Loading

        மாறனுக்கு அவர்களை கண்டு கோபம் வந்தாலும், தற்போது சூழ்நிலை சரியில்லை என்பதை உணர்ந்து, அங்கிருந்து உடனே வெளியேறி விட்டான்.

  உள்ளே வந்தவர்களை வரவேற்று அமர வைத்த மூர்த்தி தாத்தாவின் மகள்கள், அவர்களுக்கு குடிப்பதற்கு ஏதாவது கொண்டு வர உள்ளே செல்லப் போக,

   “வேண்டாம்மா கொஞ்சம் இப்படி உட்காருங்க. ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.

    எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல. வேந்தனுக்கு திடீர்னு கல்யாணம் முடிஞ்சிடுச்சு மச்சான்.

  அவன் ஏற்கனவே ஒரு பொண்ண விரும்பி இருக்கான் போல இருக்கு, என்ன பிரச்சனைன்னு தெரியல எங்க யாருக்குமே அவங்க கல்யாணத்தை பத்தி தெரியப்படுத்தவே இல்ல.

     எங்களுக்கா ஒரு கட்டத்துல இது தெரிய வந்தது. அது தான் மாப்பிள்ளையும் பொண்ணையும், இன்னைக்கு ஊருக்கு கூட்டிட்டு வரப் போறோம்.

     மாப்ள நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க, இது நாங்களே எதிர்பார்க்காதது தான்.”

   வீட்டில் உள்ளவர்கள் அவர் கூறுவதை மட்டும் தான் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. ஏற்கனவே தெரிந்த விஷயம் தான் என்றாலும், கேட்கும் போது நிரஞ்சனாவை நினைத்து மனம் வருந்தினர்.

   “வேந்தன் கல்யாணம் செஞ்சிருக்க பொண்ணு யாருன்னா…?”

  “என் பையன் சிவராமனோட பொண்ணு சரிங்களா மாப்ள. என் பொண்டாட்டி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான், போன் பண்ணி எல்லா விஷயத்தையும் சொன்னா.

   இது எங்க வீட்டு கல்யாணமும் தான். அவளும் என் பேத்தி தான், கண்டிப்பா பொண்ணு வீட்டுக்காரங்களா நாங்க  மணமக்களை வரவேற்க, உங்க வீட்டுக்கு வர்றோம்.”

  வேலப்பன் ஐயா தமது புதல்வர்களை திரும்பிப் பார்க்க, அவர்களும் இதை ஆமோதித்தனர்.

  வந்த காரியம் இவ்வளவு சுலபமாக முடியும் என்று, அவர்கள் நினைக்கவே இல்லை.

    எப்படி சமாளிக்க போகின்றோமோ என்று பதட்டத்துடன் தான், வேலப்பன் ஐயா வீட்டிற்கு மூவரும் வந்தனர். தீபனை தாத்தாவுடன் போகச் சொன்னது வேந்தன் தான்.

    மாறன் ஏதாவது பிரச்சனை செய்வான் என்று அவன் உறுதியாக நம்பினான். வந்த வேலை சுபமாக முடிந்ததை எண்ணி மகிழ்ந்தனர்.

  வேலை அதிகம் இருப்பதாக கூறி அவர்கள் உடனே கிளம்ப, வேலப்பன் ஐயா தானும் உடன் வருவதாக கூறி, அவர்களுடன் கிளம்பி விட்டார்.

    ராகுல் ஒரு வழியாக மேலூரை நெருங்கிக் கொண்டிருந்தான். நிரஞ்சனா, தன் கூடு கண்ட பறவையாக நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

    சென்று கொண்டிருந்த பாதை இரு வழி பாதையாக பிரிந்தது. எந்த வழியில் செல்ல வேண்டும் என்று அவளை கேட்க எண்ணி திரும்பியவன், அவளின் நிம்மதியான உறக்கத்தை பார்த்து, அதை கலைக்க விரும்பாமல், வெளியே யாரிடமாவது கேட்டுக் கொள்ளலாம் என்று, காரை விட்டு இறங்கினான்.

  சற்று தூரம் தள்ளி ஒரு டீக்கடை இருக்க, அதை நெருங்கி சென்றான். விடியும் நேரமானதால் அப்போதுதான் கடைக்காரர், கடையில் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

   அந்தக் கடைக்கு சற்று தள்ளி ஒரு மினி வேனில், ஐந்தாறு பேர் கையில் ஏதோ போட்டோவுடன், வருவோர் போவோரை எல்லாம் கண்காணித்து கொண்டிருந்தனர்.

  அவர்களில் ஒருவனை ராகுலுக்கு எங்கோ பார்த்தது போன்று ஒரு ஞாபகம். நன்கு அவன் முகத்தை உற்றுப் பார்த்த போது தான், அவனுக்கு நினைவு வந்தது. நேற்று இரவு நிரஞ்சனாவை தேடி வந்தவர்களில் இவனும் ஒருவன்.

    அப்படி என்றால் அவர்கள் கண்காணித்துக் கொண்டிருப்பது, நிரஞ்சனாவை பிடிப்பதற்காக தானா?

   உடனே வந்த வேகத்தில் காரினை நோக்கி சென்றவன், காரில் அமர்ந்து அவசரமாக காரினை திருப்பினான்.

  கார் கதவு அறைந்து மூடும் சத்தம் கேட்டு எழுந்த நிரஞ்சனா, தாங்கள் இருக்கும் இடத்தை பார்த்து புன்னகையுடன் அவனை நோக்கி திரும்பினாள். அதற்குள் ராகுல் வண்டியை திருப்ப,

   “என்ன பண்றீங்க? நீங்க வந்த பாதை கரெக்ட் தான். எதுக்காக காரை திருப்புறீங்க? இப்படியே போனா தான் எங்க ஊருக்கு போக முடியும்.”

  “அப்படியே போனா உங்க ஊருக்கு இல்ல, எமலோகத்துக்கு தான் போகணும். என்ன முழிக்கிறீங்க, கொஞ்சம் எட்டி பாருங்க, உங்கள துரத்திட்டு வந்த அந்த மந்திரவாதிங்க, ரோட்ட மரிச்சு நின்னு, உங்க போட்டோவை வச்சுக்கிட்டு, ஒவ்வொரு காரா கண்காணிச்சிட்டு இருக்கறாங்க.

    உங்க ஊருக்கு போக, வேற ஏதாச்சும் வழி இருக்கா?”

அவள் பயந்து விழிகளுடன் இல்லை என்று தலையை ஆட்ட,

  “பயப்படாதீங்க வேற ஏதாவது வழி இருக்கான்னு பார்க்கலாம். உங்க ஊருக்கு வெளியில, யாராவது உங்க  சொந்தக்காரங்க இருக்காங்களா? இல்லாட்டி தெரிஞ்சவங்க யாராவது? அவங்க வீடு இங்க வெளியே இருந்தா, அவங்க மூலமா உங்க வீட்டுக்கு கூப்பிட்டு பார்க்கலாமே?”

   “எங்க பக்கத்து ஊரான வேடந்தூர்ல எனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க. அந்த ஊருக்குள்ள போய்ட்டா நம்மள யாரும் எதுவும் செய்ய முடியாது. மூர்த்தி தாத்தா எல்லாத்தையும் பார்த்துப்பாரு, அங்க வேணும்னா போகலாம்.”

   ராகுலும் சரியென்று ரஞ்சியிடம் வழி கேட்டு கொண்டே, வேடந்தூரை நோக்கி வண்டியை திருப்பினான். ஆனால் அவர்கள் அறியவில்லை, அங்கு தான் அவர்களுக்கான பேராபத்து காத்திருக்கிறது என்று.

  வெற்றி காரினை ஓட்டிட அவன் பக்கத்தில் சந்துரு அமர்ந்திருந்தான். பாட்டிகள் இருவரும் கடைசி சீட்டில் உட்கார்ந்து விட, இரண்டுக்கும் நடுவில் உள்ள சீட்டில் மணமக்கள் இருவரும் அமர்ந்திருந்தனர்.

   “வெற்றி அப்படியே அந்த மெயின் ரோட்ல என்னை இறக்கி விட்டுடு. அங்கிருந்து நான் ஹாஸ்பிட்டல் போய்கிறேன்.”

    “ஏன்டா நீ ஊருக்கு வரலையா?”

   “இல்ல வேந்தா, அப்பா வேற வெளிநாடு போயிருக்காரு. வீட்ல அம்மாவும் தங்கச்சியும் மட்டும் தான் தனியா இருப்பாங்க. நான் அங்க வந்துட்டு உடனே திரும்பி வந்தாலுமே, லேட்டாயிடும். அதோட ஹாஸ்பிடல்லயும் ஏதாவது எமர்ஜென்சின்னா ஆள் வேணும் இல்ல.”

  இதனைக் கேட்ட மது உடனே சந்துருவைப் பார்த்து,

  “உங்க அப்பா வெளிநாடு போய் இருக்காரா? அவர் எப்ப போனாரு?”

    ஆஹா கல்யாணம் ஆன அன்னைக்கே, டைவர்ஸ் வாங்கி கொடுத்துடுவான் போல இருக்கே, என்று வேந்தன் மனதுக்குள் புலம்ப, அந்த நேரம் பார்த்து சரியாக வெற்றியின் கைப்பட்டு, காரில் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.

மாட்டிக்கிச்சே…

மாட்டிக்கிச்சே…

மாட்டிக்கிச்சே …

மாட்டிக்கிச்சே…

      சந்துரு பேச வரும் முன்பே, வேந்தன் மதுவிற்கு பதில் கூற தொடங்கினான்.

“அது ஏதோ அர்ஜென்ட் மீட்டிங்காம். அதுதான் அவர் நேத்து மதியம் அவசரமா கிளம்பி போனதா சொன்னான்.”

     சந்துரு திரு திருவென முழிக்க, வேந்தன் மதுவிற்கு தெரியாமல் முழிகளை உருட்டி, அவனை ஆம் என்று சொல்லுமாறு,  சைகையிலேயே மிரட்டி கொண்டிருந்தான்.

  சந்துரு எப்படி தலையை ஆட்டுகிறோம் என்பதே தெரியாமல், ஒருவாறு ஆட்டி வைக்க,

    “அவரை அங்க அப்படியே இருந்துக்க சொல்லுங்க, என் கண்ணுல மட்டும் அவர் மாட்டினாரு…அது அவருக்கும் நல்லதில்லை, உங்களுக்கும் ரொம்ப…நல்லதில்லை சொல்லிட்டேன்.”

பேச்சுவார்த்தை முடிந்ததற்கு சான்றாக மது ஜன்னலுக்கு வெளியே தனது பார்வையை திருப்ப, சந்துருவுக்கும் வெற்றிக்கும் புரிந்து விட்டது, இது வேந்தனது மற்றுமொரு திருவிளையாடல் என்று.

    சந்துரு கொலைவெறியுடன் வேந்தனை பார்த்து முறைக்க, அவன் தீவிரமாக வேடிக்கை பார்ப்பது போன்று ஜன்னலின் புறம் முகத்தை திருப்பி கொண்டான்.

  வேடந்தூரில் உள்ள ஊர் பெரியவர்கள் அனைவரும், மூர்த்தி ஐயாவின் வீட்டில் ஒன்றாக திரண்டு இருந்தனர். வேந்தனது திடீர் திருமணத்தை கேள்விப்பட்டு, ஊர் மக்களும் மணமக்களைக் காண அவர்கள் வீட்டிற்கு வர ஆரம்பித்தனர்.

   மூர்த்தி ஐயா அப்போது தான் காரில் வந்து இறங்கினார்.

    “வாங்க வாங்க, என்ன எல்லாரும் இங்க ஒண்ணா திரண்டு வந்திருக்கீங்க? குருந்த மரத்தடியில மண்ணெடுக்கறது இன்னைக்கு தானே? அங்க இல்லாம எல்லாரும் இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?”

  ” ஐயா உங்க வீட்டுல விசேஷத்தை வச்சிட்டு…,அதுவும் இல்லாம நீங்க இங்க இருக்கும்போது, நாங்க மட்டும் அங்க போய் செஞ்சா நல்லா இருக்காதுங்க. அதனாலதான் எல்லாரும் இங்க வந்துட்டோம்.”

  “அட என்னப்பா நீங்க? நமக்காக சாமிய காக்க வைக்கலாமா? நான் பொண்ணு மாப்பிள்ளை வந்ததும் நேரா அழைச்சிட்டு அங்க தான் வர போறேன். இதுக்கு மேலயும், நம்ம குல தேவியை காக்க வைக்க கூடாது. நீங்க எல்லாரும் போய் அங்க வேலையை பாருங்க. நான் கண்டிப்பா அவங்களோட அங்க வந்துடுறேன்.”

  பெரியவர் கூறியதும் மறுவார்த்தை ஏதும் இன்றி, அனைவரும் கலைந்து சென்றனர்.

  ராகுல் வேடந்தூரில் மூர்த்தி தாத்தாவின் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது, நிரஞ்சனா தனக்கு வாந்தி வருவதாக கூற, வண்டியை ஒரு மரத்தடியின் ஓரத்தில் நிறுத்தினான்.

   இரண்டு நாட்களாக சரியாக உறங்காததாலும், இரவு நேர பயணமும், நேற்று சாப்பிட்ட உணவும் ஒத்துக் கொள்ளாமல், அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது.

   கார் கதவினை திறந்து கொண்டு அவள் ஒரு புறம் அவசரமாக இறங்கிச் செல்ல, மறுபுறம் இருந்து தண்ணீர் பாட்டிலை தூக்கிக் கொண்டு, இறங்கி வந்தான் ராகுல்.

   அப்போது கொற்றவை தேவி கோவிலுக்கு பாதை அமைப்பதற்காக வந்திருந்த, அமைச்சரின் அடியாட்கள் ஊருக்குள் இருந்து வந்து கொண்டிருந்தனர்.

  அவர்கள் மூலமாகத் தான் நிரஞ்சனா, மருத்துவமனையில் இருந்து,   குருஜியிடம் கடத்திச் செல்லப்பட்டாள்.

  இங்கு திடீரென்று அவளைக் கண்டதும், அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

  “அண்ணே அங்க பாருங்க, அந்த பொண்ணு யாருன்னு தெரியுதா?”

   “என்னத்தடா பார்க்க சொல்ற, எந்த பொண்ணு?”

   “அதோ அந்த காருக்கு பின்னாடி பாருங்க, ஒரு பையன் கூட நிக்குதே, அது யாருன்னு தெரியுதா?”

    “டேய் இது அந்த மாறனோட தங்கச்சி தானே, நாம தானே அந்த புள்ளையை கடத்தி, குருஜி கிட்ட அனுப்பி வச்சோம். தப்பிச்சு வந்துருச்சு போலடா.”

“சரி இருங்க மெதுவா போய் பேச்சு கொடுத்து பார்ப்போம்.”

     நிரஞ்சனா ராகுல் கொடுத்த தண்ணீர் பாட்டிலில் இருந்த நீரால், முகத்தை கழுவி விட்டு நீரை அருந்தினாள்.

   “அட சின்னம்மா, நீங்க மாறன் ஐயாவோட தங்கச்சி தானே? எங்கம்மா போயிட்டீங்க இரண்டு நாளா? உங்களை காணமுன்னு, ஐயா ஊர் பூரா தேடிட்டு இருக்காரு? இவர் யாருங்கம்மா? உங்களுக்கு தெரிஞ்சவரா? இல்ல ஏதாவது உங்க கிட்ட பிரச்சனை பண்றாரா? தைரியமா சொல்லுங்கம்மா நம்ம பசங்கள வச்சு ஒரு வழி பண்ணிடுவோம்.”

   நிரஞ்சனாவிற்கு அவர்களைப் பார்த்ததாக கூட நினைவில்லை. இருந்தும் ராகுலை பற்றி அவர்கள் கேட்டதால்,

  “அதெல்லாம் எதுவும் இல்ல. இவர் எனக்கு தெரிஞ்சவர் தான்.”

  “என்னங்கம்மா நம்ம வீட்டுக்கு போகாம இந்த ஊருக்குள்ள வந்து இருக்கீங்க? சரி வாங்க நாங்க உங்களை ஐயா கிட்ட கூட்டிட்டு போறோம்.”

   ராகுலுக்கு இவர்களை பார்க்கும்போது நம்பிக்கையே வரவில்லை. அவர்கள் பேசும் வார்த்தை வேறாகவும் அவர்களின் கண்களில் தெரிந்த உணர்வு, வேறாகவும் தோன்றியது.

    “பரவால்லைங்க அதான் இவ்வளவு தூரம் வந்துட்டோமே, நானே அவங்கள வீட்ல விட்டுடுறேன்.”

      நிரஞ்சனாவும் அதையே ஆமோதிப்பதாக தலையாட்டினாள்.

   “தம்பி நீங்க வெளியூரு, ஊருக்குள்ள வயசு பொண்ணு ஒரு வயசு பையன கூட்டிட்டு வந்தா, என்ன பேசுவாங்கன்னு உங்களுக்கு தெரியாது. நீங்க கெளம்புங்க, நாங்க அவங்கள வீட்ல விட்டுடறோம்.”

“அவங்க எப்படி பேசினாலும், நான் அவங்க வீட்ல இருக்குறவங்கள சமாளிச்சுக்கிறேன். நீங்க கிளம்புங்க நிரஞ்சனா வண்டியில ஏறுங்க.”

“யோவ் சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு கூட்டிட்டு போற, எங்களை தாண்டி நீ போயிடுவியா? டேய் சின்னம்மாவை போய் கூட்டிட்டு வாங்கடா.”

  நிரஞ்சனா ராகுலின் கைகளை இறுக பற்றி கொண்டு, அவனுக்கு பின்னே ஒளிந்து கொண்டு நின்றாள். ஏனோ அவளுக்கும் இவர்கள் மீது நம்பிக்கை வரவில்லை.

  எதிரில் இருந்த ஆட்கள் ராகுலை தள்ளிக்விட்டு கொண்,டு நிரஞ்சனாவின் கையை பிடித்து இழுக்க, அங்கு ஒரே கைகலப்பானது.

  ராகுல் முடிந்த அளவு அவர்களிடம் இருந்து நிரஞ்சனாவை மீட்க போராடினான். ஆனால் ஒரு கட்டத்தில் அங்கிருந்தவர்களில் ஒருவன், கட்டையால் அவன் மண்டையில் அடிக்க, ஒரு நொடி நிதானத்தை இழந்தான் ராகுல். அப்போது அங்கிருந்தவர்கள் கீழே இருந்த மண்ணை அள்ளி, அவன் கண்களில் தூவி விட்டு, நிரஞ்சனாவை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு குறுக்குப் பாதையில் இறங்கினார்.

  மணமக்களது கார் மூர்த்தி தாத்தாவின் வீட்டின் முன் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய மதுவிற்கு, ஏனோ சொல்ல முடியாத ஒரு உணர்வு தோன்றியது.

   வீட்டு வாசலில் கல்யாணத்துக்கே உரிய வாழை மாவிலை தோரணங்களும், தென்னை ஓலை பந்தலும் போடப்பட்டிருந்தது.

    மணமக்களை வாசலில் நிற்கவைத்து ஆரத்தி கரைத்து சுற்றப்பட்டது.

  வீட்டினுள் நுழைந்தவர்களை, நேராக பூஜை அறைக்கு கூட்டிக் கொண்டு போயினர் வீட்டுப் பெண்கள்.

   மது பூஜை அறையில் நுழையும் போதே, அவள் உடலோடு சேர்த்து, அந்த பூஜையறையில் வைக்கப்பட்டிருந்த பெட்டியும் அதிர்ந்தது.

    அப்பெட்டியானது பொன்னொழி வீசி ஜொலிக்க தொடங்கியது.

    அதனைக் கண்டு வீட்டுப் பெரியவர்கள் அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து தான் நின்றனர்.

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. ஹையா எங்க மன்னவனோட ராணி வந்துட்டாங்க … அடப்பாவிகளா இதென்ன நிரஞ்சனா வை தூக்கிட்டு போயிட்டாங்க … போச்சு பேயா மாற போறா …