
மதுரவாணி, மித்ரன் குளத்தினில் இருந்து எழ முடியாது, மூழ்கி விட்டதாக எண்ணி, அவனின் தலை முடியை பிடித்துக் கொண்டு நீந்தி, சற்று தூரம் தள்ளி மேலே வந்தாள்.
அவளின் பின்னே மகுடிக்கி மயங்கிய பாம்பாக நீந்தி வந்த மித்ரன், குளத்தை விட்டு வெளியேறியதும் தான் சுயத்துக்கு வந்தான், அதன் பிறகே தான் இருக்கும் இடத்தை சுற்றிப் பார்த்தான்.
அது அவன் விழுந்த அல்லி மலர் குளம் அல்ல, ஒரு குகை போன்ற அமைப்பில் இருந்தது. குளத்திற்கு சற்று தள்ளி கொற்றவை தேவியின் செம்பவள சிலை இருந்தது. அதனை கண்ட மித்ரன் கைகள் கூப்பி, வணங்கி நின்றான்.
“ஆமாம் யார் நீ? தீர்த்த குளத்தினுள் என்ன செய்து கொண்டிருந்தாய்? அங்குள்ள அல்லி மலர்களை கண்ட போது தெரியவில்லையா? அதில் இருக்கும் ஆபத்து.”
“யாராவது தெரிந்தே அல்லிமலர் சூழ்ந்த குளத்தில் விழுவார்களா? அந்த வழியாக சென்று கொண்டிருக்கும் போது கால் தவறி உள்ளே விழுந்து விட்டேன். ஆமாம் நாம் இங்கு எப்படி வந்தோம்.”
“சுரங்கப்பாதை வழியாக தான், நான் உன்னை இங்கு இழுத்து வந்தேன். அங்கேயே உன்னை மேலே ஏற்றி இருந்தால், நான் அங்கு வந்தது என் தாய்க்கு தெரிந்து என் மீது மிகவும் கோபப்படுவார்.”
“எதற்காக கோபப்படுவார்?”
“அரச குடும்பத்தைச் சேர்ந்த யாரின் கண்களிலும் நான் விழுந்து விடக் கூடாது என்று தான், ஒவ்வொரு முறை கொற்றவைத் திருவிழாவின் போதும், என்னை இங்கு அழைத்து வந்து விட்டு விடுவார். அவர்கள் அங்கிருந்து சென்ற பின் தான், என்னை குடிலுக்கே அழைத்துச் செல்வார். உன் பெயர் என்ன? ஆமாம் நீ அரசு குடும்பத்தைச் சேர்ந்தவனா?”
“இல்லையே இல்லவே இல்லை, இந்நாட்டு முதன்மைப் போர் வீரரின் மகன் நான். என் பெயர் தேவேந்திரன்.”
“என்ன பெயர் இது? உன் பெயர் என் வாயிலேயே நுழையவில்லை. வேண்டுமென்றால் உன்னை தீரா என்று அழைக்கட்டுமா?”
“உன் இஷ்டப்படி எப்படி வேண்டும் என்றாலும் கூப்பிடு. ஆமாம் உன் பெயர் என்ன?”
“வாணி மதுர வாணி. என் அன்னை என்னை வாணி என்று தான் அழைப்பார்.”
“நான் உன்னை மதுரா என்று அழைக்கட்டுமா?”
“ஆஹா இந்த பெயர் நன்றாக உள்ளது. அப்படியே கூப்பிடு தீரா.”
“ஆமாம் நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்? எவ்வாறு அந்த குளத்திற்கு வந்தாய்?”
“எனக்கு இங்கு தனியாக இருக்கவே பிடிக்கவில்லை. இந்தக் குளத்திலிருந்து பிரியும் இரண்டு சுரங்கப்பாதைகளில் ஒன்று கொற்றவை தேவி கோயில் குளத்திற்கும், மற்றொன்று காட்டிற்கு வெளியே உள்ள ஏரிக்கும் செல்லும். அதன் மூலம் என் அன்னைக்கு தெரியாமல் வெளியிடங்களுக்கு சென்று வருவேன்.
அவ்வாறு இன்று செல்லும் போது தான், நீ அந்த குளத்தில் மூழ்கிக் கொண்டிருப்பதை கண்டேன்.”
“ஏரியை ஒட்டி சுரங்கப்பாதையா? நான் இதுவரை கண்டதே இல்லையே?”
“காட்டை ஒட்டி இருக்கும், நீர் பகுதிகளை நெருங்கி சென்று பார்த்திருக்க மாட்டாய் அல்லவா, அதனால் அங்குள்ள சுரங்க வழி உனக்கு தெரிய வாய்பில்லை.”
“ஓஹோ சரி… இந்த குகையில் இருந்து வெளியே செல்ல இது மட்டும் தான் வழியா?”
“ஏன் தீரா? என்னை விட்டு, இங்கிருந்து செல்ல போகின்றாயா? இன்றாவது என்னுடன் விளையாட ஆள் வந்ததாக நினைத்து மகிழ்ந்தேன்.”
“மதுரா இதோ என்னை பார், இனி தினமும் உன்னை சந்திக்க வருகிறேன். உன்னுடன் சேர்ந்து விளையாடுவேன் சரியா. இது போல முகத்தை கலக்கத்துடன் வைத்துக் கொள்ளாதே புரிந்ததா.”
“நிஜமாகவா? நீ என்னை சந்திக்க தினமும் வருவாயா? என்னை ஏமாற்றி விட மாட்டாயே?”
“நிச்சயமாக என் உயிர் உள்ளவரை என்றுமே உன்னை ஏமாற்ற மாட்டேன் மதுரா.”
வேந்தன் தினமும் காட்டுக்கு வெளியே உள்ள ஏரி வழியே நீந்தி வந்து, கொற்றவை தேவி கோயிலுக்கு பின்புறம் இருக்கும் தீர்த்த குளத்தில், மதுராவை சந்தித்துக் கொண்டிருந்தான்.
வெளியுலகம் என்றால் என்ன என்றே அறியாத சிறு பெண்ணுக்கு, தான் கண்டு வந்தவைகள் பற்றியும், கேட்டு தெரிந்து கொண்டவை பற்றியும் விரிவாக எடுத்துரைப்பான்.
இப்படியே அவர்களது நட்பும் வளர்ந்து கொண்டே போனது. அரண்மனையிலிருந்து திடீரென்று மாயமாகும் மித்ரன், எங்கு செல்கிறான் என்பதை அறிய மோகனா பலமுறை முயற்சி செய்தால், ஆனால் அவளால் அதை கண்டுபிடிக்க தான் முடியவில்லை.
விஜய பூபதி ஓரிரு முறை தனது ஆசை மகள் மோகனாவை சந்திக்க வந்தான். வந்தவன் தனது பாசத்தை அவள் மீது கொட்டியதோடு அல்லாமல், மகிழபுரியின் மீது தான் கொண்டிருந்த பழி வெறியையும் சேர்த்தே அவளிடம் கூறி, அந்தப் பிஞ்சு மனதில் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சினை விதைத்து கொண்டிருந்தான்.
ஒரு வருடம் கழித்து இளவரசரோடு அவரின் நண்பர்களையும் ஆயுதப் பயிற்சிக்காக குருகுலம் அனுப்ப ஏற்பாடு ஆனது.
அன்று வெகு நேரத்திற்குப் பிறகு மித்ரன் மதுராவை காண வந்திருந்தான். மதுராவிடம், இளவரசருக்கு துணையாக தானும் குருகுலம் செல்ல போவதாக கூற, மதுரா அழத் தொடங்கி விட்டாள்.
“அந்த இளவரசர் என்ன சிறு குழந்தையா? அவனுக்கு துணையாக நீ போக வேண்டுமா? நான் போக மாட்டேன் என்று நீ சொல்ல வேண்டியது தானே. எனக்கு கொடுத்த வாக்கை, நீ மறந்துவிட்டாய் பார்த்தாயா?”
“மதுரா நீ கூறுகிற படி எல்லாம், அரச கட்டளையை மீறி பேச முடியாது”
“ஏன்? தலையை கொய்ந்து விடுவார்களா என்ன?”
மித்ரன் சிரித்துக் கொண்டே ஆமாம் என்று தலையாட்டினான்.
“அதனால் தான் என் அன்னை அரச குடும்பத்தாரின் பார்வையில் இருந்து, என்னை தள்ளி இருக்க சொல்கிறாரா?
இளவரசனுக்கு தோழனாக இருந்தால் அவர்களும், அவன் செல்லும் இடங்களுக்கெல்லாம் உடன் செல்ல வேண்டுமா என்ன? அவர்களுக்கென்று தனியாக விருப்பம் எல்லாம் இருக்க கூடாதா?”
இதற்கு தான் என்ன பதில் கூற, என்று தெரியாமல் மித்ரன் முழித்தான். அரண்மனை திரும்பிய பிறகு தன் நண்பர்களிடம், அவர்களுக்கு இதில் விருப்பமா என்று கேட்க வேண்டும் என்று, தனக்குள்ளே கூறிக் கொண்டான்.
“இளவரசன் நாளை மன்னரானால் இவர்களையும் அவனுடன் மன்னராக்கி, ஒரே அரச பீடத்தில் அமர வைப்பார்களா என்ன?”
அவள் கூறியதை கற்பனை செய்து பார்த்தவன், சத்தமாக சிரிக்க தொடங்கி விட்டான்.
“மதுரா மதுரா உன்னால் மட்டும் தான், இப்படி எல்லாம் யோசிக்க முடியும்.
எப்போதும் இளவரசனுடன் இருக்கும் எனக்கு, போர் பயிற்சி முக்கியம் அல்லவா, பிறகு எப்படி ஆபத்து வந்தால் எதிரிகளை தாக்கி அழிப்பது.”
“ஏன், உன் இளவரசனுக்கு சண்டை போட கூட தெரியாதா?”
“தெரியும் தான், ஒருவேளை என்னை தாக்க வந்தால், எதிர்த்து போரிட எனக்கு பயிற்சி வேண்டுமல்லவா.”
“உன் தந்தை ஒரு போர் வீரர் என்று தானே கூறினாய், அவரிடம் நீ பயிற்சி எடுத்துக் கொள்ளலாமே?”
“முறையான பயிற்சியை குருகுலத்தில் தான் கற்றுக் கொடுப்பார்கள்.”
“என்னவோ போ, நான் வில் வித்தையை என் அன்னையிடம் இருந்து தான் கற்றுக் கொள்கிறேன்.”
“ஒரு சில வருடங்கள் தான், பயிற்சி முடிந்ததும் உன்னை காண ஓடி வந்து விடுகிறேன், என்னை நம்பு மதுரா.”
“போ தீரா, இதைப்போலத் தான் அன்றும், என்னை தினமும் காண வருகிறேன் என்று வாக்களித்தாய். இப்போது… இந்த வாக்குறுதி, இது எத்தனை நாளைக்கு?
இன்று அரசர் மகனுக்காக என்னை விட்டு போகிறேன் என்கிறாய், நாளை அரசர் மகளுக்காகவா? உன்னை நான் நம்பமாட்டேன் தீரா. நீ செல்லும் இடத்தில் யாராவது புதிதாக உன்னுடன் விளையாட வந்தால், நீ என்னை மறந்து விடுவாய். உன்னை காணாமல் நான் எப்படி இருப்பேன்.”
அவள் அவன் மீது கோபம் கொண்டு, முகத்தினை திருப்பிக் கொள்ள,
“மதுரா என்னை பார், என்னை உனக்கு அவ்வளவு பிடிக்குமா?”
“ம்ம்ம் ரொம்ப.”
இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு அவள் கூற,
“உன் அன்னை என்னுடன் பேச வேண்டாம் என்று கூறினால், என்ன செய்வாய்?”
“ம்ம்ம் என் அன்னையின் பேச்சை மீற முடியாதே?”
மித்ரன் ஒரு முடிவுடன் மதுராவை அழைத்து கொண்டு, தீர்த்த குளத்தின் வழியே கொற்றவை தேவியின் குகை கோயிலுக்கு சென்றான். மதுராவை விட்டுக் கொடுக்க அவன் தயாராக இல்லை.
அந்த தாயின் பாதம் தழுவி ஓடிக் கொண்டிருந்த நீரை, கைகளில் எடுத்தவன்,
“இந்த கொற்றவை தாய் சாட்சியாக சொல்கிறேன், இந்த ஜென்மம் மட்டும் அல்ல, இனி எந்த ஜென்மம் எடுத்தாலும், உன்னை விட்டு நீங்க மாட்டேன், என் உயிர் விடும் காலம் வரை, உன்னோடு தான் இருப்பேன் இது சத்தியம். அந்த நீரை அவள் கைகளில் கொடுத்தவன், அங்கிருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் இட்டான்.”
அவன் அன்னை ஒரு முறை கந்தர்வமணம் (திருமணம்) பற்றி கூறி இருந்தார். அதைத்தான் செய்து கொண்டிருந்தான்.
(எந்த ஜென்மம் எடுத்தாலும் மணப்பெணுக்கே தெரியாமல், அவளை திருமணம் செய்து கொள்ளவதையே வழக்கமாக வைத்திருப்பான் போல!!!)
“அதுதான் நான் உனக்கு சத்தியமே செய்து கொடுத்து விட்டேனே. இனியாவது என்னை சிரித்துக் கொண்டே, வாழ்த்தி வழி அனுப்பி வைப்பாயா?”
மதுராவின் குலத்தில், ஆண்கள் வேட்டைக்கு கிளம்பும்போதோ, எங்காவது வெளியூர் செல்லும் போதோ பெண்கள், அவர்களுக்கு மாலை அணிவித்து திலகம் இட்டு அனுப்பி வைப்பதை பார்த்திருக்கிறாள்.
அதையே அவளும் மித்ரனுக்கு செய்தாள். அங்கிருந்த மலர்களை தொடுத்து அவனுக்கு அணிவித்தவள், வெற்றி திலகத்தை அவன் நெற்றியிலிட்டாள்.
ஆனால் அவள் அறியாத ஒன்று, இந்த சம்பிரதாயங்கள் எல்லாம், மனைவி தன் கணவனுக்கு செய்வது என்று.
ஒரு வழியாக அவளிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு, அரண்மனைக்கு வந்து சேர்ந்தவன், தன் நண்பர்களிடம் அவர்களின் அபிப்பிராயத்தை பற்றி கேட்க மறக்கவில்லை.
“என்னடா உளறல் இது? யாருக்காவது குருகுல பயிற்சி பிடிக்காமல் போகுமா? நாளை அதிகாலையிலேயே நாம் குருகுலத்தில் இருந்தாக வேண்டும். இப்போது வந்து இப்படி ஏதேதோ பேசி கொண்டிருக்கிறாய்.
ஏரிக்கரை பக்கம் அதிகமாக சுத்தாதே என்று சொன்னால் கேட்கிறாயா? என் அன்னை கூட கூறியுள்ளார், அங்கு மோகினி பிசாசு நடமாட்டம் அதிகமாக உள்ளதாம்.”
“அரண்மனைக்குள் இருக்கும் உன் தங்கைக்கு, ஏரிகரை மோகினியே தேவலாம் என்று நினைத்து விட்டான் போல, அதனால் தான் எந்நேரமும் ஏரிக்கரையையே சுற்றி கொண்டிருக்கிறான்.”
“அவளை இழுக்காமல் உனக்கு நாளே முடிவடையாதாடா?”
“உன் தங்கை தனியாக சுற்றினால், நான் ஏனடா அவளை பிடித்து இழுக்க போகிறேன். எந்நேரமும் என் மாமன் மகளையும் அல்லவா, சேர்த்துக் கொண்டு சுற்றித் திரிகிறாள். நாளை குருகுலத்திற்கு சென்ற பிறகு எத்தனை வருடங்கள் கழித்து இனி அவளை காணப்போகிறேனோ தெரியவில்லை? கடைசியாக ஒரு முறை பார்த்து விடலாம் என்று போனால் விடுகிறாளா உன் தங்கை.”
பிரதீபன் தலையில் அடித்துக் கொண்டான். அடுத்த நாள் நண்பர்கள் மூவரும் குருகுலத்திற்கு கிளம்ப, மோகனாவை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.
மித்ரனின் நிழலாக என்றும் அவன் பின்னே சுற்றிக் கொண்டிருப்பவள், பல வருடங்கள் அவனை விட்டு, பிரிந்திருக்க வேண்டும் என்று கூறினால், சும்மா இருப்பாளா என்ன? அழுது பெரிய ஆர்ப்பாட்டமே செய்து விட்டாள்.
அவளை ஒரு வழியாக சமாதானப்படுத்தி, அரசர் இவர்களை குருகுலத்திற்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்தார்.
விஜய பூபதி தன்னால் முடிந்த அளவு பிரச்சனைகளை, மகிழபுரிக்கு கொடுத்துக் கொண்டே இருந்தான். மகிழபுரிக்கு கீழ் இருக்கும் சிற்றரசர்களை குழப்பி, அடிக்கடி பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தான்.
பார்த்திபேந்திரருற்கு தெரியாமல் அண்டை தேச மன்னர்களிடம் ஆதரவு திரட்டி கொண்டிருந்தான்.
வருடங்கள் பல உருண்டோடின, நண்பர்கள் குருகுல வாசம் முடிந்து வரும் நாளும் வந்தது.
அரசர் தன் பரிவாரங்களோடு அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்தார்.
மித்ரன் மகிழபுரி ராஜ்ஜியம் திரும்பியதும், முதல் வேலையாக மதுராவை எப்படியாவது சந்தித்தாக வேண்டும் என்று நினைத்தான்.
அரண்மனையில் இருந்து எப்படி வெளியேறுவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது தான், தமது பரிவாரங்கள் அனைத்தும் அரண்மனையை நோக்கி செல்லாமல் காட்டை நோக்கி செல்வதை கவனித்தான்.
அருகில் வந்து கொண்டிருந்த வீரர்களிடம் விசாரிக்க, கொற்றவை தேவி கோயிலில் விசேஷ பூஜை ஏற்பாடாகி உள்ளதால், கோயிலுக்கு போய்க் கொண்டிருப்பதாக கூறினார்கள்.
அவன் உள்ளம் குதூகளிக்க தொடங்கியது. எப்படியும் மதுராவின் அன்னை, அரசு குடும்பத்தாரின் வருகையால், அவளை குகை கோயிலுக்கு அழைத்து சென்று விட்டு வந்திருப்பார். யாருக்கும் தெரியாமல், எப்படியாவது தீர்த்து குளத்தின் வழியே சென்று அவளை பார்த்து வரவேண்டும் என்று முடிவெடுத்தான்.
ஆனால் அவன் செல்ல ராட்சசி, அவள் அன்னையின் பேச்சு கேட்காமல், தனிமையை வெறுத்து, வெளியே சுற்றுவாள் என்பதை, ஏனோ மறந்து போனான்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தெரியாம கல்யாணம் மட்டுமில்ல நல்லா பொய்யும் பேசுவான் போல 😜😜😜 வேந்தன்
🤣🤣🤣🤣