
“இத்தனை பேர் சுத்தி நிற்கறோம், நம்மள மனுசனாவாவது மதிச்சானான்னு பாரேன்.
அந்தப் புள்ள அழுகுறதுக்கு காரணமே இவன்தான். ஆனா அப்பாவி மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு, எப்படி கண்ணாலேயே ஆறுதல் சொல்லிட்டு இருக்கான் பாரேன்.”
“ஏண்டா நீங்க வேற, அவனே வருத்தத்துல இருக்கான். இப்படி ரெண்டு பேரும் அவனை வெறுப்பேத்திட்டு இருக்கீங்க.”
“உனக்கு தெரியாது தீபா, ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு எங்களை வரச் சொல்லி, இவன் எங்களை என்ன மிரட்டு மிரட்டுனான்னு தெரியுமா?”
“அத விடு கல்யாண பொண்ணுக்கே தெரியாம, கல்யாணம் நடந்த கதையை எங்காவது கேள்விப்பட்டு இருக்கியா? அதுக்கு சாட்சி கையெழுத்து போட்டுட்டு வந்திருக்கோம்டா நாங்க.”
“கூடிய சீக்கிரம் உன் கையாலேயே எங்களுக்கு கை காப்பு போட வேண்டி இருக்கும். எதுக்கும் உனக்கு தெரிஞ்ச நாலஞ்சு நல்ல வக்கீலோட அட்ரஸ் கொடுடா. முன் ஜாமினுக்கு எதுக்கும் இப்பவே நாங்க மூணு பேரும் சொல்லி வச்சுக்கிறோம்.”
“கொஞ்ச நேரம் சும்மா தான் இருங்களேன்டா, வேந்தா ஏதாவது பிரச்சனையா? யாருக்கும் தெரியாம நீ இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கன்னா, கண்டிப்பா ஏதோ விஷயம் இல்லாம இருக்காது. சொல்லு ஏதாவது பிரச்சனையா? என்னால முடிஞ்ச உதவி ஏதாவது செய்யறேன்.”
” தீபா… உன்னோட உதவி கண்டிப்பா எனக்கு தேவைப்படும். எனக்கு ஒரு வாக்கு கொடு தீபா, ஒருவேளை நான் மது பக்கத்துல இல்லாது போனா, மதுராவுக்கு ஏதாவது ஆபத்துன்னா, சொந்த பந்தங்களையே எதிர்த்து நிற்க வேண்டிய நிலையும் வரும், அப்போ ஒரு சகோதரனா அவளோட நீ துணை நிற்கணும்.”
வேந்தன் கூறியதை கேட்ட நண்பர்கள் அனைவரும் பதறி விட்டனர்.
“டேய் என்னடா இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க, உங்க ரெண்டு பேருக்கும் ஒன்னும் ஆகாது. நாங்க எல்லாருமே உங்க கூட தான் இருக்கோம்.”
“என்னடா இப்போ, இன்னைக்கே அந்த பொண்ண முறைப்படி, உன் கூட கல்யாணம் பண்ணி அனுப்பி வைக்கிறோம் பாரு.”
“அவங்க எதுக்கும் ஒத்து வரலைன்னா, நம்ம ஊருக்கு அப்படியே மதுவை கடத்திட்டு போயிடலாம். அதுக்காக நீ ஏன்டா என்ன என்னமோ பேசிக்கிட்டு இருக்க.”
வேந்தனின் பார்வை மதுவை மட்டுமே வட்டமிட்டு கொண்டிருந்தது. அவனுக்கும் புரிந்தது, எவ்வளவு காலத்திற்கு தான், இதை தள்ளி போட முடியும். வரப் போகும் ஆபத்தை எதிர்கொண்டு தானே ஆக வேண்டும்.
ஒன்று அவளது வீழ்ச்சி, அல்லது மதுராவின் முடிவு. இதில் இரண்டில் ஏதோ ஒன்று நடந்தே தீர வேண்டும். அதை நினைக்கும் போதே அவனுக்கு நெஞ்சம் பதறியது. என்ன ஆனாலும் சரி இம்முறை மதுராவை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுப்பதாக இல்லை என்று, முடிவு எடுத்துக் கொண்டான்.
ஆனால் அதை மதுரா புரிந்து கொள்ள வேண்டுமே,
அடுத்தவர்களுக்காக
வாழ்வை அர்ப்பணிக்கத் துணிந்தவளே,
உன்னை மனம் முழுவதும்
சுமந்து நின்ற என்னை
ஏனடி நினைக்க மறந்தாய்?
வேந்தனது பார்வையும் பேச்சும் ஏனோ நண்பர்களுக்கு வித்தியாசமாக பட்டது. ஆனால் ஏதோ பிரச்சினை என்று மட்டும் அவர்களுக்கு புரிந்தது.
எந்த ஒரு சூழ்நிலையிலும், அவனுக்கு துணையாக நிற்க வேண்டும் என்று, முடிவெடுத்துக் கொண்டனர்.
சிவராமன் அமிர்தலிங்கேஸ்வரர் கோவிலில் அர்ச்சனை சீட்டு, சாமிக்கு பூக்கள் எல்லாம், தான் வாங்கிக் வருவதாக கூறி, குடும்பத்தாரை கோவிலினுள் செல்லுமாறு அனுப்பி வைத்தார்.
ஆனால் அவர் வாங்கிக் கொண்டிருக்கும் போதே, லட்சுமி அம்மாவை மயங்கிய நிலையில், தனது குடும்பத்தார் கோவிலினுள் இருந்து தூக்கிக் கொண்டு வர, பதறி அடித்து அவரிடம் ஓடினார்.
அவரை மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்க்கும் வரை, தன் மனைவியின் கையை விடாமல் இறுக பற்றிக் கொண்டு வந்தார்.
தன் உயிரில் கலந்த உறவை, இந்த நிலையில் காணும் போது, அவருக்கு தன்னைச் சுற்றி இருந்த உலகம், நின்று போனது போன்று தோன்றியது.
அவரின் கவனம் முழுவதும், தன் மனைவின் மீது மட்டுமே நிலை கொண்டிருந்தது.
அவருக்கு மைல்டு அட்டேக் என்று டாக்டர்கள் கூறிய போது பதறித்தான் போனார். பிறகு அவரைக் காண உள்ளே சென்றபோது தான் தன் மனைவியின் மூலம், தன் மகளுக்கு நடந்தவைகள் அனைத்தையும் அறிந்து கொண்டார்.
தன் உயிரில் பாதியான மனைவியின் நிலையை கண்டு வருந்துவதா? அல்லது மகளின் திருமணத்தை எண்ணி வருந்துவதா?
அவர் அதிலிருந்து தெளிவதற்கு முன்பே, மறுபடியும் தனது மனைவியின் உடல்நிலை மோசமாகி, அவசர சிகிச்சை பிரிவில் அவரை அழைத்துக்கொண்டு போக, செய்வதறியாது உடைந்து போனார்.
கனியமுதன் தான், தந்தையின் நிலையை கவனித்து அவருடனே இருந்தான்.
மூர்த்தி தாத்தா சிவராமனை அணுகி பேசத் தொடங்கினார்.
“சிவராமா பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நீயே, இப்படி இடிஞ்சு போய் உக்காந்து இருந்தா எப்படிப்பா?
பெத்தவங்க கிட்ட சொல்லாம செஞ்சுக்கிட்டாலும், அது கல்யாணம் தானே, அதை இல்லைன்னு நாம சொல்ல முடியாது இல்ல. நடந்ததென்னவோ நடந்துடுச்சு, இனி நடக்க போறது என்னன்னு பார்க்க வேண்டாமா?”
“நான் என்னங்கய்யா சொல்லட்டும், நான் என் பெத்தவங்களுக்கு பண்ணிணத, இப்ப என் பொண்ணு எங்களுக்கு பண்ணி இருக்கா.
அவ விருப்பம் இது தான்னு தெரிஞ்ச பிறகு, இனி பேசி என்ன ஆகப்போகுது. அதுதான் அவங்களே ஒரு முடிவு எடுத்துட்டாங்களே.”
“அதுக்காக இப்படியே விட்டு விட முடியுமா? சின்ன பிள்ளைங்க அவங்கதான், கல்யாணத்தை விளையாட்டா எடுத்துக்கிட்டாலும், நாம அதை முறைப்படி செஞ்சு வைக்க வேணாமா? லட்சுமி சொன்னத கேட்ட இல்ல.”
“நீங்க சொல்ல வர்றது புரியுதுங்கய்யா, நீங்க எந்த முடிவெடுத்தாலும் எனக்கு அது சம்மதம்.”
மூர்த்தி ஐயா, வடிவுப்பாட்டியிடமும் பூவுப்பாட்டியிடமும் கலந்தாலோசித்தார்.
வேலப்பன் ஐயாவிடமும், ஊரில் உள்ள பூவுப்பாட்டியின் குடும்பத்தாரிடமும், இதைப் பற்றி கூற வேண்டுமே, என்று மூர்த்தி ஐயா கூறியதற்கு, பூவுப்பாட்டி வேண்டாம் என்று முற்றிலுமாக மறுத்து விட்டார்.
அவர்களுக்கு தெரிந்தால் இன்னும், பிரச்சனை தான் அதிகமாகும். அதனால் இங்கு அனைத்தையும் முடித்துவிட்டு, நேராக ஊருக்கு சென்று சொல்லிக் கொள்ளலாம் என்று கூறினார்.
மதுவையும் வேந்தனையும் தன்னுடன் வருமாறு அழைத்த மூர்த்தி தாத்தா, கார் பார்க்கிங்கை நோக்கி நடந்தார்.
மதுவும் வேந்தனும் அவர் எதற்காக அழைக்கின்றார் என்று புரியாமல், தம் நண்பர்கள் புடைசூழ அவருடன் சென்றனர்.
“மதும்மா எங்களை பற்றி தெரியறதுக்கு முன்னாடி, உங்க அப்பா அம்மாவோட வாழ்க்கையை பற்றி, நீ தெரிஞ்சுக்கனும்.
வடிவு சொன்னா உனக்கு எதுவும் தெரியாதுன்னு, உன் அப்பா அம்மாக்கு எப்படி கல்யாணம் நடந்தது தெரியுமா?”
மூர்த்தி தாத்தா நடந்தவைகள் அனைத்தையும், ஒன்றன்பின் ஒன்றாக அவளுக்கு கூறி முடித்தார்.
“உங்க அம்மாவுக்கு நிஜமான கவலை என்ன தெரியுமாம்மா? ஏற்கனவே தன்னால அந்த குடும்பம் பிரிஞ்சு இருக்கு. இப்போ தன் பொண்ணாலயும் அது மறுபடியும் நடந்திடுமோ அப்படிங்கற பயம் தான்.
அதைவிட முக்கியம் நீங்க முறைப்படி கல்யாணம் செஞ்சுக்காதது.”
மதுவிற்கு கோபம் கோபமாக வந்தது, தன்னிடம் ஒரு வார்த்தை கூட கேளாமல், அவர்களாகவே ஒன்றை நினைத்துக் கொண்டு முடிவெடுப்பதா? அவள் மறுத்து ஏதோ பேச வர, மூர்த்தி தாத்தாவோ கைகளை நீட்டி பேசுவதை நிறுத்தச் சொல்லி,
“உங்க ரெண்டு பேரையும் விசாரிக்க நான் இங்கே கூப்பிடல. உள்ளே ஐசியூல, போராடிட்டு இருக்க அந்த உயிருக்காக கேட்கறேன், முறைப்படி கல்யாணம் செஞ்சுக்க உங்க ரெண்டு பேருக்கும் சம்மதமா?”
இதற்கு மேல் அவள் என்ன சொல்ல?… அவள் அன்னை கூறி சென்ற வார்த்தைகள் மட்டுமே ரீங்காரமாக, அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
“வீட்ல இருக்குற பெரியவங்க எல்லாரும் பேசி, நாளைக்கு அதிகாலை முகூர்த்தமா உங்களுக்கு முறைப்படி கல்யாணம் பண்ணலாம்னு முடிவு எடுத்திருக்கோம். உங்க ரெண்டு பேருக்கும் இதுல சம்மதமா? இல்லே…”
தலை குனிந்தபடியே இருந்த மது திருவாய் மலர்ந்தாள்
“சம்மதம்.”
அனைவரையும் விட, பல மடங்கு அதிர்ச்சியோடு, வேந்தன் திரும்பி மதுவை பார்த்தான்.
தாத்தா இப்படி ஒரு விஷயத்தை சொல்லியிருக்கும் போது, இவளோட ரியாக்ஷன் வேற மாதிரி இல்ல இருந்து இருக்கணும். இது என்ன சூறாவளிக்கு முந்தைய அமைதியா?
மூர்த்தி தாத்தா வேந்தனின் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்க, தன் நண்பர்களின் குலுக்களில் சுய நினைவுக்கு வந்தவன், மூர்த்தி தாத்தாவைப் பார்த்து முழித்தான்.
“உன் பதில் என்னப்பா?”
“நீங்க எது சொன்னாலும் எனக்கு சம்மதம்ங்க ஐயா.”
அப்புறம் என்ன நண்பர்களின் துணையுடன் திருமண வேலைகள் ஆரம்பமானது.
மது வினுவை அழைத்துக் கொண்டு மருத்துவமனையில் இருந்து, எங்கோ வெளியே சென்று விட்டாள்.
வடிவுப்பாட்டியும் பூவுப்பாட்டியும் கனியமுதனும், பெண் வீட்டு சார்பாக திருமணதிற்கு தேவையானவற்றை கவனிக்க, வேந்தனின் நண்பர்கள் மற்ற வெளி வேலைகளை கவனித்துக் கொண்டனர்.
அடுத்த நாள் அதிகாலையிலேயே மதுவுக்கும் வேந்தனுக்கும் அமிர்தலிங்கேஸ்வரர் கோயிலில் முகூர்த்தம் என்று முடிவானது.
மது திரும்ப மருத்துவமனை வந்த போது, எல்லோரும் பரபரப்பாக இருந்தனர். அன்னலட்சுமி அம்மா ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
ஆகவே அங்கு அவரை, தான் பார்த்துக் கொள்வதாக கூறிய மல்லிகா, மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் சிவராமன் மட்டும், தன் மனைவி கண் விழிக்காமல், அங்கிருந்து நகர்வதாக இல்லை என்று கூறிவிட்டார். அதனால் அமுதனும் அவரோடு மருத்துவமனையிலேயே இருந்து கொண்டான்.
நேரம் இரவை தொட்டுக் கொண்டிருந்ததால், மது வினுவை அவளுடைய வீட்டிற்கு அனுப்பி வைத்தாள். வினு தான் உடன் இருப்பதாக எவ்வளவோ எடுத்துக் கூறியும், அவளை மிரட்டி அவள் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள் மது.
பாட்டிகள் இருவரும் அவளை, வீட்டிற்கு போகலாம் என்று அழைக்க, மறுக்காமல் அவளும் கிளம்பி விட்டாள்.
வேந்தனுக்கு மதுவின் இந்த அமைதி சரியாகப்படவில்லை. ஏதோ மனதில் ஒரு திட்டத்துடன் தான், அமைதி காத்துக் கொண்டிருக்கிறாள் என்று உறுதியாக நம்பினான். நாளையே வினுவிடம் இது பற்றி கேட்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
பட்டு சேலை சரசரக்க பொன் ஆபரணங்களோடு, ஜொலித்துக் கொண்டிருந்த மதுவிற்கு, புன்னகை மட்டும் குறையாகவே இருந்தது.
வினு காலையிலிருந்து, இத்தோடு முப்பத்து ஐந்தாவது முறையாக கேட்டு விட்டாள் மதுவிடம்,
“கண்டிப்பா இப்படி ஒரு கல்யாணம் நடக்கணுமா மது? இந்த கல்யாணத்துல உனக்கு இஷ்டமா? நான் வேணும்னா அண்ணாகிட்டயும் அப்பாகிட்டயும் பேசி பார்க்கட்டுமா?”
“இதையே நீ எத்தனை தடவை தான் கேட்ப? எனக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம் தான். அத்தோடு எனக்காக யார்கிட்டயும் நீ போய் பேசிக்கிட்டு இருக்க வேண்டாம். அப்படி நீ பேசறேன்னு தெரிஞ்சுதுன்னா, இதுதான் நாம கடைசியா பேசுகிறதா இருக்கும். நாம நேத்து போயிட்டு வந்த இடத்தை பத்தியும், நீ யார்கிட்டயும் சொல்லக்கூடாது. இது என் மேல சத்தியம்.”
“மது ஏன்டி இப்படி பேசுற? நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்கோ…”
அவள் அடுத்து பேச வருவதற்குள், கனியமுதன் மதுவை தேடிக் கொண்டு வந்திருந்தான்.
அவர்களுக்கு தனிமை கொடுக்க நினைத்து, வினு வெளியே செல்ல போக, மது வினுவின் கைகளை பற்றி, அவள் அருகிலேயே அமர்த்தி கொண்டாள்.
“மது…மதும்மா, உனக்கு…உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் தானே?”
“ரொம்ப சீக்கிரம் வந்து கேட்டுட்ட, இன்னும் முகூர்த்தத்துக்கு ஒரு…மணி… நேரம்… இருக்கே. கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் வந்து கேட்டு இருக்கலாம் இல்ல.”
அவனால் என்ன பதில் சொல்ல முடியும். தன் கைகளில் இருந்த ஆபரணங்கள் அடங்கிய பெட்டியை, மதுவிடம் கொடுத்தான்.
“அம்மா உன்கிட்ட இந்த நகைகளை கொடுத்து, போட்டுக்க சொன்னாங்க.”
“கொடுத்தாச்சில்ல, நீ கிளம்பலாம்.”
வினுவிற்கு அமுதனை பார்க்க பாவமாக தான் இருந்தது. இருந்தும் என்ன செய்ய, அவர்கள் நடந்து கொள்வதும் அப்படித்தானே.
மதுவின் நிலையில் இருந்து, ஒருமுறை கூட அவர்கள் யோசித்துப் பார்க்கவில்லையே, அவளின் தோழியான தனக்கே அவளைப் பற்றியும், அவளின் குணத்தைப் பற்றியும் தெரியும் போது, ரத்த சொந்தங்களான இவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லையே, என்ற ஆற்றாமையும் அவளுள் எழுந்தது.
தன் தாய் கொடுத்த நகைகளை அணிந்து கொண்டு தான் மது மணவறைக்கு வந்தாள். முகத்தில் சிறிது கனிவு கூட இல்லாது, விறைத்துக் கொண்டு அமர்ந்திருந்த மதுவை பார்க்க, வேந்தனுக்கு கஷ்டமாக இருந்தது.
“மிஸ் மதுரம் காலையில ஹார்லிக்ஸ்க்கு பதிலா, துணிக்கு போட வைச்சிருந்த கஞ்சியை குடிச்சிட்டீங்களா என்ன? முறைக்காதீங்க மிஸ் மதுரம், அக்னி குண்டத்தை மூணு தடவை சுத்தி வரும்போது, ஒடஞ்சு விழுந்தர போறீங்க. விறைப்பை கொஞ்சம் கம்மி பண்ணுங்க. இல்லாட்டி நான் உங்களை தூக்கிட்டு சுத்தற மாதிரி ஆயிட போகுது.”
அதிகாலை முகூர்த்தத்தில், வேந்தனது திருக்கரங்களால் மாங்கல்யம்தனை கழுத்தினில் பூட்டிக் கொண்டாள் மதுரயாழினி.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


இனிமே தான் உங்களுக்கு இருக்கு மன்னவா … மதுரம் அடி வெளுக்க போறாங்க … காலைல இருந்து மன்னவனை பார்க்க வெயிட்டிங் … ஏன் இவ்ளோ லேட் …
ஆமா ஏன் இன்னும் அங்க விஷ்வேஸ்வரனும் வரல …
😍😍😍😍 பேமிலி டூர் சிஸ் மதுரை க்கு. மொபைல் எடுத்தா சிதறு தேங்காயா அதை போட புடுங்கறாங்க. நேத்து மார்னிங் 3am ku ஆரம்பிச்ச ஓட்டம் இப்ப தான் ஓயுது.
சூப்பர் சகி …🥰🥰🥰🥰
அப்டேட் பண்ணிட்டேன் சிஸ் அதையும் அவசர அவசரமா 11.30 க்கு