Loading

மதுவிடம்  விளக்கேற்ற சொல்லிவிட்டு, வீட்டு பெண்கள் அனைவரும், வரிசையாக வந்து அவள் நெற்றியில் திலகமிட்டனர். பிறகு பெரியோர் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குமாறு கூறினர்.

கடைசியாக வடிவுபாட்டி தன் கரங்களால், ஜொலித்துக் கொண்டிருக்கும் அப்பெட்டியை எடுத்து, இதை பெற்றுக் கொள்ளுமாறு மதுவினை நோக்கி நீட்டினார்.

“மதும்மா இந்த பெட்டிய இவ்வளவு நாளும் என் பாதுகாப்பில் வைச்சிருந்தேன். இனி இது உன்னோட பொறுப்பு.

  என்னம்மா பார்க்கற, இது நம்ம  பிறந்த வீட்டிலிருந்து வாக்கப்பட்டு, இந்த குடும்பத்துக்குள் வர மருமகளுக்காக,  நம்ம புகுந்த வீட்ல கொடுக்கிற ஒரு பொக்கிஷம்னே சொல்லலாம். இதை பாதுகாப்பா பாத்துக்க வேண்டியது, இனி உன்னுடைய பொறுப்பு.”

மது புரியாமல் திரும்பி வேந்தனை பார்க்க, அவன் கண்களால் வாங்கிக்கொள் என்று சைகை செய்ததும், இவள் அதனை வாங்கிக் கொண்டாள்.

அவள் திருக்கரம் பட்டதும் பெட்டியானது உடனே திறந்து கொண்டது. இதை அங்குள்ளோர் யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் தலைமுறை தலைமுறையாக திறக்கப்படாமல் இருக்கும் பெட்டி, இப்போது திறந்து விட்டது என்றால் குலதேவி தன் இல்லம் திரும்பி விட்டார் என்று தானே அர்த்தம்.

   குலதேவி வருவாள் என்று கூறியதோடு, மோகினி பள்ளத்தில் இருக்கும் அந்த மாயக்கெட்ட சக்தியும் உயிர்த்தெழும் என்பது, இவர்களின் முன்னோர் வாக்கு. அதனால் அனைவருக்கும் ஒருவித அச்சம் தோன்றியது.

மது இங்கு பெட்டியை தன் கரங்களில் வாங்கிக் கொண்ட அதே நேரம், அங்கு குருந்த மரத்தடியில் பூஜைகள் ஆரம்பமானது.

   மது தன் கையில் இருந்து பெட்டியை, வடிவுப்பாட்டியிடமே திருப்பிக் கொடுத்து விட்டாள்.

  “இப்போதைக்கு இது உங்க கிட்டயே இருக்கட்டும் பாட்டி, இந்த வீட்டு மருமகளுக்கான நேரம் வரும்போது, இது கைமாறுனா போதும், அதுவரைக்கும் நீங்களே வெச்சிருங்க.”

குடும்பத்தார் இவள் என்ன கூற வருகிறாள் என்று புரியாமல் விழிக்க, மல்லிகா தான் முதலில் சுதாரித்து,

  “கவி, அண்ணி டயர்டா இருப்பாங்க, நீ அவங்களை அண்ணனோட ரூமுக்கு கூட்டிட்டு போம்மா.”

  வேந்தன் தனது பாட்டியிடம் இருந்து அப்பெட்டியை பெற்றுக் கொண்டவன்,

  “அது ஆத்தா…வீட்ல பெரியவங்க எல்லாம் இத்தனை பேர் இருக்கும் போது, எப்படி இந்த பொறுப்பை தான் ஏத்துக்கிறதுன்னு தான், உங்ககிட்டயே இதை கொடுத்துட்டு போயிட்டா. அவளுக்கு இத பத்தி தெளிவா தெரியாது இல்லையா, விடுங்க நான் இத பத்தி சொல்லி அவ கையில இதை கொடுத்துடறேன். இல்லயில்ல கையோட இந்த வளையலை போட்டே விட்டுடுறேன் போதுமா.”

   அவன் பெட்டியை தூக்கிக் கொண்டு மேலே செல்ல, மூர்த்தி ராகுலுடன் வீட்டினுள் நுழைந்தான்.

மூர்த்தி ஐயாவின் வீட்டில் எளிமையாக ஊர் மக்களுக்கு, கல்யாண விருந்து வைப்பதற்காக ஏற்பாடாகி இருந்தது. அது சம்பந்தமாக பொருட்களை வாங்கிக் கொண்டு, மூர்த்தி வந்து கொண்டிருக்கும் போது, ராகுல் நடுரோட்டில் அடிபட்டு விழுந்து கிடப்பதை கண்டான்.

அவனை எழுப்பி, என்ன ஏது என்று விசாரிக்க, அவன் கூறிய செய்திகளை கேட்டு, அதிர்ந்து போனான். உடனே அவனை அழைத்துக் கொண்டு மூர்த்தி தாத்தாவின் வீட்டை நோக்கி சென்றான்.

       ராகுல் நிரஞ்சனாவை காப்பாற்றியதையும், அவளை இங்கு அழைத்துக் கொண்டு வரும் போது ஏற்பட்ட இடர்களை பற்றியும், குடும்பத்தாரிடம் எடுத்துக் கூறினான். அதை கேட்டு ஆண்கள் அனைவரும் நிரஞ்சனாவே தேடிக் கிளம்ப, பெண்கள் தமது வீட்டுப் பெண்ணை காப்பாற்றுமாறு, பூஜை அறையினை தஞ்சம் புகுந்தனர்.

   கவி மதுவை, வேந்தனின் அறையில் சென்று விட்டுவிட்டு, கீழே வந்து விட்டாள். சாதாரண நேரமாக இருந்திருந்தால் மது இந்நேரம் கவியுடன் பேச்சு கொடுத்து, தோழியாகி இருப்பாள்.

    ஆனால் அவளே, கடந்த இரண்டு நாட்களாக, நடந்த சம்பவங்களின் பாதிப்பால் மௌன அவதாரம் எடுத்து விட்டாளே.

    வேந்தன் அறையினுள் நுழையும் போது, மது ஜன்னல் கம்பிகளை பிடித்தவாறு, வெளியே பார்வையால் வெறித்துக் கொண்டிருந்தாள்.

அரவம் கேட்டு மது திரும்பிப் பார்க்க, வேந்தன் கைகளில் உள்ள பெட்டியை கட்டிலின் மீது வைத்துக் கொண்டிருந்தான்.

“என்ன மிஸ்ஸஸ் மதுரம், கல்யாணம் ஆகி கிடைக்கிற ஃபர்ஸ்ட் கிப்ட் இது, இதை போய் இப்படி வேண்டாமுன்னு சொல்லிட்டு வந்துட்டீங்களே.”

  ஆஹா என்ன இது, அனல்  பார்வையால்ல இருக்கு. வேந்தா சமாளி விட்டுடாதே,

  “சரி உங்களுக்கு வேண்டாம்னா அதை வாங்கி, என் கையிலயாவது கொடுக்கலாம்ல. எனக்கும் இப்பத் தானே கல்யாணம் ஆகிருக்கு.”

  “கிப்ட் தானே? இருங்க குடுக்குறேன்.”

   மது தனது பையில் இருந்து ஒரு கவரை எடுத்து, வேந்தனது கைகளில் வைத்தாள்.

  அதைப் பிரித்துப் பார்த்த வேந்தனுக்கு முகத்தில் ஈயாடவில்லை.

  “கிப்ட் கேட்டீங்களே, இது தான் என்னால முடிஞ்ச, உங்களுக்கான கிப்ட். மியூச்சுவல் டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணி இருக்கேன். நான் ஆல்ரெடி இதுல சைன் பண்ணிட்டேன். நீங்களும் சைன் பண்ணா இதை சப்மிட் பண்ணிடலாம்.

    என் குடும்பத்தோட கட்டாயத்தால தானே, நீங்க என் கழுத்துல தாலி கட்ட வேண்டியதா போச்சு. பெரியவங்க சொல்லை மீற முடியாமல் தானே, நீங்க இதுக்கு சம்மதிச்சீங்க. எனக்காக நீங்க ஏன்  உங்க சந்தோஷத்தை விட்டுக் கொடுக்கணும். அதனால தான் இதுக்கு ஏற்பாடு பண்ணினேன்.

     என்ன மிஸ்டர் எம்டீ சார், என் கிப்ட் உங்களுக்கு பிடிச்சிருக்கா?”

   வேந்தன் தொண்டையை செறுமிக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

“வாவ் எனக்காக நீ இப்படி ஒரு கிப்ட் கொடுப்பன்னு, நான் சத்தியமா எதிர்பார்க்கவே இல்லை. நீ கொடுத்துட்ட, உனக்கு நான் கொடுக்க வேண்டாம்.”

வேந்தன் தனது பாக்கெட்டில் கைவிட்டு பதக்கம் வைத்த ஒரு செயினை எடுத்தான்.

     “இதுதான் நான் உனக்காக குடுக்கற கிப்ட்.”

   அது மது கனவில் பார்த்த அதே செயின். வேந்தன் அதை தன் கரங்களால் அவள் கழுத்தில் அணிவிக்கும் போது, மது தன்னை மறந்து கண்களில் நீர் சூழ வேந்தனை பார்த்து தீரா என்று அழைத்தால், மதுவிற்கு திடீரென்று தனது கனவில் தோன்றிய, அந்த வாளை வீசிக் கொண்டு வந்த உருவம் நினைவுக்கு வர, அவனுக்கு பின்னே ஜன்னலின் வழியே நோக்கினாள்.

அன்று கண்ட அந்த சுந்தர முகம் இன்று கருப்பு புகை சூழ, கண்களில் நெருப்பு போன்று ஒளி வீச, விகார தோற்றத்துடன் நாக்கு ஐந்து அடிக்கு கீழே சுழற்றிக் கொண்டு தொங்க, இவளை வெறித்துக் கொண்டிருப்பதை கண்டு, மது மயங்கிச் சரிந்தாள்.

   குருந்த மரத்தடியினில் மண்ணினை தோண்ட ஆரம்பித்ததும், பலமான சூறை காற்று வீச ஆரம்பித்தது.

இரண்டு மூன்று முறை மண்ணை கொத்தி எடுத்து தோண்ட ஆரம்பித்ததும், மோகினி பள்ளத்தை சுற்றி இருந்த வேர்கள் கடகடவென்று ஆட ஆரம்பித்தது.

அங்கிருந்த மக்கள் பயந்து போய் மரத்தை விட்டு தள்ளி ஒதுங்கி நிற்க, ஒரு கட்டத்துக்கு மேல் மோகினி பள்ளத்தை சுற்றி இருந்த வேர்கள், பிய்த்துக் கொண்டு மரத்தின் வேரோடு, மூன்று நான்கு அடி தூரம் மேலே பறந்து போய், தள்ளி மண்ணில் விழுந்தது.

மோகினி பள்ளத்தை மூடியிருந்த அந்த வேர்கள் அகன்றதும், கரும்புகை ஒன்று பள்ளத்தினுள் இருந்து சூறாவளியினோடே உயர எழுந்தது.

  அதனைக் கண்டு மக்கள் அனைவரும் திசைகொருவராக சிதறி ஓட, அந்த கரும்புகை, தனது மனம் கவர்ந்த மன்னவனை காண, உயர பறந்து சென்றது.

பல நூற்றாண்டுகள் கடந்த பின்னும், காதல் கொண்ட மனம், அவனை தான் முதலில் காண ஏங்கியது. ஆசையோடு அவனைக் காண வந்த அந்தக் கரும்புகை, தன்னுடைய இந்த நிலைக்கு காரணமானவளை, அவனின் மனைவியாக கண்ட போது, அதற்கு அவளை கொன்று போடும் அளவுக்கு வெறியேறியது.

  கண்கள் ரத்தமென மின்ன, நான்கு அடிக்கு கீழே தொங்கும் நாக்கை சுழற்றி கொண்டே, அவளை நெருங்க தொடங்கிய போது, சில மந்திர உச்சாடனங்கள் அந்த கரும்புகையை எங்கோ இழுக்க தொடங்கியது.

தனது எதிரி கைக்கெட்டிய தூரத்தில் இருந்தும், அவளை ஒன்றும் செய்யவிடாமல், தன்னை இழுக்கும் இந்த மந்திர உச்சாடத்தை உபயோகிப்பவனை நோக்கி, அதன் கோபம் பல மடங்காக திரும்பியது. அதே கோபத்துடன் அந்த மந்திர உச்சாடனத்தை தேடி சென்றது.

  அமைச்சரின் குருஜி தான் இந்த மந்திரத்தை உபயோகிக்க சொல்லி கொண்டிருந்தார். நிரஞ்சனா கிடைத்து விட்டதாக அமைச்சரின் ஆட்கள் கூற, உடனே வேலையை தொடங்கினார் குருஜி. அங்குள்ள தன் சிஷ்யகோடிகளை நிரஞ்சனா இருக்கும் இடத்திற்கு அனுப்பி, பூஜையை தொடங்கினார்.

மது தன்னை தீரா என்று அழைத்ததால், அவளுக்கு முன் ஜென்ம நினைவு வந்ததாக எண்ணிய வேந்தன், அவளை தூக்கி கட்டிலில் படுக்க வைத்து, அந்த பெட்டியில் இருந்த நீல நிற கற்கள் மின்னும் தங்க வளையல்களை அவள் கைகளில் அணிவித்தான்.

  அவளது நெற்றியில் ஒரு முத்தம் பதித்துவிட்டு, அந்த பெட்டியில் இருந்த சிறிய கத்தியை வெளியே எடுத்தவன், அதன் கைப்பிடியை பிடித்து திருக அது வாளாக உருமாறி ஒளி வீசியது. அந்த நேரம் பார்த்து, கீழே ஏதோ சத்தம் கேட்க, மீண்டும் அதை சிறிய கத்தியாக மாற்றி, தனது உடைக்குள் வைத்துக் கொண்டு, அவ்வறையை விட்டு கீழே இறங்கினான்.

அங்கு ராகுலை கண்டதும் இவன் என்ன ஏது என்று விசாரிக்க, ராகுல் கூறியவற்றை கேட்டு, கோபம் கொண்ட வேந்தன் மூர்த்தியிடம், மதுவையும் வீட்டில் உள்ளவர்களையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, ராகுலுடன் நிரஞ்சனாவை தேடி வெளியே சென்றான்.

கட்டிலின் மீது படுத்திருந்த மதுவிற்கு நினைவுகள் கால சக்கரத்தில் சுற்றி, முன் ஜென்மத்தை நோக்கி பயணித்தது.

இதோ நாமும் கிளம்புவோம் நடந்த வரலாறுகளை திரும்பவும் கண்டு வர,

  மகிழபுரி பேரினைப் போலவே சந்தோஷங்களையும் மகிழ்ச்சியையும், ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்ட வளமான ராஜ்யம். கொற்றவை தேவியின் அருளால் போர் தொடுத்த அத்தனை இடங்களிலும், வெற்றி கொடி நாட்டிய நாடு.

  அதை ஆளும் பார்த்திபேந்திரர் நீதிக்கும் நேர்மைக்கும் பெயர் போன பேரரசர். அனாவசியமாக நடக்கும் போரினை விரும்பாதவர்.

    ஆனால் தவறு என்று பட்டால், தன் சொந்தமே ஆனாலும், அதை தட்டிக் கேட்க துணிபவர். அவரின் தர்மபத்தினி தாரகை தேவி. தம் மன்னவரைப் போலவே தூய உள்ளம் கொண்டவர்.

   தாய் தந்தையர் இல்லாத தமது நாத்தனார்களை, தனது பிள்ளைகள் போல பாவித்து அவர்களின் மனம் விரும்பிய மணாளர்களையே, தம் மன்னவரின் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்தார்.

  தனது மூத்த நாத்தனாருக்கு பக்கத்து ராஜ்யமான ரத்னாபுரி இளவரசரையும், தனது இளைய நாத்தனாருக்கு தமது நாட்டின் படைத்தளபதியையும் திருமணம் செய்து வைத்தார்.

இங்குதான் தான் தவறிவிட்டோமோ என்று மனம் வெதும்பி, அரச தர்பாரில் நடக்கும் காட்சிகளை, ஆறு மாத கைக்குழந்தையுடனும், அருகிலே தனது எட்டு வயது மகன் மித்ரதேவேந்திரனுடன், பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அவர் அருகிலேயே படை தளபதியின் மனைவியும், அரசரின் இரண்டாவது தங்கையுமான ஆதிரை, தன் ஐந்து வயது குழந்தையான ரஞ்சனியுடன் மேல்மாடத்தில் நின்று கொண்டிருந்தார்.

  அரசு தர்பாரில் குற்றவாளி கூண்டில் ரத்னபுரியின் இளவரசர் விஜய பூபதி, இரண்டு உயிர்களைப் பறித்த பின்பும், சிறிதும் குற்ற உணர்ச்சி இன்றி, உன்னால் முடிந்ததை பார் என்று ஆணவமாக நின்று கொண்டிருந்தார்.

அவருக்கு இடப்பக்கத்தில் ஒரு கையில் ஐந்து வயது குழந்தையான மோகனசுந்தரியை தூக்கிக்கொண்டும், இன்னொரு கையில் எட்டு வயதான தனது மகன் பிரதீபனை பிடித்துக் கொண்டும், கூனிக்குறுகி நின்று இருந்தார், அரசரின் மூத்த தங்கையான மேனகா தேவி.

   பிரதீபனுக்கு தன் தந்தை ஏதோ மன்னிக்க முடியாத குற்றம் செய்துள்ளார் என்பது புரிந்தது. எனவே அவன் அமைதியாக நின்று கொண்டான்.

   ஆனால் தந்தையின் மீது அளவு கடந்த பாசத்தை வைத்துள்ள மோகனாவிற்க்கு, தன் தந்தையை இப்படி குற்றவாளி போல நிற்க வைத்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் இந்த அரசு சபையில் உள்ளவர்களை முற்றிலுமாக வெறுத்தாள்.

அவருக்கு எதிர்ப்புறத்தில், மலைவாழ் மக்கள் குருவாக வணங்கும், ஏந்திழை அம்மையார், தனது கையில் இரண்டு வயது பெண் குழந்தையை சுமந்து கொண்டு, ருத்ர காளியாக நின்று கொண்டிருந்தார்.

   அந்தப் பிஞ்சு குழந்தை ஏந்திழை அம்மையாரிடம், தன் தாயைத் தேடிக் கொண்டிருந்தது. சுற்றி உள்ள அறிமுகம் இல்லாத புதிய முகங்களால் சற்று மிரண்டு போய், அம்மையாரின் தோள்களில் அழுகையினோடு சாய்ந்து கொண்டிருந்தது.

தாயின் அருகில் நின்று கொண்டிருந்த மித்ரதேவேந்திரனுக்கு அந்த பிஞ்சுக் குழந்தையின் நீல கண்களில் தெரிந்த, பயத்தை காணும் போது, அனைத்து ஆறுதல்படுத்த வேண்டும் போல தோன்றியது.

  அரசர் பார்த்திபேந்திரர், விஜய பூபதியை நோக்கி, பேசத் தொடங்கினார்.
 
   “விஜயா உன் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு நீ என்ன பதில் கூற போகிறாய்?”

  “நான் என்ன குற்றம் புரிந்தேன்? கொற்றவை தேவியின் சிலையை காட்டுமாறு, அந்த காட்டுவாசிகளிடம் எவ்வளவோ முறை எடுத்துக் கூறினேன். ஆனால் அவர்கள் அதை காது கொடுத்து  கேட்பதற்கு கூட தயாராக இல்லை. கடவுள் என்ன அவர்களுக்கு மட்டும் சொந்தமானவரா? வந்த கோபத்திற்கு அவர்கள் இருவரின் சிரத்தையும் கொய்தேன்.”

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அப்பாடா முன்ஜென்ம கதைக்கு வந்துட்டோம் .. கதாபாத்திர அறிமுகமெல்லாம் பயங்கரம் .. பெயரெல்லாம் அவ்வளவு அழகா இருக்கு ..