பின்னே செல்ல முயற்சிக்கையில், குகைக்கு வெளியே ஏந்திழை அம்மையாரின் குரல் கேட்க, அவளை பின் தொடர்வதை நிறுத்திவிட்டு, மனமே இல்லாது அங்கிருந்த குளத்தின் வழியே வெளியேறி விட்டான்.
மகிழபுரி அரண்மனைக்கு தனது தாயாரை காண வந்திருந்த பிரதீபனுக்கு, மேனகா தேவியின் தற்போதைய உடல்நிலை பார்த்து அதிர்ச்சியாக தான் இருந்தது. மற்றவர்களின் முன்பு திடமாக இருப்பதாக காட்டிக் கொண்டாலும், மனதால் நொறுங்கிப் போயிருந்தான். தனக்கென்று இவ்வுலகில் இருக்கும் ஒரே ஒரு உயிரும் இப்போது ஊசலாடி கொண்டிருப்பது, அவனுக்கு புரியத்தான் செய்தது, இருந்தும் மனம் வலித்தது. மேல் முற்றத்தினில் நின்று அவன் அமைதியாக அந்தப் பௌர்ணமி நிலாவை வெறித்து கொண்டிருந்தான்.
மித்ரன் காலையிலிருந்து அவனுடன் இருந்துவிட்டு, தற்போது தான் ஏதோ அவசர வேலை இருப்பதாக கூறி அரண்மனையில் இருந்து வெளியே சென்றிருந்தான்.
பிரதீபன் சரியாக உணவு உட்கொள்ளாத காரணத்தால், கவிதாயினி அவன் அருந்துவதற்காக பால் எடுத்து வந்திருந்தாள்.
அவள் வந்து வெகு நேரமாகியும் அதைக் கூட உணராது, நிலாவையே வெறித்துக் கொண்டிருந்த பிரதீபனை பார்த்து பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு விட்டு, கவிதாயினி தானாகவே அவனை அத்தான் என்று கூறி அழைத்தாள்.
அவளது அழைப்பில் சுய நினைவுக்கு வந்தவன், இந்த நேரத்தில் அவள் இங்கு இருப்பதை கண்டு கேள்வியாக புருவம் உயர்த்தினான்.
“அத்தான் தங்கள் சரியாக உணவு உட்கொண்டது போலவே தெரியவில்லை, அதனால் தான் தாங்கள் அருந்துவதற்காக பால் எடுத்து வந்தேன்.”
“அதற்காக இந்த நேரத்தில் நீ இவ்வளவு சிரமப்பட்டு வர வேண்டுமா கவி? இதை சேவகர்களிடம் கொடுத்து அனுப்பி இருக்கலாமே?”
“அவர்கள் கொண்டு வந்தால், எப்படியும் தாங்கள் அதை குடிக்க மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். அதனால் தான் நானே எடுத்து வந்தேன், இதை அருந்துங்கள் எனக்காக…”
மறுத்து பேச வந்தவன் அவளது கெஞ்சல் விழிமொழியில், தானாக அந்த பாலை எடுத்து குடித்து முடித்து அவளுக்கு நன்றி உரைத்து விட்டு, மீண்டும் நிலாவினை வெறிக்க தொடங்கினான்.
“அத்தையை நினைத்து கவலை கொள்ள வேண்டாம் அத்தான்…, அவர் சரியாகிவிடுவார். அவரை நினைத்து மனம் வருந்தி, தங்கள் உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.”
“எப்படி கவலை கொள்ளாமல் இருக்க முடியும் கவி? எனக்கென்று இந்த உலகில் இருக்கும் ஒரே உயிர், அவரையும் இழந்து விடுவேனோ என்று அச்சமாக இருக்கின்றது…”
“ஏன் அத்தான் இவ்வாறு கூறுகிறீர்கள்? என்னை பார்த்தால் தங்களுக்காக துடிக்கும் உயிர் போல் தெரியவில்லையா?இதற்குமேல் நான் என்னதான் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? தங்கள் வாயிலிருந்து உதிர்த்த இந்த வார்த்தையை கேட்ட பிறகும், இன்னும் இந்த உயிரை வைத்துக் கொண்டிருக்கின்றேனே நான்?”
கண்களில் நிறைந்த நீரோடு துடிக்கும் இதழ்களை பற்களால் கடித்துக்கொண்டே கவிதாயினி பிரதிபனை நோக்கி கேட்க, அவ்வளவு நேரம் நிலாவை வெறித்துக் கொண்டிருந்தவன், அப்போதுதான் திரும்பி அவளது முகவதனத்தை கண்டான்.
கவிதாயினிக்கு தன் மீது உள்ள ஈர்ப்பை பற்றி பிரதீபனுக்கும் தெரியும், ஆனால் அது இவ்வளவு தூரம் இருக்கும் என்று அவன் நினைக்கவே இல்லை, ஏற்கனவே தன் தங்கையால் இந்த குடும்பத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை பத்தாதா? இதில் தன்னால் வேறு, இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட வேண்டுமா? என்று நினைத்தவன்,
“கவி என்ன கூறுகிறாய் நீ? அவ்வளவு பெரிய மனுஷியாகி விட்டாயா? உனக்கு நல்லது எது, என்று எடுத்து கூறுவதற்கு உனது தாய் தந்தையர் இருக்கிறார்கள். அவர்கள் கூறுவதை தான் நீ கேட்க வேண்டும். இது அலை பாயம் வயது, அதற்காக அது செல்லும் திசையெல்லாம் அதை அப்படியே விட்டு விடக்கூடாது. உன் அண்ணன் தான், தாய் தந்தையரின் அனுமதி இன்றி அவனாகவே தன் துணையை தேடிக் கொண்டான், இப்போது நீயும் அதையே செய்து உன்னை பெற்றவர்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தப் போகின்றாயா?
இது ஒரு வித ஈர்ப்பு மட்டுமே, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதே… இனிமேல் இதுபோன்று எதுவும் பேசாதே… புரிந்ததா? முதலில் நீ இங்கிருந்து செல்…”
“செல்கிறேன் எனது மனதில் உள்ளதை, முழுவதுமாக தங்களுக்கு எடுத்து கூறிவிட்டு, பிறகு செல்கிறேன்… சிறிய பெண்ணாக இருந்தால் என்ன? எனக்கென்று மனது இருக்க கூடாதா? அதில் தங்களின் மேல் ஆசை தான் இருக்கக் கூடாதா? இந்த மனதில் உள்ள தங்களின் முகம் என்றுமே என்னை விட்டு நீங்காது. என் உயிர் பிரிந்தால் மட்டும்தான் என்னை விட்டு நீங்கும்.
என்னை விரும்புவதும் விரும்பாததும் உங்களது இஷ்டம், அதேபோலத்தான் நான் யாரை விரும்ப வேண்டும் என்பதும் என் இஷ்டம். என் தாய் தந்தையரை பற்றி எனக்கு தெரியும், ஒரு நாளும் எனது மனதை உங்களைப் போல் பேசி, இவ்வாறு உடைக்க மாட்டார்கள், பெரியவராம் பெரியவர், வளர்ந்தால் மட்டும் பத்தாது ஒரு சிறு பெண்ணின் மனதை காயப்படுத்தாமல் பேசவும் தெரிய வேண்டும்.இதில் பெரிய வீரரென்று பீத்திக் கொள்வது.”
அவள் பேசிய மறுமொழிகளை கேட்டு அதிர்ந்து நின்றவன், கடைசியாக அவள் கூறி சென்றதைக் கேட்டு இதழ்களில் புன்னகையை படரவிட்டான்.
அவனிடமிருந்து நேராக மேனகா தேவியின் அறைக்கு சென்றவள், அவரிடம் அங்கு நடந்ததை பற்றி கூறி புலம்ப ஆரம்பித்து விட்டாள்.
பிரதீபனுடன் அரண்மனைக்கு வந்திருந்த ரஞ்சனியின் ஆன்மா, அரண்மனை முழுவதும் மோகனாவை தேடி அலைந்துவிட்டு கடைசியாக மேனகா தேவி இருந்த அறைக்கு வந்தது.
மேனகா தேவியாரின் கைகளில் தற்போதும் அந்த தாயத்து இருந்த காரணத்தால், ரஞ்சனியின் ஆன்மா அவரின் கண்களுக்கு தெரிந்தது.
பேச்சு வராத காரணத்தால் தனது கை கால்களை ஆட்டி, அவர் ஒருவித ஒலியை எழுப்பிட, மீண்டும் அவரது உடல்நிலை மோசமாகி விட்டதாக எண்ணிய கவிதாயினி சேவகர்கள் மூலம், அரசருக்கும் மற்றவர்களுக்கும் அவரின் உடல் நிலையை பற்றி தகவல் அனுப்பினாள்.
அரச வைத்தியர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் மேனகா தேவி ரஞ்சினியை மட்டுமே பார்த்து, ஏதோ குளறலாக பேச, சிறிது நேரம் கழித்துதான் ரஞ்சனிக்கு புரிந்தது, அவருக்கு தன் உருவம் தெரிகின்றது என்று, உடனே அவரின் அருகில் சென்றவள் தனக்கு ஏற்பட்ட அத்தனை பாதிப்பையும், ரகுநந்தன் அங்கு லந்தங்காட்டில் மாட்டிக் கொண்டிருப்பதை பற்றியும் அவரிடம் விரிவாக கூறினாள்.
தங்களைக் எப்படியாவது அந்த தீயவர்களிடமிருந்து காப்பாற்றுமாறு அவரிடம் கூறி, கதறி அழுதால் ரஞ்சனி. அனைத்தையும் கேட்ட மேனகா தேவிக்கு இதை எவ்வாறு மற்றவர்களிடம் கூறுவது என்றே புரியவில்லை.
அங்கிருந்து அரச வைத்தியர்களுக்கு மேனகா தேவி எதற்காக தனது கை கால்களை ஆட்டிக்கொண்டு, குளற தொடங்கினார் என்றும் தெரியவில்லை இப்போது எதற்காக ஒரே திசையை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கிறார் என்றும் புரியவில்லை.
ஏந்திழை அம்மையார் மதுரவாணியை குகைக்கோயிலில் இருந்து அழைத்து வருவதற்காக கிளம்பிக் கொண்டிருந்தார். திடீரென்று கொற்றவை தேவி கோயிலில் இருந்து ஏதோ சத்தம் வர அங்கு சென்று பார்த்த போது, எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும் தூங்கா விளக்கு அணைந்து போயிருந்தது.
ஏற்கனவே வாணி அதிகாலையில் கூறிய அந்த கனவினை பற்றி நினைத்துக் சங்கடத்தில் ஆழ்ந்திருந்தவர், இப்படி திடீரென்று கொற்றவை அன்னையின் ஜோதி அணைந்து இருப்பதைக் கண்டு பதறிப் போனார்.
ஏதோ ஆபத்து ஏற்பட போவதாக மனம் உணர்த்திக் கொண்டே இருந்தது, அது எந்த ரூபத்தில் யாரை சூழ போகிறது என்று தெரியவில்லை? ஒருவேளை வாணி கூறியதை போல் இளவரசருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படப் போகின்றதோ என்று பயந்தவர், யாரும் பார்க்கும் முன்பு அன்னையின் தீபத்தை ஏற்றியவர், அவசரமாக குகைக்கோயிலை நோக்கி செல்லத் தொடங்கினார்.
அவர் குகைக்கோயிலினுள் நுழையும் முன்பே மதுரவாணி குகையில் இருந்து கோபமாக வெளியேறிக் கொண்டிருந்தாள். அப்போதுதான் அவர் ஒன்றை கவனித்தார், மதுரவாணியின் கழுத்தில் மகிழபுரியின் அரச முத்திரை பதித்த சங்கிலி ஊசலாடிக் கொண்டிருந்தது.
சிந்தனை முடிச்சோடு வாணியை அவர் பார்க்க, அப்போதுதான் அவளும் தன் கழுத்தில் இருந்த பதக்கத்தை கவனித்தால், மாட்டிக் கொண்ட சிறுபிள்ளை போல முழித்தவள், அன்னையிடம் இளவரசர் வந்ததையும் இனிமேல் இவ்வாறு வர வேண்டாம் என்று தான் கூறியதாகவும், அவள் அன்னையிடம் எடுத்துக் கூறினாள்.
அவள் கூறியவற்றை பொறுமையாக கேட்டவர், மதுராவை தாண்டி குகையினுள் நுழைந்தார். அந்த அன்னையை கைகூப்பி மனதார வணங்கிவிட்டு, மதுராவை அழைத்துக் கொண்டு எதுவும் பேசாமல், குடிலை நோக்கி செம்பா பின் தொடர நடக்கத் தொடங்கினார்.
மகிழபுரி அரண்மனையில் இருந்த பிரதீபனுக்கு, ரத்னபுரியில் இருந்து அவசர செய்தி ஒன்று வந்திருந்தது. மகிழபுரியைச் சேர்ந்த வீரர்கள் பலர் லந்தங்காட்டிற்கு வெளியே மயங்கி கிடப்பதாகவும், அந்த காட்டினுள் ரத்தினபுரியின் முன்னாள் அரசர் ரங்கராஜ பூபதி, தற்போது அங்கு பதுங்கி இருப்பதாகவும் ஒற்றர்ப்படை தலைவனிடம் இருந்து செய்தி வந்திருந்தது.
இந்த செய்தியை கேள்விப்பட்டதுமே ரஞ்சனி, ஒருவேளை காட்டிற்கு வெளியே உள்ள வீரர்களில் தன் அத்தானும் இருப்பாரோ என்று எண்ணியவள், உடனே லந்தங்காட்டை நோக்கி பறந்து சென்றாள்.
பிரதீபன், ரங்கராஜ பூபதி என்னும் விஷப்பாம்பை விட்டு வைப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று உணர்ந்து, தனது தாயின் உடல் நிலையை எண்ணி வருந்தாமல், அரசரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு உடனடியாக ரத்னபுரியை நோக்கி செல்ல ஆயுத்தமானான்.
மகிழபுரியிலிருந்து கிளம்புவதற்கு முன்பு, தனது தாயரை சந்தித்து ஆசி பெற வந்திருந்தான். மேனகா தேவி ஏதோ குளறல் மொழிகளாக பேச, அவர் பேசுவது புரியாது விழித்து நின்றான். அருகில் நின்றிருந்த கவிதாயினிக்கும் தனது அத்தையின் சைகைக்கான அர்த்தம் விளங்கவில்லை. இருந்தும் அவர் ஏதோ முக்கியமான தகவலை பிரதீபனிடம் பகிர்ந்து கொள்ள துடிக்கிறார் என்பது மட்டும் புரிந்தது.
அதற்கு மேலும் தாமதிக்காமல் தன் தாயின் கால்களை தொட்டு வணங்கி விட்டு, பிரதீபன் அங்கிருந்து சென்று விட்டான். மேனகா தேவி கடைசி முயற்சியாக தனது கையில் இருந்த தாயத்தை கண்களால் குறிப்பு காட்டி, கவிதாயினிக்கு விளக்க முயற்சித்தார்.
அந்த தாயத்தை கண்ட பிறகு தான் கவிதாயினிக்கு ஞாபகம் வந்தது, அது பிரதீபனின் உடைமையிலிருந்து கிடைத்தது என்று, தனது அத்தை அதை அவனிடம் சேர்ப்பிக்கவே முயற்சிக்கிறார் என்பதை ஒருவாறு புரிந்து கொண்ட கவிதாயினி, மேனகா தேவியிடம் இருந்து தாயத்தைப் பெற்றுக் கொண்டு, அரசரிடம் விடை பெற்றுக் கொண்டிருக்கும் பிரதீபனை நோக்கி சென்று, அவனது அன்னை கொடுத்து அனுப்பியதாக கூறி அவனது கைகளில் அந்த தாயத்தை கட்டி விட்டாள்.
அதை பார்த்த உடனேயே பிரதீபனுக்கு ஞாபகம் வந்துவிட்டது, இது தனக்கு குருந்தங்காட்டில் கிடைத்த தாயத்து என்று, அதை கைகளில் கட்டிய உடனேயே உடலில் ஒரு புதுவித மாற்றத்தையும் அவன் உணர்ந்தான். மித்ரன் அப்போது அங்கே இல்லாத காரணத்தால், அவனைத் தவிர மற்ற அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு ரத்னபுரியை நோக்கி தனது பயணத்தை தொடங்கினான்.
லந்தங்காட்டில் உள்ள குகையில் கை கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, கண்கள் சொருக மயக்கத்தில் நின்றிருந்தான் ரகுநந்தன். அவனுக்கு சற்று தள்ளி கை கால்களில் ஏற்பட்ட ரத்த சிராய்ப்புகளுடன் இருந்த ரத்னபுரியின் முன்னாள் அரசரான ரங்கராஜ பூபதிக்கு, வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தார் ராஜகுரு. அவன் சற்று நேரத்திற்கு முன்புதான் மோகனாவின் கோபத்திற்கு ஆளாகி தூக்கி வீசப்பட்டிருந்தான்.
ரங்கராஜ பூபதி போரில் தோல்வியை தழுவிய பிறகு, ரத்னபுரியை விட்டு தப்பித்து சென்று, அருகில் உள்ள அண்டை நாட்டு மன்னர்களிடம் தமக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டான். மகிழபுரியை சுற்றியுள்ள சிறு சிறு அரசர்களையும், மூளை சலவை செய்து தனது படை பலத்தோடு சேர்த்துக் கொண்டிருக்கின்றான். தற்போது பௌர்ணமி பூஜையை ஒட்டி லந்தங்காட்டிற்கு வருகை புரிந்திருக்கிறான்.
மோகனா ரஞ்சனியின் உடலில் இருந்து கொண்டு, காலகோடனின் சிலைக்கு முன்பு அமர்ந்து பௌர்ணமி பூஜையை செய்து கொண்டிருந்தாள்.
அவளோடு வந்த வீரர்களை மயக்க நிலைக்கு ஆட்படுத்தி, லந்தங்காட்டுக்கு வெளியே விட்டு வந்திருந்தாள்.
குகைக்கு பூஜைக்காக வந்திருந்த ரங்கராஜ பூபதி, வந்த வேலையை மட்டும் பார்த்து கொண்டு சென்றிருக்கலாம். அதை விட்டுவிட்டு தனது ராஜ்ஜியத்தை கைப்பற்றி, தன்னை இப்படி ஒளிந்து கொள்ள வைத்த மகிழபுரியின் பரம்பரையையே கருவருப்பேன், அந்நாட்டின் இளவரசனை காலகோடருக்கு முதல் பலியாக கொடுப்பேன் என்று முழங்க, மோகனா பார்த்த கோப பார்வையில் தூக்கி வீசப்பட்டான்.
ரகுநந்தன் சிறிது சிறிதாக தன் கண்களை திறந்து பார்த்தபோது, உடம்பு முழுவதும் ரத்தத்தை பூசிக்கொண்டு தலைவிரிக் கோலமாக காலக்கோடனின் சிலையின் முன்பு அமர்ந்திருந்த, ரஞ்சனியின் உருவத்தை கண்டான்.
பூந்தளிர் மேனியவளின் அங்கம் எங்கும் ரத்தம் சொட்ட, ராட்சச தோற்றத்தோடு காட்சி அளிக்கும் அவளை காண்கையில் மனம் நொந்து போனான்.
தன்னவளை இனி எங்கு எப்படி காண்பேனோ என்று எண்ணுகையில் மனம் வலித்தது. தனக்கு அருகில் ஏதோ சத்தம் கேட்க அப்போதுதான் தலையை திருப்பி அங்கு இருப்பவர்களை பார்க்க தொடங்கினான். ராஜகுருவும் விஜயேந்திர பூபதியும், ரங்கராஜ பூபதியிடம் அமைதியாக வாதிட்டு கொண்டிருந்தார்.
“என்ன ரங்கா இது? நான் தான் பொறுமையாக இரு என்று கூறினேனே எதற்காக மோகனாவிடம் வார்த்தையை விட்டாய்? அதற்கான விளைவைத்தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறாய்…”
“என்ன ராஜகுரு நீங்களும் புரியாமல் பேசுகின்றீர்கள்? நான் கூறியதில் என்ன தவறு இருக்கின்றது? நமக்கு உரிமையான ரத்தினபுரி தேசம், தற்போது மகிழபுரி அரசுக்கு உட்பட்ட அடிமை நாடாகி விட்டது. இதற்கு முக்கிய காரணமான அந்த மித்ரனை கொல்ல எண்ணினேன். அது தவறா?”
“ரங்கா மோகனா தான் தெளிவாக கூறி விட்டாலே, அமாவாசை முடியும் வரை பொறுத்திருக்க சொல்லி? நீயும் எதற்காக இப்படி அவசரப்பட்டு கொண்டிருக்கின்றாய்?”
கேட்டுக் கொண்டிருந்த ரகுநந்தனுக்கு அதிர்ச்சியாக இருந்தது இன்னும் என்னென்ன சதி வேலையில் இவர்கள் ஈடுபட போகின்றார்களோ? இதனால் ஏற்படகூடிய விளைவுகளை எப்படி சமாளிப்பது? முதலில் இங்கிருந்து எப்படியாவது தப்பித்து சென்று, இவர்களின் சூழ்ச்சியை அம்பலப்படுத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

