
குருஜியின் ஆசிரமத்தில் விஜயன், தன்னைச் சுற்றி, தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்த, குருஜியின் சீடர்களை பார்த்து கத்திக் கொண்டிருந்தான்.
“இப்படி மாடு மாதிரி வளர்ந்து இருக்கீங்களே கொஞ்சமாவது அறிவு இருக்கா? இப்படி அந்த பொண்ணை தொலைச்சிட்டு வந்து நிக்கிறீங்களே, இதுதான் நீங்க பொறுப்பா இருக்கற லட்சணமா?”
“அந்தப் பொண்ணு பத்திரமா பாத்துக்கிறதை தவிர, உங்களுக்கு என்னடா வேலை? அப்படி என்ன வேலையை பார்த்து கிழிச்சீங்க?”
“பொறு விஜயா சற்று அமைதி கொள்.”
“எப்படி குருஜி அமைதியா இருக்கிறது. நாளைக்கு எவ்வளவு முக்கியமான நாள். அந்த பொண்ணு நம்மகிட்ட இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமுன்னு உங்களுக்கே தெரியும். இவனுங்க இப்படி தொலைச்சிட்டு வந்து நிக்கிறானுங்களே இனி எப்படி என் பொண்ணு நினைச்சதை சாதிப்பா?
இதுக்காக நம்ம எவ்வளவு வேலை பார்த்திருக்கோம், கோயில்ல இருக்கிற சாமியை மந்திர கட்டால அடக்கி வைச்சிருக்கோம்.
அந்த காட்டு பிச்சியை, அந்த காட்டை விட்டு எங்கேயும் வெளியே போக முடியாதபடி, மந்திரத்தால கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம்.
அது மட்டுமா அந்த கோயில்ல சாமி ஆடுற பூசாரியை, குருந்த மரத்தடியில் இருந்து மண் எடுக்கணும்னு சொல்ல சொல்லி, மண்ணு எடுக்கிறது மூலமா அந்த காட்டு பிச்சியோட மிச்சம் இருக்கிற சக்தியை எல்லாம் முடக்கப் போறோம்.
இத்தனையும் எதுக்காக, என் பொண்ணோட ஆசைக்காக தான், ஆனா அதுவே நடக்காம போயிடும் போல இருக்கே.”
“விஜயா நான் சொல்வதை முதலில் பொறுமையாக கேள். ஏற்கனவே அந்த பெண் நிரஞ்சனாவின் உடலில், உன் பெண்ணின் ஆன்மா ஒப்புவதற்கான வழிமுறைகளை செய்து விட்டேன்.
இனி ஒன்றே ஒன்றுதான் பாக்கி, நாளை உன் மகள் அந்த மோகினி பள்ளத்தில் இருந்து வெளிப்படும் போது, இந்த நிரஞ்சனா அந்த ஊரில் இருக்க வேண்டும்.
இந்தப் பெண் நிரஞ்சனாவை, உன் மகளுக்காகவே உருவேற்றி வந்துள்ளோம். அவளைத் தவிர வேற யார் உடலிலும் உன் மகளின் ஆன்மாவால் உட்புக முடியாது.
எனது கணிப்பு சரி என்றால் நம்மிடம் இருந்து தப்பித்த அந்த பெண், நிச்சயமாக அவளது ஊருக்கு தான் சென்று கொண்டிருப்பாள்.
அதனால் கவலை ஏதும் இல்லை, நீ அமைதி கொள் விஜயா, நிச்சயம் வெற்றி நமதே.”
லட்சுமியம்மாவுக்கு மதுவை வேந்தனுடன் கண்டபோது, அதிர்ச்சியாக இருந்தது. அதுவும் அவனை திருமணம் செய்து கொண்டு விட்டதாக கூறிக் கொண்டிருக்க, அவர் முற்றிலுமாக உடைந்து போனார்.
நிரஞ்சனாவை பற்றி பூவுப்பாட்டி காலையில் தான் அவரிடம் கூறியிருந்தார். ஏற்கனவே தன்னால், தனது புகுந்த வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைகள், தீராமல் அப்படியே இருக்க, மீண்டும் தான் பெற்ற மகளால், புதிதாக உருவாகி இருக்கும் இந்த பிரச்சினையை எண்ணி, மனம் துவண்டார்.
சரி விதி ஆடும் ஆட்டத்தில், யாருக்கு யார் என்பது இறைவன் போட்ட முடிச்சு, அதை யாரால் மாற்ற முடியும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே, அவள் மேலும் பேசியதை கேட்டு அதிர்ந்து நின்றார்.
அதுவும் அவள் தாலி மற்றும் குங்குமத்தை பற்றி கூறியது, தனது வளர்ப்பு பொய்த்து விட்டதோ என்று அந்த தாய் மனது நொறுங்கிப் போனது..
அப்படியே நெஞ்சை பிடித்துக் கொண்டு கோவிலில் சரிந்தவரை, அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
டாக்டர்கள் அவரை பரிசோதித்துவிட்டு இது அவருக்கு மைல்டு அட்டாக் என்று கூறினர்.
அவரின் மன அழுத்தமும், எதிர்பாராத அதிர்ச்சியும் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறினர். மீண்டும் இது போன்று அதிர்ச்சியான தகவல்கள் எதுவும் அவரை நெருங்காமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
குடும்பத்தினர் அனைவரும் லக்ஷ்மியம்மாவை காண உள்ளே செல்ல, மெதுவாக கண்விழித்தவர் தன் மகளைக் கண்டு, முகத்தை திருப்பிக் கொண்டு, கத்த தொடங்கினார்.
“அவள வெளிய போக சொல்லுங்கத்தே. நான் யாரையும் இப்ப பார்க்க தயாரா இல்லை, என்னோட வளர்ப்பு சரியா இல்ல போல, அதனாலதான் பெத்தவங்க கிட்ட கூட சொல்லிக்காம கல்யாணம் பண்ணிக்க அவ முடிவு பண்ணிட்டா.
அது மட்டுமா, எந்த நாட்டுல பிறந்துட்டு தாலியும் நெற்றி நிறைய வைக்கிற குங்குமமும், மதிப்பில்லைன்னு சொல்லிட்டா? எனக்கு அவளைப் பார்க்க இஷ்டம் இல்ல, வெளியே போக சொல்லுங்க.”
“அம்மா நான் சொல்றதை கேளு, அவர்கிட்ட சும்மா விளையாட்டுக்காக தான் சொல்லிட்டு இருந்தேன்.”
“எது விளையாட்டு, தாலி உனக்கு விளையாடும் விஷயமா? குங்குமமும் மாங்கல்யமும் எவ்வளவு புனிதமானதுன்னு தெரியுமா? இந்த நாட்டுல பிறந்த ஒவ்வொரு பொண்ணுக்கும், அது எவ்வளவு முக்கியம்னு உனக்கு தெரியுமா?”
“அம்மா நான் சொல்லறத கேளு.”
“இனி கேட்க என்ன இருக்கு, அதுதான் நீ சொன்னது எல்லாத்தையுமே என் காதால கேட்டுட்டேனே.”
“ஐயோ அம்மா…, நான் சொல்ல வர்றதை கொஞ்சம் கேளு, நீயா எதையும் கற்பனை பண்ணிக்காத. சில விஷயத்துக்காக நான் பொய் சொன்னேன்.”
வடிவுப்பாட்டி தான் மதுவிற்கு ஆதரவாக பேசினார்,
“லட்சுமி மொதல்ல புள்ள சொல்றத, கொஞ்சம் காது கொடுத்து கேளு. அதுக்கு முன்னவே நம்ம புள்ளைய நாமலே சந்தேகப்படலாமா?”
“இதுக்கு மேல என்ன கேட்கிறது. கண்ணால பாத்தாச்சு, அவ வாய்மொழியாகவே கேட்க வேண்டிய அளவுக்கு கேட்டாச்சு. இதுக்கு மேலயும் அவ என்ன சொல்லி, நான் என்னத்த கேட்க. இன்னைக்கு காலையில அவ ரெஜிஸ்டர் ஆபீஸ் போனது உண்மையா, பொய்யான்னு மட்டும் என் மேல சத்தியம் பண்ணி சொல்ல சொல்லுங்க”
“நான் போனது உண்மைதான். ஆனா…”
“போதும் இதுக்கு மேல நீ சொல்ற எதையும் நான் கேட்க வேண்டாம். அத்தை நான் தான் சொல்றனே அவள வெளியே போக சொல்லுங்க. இங்கயே இருந்து என்னை உயிரோட கொல்ல வேண்டாமுன்னு சொல்லுங்க.
அவள பெத்ததுக்கு எனக்காக ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்ய சொல்லுங்க, என்னோட கடைசி ஆசையும் இதுதான்.
இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு பொண்ணுக்கும் மாங்கல்யம் என்கிறது புனிதமானது. அதை கட்டிக்காம குடும்பம் நடத்துவது, ஒரு தப்பான முறையா போய்விடும். தயவு செய்து அவர் கையால, இவ கழுத்துல மாங்கல்யம் வாங்கிட்டு, என் பொணத்தை வந்து பார்க்க சொல்லுங்க.
அப்படி இல்லைனா, அவ என்னை பாக்கவே வரவேண்டாம் வெளிய போக சொல்லுங்க.”
பேசிக் கொண்டிருக்கும் போதே அவருக்கு மூச்சு விட சிரமமாக இருக்க, மூச்சுக்களை பெரிது பெரிதாக இழுத்து விட ஆரம்பித்தார்.
உடனே டாக்டரும் நர்ஸ்களும் அழைக்கப்பட்டு, அவருக்கு மறுபடியும் சிகிச்சை ஆரம்பமானது.
மருத்துவமனை வளாகத்தில் ஐசியூவின் முன்பு, வேந்தன் மற்றும் மதுவின் மொத்த குடும்பமும், லட்சுமியம்மா கண் முழிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு சற்று தள்ளி, கண்களில் கண்ணீர் பெருக, ஐ சி யூ வின் கதவுகளை வெறித்த பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தால் மது. அவளின் இந்த நிலையை பார்த்து, மனம் நொந்தவாரே வாசல் பக்கம் ஒரு பார்வையும் இவளின் மீது ஒரு பார்வையுமாக பார்த்தபடி அமர்ந்திருந்தான் வேந்தன்.
இவளை இந்நிலையில் காணப் பொறுக்காமல், மதுவின் தோழியான வினுவிற்கு தொலைபேசியில் அழைத்து, இந்த ஹாஸ்பிடலில் முகவரியைச் சொல்லி, உடனே வந்து பார்க்குமாறு கூறியிருந்தான். அவளுக்காக தான் வாசலையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
இப்போதைய சூழ்நிலையில் தன்னைவிட, அவளது தோழியின் துணையே அவளுக்கு பக்கபலமாக இருக்கும் என்று உணர்ந்து, வினுவை அழைத்திருந்தான்.
லட்சுமி அம்மாவிற்கு சிகிச்சை அளித்த டாக்டர், வெளியே வந்து அனைவரையும் சத்தம் போட தொடங்கினார்.
“நான் தான் உங்ககிட்ட சொல்லி இருந்தேனே, அவங்களுக்கு மேல மேல பிரஷரை ஏத்தக்கூடாதுன்னு, திரும்பவும் ஏன் இப்படி பேசி பேசி அவங்க உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துறீங்க. இப்ப அவங்களை ஐ சி யு குள்ள கண்டிப்பா அட்மிட் பண்ணியே ஆகணும்.”
லட்சுமி அம்மா ஐ சி யு வில் அட்மிட் செய்யப்பட்டார் பல உபகரணங்களின் உதவியால் சீராக மூச்சு விட ஆரம்பித்தார்.
நடந்ததை நினைத்துப் பார்த்த மதுவிற்கு தன்நிலையை எண்ணி, அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.
பிறருக்கு நன்மை செய்ய வேண்டி ஒரு பொய்யை சொல்ல போக, அது தனக்கே இப்படி வினையாக முடியும் என்று, அவள் சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லை.
அதைவிட தனது குடும்பம், தன் மீது வைத்த நம்பிக்கை இவ்வளவுதானா என்று என்னும்போது, அவளுக்கு மனம் கனத்துப் போனது.
தனது வாய்மொழியாகவே கேட்டாலுமே, இவர்கள் தங்கள் வீட்டுப் பெண் அப்படி எல்லாம் செய்ய மாட்டாள், என்று கூற வேண்டாமா? இது தான் அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையா? என்று அவள் மனது அவளிடமே கேள்வி கேட்டது.
அது மட்டுமா தன் உடன் பிறந்தோனும் தன்னை பெற்றெடுத்தவருமான தந்தையுமே, தன்னிடம் இன்னும் இது பற்றி, ஒரு வார்த்தை கேட்கவில்லையே, அவர்களும் என்னை நம்பவில்லையோ? என்று மனம் வெதும்பினாள்.
அமுதனால் இன்னும் நம்ப முடியவில்லை கோயிலில் பேசியது தனது தங்கைதானா என்று. அதுவும் தங்களுக்கு தெரியாமல் அவள் பதிவுத் திருமணம் செய்து கொண்டால் என்று அவனால் நம்பவே முடியவில்லை.
பூவுப்பாட்டிக்கு வடிவுப்பாட்டி ஆறுதல் கூறிக் கொண்டிருக்க, தளர்ந்து போய் அமர்ந்திருந்த, தனது தந்தையை ஆறுதல் படுத்த அவரோடு அமர்ந்திருந்தான் அமுதன். இதனால் தன் தங்கையிடம் சென்று பேச அவனால் முடியவில்லை.
ஒருவேளை தனது தங்கைக்கும் வேந்தனுக்கும் முன்பே அறிமுகம் இருக்குமோ, என்ற சந்தேகமும் அவனுக்கு தோன்றாமல் இல்லை.
அவசரமாக மருத்துவமனை வளாகத்தில் நுழைந்த வினு, நேராக மதுவிடம் சென்று அமர்ந்தாள்.
“என்னாச்சு மது?”
“யாருக்கும் தெரியாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டேன். அது தெரிஞ்சதால அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சு.”
“கண்டிப்பா இருக்காது, எங்களுக்கு தெரியாம இதை நீ செஞ்சிருக்கவே மாட்டே, ஏதாவது ஒரு சிச்சுவேஷனா இருந்திருக்கலாம். அதனால நீ பொய் சொல்லி இருக்கலாம், அது தெரியாம அம்மா இதை உண்மைனு நினைச்சுட்டாங்களா? சரி விடு அம்மா திரும்ப வந்ததும் நம்ம சொல்லி புரிய வச்சுக்கலாம்.”
ஐ சி யூ வின் கதவுகளை வெறித்துக் கொண்டிருந்த மதுவின் பார்வை, வினுவிடம் திரும்பியது. அவளை கட்டிக்கொண்டு கதறி அழ தொடங்கினாள்.
வினு பேசியதை கேட்ட கனியமுதனுக்கு, தான் ஏன் அவ்வாறு நினைக்கவில்லை என்று, மனது உறுத்தியது.
“அடடா மது குட்டி, எதுக்காக இப்போ டேமை இப்படி ஓபன் பண்ணிட்டு இருக்க, லட்சும்மா ரொம்ப தான் உன்னை திட்டிட்டாங்களோ, விடு அவங்க வந்ததும் நாம ரெண்டு பேரும் சேர்ந்து, அவங்களை ஒரு கை பார்த்துக்கலாம் சரியா அழக்கூடாது.”
தோழியை தனது சேய்யாக்கி தன் மடி மீது தாங்கிக் கொண்டாள் வினு. அவள் மன பாரம் போக்க, வேறு கதைகளை பேசி அவளை திசைதிருப்பத் தொடங்கினாள்.
வினுவின் வரவால் தனது மனதை நிலைப்படுத்திக் கொண்ட மதுவிற்கு, அப்போதுதான் நினைவு வந்தது.
“ஆமா வினு நான் உனக்கு கால் பண்ணவே இல்லையே? உனக்கு எப்படி தெரியும், நான் இந்த ஹாஸ்பிடல்ல தான் இருக்கேன்னு? அண்ணா கூப்பிட்டு இருந்தானா?”
தன் அண்ணன் தனக்காக வினுவை வரவழைத்து இருப்பானோ என்று ஆர்வத்தோடு மது கேட்க,
“இல்ல மது, வேந்தன் சார் தான் எனக்கு கூப்பிட்டு இருந்தாரு. உடனே இங்க என்னை வர சொன்னாரு.”
அப்போதுதான் மதுவிற்கு வேந்தனின் குடும்பமும் இங்கே இருப்பது நினைவுக்கு வந்தது. உடனே திரும்பி வேந்தனை தேடியவள், தனக்கு சற்று தள்ளி நண்பர்கள் புடை சூழ நின்று கொண்டு, தன்னை பார்த்துக் கொண்டிருக்கும் வேந்தனை கண்டாள்.
அவனைக் கண்டவுடன் மறுபடியும் நடந்தது அனைத்தும் நினைவிற்கு வர, கண்களில் மீண்டும் கண்ணீர் சூழ்ந்தது. தனது உதட்டை கடித்து அழுகையை அடக்கி கொண்டவளை வேந்தன், சூழ்நிலை அறிந்து கண்களாலே அவளுக்கு ஆறுதல் கூற தொடங்கினான்.
வேந்தன் அவனது வலது கையை நெஞ்சில் வைத்து, கண்களை மூடி திறந்து, அனைத்தையும் தான் பார்த்துக் கொள்வதாக, விழி வழியே அவளுக்கு செய்தி அனுப்ப, புரிந்து கொண்டு சரியென்று அவளும் தலையை அசைத்தாள்.
இடது கையால் இதழ்களுக்கு நேராய் வைத்து ஸ்மைலி என்று சைகை அனுப்ப, அவளும் மென்னகை புரிந்தாள்.
இவர்களின் விழி மொழியினை அங்குள்ளவர்களும், பார்த்துக் கொண்டுதான் இருந்தனர், ஆனால் அனைவரின் மனதிலும் தோன்றியது ஒன்றுதான், ஒருவேளை லட்சுமி அம்மா கூறியது உண்மை தானோ என்று.
இவ்வளவு நேரமும் ஒருவேளை லட்சுமி அம்மா, தவறாக புரிந்து கொண்டாரோ என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, இவர்களின் இந்த அன்னியோன்யத்திலேயே தெரிந்தது, இருவருக்கும் இடையே இருக்கும் புரிதல்.
அப்போதே சுந்தரமூர்த்தி ஐயா ஒரு முடிவு எடுத்துவிட்டார். அதை பற்றி மதுவின் தந்தையிடம் பகிர்ந்து கொள்ள, அவரை நோக்கி சென்றார்.
வினு உள்ளே நுழையும் போதுதான் வேந்தனின் நண்பர்களும் மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.
விஷயம் அறிந்தவர்கள் மருத்துவமனைக்கு வந்து, வேந்தனை முறைத்துக் கொண்டே, அவனை சுற்றி நின்று கொண்டிருந்தனர்.
ஆனால் வேந்தன் அவர்களை கண்டு கொள்ளவே இல்லை. அவனது பார்வை மொத்தமும் மதுவின் மீது மட்டுமே இருந்தது.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


மது இன்னும் வேந்தன் மேல தப்பு இல்ல அப்படின்னு நினைச்சுட்டு இருக்கு போல … மாட்டும் போது இருக்கு வேந்தனுக்கு …
கண்டிப்பாக இருக்கு 😊