Loading

அமைச்சர் பொன்னுரங்கத்தின் வீட்டில், தனக்கு முன் நிற்கும் தனது அடியாட்களிடம், கத்திக் கொண்டிருந்தார் அமைச்சர்.

     அவருக்கு சற்று தள்ளி, யோசனையுடன் அமர்ந்திருந்தார், அமைச்சரின் குருஜி.

      “அறிவு கெட்டவனுங்களா, நீங்க எல்லாம் ஒரு வேலைக்கு கூட லாயக்கில்ல, உங்கள நம்பி இந்த வேலையை கொடுத்தேன் பாரு, என் புத்திய செருப்பால அடிக்கணும்.

   அந்த போலீஸ்காரன் காட்டச் சுத்தி கேமரா மாட்டறவரைக்கும், நீங்க என்ன புடுங்கிட்டா இருந்தீங்க.

     எனக்கு இன்னும் ஒரு வாரத்துல பொருள் கைக்கு வந்தாகணும்.”

“தலைவரே கேமரா மட்டும் இல்ல, ஊர் காவல் படைன்னு சொல்லி, ஒரு பத்து இளவட்ட பசங்கள, காட்டச் சுத்தி காவலுக்கு விட்டு இருக்காங்க. இதெல்லாம் அந்த ஊர் தலைவரோட வேலையாம்.”

ஆம், சுந்தரமூர்த்தி அய்யாவிடம் ஊர் மக்களின் பாதுகாப்பிற்காக என்று கூறி, ஒரு கம்ப்ளைன்ட்டை ஃபைல் பண்ண சொல்லியிருந்தார்கள், வேந்தனும் தீபனும்.

      அத்தோடு ஊரில் உள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி, திருவிழா முடியும் வரைக்கும், ஊர் மக்களின் பாதுகாப்பு அவர்கள் பொறுப்பு என்று, ஊர் காவல் படையை உருவாக்கி இருந்தனர்.

      அதில் தைரியமான சிலரை தேர்ந்தெடுத்து, காட்டை சுற்றி காவலுக்கு நிறுத்தி உள்ளனர்.

  “அந்த காட்டுக்குள்ள இருக்குறவங்களை கூட, இப்போ எப்படி வெளிய கூட்டிட்டு வர்றதுன்னே தெரியல தலைவரே.”

     “அவனுங்களையெல்லாம் அப்படியே சாகச் சொல்லு, இத்தனை நாளா ஒரு வேலையாச்சும் முடிச்சானுங்களா?”

    “பொறு ரங்கா, இந்தத் திருவிழா முடிவதற்குள், அந்த பொருள் உன் கைக்கு வந்து சேரும், இதற்கு நான் பொறுப்பு.

     நாம கண்காணிக்கிறது இருக்கட்டும், முதல்ல நம்மள யாராவது கண்காணிக்கிறாங்களான்னு உன் ஆளுங்களை பார்க்கச் சொல்லு. நாம எங்கேயோ சறுக்குறோம், அது எந்த புள்ளினு முதல்ல கண்டுபிடிக்க சொல்லு.”

“ஆகட்டும் குருஜி அப்படியே பண்றேன்.

   டேய் குருஜி சொன்னது கேட்டீங்கள்ள, எவனாது சந்தேகப்படுற மாதிரி, உங்களை சுத்தி இருந்தானுங்கன்னா, அவனுங்க டீடெயில்ஸை கலெக்ட் பண்ணிட்டு சொல்லுங்க.”

  அப்போது அமைச்சருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர, அதை திரையில் கண்டு விட்டு குருஜீயிடம் சென்று கொடுத்தார்.

“சொல்லு விஜயா, எப்படி இருக்கிறாய் நலம் தானே?”

    “குருஜி, என் பொண்ணு அந்த பள்ளத்துக்குள்ள கஷ்டப்பட்டு இருக்கும் போது, நான் எப்படி நலமா இருக்க முடியும்.

  இன்னும் எவ்வளவு நாள் தான் என் பொண்ணுக்கு இந்த நிலைமை, இதுக்கு என்ன தான் தீர்வு?

      அதோடு, அடுத்த வாரம் குருந்த மரத்துக்கு அடியில் இருந்து, மண் எடுக்க போறாங்க, அந்த காட்டுப் பிச்சிக்கு சிலை செய்ய, அவளுக்கு சக்தி கிடைத்து விட்டால், பிறகு என்ன நடக்கும் என்று, நான் சொல்லித் தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா குருஜி?”

   அவர் கூறிய செய்தியில் திடுக்கிட்ட குருஜி, சிறிது யோசனைக்கு பின், மர்ம புன்னகையுடன் பேச ஆரம்பித்தார்.

    “விஜயா இதில் நமக்கான வாய்ப்பும் ஒளிந்துள்ளதை கவனிக்க தவறினாயா?”

   “குருஜி?”

    “அங்கிருந்து மண் எடுத்து விட்டால், அவளுக்கு தற்போதுள்ள கொஞ்ச சக்தியும் போய் விடும் அல்லவா?

   திரும்பவும் அங்கு சிலை பிரதிஷ்டை செய்யும் வரை, அங்கு எந்த சக்தியும் காவலுக்கு இருக்காது அல்லவா?

உன் மகள் உயிர்த்தெழ போகும் நாள், வெகு தூரத்தில் இல்லை விஜயா.

    வேந்தனுக்கு முற்பிறவி ஞாபகம் வருவதற்கு முன், அவன் உன் மகளுடன் திருமண பந்தத்தில் இணைய வேண்டும்.

  இல்லையேல், அவன் அவனின் காதல் மனைவியை தேடி, சென்றடைந்து விடுவான்.

  அந்தக் காட்டு ராணி, ஊரினுள் நுழைந்தால் வரலாறு திரும்பும். வேந்தனின் ராணியாக இரு மடங்கு சக்தியுடன், அனைவரையும் தவிடு பொடி ஆக்கி விடுவாள்.”

    “அவளை இந்த ஊரினுள் நுழைய விடமாட்டேன் குருஜி, அதற்காகவே எங்கும் சொல்லாமல் இந்த ஊரிலேயே தவம் கிடக்கிறேன். ஒருவேளை அவள் திரும்பி விட்டால், அவளின் சாவு என் கைகளால் தான். “

  வினு திறந்த வாயை மூடாமல் ஆச்சரியமாக மதுவை பார்த்து, கேட்டுக் கொண்டிருந்தாள்.

  “நீ நெஜமா தான் சொல்றியா? உங்க அப்பா நீ வேற ஆஃபீஸ்க்கு போக ஒத்திகிட்டாரா?”

“நீ வேற வினு என்னாலையும் தான் இதை நம்பவே முடியல. எங்க அண்ணன் இதை கேட்டு உறைஞ்சு போயே நின்னுட்டான். அதைவிடு, உன் வீட்டில் என்ன சொன்னாங்க.”

  “எங்க வீட்டில் எல்லாரும் செம ஹேப்பி. அது நல்லா ஃபேமஸான கம்பெனியாம். நானும் வெளியே விசாரிச்சேன், நல்லா விதமா தான் சொல்றாங்க.

அவங்க கம்பெனில இங்கயே ஜாயின் பண்ணிக்கறீங்களான்னு கேட்டால், கண்ணை மூடிட்டு சரின்னு சொல்லச் சொல்லி அப்பா சொல்றார்.”

    தோழிகள் பேசிக் கொண்டிருக்கும் போதே, வாசுதேவன் ராகுலுடன் அலுவலகத்தில் நுழைந்தார். இவர்களையும் அழைத்துக் கொண்டு தனது இருக்கையில் சென்று அமர்ந்தவர்,

“என்ன முடிவு பண்ணிருக்கீங்க ரெண்டு பேரும்?”

  “எங்களுக்கு சம்மதம் சார்.”

    “ஓகே, அப்ப நீங்க ரெண்டு பேரும், ராகுல் கூட அந்த ஆபீஸ் போங்க. நான் நேத்தே சைட்டுக்கு போகல, அங்க போயிட்டு நேரா அங்க வந்துடறேன்.

  உங்க ரெண்டு பேருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்ம்மா. நம்ம கம்பெனிக்கு நல்ல பேரை வாங்கி கொடுங்கனும் ரெண்டு பேரும்.”

இவர்கள் அனைவரும் கிளம்பி சென்று, சுந்தரம் குரூப் என்ற பதாகையை தாங்கிய கட்டிடத்தினால் நுழைந்தனர்.

  தோழிகள் இருவரையும் வரவேற்ப்பறையில் அமர வைத்துவிட்டு, ராகுல் ரிசப்ஷனில் தங்களது வரவை பதிவு செய்ய சென்றான்.

  வரவேற்பறையே ஒரு கலை பொருட்களின் கூடம் போன்று இருந்தது.

      விதவிதமான வடிவங்களில், நுணுக்கங்களுடன் கூடிய அழகிய வேலைப்பாடுகள், மனதை கொள்ளை கொண்டன.

    “மது ரொம்ப அழகா இருக்கில்ல, உனக்கு தெரியுமா? இவங்க தென்னை நார் வச்சு கலைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வச்சிருக்காங்க. அவங்களோட பெஸ்ட் கலெக்ஷன்ஸ் தான் இதெல்லாம்.

  அதோட கயிறு, தென்னை நார், நார்கட்டித்துகளோடு இந்த கலைப் பொருட்களையும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யறாங்க.

  சுந்தரம் இவரோட தாத்தா பேராம். அதே பேர் தான் எல்லா கம்பெனிஸுக்கும் வச்சிருக்கார். இதோட எம்டி யுவேந்திர பாண்டியன். ஆள் சிங்கிள் தான், எல்லா ஒர்க்குக்கும் இவர் தான் மேற்பார்வையாம். இந்த ஐடியாஸ் எல்லாமே இவரோடதுதானாம். இது தான் அவங்களோட மெயின் ஆபீஸ்.

     இவங்களுக்கு தனியா கருப்பட்டி தொழிற்சாலையும் இருக்காம்.”

   மது வினுவை மேலிருந்து கீழாக பார்த்து,

    ” நீ எதுக்கு இப்போ ரியல் எஸ்டேட் விளம்பரத்துல வர, லேண்ட் விக்க வந்த ஆக்டர் மாதிரி, இந்த ஆபீஸ்க்கு விளம்பரம் பண்ணிகிட்டு இருக்க?”

     “அது…, நல்ல கம்பெனி நாம இங்க வேலைக்கு இருந்தா, நமக்கு தானே பெருமை. “

“நீங்கள் மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன் மன்னா, நாம் வந்திருப்பது இன்டர்வியூக்காக, இதில் தேர்வு பெற்றால் தான் நமக்கு இங்கு வேலை.

  அதுவும் நாம், நம் ஆபீசின் சார்பில் தான் வேலை செய்ய வந்திருக்கிறோம். புரிந்ததா என் மங்குனி மன்னா.”

“என்னடி மது?”

“என்ன நொன்னடி, இவ்வளவு விஷயம் சொன்னியே, அதிலிருந்தே உனக்கு தெரிய வேணாம்.

     இவ்வளவு பெரிய கம்பெனிஸ்ல ஆடிட்டிங் இல்லாம இருக்குமா? அதுவும் வெளிநாட்டு லெவல்லனா கண்டிப்பா, அவங்க வெச்சிருப்பாங்க.

எனக்கு தெரிஞ்சு நம்மளை இவங்க கூப்பிட்டதுக்கு இரண்டே காரணம் தான், ஒன்னு அவங்களோட ஆடிட்டர்ஸ் மேல சந்தேகம் வந்து, கணக்குகளை உறுதி பண்ணிக்கவா இருக்கலாம்.

  இல்லைனா கணக்குகளை மாத்தி எழுதி, பங்குதாரருக்கு தெரியாம, கள்ளக்கணக்கு எழுதவா இருக்கலாம்.”

   எம்டி அறையில் இருந்து, இவர்களை கட்டிடத்தினுள் நுழைந்ததிலிருந்து பார்த்துக் கொண்டே, நீர் அருந்தி கொண்டிருந்த வேந்தனுக்கு,  மது பேசியதை கேட்டு புரை ஏறியது.

  “அடி என் அத்த மகளே, நீ இவ்வளவு விவரமா இருந்தா, நான் எப்படி என் திட்டத்தை செயல்படுத்துறது.”

என்று சத்தமாக கூறிக் கொண்டான் வேந்தன்.

     “மது என்னடி இப்படி சொல்ற, அது என்ன காரணமா இருந்தாலும் சரி, நாம இங்க வேலை பார்க்கறோம், செலக்ட் ஆகறோம், இந்த கம்பெனியிலேயே செட்டில் ஆகுறோம்.”

“நீ சினிமா பாத்து ரொம்ப…கெட்டு போயிட்ட செல்லம். நேத்து கே டிவில சூரியவம்சம் படத்தை பார்த்த எபெக்ட்டா?”

     “மது குட்டி, இந்த இன்டர்வியூக்காக, நான் விடிய விடிய படிச்சிருக்கிறேன் டி. என் உழைப்பெல்லாம் வீணாகலாமா?

சின்ன வயசுல இருந்தே, நான் படிச்ச குரூப்ல இருந்து, வேலைக்கு சேர்ர வரைக்கும், உன் பேச்சை தானே நான் கேட்டேன். ப்ளீஸ் இந்த ஒரு தடவை எனக்காக இங்கேயே சேர்ந்துக்கலாமே.”

“அடி என் டொமேட்டோ, அதுக்கு நாம முதல்ல செலக்ட் ஆகணும்.”

“கண்டிப்பா ஆவோம். இப்ப தானே வேற கம்பெனில இன்டர்வியூ அட்டென்ட் பண்ணினோம். அதுல நம்ம ரெண்டு பேருமே செலக்ட் தானே.

  அப்படி செலக்ட் ஆயிட்டா, நான் சொன்ன மாதிரி தான் நீ கேட்கணும்.”

“அது நடந்தா பாக்கலாம்.”

  “ம்ஹூம், இந்த பாக்கலாம் என்கிற போங்கே என்கிட்ட வேண்டாம். பிராமிஸ் பண்ணு, நான் சொல்றதை கேட்கிறேன்னு.”

    “சரி சரி வேலியில போற ஓணானை, வேட்டியில் தான் நான் எடுத்து விடுவேன்னு, இந்த கம்பெனி ஓனர் முடிவு பண்ணிட்டா, அதை யாரால மாத்த முடியும்.”

    அங்கிருந்த வரவேற்பாளரிடம் இந்த நிறுவனத்தை பற்றிய தகவல் பெறுவதற்காக, அவரை தொடர் கேள்விகளால் துளைத்தெடுத்த காரணத்தினால், அவரின் முறைப்பை பரிசாக பெற்றுக் கொண்டு வந்து, இவர்கள் அருகில் அமர்ந்தான் கூகுள் என்கின்ற ராகுல்.

      “என்ன கூகுள் அண்ணா, இங்க வந்ததும் உங்க வேலைய ஆரம்பிச்சிட்டீங்களா. ஆல்ரெடி வெளியே
இந்த கம்பெனிய பத்தி விசாரிச்சு இருப்பீங்களே இந்நேரம்?

       அப்புறம் எதுக்கு இந்த தேவையில்லாத விசாரிப்பு? அங்க பாருங்க நாம வரும்போது, அந்த பொண்ணு சிரிச்சிகிட்டு எவ்வளவு அழகா இருந்துச்சு ரிசப்ஷன்ல, இப்போ மந்திரிச்சு விட்ட மாதிரி நிக்குது.”

     “அது…நாம இப்போ ஒரு இடத்துக்கு வேலை செய்ய போறோம்னா, அதை பத்தி தெரிஞ்சு வச்சிகிறதுல தப்பில்லையேம்மா?”

  “உங்க கடமை உணர்ச்சியை பார்த்து நான் புல்லரிச்சு போயிட்டேன் போங்க.”

   சிறிது நேரத்திலேயே இவர்களிடம் வந்த அலுவலக ஊழியர் ஒருவர், தோழிகள் இருவரையும் அவர்களது இன்டர்வியூவிற்க்காக, மேல் தளத்திற்கு அழைத்துச் சென்றார்.

   ராகுல், தான் இங்கேயே இருப்பதாக கூறி, அவர்களை அனுப்பி வைத்தான்.

     தோழிகள் இருவரும் தமது வாழ்க்கையின், அடுத்த அத்தியாயத்திற்கான படிக்கட்டுகளை தேடி, வெவ்வேறு அறைக்குள் நுழைந்தனர்.

   வினுவிற்கு, இந்த நிறுவனத்தின் மேனேஜர் கேள்விக்கணைகளை தொடுத்து கொண்டிருந்தார்.

    கதவினை தட்டி அனுமதி பெற்று உள்ளே நுழைந்த மது, இருக்கையில் இருந்த வேந்தனைக் கண்டு, திடுக்கிட்டு அங்கேயே நின்று விட்டாள்.

      அவன் இவளை கண்டு கொண்டது போலவே தெரியவில்லை, தனக்கு முன் இருந்த கோப்பினில் பார்வையை பதித்திருந்தவன், அவள் அங்கேயே நிற்பதை பார்த்து, வந்து அமரும்படி சைகை காட்டினான்.

     “சோ மிஸ் மதுரம் ரைட்?”

   மது பல்லை கடித்து தன்னை கட்டுப்படுத்தி கொண்டு,

    “சார் என் பேர் மதுரயாழினி.”

     “வாட் எவர், உங்களோட குவாலிபிகேஷன் பத்தி சொல்லி இருந்தாங்க. எவ்வளவு நாளா இந்த ஃபீல்டுல ஒர்க் பண்றீங்க, அண்ட் அதர் கம்பெனிஷ்க்கு இந்த மாதிரி அக்கௌன்ட் எதுவும் பார்த்து இருக்கீங்களா?”

     அதற்கு அடுத்து அவன் கேட்ட, அத்தனை கேள்விகளும் வேலை சம்பந்தமாக தான். மதுவும் அதற்கு தகுந்த பதில்களை கொடுத்துக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்தாள், ஒருவேளை அவன் தன்னை மறந்து விட்டானோ என்று.

      மது, வேந்தனை குறுகுறுவென்று பார்க்க, வேந்தன் தன் புருவங்களை உயர்த்தி, என்னவென்று கண்களாலேயே வினாவ, அவள் ஒன்றும் இல்லை என்று தலையசைத்து தன் பார்வையை தழைத்துக் கொண்டாள்.

    வேந்தன் குறும்பு புன்னகையுடன் தலையை ஆட்டிக் கொண்டே, கேள்விகளைத் தொடர்ந்தான். கேள்விகளின் இடையே அவள் பார்க்காத போது, அவளை ரசிக்கவும் அவன் தவறவில்லை.

     மதுவும் சிறிது நேரம் இவன் பார்வையில் தடுமாறினாலும், அவன் கேள்விக்கான பதில்களை, சிறந்த முறையில் கூறிக் கொண்டிருந்தாள்.

   “ஓகே குட், ஐ அம் இம்ப்ரஸ்ட். நீங்க நல்லாவே ப்ரிப்பேர் ஆகி இருக்கீங்க. உங்களுக்கு ஒரு டவுட் இருக்கலாம் இவ்வளவு பெரிய கம்பெனியில், ஆடிட்டிங் இல்லையான்னு, கண்டிப்பா இருக்கு.

     அது என்னன்னா எங்களுக்கு ஆடிட்டர்ஸ் இருந்தாங்க, பட் ஒரு சில காரணத்தால அவங்களால தொடர முடியல. அதனால நானே பார்க்க வேண்டியிருந்தது.

     வேற ஒரு இடத்துல கொடுக்கிறதுக்கும் எனக்கு விருப்பமில்லை. என்னுடைய மேற்பார்வையில் ஒரு டைம் ரிவைண்டு பண்ணனும்னு நெனச்சேன். அதுக்காக தான் உங்கள இப்போ தேர்ந்தெடுத்து  இருக்கோம்.

       உங்களுக்கு எவ்வளவு நாள் தேவைப்படும்னு நினைக்கிறீங்க?”

   “சார் அதிகபட்சமா ஒரு மாசம் தேவைப்படும், ஆனா இது தான்னு முடிவா சொல்ல முடியாது, மேபி  நாட்கள் தேவைப்படலாம்.”

“சரி நாற்பத்தி ஐந்து நாட்களுக்குள்ள முடிப்பதற்கு முயற்சி செய்யுங்க.”

“ஓகே சார் கண்டிப்பா நாங்க முயற்சி செய்யறோம்.”

“இந்த கணக்கு ஓகே, இந்த கணக்கை எப்ப செட்டில் பண்ணப் போறீங்க மிஸ் மதுரம்.”

  வேந்தன் ஒரு தாளினை நீட்ட, கேள்விக்குறியோடு அதனை வாங்கி பார்த்தால் மது.

   அதில் வேந்தனது கார் ஹெட் லைட் மாற்றியதற்கான தொகை இருந்தது.

   அசட்டையாக அதை அவன் டேபிளில் வைத்தவள்.

“இதை எதுக்காக நான் கொடுக்கணும்?”

   தன்னை கண்டு கொண்டான் என்று, அவள் பதறுவாள் என நினைத்தால், இவ்வாறு எதிர் கேள்வி அவளிடம் இருந்து வரவே, வேந்தனால் அவளின் தைரியத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை.
  
“நீங்க ஒடச்சதுக்கு நீங்க தானே பே பண்ணியாகணும்னு மிஸ் மதுரம்.”

  “ப்ச்சு, முதல்ல இப்படிக்கு கூப்பிடுறத நிறுத்துறீங்களா?”
 
    “ஒரு மாசம் இங்க வொர்க்ல இருக்கப் போற உங்களை, நான் என்ன பேர் சொல்லி கூப்பிட்டா என்ன?

அதுவும் உங்க பேருல தானே இருக்கு. ஒருவேளை நான் உங்களை செல்ல பேர் சொல்லி, கூப்பிடனும்னு  எதிர்பார்க்கறீங்களா மிஸ் மதுரம்?”

“மண்ணாங்கட்டி, நீங்க எப்படி கூப்பிட்டா எனக்கு என்ன மிஸ்டர் எம்டீ சார். ஆனா இந்த அமௌன்ட் நான் எதுக்காக கொடுக்கணும். நான் தான் உடைச்சேன் என்பதற்கு என்ன ஆதாரம்.”

வேந்தன் சிரித்துக் கொண்டு, தனது முன்னிருந்த லேப்டாப்பின் திரையை, அவளை நோக்கி திருப்பி வைத்தான்.

   அதில் ஓடிய காட்சிகளை கண்ட மது, திரு திருவென முழிக்க ஆரம்பித்தாள். வேந்தன் கால் மேல் கால் போட்டு கொண்டு, புருவத்தை உயர்த்தி தோரணையாக கேட்டான்.

   “என்ன மிஸ் மதுரம், பட்டா போட்டர்லாமா?”

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அப்படி போடு யார் கிட்ட நம்ம வேந்தன் கிட்ட யா ?? அடேங்கப்பா முன் ஜென்ம கதைக்காக தான் ரொம்ப ஆவல் … மன்னவன் வரணும் … ராணி வேற இருக்காங்களா … பேய் வில்லி வேற … ஹையோ இன்னும் என்னெல்லாம் நடக்குமோ …