
வேந்தன் மதுவை அமிர்தலிங்கேஸ்வரர் கோவிலுக்கு அழைத்துச் வந்திருந்தான்.
“எப்படி கரெக்டா நான் அடிக்கடி வர இந்த கோயிலுக்கே, என்னை கூப்பிட்டு வந்து இருக்கீங்க?”
“கேட்டு தெரிஞ்சுக்கிட்டதால தான்.”
“என்ன சொன்னீங்க?”
“இல்லைங்க என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் கேட்டப்ப, இது ஃபேமஸான கோவில்ன்னு சொன்னாங்க. அதனாலதான் இங்க வந்தேன்.”
“சரி ஒரு நிமிஷம் சார், நான் போய் பூ வாங்கிட்டு வந்துடறேன்.”
வேந்தன் தனது அலைபேசியில் இருந்து வடிவுபாட்டிக்கு அழைத்தான்.
“ஆத்தா வீட்ல எல்லாம் கிளியரா, நானும் மதுராவும் வீட்டுக்கு வரும்போது வீட்ல யாரும் இருக்க மாட்டீங்க தானே. “
“ஆமா ராசா வீட்ல இருக்குறவங்களையும், ஊர்ல இருந்து வந்தவங்களையும் கூட்டிக்கிட்டு தான் வெளியே வந்திருக்கேன்.”
“எது ஊர்ல இருந்து வந்திருக்காங்களா?”
“அது…அதுதான் உனக்கு தெரியுமே ராசா, நான் உங்க தாத்தாகிட்ட எதுவுமே மறைச்சதில்லையே. அதுதான் காலையில நீ கிளம்புனதுமே, ஐயாக்கு போன் பண்ணி நடந்த விஷயம் எல்லாத்தையும் சொல்லிட்டு, இந்த வீட்டு அட்ரஸையும் அமுதன்கிட்ட கேட்டு சொல்லிட்டேன்.”
வடிவு பாட்டி தான் இருக்கும் இடத்தையும், நடந்த விஷயங்களையும் மூர்த்தி ஐயாவுக்கு போனில் அழைத்துக் கூறிவிட்டார்.
விஷயம் அறிந்ததும் அங்குள்ள அனைவருமே, சிவராமனின் இல்லத்திற்கு கிளம்பிவிட்டனர். ஆனால் இந்த விஷயம் இன்னும் மேலூரில் உள்ள யாருக்கும் தெரியாது.
வேந்தன் முன்பே வடிவுப்பாட்டியிடம், தான் இன்று நடத்தப் போகும், அத்தனை நாடகத்தையும் கூறிவிட்டான். அவருக்கும் இதில் மகிழ்ச்சி தான்.
அவர் நேரடியாகவே அனைவரின் சம்மதத்தோடு, திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று கூற, அவன் இது நடக்காத காரியம், முதலில் சிவராமன் மாமா ஊருக்கு வர ஒத்துக்கொள்வாரா என்று பாருங்கள் என கூறினான்.
நடந்ததும் அதுதான், வடிவு பாட்டியும், பூவுப்பாட்டியும் எவ்வளவோ எடுத்துக் கூறியும், சிவராமன் தன் தந்தையின் அனுமதி இன்றி, அந்த வீட்டினுள் கால் எடுத்து வைக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார்.
அதையும் மீறி ஊரில் வேலப்பன் ஐயாவின் இல்லத்தில் தங்காமல் வெளியே எங்காவது தங்கிக் கொள்ளலாமே என்று கூறியதற்கு, அது தன் தந்தைக்கு மரியாதையாக இருக்காது என்று முற்றிலுமாகவே மறுத்து விட்டார்.
“சுத்தம், எதுக்கு ஆத்தா இப்படி அவசரப்பட்டு சொன்னே, ஒரு வேலை மேலூர்காரங்களுக்கு தெரிஞ்சா பிரச்சனையாகுமில்ல.”
“அதுக்குன்னு எத்தனை நாள் ராசா இப்படியே இவங்கள ஒதுக்கி வைக்கிறது. அதோட நீ சொன்ன மாதிரி தான் சிவராமனும் சொன்னான். அவங்க அப்பா சம்மதம் இல்லாம அவன் அந்த ஊர் பக்கம் வரமாட்டானாம். பாவம் அவன் இதை சொல்லும் போது என்ற அண்ணி முகம் எப்படி வாடி போச்சு தெரியுமா?”
“சரி சரி ஆத்தா ஊர்ல இருந்து எல்லாருமே வந்து இருக்காங்களா?”
“ஆமாப்பா ஆனா அந்த மூர்த்தி பயல தான் காணோம். அவன் பொண்டாட்டியும் ஆத்தாவும் கூட வந்துட்டாங்க, இவன் எங்க போனான்னு தெரியலையாம்.”
“சரி ஆத்தா மதுரா வர்றா, நான் போன வைக்கிறேன்.”
“ராசா கூடிய சீக்கிரமே என் பேத்திகிட்ட எல்லா உண்மையையும் சொல்லீருப்பா. நீ இப்படி பொய்க்கு மேல பொய்யா சொல்லி, வாழ்க்கைக்கு அச்சாரம் போடறது, அவ்வளவா நல்லது இல்லப்பா.”
“சரி ஆத்தா கண்டிப்பா சொல்லிடறேன். நான் எதையும் காரணம் இல்லாமல் செய்ய மாட்டேன்னு, உங்களுக்கு தெரியாதா?”
“எனக்கு உன்ன பத்தி தெரியாதா ராசா, இந்த விஷயத்தால, உங்க ரெண்டு பேருக்குள்ள, எதுவும் பிணக்கு வந்திடக்கூடாதுன்னு தான் பார்த்தேன். சரிப்பா நான் போனை வைக்கிறேன். பார்த்து சூதானமா இருங்க.”
“போலாமா சார், ஆமா உங்க பிரண்டோட முழு பெயர் என்ன? இன்னைக்கு லாவண்யா மேடமுக்காகவும் உங்க பிரண்டுக்காகவும் தான், இந்த கோயிலுக்கே நாம வந்து இருக்கோம். அதுதான் அவங்க பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணிடலாமேன்னு கேட்டேன்.”
அப்போது தூரத்திலிருந்து கண்ணாடி அணிந்த ஒரு டிப்டாப்பான முதியவர் வேந்தனை நோக்கி கையசைத்து, அவனிடம் வந்தார்.
“என்னப்பா வேந்தா நல்லா இருக்கியா? என்ன வீட்டு பக்கமே வர மாட்டேங்குற?”
“அது அப்பா கொஞ்சம் வேலை பிசி அதுதான், வீட்டுக்கு வர முடியல. ஆனா சந்துருவ அடிக்கடி நான் வெளியே மீட் பண்ணிட்டுத்தான் இருக்கேன். வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களாப்பா?”
அவர்கள் பேசிக்கொண்டே நடந்து கோவிலினுள் வந்திருந்தனர்.
“எல்லாரும் நல்லா இருக்காங்கப்பா. சரி வா நாம அப்படியே உள்ள போகலாம்.”
வேந்தனுடன் வந்த மதுவை, அப்போதுதான் கவனித்தார் சந்துருவின் தந்தை.
“ஆமா வேந்தா இந்த பொண்ணு யாரு?”
சரியாக அந்த நேரத்தில் அவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வர,
“வாட் என்ன சொல்றீங்க? என் பையன் சந்துருவ ரெஜிஸ்டர் ஆபீஸ்ல பாத்திங்களா? அதுவும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ற இடத்துலயா? கையெழுத்து போட்டுட்டு இருந்தானா?”
மதுவும் வேந்தனும் அதிர்ச்சியாகி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“சார் இவர்தான் உங்க பிரண்டோட அப்பாவா?”
“ஆமா, இப்போ இவருக்கு மட்டும் இவங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க போற விஷயம் தெரிஞ்சா, லாவண்யாவோட அப்பா கிட்ட டைரக்டா போய் பேசணும்னு சொல்லுவாரு.”
“ஆமா ஆமா லாவண்யா மேடம் தான் சொன்னாங்களே, இவர் நேர்மைடா நியாயம்டா உண்மைடான்னு வாழ்ற நாட்டாமையோட மறு அவதாரம்னு. முறைக்காதீங்க சார் வாய் தவறி உண்மையை சொல்லிட்டேன்.”
“இப்ப என்ன பண்றது, ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு எதுக்காக அவன் போனான்னு சொல்றது.”
அதற்குள் அவர் போனை வைத்துவிட்டு கோபமாக திரும்பினார் இவனிடம்,
“கேட்டியா வேந்தா சந்துரு பண்ண காரியத்தை, உன் பிரண்டு ரிஜிஸ்டர் ஆபீஸ்ல இருக்கானாம். இவனுக்கு என்ன அங்க வேலைன்னு கேட்கறேன். போன் போட்டாலும் எடுக்க மாட்டேங்கறான், இரு நானே போய் என்னன்னு பார்க்கறேன்.”
“அப்பா சந்துரு எனக்காக தான் அந்த ஆபீஸ்க்கு வந்தான். ஆக்சுவலா எங்க ரெண்டு பேருக்கும் இன்னைக்கு தான் அங்க ரிஜிஸ்டர் மேரேஜ் நடந்துச்சு. அப்படித்தானே?”
இவன் திடீரென்று கூறிய பொய்யில் அதிர்ந்து நின்ற மது, அவன் தலையாட்டி கொண்டே இவளிடம் வினவ, அவளும் அதே போல் தலையை ஆட்டி வைத்தாள்.
இவன் நடத்தும் நாடகத்தைக் கண்டு கருவறையிலிருந்த லிங்கத் திருமேனியரும், மர்ம புன்னகை புரிந்தாரோ! இனி அடுத்த நொடி முதல் எனது திருவிளையாடல் ஆரம்பம் என்று.
அடப்பாவி மனுஷா, நின்னுட்டு இருந்த உன் வண்டி மேல வந்து மோதுனது ஒரு குத்தமாய்யா, நானும் காலையில் இருந்து எத்தனை அதிர்ச்சியை தான் தாங்குவேன். இவர் சொல்ற எத்தனை பொய்க்குத் தான் நான் ஒத்து ஊதுவேன். நானும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது
ஆண்டவா, இவர் என்ன எனக்கு மேல இருப்பார் போலயே, கோவில்ல நின்னுகிட்டு இப்படி புளுகுறாரே? பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதுன்னு சொல்லுவாங்க, இவர் உருட்டற உருட்டுக்கு தவிச்ச வாய்க்கு தண்ணி கூட கிடைக்காது போலயே? மது தன் கால்களை உந்தி வேந்தன் காதில் கிசுகிசுத்தாள்,
“மிஸ்டர் எம்டி சார் இன்னும் எனக்கு எத்தனை பட்டத்தை தான் வாங்கி கொடுக்க போறீங்க, காலையில ஹாஸ்பிடல்ல எனக்கு கர்ப்பம்னு சொல்லி தான், லாவண்யா மேடமை பார்க்க கூட்டிட்டு போனீங்க, இப்போ உங்களை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணகிட்ட பொண்டாட்டின்னு என்னை சொல்றீங்க, அடுத்து என்ன வளைகாப்பா? இல்ல டைரக்டா லேபர் வார்டுக்கு பிரசவத்துக்காக என்னை கூட்டிட்டு போக போறீங்களா?”
மது பற்களின் இடையே வார்த்தைகளை கடித்து துப்ப, வேந்தன் ஒரு அசட்டுப் புன்னகையை மட்டுமே அவளுக்கு பதிலாக கொடுத்தான்.
பெரியவர் இவர்களை சந்தேகமாக பார்க்க,
“அதுப்பா நீங்க யார்ன்னு கேட்கறா? இன்னைக்கு காலையில நடந்த, நம்ம கல்யாணத்துக்கு சாட்சி கையெழுத்து போட்டானே சந்துரு, அவனோட அப்பா தான்மா இவரு”
மது ஒரு சைஸாக, அவனை முறைத்துக் கொண்டே தலையை உருட்டி வைக்க,
“பாத்தீங்களாப்பா எங்களுக்காக சாட்சி கையெழுத்து போடத்தான் சந்துரு அங்கே வந்திருந்தான்.”
“இல்லப்பா வேந்தா, ஏற்கனவே ஹாஸ்பிடலையே ரெண்டு பேர் சொன்னாங்க, இவன் ஏதோ ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க போறதா போன்ல பேசிட்டு இருந்தானாம். நான் அதை நம்பல. ஆனா, இப்போ எனக்கு சந்தேகமா இருக்கு. எனக்கு உன்ன பத்தி தெரியும்ப்பா, நீ உன் குடும்பத்துக்கு தெரியாம, கண்டிப்பா இப்படி கல்யாணம் பண்ணிக்க மாட்டே, நீ உன் ஃப்ரெண்டை காப்பாத்தறதுக்கு வேண்டி பொய் சொல்லாத?”
இப்போது மது அவரிடம் பேச ஆரம்பித்தாள்,
“சார் அவர் சொல்றது உண்மைதான் எங்க ரெண்டு பேத்துக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்றதுக்கு சாட்சி கையெழுத்து போடுறதுக்காக தான், அவர் அங்க வந்திருந்தார். நீங்க வேணா உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது ரிஜிஸ்டர் ஆபீஸ்ல இருந்தா கேட்டு பாருங்க, உங்க பையன் மட்டும் இல்ல, அவரோட சேர்த்து இவரோட பிரண்ட்ஸ்ங்க இன்னும் ரெண்டு பேர் அங்க வந்திருந்தாங்க.”
“அப்ப உங்களுக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் முடிஞ்சிருச்சுன்னு சொல்றீங்க அப்படித்தானே?”
“ஆமா சார் ஆமா.”
“அப்போ வாங்க, இப்பவே என் கண்ணு முன்னாடி ரெண்டு பேரும் தாலி கட்டி தம்பதியர் ஆகிடுங்க, என்ன? ரெண்டு பேரும் திருதிருனு முழிக்கிறீங்க வாங்க.”
மது அவர் கூறியதில் அதிர்ச்சியாகி பிரம்மை பிடித்தது போல் நின்றுவிட, வேந்தன் அவளுக்கு பின்னால் சென்று நின்று கொண்டு, அவன் ஏற்பாடு செய்த சந்துருவின் போலி அப்பாவை நோக்கி கட்டைவிரலை உயர்த்தினான்.
கோயிலினுள் அடித்த மணி சத்தமே மதுவை தன்னிலைக்கு கொண்டு வந்தது. தனக்கு முன், நின்று கொண்டிருந்த அந்த பெரியவரை பார்த்து தெளிவாக பேச தொடங்கினாள்.
“இங்க பாருங்க சார் தாலி கட்டி, மாலை மாத்தி கல்யாணம் பண்ணனும்னா, நாங்க அதை அங்க ரிஜிஸ்டர் ஆபீஸ்லயே பண்ணி இருப்போமே? எங்களுக்கு அதுல எல்லாம் நம்பிக்கை இல்லை. அதனாலதான் ரெஜிஸ்டர் ஆபீஸ்ல கையெழுத்து மட்டும் போட்டு, எங்க திருமணத்தை உறுதி பண்ணிக்கிட்டோம்.
இவருக்காக தான் நான் கோயிலுக்கே வந்திருக்கேன். எனக்கு இந்த தாலி கட்டிக்கிறது, குங்குமம் வச்சிக்கிறது இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை போதுமா.
இதுக்கு மேல நீங்க நம்பினாலும் சரி நம்பாட்டியும் சரி, நான் சொல்றது ஒன்னு தான், எனக்கும் இவருக்கும் இன்னைக்கு காலைல தான் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம் நடந்தது. அதுக்கு சாட்சி கையெழுத்து உங்க பையனோட சேர்த்து இவரோட பிரண்ட்ஸ் ரெண்டு பேர் தான் போட்டாங்க போதுமா.”
“மதூஊஊஊஊ….”
தனக்கு பரிச்சயமான அந்த குரலைக் கேட்டு திரும்பிய மது, அங்கே தன் அன்னையைக் சற்றும் எதிர்பார்க்காததால் அவரை கண்டு அதிர்ந்து நின்றாள்.
வேந்தனும் கூட இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை, அவன் போலி அப்பாவை ஏற்பாடு செய்ததே மதுவின் நெற்றியில், தன் கைகளால் குங்குமம் இட வேண்டும் என்ற காரணத்தால் தான், அவன் ஒன்று நினைத்து செய்ய போக இப்படி ஆகும் என்று, அவன் கனவிலும் எண்ணி பார்க்கவில்லை.
இவள் தன் அன்னையை நெருங்கி செல்லும் முன்னேயே, லட்சுமியம்மா நெஞ்சை பிடித்துக் கொண்டு மயங்கி சரிய தொடங்கியிருந்தார். கீழே விழ போனவரை பூவுப்பாட்டி தன் கைகளில் தாங்கிக் கொண்டார்.
மதுவின் குடும்பம் மட்டுமல்ல வேந்தனின் ஒட்டு மொத்த குடும்பமும் அங்கு தான் இருந்தது.
காரிருள் பூசிய நெடுஞ்சாலைதனில், கண்களில் கண்ணீர் பெருகி பாதையை மறைக்க, அதைப் புறங்கையால் துடைத்துக் கொண்டே, நிரஞ்சனா தலை தெறிக்க ஓடிக்கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்திற்கு முன் தான் அவள் கண் விழித்திருந்தால், தான் எங்கிருக்கிறோம் என்று, அந்த இருட்டில் எரியும் தீபங்களின் உதவியோடு பார்த்தாள்.
ஒரு கொடூரமான சிலையின் முன்னால் தான் படுக்க வைக்கப்பட்டு இருப்பதையும், தன்மீது ஏதோ துர்நாற்றம் வீசுவதையும் உணர்ந்தாள்.
நன்கு கண்களை தேய்த்துக் கொண்டு பார்த்தபோது தான் தெரிந்தது, அங்கு இருப்பது அத்தனையும் ரத்தம் என்று.
எப்படி தனக்கு இந்த நிலை ஏற்பட்டது என்று யோசித்தபோது எதுவுமே புரிபடவில்லை.
மனமானது தான் எப்போதுமே உதாசீனப்படுத்தும், தன் குடும்பத்தின் அருகாமையை தேடியது.
கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்து கொண்டேயிருந்தது. இது அழுவதற்கான சூழல் அல்ல என்று புரிந்து கொண்டு, யாரோ வரும் அரவம் கேட்டு கண் மூடி படுத்துக் கொண்டாள்.
அரை கண்ணை திறந்து அவள் பார்த்தபோது, மந்திரவாதிகள் போன்று இருந்த சிலர், அங்குள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே சென்று கொண்டிருந்தனர்.
வந்தவர்களில் சிலர் இவளை தூக்கி சென்று, ஒரு காரில் படுக்க வைத்துவிட்டு அந்த கட்டிடத்தின் உள்ளே சென்றனர்.
அவர்கள் அனைவருமே உள்ளே சென்றது இவளுக்கு வசதியாகப் போக, உடனே கார் கதவினை திறந்து கொண்டு அந்த கட்டிடத்தை விட்டு ஓட ஆரம்பித்தாள். திக்கு தெரியாமல் கிடைத்த வழிதனில் கண்ணுக்குத் தெரிந்த வழியில் ஓடினாள்.
அந்தப் பாதை நேராக ஒரு நெடுஞ்சாலையை சென்று சேர, அங்கு யாரிடமாவது உதவி கேட்கலாம் என்று அந்த சாலையில் தொடர்ந்து ஓடத் தொடங்கினாள்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


என்னடா இது மன்னவனுக்கு வந்த சோதனை … சோலி முடிஞ்சு … மது ருத்ர தேவியா மாற போறா …
நிரஞ்சனா உனக்கு இது தேவையா மா …
மகா காளியாவே ஆகிடுவா விஷயம் தெரிஞ்சா 🤣