
மித்ரன் மதுராவின் கைகளை இறுக்கமாக பிடித்த படியே, அவளின் தலையை தன் மடி மீது வைத்துக் கொண்டு, அவளை எழுப்பியபடியே இருந்தான். அவளிடம் எந்த ஒரு சிறிய அசைவும் இல்லாததால், பயந்து போனவன் கண்ணீர் சிந்த தொடங்கினான்.
அவனது கண்ணீரானது அவள் முகத்தினில் பட்டுத் தெறிக்க, அவளின் கருவிழிகள் இமைகளுக்குள்ளே அலைமோதியது, சிறிது நேரத்தில் கண்களை திறந்தவளுக்கு தனது கண்ணான கணவனின் முக தரிசனம் கிடைத்தது. அவனைக் கண்டு புன்னகை சிந்தியவள், தனது திருவாய் மலர்ந்து,
“தீரா…” என்று கூற
அடுத்த நிமிடமே மூச்சுக்காற்றுக்கு கூட இடம் கொடுக்காமல், அவளை இறுக அணைத்துக் கொண்டு கதறி விட்டான் மித்ரன்.
“மதுரா உனக்கு ஒன்றும் இல்லையே? நலமாக இருக்கிறாயா? நீ என்னை ரொம்பவும் பயமுறுத்தி விட்டாய். இனி ஒரு நொடி கூட என்னால் உன்னை விட்டு பிரிந்து இருக்க முடியாது.”
அவளின் கண்களிலும் நீர் கோர்த்தது, அது கண்கள் என்னும் அணையினை உடைத்து வெளியேற முயற்சிக்கையில் நிதர்சனத்தை உணர்ந்தவள், தன்னுள்ளேயே புதைத்துக் கொண்டாள்
மித்ரனை விட்டு விலகி எழுந்து செம்பாவை நோக்கி நடந்தால் மதுரா, அவளின் கைகளைப் பிடித்து தடுத்து நிறுத்த முயன்ற மித்ரனது கைகளை விலக்கி விட்டு விட்டு, அவள் அன்னையை நோக்கி சென்றால், செம்பா மித்ரனை ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு மதுராவுடன் சேர்ந்து நடக்க தொடங்கியது.
மதுரா அவள் அன்னையினை நெருங்கும் போது தான், சாந்தகுரு அடிகளார் அவளது திருமணத்தை பற்றி அவள் அன்னையிடம் விவரித்துக் கொண்டிருந்தார்.
அவர் கூறியதை கேட்டபடியே வந்ததால், மதுரா பயத்துடன் தனது அன்னையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தால், ஆனால் ஏந்திழை அம்மையார் இவளை ஏறெடுத்து கூட பார்க்கவில்லை. மதுராவின் முகமானது வாடியதைக் கண்ட சிவனடியார் ஏந்திழை அம்மையாரிடம் இதைப் பற்றி சிறிது நேரம் கழித்து பேசுவோம் தேவி, இப்போது முக்கியமாக மோகனாவின் இறுதிச்சடங்குகளை செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்று கூறி பிரதீபனிடம் வந்தார்.
மகிழபுரியை சேர்ந்த படைவீரர்கள் மேகக்காடு வாழும் மனிதர்களை அங்கிருந்து விரட்டி அடித்து விட்டனர். அரசரை சுற்றி பாதுகாப்பு அரணாக சற்று தொலைவில் நின்று கொண்டனர்.
ரகுநந்தன் தற்போது தான் ரஞ்சனியை குடிலில் உள்ள குருந்தங்காடு வாழ் மக்களிடம், அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு ஒப்படைத்துவிட்டு, மனதை அங்கு அவளிடம் விட்டுவிட்டு தனது நண்பனுக்கு துணை நிற்க பிரதீபனை காண இங்கு வந்தான்.
நடந்தவைகளை பார்த்துக் கொண்டிருந்த அரசருக்கு, ஓரளவுக்கு தனது மகனின் மனது புரிந்து விட்டது. இதைபற்றி பிறகு விசாரித்து கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டு, படைவீரர்களின் உதவியோடு மேனகா தேவியை பல்லக்கில் ஏற்றி ஏந்திழை அம்மையாரிடம் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்தவர், பிறகு அவரும் பிரதீபனை நோக்கி சென்றார்.
மதுரா அவள் அன்னையிடம் பேச முயன்ற போது, அவர் அங்கிருந்து குடிலை நோக்கி சென்று விட்டார். மகாராணி தாரகை தேவிக்கு புரிந்து விட்டது, தனது மகனின் மனம் கவர்ந்தவளும், அவனை மணந்து கொண்ட தனது மருமகளும், மதுரவாணி தான் என்று, ஆகவே மதுராவின் கண்ணீரை கண்டு கலங்கி நின்ற மகனுக்கு தான் பார்த்துக் கொள்வதாக அவனிடம் கண்காட்டி விட்டு, மதுராவை அழைத்து கொண்டு குடிலை நோக்கிச் சென்றார். மித்ரனும் ரகு நந்தனுடன் சேர்ந்து பிரதீபனை நோக்கி சென்றான்.
பிரதீபனுக்கு இங்கு நடந்த எதுவுமே அவன் சிந்தனையில் விழவில்லை. அவனது முழு பார்வையும் மோகனாவை நோக்கித்தான் இருந்தது. இரத்த வெள்ளத்தில் கிடந்த, தனது முதல் குழந்தையாக எண்ணி கொண்டிருந்த தனது அன்பு தங்கையை, அள்ளி அணைத்து கதறி அழக் கூட முடியாத சூழ்நிலையில் நிற்கின்றேனே என்று மனம் வெதும்பினான்.
மித்ரனும் ரகுநந்தனும் பிரதீபனை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டனர். தனது நண்பர்களின் முன்பு சேயாகிப்போன பிரதீபன், மனதில் உள்ள கவலைகளை எல்லாம் தன் நண்பர்களிடம் கூறி கதறி அழுதான். நண்பர்கள் இருவரும் ஒரு வழியாக அவனை தேற்றினார்.
சாந்தகுரு அடிகளார் கூறிய முறைப்படி, அவர் சொல்லச் சொல்ல பிரதீபன், தனது தங்கைக்காண இறுதி காரியத்தை செய்து கொண்டிருந்தான்.
மோகனாவை சுற்றி கட்டைகள் அடுக்கப்பட்டன. தூரத்தில் இருந்தே அவளது உடலின் மீது எண்ணெயும் ஊற்றப்பட்டது, பிரதீபன் கதறி அழுதபடியே அவளது உடலுக்கு நெருப்பு வைத்தான்.
இங்கு மோகனாவின் சிதைக்கு எரியூட்டப்பட்ட அதே நேரம், மகிழபுரியே பற்றி எரிந்து கொண்டிருந்தது.
மோகனாவின் திட்டப்படி மகிழபுரியில் அங்கங்கு இருக்கும் ரத்தினபுரியை சேர்ந்த வீரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்
அரசரும் இளவரசரும் முக்கிய அதிகாரிகளான ரகுநந்தனும் பிரதீபனும் கூட இப்போது நாட்டினுள் இல்லாத காரணத்தால், படை வீரர்களும், ஏன் முக்கிய அமைச்சர்களும் கூட கலவரத்தை கட்டுப்படுத்த திணறிப் போயினர்.
மகிழபுரியில் இருந்த அப்பாவி பொதுமக்கள் பலர் இந்த கலவரத்தில் சிக்கி மாண்டு போயினர். இதில் ரகுநந்தனின் குடும்பமும் ரஞ்சனியின் குடும்பமும் கூட அடக்கம். அரண்மனையில் வீரர்கள் சூழ இருந்த காரணத்தால், இளவரசி கவிதாயினி மட்டும் உயிர் பிழைத்தார்.
ஒரு கட்டத்தில் நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த அமைச்சர் பெருமக்கள் நம்பிக்கையான கை தேர்ந்த ஒற்றர்களின் மூலம் அரசருக்கு செய்தி அனுப்பினர்.
மேனகா தேவியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக ஏந்திழை அம்மையாரிடம் இருந்து தகவல் வர, சிவனடியார் அனைவரையும் இங்கே காரியம் முடிந்த காரணத்தால் தீர்த்த குளத்தில் உள்ள நீரினை தலையில் ஊற்றிக் கொண்டு நாம் சென்று பார்க்கலாம் என்று கூறினார்.
அதன்படியே அனைவரும் நீராடி விட்டு ஏந்திழை அம்மையாரின் குடிலை நோக்கிச் சென்றனர். கொஞ்சம் கொஞ்சமாக தன் சுயநினைவை இழந்து கொண்டிருந்த மேனகா தேவி மூச்சு விட சிரமப்பட்டு மூச்சை இழுத்து விட்டுக் கொண்டிருக்க, அவரை நெருங்கிய சிவனடியார் தமது கையில் உள்ள திருநீற்றை மேனகா தேவியின் தலையின் மீது சிவ மந்திரத்தை மனதினில் நினைத்து தூவினார்.
அடுத்து சில நிமிடங்களில் அவரது முச்சு காற்று சீரானது, இருந்தும் அவரது மயக்கம் இன்னும் தெளியவில்லை.
“நாளை அந்தி சாயும் முன் அவருக்கு நினைவு வந்துவிடும் பிரதீபா, பயம் கொள்ளாதே.
அம்மா மதுரவாணி இங்கே வா, உன்னிடம் முக்கியமான பொறுப்பினை கொடுக்கப் போகிறேன். இனி இந்த குருந்தங்காட்டு மக்களின் எதிர்கால வாழ்வு மட்டுமல்ல, மகிழபுரியில் வாழும் மக்களின் எதிர்கால வாழ்வு கூட உன் கையில் தான் உள்ளது.
நாளையிலிருந்து இன்னும் 48 நாட்களுக்கு, நீ தொடர்ந்து மூலவர் சந்நிதியில் சுமங்கலி பூஜையினை செய்ய வேண்டும். காலநேரம் தவறாமல் குங்கும பூஜை செய்து அந்த அன்னையை குளிர்விக்க வேண்டும்.
சரியாக பௌர்ணமி முடிந்து வரும் அமாவாசையோடு இந்த நாற்பத்தி எட்டாவது நாள் பூஜை நிறைவடையும். அன்று நான் இங்கு திரும்பி வருவேன், 48 நாட்களாக நீ செய்து வந்த பூஜையில் கிடைத்த, குங்கும பிரசாதத்தை அன்னையின் உடல் முழுவதும் பூசி ஹோம குண்டம் வளர்த்து அன்னையின் மந்திர கட்டை நீக்கிவிடலாம்.”
“சுவாமி கண்டிப்பாக தாங்கள் இங்கிருந்து சென்றே ஆக வேண்டுமா?”
“ஆம் பார்த்திபா முக்கியமான காரணத்திற்காக நான் இங்கிருந்து செல்லத்தான் வேண்டும். ஆனால் சரியாக அமாவாசை அன்று இங்கு வந்து விடுவேன்.
அம்மா மதுரவாணி எக்காரணம் கொண்டும் இந்த பூஜையில் தடை வந்துவிடக் கூடாது. அது எந்தவிதமான சூழ்நிலையாக இருந்தாலும் சரி.
இளவரசே இங்கு வாருங்கள், தங்களது மனைவிக்கு நெற்றிவகுட்டில் திலகம் இட்டு ஆசீர்வதியுங்கள்.”
மகாராணி குங்குமம் எடுத்துக் கொடுக்க, அரசர் மலர் தூவி அவர்களை ஆசீர்வதிக்க, மித்ரன் மதுராவின் நெற்றிவகுட்டில் குங்குமத்தை இட்டான். பார்த்துக் கொண்டிருந்த ஏந்திழை அம்மையாருக்கு மனம் நெகிழ்ந்து போனது.
மகாராணி தாரகை தேவி தனது உடைமையுடன், பூஜை அறையில் பூஜித்து வந்த நீலநிற கற்கள் பதித்த தங்க வளையல்களையும் எடுத்து வந்திருந்தார். கொற்றவை தேவியின் காலடியில் வைத்து பூஜை செய்து, கொண்டு செல்லலாம் என்று, இப்போது அதனை எடுத்து மதுராவின் கைகளில் அணிவித்தார்.
சிவனடியார் மதுராவிற்கு பூஜை செய்ய வேண்டிய வழிமுறைகளை பற்றி எடுத்துக் கூறி, அவர்களை ஆசீர்வதித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
அதன்பிறகு தான் அரசரை பார்ப்பதற்காக வெகு நேரமாக குடிலுக்கு வெளியே காத்திருந்த ஒற்றர் தலைவன், அரசரை சந்தித்து மகிழபுரியின தற்போதைய நிலைமையினை எடுத்து கூறினான்.
அத்தோடு அரசரை சந்திக்க காத்திருந்த நேரத்தில் பக்கத்துக் குடிலில் இருந்த ரகுநந்தர், இங்குதான் நிற்பதை கண்டு விசாரித்ததால் விசயத்தை கூறியதாகவும், ரகுநந்தனும் அப்போதுதான் மயக்கம் தெளிந்து அமர்ந்திருந்த ரஞ்சனியும், செய்தியை கேள்விப்பட்டவுடன் மகிழபுரியை நோக்கி பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என்பதையும் தெரிவித்தான்.
குருந்தங்காட்டிற்கு வெளியே தனது ஆருயிர் தோழி ரஞ்சனிக்காக மோகனாவும் காத்துக் கொண்டிருந்தாள்.
குடிலுக்கு வெளியே ஒற்றர் தலைவன் அரசரிடம் மகிழபுரியில், தற்போது உள்ள நிலைமையினை பற்றி எடுத்து கூறிக் கொண்டிருக்க, குடிலின் உள்ளே மதுரா மித்ரனை கோபத்தோடு திட்டிக் கொண்டிருந்தாள்.
மித்ரன் அவளிடம் தான் ஒரு போர்வீரரின் மகன் என்று கூறி இருந்தான். அவனின் தாய் தந்தை தற்போது இங்கு இல்லாத காரணத்தால் அரசரும் அரசியாரும் அந்த இடத்தில் இருந்து தங்களின் திருமணத்தை பற்றி பேசிக் கொண்டிப்பதாக நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால், சாந்தகுரு அடிகளார் மித்ரனை இளவரசே என்று அழைத்த போதுதான் அவனின் உண்மையான நிலையினை புரிந்து கொண்டாள்.
சிவனடியார் அங்கிருந்து கிளம்பும்போது வாசல் வரை அனைவரும் சென்று அவரை வழி அனுப்பி வைக்க செல்ல, இதை தனக்கு கிடைத்த வாய்ப்பாக எண்ணி மதுராவிடம் பேசுவதற்காக, குடிலின் உள்ளேயே மித்ரன் நின்று கொண்டான். ஆனால் அனைவரும் வெளியேறிய பிறகு, மதுரா அனல் பறக்க பார்வை ஒன்றை அவனை நோக்கி வீச, அவன் சிந்தனை ரேகையோடு குழப்பமாக அவளை பார்த்து நின்றான்.
அவள் அரசரையும் மகாராணியையும் கண்களால் சுட்டிக்காட்டிய போதுதான் அவனுக்கு நினைவு வந்தது, அவளிடமிருந்து தப்பிக்க எண்ணி, அங்கிருந்து செல்லலாம் என்று அவன் திரும்ப முனைகையில் அவள் ஆரம்பித்து விட்டாள்.
“இளவரசருக்கு என்ன அவ்வளவு அவசரமோ?”
“மதுரா நான் சொல்வதைக் கேள், நான் எதற்காக அப்படி கூறினேன் என்றால்…”
“போதும், இதற்கு மேலும் தங்கள் கூறும் பொய்களை என்னை நம்பச் சொல்கிறீர்களா? இன்னும் எத்தனை பெண்களிடம் என்னிடம் கூறியது போலவே பொய்களை அடுக்கி உள்ளீர்கள்?”
“போதும் மதுரா நிறுத்து, என் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா?”
“இருந்தது, சற்று நேரத்திற்கு முன்பு வரை, ஆனால் எப்போது தாங்கள் இத்தனை வருடங்களாக என்னிடம் உண்மையை மறைத்து, பழகி வந்துள்ளீர்கள் என்று தெரிந்ததோ, அந்த நொடியில், தங்கள் மீது நான் கொண்ட நம்பிக்கை, பொடி பொடியாக போய்விட்டது.”
அதற்குள் குடிலுக்கு வெளியே ஏதோ சலசலப்பு கேட்க, இருவரும் குடிலுக்கு வெளியே வந்தனர். ரஞ்சனியும் ரகுநந்தனும் காட்டை விட்டு வெளியே சென்று இருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன், மித்ரன் வேகமாக அங்கிருந்து கிளம்பினான். ஒருமுறை திரும்பி தனது மனையாளின் நீல நயனங்களை கண்டவன், ஒரு தலையசைப்போடு அவளிடம் விடை பெற்று கொண்டு, குதிரையை தட்டிவிட்டு வேகமெடுத்து விரைவாக செல்ல தொடங்கினான். படைவீரர்கள் மேனகா தேவியை பல்லக்கில் தூக்கிக் கொள்ள அரசரும் மகாராணியும் கூட ஏந்திழை அம்மையாரிடமும் மதுராவிடமும் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.
ரகுநந்தன் ரஞ்சனியுடன் குதிரையில் வேகமாக மகிழபுரியை நோக்கி சென்று கொண்டிருந்தான். தனது குடும்பத்தாரை நினைத்து ரஞ்சனி அழுது கொண்டே இருந்தாள். ரகுநந்தனும் மனதில் உள்ள கவலையை அவளிடம் காட்டாமல், அவளுக்கு ஆறுதல் மொழி கூறியபடியே குதிரையை விரட்டிக் கொண்டிருந்தான்.
அவர்கள் குருந்தங்காட்டை கடந்த சில மணி துளிகளில், குதிரையின் கால் இழுத்து கட்டப்பட்ட கயிறால் தட்டப்பட்டு, குதிரையின் மேலிருந்த இவர்கள் தலைக்குப்புற விழுந்தனர்.
இருபதுக்கும் மேற்பட்ட போர் வீரர்கள் ரகுநந்தனை சூழ்ந்து கொள்ள, ரஞ்சனியை நோக்கி சென்ற மோகனா அவளினுள் நுழைய முயல, ரஞ்சனியின் கைகளில் கட்டி இருந்த தாயத்தின் காரணமாக தூக்கி வீசப்பட்டாள். மோகனா ரஞ்சனியின் உடலினுள் நுழைந்த பிறகு மட்டுமே, அவளது மாந்திரீக சத்திகள் அனைத்தும் அவளை வந்து அடையும். அதுவரை அவள் வெறும் ஏவல் ஆன்மா மட்டுமே, அதனால் எதையாவது செய்து ரஞ்சனியின் உடலினுள் நுழைய நினைத்தாள்.
ரகுநந்தன் அங்கு படை வீரர்களிடம் போராடிக் கொண்டிருக்க, ரஞ்சனி தன்னை நோக்கி வந்த கரும்புகையை கண்டு மிரண்டு போய் கத்த தொடங்கினாள்.
“என் தோழியே என்னைக் கண்டு என்ன பயம் உனக்கு? நான் தான் உன் மோகனா வந்திருக்கிறேன், என் உயிரை அநியாயமாக பறித்து விட்டார்கள். என் சோகத்தை உன்னிடம் கூறி உன்னை கட்டிக்கொண்டு கதறி அழ எண்ணுகிறேன். உன் கையில் உள்ள தாயத்து அதை தடுக்கின்றது, அதை அவிழ்த்து எறிந்து விட்டு உன் தோழியை அரவணைத்து ஆறுதல் கூற மாட்டாயா? அதோ ரகு நந்தனிடம் போரிட்டு கொண்டிருப்பவர்கள் எதிரி நாட்டுப் படைகள். அவனால் சமாளிக்க முடியாமல் திணறுவதை பார், நீ என்னை கட்டிக் கொண்டாள் நான் உன் உடலினுள் புகுந்து, அவர்களை எதிர்த்து ரகுநந்தனை காப்பாற்றுவேன். உடனே அந்த தாயத்தை கழட்டி எறி தோழி.”
அங்கு சண்டையிட்டுக் கொண்டே இங்கு ரஞ்சனியையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருந்த ரகுநந்தன் சத்தமாக கத்தத் தொடங்கினான்.
“ரஞ்சி வேண்டாம், அந்த தாயத்தை கழட்டி விடாதே, அவள் மாயாஜாலக்காரி உன் உடலினுள் புகுந்து கொள்ள தந்திரமாக பேசி, உன்னை மூளைச்சலவை செய்கிறாள். நம்பாதே அவளை, இவர்கள் எல்லாம் அவளின் ரத்னபுரியைச் சேர்ந்த படைகள் தான்.”
“ரஞ்சனி நான் அப்படியெல்லாம் செய்வேனா? என்னை பற்றி உனக்குத் தெரியாதா? நான் அப்படியெல்லாம் செய்யக் கூடியவளா? உனது தோழியின் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா?”
“மோகனா அவர் சொல்வதும் உண்மைதான். நான்தான் என் காதுகளால் கேட்டேனே, அங்கு அந்த பெண்ணை பலி கொடுக்க, உனது ஆட்களின் மூலம் அவளை தூக்கி சென்றதை தான் நான் பார்த்தேனே, ஏன் மோகனா? ஏன் இவ்வாறு மாறிவிட்டாய்? எதற்காக இதெல்லாம் செய்கிறாய் மோகனா? நீ செய்த தவறை உணர்ந்து, கொற்றவை தேவியின் பாதக் கமலங்களை சரணடைந்து விடு, அந்த அன்னை உன் ஆன்மாவிற்கு அமைதி கொடுப்பார்.”
ரஞ்சனி கூறியதைக் கேட்டு ஒரு கேலியான சிரிப்பை உதிர்த்த மோகனா,
“அந்தக் கொற்றவை என் ஆன்மாவிற்கு அமைதி கொடுக்கப் போகிறாளா? ஹா ஹா ஹா பைத்தியக்காரி, நான் செய்த வேலையால் தான் அந்த கொற்றவை மந்திர கட்டுப்பாட்டில் உள்ளாள் அது தெரியுமா உனக்கு? உன்னிடம் பேசி இனி பயனில்லை, அப்பா ம்ம்ம்.”
மோகனா உத்தரவிட்ட மறு நொடி ரகுநந்தனை தாக்கிக் கொண்டிருந்தவர்கள், அவன் மீது மூர்க்கமாக ஆயுதங்களை உபயோகிக்க தொடங்கினர். அருகில் உள்ள புதரினில் இருந்து வந்த பத்து பேர் கொண்ட குழு, அவனை சுற்றி வளைத்து கை கால்களை பிடித்துக் கொண்டு, அவனை சித்தரவதை செய்ய ஆரம்பித்தது. ரகுநந்தனால் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் போராட முடியவில்லை, அவன் உடலில் உள்ள சக்தி எல்லாம் வடிய தொடங்கியது.
“ரஞ்சனி இப்போது அந்த தாயத்தை கழட்டி எறிகின்றாயா? அல்லது உனது அத்தானின் கைகால்களை பிய்த்து எறியட்டுமா?”
“ரஞ்சி வேண்டாம், எனக்காக அந்த தாயத்தை கழட்டி எறிந்து விடாதே, அவள் மீண்டும் வந்து விட்டால் இந்த நாட்டு மக்களை எல்லாம் அழித்து விடுவாள், என் ஒருவனுக்காக நீ இதை செய்தால் அவர்களின் எதிர்கால வாழ்வே நாசமாகிவிடும்.”
“இல்லை அத்தான், எனக்கு அவர்களை விட நீங்கள் தான் முக்கியம்.”
என்று கூறிக்கொண்டே தன் கையில் உள்ள தாயத்தை கழட்டி எறிந்தால் ரஞ்சனி. அவள் தூக்கி வீசிய அடுத்த நிமிடம், மோகனா அவள் உடலினுள் நுழைந்து கொண்டாள். ரஞ்சனியின் ஆன்மா அவளது உடலை விட்டு வெளியேறி விட்டது. ரஞ்சனியின் கண்கள் திறந்த போது அவளின் கருவிழிகள் சிவப்பு நிறமாக மின்னியது. அதைக் கண்டு ஓடி வந்த ரகுநந்தனை மோகனா ஒரு பார்வை பார்க்க, கை கால்கள் முறுக்கிக் கொள்ள மூர்ச்சையாகி மண்ணில் விழுந்து விட்டான்.
“மகளே மோகனா, இவனை இங்கேயே கொன்று புதைத்து விடலாமா?”
“இல்லை தந்தையே இவன் நமக்கு உபயோகப்படுவான். ஒருவேளை ரஞ்சனி இந்த உடலுக்குள் திரும்பவும் வந்துவிட்டாள், அவளை பயமுறுத்துவதற்காகவாவது, இவன் உயிரோடு இருக்க வேண்டும். இவனை நமது இடத்திற்க்கு இழுத்துச் செல்லுங்கள்.”

