
“ரெண்டு நாளைக்கு முன்னாடி கிடைச்ச, இந்த சிசிடிவி ஃபுட்டேஜ் வச்சு தான், உங்க வண்டி நம்பரை கண்டுபிடிச்சோம்.
இன்னைக்கு காலையில் தான் என் கைக்கு உங்க அட்ரஸ் வந்துச்சு. ஆனா பாருங்களேன் தேடுற ஆளே முன்னாடி வந்து உக்காந்திருக்காங்க.
ஆனா இதுல வினோதினின்னு இல்ல ஓனர் பேர் போட்டு இருக்கு, ஓஓஓ… அப்போ உங்க பிரண்டு வினோதினியோட வண்டில வந்து தான், என் வண்டி மேல இடிச்சீங்களா மிஸ் மதுரம்?
ஆனா அந்த போலீஸ்காரர் கூட, லைசன்ஸ்ல இருந்த பேர் வினோதினின்னு தானே சொன்னாரு, அப்போ லைசன்ஸ் கூட இல்லாம தான் நின்னுட்டு இருந்த வண்டி மேல வந்து இடிச்சி இருக்கீங்க, அப்படித் தானே மிஸ் மதுரம்.”
மது இதுக்கு மேல அமைதியா இருந்தா வேலைக்கு ஆகாது, விட்டா என்னோட ஹிஸ்டரி ஆஃப் லைஃபையே புட்டு புட்டு வைப்பான் போல, அவனும் தானே வண்டியில ஒன்வேல வந்து தப்பு பண்ணுனான், பொறுத்தது போதும் மது பொங்கி எழு.
அவள் பேச வாய் எடுக்க, அதற்கு முன் அவன் பேச ஆரம்பித்து விட்டான்.
“இந்த அட்ரஸ் உங்களோடது இல்லையா மிஸ் மதுரம்? உங்களை இப்போ பார்க்காமல் இருந்திருந்தா, இந்த அட்ரஸ்க்கே நேரா இன்னைக்கு போயிருப்பேன்.”
“இப்போ என்னதான் பண்ணனும்னு சொல்றீங்க மிஸ்டர் எம்டீ சார்? நீங்க என் அப்பாவை பத்தி பேசினதால தான், நான் அப்படி நடந்துக்கிட்டேன்?”
“இது என்ன உங்க அப்பன் வீட்டு ரோடான்னு முதல்ல கேட்டது யாரு?”
“ப்ச்சு சரி, நான் தானே உங்க வண்டி மேல இடிச்சேன், என் ஃப்ரெண்டை எதுக்கு இழுக்கறீங்க?”
“பட் அது எனக்கு தெரியாதே, இப்பதானே இது உங்க பேரு இல்லைன்னே தெரியுது.
அது மட்டுமா, வண்டியும் உங்களோடது இல்ல, லைசென்ஸ் உங்ககிட்ட இல்ல, அதோட என் கார் ஹெட் லைட்டையும் உடைச்சு இருக்கீங்க.
அட சொல்ல மறந்துட்டேன் பாருங்க, அங்க பாருங்க முக்கியமா நீங்க தலையில ஹெல்மெட்டே போடல. இப்போல்லாம் ஹெல்மெட் போடலைன்னா என்ன அபராதம்ன்னு தெரியும் இல்ல, அதோட லைசென்ஸ் இல்லாம வண்டியை ஓட்டிட்டு வந்து இருக்கீங்க, கூட்டி கழிச்சு பார்த்தா எவ்வளவு அமௌன்ட் வரும்னு நீங்களே நல்லா… கணக்கு பண்ணி சொல்லிடுங்க மிஸ் மதுரம்.”
“இப்போ என்ன உங்களுக்கு பிரச்சனை? இதை செட்டில்மெண்ட் பண்ணனும் அவ்வளவு தானே.
இப்போ நான் உங்களுக்கு செஞ்சு கொடுக்க போற, இந்த வேலைக்கான சம்பளத்தில் இருந்து, இதை பிடிச்சுக்கோங்க.”
“பட் இந்த ஒர்க் உங்க முதலாளியோட டையப் பண்ணி இருக்கேன். சோ இதிலிருந்து என்னால பிடித்தம் செய்ய முடியாது.”
மதுவின் பொறுமை, காற்றில் கரையும் கற்பூரம் போல, கரைந்து கொண்டிருந்தது
“இப்படி சந்து பொந்துக்குள்ள புகுந்து சுத்தாம, நேரடியா விஷயத்துக்கு வர்றீங்களா, மிஸ்டர் எம்டீ சார்.”
“மிஸ் மதுரம், ஒன்னு என்னோட பணத்தை எண்ணி வையுங்க. இல்லைன்னா என் ஆபீஸ்ல வொர்க் பண்ணி இந்த கடனை அடைங்க.”
“இந்த ரெண்டுமே, என்னால செய்ய முடியாதுன்னு சொன்னா?”
“சிம்பிள், நேரா போலீஸ் ஸ்டேஷன் போய், இந்த எல்லா டீடைல்ஸ்சையும் சாட்சியா கொடுக்க வேண்டியது தான்.”
“பிளாக் மெயில் பண்றீங்களா?”
“வாட், என் பணத்தை நான் கேட்டா, உங்களுக்கு பிளாக் மெயிலா தெரியுதா?”
மதுவுக்கும் புரிந்தது தன் மீது தான் தவறு என்று, இருந்தாலும் அவன் பேசிய பேச்சுக்கு, தான் கொடுத்த பதிலடி சரிதான் என்றும் இன்னொரு மனது கூறியது.
ஆனாலும், தான் செய்த தவறுக்கு, தன் தோழியை இதில் சிக்க வைக்க விரும்பவில்லை. எனவே ஒரு முடிவோடு பேச ஆரம்பித்தாள்.
“என்ன மாதிரி வொர்க்ஸ்?”
“குட், நல்ல முடிவு தான் எடுத்திருக்கீங்க. மோஸ்ட்லி என்னோட பிஏ வா இருக்க வேண்டி இருக்கும். நான் இதுவரைக்கும் யாரையும் அசிஸ்டன்ட்டா வெச்சுக்கிட்டதில்ல.”
“மேபி உங்களால், என்னோட ஒர்க் பிரஷர் குறைஞ்சுதுன்னா, நீங்களே இந்த போஸ்டிங்கில் கண்டின்யூ பண்ணலாம் மிஸ் மதுரம்.”
“நோ தேங்க்ஸ் மிஸ்டர் எம்டீ சார். நான் உங்க கடனை அடைக்கிற வரைக்கும், இந்த போஸ்டிங்ல கண்டின்யூ பண்ணாலே போதும்.
ஆனா என்னோட ஆபீஸ்ல இருந்து இங்க எங்களை, உங்க கம்பெனி அக்கௌன்ட் பார்க்க தானே அனுப்பி இருக்காங்க , அங்க என்ன சொல்லுறது?”
“ரெகுலர் டைம்ல உங்க பிரண்டோட சேர்ந்து அக்கவுண்ட்ஸ் பாருங்க. பட் எனக்கு அசிஸ்டன்ட் தேவைப்படும்போது, நான் கூப்பிடும் போதெல்லாம் நீங்க வந்தாகணும். முறைக்காதீங்க மிஸ் மதுரம், நான் அசிஸ்டன்ட்டா தான் வரச் சொன்னேன்.
ஓகே, அப்போ நாளைக்கு காலையில ஒரு ஏழு மணிக்கே ஆபீஸ் வந்துடுங்க.”
அப்போது வேந்தனுக்கு தொலைபேசி அழைப்பு வர, அதை எடுத்துப் பேசியவன் பதட்டமானான்.
“ஹலோ…..”
“……”
“ஆத்தா, முதல்ல அழாமல் பேசுங்க.”
“……”
“எந்த ஹாஸ்பிட்டல்?”
“…..”
“சரி நான் இதோ வரேன், முதல்ல நீங்க அழுகறத நிறுத்துங்க. ஒன்னும் ஆகாது நான் இதோ வந்துகிட்டே இருக்கேன்.”
தனது மேனேஜரை போனில் அழைத்தான் வேந்தன். அவருடன் சேர்ந்தே ராகுலும் வினுவும் அறைக்குள் நுழைந்தனர்.
“முத்து அண்ணா, இவங்களுக்கு நம்ம அக்கவுண்ட்ஸ் புக் எடுத்து கொடுங்க, ஒரு க்ளான்ஸ் இன்னைக்கு பார்க்கட்டும். நாளையிலிருந்து ஒர்க் ஆரம்பிச்சுக்கலாம்.
இன்னைக்கு என்னோட அப்பாயிண்ட்மெண்ட் எல்லாத்தையும் கேன்சல் பண்ணிடுங்க. ஏதாவது அர்ஜெண்ட் ஒர்க்ன்னா மட்டும், எனக்கு கால் பண்ணுங்க.”
மதுவை பார்த்து தலையசைத்து விட்டு, அவன் அவசரமாக வெளியே சென்று விட்டான்.
அறைக்குள் நுழைந்த வினுவிற்கு முதலில் வேந்தனை எங்கோ பார்த்த ஞாபகம் தான். ஆனால் சிறிது நேரத்திலேயே அவனை அடையாளம் கண்டு கொண்டாள்.
அதே அதிர்ச்சியுடன் மதுவை திரும்பிப் பார்க்க, அப்போதுதான் மதுவை பார்த்து தலையை அசைத்து விட்டு கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான் வேந்தன்.
“என்னடா நடக்குது இங்க? போன சீன்ல எலியும் பூனையுமா இருந்தவங்க, இந்த சீன்ல கண்ணுலையே பேசிக்கிறாங்க. இவ வேற அமைதியா பதிலுக்கு தலையசைக்குறா, ஒண்ணுமே புரியலையே.”
வேந்தன் தனது காரினை, ஜிஎம் ஹாஸ்பிடலின் முன்பு சென்று நிறுத்தினான்.
அங்குள்ள ரிசப்ஷனிஸ்டிடம் சென்று,
“இங்க பூவாத்தான்னு ஒரு பேஷண்ட் அட்மிட் ஆயிருக்காங்க. அவங்க எந்த ரூம்ல இருக்காங்க?”
இவனைக் கண்டு அவசரமாக ஓடி வந்த சுகந்தாவின் மகன்கள் மணியும் மகேசும்.
“மாமா நாங்க ரெண்டு பேரும், உங்களுக்காக தான், இங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம். பாட்டி உங்களை பார்த்தா உடனே, உங்ககிட்ட ஒரு விஷயத்தை சொல்ல சொன்னாங்க.”
“வடிவுப்பாட்டியா?”
“இல்ல, பூவுப்பாட்டி.”
“பூவுப்பாட்டியா? அவங்க சீரியஸா இருக்கிறதா தானே எனக்கு போன் வந்தது?”
அதிகாலையிலேயே எழும் பூவுப்பாட்டி நேராக சென்று நிற்பது, வீட்டின் பின்புறத்தில் இருக்கும், கால்நடை தொழுவத்தில் தான்.
வீட்டில் உள்ள மனிதர்களை விட, இங்கு தன் அன்பை எதிர்பார்த்துக் காத்து கிடக்கும், இந்த ஐந்தறிவு ஜீவன்களே தேவலாம் என்று பூவுப்பாட்டிக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது.
வீட்டுப் பொறுப்பை மருமகள்களிடம் ஒப்படைத்து விட்டு, வீட்டு ஆண்கள் வெளியே கிளம்பும் வரை, இந்த ஜீவன்களுடன் தான், பொழுதை போக்குவார்.
அவர் முற்றிலுமாக தவிர்க்க நினைப்பது, தன் கணவரையும் பெற்றெடுத்த இரு மகன்களையும் தான்.
தன் கணவர், தனது இரண்டாவது மகனை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய போது, தான் பெற்ற மற்ற இரு பிள்ளைகளும், தனக்கு துணையாக நிற்கவில்லையே என்ற வருத்தம், இன்று வரை அவர் மனதில் உள்ளது.
அவரின் மகன்களே வலிய வந்து இவரிடம் பேசினாலும், பெற்றெடுத்த பாவத்திற்காக, ஓரிரு வார்த்தைகள் மட்டுமே அளவாக பேசுவார். தன் கணவரிடம் அது கூட இல்லை.
ஆரம்ப காலத்தில் ஒரு மனைவியாக, கணவனுக்கு செய்ய வேண்டிய தேவைகளை செய்துவிட்டு, விலகி நின்று கொள்வார்.
சில வருடங்களாக அதுவும் இல்லை. அவரைப் பார்ப்பதையே முற்றிலுமாக தவிர்த்து வருகிறார்.
வீட்டுப் பெண்களிடமும் பேரக்குழந்தைகளிடமும் மட்டுமே அவரின் பேச்சுவார்த்தை உள்ளது.
மூத்த மகனின் பிள்ளைகள் இருவரும் அதில் விதிவிலக்கு. என்னதான் சிறுவயதில் இருந்தே புத்தி கூறினாலும், தன் கணவரின் குணத்தைக் கொண்டு பிறந்துள்ள அவர்களை, பூவுப்பாட்டியால் திருத்த முடியவில்லை. மனபாரத்தோடு அவர்களிடமும் தனது பேச்சுவார்த்தையை குறைத்துக் கொண்டார்.
தன் அண்ணனுக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படி, தன் மருமகளை பார்த்துக் கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம், இன்னும் அவர் மனதில் நெருஞ்சிமுள்ளாக குத்திக் கொண்டிருக்கின்றது.
அவருக்கு ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம், தனது நாத்தனார் வடிவின் வருகை மட்டுமே, மாதத்திற்கு ஒரு முறை தவறாமல் தனது அண்ணியை பார்க்க வந்து விடுவார்.
தனது மகள்களை இங்கு திருமணம் செய்து கொடுத்த பின்னும், தனது அண்ணியை காணவே, இங்கு ஆவலாக வருவார் வடிவுப்பாட்டி.
பிறந்ததிலிருந்தே தன் பாட்டியுடன் ஒட்டிக்கொண்ட வேந்தன், இங்கும் அவருடனே இவ்வீட்டிற்கு வந்து விடுவான். பூவுபாட்டிக்கும் இவன் என்றால் கொள்ளை பிரியம்.
எப்போதும் முகம் கொள்ளா புன்னகையுடன், இவரை காண வரும் வேந்தன், இப்போதெல்லாம் இங்கு வருவதையே தவிர்த்து வந்தான்.
வாசலிலேயே வடிவுப்பாட்டியை இறக்கி விட்டு விட்டு, வேலை இருப்பதாக சொல்லிச் செல்பவன், கிளம்பும் நேரத்தில் சரியாக வந்து வடிவு பாட்டியை வீட்டிற்கு அழைத்துச் கொண்டு போவான்.
வாழ்க்கை பாடத்தில் பல அனுபவத்தை கண்ட பூவுப்பாட்டிக்கு, வேந்தனது ஒதுக்கம் ஏன் என்று தெரியாமல் போகுமா?
தனது பேத்தி நிரஞ்சனாவின் பார்வை மாற்றமும், உரிமை பேச்சுமே இதற்குக் காரணம் என்று அறிந்தவர், அவளிடமே இதைப் பற்றி கேட்க, அவள் நாகரீகம் இல்லாது நடு வீட்டிலேயே, கத்த ஆரம்பித்தாள்,
“நீ உன் வேலைய பாரு கிழவி. நான் கட்டிக்க போறவரை நான் பார்த்தா, உனக்கு என்ன வலிக்குது? நான் பேசாம வேற எவ அவர்கிட்ட பேசுவா?”
அவளுடைய அண்ணன் மாறன் அதற்கும் மேல்,
“வயசான காலத்துல நீ எதுக்கு இவங்களை கண்காணிச்சுகிட்டு திரியிற? அதுதான் உன் சோட்டு கிழவி வருதில்ல, அது கூட ஒக்காந்து ஊர் கதைய பேச வேண்டியது தானே, உனக்கு என்ன அங்க பார்வை? இதை எல்லாம் ஒரு விஷயமுன்னு வேற எடுத்துட்டு வந்து, நடு வீட்டுல பஞ்சாயத்து வச்சுக்கிட்டு இருக்க.”
அதற்கு மேல் என்ன பேச, மரியாதை இல்லாத இடத்தில் இருந்து ஒதுங்குவதே மேல் என்று, அண்ணன் தங்கையுடன் பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொண்டார் .
வடிவுப்பாட்டியை கோவிலிலேயே சந்திக்க ஆரம்பித்தார்.
அன்று அதிகாலை வழக்கத்திற்கு மாறாக, சிறிது நேரத்திற்கு முன்பே எழுந்து விட்டார் பூவுப்பாட்டி.
நேராக தொழுவத்திற்கு சென்றவர், சற்று தூரம் தள்ளி ஏதோ சத்தம் கேட்க, அங்கே எட்டிப் பார்த்தார்.
மாறனும் நிரஞ்சனாவும் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே, கையில் ஒரு கிண்ணத்தை வைத்துக் கொண்டு, பதுங்கி பதுங்கி வந்து கொண்டிருந்தனர்.
“ஏன்ணே, நாம இங்க கொட்ட போற எண்ணெயில, வேற யாராவது வழுக்கி விழுந்துட்டா?”
“இந்தப் பக்கம் யாரும் வர மாட்டாங்க ரஞ்சி, அந்த கெழவி மட்டும் தான் விடியும் முன்னவே, பின்னாடி வந்திடும். அதனால தான் இந்த இடத்தை தேர்ந்தெடுத்தேன்.”
“இது சரிவரும்னு நினைக்கிறியாண்ணா?”
“கண்டிப்பா, அந்த கெழவி இங்க வழுக்கி விழுந்தா, எப்படியும் அடிப்படும். ஏற்கனவே அது நோவில் தானே கிடக்கு.
இதை காரணமா வெச்சே, இது சாகறதுக்குள்ள உன் கல்யாணத்தை நடத்தணும்னு சொல்லி, வேடந்தூர்காரங்க கிட்ட கல்யாணத்துக்கு அடி போடலாம்.”
“சூப்பர்ண்ணே, அரசியல்ல சேர்ந்ததில் இருந்து, நீ நல்லாவே கிரிமினலா யோசிக்க ஆரம்பிச்சுட்ட.”
“சரி ரஞ்சி நீ அங்க யாராவது வராங்களான்னு பாரு, நாம இதை இங்க ஊத்திட்டு, உள்ள போய் படுத்துக்குவோம்.”
“கிழவியோட அலறல் சத்தம் கேட்டு தான், நாம ரூமை விட்டே வெளிய வரணும் புரிஞ்சுதா, அதுக்கு முன்னாடியே ஓடி வந்து எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு காட்டிக் கொடுத்திடாத.”
அண்ணனும் தங்கையும் வந்த வேலையை முடித்துவிட்டு, கிளம்பி விட்டார்கள்.
இவர்கள் பேசியதை கேட்ட பூவுப்பாட்டி, உறைந்து போய் நின்று விட்டார். ஏற்கனவே இவர்களைப் பற்றி தெரிந்திருந்தாலும், தன் சொந்த பாட்டியின் உயிரையே இவர்களின் சுயநலத்திற்காக, பணயம் வைப்பார்கள் என்று, நினைத்துக் கூட பார்க்கவில்லை.
பூவுபாட்டிக்கு மூச்சு விடுவதற்கு சிரமமாகவும், நெஞ்சுக்குள் ஏதோ அடைப்பது போலவும் இருந்தது.
கண்களை சிமிட்டி தன்னை சமாளித்துக் கொண்டு நிமிர்ந்து நின்றார் பூவுப்பாட்டி.
எக்காரணம் கொண்டும் இந்த சுயநல பிசாசுகளை, தூய உள்ளங்கள் நிறைந்த அந்த குடும்பத்தினுள் நுழைய விடக் கூடாது.
அது மட்டுமா, ஊர் மக்களுக்காக தன் உயிரையே தியாகம் செய்த, குலதேவியின் சொத்துக்கள் இந்த நயவஞ்சகர்களின் கைக்கு கிடைத்தால்? நினைத்துப் பார்ப்பதற்கே அச்சமாக இருந்தது.
ஒரு முடிவோடு அவர்கள் கொட்டி சென்ற எண்ணெயின் மீது தன் முழு உடலும் படும்படி, படுத்துக் கொண்டவர்.
தன் அருகில் உள்ள பொருட்களை தட்டி விட்டபடி, பெருங்குரல் எடுத்து கத்த ஆரம்பித்தார். வீட்டின் உள்ளே இருந்து, காலடி சத்தங்கள் தன்னை நெருங்கி வருவதை உணர்ந்து, கண்களை இறுக மூடிக் கொண்டர்.
சத்தம் கேட்டு வந்து பார்த்த குடும்பத்தார், பூவுப்பாட்டியின் நிலைக்கண்டு அதிர்ந்து நின்றனர்.
பெண்கள் அனைவரும் அவரை எழுப்ப முயற்சித்து விட்டு, நீர் எடுக்க உள்ளே சென்றனர்.
ஆண்கள் பூவுப்பாட்டியை, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான வேலையில் ஈடுபட்டனர்.
தன் அருகில் யாருமில்லை என்பதை உணர்ந்த பூவுப்பாட்டி, தன் அருகே அமர்ந்து அழுது கொண்டிருந்த இளைய பேரனிடம், சுருக்கமாக நடந்ததை கூறினார்.
வேந்தனிடம் இங்கு நடந்ததை கூறுமாறு சொல்லிவிட்டு, யாரோ வரும் அரவம் கேட்கவே, கண்களை மூடிக் கொண்டார்.
கலங்கிய விழிகளுடன் நடந்தவைகளை கூறிய, தன் அத்தை மகன்களை பாசத்துடன் அணைத்துக் கொண்ட வேந்தனுக்கு, மாறனை பற்றி நினைக்கையில் அவனின் கோபம், எல்லையை கடந்தது.
இருக்கும் சூழ்நிலை உணர்ந்து, நிதானத்திற்கு வந்தவன். உள்ளே நடக்க போகும் நாடகத்தை, தெரிந்தே எதிர்கொள்ள தயாரானான்.

