Loading

        மித்ரன் கைகளை கட்டிக்கொண்டு தலையை சாய்த்தபடி, கண்களில் குறும்பு பார்வையோடு அவளை நோக்கி,

   “மதுரா…” என்று மென்மையாக அழைத்திட

  கற்றை மீசையுடன் அடர்த்தியான  தலைமுடியானது, நீரினில் நனைந்தும் அடங்க மறுத்து காற்றில் அலைபாய, அந்த சின்ன கண்ணனை போல் கண்களில் குறும்பு மின்ன, கம்பீர தோற்றத்துடன் நிற்கும் ஆண்மகனை கண்டு, அவள் இது தனது தீரனா என்று  ஆச்சரியத்தில் மகிழ்ச்சியோடு கண்களை விரித்தாள்.

   அவள் கண்களில் தோன்றிய மகிழ்ச்சி ஒரு நொடி தான். அடுத்த நொடியே நிதர்சனத்தை உணர்ந்து, தன் அன்னையைப் பற்றி நினைத்து, அவசரமாக குகை வாசலை நோக்கினாள்.

    சிறுவயதில் ஓடியாடியது சரிதான், ஆனால் இப்போது வளர்ந்த பிறகு அவனுடன் எவ்வாறு பழக முடியும். விவரம் தெரிந்த பிறகும் இதைத் தொடரத்தான் முடியுமா என்ன? தான் ஒரு காட்டில் வசிக்கும் பெண், அவனோ ஒரு போர் வீரனின் மகன். அத்தோடு தன்னை முழுமையாக கொற்றவை தேவிக்கு அர்ப்பணிக்க உள்ள நிலையில், இது சாத்தியமா? என்று ஒரு மனது அடித்துக் கொண்டது.

தன் முகத்தை கோபமாக மாற்றிக் கொண்டவளோ,

   “யாரைய்யா நீ? இங்கு மதுரா என்று யாரும் இல்லை, அனுமதி இன்றி இங்கு நுழைவது குற்றமாகும், முதலில் இந்த இடத்தை விட்டு செல்.”

    அவளின் முக மாறுதலை அறியாதவனா அவன்? அவள் கண்களில் ஒரு நொடி தோன்றிய மகிழ்ச்சியே, அவள் மனதில் உள்ள உண்மையை உரைத்தது, இன்னும் தன்னை மறவாமல் இருக்கும் அந்த உண்மையை வெளிப்படுத்தியது.

   “ஓஹோ…உனக்கு நான் யார் என்று தெரியாது அப்படித் தானே?”

  “ஆமாம் முதலில் இவ்விடத்தை விட்டு செல். என் அன்னை வரும் நேரம் ஆகிவிட்டது, அவர் கண்ணில் பட்டால் நிச்சயமாக அவரின் கோபத்துக்கு ஆளாவாய்.”

     “பிறகு எதற்காக நான் வரவில்லை என்று சற்று நேரத்துக்கு முன், இந்த குளத்தினில் தெரிந்த உன் பிம்பத்தை பார்த்து, புலம்பிக் கொண்டிருந்தாய் மதுரா?”

   ” அது…நான் இங்கு ஏதோ புலம்பிக் கொண்டிருந்தேன், வேறு ஏதோ யோசனையில் என்னவோ சொல்லிக் கொண்டிருந்தேன். அதெல்லாம் உனக்கு எதற்கு? அத்துடன் நான் ஒன்றும் உனது மதுரா அல்ல புரிந்ததா? உன்னை செல் என்றால் செல். எதற்காக வீணாக என்னோடு விவாதம் செய்து கொண்டிருக்கிறாய், முன்பின் முகமறியா பெண்ணுடன் வீண் வாதம் புரிவதுதான் தங்களுக்கு வழக்கமா? இதுதான் உங்கள் முறையான செயலா?”

“முகமறியாத பெண்ணா? யாரது…? நான் என் மனைவியுடன் அல்லவா பேசிக் கொண்டிருக்கிறேன்.”

   “என்ன மனைவியா?”

    “ஆமாம் பின்பு குருகுலத்திற்கு செல்ல இருந்த என்னை, வேறு யாருடனாவது நான் பழகி விடுவேனோ என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து, என்னை இந்த கொற்றவை தேவியின் சிலை முன்பு இழுத்து வந்து, என் கைகளால் இந்த நீரை எடுத்து சாட்சியாக வைத்து, என் கைகளால் குங்குமத்தை வாங்கிக் கொண்டு, உன்னை திருமணம் செய்து கொள்ள வைத்தாய் தானே?”

    “என்ன உளறுகிறாய்? நான் எப்போது அப்படி எல்லாம் செய்தேன், நீதானே என்னை இழுத்துக் கொண்டு வந்து இவ்வாறெல்லாம் செய்தாய்.”

  மித்ரன் தன் தலையை சாய்த்து அவளை குறு குறுவென்று பார்த்துக் கொண்டே, உதட்டினில் குறும்பு சிரிப்பு ஒன்றை உதிர்க்க, அப்போதுதான் அவளுக்கு நினைவு வந்தது. தனது வாயாலேயே இப்படி உளறிக் கொட்டி விட்டோமே என்று நினைத்து, திரு திருவென்று விழித்தாள்.

அவள் கோபமாக மித்ரனை பார்த்து முறைக்க, அவன் சிரித்துக் கொண்டே மதுராவை பார்த்து உரைத்தான்.

  “செய்தது அனைத்தும் நான் தான். ஆனால்  நமக்கு கந்தர்வ மணம் (திருமணம்) நடந்தது உண்மை.”

      மதுராவிற்க்கு தலைசுற்றியது, அவன் என்ன கூறுகிறான்? எங்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டதா?

  “தீரா என்ன இது விளையாட்டு?”

    “எனது பெயரை உனது இனிய குரலில் கேட்டு எவ்வளவு வருடங்கள் ஆகி விட்டது மதுரா. எனை மறந்தாயோ என் செல்ல மணவாட்டியே?”

“போதும் தீரா நிறுத்து, எதற்காக இப்படி எல்லாம் கூறி கொண்டிருக்கிறாய் நீ? பிறப்பால் இந்த கொற்றவை தேவியால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் நான். இப்படி எல்லாம் அபத்தமாக கூறி எனக்கும் எமது குலத்திற்கும் களங்கத்தை ஏற்படுத்தாதே தீரா, சென்றுவிடு இங்கிருந்து.”

    “அபத்தமா எது அபத்தம்? நமக்கு  நடந்த திருமணத்தைப் பற்றி கூறுவது அபத்தமா உனக்கு? சரி அன்று நான் குருகுலம் செல்வதற்காக கிளம்பும்போது நீ என்ன செய்து, என்னை அனுப்பி வைத்தாய் என்று ஞாபகம் இருக்கிறதா உனக்கு? உமது குலத்தில் மனைவி கணவரை எவ்வாறு வழி அனுப்பி வைப்பாரோ, அதேபோன்று தான் எனக்கு மாலை அணிவித்து, திலகம் இட்டு அனுப்பி வைத்தாய் ஞாபகம் இருக்கின்றதா உனக்கு?”

    மதுராவிற்கு அன்று நடந்த நிகழ்வுகள் அனைத்தும், காட்சிகளாக கண்களில் உலா வரத் தொடங்கின. மனதிற்கு இதமாக இருந்தாலும் அறிவு இதனை தவறென்று உணர்த்தியது. விழிகளில் தழும்பிய நீரானது கரையை உடைக்க காத்துக் கிடக்க, கஷ்டப்பட்டு அதை கண்களுக்குள்ளேயே அடக்கியவள், மித்ரனை பார்த்து தெளிவாக பேச தொடங்கினாள்.

  “தீரா வீண் விவாதம் வேண்டாம் இத்தோடு இதை விட்டுவிடு. அன்னை வரும் நேரமாயிற்று இங்கிருந்து முதலில் வெளியே செல்.”

  “ஓ…அப்படியா வரட்டும் எனது மாமியார், அவரிடமே நான் நியாயம் கேட்கிறேன். இவ்வளவு வருடங்கள் கழித்து ஆசையாக மனைவியை காண வந்தால், என்னை வெளியே போ என்று துரத்தி அடிக்கிறாள். இதுதான் தாங்கள் பெண்ணை வளர்த்த முறையா என்று, அவரிடம் நானே கேட்கிறேன்.”
 
குகைக்கு வெளியே செம்பாவின் பிளிறல் சத்தத்தோடு ஏந்திழை அம்மையாரின் குரலும் கேட்டது. மதுரா மித்ரனை நோக்கி கைகூப்பி கெஞ்சினாள்.

    “தீரா நான் சொல்வதை கேளேன், தயவு செய்து இங்கிருந்து சென்று விடு. அன்னை உன்னை கண்டால் என் மீது கோபம் கொள்வார், வீண் பிரச்சனைகள் ஏற்படும், அவர் வருவதற்குள் இங்கிருந்து சென்று விடு.”

“நான் இங்கிருந்து நிச்சயம் செல்ல வேண்டுமா?”

   “ஆமாம் ஆமாம் தாமதிக்காமல் உடனே செல்.”

  “சரி சரி உனது கொஞ்சல் மொழிகள் இல்லை என்றாலும், இந்த நீல நயனங்களின் கெஞ்சல் மொழிக்காக செல்கிறேன். ஆனால் அதற்கு முன் நீ ஒன்று செய்ய வேண்டுமே?”

“என்ன செய்ய வேண்டும் தீரா? சீக்கிரம் சொல், அன்னையின் குரல் குகை வாசலில் கேட்கின்றது.”

“எங்கே சிரித்துக் கொண்டே என்னை பார்த்து, சென்று வாருங்கள் பிராண நாதா என்று கூறு பார்க்கலாம்.”

மதுரா அவனைப் பார்த்து முறைக்க,

  “இன்றே உனது தாயாரை நான் காண வேண்டும் என்று நினைக்கிறாய் போல, சரி உன் விருப்பம் அதுவென்றால் அவரை பார்த்துவிட்டே செல்கிறேன். அதோ அவரே வந்து கொண்டிருக்கின்றாரே.”

ஏந்திழை அம்மையார் மூலிகை மூட்டையுடன் குகைக்குள் நுழைந்து கொண்டிருந்தார். மதுரா மித்ரனை நோக்கி கைகளை கூப்பி,

   “என் பிராணனை எடுக்கும் நாதரே தயவு செய்து இங்கிருந்து செல்லுங்களேன்.”

  “ஆமாம் உன் பிராணனை என் உயிருக்குள் பொத்தி வைத்துக் கொண்ட உனது நாதன் நான் தான்.”

“புலவரே தங்கள் புலமையின் அழகை இன்னொரு நாள் ஆற அமர வந்து என்னிடம் காட்டுவீர்களாக, இப்போது கிளம்புங்கள்.”

“வாணி அங்கு யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாய்?”

   “அன்னையே அது…அது…”

   “ஓஹோ…வழக்கம் போல குளத்தினல் தெரியும் உன் பிம்பத்துடன் கதை அளக்க தொடங்கி விட்டாயா? இந்த மூட்டையில் உள்ள இலைகளை பிரித்து வை. செம்பாவிடம் இன்னொரு மூட்டை உள்ளது அதை நான் சென்று வாங்கி வருகிறேன்.”

ஏந்திழை அம்மையார் கூறியதும், மதுரா உடனே குளத்தினை திரும்பிப் பார்த்து, சுற்றும் முற்றும் குகையினில் தேடினாள். மித்ரன் அங்கு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு பெருமூச்சு ஒன்றினை வெளியிட்டாள்.

   “கணவன் சென்று விட்டானே என்று ஏக்க பெருமூச்சு விடாது, நிம்மதி பெருமூச்சினை வெளியிடுகிறாயே மதுரா? என்னே உன் பதி பக்தி!”

  “நீ இன்னும் வெளியே  செல்லவில்லையா? இங்கு தான் இருகின்றாயா?”

  “என்னை இங்கிருந்து அனுப்புவதிலேயே குறியாக இரு, சரி என்னை காண நாளை ஏரிக்கரைக்கு வருகின்றாயா?”

   “நான் எதற்காக ஏரி கரைக்கு வர வேண்டும்?”

“நான் சொல்வதை புரிந்து கொள் மதுரா, உன்னிடம் நான் மனம் விட்டு நிறைய விஷயங்களைப் பற்றி பேச வேண்டும்.”

“அன்னை எனக்கான பயிற்சிகளை ஆரம்பித்து விட்டார். அதனால் அவரை விட்டு என்னால் எங்கேயும் செல்ல முடியாது.”

“சரி அப்படி என்றால் நான் இங்கு வந்து விடுகிறேன்.”

    “ஐயோ தீரா ஏன் தான் என்னை இப்படி படுத்தி எடுக்கின்றாய், நிச்சயமாக ஏரிக்கரைக்கு வர முயற்சி செய்கிறேன் என்னை நம்பு. அன்னை வந்து கொண்டிருக்கிறார், தயவு செய்து இங்கிருந்து சென்று விடு தீரா.”

அவள் பதட்டமாக குகை வாசலை பார்த்துக்கொண்டே மித்ரனிடம் கூற,

“மதுரா உனக்காக வாழ்க்கை முழுவதும் கூட நான் காத்திருக்க தயார். ஆனால் நாளை முன்பகல் வேளையில் என்னை நீ சந்திக்க தவறினால், நாளை மாலையே உன்னை காண நான் தீர்த்த குளத்திற்கு வந்து விடுவேன்.”

அவனது வார்த்தை ஜாலத்தில், அவளின் சிந்தனைகள் எங்கெங்கோ சென்று கொண்டிருக்கும்போதே, அவளை இறுக கட்டி அணைத்து விட்டு, குளத்து நீரினுள் பாய்ந்திருந்தான் மித்ரன்.

   நடந்ததை அவள் உணரும் முன்பே அவன் அங்கிருந்து சென்றிருந்தான்.

   ஏந்திழை அம்மையார் நிறைய முறை அழைத்தும் மதுரா பதில் பேசாது, பிரம்மை பிடித்தவள் போல் நின்று கொண்டிருப்பதை கண்டு பயந்து போன அவர், தன் கையில் இருந்த கொற்றவை தேவியின் பிரசாதத்தை எடுத்து அவள் நெற்றியில் வைத்து விட்டார்.

இங்கு ஒருத்தியை வேப்பிலை அடிக்கும் நிலைக்கு உள்ளாக்கி விட்டு, ஏரிக்கரையில் சந்தோஷமாக நீரில் இருந்து எழுந்தான் மித்ரன்.

   மித்ரன் சென்று வெகுநேரமாகி விட்டதால் பயந்து போன ரகுநந்தன், யாரிடம் கூறுவது என்று தெரியாமல், பிரதீபனை ஏரிக்கரைக்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தான்.

சரியாக அந்த நேரம் தான் மித்ரனும் நீரில் இருந்து எழுந்து வந்தான். அவனை அங்கு கண்டு அதிர்ந்த ரகுநந்தன்,

“நீ எப்படி ஏரி நீருக்குள் இருந்து வருகிறாய் மித்ரா?”

“அறிவு கெட்டவனே, ஏரிக்குள் குதித்தவன் ஏரி நீரிலிருந்து வராமல், கொற்றவை தேவியின் தீர்த்த குளத்தில் இருந்தா வர முடியும்?

    இருவரும் சேர்ந்து மூச்சை அடக்கும் பயிற்சி மேற்கொண்டோமே, என்னை இங்கு ஏரியில் தனியாக விட்டுவிட்டு நீ எங்கடா சென்றாய்?”

பிரதீபன் ரகுநந்தனை பார்த்து முறைக்க,

    “ஐயோ இல்லை பிரதீபா, நான் வெகு நேரம் இந்த ஏரி நீருக்குள் உள்நீச்சல் அடித்து  இவனை தேடினேன், எங்குமே  இவனை காணவில்லை. அதனால் தான் உன்னை அழைத்து வரலாம் என்று வந்தேன்.”

  “இப்போது  உன் கண் முன்னே, அந்த ஏரிக்குள் இருந்து தானே அவன் வருகிறான்?”

   “ஆமாம் பிரதீபா, அதுதான் எப்படி என்று தெரியவில்லை.”

   “என்னடா நடக்கின்றது இங்கு? எதற்காக பிரதீபனை அழைத்து வந்திருக்கிறாய்?”

    “நான் சொல்வது நிஜமடா, ஏரி நீரினுள் நான் வெகு நேரம் தேடினேன், உள் நீச்சல் அடித்துக் கூட, அனைத்து மூலையிலும் தேடினேன். மித்ரன் எங்குமே இல்லாத காரணத்தால் தான், அவசரமாக அரண்மனைக்கு வந்தேன்.”

   “ஆமாம் அனாவசியமாக நீ அங்கு வந்து, முக்கியமான அரச காரியங்களுக்காக, அரசரை பார்ப்பதற்காக காத்து கொண்டிருந்த என்னை, இங்கு இழுத்து வந்து விட்டாய்.”

    “சரி விடு பிரதீபா, சிறுவன் ஏதோ தெரியாமல் இப்படி செய்து விட்டான். ஆமாம் அது என்ன முக்கியமான அரசாங்க காரியம்? ஏதாவது போர் அறிகுறியா? இல்லை உளவாளிகள் யாராவது சிக்கியிருக்கிறார்களா?”

    “இல்லை மித்ரா, கொற்றவை தேவி திருவிழா நெருங்குகிறது அல்லவா, அதில் கலந்து கொள்ள அனுமதி கேட்டு, ரத்னபுரி அரசரிடம் இருந்து ஓலை வந்ததுள்ளது. அத்தோடு அவருக்கு மோகனாவை பார்க்க வேண்டும் போல உள்ளதாம், அவளையும் உடனே அனுப்பி வைக்குமாறு கூறியிருக்கிறார்.”

   இதைக் கேட்டதும் ரகுநந்தனும் மித்ரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

சில நாட்களாக மோகனாவை கண்காணித்ததில் அவளின் அந்தரங்க சேவகி, அடிக்கடி யாரும் அறியாமல் யாரையோ சென்று சந்தித்து வருவதை தெரிந்து கொண்டனர்.

  அவள் சந்திப்பது இரத்தினபுரியை சேர்ந்த வியாபாரி வேடம் தரித்த, உளவாளி என்றும் அறிந்து கொண்டனர். இவை அனைத்தையும் அறிந்தும் நேரடியாக அவனைப் பிடித்து விசாரிக்காமல், அவனது வீட்டிலேயே மகிழபுரியை சேர்ந்த ஒருவனை ரத்னபுரியை சேர்ந்தவன் என்று கூற வைத்து, வேலைக்கு அமர்த்தினர்.

     அந்த மகழபுரியை சேர்ந்த வேலையால் கூட, நேற்றுதான் பௌர்ணமி பூஜை, மோகனா என்று அவர்கள் ஏதோ பேசிக் கொண்டதாக கூறினான். மோகனாவின் சேவகையான யோகினி அந்த உளவாளியிடம் ஒரு ஓலையை கொடுத்து, இதில் உள்ள திட்டத்தை அப்படியே செயல்படுத்துமாறு மோகனா உத்தரவிட்டிருப்பதாக கூறினான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. நாங்களும் எதிரி கூடாரத்துல ஆள் வைப்போம்.. பிராண நாதா 🤣🤣🤣🤣🤣🤣அடடா அருமையான விளக்கம்.. சூப்பர் மன்னவா.. உங்களால தான் இப்படிலாம் விளக்கம் சொல்ல முடியும்.