
ரஞ்சனியின் உடலில் இருந்த மோகனா, மகிழபுரியை சேர்ந்த படைகளும் மித்ரனும் தங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதை உணர்ந்தாள்.
ரஞ்சனி முதலில் கட்டியிருந்தது போலவே, ஒரு மாய தாயத்தை தனது மந்திர சக்தியின் மூலம் உருவாக்கி, கைகளில் கட்டிக் கொண்டாள். பிறகு அடுத்தடுத்து தமது ரத்தினபுரியைச் சேர்ந்த வீரர்களுக்கு கட்டளையிட, ஒரு பகுதியினர் அவளது தந்தையோடு ரகுநந்தனையும் அழைத்துக் கொண்டு நாடு திரும்பினர்.
இன்னொரு பகுதியினரோ அவளின் கை கால்களை கட்டி, ஒரு பல்லக்கில் ஏற்றி தூக்கி கொண்டனர். சரியாக மகிழபுரியை சேர்ந்த படைகள் அவர்களை நெருங்கும் போது அங்கிருந்து செல்வது போல நடித்தனர்.
முதலில் அவர்களை நெருங்கிய மித்ரனைக் கண்டு ரத்தினபுரியைச் சேர்ந்த படைகள் பல்லக்கை கீழே வைத்து விட்டு நாலா புறமும் சிதறி ஓட, மித்ரனுக்கு பின்னால் வந்த படைகள் அவர்களை துரத்திக் கொண்டு ஓடினர்.
மித்ரன் பல்லக்கினுள் மயங்கி கிடக்கும் ரஞ்சனியை கண்டு விட்டு, சத்தமாக ரகுநந்தனை அழைத்தான். ஆனால் அவனை எங்கும் காணாததால் ஒரு படை வீரனை ரஞ்சனிக்கு காவலாக வைத்து விட்டு அவனை தேடி ஓடினான்.
பிரதீபன் விஷயம் அறிந்ததும், மயக்கத்தில் இருந்த தனது அன்னையை பல்லக்கில் ஏற்றி, அரசர் மற்றும் மகாராணியாருடன் பாதுகாப்பாக அரண்மனைக்கு வந்து சேருமாறு பல்லக்கு தூக்குவோருக்கு கட்டளை இட்டு விட்டு, படைவீரர்களுடன் சென்று கொண்டிருந்தான்.
ரஞ்சனி தூக்கி வீசிய அந்த தாயத்தானது ஒரு மரத்தில் சிக்கி தொங்கிக் கொண்டிருந்தது. சரியாக பிரதீபன் அந்த மரத்தடியினை நெருங்கிய போது, நேராக அது அவன் தலை மேலே வந்து விழுந்தது.
அந்த தாயத்தினை பத்திரப்படுத்திக் கொள்ளுமாறு அவனின் உள் மனம் கூற, உடனே அதை தன் உடமையுடன் சேர்த்து எடுத்து வைத்துக் கொண்டான்.
அவன் வந்து பார்த்தபோது ஒரு படை வீரனின் காவலில் ரஞ்சனி பல்லக்கினுள் மயங்கி கிடந்தாள். ஆனால் அவனிடம் இருந்த தாயத்தின் மகிமையால், அவனுக்கு அங்கு இருப்பது ஏனோ மோகனாவின் உருவமாகத் தான் தெரிந்து. இது தனது மனபிரம்மையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டவன், மித்ரனையும் ரகுநந்தனையும் தேடி ஓடினான்.
மித்ரனும் பிரதீபனும் எவ்வளவு நேரம் தேடியும் அவர்களால் ரகுநந்தனை கண்டுபிடிக்க முடியவில்லை. மகிழபுரி வீரர்கள் துரத்திச் சென்ற ரத்தினபுரியைச் சேர்ந்த படைவீரர்களும் அவர்களுக்கு போக்குகாட்டி விட்டு திடீரென்று மாயமாக மறைந்து விட்டனர்.
வேறு வழி இல்லாமல் சில படைவீரர்களை சுற்றுவட்டாரத்தில், ரகுநந்தனை தேடி பார்க்கும்படி கட்டளையிட்டு விட்டு, அனைவரும் மகிழபுரியில் ஏற்பட்டுள்ள நிலைமையினை சமாளிக்க நாட்டினை நோக்கி விரைந்தனர்.
அமைச்சர் பெருமக்கள் அங்கிருந்த படைவீரர்களைக் கொண்டு ஓரளவுக்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.
மித்ரனும் பிரதீபனும் அங்கங்கு கலவரத்தில் ஈடுபட்ட எதிரிகளைப் பிடித்து பந்தாடிக் கொண்டிருந்தனர். நிலைமையை முழுவதுமாக தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
ரஞ்சனிக்கு மயக்கம் தெளிந்தது, தனது தாய் தந்தையை நினைத்து கதறி அழுவது போல் நடித்து கொண்டிருந்தாள், ரஞ்சனி உருவத்தில் இருந்த மோகனா.
அவளது உறவுகள் யாரும் இல்லாத காரணத்தால், அவளை மகாராணியார் அரண்மனையோடு வைத்துக் கொண்டார். மோகனா ரஞ்சனியின் உருவத்தில் தனது அறையிலேயே தங்கி கொண்டாள்.
பிரதீபன் ரஞ்சனியின் உறவுகளுக்கு மகன் என்ற பொறுப்பில் நின்று இறுதி காரியங்களை முடித்தான். ரகுநந்தனின் தாய் தந்தையருக்கு, அவன் தற்போது இல்லாத காரணத்தால், மித்ரனே மகனாக மாறி, அவர்களின் இறுதிச்சடங்கை நிறைவேற்றினான்.
அரசர் நாடு திரும்பியபோது நாட்டு மக்கள் பல பேர் தனது உடமைகளையும் உறவுகளையும் இழந்து இருந்தனர். அதனைக் கண்டு கடும் கோபம் கொண்டவர், பிரதீபனின் தலைமையின் கீழ் ஒரு பெரும் படையை திரட்டி, ரத்னபுரியை நோக்கி போர் தொடுக்க அனுப்பி வைத்தார்.
மித்ரனும் அவனுக்கு உதவியாக உடன் சென்றான். இந்த சூழ்நிலையை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த ரத்தினபுரி அரசன், ஒரு பெரும் படையுடன் அவர்களை சமாளிக்க காத்திருந்தான், இருந்தும் மகிழபுரியின் படைகளுக்கு முன்பு ரத்தினபுரியின் படைகள் போர்க்களத்தில் சிதறி ஓடின.
ஒரு கட்டத்தில் அவர்களை சமாளிக்க முடியாமல் ரத்தபுரியின் அரசன் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டான். ரத்தினபுரி மகிழபுரி அரசின் ஆட்சியின் கீழ் வந்தது. ரத்தினபுரிக்கு புதிய மன்னனாக பிரதீபன் அறிவிக்கப்பட்டு அவனுக்கு முடி சூட்டப்பட்டது.
மோகனா ரஞ்சனியின் உடலில் இருந்தாலும், அவள் ஒரு ஏவல் ஆன்மாவாக மாறியதால், அவளுக்கு ரத்த தாகம் ஏற்பட்டது. எவ்வளவு முயன்றும் அவளால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.
இரவு நேரங்களில் ரஞ்சனியின் உடலில் இருந்து பிரிந்து, தனது ஆன்மாவோடு இரையை தேடி அலைய தொடங்கினாள்.
நாட்டிலுள்ள கால்நடைகளின் ரத்தத்தை உறிஞ்சி குடித்து, தனது ரத்த தாகத்தை தீர்த்துக் கொண்டாள்.
நாட்டில் அங்கங்கு இரவு நேரங்களில், கால்நடைகள் ரத்தம் உறிஞ்சப்பட்ட நிலையில் இறந்த கிடந்ததை கண்ட பொதுமக்கள் அஞ்சி நடுங்கினர். இது குறித்து அரசரிடம் சென்று முறையிட்டனர்.
கொற்றவை தேவியின் அருட்பார்வை இல்லாத காரணத்தால் தான், தீய சக்திகள் நாட்டின் உள்ளே நடமாடுவதாக உணர்ந்த அரசர், இந்த பிரச்சனையில் இருந்து மக்களை காக்க, பல ஊர்களில் இருந்து புரோகிதர்களையும் வேத வித்தகர்களையும் வரவழைத்து வேள்விகள் நடத்தி, ஊரினுள் கோயில்கள் கட்ட அடிக்கல் நாட்டினார்.
ஆனால் அடுத்த நாளே அந்த அடிக்கல்கள் எல்லாம் தூக்கி வீசப்பட்டு, அதன் அருகே வேள்விகள் புரிந்த புரோகிதர்களும், வேத வித்தகர்களும் ரத்தம் உறிஞ்ச பட்ட நிலையில் சடலங்கலாக இறந்து கிடந்தனர். ஆம் இப்போது மோகனா மனித ரத்தம் குடிக்கும் பிசாசாகவே மாறிவிட்டாள்.
லந்தங்காட்டுக்கு வெளியே ரஞ்சனியின் ஆன்மா, காட்டின் உள்ளே உள்ள குகைக்குச் செல்ல, துடித்து கொண்டிருந்தது.
மயங்கிய நிலையில் இருந்த ரகுநந்தனை, ரத்னபுரி வீரர்கள் தூக்கிக் கொண்டு வந்த போது, ரஞ்சனியின் ஆன்மாவும் அவர்களுடனேயே ரகுநந்தனை பின் தொடர்ந்து வந்தது.
அவர்கள் ரகுநந்தனை லந்தங்காட்டில் உள்ள குகைக்கு அழைத்துச் செல்ல, அவர்களை பின்தொடர்ந்து சென்ற ரஞ்சனியால் அங்குள்ள தீய சக்திகளை மீறி உள்ளே செல்ல முடியவில்லை.
அவள் உள்ளே செல்ல எவ்வளவு போராடியும், அங்குள்ள தீய சக்திகள் அவளின் ஆன்மாவை காட்டிற்கு வெளியே தூக்கி வீசியது.
மதுரா தனக்கு கொடுக்கப்பட்ட கடமையை சரியாக செய்து கொண்டிருந்தாள். அதிகாலையிலேயே நெற்றிவகுட்டில் குங்குமம் இட்டு, கருங்கூந்தலில் மலர் சூடி சுமங்கலி பெண்ணாக மூலவர் சந்நிதியில், குங்கும பூஜையை தினமும் நடத்திக் கொண்டிருந்தாள்.
ஏந்தழை அம்மையார் அவளுக்கு வழிமுறைகளை சொல்லிக் கொடுப்பதோடு சரி, அது தவிர அவளோடு வேறு எதுவும் பேசுவதில்லை. தனது மகளின் திருமணத்தால் அவருக்கு சிறிது வருத்தம் தான், தன்னிடம் சொல்லாமல் இப்படி செய்து விட்டாளே என்று, மதுரா அவரிடம் எவ்வளவோ கெஞ்சி பார்த்து விட்டாள், இருந்தும் அவர் முன்பு போல் அவளிடம் எதுவும் பேசுவதில்லை.
“அம்மா நான் கூறுவதை தயவு செய்து கேளுங்கள், அந்த வயதில் எங்களுக்கு அது திருமணம் என்று கூட தெரியாது? இந்த சம்பவம் எங்களை அறியாமல் நடந்த ஒன்று.”
ஏந்திழை அம்மையாருக்கு மித்ரனுக்கும் மதுராவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே திருமணம் நடந்து விட்டது என்பது தெரியும், ஆனால் எப்படி எங்கு எப்போது நடந்தது என்று தெரியவில்லை. எனவே மதுராவை அவர் குழப்பத்தோடு பார்த்து கொண்டிருந்தார். மதுரா நடந்த விஷியங்கள் அனைத்தையும் அவரிடம் விரிவாக கூறினாள்.
“என்ன உங்கள் திருமணம் தேவியின் முன்பு நடந்ததா? இளவரசருக்கு எப்படி அந்த குகைக்கோயில் பற்றி தெரியும்? அத்தோடு நீ எப்படி இளவரசரை சந்தித்தாய்? அரச குடும்பத்தினர் இங்கு வரும்போதெல்லாம், நான் தான் உன்னை குகை கோயிலுக்கு அழைத்துச் சென்று, அங்கே உன்னை விட்டு விட்டு வந்து விடுவேனே, பிறகு எவ்வாறு எங்கு நீ இளவரசரை சந்தித்தாய்?”
மதுராவுக்கு தான் மாட்டிக் கொண்டோம் என்பது புரிய திரு திருவென்று விழித்துக் கொண்டு, அன்னையின் கண்டன பார்வையை கண்டு தலை குனிந்தபடியே, குகைக்கோயிலில் இருந்து வெளியே வரும் சுரங்க வழியினை பற்றி கூறினாள்.
“வாணி நீ என்ன செய்திருக்கிறாய் என்று உனக்கு தெரிகின்றதா? அங்கு நம் மக்களை கூட அழைத்துச் சென்றதில்லை, ஏன் இங்குள்ள எவருக்குமே மூலவர் சந்நிதி எங்கு உள்ளது என்று தெரியாது, ஆனால் நீ அங்கிருந்து வெளியேறியது மட்டுமல்லாமல், இளவரசரையும் அங்கு கூட்டிச் சென்றுள்ளாய், அதுமட்டுமா இவ்வளவு காலங்கள் எனக்கு தெரியாமல் அரச குடும்பத்தினரோடு உறவாடிக் கொண்டிருக்கின்றாய், உன் விருப்பத்தையே எனது வாழ்க்கையாக நினைத்து, வாழ்ந்து வரும் என்னிடம், ஒரு வார்த்தை கூட கூறவில்லை, நீ அதை விரும்பவும் இல்லை அப்படித்தானே.”
“ஐயோ அம்மா, அப்படி எல்லாம் எதுவும் இல்லை, சத்தியமாக அவர் இளவரசர் என்றோ, அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றோ எனக்கு தெரியவே தெரியாது, அன்று தீர்த்த குளத்தில் மூழ்க இருந்தவரை, அங்கிருந்து குகைக்கு அழைத்து வந்தேன் அவ்வளவுதான். அதன் பிறகு நாங்கள் நண்பர்கள் ஆகி விட்டோம். பிறகு நடந்ததெல்லாம் தான், நான் முன்பே தங்களிடம் கூறி விட்டேனே.”
ஏந்திழை அம்மையாருக்கு மதுராவின் செயல் கோபத்தை வரவழைத்தாலும், தன் மகளின் திருமணம் அந்த அன்னையின் முன்பு நடந்ததை எண்ணி ஒரு விதத்தில் ஆனந்தமே கொண்டார். அத்தோடு அந்த குகை கோயிலுக்கு யாராலும் அவ்வளவு சீக்கிரம் சென்று விட முடியாது. எவ்வளவோ பேர் அதை அறிந்து கொள்ள காட்டினுள் வந்து உரு தெரியாமல் அழிந்து போய் இருக்கின்றனர். அந்த அன்னையின் அருள் இருந்தால் மட்டுமே அங்கு சென்று அந்த அன்னையை தரிசிக்க முடியும். ஆகவே இது விதியின் பிணைப்பு என்று புரிந்து கொண்டவர்,
“வாணி இனி இந்த காட்டில் வாழும் குருந்தங்காட்டு மக்கள் மட்டுமல்ல, மகிழபுரியைச் சேர்ந்த மக்களும் உனது பொறுப்பு தான். அவர்களை எந்த பாதிப்பும் நெருங்காமல் பாதுகாக்க வேண்டியது வருங்கால மகாராணியான உனது கடமை. எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்த பூஜையை நிறுத்தி விடாதே, முறைப்படி இவற்றை நீ செய்து வர வேண்டும் புரிந்ததா?”
“புரிந்தது தாயே, என் விருப்பு வெறுப்புகளை விட மக்களின் நலத்தையே முதன்மையாகக் கொண்டு செயல்படுவேன்.”
அதற்கு மேல் அதைப் பற்றி மதுரவாணியிடம் எதுவும் அவர் பேசிக்கொள்ளவில்லை. பூஜைக்கு நேரமாகிவிட்டது என்று கூறி, அவளை செம்பாவின் பாதுகாப்பில் குகை கோயிலுக்கு அனுப்பி வைத்தார்.
மேனகா தேவிக்கு ஓரளவுக்கு உடல்நிலை தேறியதும், தன்னோடு ரத்னபுரியில் வந்து தங்கிக் கொள்ளுமாறு பிரதீபன் அவரை அழைத்தான், ஆனால் அதை அவர் மறுத்து விட்டார். தமது மகள் இப்படியானதற்கு காரணமே அவளின் கணவர் என்று கேட்டறிந்து கொண்டவர், ரத்னபுரிக்கு செல்வதை அறவே வெறுத்தார்.
அவர் வர மறுத்ததால் பிரதீபன் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது அன்னையே மகிழபுரிக்கு வந்து கண்டு விட்டு செல்வான்.
மேனகாதேவி மோகனாவை நினைத்து மனம் வருந்தும் போதெல்லாம், கவிதாயினி தனது அத்தைக்கு உறுதுணையாக இருந்து, அவரது மனதை திசை திருப்பி, அவரை நன்கு கவனித்துக் கொண்டாள். அதனாலேயே அவர் படிப்படியாக குணமானார்.
அன்று ஏனோ மேனகா தேவிக்கு தனது பிள்ளைகளின் நினைவு அதிகமாக இருந்தது. தனது ஒரு கையில் மோகனா எப்போதும் விரும்பி அணியும் வளையல்களை வைத்துக் கொண்டு, இன்னொரு கையில் பிரதீபனின் ஆடை ஒன்றினை வைத்திருந்தார்.
தனது அத்தையை பார்த்துச் செல்லலாம் என்று கவிதாயினி அப்போதுதான் அவரது அறைக்குள் நுழைந்தாள். அவரின் முகத்தை வைத்தே அவரின் மனவேதனையை புரிந்து கொண்டவள், அவரை தேற்றும் விதமாக பேச ஆரம்பித்தாள்.
“ம்ம்ம்ம், நான் என்னதான் தங்களை தாங்கினாலும், உங்களுக்கு எப்போதாவது வந்து பார்த்துச் செல்லும் உங்கள் பிள்ளை தான் பெரிதாக போய்விட்டார் அப்படித்தானே அத்தை?”
இளநகை ஒன்றை அவளை நோக்கி உதிர்த்தவர்,
“அப்படியெல்லாம் இல்லை கவி, உனக்கு பிறகு தான் அவர்கள், இந்த கருத்தை பிரதீபனும் ஒத்துக் கொள்வான், நான் இன்று இப்படி உயிர்போடு நடமாடுவதற்கு காரணமே நீ தானே. இப்படி என்னை தாங்கும் உனக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேனோ தெரியவில்லை”
“கைமாறு தானே சொல்கிறேன் கேளுங்கள், அடுத்த முறை தங்கள் பிள்ளை உங்களை சந்திக்க வரும்போது என்னையும் கையோடு அவருடன் அழைத்துச் செல்ல சொல்லுங்கள், ஐயோ அத்தை என்னை சந்தேகமாக பார்க்காதீர்கள் அவர் சாப்பிடுகிறாரா இல்லையா? பத்து நாட்களில் பாதியாக இழைத்து விட்டார். நான் உடன் சென்றால் அவருக்கு பிடித்த மாதிரி சமைத்துக் கொடுக்கலாம் இல்லையா, அதனால் தான் கூறினேன். தற்போது அவர் இருக்கும் நிலையினை, பார்க்கவே நெஞ்சு பொறுக்கவில்லை.”
தனது அண்ணன் மகளின் மனதை புரிந்து கொண்டு புன்னகைத்தவர்,
“அதற்காக நீ ஏன் கவி அலைச்சல் படவேண்டும்? அவன் வந்து செல்லும்போது, இரண்டு மூன்று சமையல்காரர்களை அவனுடன் அனுப்பி வைத்தால் போகிறது.”
“அவர்களுக்கு என்ன தெரியும் அத்தை? அவருக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்று, இங்கு நம்மிடமே அதிகம் எதுவும் பேசாதவர், அங்கு அவர்கள் வைக்கும் உணவு பிடிக்காவிட்டால், உணவு உண்ணாமல் எழுந்து செல்ல போகிறார், பிடிக்கவில்லை என்று கூறவா போகிறார்?”
“அடி என் மருமகளே, போகின்ற போக்கை பார்த்தால், பிரதீபன் இங்கு வரும்போது நீயே அவன் கைபிடித்து அங்கு அழைத்துச் சென்று விடுவாய் போல இருக்கின்றதே?”
“எப்போது பார்த்தாலும் தலையை குனிந்து கொண்டே இருந்தால், கைபிடித்துதான் அழைத்துச் செல்ல வேண்டி இருக்கும், வேற என்ன செய்வது? இங்கு வரும்போதெல்லாம் தங்களின் திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருப்பது, அருகில் யார் நிற்கிறார்கள் என்று கூட நிமிர்ந்து பார்ப்பதில்லை, அதையும் மீறி அவர் அருகினில் சென்றால் உடனே தலையை குனிந்து கொள்வது. நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள் இப்படி அவர் குனிந்து கொண்டே இருந்தால் அவர் எனக்கு கட்டுவதற்கு பதில், நான்தான் அவரின் கழுத்தில் தாலி கட்ட போகின்றேன்.”
அவள் கூறியதைக் கேட்டு மேனகா தேவி கலகலவென சிரிக்கத் தொடங்கி விட்டார். அதை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்த கவிதாயினி,
“தாங்கள் இப்படி சிரிக்கும் போது எவ்வளவு நன்றாக இருக்கின்றது, இதை விட்டுவிட்டு எந்நேரம் பார்த்தாலும் முகத்தை தூக்கி வைத்துக் கொள்வது. நீங்கள் என்றும் இப்படியே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அத்தை, அதுதான் எனது விருப்பம்.”
அவரது கையில் இருந்த பிரதிபனின் ஆடையில் இருந்து ஏதோ வெளியே வந்து விழுந்ததை கண்ட கவிதாயினி, அதனை எடுத்துப் பார்த்தாள். அது பிரதீபன் பத்திரப்படுத்தி வைத்திருந்த ரஞ்சனியின் கைகளில் இருந்த தாயத்து.
“அத்தை இது ஏதோ தாயத்து போல தெரிகிறது, தங்கள் பிள்ளை தான் வாங்கி வந்திருப்பார் போல, மறந்து போய் சட்டையிலேயே வைத்து விட்டார். தாங்கள் இந்த தாயத்தை கைக்கு அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள் அப்போதுதான் அவர் இங்கு வரும்போது மறக்காமல் கொடுத்து விட முடியும்.”
சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டு கவிதாயினி அங்கிருந்து சென்று விட்டாள். இரவு நேரத்தில் மேனகா தேவிக்கு விழிப்பு வந்தது, அவர் கட்டிலில் இருந்து எழுந்து நிற்க முயன்ற போது, அவர் கைப்பட்டு தாயத்து கீழே விழுந்தது.
குனிந்து அவர் அதை எடுத்த போது, ஏதோ சத்தம் வெளியிலிருந்து கேட்பது போல் தோன்ற, அந்த தாயத்தை உடன் எடுத்துக் கொண்டே வெளியில் சென்று பார்த்தார். அவரின் அறைக்கு பக்கத்து அறை தான் மோகனாவினுடையது. காற்று அடித்ததால் கதவு திறந்திருக்க, அறையின் உள்ளே இருந்து ஏதோ சத்தம் வர, அங்கே எட்டிப் பார்த்தார். அங்கு கண்ட காட்சியில் அப்படியே உறைந்து போய் நின்று விட்டார் மேனகா. அங்கே மோகனா ரஞ்சனியின் உடலில் இருந்து வெளியேறி, ஆன்மாவாக மாறி ஜன்னலில் வெளியே பறந்து சென்று கொண்டிருந்தாள்.

