Loading

அத்தியாயம் 2

 

  நாயகியம்மா சாப்பாட்டு மேசையை நெருங்கும் முன்னவே, கவிக்கும் மூர்த்திக்கும் இடையில் நடக்கும் அடிதடி சத்தம் வெளியேவரை கேட்குது.  

 

   “ஏய் குந்தாணி, எதுக்கு இப்போ என் முதுகுல துணி தொவச்சுகிட்டு இருக்க, தள்ளிப்போ அங்குட்டு.”

 

  “என்னைய அங்க ஐயாகிட்ட  கோர்த்து விட்டுட்டு,  நீ இங்க சாப்பாட்ட மொக்கிட்டா இருக்க, அச்சோ என்னோட கேசரி அதுலயும் கைய்ய வெச்சுட்டயா உன்னேஏஏஏ…”

 

   நாயகியம்மா கவியோட முதுகுல மொத்தி,

 

  “மட்டுமருவாத இருக்காப்பாரு, இப்பதானடி ஐயாகிட்ட அத்தனை வசவு வாங்கின.

 

    அவன் ஒன்னய விட வயசுல பெரியவனாக்கும். ஒழுங்கா அத்தான்னு கூப்பிடு.”

 

  “அத்தானாம் அத்தான் சரியான பொத்தான், இந்த தவக்களை வாயன நான் அத்தான்னு வேற கூப்பிடனுமோ? இந்த மொகரய்க்கு மரியாத ஒன்னுதான் குறை.”

 

    “ஓய், ஏம்மொகரய்க்கு என்ன குறைச்சல், படிக்கும் போது எத்தனை பேர் எம்பின்னாடி வருவாங்க தெரியுமா? உங்க அருமை அண்ணங்கிட்ட நீயே கேட்டுப்பாரு.”

 

    “ஹிம்ம் இப்படி திண்ணுதிண்ணு பெருத்து கிடந்தா, நீயே வழியை அடைச்சுகிட்டு நடந்திருப்பே, அதான் உன்ன தாண்டி போக முடியாம எல்லாரும் பின்னாடி வந்திருப்பாங்களா இருக்கும். நாஞ்சொல்றது சரிதானண்ணே.”

 

    “ஹா ஹா ஹா நீ சொன்னா சரியாதான்மா இருக்கும்.”

 

    ” எது டேய் என்னடா இந்த சில்வண்டு ஓவரா பேசுது, நீயும் ஆமாஞ்சாமி போட்டுகிட்டு இருக்க.”

 

    “உண்மை கொஞ்சம் கசக்கதான் மாம்சு செய்யும்.”

 

    இதுங்க இப்படியே சண்டப்போட்டுட்டு இருக்க, இது எப்பவும் நடக்கறதுதான்னு பெரியவங்க எல்லாம், அவங்கவங்க வேலைய பார்க்க போய்டாங்க. 

 

    இந்த சமயத்துலதான் நம்ம கோதாவரி, அவபுருசனுக்கு பிடிச்ச பால்கொளுக்கட்டைய செஞ்சு எடுத்துட்டு, வீட்டுக்குள்ள வர்றா.

 

      வேலை செஞ்சு ஓஞ்சு போய் வந்த மனுசனை, இப்படி அர்த்தராத்திரியில விரட்டிவிட்டுட்டோமேன்னு, மனவருத்தத்தோட அவனை சமாதானம் பண்ண வர்றா. கவியும் வேந்தனும் அவ உள்ள வரும்போதே கவனிச்சுட்டாங்க. ஆனாஆஆஆ…நம்ம மூர்த்தி கவனிக்கல.

 

  “டேய் மாப்ள உன் தொங்கச்சிக்குத் தான் தெரியல, உனக்கும் மறந்துடுச்சா? படிக்கிற காலத்துல நான் ரோமியோன்னு.”

 

  கவியும் வேந்தனும் ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்துக்கறாங்க. ஆஹா ஆடு வசமா வந்து மாட்டிகிச்சி இன்னைக்கு பிரியாணி போட்டர்லானு. வேந்தன் ஆரம்பிக்கிறான்.

 

    “அய்ய இவன்லாம் அதுக்கு சரிபட்டு வரமாட்டாம்மா வெத்து பேச்சுக்குதான் லாய்க்கி.”

 

    “எது டேய் எத்தனை பொண்ணுங்க லவ் லெட்டர் குடுத்திருக்காங்க தெரியுமாடா? நான் கண்ணசைச்சா போதுமாக்கும் இப்பவே என்னைய கட்டிக்க வரிசைல நிப்பாங்க. அந்த லதா புள்ள இப்ப கூட தினோம் என்ன எட்டி நின்னு பார்த்து சைட் அடிக்குது தெரியுமா?”

 

  “ஆமாம்மா நல்லாவே தெரியுது  உம்பின்னாடி.”

 

“எம்பின்னாடியா, ஆத்தி இவ என்ன திரிசூலம் இல்லாத காளிப்மாறி நிக்கறா, அச்சச்சோ பேசுனதெல்லாம் கேட்டுட்டாளோ முடிஞ்சுது ஜோலி.”

 

  இத நீ பேசறக்கு முன்னயே யோசிச்சிருக்கனும். 

 

    “வாம்மா கோத இப்ப உடம்புக்கு பரவாயில்லையா. இன்னொருக்கா வேணா டாக்டரை பார்க்க போய்ட்டு வரலாமா?”

 

    “இல்லண்ணே நா இப்ப நல்லாதா இருக்கேன், நீங்க கூட்டிட்டு போன ஆஸ்பத்திரியில, டாக்டர் நல்லாவே பார்த்தாங்க. சரிண்ணே நாபோய் ஆத்தாவ பார்த்துட்டு வரேன்.”

 

    மூர்த்தி எழுந்த பேச வர அவ கோபமா சமையல் அறைக்குள்ள போய்ட்டா

 

  “அடப்பாவி அவ வந்தது தெரிஞ்சுதான் அண்ணணும் தங்கச்சியும் என் வாய புடுங்கனீங்களா.

 

    என்னடா சிரிக்கரீங்க அப்ப எல்லாமே பிளானிங்கா.

 

      ஏற்கனவே நேத்திக்கு கணக்கே இன்னும் பாக்கி இருக்கு, இதுல புதுசா வேற கோர்த்து விட்டுட்டீங்களேடா.”

 

  “ஹாஹாஹா ஆனா உன்ன நா  தவளவாயன்னு கூப்படறதுல தப்பே இல்ல அத்தான். உன் வாயால தான் நீ மாட்டன அக்காட்ட, என்னோட கேசரிலயா கைய வெச்ச, இருக்கு இன்னிக்கு உனக்கு வீட்ல ஒரு பூச இருக்கு.”

 

    “அடிகுட்டிபிசாசே இத்துனூன்டு கேசரிகொசரமா என்னை மாட்டிவிட்ட, உன்னக் கூட விட்டுடுவேன். ஆனா உம்பக்கத்துல ஒன்னுமே தெரியாத மாறி ஒக்காந்து இருக்காம்பாரு உன்ணொண்ணன் அவனை மட்டும் மன்னிக்கவே மாட்டேன், நீ அவளை ஆஸ்பத்திரி கூட்டிட்டு போகும்போதே எனக்கு சொல்லி இருக்கலாம்லடா? இல்ல காலைல உன்ரூம்ல கழுத மாறி கத்துனனே அப்பவாச்சும் சொன்னயாடா.”

 

   “எனக்கு உன்னபோல கழுத பாஷை புரியாதே மாம்சு.”

 

  “இந்தநாள் உன் மொபைல்ல குறிச்சு வெச்சுக்கடா.”

 

  “கைல மொபைல் இல்லயே மாம்சு.”

 

      ” என்னபோலவே நீயும் ஒம்பொண்டாட்டிட பேச தவிச்சு நிப்படா.”

 

    “எம்பொண்டாட்டிட பேச நீயேன்டா தவிச்சு நிக்கனும்?”

 

    “நானில்லடா உம்பொண்டாட்டி கூட பேச நீ தவிச்சு நிப்பேன்னு சொன்னேன்.”

 

    “சரி நிப்பேன் அப்பறோம்.”

 

    “அப்போ என்ட்டதான்டா உதவிகேட்டு நிப்ப, அப்படி நடக்கல எம்பேரு ஒங்கப்பனுக்கு அப்பன் பேரு இல்லடா.”

 

    இவம்போட்ட சபதத்தை கண்டு அண்ணனும் தங்கச்சியும் கெக்கபெக்கன்னு சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

 

   இதைகேட்டுட்டே  குழந்தைங்களோட உள்ள வந்த மதிவாணன் அவந்தலைல தட்டி, 

 

  “காலைலயே ஒங்க அக்கப்போற ஆரம்பிச்சுடீங்களா?

 

   பொண்டாட்டி முடியலன்னு சொன்னா, அப்பவே டாக்டர்கிட்ட போகலாம்னு நீதான் கிளம்பி இருக்கனும். நம்ம சம்பாதிக்கறதே குடும்பத்துக்காகதான்டா. 

 

      அவங்களுக்குதான் நாம பர்ஸ்ட் பிரிபரன்ஸ் குடுக்கணும்.

 

      நேத்து நானும் வேந்தனும் திருவிழாவுக்கு பத்திரிகை அடிக்கறது விஷயமா, உங்கிட்ட பேசலாம்னு உன் வீட்டுக்கு வந்தோம், வீட்ல யாரும் இல்லபோல.

 

பாவம் கோதை, நிக்க முடியாம தலைசுத்தி விழுக போய்டுச்சு.  கரெக்ட்டா நாங்க அங்க போனதால ஆச்சு. வேந்தன் தான் அப்பவே  கோதையை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய்ட்டு வந்தான். நம்மள நம்பி வந்த பொண்ணுக்கு எதுன்னாலும் அதுக்கு நாம தான் பொறுப்பு.”

 

  “இல்லண்ணே இனி இப்படி நடக்காம அவளை பத்திரமா பார்த்துக்கறேண்ணே.”

 

    “அத்தான் உனக்கு இந்த முகம் செட்டே ஆகல, ப்ச்சு என்னத்தான், அக்காக்கு தான் ஒன்னும் இல்லையே, அப்பறம் என்ன?”

 

      “ஒருவேள உனக்கு வேலை அதிகம்னா இங்க வீட்டுக்கு கூப்பிட்டு சொல்லிடு, ஏதாச்சும்னா நாங்க பார்த்துக்கறோம்.”

 

  இது தாங்க நம்ம தாத்தா குடும்பம், சின்ன புள்ளய்ங்க போல அடிச்சுகிட்டாலும், பாசத்துக்கு குறைவே இல்ல இங்க.

 

  சரிவாங்க நாம நம்ம மூர்த்தியோட சபதத்த நிறைவேத்தப்போற, அந்தமகராசியை பார்க்க போகலாம்.

 

பிரதோஷ வேளையில் கோயில் மணியோசை கீதங்களாய் முழங்க, ஊதுபக்தி வாசனை மனம் நிறைக்க தீபாராதனைகளுக்கு நடுவே தெரியும், ஜடாமுடிதனில் பிறைசந்திரனை சூடி, ருத்ராட்சமாலைதனை ஆபரணங்களாய் தரித்து நிற்கும், சிவலிங்க திருமேனிதனில் இருந்து விழி நகர்த்த முடியாது, விழி மூடாமல் பக்தி பரவசத்தில் நிற்கிறாள் நங்கையவள்.

 

தீப ஒளிதனில் சிவலிங்க தரிசனத்தை காண எப்போதும் தெவிட்டுவதே இல்லை.

 

  நீள்வட்ட முகந்தனில் கதைபேசும் கண்களது மீன்களை போட்டிக்கு அழைக்க, கூர்மூக்கில் ஒற்றைகல் சிவப்பு மூக்குத்தி ஜொலிக்க,வெடித்து நிற்கும் மாதுளை இதழ்களில் ஓயாது சிவ மந்திரம் முழங்க, தன் தளிர் விரல் கொண்டு இறைவனை நோக்கி கை கூப்பி நிற்கின்றாள் மதுரயாழினி.

 

     அதேநேரம் வேடந்தூரின் வடக்கு மூலையில் உள்ள முள்ளுக்காட்டில், கிராம மக்கள் அனைவரும் பதைபதைப்புடன் கூடி நிற்கின்றனர். 

 

இந்த வருடமாவது மோகினி பள்ளத்திற்கு அருகே வீற்றிருக்கும், தம் குலதேவியை கோயிலில் சேர்க்க நினைத்திருக்க, அதற்கு தடை வந்துவிடுமோ என்னும் அச்சத்துடன் குழுமியுள்ளனர். 

 

  இந்த பள்ளத்திற்கு பிற்பகுதியில் உள்ள காட்டை ஆடு, மாடு மேய்ச்சலுக்கும், விறகுகளை சேகரிப்பதற்க்காகவும் அவ்வூரார்  பயன்படுத்தி வருகின்றனர். 

 

  முற்காலத்தில் இக்காட்டில் மனிதர்கள் வாழ்ந்து வந்ததாகவும், ஒரு சாபத்தால் அவ்விடம் அழிந்து உரு தெரியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

 

      ஆனால் அங்கு செல்ல வேறு வழியை தான் உபயோகிக்கின்றனர். அந்த வழி சற்று சுற்றுப் பாதை தான், இருந்தும் பாதுகாப்புக்காக அவ்வழியை தான் பயன்படுத்துகின்றனர்.

 

  சிலசமயம் அங்கு சென்றவர்களை இப்பள்ளத்தின் அருகே, ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையிலும், சடலங்களாகவும் கண்டெடுத்ததுண்டு.

 

   மயக்கம் தெளிந்த பின்னும் அவர்களுக்கு சுய உணர்வின்றி, பிரம்மை பிடித்தது போல் தான் சுற்றிக் கொண்டிருப்பர். 

 

  அவர்களை நாச்சியம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்று, அம்மனின் அபிஷேக நீர் அவர்களின் மீது தெளிக்கபடும். 

 

அதன்பிறகே அவர்கள் சுய உணர்வை அடைவர். உணர்வு பெற்ற பின்னரும் அவர்களால், எவ்வாறு அந்த பள்ளத்திற்க்கு தான் சென்றோம் என்று  கூற இயலாது, ஏனெனில் அந்த விஷயம் அவர்களுக்கே தெரியாது.

 

  மோகனி பள்ளம் என்பது  ஆள்முழுங்கி பள்ளம் என்றும் அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகிறது. 

 

   இது பார்ப்பதற்கு மொட்டை கிணறு போன்ற அமைப்புடன், காட்டு செடிகள் சூழ அமைந்துள்ளது.  

 

  அதற்கு சற்று தொலைவில் உள்ள குருந்த மரத்தின் அடியில்தான், இவ்வூர் மக்கள் குறிப்பிடும் குலதேவி புதைந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

குருந்த மரமானது கொத்தான வெண்ணிற மலர்களையும், உருண்டையான முள்ளுள்ள எலுமிச்சை வடிவுகொண்ட காய்களையும் கொண்டது. 

 

  இதன் வேர்களும் கிளைகளும் பள்ளத்தை சுற்றி அரண் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ளது. 

 

  அப்பள்ளத்திற்கு அருகிலேயே வானை நோக்கி கண்கள் நிலைகுத்தி நின்றவாறு, அவ்வூரை சேர்ந்த மாரியப்பனின் உடல் சடலமாக கிடந்தது. 

 

   அவன் கைகளின் அருகே ஒரு எந்திர கோடாரியும், இன்னும் சில வெடி பொருட்களும் சிதறிக் கிடக்கின்றன.

 

அங்கு விரைந்து வந்த மூர்த்தி தாத்தா தம் மக்களை விரட்டுகிறார். 

 

  “ஏய் பொடுசுகளா இங்கன என்ன ஜோலின்னு கேக்கேன்?  கிளம்புங்க மொத.

 

  ஏய் யப்பா யாராச்சும் போலீசுக்கு  தகவல் சொன்னீகளா இல்லயா .”

 

  “ஐயா, அரைமணிக்கு முன்னவே போன் பண்ணி சொல்லிட்டோமுங்க, இப்ப வந்துடு வாங்கன்னு நினைக்கிறேன்.”

 

      இன்ஸ்பெக்டர் தீபன் தன் மீசையை முறுக்கியபடி, கம்பீரமாக தமது காக்கி உடைதனில், போலிஸ் வாகனத்திலிருந்து டாக்டர் குழுவுடன் வந்து இறங்குகிறார்.

 

      தன் லேசர் கண்களால் சுற்றுபுறத்தை ஆராய்ந்தபடியே சடலத்தை நோக்கி செல்கிறான்.

 

      சிறிது நேரம் சடலத்தையும் சிதறிகிடக்கின்ற வெடி பொருட்களையும் பார்த்து, தமக்கு தோன்றிய சிலபல  சந்தேகங்களையும் கருத்துகளையும் தமது உதவியாளருடன் விவாதிக்கின்றான்.

 

    பின் தம்முடன் வந்த தடையவியல் மற்றும் டாக்டர் குழுவிற்கு  தலையசைத்து அனுமதி வழங்க, அவர்கள் தத்தமது பணிகளை தொடங்குகின்றனர்.

 

  கூட்டத்தினில் மூர்த்தி தாத்தாவை கண்டு கொண்டு, முகம் மலர அவரை நோக்கி நடக்கத் தொடங்கினான். 

 

  தீபன், மூர்த்தி தாத்தாவின் குடும்பத்துக்கு தூரத்து உறவு. வேந்தனின் பெரியம்மா மல்லிகாவிற்க்கு தீபனின் தந்தை ஒருவகையில்  தம்பி முறை.

 

    தீபன் வீட்டுக்கு ஒரே வாரிசு. இவனுக்கு பத்து வயதான போது, இவனின் அன்னை பார்வதி விஷ காய்ச்சல் கண்டு இறந்து விட்டார்.

 

  மனைவி இறந்த துக்கத்தில் இவனின் தந்தை பூபதி எங்கு செல்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதே மறந்து, நினைவிலந்து ஊருக்குள் சுற்றி கொண்டிருந்தார்.

 

ஒருநாள் இவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள் காலை இவரை மோகினி பள்ளத்துக்கு பக்கத்தில் மயங்கிய நிலையில் கண்டறிந்தனர்.

 

  மயக்க நிலையில் இருந்து, தெளிந்த பின் தன்னை மௌனசிறைதனில் பூட்டிக் கொண்டார் பூபதி.

 

    அன்று முதல் காவி உடைத்தரித்து ஊரின் எல்லையில் உள்ள ஊர்க்காவல் தெய்வமாம், அய்யனார் அப்பரின் கல்மேடைதனில் அமர்ந்து கொள்வார். அல்லது நாச்சியம்மன் கோயில் வெளிப் பிரகாரத்தில் அமர்ந்து கொண்டு தியானத்தில் ஆழ்ந்திடுவார்.

 

    தீபனிடம் கூட, அவருக்கு தோன்றும் போது மட்டுமே பேசுவார்.

 

  தாயில்லாது, தகப்பன் இருந்தும் பயனில்லாது போன, அப்பிள்ளையை மூர்த்தி தாத்தாவின் குடும்பம் தன் பிள்ளை போன்று ஏற்று கொண்டது. அக்குடும்பம் மொத்தமும் இவனுக்கு சொந்தமானது.

 

  மல்லிகாவும் நாயகியும் தாயன்பை வாரி வழங்கினர். வடிவு மூர்த்தி தம்பதியரின் செல்ல பேரன் ஆனான். உயிர் தோழர்களாக மூர்த்தி மற்றும் வேந்தன் இருக்க, கவி மட்டும் முறைப்பு பெண்ணாகி போனாள். 

 

      ஆமாம் பின்ன இருக்காதா, கடைக்குட்டியான தன்னிடம் பாசத்தை பொழிந்த குடும்பம், இப்படி இவனை தாங்க சற்று பொறாமை எட்டிப் பார்ப்பதில், விந்தை ஒன்றும் இல்லையே.

 

  நாள் முழுவதும் இங்கு இருந்தாலும் இரவு தன் தந்தையை காண வேண்டியே, தீபன் அவனது இல்லத்திற்கு திரும்பி விடுவான். சில சமயம் மூர்த்தியும் வேந்தனும் கூட அவனுக்கு துணையாக தீபனது இல்லத்தில் தங்குவர்.

 

  தன்னை நோக்கி வரும் தீபனைப் பார்த்து நின்ற மூர்த்தி தாத்தா, அவன் அருகில் வரவும், 

 

  “மெட்ராஸ்ல இருந்து எப்பப்பு வந்தே? அங்கன எதோ மீட்டிங்கு அது முடிய நாளாகுமுன்னு சொன்ன?”

 

  “ஆமா ஐயா அங்க வேலை கொஞ்சம் சீக்கிரம் முடிஞ்சுடுச்சு, அதான் கிளம்பிட்டேன். நேரா வீட்டுக்குத் தான் போய்ட்டு இருந்தேன், அதுக்குள்ள இந்த நியூஸ், அதான் இங்க வந்துட்டேன்.”

 

  “அய்யாவு இதுநாள கோயில் திருவிழாவுக்கு எதுவும் பிரச்சினை வந்துடாதே?

 

  இந்த ஊருக்காக தன்னையே குடுத்த நம்ம குலதேவிய, இந்த வருஷமாவது கோயில்ல சேர்த்திடுவோமாப்பா.”

 

   தழுதழுத்த குரலில் அவர் கேட்க அவனுக்கு தாளவில்லை.

 

    “ஐயா அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நீங்க வெசனப்படாதீங்க இந்த வருஷம் நல்லப்படியா திருவிழா நடக்கும்.”

 

  குருந்த மரம் இவ்வூர் மக்கள் பக்தியுடன் வழிபடும் குலமகளின் உறைவிடம். இங்கு உள்ள மரத்தை சுற்றி குங்குமமும் மஞ்சளும் கொட்டி கிடக்கிறது. 

 

  மரத்தைச்சுற்றி மஞ்சள் வண்ண புடவை சுற்றப்பட்டுள்ளது. சில வருடங்களாக இப்பகுதியில் உயிர் பலியினை காண முடிகிறது. அத்தோடு தீய மாந்திரீகர்களின் நடமாட்டமும் தென்படுகிறது. இதற்கு தீர்வு காண சாமியாடி குறி கேட்டனர்.

 

“குலதேவியால உருவாக்கப்பட்ட மந்திர தகடுக்கு சக்தி குறைஞ்சுட்டு வருதுடா. மாந்திரீகத்தாள அவள கட்டி வைக்க பார்க்கறாங்கடா. 

 

  இது தொடர்ந்தா அதில அடைக்கப்பட்ட தீய சக்தி வெளியவந்து ஊரையே அழிச்சிடும் டா.”

 

    “ஐய்யோ தாயே இதில இருந்து மீள வழியே இல்லையாம்மா?”

 

      “இருக்கு கண்டிப்பா இருக்கு , அங்க குலதேவியோட விக்கிரகத்தை வைக்கனும்.”

 

        “அதுக்கு குருந்த மரத்துக்கு அடியில இருக்க மண் எடுத்து, குலதேவியோட உருவம் செஞ்சு, நாப்பத்தி எட்டு நாள் நாச்சியம்மன் கோயிலில வைச்சு ஹோமம் மற்றும் பூஜை செய்யனும். 

 

  அந்த விக்ரகத்த குருந்த மரத்தடியில பிரதிஷ்டை செய்யனும். அப்பத்தான் அந்த தீயத அழிக்க அவளுக்கு சக்தி கிடைக்கும்.”

 

   ” சரிங்க ஆத்தா நீங்க சொல்ற படியே செய்யறோம்.”

 

      ஆனால் இன்றுவரை அது முயர்ச்சியாக மட்டுமே உள்ளது. ஒவ்வொரு முறையும் இது போன்றே பல தடங்கல்கள் அதுவும் உயிர்பலிகள். 

 

      இப்போதெல்லாம் இந்த பள்ளத்திற்கு சுற்று வட்டாரத்தில் கூட எவரும் வருவதில்லை. தீபனின் அருகில் வந்த அக்குழு நபர்கள் தயங்கி நிற்க,

 

  “சொல்லுங்க ஹரி, இவர் இந்த ஊர்தலைவர் தான், கண்டிப்பா நாம இந்த ஊர்காரங்களுக்கும் பதில் சொல்லிதான ஆகனும்.”

 

  “சார் அந்த டெட்பாடிக்கிட்ட வெடி மருந்து மட்டும் இல்ல, கைல இந்த லிக்விட்டும் இருந்துச்சு. “

 

  “என்னதிது?”

 

    அவர் கூறிய பதிலில் தீபன் மட்டுமல்ல மூர்த்தி தாத்தாவும் அதிர்ந்து நின்றார்.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்