Loading

என்னதான் மனதிற்கு ஒப்பாத திருமண ஏற்பாடாக இருந்தாலும், வேந்தனின் அருகில் மணமேடையில் அமரும் போது, மனதில் தோன்றிய பூரிப்பை மதுவால் உணர முடிந்தது.

தாய் தந்தையின் அனுமதியோடு நடக்கும் திருமணமாக இருந்தாலும், ஏனோ இந்த சூழ்நிலை புதிதாகவே அவளுக்கு பட்டது.

வேந்தனின் கரங்களால் மாங்கல்யம்தனை சூடிக் கொள்ளும் போது, மனது முழுக்க ஒரு இதமான நிம்மதி பரவுவது போல, அவளுக்கு தோன்றியது.

   விழிகளில் திரண்ட இருத்துளி நீர், எதற்காக என்றே அவளுக்கே தெரியவில்லை.

கண்மூடி தன் மனதில் உண்டான உணர்வுகளில் லயித்திருந்தவள், வேந்தனது மதுரா என்ற அழைப்பில் தான் கண்களைத் திறந்தாள்.

வேந்தன் குங்குமத்தை எடுத்து மதுவின் நெற்றியில் வைக்கும் போது, ஒரு நொடி இருவரும் தங்களை மறந்து, முன் ஜென்ம நினைவுகளில் மூழ்கி போயினர்.

நான்கு கண்களும் காதலாகி தீண்டிக்கொண்ட, அந்த அழகான உணர்வுகளின் வெளிப்பாட்டை, கேமரா அழகாக பதிந்து கொண்டது.

மணமக்கள் இருவரும் மூலவர் சன்னதிக்கு சென்று, லிங்கத் திருமேனியரிடம் ஆசி பெற்று வந்தனர்.

   திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் இருவரும், நேராக மருத்துவமனைக்குத் தான் அழைத்து வரப் பட்டனர்.

    திருமணத்தின் போது மதுவின் தாய் தந்தையர் இருவருமே அவளுடன் இல்லை, கனியமுதன் மட்டுமே அங்கு இருந்தான். ஆகவே அவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காக, இங்கு அவர்களை அழைத்துக் கொண்டு வந்திருந்தனர்.

  திருமணம் முடிந்த கையோடு, வேந்தனின் அம்மாவும் பெரியம்மாவும் அவர்களின் கணவர்களோடு, மணமக்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை கவனிக்க, ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மூர்த்தி ஐயா வேலப்பன் ஐயாவின் குடும்பத்தாரிடம் பேசுவதற்காக, திருமணம் முடிந்ததும் நேராக அங்கு சென்றுள்ளார்.

பாட்டிமார்கள் இருவரும் மணமக்களோடு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். தீபனும் மூர்த்தியும் கூட ஊரில் ஏற்பாடுகளை கவனிக்கச் சென்று விட, வெற்றியும் சந்துருவும் தான் மணமக்களோடு சேர்ந்து வந்திருந்தனர்.

மதுவின் பெற்றோர் மருத்துவமனையில் உள்ளதால் திருமணம் முடிந்ததும், நடக்க வேண்டிய சடங்குகள் அனைத்தையும், மணமகன் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். எனவே நேராக மருத்துவமனையில் இருந்து வேடந்தூரை நோக்கி பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

மது மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து பாட்டிகள் சொல்வதை மட்டுமே, செய்து கொண்டிருந்தாள். அவர்கள் சொன்ன காரணத்திற்காக மட்டுமே, தமது பெற்றோர்களின் கால்களில் விழுந்து, ஆசீர்வாதம் பெற்றவள், பிறகு ஒதுங்கி நின்று கொண்டாள். ஒரு வார்த்தை கூட அவர்களிடம் பேசவில்லை.

அவளின் தாய் தந்தையர் அவளிடம் பேச முயற்சிக்க, இவள் ஒரு வார்த்தை கூட திரும்பப் பேசவும் இல்லை, அவர்கள் சொன்னதை கேட்டுக் கொண்டதாக, காட்டிக் கொள்ளவும் இல்லை.

நிலைமை மோசமாவதை உணர்ந்து வடிவுப்பாட்டி தான், நல்ல நேரம் போவதாக கூறி, மணமக்களை அங்கிருந்து வெளியே கூட்டி வந்தார்.

  லக்ஷ்மி அம்மாவின் அறையில் இருந்து வெளியே வரும்போது தான், வினு மருத்துவமனையினுள் நுழைந்து கொண்டிருந்தாள்.

   மது வினுவிடமிருந்து ஒரு கவரை வாங்கி, தான் அணிந்திருந்த அத்தனை நகைகளையும் கழட்டி அதில் வைத்து விட்டு, அதில் இருந்த கம்மலையும் கண்ணாடி வளையல்களையும் மட்டும் போட்டுக் கொண்டாள்.

  தான் கழட்டி வைத்த அத்தனை நகைகளையும், தன் அண்ணன் கைகளில் கொடுத்துவிட்டு, மருத்துவமனையில் இருந்து வெளியேறினாள்.

மது திடீரென்று இப்படி செய்ததும், அனைவரும் அதிர்ந்து அப்படியே நின்று விட, வினு மட்டும் மதுவின் பின்னால் சென்று கொண்டிருந்தாள்.

மது கொடுத்து விட்டுப் போன, நகைகளை கையில் வைத்திருந்த கனியமுதனுக்கு, கண்ணில் நீர் நிறைந்து போனது.

அந்த நகைகளை வடிவுபாட்டியின் கைகளில் கொடுத்தவன். வேந்தனைப் பார்த்து பேச தொடங்கினான்

“சின்ன பொண்ணுங்க அவ, ஏதாவது துடுக்குத்தனமா பேசிட்டா, மனசுல வச்சுக்காதீங்க. இப்படி அவளை தனியா அனுப்ப கூடிய சூழ்நிலை வரும்னு, நாங்க எதிர்பார்க்கவே இல்லை. எங்க வீட்டு இளவரசி அவ, பத்திரமா பாத்துக்கங்க வேந்தன்.”

   “முதல்ல கண்ணை தொடைங்க அமுதன். உங்க வீட்டில அவ இளவரசியா இருந்திருக்கலாம், ஆனா இனிமேல் எனக்கு அவ தான் மகாராணி, கண்டிப்பா அவளை நான் நல்லபடியா பார்த்துக்குவேன்.

  இப்ப கொஞ்சம் கோவத்துல இருக்கா, அதனால தான் இப்படி நடந்துக்கிட்டா. கண்டிப்பா கொஞ்ச நாளிலேயே இந்த கோபம் குறையும். நீங்க எதுவும் மனசுல வச்சுக்காதீங்க அமுதன். அத்தை, மாமாவை நல்லா பாத்துக்கோங்க, நாங்க போயிட்டு வரோம்.”

மதுவின் சம்பள பணம், எப்போதும் அவளது வங்கி கணக்கிலேயே தான் இருக்கும். அதை வைத்து நேற்று வெளியே சென்ற போது, தனக்கான தங்கக் காதணிகளை வாங்கியவள், சில கண்ணாடி வளையல்களையும் வாங்கிக் கொண்டாள்.

   எப்படியும் இந்த வீட்டில் இருந்து குண்டுமணி தங்கம் கூட, எடுத்துக் கொண்டு போகக்கூடாது என்ற முடிவோடு தான் இருந்தாள்.

  காலையில் தனது தாயின் நகைகளை அணிந்தது கூட, கல்யாணத்தின் போது, பேசு பொருள் ஆக கூடாது என்பதற்காக மட்டுமே, அதை அணிந்து கொண்டாள்.

  வீட்டில் பெட்டிகளை எடுத்து வைக்கும் போதே, சில துணிமணிகளுடன் தனது அனைத்து சான்றிதழ்களையும், எடுத்து வைத்திருந்தாள்.

“வினு நான் கேட்டது என்ன ஆச்சு?”

  மதுவிடம் ஒரு கவரை கொடுத்த வினு,

   “மது ப்ளீஸ், நானும் உன் கூட வர்றேனே.”

   “வேண்டாம் வினு எனக்காக நேத்துல இருந்து, நீ ரொம்பவே அலைச்சல் பட்டுட்ட. கண்டிப்பா நான் திரும்ப வருவேன். உன்ன விட்டா எனக்கு வேற யாரு இருக்கா.”

இதை கூறும் போதே, மதுவுக்கும் வினுவுக்கும் கண்களில் குளம் கட்டிவிட்டது.

    கஷ்டப்பட்டு தன்னை சமாளித்துக் கொண்ட மது, வினுவிடம் தலையை அசைத்து விட்டு, காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

   பிறகு அனைவரும் வந்ததும் கார் வேடந்தூர் நோக்கி புறப்பட்டது. வேந்தன் மருத்துவமனையின் உள்ளேயே பாட்டிகளிடம் கூறி விட்டான், உள்ளே நடந்ததை பற்றி, யாரும் எதுவும், மதுவிடம் பேசக் கூடாது என்று.

இங்கு ஒரு ஜோடி வேடந்தூரை நோக்கி  பயணத்தை மேற்கொள்ள, அங்கு இன்னொரு ஜோடியோ, ஊருக்கு போகும் வழியில் இருந்து மாறி, எங்கெங்கோ சுற்றி, கடைசியாக ஊரை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தது.

கூகுள் மேப்பின் உதவியுடன் பயணத்தை தொடங்கிய ராகுல், அங்கங்கு சாலையில் தோண்டப்பட்ட குழிகளாலும், மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டதாலும், அவனால் சரியாக வழி கண்டுபிடித்து செல்ல முடியவில்லை.

  அது இரவு நேரமானதால், யாரிடமும் விசாரிக்கவும் முடியவில்லை. ஒரு வழியாக விடிய தொடங்கியதும் தான், வெளிப்பட்ட மக்களின் உதவியோடு, ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

விடியலின் போதே வேடந்தூரை சுற்றி கருமேகங்கள் சூழ்ந்து, எப்போது வேண்டுமானாலும் பேய் மழை பெய்யும், என்ற ஒரு காலநிலையை கொண்டிருந்தது.

  நாச்சியம்மன் கோயிலின் முன்பு கட்டப்பட்ட மணிகள் யாவும், பலமான காற்றினால் வேகமாக அடிக்க தொடங்கியது.

மூர்த்தி ஐயா தீபனுடனும், தனது மூத்த மகனுடனும் வேலப்பன் ஐயாவின் வீட்டிற்கு வந்திருந்தார்.

பூவுபாட்டி இவர் வருவதற்கு முன்பே, தனது கணவருக்கு போனில் அழைத்து பேசினார்.

  “நான் பூவாத்தா பேசுறேன்.”

  பல வருடங்கள் கழித்து தன்னுடன் மனைவி பேசுவது, அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
 
  “பூவு நல்லா இருக்கியாம்மா? உடம்புக்கு இப்ப பரவாயில்லையா? டாக்டர் ஏதாவது சொன்னாங்களா? இன்னைக்கே வந்து உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாமா?”

  “ஏன், நான் நிம்மதியா இருக்கறது உங்களுக்கு பொறுக்கலையா?”

   “என்னம்மா இப்படி சொல்லிட்ட, நம்ம வீட்டுக்கு தானே உன்னை கூப்பிட்டேன்.”

  “என்னை சாவடிக்க துணிஞ்ச வீட்டுக்குன்னு சொல்லுங்க.”

“என்னம்மா சொல்ற?”

பாட்டி  மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பு வீட்டில் நடந்தவைகளை விவரிக்க,

“இப்படியா பண்ணாங்க? சத்தியமா இதெல்லாம் எனக்கு எதுவும் தெரியாதும்மா. வரட்டும், இருக்கு அவங்களுக்கு.”

  “நீங்க என்கிட்ட நடந்துக்கிட்டதை பார்த்து வளர்ந்தவங்க தானே, வேற எப்படி நடந்துக்குவாங்க?”

“……”

   “ஒரு பொண்ணுக்கு புகுந்த வீட்டுல  கிடைக்கிற மரியாதை, அவ புருஷன் அவகிட்ட எப்படி நடந்துக்குறான்ங்கறதை பொறுத்து தான்.

நீங்கதான் என்னை பொண்டாட்டியா என்ன, மனுஷியா கூட மதிச்சது இல்லையே.

   நானா உங்ககிட்ட கேட்டது ஒரே ஒரு விஷயம் தான், என் அண்ணனோட கடைசி ஆசையும் அதுதான். என்னை அதை நிறைவேத்த விட்டீங்களா? அப்போ இருந்த சூழ்நிலையில, குடும்பம் உறவுன்னு ஒரு கயிறு என்னை கட்டி வைச்சிருந்தது, ஆனால் இப்போ அது விட்டுப் போச்சு.”

“பூவு ஏன் இப்படி எல்லாம் பேசுற?”

  “என் மனசுல இருக்க ஆதங்கத்தை இன்னைக்காவது வெளியே கொட்டுறேன் அவ்வளவுதான். அப்போ என்னால என் மருமகள் கூட உறுதுணையா நிக்க முடியல.

  எனக்காக என் பையன் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டான். ஆனா இப்போ எங்க அண்ணனுக்கு கொடுத்த வாக்கை காப்பாத்த ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. அது என் பேத்தியை பார்த்துக்கிறது மூலமா நான் நிறைவேத்த போறேன்.”

  “பேத்தியா? சிவ…சிவராமனை பார்த்தியா?”

“அவனோட தான் இருக்கேன். லட்சுமிக்கு உடம்பு சரியில்ல ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்க.

உங்க கிட்ட போய் இதெல்லாம் சொல்லிட்டு இருக்கேன் பாருங்க, உங்களுக்கு தான் அவங்க ஆகாதவங்களாச்சே.

இன்னும் கொஞ்ச நேரத்துல, மூர்த்தி அண்ணன் அங்க வருவாரு.”

    “மூர்த்தியா? எதுக்காக?”

     “வேந்தன் தான் காதலிக்கிற பொண்ணை, யாருக்கும் சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டான். அவனுக்கு கல்யாணமான விஷயம் தெரிஞ்சதும், இவங்க முறைப்படி  பொண்ணு மாப்பிள்ளைய அங்க ஊருக்கு கூட்டிட்டு வராங்க.

   நான் சொல்ல சொல்ல கேட்காம, உங்கள மதிச்சு, நடந்த விஷயத்தை சொல்ல அங்க வர்றாரு. வேந்தன் கல்யாணம் செஞ்சிருக்க பொண்ணு வேற யாரும் இல்ல, சிவராமனோட பொண்ணு தான்.

   உங்களுக்கு புண்ணியமா போகும், எனக்காக இது ஒன்னு மட்டுமாவது செய்ங்க. அந்த நல்ல மனுசனோட மனசு நோகற படி எதையும் பேசிடாதீங்க.

நாங்க இப்போ ஊருக்கு தான் பொண்ணு மாப்பிள்ளையோட வந்துகிட்டு இருக்கோம். உங்களால முடிஞ்சா, என் கூட துணையா நில்லுங்க, இல்லையா என்னை இப்படியே விட்டுடுங்க, என் பேத்தியை நான் பார்த்துக்கிறேன்.”

பூவுப்பாட்டி படபடவென்று பேசிவிட்டு தொலைபேசியை வைத்து விட்டார்.

   வேலப்பன் ஐயா மனபாரத்தோடு அப்படியே நாற்காலியில் அமர்ந்து விட்டார். ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு முடிவோடு, வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்தவர், பூவுப்பாட்டி கூறிய அனைத்தையும் குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்.

கேட்ட அனைவருக்கும் மனதில் வெவ்வேறு உணர்வுகள்.

சிவராமனும் அன்னலட்சுமியும் கிடைத்து விட்டார்கள் என்று மகிழ்வதா? இல்லை வேந்தனின் திருமணத்தைப் பற்றி அறிந்தால், நிரஞ்சனாவின் மனம் படும் பாட்டை பற்றி வருந்துவதா?

மாறன் தான் இந்த செய்தியை கேட்டவுடன் குதிக்க ஆரம்பித்து விட்டான்.
 
“என்னப்பா நெனச்சிட்டு இருக்காங்க அந்த வீட்டுல இருக்கிறவங்க. இவ்வளவு நாளா என் தங்கச்சிக்கு ஆசை காட்டிட்டு, இப்போ வேற ஒரு பொண்ணை மருமகளா கொண்டு வந்தா, என்ன அர்த்தம்? இதுக்கு உங்க அம்மாவும் உடந்தையா?

  இவ்வளவு நாளா அவங்க கூட இருந்து, பார்த்து கிட்ட நம்மளை விட, ஓடிப்போன அந்த ஆளோட, மக தான் முக்கியமா போயிட்டாளா?”

   “மாறா இது என்ன பேச்சு? பெரியவங்க சின்னவங்கன்னு மரியாதை இல்லாம. அவர் உனக்கு சித்தப்பா, மரியாதையா பேசு.”

  “என்னப்பா, திடீர்னு உடன் பிறந்தவர் மேல பாசம் பொத்துக்கிட்டு வருது. என் தங்கச்சியை இங்கே அழவெச்சுட்டு, அங்க உங்க தம்பி பொண்ணு நல்லா வாழ்ந்துடுவாளா? இல்லே நான் தான் அவளை நல்லா வாழ விட்டுடுவேனா? “

பொறுமை இழந்த வேலப்பன் ஐயா கத்த தொடங்கி விட்டார்.

“மாறா…என்ன பேச்சு பேசுற நீ…? புகுந்த வீட்டில புதுசா வாழ போற  பொண்ணை பார்த்து, பேசுற பேச்சா இது? அவளும் உனக்கு தங்கச்சி மாதிரி தானேடா? அவ வாழ்க்கை நல்லா இருக்க கூடாதுன்னு, நினைக்கிறது கூட ரொம்ப தப்பு.”

     “கண்டதுங்களையெல்லாம் என்னால தங்கச்சியா ஏத்துக்க முடியாது தாத்தா. எனக்கு தங்கச்சியா இருக்கிற தகுதி, வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டு, குடும்பத்தை விட்டு ஓடிப்போனவரோட பொண்ணுக்கு இல்ல.

இங்க என் தங்கச்சியை காணோம் ஆனா, அங்க அந்த வேந்தன் அவசர அவசரமா கல்யாணம் பண்ணி இருக்கான். எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு, ரஞ்சியை அவன்தான் ஏதோ பிளான் பண்ணி, கடத்தி வச்சிருக்கணும்.”

    “மாறா…போதும் வாயை மூடு…வேந்தனை என்னன்னு நெனச்சே? உன்னை மாதிரி சுயநலத்துக்காக சொந்த பாட்டியவே கொலை பண்ண முயற்சி பண்ணுறவன்னா?”

  குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அப்படியே அதிர்ந்து நின்று விட்டனர்.

   “மாமா என்ன சொல்றீங்க, மாறன் அத்தையை கொலை பண்ண முயற்சி செஞ்சானா?”

  “ஆமாம்மா, உன் புள்ள தான், உன் புள்ள மட்டும் இல்ல உன் பொண்ணும் சேர்ந்து தான் இந்த வேலைய பார்த்து இருக்காங்க. பூவு பின் வாசல்ல தானா விழுகல, இவங்க அந்த இடத்துல எண்ணெய்யை கொட்டி விழுக வச்சிருக்காங்க. இதைக் காரணமா வச்சு வேந்தனுக்கும் நிரஞ்சனாவுக்கும் கல்யாண ஏற்பாட்டை செய்யறதுக்காக.” 

  மாறன் மிரண்டு நின்று விட்டான். எப்படி தாங்கள் தீட்டிய திட்டம் வெட்ட வெளிச்சமானது என்று.

சரியாக அந்த நேரத்தில் தான் மூர்த்தி ஐயா, தீபனுடனும் தனது மூத்த மகனுடனும் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தார்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. ரெண்டு ஜோடியும் ஒண்ணா வந்து இறங்க போறாங்க … ஆனா இந்த நிரஞ்சனா எப்போ எப்படி மாறுவா அப்படின்னு தெரியாதே … என்ன நடக்க போகுதோ …