Loading

         மகிழபுரியில் உள்ள கொற்றவை என்னும் பெண் சக்தியை எதிர்க்க, காலக்கோடனால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் தான் மோகனா.

  காலக்கோடனுக்கான பௌர்ணமி பூஜையை, அவனை வணங்கும் மக்களால், கொற்றவை தேவியின் திருவிழாவிற்கு, முன்பு வரும் பௌர்ணமியில் நடத்தப்பட்டு வருகிறது. மோகனா இதுவரை எட்டு பூஜைகளில்  முழுமையாக பங்கேற்றுள்ளாள்.

  முதன் முதலில் அந்த பூஜையை காணும் போது சற்று மிரண்டு தான் போனாள். ரத்த குவியல்களுக்கு நடுவே கருப்பு உடையுடன் இருந்த குரு பாலர்கள் மந்திரம் கூறிட, அந்த மந்திரங்கள் மூளைக்குள் புகுந்து ஒருவித மயக்கத்தை ஏற்படுத்தியது.

    அவளது பதினாறாவது வயதில் காலக்கோடனின் உத்தரவுப்படி, மோகனா தேர்ந்தெடுக்கப்பட்டதால், அதன் பிறகு வந்த வேள்விகளை அவளே தலைமை ஏற்று நடத்தினாள்.

  பார்த்திபேந்திரன் தனது மூத்த தங்கை மேனகாவிற்கு தான் வாழ்க்கை இப்படி அமைந்து விட்டது. அவளின் மகளான மோகனாவிற்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

  தனது மகன் மித்ரனுக்கே மோகனாவை திருமணம் செய்து வைத்து, அவளை இந்த நாட்டின் வருங்கால மகாராணியாக்க ஆசை கொண்டார். அவர் இது பற்றி தன் மனைவியான தாரகை தேவியிடம் பகிர்ந்து கொண்டார்.

  “பிரபோ, திருமணம் என்பது இரு மனங்களும் விரும்பி இணைய வேண்டியது. அவர்கள் இருவருக்கும் பிடித்திருந்தால், அவர்களுக்கு குறிப்பிட்ட வயது வந்த பிறகு, நாம் இதைப் பற்றி பேசலாம். நாமாகவே இதைப்பற்றி பேசி அவர்கள் மனதில் ஆசையை தோற்றுவிக்க வேண்டாம். அந்த கொற்றவை தேவியின் அருள் இருந்தால், தங்கள் ஆசை நிச்சயம் நிறைவேறும்.”

  மன்னருக்கும் இதுவே சரி என்று பட,  தனது மனதில் தோன்றிய எண்ணத்தை, அதன் பிறகு யாருக்கும் வெளிபடுத்தவில்லை.

  தாரகை தேவிக்கு தான் கடந்த சில நாட்களாகவே, மோகனாவின் நடவெடிக்கைகள் குறித்து மனதில் குழப்பங்கள் எழுந்து கொண்டிருந்தது.

  கொற்றவை தேவியின் கோயிலுக்கு செல்வதையே அவள் அடியோடு விட்டு விட்டாள். அத்தோடு தேவியின் பிரசாதங்களையும் ஏற்பதுமில்லை.

ஒருமுறை அவளின் அறைக்குள் தாரகை சென்றபோது, ஒருவகையான கருப்பு மையை கண்டார். அது மாந்திரீகர்கள் உபயோகிக்கும் மை. அதை இவள் அறையில் கண்டபோது அதிர்ந்து தான் போனார். சில நாட்களாக அவளின் நடவடிக்கைகளிலும் சில மாற்றங்களை கண்டதால், அவளை கண்காணிக்க ஆரம்பித்தார்.

மகிழபுரி ராஜ்யத்தில் விஜய பூபதியின் நடமாட்டம் இருப்பதாக அரசர் ஒருமுறை கூறியிருந்தார். நம் நாட்டில் உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி அவன் நிச்சயம் நடமாட முடியாது, ராஜ்ஜியத்தில் ஏதோ குழப்பம் சூழ்ந்துள்ளதாக அரசர் கூறிக் கொண்டிருந்தார்.

  ஏனோ இந்த விஷயத்தில் மோகனாவின் பங்கு இருக்குமோ என்று தாரகை தேவிக்கு சந்தேகம் எழுந்தது. இந்த கருப்பு மையை கூட ஒரு சமயம் விஜய பூபதி, திருமணம் ஆன புதிதில் மேனகாவுடன் இங்கு அரண்மனைக்கு வந்தபோது, அவர் உபயோகித்ததை கண்டிருக்கிறார்.

   அரசரின் மனதில் மித்ரனுக்கு மோகனாவை திருமணம் செய்து வைக்கும் எண்ணம், இருந்ததை வெளிப்படுத்திய போது, இவருக்கு வருங்காலத்தை எண்ணி அச்சமாகத்தான் இருந்தது.

   அரசரிடம் இது பற்றி விரிவாக கூறவும் அவருக்கு மனம் வரவில்லை, அதனால் அரசாங்க ஜோதிடரை அழைத்து மோகனாவின் ஜாதகத்தை காண்பித்தால், ஏதாவது வழி பிறக்கும் என்று எண்ணினார். ஆனால் அவர் எண்ணியதற்கு மாறாக தான் ஜோதிடர் கூறினார்.

  இது அசுர ஜாதகம் என்றும் இந்த ஜாதகக்காரரால், பல உயிர்கள் அநியாயமாக போகும் என்றும், ஜோதிடர் கூறியதை கேட்டு, மகாராணிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

   அதற்குள் இளவரசர் குருகுலத்தில் பயிற்சி முடிந்து நாடு திரும்பும் நாளும் வந்தது. மனக் குழப்பத்திலிருந்து தாரகை தேவி  தமக்கு வழி கிடைக்க வேண்டும் என்று கொற்றவை தேவியை வேண்டி, இளவரசருக்காக விசேஷ பூஜை நடத்தினார். அது மட்டுமல்லாது ஏந்திழை அம்மையாரிடம் இது பற்றி குறி கேட்பதற்காகவும் இங்கு வந்திருந்தார்.

    இப்படி வந்த இடத்தில் நாட்டு மக்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் இடையே, சண்டை மூழும் என்று அவர் எண்ணவே இல்லை.

தனது மகளுடனும் நாத்தனார்களுடனும், காட்டினுள் இந்த சண்டைக்கு இடையே மாட்டிக் கொண்டார்.

அதைவிட அவர்களை பாதுகாக்க வேண்டிய படை வீரர்களே, இவர்களைக் கொல்ல ஆயுதங்களை ஏந்தி அருகில் வர, பெண்கள் அனைவரும் அச்சம் கொண்டனர். கவிதாயினி அழவேத் தொடங்கி விட்டாள்.

  இரண்டு மூன்று வீரர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு ஆயுதங்களை ஓங்கி வர, தன் மகளை இறுகப்பற்றிக் கொண்டு கண்களை மூடியவர், படைவீரர்களின் அலறல் சத்தத்தில் தான் கண்களைத் திறந்தார்.

   நீலவிழி கொண்ட ஒரு கன்னிப் பெண் யானை மீது பவனி வந்து, அந்த படை வீரர்களை தாக்கிக் கொண்டிருந்தாள்.

  ஒரு கட்டத்தில் படைவீரர்களின் எண்ணிக்கை அதிகமாக தன் கையில் இருந்த அம்புகளை, மழை போன்று அவர்களை நோக்கி தொடுக்க தொடங்கினாள்.

ஒரு புறம் அவளது யானையும் மறுபுறம் அவளும் அவர்களை சுற்றி நின்று கொண்டு, அவர்களை தாக்க வரும் படைவீரர்களிடமிருந்து பாதுகாத்தனர்.

   கைகலப்பில் ஈடுபட்டிருந்த இந்நாட்டு மக்களும், மலைவாழ் மக்களும் இந்த காட்சியை கண்டு, தம் குல பெண்களை காப்பாற்றிட பதறி ஓடி வந்தனர்.

    நாட்டு மக்கள் தமது மகாராணியாரையும் அவர் குடும்பத்தையும் காப்பாற்ற முயல, மலைவாழ் மக்கள் தமது கன்னி தெய்வமாக போற்றும் வாணியை காப்பாற்ற, அவர்களால் முடிந்த அளவு படைவீரர்களுடன் போராடினர்.

    ஒரு கட்டத்துக்கு மேல் படைவீரர்களாக வேசம் பூண்ட ரத்தினபுரி வீரர்கள் அனைவரும் சிதறி ஓட, அவர்களை துரத்திக் கொண்டு போக நினைத்த வாணியின் கையை பற்றி நிறுத்தினார் ஏந்திழை அம்மையார்.

“தாயே என்ன செய்கிறீர்கள்? விடுங்கள் என்னை, நான் அவர்களை பிடித்தே ஆக வேண்டும். என்ன தைரியம் இருந்தால் நமது காட்டினுள் நுழைந்து கலகம் செய்ய துணிவார்கள்.”

   “வாணி எதற்காக என் பேச்சை மீறி நீ வெளியே வந்தாய்? நான்தான் உன்னிடம் கூறியிருக்கிறேன் அல்லவா?”

  “தாயே நமது மக்களுக்கும் தங்களுக்கும் ஏதோ ஆபத்து வருவது போல என் மனதில் தோன்றி கொண்டே இருந்தது. அதற்கு தகுந்தாற்போல் பறவைகளும் ஆபத்துக் காலத்தை குறிக்கும் ஒலியை எழுப்பியது. அதனால் தான் சற்றும் தாமதிக்காமல் உங்கள் பேச்சை மீறி இங்கு வந்தேன்.”

  ஏந்திழை அம்மையாருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தங்களைக் காப்பாற்றுவதற்காக வெளியில் வந்த தம் மகளுக்கு, அரசு குடும்பத்தாரால் ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று அவர் அஞ்சினார்.

இங்கு இப்படி இருக்க, அங்கு   இளவரசரும் அரசரும், காட்டுவாசிகள் போல் வேடம் தரித்த ரத்னபுரி வீரர்களிடம் போரிட்டுக் கொண்டிருந்தனர்.

  “தாயே எதற்காக இந்த பிரச்சனை உண்டானது? எப்படி இங்கு கலகம் ஏற்பட்டது?”

  “தெரியவில்லை வாணி. நானும் நம் மக்களிடம் கேட்டு விட்டேன். அவர்களில் யாருமே இந்த சண்டையை ஆரம்பிக்க வில்லையாம், பிறகு எப்படி இரு பிரிவினருக்கும் இடையே சச்சரவு தோன்றியது என்றே தெரியவில்லை?”

   “நானும் நாட்டு மக்களிடம் கேட்டு விட்டேன், அவர்களும் இந்த சண்டையை ஆரம்பிக்கவில்லையாம். அத்தோடு எங்களை காவல் காத்து நின்ற காவல் வீரர்களே, எங்களை கொல்ல வந்தார்கள். அதுதான் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.”

  “ராணியாரே, உங்களை சூழ்ந்து நின்றது நமது நாட்டு படை வீரர்கள் போல் தெரியவில்லை, அப்படி இருந்தால் உங்களை கொல்ல துணிந்திருக்க மாட்டார்கள். எனது யூகம் சரி என்றால், அவர்கள் எதிரி நாட்டைச் சேர்ந்த படைவீரர்களாகத்தான் இருக்கக்கூடும். இங்கு இரு பிரிவினர்களுக்கு இடையே சண்டையை ஏற்படுத்தி, அதை காரணமாக வைத்து தங்களை கொல்ல திட்டம் தீட்டு இருக்கிறார்கள்.”

   அங்கிருந்த மக்களுக்கும் அப்போதுதான் விளங்கியது தங்களிடையே வாக்குவாதங்களை ஏற்படுத்திவிட்டு, அதன் காரணமாக தமது மகாராணியாரை கொல்ல முயன்றிருக்கிறார்கள் என்று.

  அழுது கொண்டிருந்த கவிதாயினி மதுரவாணியை நோக்கி வந்து அவளது காலை கட்டிக்கொண்டாள்.

“அக்கா எனக்கும் அம்பு வீச கற்றுத் தருகிறீர்களா? இனி என் அன்னையை கொல்ல யார் முயன்றாலும், அவர்களுக்கு நான் நல்ல பாடம் புகட்ட வேண்டும்.”

   “அம்பு வீசவா? சரி கற்றுத் தருகிறேன். உன் பெயர் என்ன?”

“என் பெயர் கவிதாயினி? உங்களின் பெயர் என்ன அக்கா.”

  “என் பெயர் மதுரவாணி. ஆமாம்,கவி எதற்காக உன் முகம் இப்படி வாடி உள்ளது? அழுதாயா?”

    “ஆமாம் அந்த படை வீரர்கள் எங்களை சூழ்ந்து கொண்டதால் பயந்துவிட்டேன்.”

   “நீ தைரியமான பெண்தானே கவி, இனி நீ எதை கண்டும் அஞ்ச கூடாது சரிதானே. நமது தேவி கொற்றவையின் அருள் உள்ளவரை, இந்த ராஜ்யத்தில் பெண்களை என்றுமே ஆபத்து நெருங்காது புரிந்ததா?”

    “புரிந்தது அக்கா?”

     இதைக் கேட்டுக் கொண்டிருந்த மகாராணி தாரகை தேவியார் ஏந்திழை அம்மையாரை நோக்கி,

“ஏந்திழை இந்தப் பெண்…?”

“எனது அருமை வளர்ப்பு மகள் தான் மகாராணியாரே. நான் பெற்ற பிள்ளை போல் வளர்த்து வருகிறேன்.”

    “இவளை நான் இதுவரை இங்கு கண்டது இல்லையே? அன்று அரசவையில் கைக்குழந்தையாக இவளை கண்டது தான். எவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டாள்.”

    காட்டினில் நுழைவதற்கு சற்று முன்னாலேயே அரசரும் மற்றும் இளவரசரும் காட்டுவாசிகள் போல் வேடம் தரித்த வீரர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

   திடீரென்று ரதத்தையும் குதிரைகளையும் வழி மறித்து அவர்கள் தாக்கத் தொடங்கி விட, நண்பர்கள் மூவரும் உடனே சுதாரித்து எதிரிகளுடன் சண்டையிடத் தொடங்கினர்.

   அரசருக்கு எதற்காக இந்த மலைவாழ் மக்கள் தங்களை தாக்குகின்றனர் என்றே தெரியவில்லை. அதைவிட தமது குடும்பப் பெண்கள் அனைவரும் காட்டினுள் கொற்றவை தேவியின் கோயிலில் உள்ளனர் என்பது வேறு, அவருக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியது.

  வழியில் வந்த தங்களுக்கே இந்த நிலைமை என்றால், அங்கு அந்தக் கூட்டத்தின் இடையே மாட்டிக் கொண்டிருக்கும், தங்கள் வீட்டு பெண்களின் நிலையை எண்ணி வருத்தம் கொண்டார்.

  இளவரசரையும் அவரது நண்பர்களையும் அழைத்து, இங்கு தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும் உடனே கொற்றவை தேவி கோவிலுக்கு சென்று அங்கு பெண்களின் நிலையை கண்டு வருமாறும் கூறினார்.

நண்பர்கள் மூவரும் குதிரையை விரட்டி காட்டினை நோக்கி முன்னேறினர்.

அவர்கள் காட்டினை நெருங்கும் போது கொற்றவை தேவி கோயில் பூஜைகள் ஆரம்பமாகி கொண்டிருந்தது. இளவரசரைக் கண்டதும் மக்கள் அனைவரும் உற்சாகமாக வாழ்த்தொலி எழுப்பினர்

   தன்னை அன்புடன் வரவேற்கும் மக்களை புன்னகை முகத்துடன் எதிர்கொண்ட இளவரசர், தமது வீட்டுப் பெண்கள் நலமாக உள்ளனரா என்று கண்களால் ஆராய்ந்தார்.

  அப்போதுதான் மித்ரனுக்கு ஒன்று ஞாபகம் வந்தது, வரும் வழியில் தங்களுடன் சண்டையிட்ட காட்டுவாசிகள் போர் திறமையுடன், தமக்கு ஈடாக போர் புரிந்தது நினைவு வந்தது. காட்டில் வசிக்கும் மக்களால் எவ்வாறு படை வீரர்கள் போல் சண்டையிட முடியும்? அவர்கள் காட்டுவாசிகளை போல் வேஷம் போட்டு வந்த, எதிரி நாட்டு படைவீரர்களாகத் தான் இருக்க கூடும் என்று சந்தேகித்தான்.

இளவரசர் வரும் வாழ்த்தொலி கேட்டதுமே ஏந்திழை அம்மையார், மதுர வாணியையை அழைத்துக்கொண்டு அவர்கள் குடியிருக்கும் குடிலுக்கு சென்று விட்டார்.

  “வாணி,  அரசு குடும்பத்தார் இந்த காட்டை விட்டு வெளியே செல்லும் வரை, நீ இந்த குடிலை விட்டு வெளியே வரக்கூடாது, இது என் மீது ஆணை  புரிந்ததா உனக்கு?”

  அவள் சோகமாக தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

   மதுராவை ஏந்திழை அம்மையார் அழைத்துச் சென்றதும் செம்பாவும் அவளின் பின்னே, நாய் குட்டி போல வந்து குடிலுக்கு முன்பு அமர்ந்து விட்டது.

   குடிலின் தட்டியை இழுத்து மூடி விட்டு,  கொற்றவை தேவி கோயிலை நோக்கி கிளம்ப எத்தனித்த ஏந்திழை அம்மையார், வாசலில் படுத்திருந்த செம்பாவை பார்த்து முறைத்தார்.

   “உன்னால்தானடா அவள் என் பேச்சை கேட்காமல், இப்படி நடந்து கொள்கிறாள். உனக்கு தெரியும் தானே, காட்டினுள் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் வரும் போது, வாணி குகை கோயிலில் தான் இருக்க வேண்டும் என்று. பிறகு எதற்காக அவளை இங்கு அழைத்து வந்தாய், நீங்கள் செய்த தவறுக்கு இன்று உங்கள் இருவருக்கும் சோறு தண்ணீர் கிடையாது.”

   ஏந்திழை அம்மையார் இருவரையும் திட்டி விட்டு கோயிலை நோக்கி சென்று விட்டார்.

    ஐந்து வருடங்களுக்கு முன்பு கொற்றவை திருவிழாவின் போது, குகை கோயிலுக்கு அருகே தான், மதுரா முதன்முதலில் செம்பாவை கண்டால்.

     குகைக்கு அருகே ஒரு பெண் யானை இறந்து கிடக்க, அது இறந்தது கூட தெரியாமல் அதன் குட்டி, அந்த தாய் யானையை எழுப்பி கொண்டிருந்தது.

  மதுரா அந்த குட்டி யானையின் அருகில் சென்று அதை அணைத்துக் கொண்டாள். அன்றிலிருந்து செம்பாவை அவளுடனே வைத்து வளர்த்து வருகிறாள். அவள் செல்லும் இடங்களில் எல்லாம் செம்பாவும் பின் தொடர்வான். மதுராவின் வார்த்தையே செம்பாவிற்கு வேத வாக்கு.

ஏந்திழை அம்மையார் சென்றதும் மதுரா வீட்டினுள் இருந்த உணவினை ஜன்னல் வழியே செம்பாவை நோக்கி வீசினாள். செம்பாவும் தனது அருகே இருந்த மரத்திலிருந்து பழங்களை பறித்து அவளுக்கு ஜன்னலின் வழியே கொடுத்தது. சற்று தூரம் சென்று திரும்பி பார்த்த ஏந்திழை அம்மையார், இதனைக் கண்டு சிரித்துக் கொண்டே கோயிலை நோக்கிச் சென்றார்.

  மகாராணியார் தமது மகன் வரும் செய்தி கேட்டு, மித்ரனை காண விரைந்ததால், ஏந்திழை அம்மையார் மதுராவை இழுத்து கொண்டு சென்றது பற்றி அவருக்கு எதுவும் தெரியவில்லை.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அரசரை விட்டுட்டு ஏன் இளவரசர் இங்க வரணும் .. அரசருக்கு ஏதாவது ஆகிடுமோ?? அரசியை காப்பாத்திட்டாங்க .. செம்பா வாணி பாண்டிங் சூப்பர் ..