
அத்தியாயம் 1
ஆற்றங்கரையை ஒட்டிய அழகிய பூஞ்சோலை, பூ மரங்களின் நடுவே பூவோ! என எண்ணத் தோன்றுமாறு, அமர்திருந்தாள் அந்த பெண் பாவை.
தன் கண்மலர் திறந்து கைநீட்டி அழைக்கின்றாள், தன் மனங்கவர்ந்த மன்னவனை நோக்கி, திருவாய் மலர்ந்து தன் நீல கண்கள் மின்னிட,
என்னவனே என் மன்னவனே!
நினைவில்லையோ இப்பூவையை?
காட்டுபூவை நான்,
உனக்காக காத்திருந்து சருகானேன்.
உயிரோடு புதைந்தேனே,
உனைக் காண தவித்தேனே!
இன்னும் ஏனோ தாமதம்,
எனை வந்து சேர்ந்திடவே.
கன்னி இவள் மனது
கலங்கித்தான் போனதடா,
மன்னவனே உன் மார்பினில்
துயில் கொள்ள ஏங்குதடா,
எனை மறந்தாயோ
என் மன்னவா!
ஆடவன் இவன் அமிழ்ந்து தான் போகின்றான். அந்த நீல விழி நயனங்களில், உயிர் பதற வாரி சுருட்டிக் கொள்ள தான் நினைக்கின்றான், அப்பூம்பாவையை.
அவளை எட்டிப் பிடிக்க நினைத்து, கட்டிலில் இருந்து உருளுகின்றான் வேந்தனவன்.
ஆறடி உயர ஆண்மகன் இவன், தன் கன்னகுழி சிரிப்பினிலே, காண்போரை ஈர்த்திடுவான். கூர் நாசி எனக்கு கோபம், கொஞ்சமே கொஞ்சம் அதிகமென உரைக்கின்றதோ!
கற்றை மீசைக்கு கீழ், ஒளிந்துள்ள அதரங்கள், நான் டீடோட்டலர் என்று தான் மொழிகின்றனவோ! மொத்ததில் திராவிட நிறத்தில், காண்போரை ரசிக்க வைக்கும் மன்னவனே இவன்.
வேந்தன் எனும் யுவேந்திர பாண்டியன். தன் பதினெட்டு வயது தொட்டு வரும், இக்கனவில் இருந்து மீள முடியாது, தவித்து கொண்டிருக்கிறான்.
வேந்தன் கட்டிலில் இருந்து கீழே விழுந்து உருண்டதோட மட்டும் அல்லாமல், அவனுக்கு பக்கத்தில் படுத்திருந்த, அவன் அத்தை மகன் மூர்த்தியையும் சேர்த்து இழுத்துக் கொண்டு உருண்டதில், அதிர்ந்து போன அவனோ, தலையில் கையை வைத்துக் கொண்டு, கண்களை மூடிக் கொண்டே, கத்தத் தொடங்கி விட்டான்.
நேற்று தன் மனைவியிடம், வாயைக் கொடுத்து இவன் வம்பிழுத்திருக்க, அவள் இவனது கழுத்தை பிடித்து, வெளியே தள்ளாத குறையாக வீட்டை விட்டே, விரட்டி விட்டு விட்டாள்.
அவளை நினைத்துக் கொண்டே படுத்திருந்தவனை, திடீரென்று வேந்தன் இழுத்துக் கொண்டு கீழே உருள, இந்த தள்ளுமுள்ளுவில், எங்கே தன் மனைவி தான் வந்துவிட்டாளோ என்று நினைத்து, கத்த தொடங்கி விட்டான் மூர்த்தி.
“ஐய்யய்யோ கோதாவரி…கோது… கோதுக்குட்டி, ஏ வெல்லகட்டி நா போய் உன்ன திட்டுவனா? என்னை நம்புடி செல்லம்.”
வேந்தன் இவனை பார்த்துவிட்டு,
“இந்த நாய் எப்ப இங்க வந்துச்சு? டேய், டேய்ய்ய்ய்…கண்ண முழிச்சு தொலைடா வெண்ண, ஒம்பொண்டாட்டி உன் வீட்ல இருக்கும். இங்க வந்து ஏன்டா கோதுமைய வித்துகிட்டு இருக்க, அடச்சீ இளிக்காத எழுந்து போ நாயே.”
“என்ன மாப்ள இப்புடி சொல்லிட்ட, நாம அப்படியா பழகி இருக்கோம்.”
“ச்சை, தள்ளி போடா அங்கிட்டு, இங்க எப்படா வந்த?”
“நைட்டே வந்துட்டேன் மாப்ள. எம்பொண்டாட்டி வெரட்டி விட்டுட்டா.”
“அந்த புள்ள காண்டாகி வீட்டவிட்டு வெளிய தள்ளுற அளவுக்கு நீயென்ன பண்ணுண?”
“ஈஈஈஈஈஈ அது காலைலயே எம்பொண்டாட்டி சளி தொல்லயா இருக்கு மாமா, பொழுதோட நேரத்துலயே வாங்க டாக்டர்கிட்ட போகனும்னா.
ஆனாப் பாரு நேத்தைக்குன்னு பாத்து ப்ரஸ்ல பிரச்சனை ஆயிடிச்சுடா மாப்ள.
ஒருத்தர் அவரோட அப்பாவுக்கு என்பதாவது பிறந்த நாளுக்காக அழைப்பிதழ் அச்சுக்கு குடுத்திருக்காரு போல, நம்ம பசங்க வருந்துகிறோம் போஸ்ட் அடிச்சுட்டானுங்க.
அந்தாளு பெரிய கலாட்டாவே பண்ணிட்டான். அதுல இவ சொன்னதை சுத்தமா மறந்து தொலச்சுட்டேன். நான் வீட்டுக்குள்ள நுழையும் போதே ஆரம்பிச்சுட்டாடா.”
“ஏய்யா உன்கிட்ட நா காலைலயே என்ன சொன்னேன்? ஏய்யா திருத்திருனு முழிக்கிற?
அப்ப நா என்ன சொன்னன்னே மறந்துட்ட அப்படிதான?”
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவள் கேட்டு கொண்டிருக்க,
“அதெல்லாம் இல்லடி கோதுக்குட்டி. ப்ரஸ்ல ஒரு அவசர வேல அதான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.”
“எது கொஞ்சமா,…உடம்புக்கு முடியல டாக்டரை பார்க்கனும் நேரமே வாங்கன்னு சொன்னா, அர்த்தராத்திரியில சாமகோடாங்கி கணக்கா வந்திருக்க.
உன்கிட்ட நா சாகற நேரத்துல தண்ணிக் கேட்டு நின்னாலும், எம்பதினெட்டாங் காரியத்துக்குத் தான்யா நீ வந்து நிற்பே.”
“கண்டிப்பாடா செல்லக்குட்டி, கறிச்சோறு முக்கியமாச்சே, அத தவற விட்டிடுவேனா.”
இதை கேட்டு கோதாவரி, கோதாவரி எக்ஸ்பிரஸ்ஸாகவே மாறி கைகளில் கிடைத்த பொருட்களை எல்லாம், அவன் மீது வீசத் தொடங்கி விட்டாள். அடுத்து அவள் விளக்கமாற்றில் கை வைக்க, அப்போதே வீட்டுப்படியை கடந்து, தனது பாட்டி வீட்டிற்குள் தஞ்சம் புகுந்து விட்டான் மூர்த்தி.
“ஆமா நா பெட்ல தானே படுத்திருந்தேன், இங்க எப்படி வந்தேன்?
ஹான், இப்ப ஞாபகம் வந்துடுச்சு, தூக்கத்துல யாரோ என் கையை பிடிச்சு இழுத்தது போல இருந்துச்சு.
எங்க எம்பொண்டாட்டி இங்கயும் வந்துட்டாளோன்னு பயந்துடேன்டா.
ஆமா நீ எப்படா கீழ படுத்த? என்ன சத்தத்தயே காணோம்.
டேய் மாப்ள எங்கடா போன? இவன் எப்ப போனான்னு தெரியலயே? அப்ப இவ்வளவு நேரமும் நானாத் தான் பேசிக்கிட்டு இருந்தேனா?”
மூர்த்தி தனது கதாகாலட்சேபத்தை ஆரம்பிக்கும் போதே, வேந்தன் அவசரமாக பாத்ரூமிற்குள் நுழைந்து, கதவை அடைத்து கொண்டான்.
இல்லையென்றால் இவனிடம், ஒரு கேள்வி கேட்ட பாவத்திற்கு அவன் கூறும், இரண்டு பக்கத்து விளக்கத்தால் காதில் இருந்து புகையோடு ரத்தமும் வந்து விடுமே!
திருமணத்திற்கு பிறகு கணவர்கள் வாயில்லா பிள்ளபூச்சி என்று, ஊர் உலகத்தில் சொல்வதுண்டு. இவன் இதற்கு விதிவிலக்காக அல்லவா இருக்கின்றான்.
சரி நாம் நமது கதையின் நாயகனை பற்றி அறிவதற்கு முன்பு, அவனது குடும்பத்தை பற்றி அறிந்து கொள்வோம்.
மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மிக அருகில் உள்ள, சொர்க்க நகரமாம் பொள்ளாச்சி, அதிலிருந்து பதினாறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள, அழகிய ஊரான வேடந்தூர் தான் நம் நாயகனின் பிறப்பிடம்.
இங்கு வேட்டை ஆடுபவர்கள் அதிகம் இருந்த காரணத்தால், இப்பெயர் பெற்றது.
இவ்வூரைச்சுற்றி நிறைய ஆன்மீக தளங்கள் உள்ளன. அழகு சுவாமி சித்தர் கோயில், மாசாணி அம்மன் கோயில், உத்திர காளியம்மன் கோயில், பழமை வாய்ந்த அகத்தூர் அம்மன் கோயில், சேத்துமடை காளியம்மன் கோயில், சூலக்கல் மாரியம்மன் கோயில்னு பல தெய்வீக தளங்கள் உள்ளது.
இங்கு வருடம் முழுவதும் ரம்மியமான, இயற்கை அழகுடன் மிளிரும் தட்பவெப்ப நிலையை கொண்டது. சாரல் மழை இங்கு எப்போதும் உண்டு.
அவ்வூரில் சுந்தர மூர்த்தி மற்றும் வடிவழகி தம்பதியர்க்கு இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள். மூத்தவர் சந்திர சேகர், அவர் மனைவி மல்லிகா. அவருக்கு இரு மகள்கள் வசுந்தரா மற்றும் கனகா.
வசுந்தரா காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு, வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கனகாவை உள்ளூரிலேயே சொந்தத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
இரண்டாவது பரிமளம் அவர் பெத்த ரத்தினம் தான் நம்ம மூர்த்தி. அவனுக்கு தன்னுடைய அப்பா பெயரைத் தான் வைக்க வேண்டும் என்று அடம்பிடித்து வைத்தார் பரிமளம். என்ன ப்ரயோஜனம் தாத்தனுக்கு நேர் எதிராக அல்லவா வாய்திருக்கிறான். இவனுக்கு ஒரு அக்கா உண்டு, உள்ளூரில் தான் கட்டி கொடுத்திருக்கிறார்கள்.
பரிமளம்மா வீட்டுக்காரர் பிள்ளைகள் சிறியதாக இருக்கும் போதே, இறைவனடி சேர்ந்து விட்டார். அதற்கு பிறகு பரிமளம்மாவை அவருடைய அண்ணன் தம்பிகள் பார்த்துக் கொள்ள முன்வந்த போதும், அவர் வேண்டாம் என்று மறுத்துவிட்டு, தன் கணவருடைய அச்சு ஆபீஸ்ஸை லீசுக்கும், விவசாய நிலத்தில் வேலை பார்த்தும், சுயமா பிள்ளைகளை படிக்க வைத்தார்.
இருந்தும் அவர் பிள்ளைகளை நமது வடிவு பாட்டி, தன்னுடனே வைத்து கவனித்துக் கொண்டார். பிள்ளைகளது திருமணத்திற்கு பிறகு தான், அவர்கள் வீட்டிலேயே தங்கிக் கொள்ள தொடங்கினர்.
மூர்த்தியின் படிப்பு முடிந்து அவன் தலையெடுக்கவும் தான், பரிமளம்மாவும் ஓய்வில் இருக்கிறார், அதுவும் மூர்த்தி வர்ப்புறுத்தல் காரணமாகத் தான்.
மூர்த்தி தாத்தாவின் மூன்றாவது வாரிசு, சிவநேசன் நம் நாயகனின் தந்தை. அவர் மனைவி தையல்நாயகி. இவருக்கு இரு மகன் ஒரு மகள். முதலில் மதிவாணன் அவன் மனைவி ராதா, இவர்களுக்கு பையன் ஒன்று பொண்ணு ஒன்று.
அடுத்து நம்ம நாயகர் யுவேந்திரன், பிறகு அவன் தங்கையும் வீட்டின் கடைக்குட்டியுமான கவிநிலா, காலேஜில் இரண்டாவது வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்.
நமது வடிவுப்பாட்டியுடைய கடைசி இரண்டு பெண்கள் சுமதி மற்றும் சுகந்தா. இவர்களை பற்றி வரப் போகும் பகுதிகளில் பார்ப்போம், நம்ம நாயகியையும் சேர்த்துதான்ங்க.
வேடந்தூர் பாரம்பரியமாக விவசாயத்தை சார்ந்துள்ள பகுதி, தென்னந்தோப்புக்கள் தான் முதன்மையாக இப்பகுதியைச் சுற்றியுள்ளது.
கொக்கோ, வெற்றிலைப் பாக்கு, ஜாதிக்காய் ஆகியவை மரங்களுக்கு இடையிடையே ஊடுபயிராக பயிரிடப்படுகிறது. இங்கு கரும்பு மற்றும் நெல் குறிப்பிடத்தக்க பயிர்களாகும்.
நமது சுந்தர மூர்த்தி தாத்தாவுடைய குடும்பமும் விவசாயத்தை சார்ந்தது தான். பெரிய தலைமுறையினர் விவசாயத்தையும், இளையதலைமுறை அதிலிருந்து கிடைக்கும் பொருள்களை வைத்து, தென்னை நார் மற்றும் நார் சார்ந்த கலைபொருட்கள் செய்யும் தொழிற்சாலை நடத்தி வருகின்றனர்.
இதற்கு மூல காரணம் வேந்தன் தான். உள்ளூர் அளவில் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையா இருந்ததை, வெளிநாடுகளுக்கு கயிறு, தென்னை நார்,நார் துகள் கட்டிகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக மாற்றினான்.
ஆரம்பத்தில் இது அவ்வளவு சாத்தியப் படவில்லை. நிறைய தோல்விகள், சில பல சறுக்கல்கள், நிறையவே கேலி கிண்டல்களை கடந்து வர வேண்டி இருந்தது.
சிலசமயம் அவன் முடிவெடுக்க திணறும் போது, தட்டிகொடுத்து ஊக்கப்படுத்தியதும் அவன் குடும்பம் தான்.
இந்த வீட்டு பெண்கள் அவர்கள் தேவைகளுக்கு யாரையும் எதிர்பாராது, தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்று, வீட்டின் பின்னால் மூங்கில் வேய்ந்த கொட்டகைகள், கருப்பட்டி தயாரிப்பதற்காக கட்டப்பட்டு உள்ளது. இது நமது மூர்த்தி தாத்தாவுடைய யோசனை.
இங்கே மூன்றுப்பேர் வேலை செய்கிறார்கள், அதை மேற்பார்வை பார்ப்பது வேந்தனுடைய அம்மாவும் பெரியம்மாவும் தான்.
அதனுடைய கணக்கு வழக்குகளை மதிவானனுடைய மனைவி, ராதா பார்த்துக் கொள்கிறார். இங்கு தயாரிக்கப்படும் சுத்தமான கருப்பட்டிகள், வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
மதிவாணன் ஒரு நடுநிலை பள்ளி ஆசிரியர். அவர் மனைவியும் ஒரு ஆசிரியை தான். ஆனால் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை கவனித்து கொள்கிறார்.
மூர்த்தி வேந்தனை தேடி கீழ வர, வடிவுப்பாட்டி அவனை பார்த்துவிட்டு, சத்தமிட தொடங்கினார்.
“ஏன்டா கூறுகெட்டவனே நீ எங்கடா அவன் ரூமுக்குள்ளார இருந்து வாரே?
ஒனக்கு கல்யாணமாகிடுச்சு. நினைப்பிருக்கா இல்லயா? இப்படி இங்கன வந்து படுத்துகெடக்க?”
“ஹான் ஒம்பேரனவிட்டுட்டு இருக்க முடியல அதான் இங்க ஓடி வந்துட்டேன்.”
“ஒங்காத்தாக்கிட்ட அப்பவே சொன்னேன், இந்த கோட்டிப்பயலுக்கு அந்த தங்கமான புள்ளையை கட்டிவெய்காதடி, அது வாயில்லாத பச்சமண்ணுண்ணு. கேட்டாலா அவ, உன்னையை கட்டிகிட்டு பாவம் கஷ்டறாளேஏஏஏ ஏம்பேத்தி…”
“ஏய் கிழவி இப்போ எதுக்கு ஒப்பாரி வெய்க்குறே.”
“எதே ஒம்பேத்தி பாவமா? அவ தொரத்தனதுனால தான், நா இங்க வந்து நிக்கிறதோட, உன்கிட்ட இப்படி பேச்சு வாங்கி கட்டிகிட்டு இருக்கேன், அதை தெரிஞ்சுக்கோ மொதல்ல.”
“அவளா தொரத்திவிட்டா? அப்ப நீ எதாச்சும் கோட்டிதனமா பேசியிருப்ப.”
அவன் பதிலுக்கு ஏதோ பேசவர, மேல இருந்து இறங்கி வந்த வேந்தன் அவனது தலையில் தட்டி,
“இன்னுமாடா நீ முடிக்கல, போய் பல்ல வெளக்குடா பக்கத்துல நிக்க முடியல. ஆத்தா நீ வா எனக்கு பசிக்குது, சாப்பிடப் போலாம் டிபன் என்ன இன்னிக்கு?”
“உன்ன கூப்பிடத்தா ராசா வந்தேன். அதுக்குள்ள இந்த வெட்டிப்பயட்ட போய் தெரியாத்தனமா வாயைக் குடுத்துட்டேன்.”
“எது வெட்டிப்பயலா? ஏ ஆத்தா வாய எனக்கு குடுத்துட்டு, நீயென்ன மூக்குலயா பேசிட்டு இருக்க.”
“போடா பொசகெட்டப் பயலே கேனத்தனமா பேசிக்கிட்டு.
உனக்கு பிடிச்ச குடல் குழப்புதான் ராசா பண்ணிருக்கோம், இட்லி அவிச்சு வச்சிருக்கு, நீ உக்காரு நான் எடுத்தாறேன்.
அடேய் கொட்டிக்க வேணும்னா, வாய மூடிக்கிட்டு போய் பல்ல வெளக்கு. இல்ல அப்படியே ஓடீரு. இங்ஙன நின்னு சலம்பிக்கிட்டு கெடக்காத.”
“வாய மூடிக்கிட்டு எப்படி பல்ல வெளக்கறதாம்?”
“என்னடா அங்க முனுமுனுக்கற?”
“பல்பொடிய தேடறேன் ஆத்தா.”
என்றபடி அவன் திரும்ப, மூர்த்தி தாத்தா தோப்புத்தொரவுகளை மேற்பார்வை பார்த்துட்டு அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்தார்.
அவரை கண்டவன் அடுத்த நிமிடமே அவசரமாக, எதிரே வந்த கவிநிலாவை இடித்துக் கொண்டு மேலே ஓட,
“இந்த லூசு அத்தான் எதுக்கு இப்படி ஓடுது?”
என்றபடி கையை தேய்த்துக் கொண்டே திரும்பிய கவி, மூர்த்தி தாத்தா இவளை முறைத்துக் கொண்டு நிற்பதை கண்டு,
“அச்சச்சோ இவர பார்த்துட்டுதான் அந்த தடிமாடு அப்படி ஓடுச்சா, அய்யோ மொறய்கறாரே மொறய்கறாரே போச்சுப் போச்சு இன்னைக்கு பொழுது இவரோட தானா, மருதமலையானே உம்புள்ளய காப்பாத்தப்பா. ”
இவள் அவசர வேண்டுதல்களை வைத்துக் கொண்டிருக்க, அவரோ இவளுக்கு அர்ச்சனை செய்ய ஆரம்பித்து விட்டார்.
அங்குட்டு மூர்த்தி தாத்தா இன்னும் ருத்ர மூர்த்தியாத்தா நிக்கிறாரு, அவள மொறச்சுக்கிட்டு.
“ஏனம்மிணி இதுதான் எழும்புற நேரமா? வெள்ளன எழுந்துக்கறது இல்ல. சூரிய உச்சிக்கு வரமுட்டும் என்ன உறக்கமுன்னு கேக்கறேன். உங்கம்மா ஆத்தாக்கு அடுப்படியில உதவலைன்னாலும், வயசுப்புள்ள வாசத்தொளுச்சு கோலம்ப்போட்டு, பூச அறையில வெளக்கு வைக்க வேண்டா?”
இவரு போட்ட சத்தத்துல வீட்டுக்குள்ள இருந்த மகளிர் அணிப்பூராவும் ஹாலில் ஆஜராகி விட்டனர்.
“வீட்ல இத்தன பேரு இருக்கீங்க, புள்ளைக்கு நல்ல பழக்கவழக்கத்த சொல்லித்தாறதில்ல.
அடுத்த வீட்டுக்கு வெளக்கேத்த போற புள்ளய இப்படி அனுப்பனா, என்னத்தத்தா சொல்லி வளர்த்தாய்ங்கனு நாக்கு மேல பல்லப்போட்டு, நம்மள பேச மாட்டாய்ங்க.”
இங்க இவ்வளவு நடக்குது இந்த சின்ன மூர்த்தி மேல ரூம்ல இருந்து டெரஸ் வழியா கீழக்குதிச்சு, புறவாசல் (வீட்டின் பின்பறம்)வழியா சாப்பாட்டு அறைக்கு வந்துட்டான்.
அங்க நம்ம வேந்தரு ஹால்ல நடக்கறதை, ஏதோ தியேட்டர்ல சினிமா பார்க்கறது போல, சுவாரஸ்யமா பார்த்துட்டு இருக்காப்டி. அதுவும் இட்லி குடல் குழம்போட, நல்லா ஒரு வெட்டு வெட்டிக்கிட்டே.
அங்கபோன இவன் அடேய் எனக்கு கொஞ்ஜோ மிச்சம் வைடான்னுட்டு இவனும் அவம்பக்கத்துல சேர்ர போட்டு ஒக்காந்து ஜோதியில ஐக்கியமாகிட்டான்.
“என்னடா பாசமலர் திட்டுவாங்குது, நீயென்னன்னா சாப்பாட்ட மொக்கிட்டு இருக்க, நீ போகல.”
“ப்ச் போயி…என்னையும் வாங்கி கட்டிக்க சொல்றயா?
இப்பபாரு அங்க இருக்க எல்லாத்துக்குமே பாரபச்சம் இல்லாம திட்டு விழும்.”
இவன் சொன்னது போலத் தான் வடிவு பாட்டி, மல்லிகா,தையல் நாயகி,ராதானு எல்லாருக்கும் சரிசமமா வசவு மழை பொழியுது.
பேசிப்பேசி டயர்டு ஆகி அவரோட ரூம்க்கு போய்டாரு தாத்தா கோபமா.
தாத்தா உள்ள போகவும் தான் எல்லாரும் இழுத்துப்பிடிச்ச மூச்சயே வெளிய விடராய்ங்க.
“அப்பப்பா மழையடுச்சு ஓய்சது போல இருக்கு, எல்லா இவளால.
ஏன்டி இவளே அவரு கண்ணுள படாம வாரதுக்குகென்ன.”
“போ ஆத்தா, நீயும் திட்டற எனக்கு சாப்பாடும் வேணா, ஒன்னு வேணாம் போ.”
“அடிக்கழுத வெரசா நீ எழும்பாம, புத்தி சொல்லற பெரியவகக்கிட்ட என்ன பேச்சு இது.”
“நாயகி, புள்ளய அதட்டாத, ஏற்கனவே அவ அழுதுட்டு கெடக்கா, நீவேற புள்ளய திட்டிக்கிட்டு இருக்க, பாரு புள்ள மொகம் சுண்டி போச்சு.”
“அச்சோ மல்லிகாக்கா அதெல்லாம் வேசந்தா, எனக்கு தெரியாது இவள பத்தி.”
“கம்முனுயிரு நாயகி,எஞ்சாமி அழழாமா? எல்லாம் அந்த மனுசனால, புள்ளய ரொம்பத்தா திட்டிப்போட்டாரு.”
“அச்சோ அத்தே நீங்களுமா அவளாவது சாப்பிடாம இருக்கறதாவது.”
“கவி கோவத்த அன்னத்து மேல காட்டக் கூடாது. ப்ச்சு அடம்பிடிக்காம சாப்பிட வாம்மா, அண்ணி சொன்ன கேக்கனும். நான் வேற உனக்கு பிடிக்கும்னு கேசரி எல்லாம் செஞ்சேன்.”
“எது கேசரியா, நீங்க சொல்லி நான் கேட்காம இருப்பனா, வாங்கண்ணி போலாம்.”
ராதாவோட அவ சாப்பிட போயாச்சு, நம்ம மல்லிம்மாவும் வடிவுபாட்டியும் தான் முழிச்சுக்கிட்டே, போனவளை பாத்துகிட்டு நிக்கராங்க.
“நாந்தா அப்பவே சொன்னனே.”
நீங்க வாங்கக்கான்னுட்டு நாயகியம்மா உள்ளார போய்டாங்க.
நீங்களே சொல்லுங்க சாப்பாடு பெருசா? கோவம் பெருசா? சாப்பாடுதானே. வாங்க நாமளும் கேசரிய உள்ள தள்ளிட்டு பொறுமையா கோவப்பட்டுப்போம் அடுத்த பகுதியில…
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நல்ல குடும்ப கதை … காமெடிக்கு பஞ்சமில்ல … தாத்தா டெரர் பீஸ் போல … சாப்பாடு தான் முக்கியம் 🤣🤣
ஆமாம் ஆமாம் சோறு முக்கியம் பிகிலு🤣 நன்றி சிஸ் 🙂