Loading

அத்தியாயம் – 44

​விக்ராந்த் – நித்திலாவின் புதல்விக்கு பெயர் சூட்டும் விழா அன்று வீடே பரபரப்பாகவும், மகிழ்ச்சி வெள்ளத்திலும் மிதந்தது. நித்திலாவின் தாத்தா ஜெயமோகன், பாட்டி வைத்தீஸ்வரி மற்றும் சுமித்ராவின் பெற்றோர்கள் என மொத்த குடும்பமும் அந்தச் சின்னஞ்சிறு தேவதையைக் கொண்டாடக் கூடியிருந்தனர்.

நித்திலா மனையில் அமர, அவளுக்கு அருகில் மகளுடன் தன் மனைவியை இடித்துக் கொண்டு அமர்ந்தான் விக்ராந்த்.

“என்ன அத்து இது, ஒழுங்கா உட்காருங்க, பாப்பாவை என்கிட்ட கொடுங்க” என நித்திலா கேட்க, குறும்பாக அவளை முறைத்தவன்.. “அதெல்லாம் கொடுக்க முடியாது, பாப்பா என்கூடத்தான் இருப்பா!” என அடம் பிடித்தான் அவன்.

​விக்ராந்த் தன் மகளையே சுற்றிக்கொண்டு இருப்பதைப் பார்த்த நித்திலாவிற்குச் சிறு பொறாமை ஏற்பட்டது. “பொண்ணு வந்ததும் அவளையேதான் வச்சுக்கிறீங்க… என்னை கண்டுக்கவே மாட்டேங்கிறீங்கள்ல?” என அவள் செல்லமாகச் சலித்துக்கொள்ள, “ஹ்ம்ம்… என் பொண்ணு மட்டும் போதும் எனக்கு!” என அவளை மேலும் சீண்டினான் விக்ராந்த்.

​அவனது கிண்டலைத் தாங்க முடியாமல், “நைட் ‘பேபி பேபி’ன்னு கொஞ்சிக்கிட்டு வருவீங்கள்ல… அப்போ நான் யாருன்னு காட்டுறேன்!” என நித்திலா ரகசியமாக எச்சரிக்க, அவனோ கண்ணடித்து பறக்கும் முத்தத்தினை கொடுத்து அவளை சிவக்க வைத்தான்…

விழா நேரம் நெருங்க, விக்ராந்த் குழந்தையை நித்திலாவிடம் கொடுத்தான். குடும்பத்தின் மூத்தவரான ஜெயமோகன், தன் கொள்ளுப் பேத்தியின் வாயில் சீனித் தண்ணீர் வைத்து, “ரிதுர்ஷிகா” என்று மூன்று முறை காதில் கூறிப் பெயர் சூட்டினார். அந்த அழகிய பெயர் அந்த இல்லமெங்கும் எதிரொலிக்க, மற்றவர்களும் அதே பெயரை அன்போடு வழிமொழிந்தனர்.

“அப்படியே நம்ம நித்திலாவை தான் உரிச்சு வச்சிருக்கா நம்ம ரிது குட்டி” என சந்தோஷ மிகுதியில் குழந்தையை கொஞ்சியவாறு சொன்னார் சுமித்ராவின் அன்னை பார்வதி,….

“குழந்தையை என்கிட்ட கொடு பாரு” என மிகவும் ஜாக்கிரதையாக குழந்தையை வாங்கிய மகேந்திரன், குழந்தையின் கழுத்தில் தான் வாங்கி வந்திருந்த தங்க சங்கிலியை போட்டுவிட்டு,…”இந்த தாத்தாவோட சின்ன பரிசு, நீ வளர்ந்த பிறகு உன் கல்யாணத்துக்கு இதை விட பெரிய பரிசா தருவேன் என்னடா செல்லம்” என குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டார்,…

“அதுக்கென்ன சம்மந்தி தாராளமா போடுங்க, கொஞ்சம் வளர்ந்ததும் அவளே கேட்டு வாங்கிப்பா பாருங்க” அன்னலட்சுமி சொல்ல,
மகேந்திரனும் பார்வதியும் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர்.
இருக்காதா பின்ன இதுநாள் வரைக்கும் முகத்தில் கடுமையை மட்டுமே வைத்துக் கொண்டு பேசும் தங்கள் சம்மந்தியம்மா இன்று இவ்வளவு சாந்தமாக சிரித்த முகத்துடன் சொன்னதும், அவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது…

“சரிங்கப்பா, என் பொண்னை என்கிட்ட கொடுங்க, நான் அவளை தொட்டில்ல போடுறேன்” என சுமித்ரா குழந்தையை வாங்கி கொள்ள, அவளது அருகில் வந்த இனியா… “அண்ணி அண்ணி ப்ளீஸ் அண்ணி, நான் இன்னைக்கு ரிது குட்டியை தூக்கவே இல்ல, நான் வச்சிக்கிறேனே” எனச் சிறு பிள்ளை போலக் கெஞ்சினாள்.

சுமித்ராவை அவளிடம் குழந்தையை பத்திரமாக ஒப்படைக்க, மகளது ஆர்வத்தைப் பார்த்த சந்தானம், “பார்த்துமா… அன்னைக்கு மாதிரி குழந்தை அழுததும் அவகூட சேர்ந்து நீயும் அழுதுடாதே!” என வாரிட,.. “போங்கப்பா… அன்னைக்கு அவ அழுத அழுகையைப் பார்த்துப் பயந்துதான் எனக்கும் அழுகை வந்துடுச்சு!” என இனியா மழுப்பினாள்.

​வித்தார்த் விடாமல், “இன்னும் ரெண்டு வருஷத்துல உனக்கும் கல்யாணம் ஆகி குழந்தை வந்தா, அப்போவும் இப்படி அழுதுடாதே… உன் புருஷன் பார்த்துச் சிரிச்சிடப் போறார்!” என வம்புக்கு இழுத்தான்.

​”அண்ணா…!” என அவனை முறைத்த இனியா, “இப்போ ரிது குட்டியைப் பத்தி நான் நல்லாவே புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டேன். அதனால என் குழந்தையை நான் நல்லாவே பார்த்துப்பேன், ஸோ டோன்ட் வொரி!” எனத் தன் தோளில் முகவாயை இடித்துக் கொண்டு செல்லமாகப் பதிலடி கொடுத்தாள்.

அனைவரும் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்த அந்த வேளையில், திடீரென சுமித்ராவிற்குத் தலைசுற்றல் ஏற்பட்டு நிலைகுலைந்தாள். அவள் கீழே விழப்போன நொடியில், அருகில் இருந்த வித்தார்த் பதறிப்போய் அவளைத் தாங்கிப் பிடித்தான். ஆனால், அதற்குள் சுமித்ரா முழு மயக்க நிலைக்குச் சென்றிருந்தாள். ரிது குட்டியின் பெயர் சூட்டும் விழாவில் ஏற்பட்ட இந்தத் திடீர் மாற்றம் அனைவரையும் பதற்றமடையச் செய்தது.

​உடனடியாக மருத்துவர் வரவழைக்கப்பட்டார். சுமித்ராவை பரிசோதித்த மருத்துவர், புன்னகையுடன் அவள் கர்ப்பமாக இருக்கும் நல்ல செய்தியை கூறினார், இந்தச் செய்தி அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுத்தது. எப்போதும் கம்பீரமாக இருக்கும் அன்னலட்சுமி, இப்போது ஒரு தாயாக உருகிப் போனார். தன் மருமகளைப் பாசத்துடன் அணைத்து, அவள் உச்சி முகர்ந்து… “நீயும் தாயாகப் போற! என் மூத்த மருமகளும் தாயாகப் போகிறாள்!” எனச் சத்தமாகச் சொல்லித் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

நித்திலா சுமித்ராவை அணைத்துக் கொண்டு வாழ்த்து கூறினாள்,
விக்ராந்தும் வித்தார்த்தை இறுக அணைத்துத் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டான். வீட்டின் அனைவரும் வித்தார்த் சுமித்ராவிற்கு வாழ்த்து கூறினர், வித்தார்த்தின் கண்களில் ஒரு தந்தையாகப் போகும் பூரிப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.

​சுமித்ரா மெதுவாக ரிது குட்டியைத் தன் கரங்களில் ஏந்தி கொண்டவள்… “நீ வந்த நேரம், உன்னை நான் தூக்கின அந்த நேரம்… எனக்குள்ளும் உன்னைப் போலவே ஒரு சின்ன உயிர் உருவாகியிருக்கு!” எனச் சொல்லி, குழந்தையின் பிஞ்சு முகத்தில் இதழ் பதித்தாள். இதைக் கண்ட மகேந்திரனுக்கும் பார்வதிக்கும் தங்கள் மகள் ஒரு முழுமையான வாழ்க்கையைப் பெற்றுவிட்டாள் என்ற நிம்மதியில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது…

இந்த மகிழ்ச்சியான கொண்டாட்டங்களுக்கு இடையே, நித்திலாவின் தாத்தா ஜெயமோகனும் பாட்டி வைத்தீஸ்வரியும் ஒரு கோரிக்கையை வைத்தனர்.
“இந்த தள்ளாத வயசுல எங்க பேத்தியையும், கொள்ளுப் பேத்தியையும் கொஞ்ச நாள் எங்க கூடவே வச்சுக்க ஆசைப்படுறோம். நித்திலாவை கொஞ்ச நாள் அழைச்சிட்டு போகட்டுமா” எனக் கேட்க,. ​குடும்பத்தினர் அனைவரும் “அதுக்கென்ன தாராளமா கூட்டிட்டுப் போங்க” எனச் சம்மதம் தெரிவிக்க, விக்ராந்தின் முகம் அப்படியே வாடிப் போனது.

மரகத பாட்டி நித்திலாவிடம், “உனக்குச் சம்மதம் தானே நித்திம்மா?” எனக் கேட்க, நித்திலாவின் கண்கள் விக்ராந்தை நோக்கின. விக்ராந்த் தன் கண்களாலேயே, ‘வேண்டாம்னு சொல்லிடு பேபி… ப்ளீஸ்!’ எனத் தவியாய்த் தவித்தான்.

அவளோ..  ‘என் பொண்ணு மட்டும் போதும்னு சொல்லி என்னை என்னை வெறுப்பேத்துனீங்கள்ல, இப்போ பாருங்க’ என்று  தன்னைச் சீண்டிய விக்ராந்தை ஒரு பிடி பிடிக்க நினைத்தவள்,.. “எனக்குச் சம்மதம் தான் பாட்டி!” எனத் துள்ளலாகப் பதிலளிக்க, அவன் முகம் மேலும் சுருங்கி போனது…

​”சரிடா, அப்போ கிளம்பத் தயார் பண்ணு” என லட்சுமணன் சொல்ல, நித்திலா குழந்தையை ஊர்மிளாவிடம் கொடுத்துவிட்டுத் தன் அறைக்குச் சென்றாள்.

நித்திலா மிகவும் மும்முரமாகத் துணிகளையும், ரிது குட்டிக்குத் தேவையான பொருட்கள் மற்றும் உடைகளையும் பேக் செய்து கொண்டிருந்தாள். அப்போது பின்னால் மெதுவாக வந்த விக்ராந்த், அவளது இடையில் கை கோர்த்து அணைத்துக் கொண்டு,
​அவளது தோளில் முகம் புதைத்து.., “ப்ளீஸ் பேபி… போகாத! என்னால உன்னை விட்டு ஒரு நாள் கூடப் பிரிஞ்சு இருக்க முடியாது” என்றான் மிகுந்த ஏக்கமான குரலில்…

அவளோ குறும்பு புன்னகையுடன்… “என்னை பிரிஞ்சு இருக்க முடியாதா? இல்ல உங்க மகளை பிரிஞ்சு இருக்க முடியாதா?” என்று கேட்க,…. “என்ன பேபி இது, என் குழந்தையை இந்த உலகத்துக்கு கூட்டிட்டு வந்தவளே நீ தான், நீ தான் பேபி எனக்கு எப்போதுமே ஃபர்ஸ்ட்” என்றான் அவள் கழுத்து வளைவில் தாடையை பதித்து,…

“ஃபங்சன் நடக்கும் போது வேற மாதிரி ஏதோ சொன்ன மாதிரி இருந்துச்சு” அவள் கேட்க,…”பச்… அது சும்மா, உன்னை வெறுப்பேத்த சொன்னது” என்றவன், அவள் முன்னிலையில் வந்து,….”பாட்டி கிட்டயும் தாத்தா கிட்டயும், ஏதாச்சும் சொல்லி சமாளி, உன்னை பிரிஞ்சி என்னால இருக்க முடியாது பேபி” என்றான்…

“எனக்கும் தான் கஷ்டமா இருக்கு, ஆனா பாட்டியும் தாத்தாவும் நாங்க அவங்க கூட போக போறதை நினைச்சு சந்தோஷமா இருக்காங்க, இப்போ மாட்டேன்னு சொன்னா வருத்த படுவாங்க தானே, அதனால நாங்க போயிட்டு வந்துடறோமே” என்றாள் அவன் சட்டை பட்டனை திருகியபடியே,…

அவனுக்கும் அவள் சொல்வது சரி என படவே,….”எத்தனை நாள்ல திரும்பி வருவ?” என்றான்,..

“ஜஸ்ட் டென் டேஸ் தான்” அவள் பத்து விரல்களை காட்டி சொல்ல,…”என்னது டென் டேஸா? முடியவே முடியாது, அவ்வளவு நாள்லாம் உன்னை பிரிஞ்சிருக்க முடியாது” என்றான் உறுதியாக,..

“ஓகே… அப்போ செவன் டேஸ்” அவள் சொல்ல,…”நோ” என்றான் அப்போதும்,…

“சரி போங்க, ஃபைவ் டேஸ்” அவள் இறங்கி வந்த பின்னரும்,…”முடியாது பேபி” என்றான் அவன்,…

​”அட போங்க அத்து… இதுக்கு மேல கம்மியான நாளைக்கு அங்க போறதுக்கு, நான் போகாமலேயே இருந்துடுறேன்!” என்று நித்திலா சலித்துக்கொண்டு கட்டிலில் அமர,
அவளருகில் வந்து அமர்ந்தவன்,.. “சரி பேபி,… போயிட்டு வா, பட் ஐ ரியல்லி மிஸ் யூ” என்றான் அவள் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டு….

“நானும் தான் அத்து,…. நமக்கு மேரேஜ் ஆனதுல இருந்து நான் என் வீட்டுக்கு போகவே இல்ல, பாட்டி தாத்தாக்கும் ஏக்கம் இருக்கும்ல, அதான் நானும் போக ஒத்துகிட்டேன்” என்றாள் அவன் தலையை கோதிக் கொண்டே,…

“ம்ம்ம்…. ஃபைவ் டேஸ் என்னை பிரிஞ்சு போக போற, உன் நியாபாகமா ஏதாச்சும் கொடுத்துட்டு போ பேபி” அவள் கரங்களை பற்றிக் கொண்டு கேட்க,…. “ஐந்து நாள் தானே அத்து, இப்போ நான் உங்களுக்கு என்ன கொடுக்கிறது?” என்றாள் பாவமான முகத்துடன்,…

“அதெல்லாம் எனக்கு தெரியாது, உன்னை நான் மிஸ் பண்ணாம இருக்கிறதுக்கு ஏதாச்சும் கொடுத்துட்டு போ” ஒரு குழந்தையைப் போல அவன் பிடிவாதம் செய்ய,.. “விளையாடாதீங்க அத்து, நீங்க முதல்ல எழுந்துடுங்க, நான் ட்ரஸ் பேக் பண்ணனும், அப்புறம் சத்தம் போட ஆரம்பிச்சிடுவாங்க கீழ உள்ளவங்க” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,…”அண்ணி” என அறைக்கதவை தட்டினாள் இனியா,….

“பார்த்தீர்களா இனியா கூப்பிட வந்துட்டா” என்றவள் அவனை எழ வைத்துவிட்டு கதவை திறந்தாள்….

“அண்ணி,… டைமாச்சுன்னு பெரியப்பா சீக்கிரம் வர சொன்னாங்க, அப்போ தான் இருட்டுறதுக்குள்ள கிளம்ப முடியுமாம்” இனியா சொல்ல,…”முடிஞ்சது,… பத்து நிமிஷத்துல கீழே இருப்பேன் இனியா” என்று அவளை அனுப்பி வைத்தாள் நித்திலா,…

அதன் பின் நித்திலா பாதியில் விட்ட பேக்கிங்கை ஆரம்பிக்க, அவளருகில் வந்த விக்ராந்த்.. “போறது தான் போற ஒரு கிஸ்ஸாவது கொடுத்துட்டு போ பேபி” தழுதழுத்த குரலில் கேட்டிட,
அவனைச் சீண்டும் நோக்கில் “அதெல்லாம் முடியாது!” என்று சொல்லிவிட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தாள் நித்திலா.

தன் கோரிக்கைகள் நிராகரிக்கப்படவே, விக்ராந்த் அப்படியே நிலைகுலைந்து போனான். அவளது துணிமணிகளை அவள் அடுக்கும் அழகையே ஒருவித மௌனமான வலியோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்…

பேக்கிங்கை முடித்தவள் “வரேன் அத்து” எனக் கதவை நோக்கி நடந்தாள். விக்ராந்த் அவளைத் தடுக்கவில்லை, மௌனமாக அந்தப் பிரிவை ஏற்கத் தயாராகி விட்டான், ஆனால், வாசல் வரை சென்றவள் சட்டெனத் திரும்பி அவனிடம் வந்தாள். “அத்து… இந்தாங்க, இதை எனக்குப் போட்டு விடுங்க,” என ஒரு சங்கிலியை நீட்டினாள். அது அவர்களது திருமணத்தின் போது மரகத பாட்டி பரிசளித்த, விக்ராந்தின் பெயரின் முதல் எழுத்தான ‘v’ பொறிக்கப்பட்ட டாலர் செயின்!

​”அன்னைக்கு உங்க மேல இருந்த கோபத்துல இதைக் கழட்டினேன். அப்போ நீங்க எவ்வளவு துடிச்சுப் போனீங்க இல்ல அத்து… ஐ அம் ஸாரி,” என நித்திலா கண்கலங்கிட,
​பதறிப்போய் அவள் கண்ணீரைத் துடைத்தவன்,.. “நான் பண்ணத் தப்புக்கு நீ கொடுத்த தண்டனை ரொம்பக் கம்மிதான். நீ என்கிட்ட ஸாரி சொல்லக் கூடாது. நான் தான் காலம் பூரா உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும்,” என்றான் உருக்கமாக..

​”உங்க ஸாரி எதுவும் எனக்கு வேண்டாம். உங்களோட இந்த அன்பும், காதலும் மட்டுமே எனக்குப் போதும்,” என்றாள் நித்திலா…

“என்னோட காதல், அன்பு மொத்தமும் உன் ஒருத்திக்கு மட்டும் தான். அதுல எந்த வித சந்தேகமும் உனக்கு வேணாம். ஆனா…” என அவன் எதையோ சொல்லத் தொடங்க, அவனைத் தடுத்தவள்…
​”போதும் அத்து… பழைய கதைகளைப் பேசி ரெண்டு பேருமே மூட் அவுட் ஆக வேண்டாம். நீங்க பண்ணத் தவறுக்குத் தண்டனை கிடைச்சாச்சு. சோ, இனி என் அத்து எதை நினைச்சும் கவலைப்படக் கூடாது. சரி, இந்தச் செயினைப் போட்டு விடுங்க,” என்றாள். அவனும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்தச் சங்கிலியை அவள் கழுத்தில் அணிவித்தான்.

​”இனி இந்தச் செயின் எந்த நிலையிலும் என் கழுத்துல இருந்து இறங்காது,” என்று உறுதியாகச் சொன்னவள், அடுத்த நொடியே அவன் உயரத்திற்கு எக்கி நின்று, அவனது இதழோடு தன் இதழைப் பொருத்தி ஒரு முத்தத்தைப் பரிசளித்தாள், அவனிடமிருந்தோ உஷ்ணமூச்சு ஒன்று வெளிவர, அவள் முத்தத்தை விழிகள் மூடி அனுபவித்தான்,…

சற்று நேரத்தில் அவனிடம் இருந்து விலகியவள், “இப்போ ஹேப்பியா? இனியாச்சும் என்னைச் சிரிச்ச முகத்தோட வழி அனுப்பி வைப்பீங்கள்ல?” எனக் கேட்க, விக்ராந்த் குறும்பாகக் கண்ணடித்து,.. “இதை விட இன்னும் ஏதாச்சும் பெருசா கொடுத்தா… ரொம்பச் சந்தோஷமா வழி அனுப்பி வைப்பேன்!” என்றான்.

​”போதும் போதும்! கொஞ்சம் இறங்கி வந்தா நீங்க மிஞ்ச ஆரம்பிச்சிடுவீங்களே,” எனச் செல்லமாக திட்டியவள்,.. திடீரென “உங்ககிட்ட ரொம்ப நாளாவே ஒண்ணு கேட்கணும்னு இருந்தேன்… அந்த லாவண்யா என்ன ஆனா?” என வினவினாள்.

​அவள் பெயரைக் கேட்டதுமே விக்ராந்த் எரிச்சலானான். “அவ என்ன ஆனா நமக்கென்ன? இந்நேரம் எவன் வீட்டுக் குடியைக் கெடுத்துக்கிட்டு இருக்காளோ தெரியல!” என்றான் கோபமாக.

​”என்ன இருந்தாலும் அவ கூடச் சேர்ந்து சுத்துனவரு தானே நீங்க?” என நித்திலா கோபப் பார்வையுடன் சீண்ட, விக்ராந்த் சோகமான முகத்துடன், “வயசு கோளாறுல எல்லாரும் பண்ணுற மாதிரி நானும் பண்ணிட்டேன். தயவு செஞ்சு விட்டுடும்மா… மறுபடியும் ஆரம்பிச்சிடாதே, தாங்க மாட்டேன்!” எனக் கெஞ்சினான்.

​நித்திலா விடாமல், “அப்பப்போ இதை வச்சே உங்களை வச்சுச் செய்றேன் பாருங்க!” எனச் சொல்ல, விக்ராந்த் அதிர்ச்சியில் விழிகளை விரித்துஅவளைப் பார்த்தான்.

நித்திலாவும் ரிது குட்டியும் தங்கள் குடும்பத்தினரிடம் விடைபெறத் தயாராக இருந்தனர். அனைவருக்கும் அவர்களைப் பிரிய மனமில்லாவிட்டாலும், வெளியே சிரித்த முகத்துடனேயே வழி அனுப்பி வைக்கக் காத்திருந்தனர்.
​ஜெயமோகன் தாத்தா விக்ராந்தின் தோளைத் தட்டி, “விக்ராந்த் தம்பி, கவலைப்படாதீங்க… சீக்கிரமே உங்க மனைவியையும் மகளையும் உங்ககிட்ட அனுப்பி வைச்சிடுறேன்,” என்றார்.

அதற்கு விக்ராந்த்.. “அதெல்லாம் இல்ல தாத்தா, அவ உங்க பேத்தி! எத்தனை நாள் வேணும்னாலும் வச்சுக்கோங்க, நான் சந்தோஷமாதான் அனுப்பி வைக்கிறேன்,” எனப் பெருந்தன்மையாகச் சொன்னான்.

​அவன் பேச்சைக் கேட்ட வைத்தீஸ்வரி பாட்டி, “உங்க வாய் தான் அப்படிச் சொல்லுது தம்பி… ஆனா உங்க முகம் வேற எதையோ சொல்லுதே!” என அவனது தவிப்பைக் கண்டுபிடித்துச் சிரித்தார்.

சூழலைச் சமாளிக்க வந்த வித்தார்த், “பாட்டி… என் தம்பியை நான் சமாதானப்படுத்துறேன், நீங்க உங்க பேத்திங்களோட கிளம்புங்க. அப்புறம் இவன் மனசு மாறி அவங்களைப் பிடிச்சு வச்சுக்கப் போறான்!” எனச் சொல்ல, விக்ராந்த் ‘ஏன்டா உனக்கு இவ்வளவு நல்ல மனசு?’ என்பது போலத் தன் அண்ணனை ஒரு பார்வை பார்த்தான். வித்தார்த்தோ எதையும் கண்டு கொள்ளாமல் “ஈஈ” என்று பற்களைக் காட்டிச் சிரித்தான்.

​நித்திலா அனைவரிடமும் விடைபெற்றுப் புறப்பட்டாள். விக்ராந்த் தன் மகளை ஆசை தீரக் கொஞ்சிவிட்டுத்தான் அனுப்பி வைத்தான்.

நித்திலாவும் குழந்தையும் சென்ற பிறகு, விக்ராந்திற்கு அந்த அறையே வெறுமையாகக் காணப்பட்டது. அங்கு இருக்கப் பிடிக்காமல் மாடிக்கு வந்து நின்றான்.

​அப்போது அங்கு வந்த வித்தார்த், “என்ன தம்பி, வொய்ஃபை நினைச்சு ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்கியா?” எனக் கேட்டான். “ம்ம்ம்… அதான் எல்லாருமா சேர்ந்து என்னோட ரெண்டு பேபிஸையும் அனுப்பி வைச்சிட்டீங்களே! அனுப்புறதுதான் அனுப்புனீங்க, என்னையும் சேர்த்து அனுப்பி வைக்க வேண்டியதுதானேடா?” என ஆத்திரத்தில் வித்தார்த்தைச் சாடினான் விக்ராந்த்.

வித்தார்த் சிரித்துக்கொண்டே, “ஏன்டா… அவங்க போய் ரெண்டு மணி நேரம் கூட ஆகல, அதுக்குள்ள இப்படிப் புலம்புற! நாங்க சொல்லலைன்னா என்ன, நீயே கிளம்பி அவங்க கூடப் போயிருக்க வேண்டியதுதானே?” என்றான்.

​விக்ராந்த் சற்றே நிதானமாக, “தாத்தாவும் பாட்டியும் நிலா கூடவும், பாப்பா கூடவும் டைம் ஸ்பெண்ட் பண்ணணும்னுதான் கூட்டிட்டுப் போயிருக்காங்க. நானும் அங்க போயிருந்தா நிலா என் கூடவேதான் இருப்பா. இதனால அவங்களுக்கு முழு சந்தோஷம் கிடைக்காது… அதான் மனசைக் கல்லாக்கிக்கிட்டு இங்கேயே இருந்துட்டேன்,” எனத் தன் மனைவிக்கும் அவளது குடும்பத்திற்கும் கொடுத்த மரியாதையைச் சொன்னான்.

​வித்தார்த் அவனைப் பார்த்து, “இப்போ உன்னைப் பார்க்கும்போது எனக்கு என்ன தோணுதுன்னா… இன்னும் கொஞ்ச நேரம் நீ உன் மனைவி குழந்தையைப் பார்க்கலைன்னா பைத்தியம் பிடிச்சிடும்னு தோணுது!” எனக் கலாய்க்க, விக்ராந்தின் தவிப்பு இன்னும் அதிகமானது.

விக்ராந்திற்கு அன்று ஒரு நிமிடம் கடப்பதே ஒரு யுகமாகக் கழிந்தது. இரவு உணவிற்குப் பின் அறைக்கு வந்தவனுக்கு உறக்கம் என்பதே வரவில்லை. எந்தப் பக்கம் திரும்பினாலும் நித்திலாவின் முகம் தான் தெரிந்தது. குப்புறப் படுத்துத் தலையணையால் தலையை அழுத்தினாலும், அவளே வந்து தன்னைச் சுரண்டி எழுப்புவது போல் தோன்றியது. அவள் வந்துவிட்டாளோ என வேகமாய் எழுந்து பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

​’ஏன் பேபி இப்படிப் பண்ணுற… எப்போடி வருவ?’ என அவன் நினைத்த மாத்திரத்திலேயே, அவன் போன் ஒலித்தது. நித்திலாதான் தான் அழைத்திருந்தாள்,..

“அத்து என்ன பண்ணுறீங்க? தூக்கம் வராம புரண்டுட்டு இருக்கீங்களா?” என அவள் சரியாகக் கணிக்க, “எல்லாம் தெரிஞ்சு தானே போன” என்றான் சோகமாக…

​”கடந்த சில மாதங்களா என்னை கட்டிபிடிச்சிக்கிட்டு தூங்குன உங்களுக்கு, இப்போ தலகாணியை கட்டி பிடிச்சிட்டு தூங்க கஷ்டமா தான் இருக்கும், பழகிகோங்க ஜஸ்ட் டூ வீக்ஸ் தானே அத்து…” என அவள் சொல்ல, “என்னது டூ வீக்ஸா? வந்தேன்னு வையேன்… எனக்கிருக்க கோபத்துக்கு அப்படியே உன்னை…” என அவன் மிரட்ட, “அப்படியே என்னை?” என அவள் கிண்டலாக இழுக்க, “ம்ம்ம்… சொல்லிடுவேன்”அவன் சொல்ல,… “ஐயோ போங்க அத்து, நான் கூட வேற என்னவோனு நினைச்சேன், சரி சாப்டீங்களா?” என்றாள்…

“ம்ம்ம்… பாப்பா என்ன பண்ணுறா?” விக்ராந்த் கேட்க,…”இப்போ தான் தூங்குனா,” என்றாள்….

“பேபி… நீ இல்லாம நிஜமாவே ரொம்ப கஷ்டமா இருக்குடி,”

“பேசாம இங்க வந்துட்றீங்களா அத்து, எனக்கும் தான் கஷ்டமா இருக்கு” என்றாள்…

“வேணாம் பேபி,… நீ தாத்தா பாட்டி கூட என்ஜாய் பண்ணு, உன் குரலை கேட்டதுக்கு அப்பறம் கொஞ்சம் ரிலீஃபா இருக்கு” என்றவன்,… இன்னும் சிலநிமிடங்கள் உரையாடிவிட்டு மனதே இல்லாமல் தான்போனை வைத்தான்,…

இரவு புரண்டு புரண்டு படுத்தவனுக்கு சற்று நேரத்தில் உறக்கமும் தொற்றிக் கொள்ள உறங்கியும் போனான், அடுத்த நாள் காலை அலுவலகத்திற்குத் தயாராகி உணவருந்த வந்த விக்ராந்தை, வீட்டின் அனைவரும் ஒரு மாதிரியாகப் பார்த்தனர்.

“ஐயோ பாவம்… நைட்டெல்லாம் தூக்கம் இல்ல போல, கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கே” என இனியா சாப்பிட்டுக்கொண்டே விக்ராந்தை வம்புக்கு இழுக்க, அவள் தன்னைத்தான் கலாய்க்கிறாள் என அறிந்த விக்ராந்த், “ஏய் என்ன கிண்டலா? கிட்ட வந்தேன்னு வை, மண்டையை பொழந்துடுவேன்!” என மிரட்டினான். அவன் செய்றவன் தான் என்று பயந்துபோன இனியா, அதோடு வாயை மூடிக்கொண்டாள்.

​சுமித்ரா அக்கறையாக, “பேசாம நித்தியைப் போய் பார்த்துட்டு வந்துடுங்களேன்… எதுக்கு தூங்காம உடம்பைக் கெடுத்துக்கிறீங்க?” எனச் சொல்ல, “அதெல்லாம் எதுவும் இல்ல அண்ணி… நைட் கொசுத் தொல்லை அதிகமா இருந்தது, அதான் சரியா தூக்கம் இல்ல,” என வாய் கூசாமல் பொய் கூறினான் விக்ராந்த்.

​வித்தார்த் விடாமல், “ஓ… கொசுத் தொல்லையாம் இனியா! அதான் தூங்கலையாம் பாவம்,” எனத் தன் தங்கையிடம் கிண்டலாகச் சொல்ல,
“என்னை கலாய்க்கணும்னு நினைக்காதீங்க, அப்புறம் ரொம்ப கஷ்டப்படுவீங்க, இனியா உனக்கு புரியும்னு நினைக்கிறேன்” அவன் தங்கையை மிரட்ட,.. அவளோ,.. “ஐயோ அண்ணா, விது அண்ணா தான் உங்களை கலாய்க்க சொன்னாங்க, நான் எதுவும் பண்ணல” என மூத்த அண்ணனை மாட்டி விட்டாள் இனியா,..

வித்தார்த் தன் தம்பியின் சுயரூபம் அறிந்து உடனே.. “அவ பொய் சொல்றாடா, நான் இல்ல, அம்மா தான் உன்னை கொஞ்சம் சீண்டி பார்க்கலாம்னு சொன்னாங்க”  என அன்னலட்சுமியை இழுத்துப் போட, ‘இவன் எதுக்கு இப்போ என் மண்டையை உருட்டுறான்’ என சாப்பிட்டுக் கொண்டிருந்த அவருக்குப் புரை ஏறியது.

“ஏம்மா நீங்களா?” என விக்ராந்த் கேட்க, ‘அவன் பொய் சொல்றான் டா’ என சொல்ல வந்தவர் வித்தார்த்தின் கெஞ்சும் பார்வையால் உருகி.. “நான் இல்லடா… உன் அப்பா தான் சொன்னாரு!” எனப் பழியை லட்சுமணன் பக்கம் திருப்பினார்.

இப்போது லட்சுமணன் விக்கித்து போய் பார்க்க, “அப்பா…. நீங்களுமா?” என்றான் விக்ராந்த் பாவமான குரலில், அன்னம் அவரை கண்டுகொள்ளாமல் சாப்பிடுவதில் ஆர்வம் காட்ட, திருத்திருவென்று விழித்த லட்சுமணன், ஒரு யோசனை வந்தவராய் “நான் இல்லடா,… உன்னோட சித்தப்பா டா, அவன் தான் சொன்னான்” என்று சொல்ல சொல்ல,…”என்னது நானா?” வாய் விட்டே கேட்டார் சந்தானம்,…

“ஆமாடா நீ தானே சொன்ன? பையன் சோகத்துல இருக்கான், அவனை கொஞ்சம் சீண்டி பார்க்கலாம்னு” லட்சுமணன் சொல்ல,… தன் அண்ணன் தன்னை எதிலோ சிக்க வைக்க நினைத்து விட்டார் என அறிந்த சந்தானம் “அட,… அது என் ஐடியா இல்லண்ணா, ஊர்மி தான் இந்த ஐடியா கொடுத்தா” என்றார் தன் மனைவியை மாட்டி விட்டபடி,…

“என்னது நானா?” என ஊர்மிளா வாயை பிளக்க,…”ஆமா நீ தான், நீ தானே சொன்ன?” சந்தானம் சொல்ல, கணவரை எதிர்த்து பேச முடியாதவர்….”ஆமாங்க, ஆனா எனக்கு இந்த ஐடியா கொடுத்ததே நம்ம சுமி தான்” என்றார் ஊர்மிளா…

“அத்தை,” என சுமி அதிர்ச்சியாய் பார்க்க,.. விக்ராந்த் சுற்றி நடப்பவற்றை எதையும் புரிந்துகொள்ள முடியாமல் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். பாட்டி மட்டும் நடக்கும் கூத்தைப் பார்த்து மௌனமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்..

​ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த விக்ராந்த், “ஹெலோ… இங்க என்ன நடக்குது?” என்று கேட்க, பெரியவர்கள் அனைவரும் ஒருசேர “எங்களுக்கும் புரியலையேப்பா!” என்று கோரசாகச் சொல்ல, சின்னவர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

அதன் பிறகு அலுவலகம் புறப்பட்ட விக்ராந்திற்கு அங்கும் தன் வேலையில் ஈடுபட முடியாமல், நித்திலாவின் நியாபகம் தான் வாட்டி எடுத்தது. பிசினஸ் விஷயங்களைப் பற்றி விவாதிக்க வந்த வித்தார்த், விக்ராந்த் எந்தவித எதிர்வினையும் காட்டாமல் சிலையென அமர்ந்திருப்பதைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்டு வெளியேறிவிட்டான்.

​அன்றைய பொழுது ஒரு வழியாகக் கடந்து இரவும் வந்தது. அதற்கு மேல் விக்ராந்திற்குப் பொறுக்க முடியவில்லை. யாரிடமும் சொல்லாமல், தன் குடும்பத்தினர் மற்றும் நித்திலாவின் குடும்பத்தினருக்குக் கூடத் தெரியாமல், நித்திலாவைக் காண அவள் வீட்டை நோக்கித் தன் காரைச் செலுத்தினான்.

அங்கு நித்திலாவின் வீட்டில், “அட என் பட்டுக் குட்டி… கொள்ளுப் பாட்டியைப் பார்த்துச் சிரிக்கிறீங்களாக்கும் என் தங்கம்!” என வைத்தீஸ்வரி குழந்தையை ஆசையாகக் கொஞ்சிக் கொண்டிருந்தார். நித்திலா தன் குழந்தையின் துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.

​அப்போது வீட்டில் வேலை பார்க்கும் சுமதி, “நித்திமா… இந்தா ஹார்லிக்ஸ் கலந்த பால்,” என நீட்ட, “சுமதிம்மா… நீங்க என் புருஷனை விட மோசமா இருக்கீங்க! அவராச்சும் கொஞ்சம் டைம் எடுத்துதான் கொடுப்பாரு, ஆனா நீங்க சாப்பிட்ட உடனேயே கொடுக்குறீங்களே,” எனச் செல்லமாகச் சலித்துக் கொண்டாள் நித்திலா.

​”கர்ப்பமா இருக்கும் போதை விட இப்போதான் நீ நல்லா சாப்பிடணும், நீ சாப்பிடுற ஊட்டச்சத்து தான் தாய்ப்பால் மூலமா குழந்தைக்கு போய் சேரும்” என சுமதி அறிவுரை கூற, வேறு வழியின்றி நித்திலா அதனை வாங்கிப் பருகினாள்…

​”நித்தி கண்ணு… உன்னோட போன் அடிக்குது பாரு,” என ஜெயமோகன் சொல்ல, “பார்க்கிறேன் தாத்தா,” என்றபடி போனை எடுத்தாள் நித்திலா. திரையில் “அத்து” என்ற பெயர் மின்னியது.

அவன் பெயரைத் திரையில் கண்டதுமே, “அத்துதான் கால் பண்ணுறாங்க, நான் பேசிட்டு வந்துடுறேன்!” என உற்சாகமாகச் சொல்லிவிட்டு ஓடினாள் நித்திலா.

​”அது என்னங்கையா ‘அத்து’?” எனப் பழம் கொண்டு வந்த பார்த்திபன் குழப்பமாகக் கேட்க, “செல்லப் பெயர் போலடா,” என்றார் ஜெயமோகன். உடனே சுமதி, “இதாச்சும் பரவால்லங்க… மாப்பிள்ளை தம்பி நம்ம நித்திக் கண்ணுவை வார்த்தைக்கு வார்த்தை ‘பேபி, பேபி’ன்னுதான் கூப்பிடுவாரு. குழந்தை பிறந்தப்போ பார்க்கப் போனப்போ கவனிச்சேன்,” எனச் சொல்ல அனைவரும் சிரித்தனர்.

​வைத்தீஸ்வரி பாட்டி பெருமையாக, “என் பேத்தி அவ புருஷனுக்குக் குழந்தை மாதிரி, அதான் அப்படி கூப்பிடுறாரு,” எனச் சொல்ல, “நம்ம நித்திக் கண்ணுக்கு எத்தனை புள்ள பிறந்தாலும், அவ நமக்கு எப்போதும் குழந்தைதான்,” என வழிமொழிந்தார் பார்த்திபன்.

நித்திலா போனை எடுத்துக்கொண்டு, தனிமையில் பேச வேண்டி மாடியில் இருக்கும் தன்னுடைய பழைய அறைக்குச் சென்றாள்.

​”அத்து… என்ன பண்ணுறீங்க?” என அவள் கேட்க, “ம்ம்ம்… என்னவோ பண்றேன், உனக்கென்ன?” என விக்ராந்த் கோபமாகப் பதிலளித்தான்.

“அட என் அத்து கோவமா இருக்கீங்களா? ஏன் என்னாச்சு?” என அவள் குழைவாகக் கேட்க, “தெரிஞ்சும் ஏன் கேட்கிறியா?” எனச் சலித்துக் கொண்டான்.

​”சரி எங்க இருக்கீங்க? ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வந்தாச்சா?” எனக் கேட்டுக்கொண்டே பால்கனி பக்கம் நடந்தாள் நித்திலா.

“வந்தாச்சு… இப்போ உன் வீட்டுலதான் இருக்கேன்!” என்றான் அவன்.

​”என்னது என் வீட்டுலயா? விளையாடாதீங்க அத்து,” என அவள் நம்பாமல் சொல்ல, “பச்… நம்பலையா? சரி கீழே பாரு,” என்றான் விக்ராந்த். அவன் பொய் சொல்கிறான் என்று நினைத்துக்கொண்டே கீழே பார்த்த நித்திலா உறைந்து போனாள். விக்ராந்த் உண்மையாகவே அங்கு இருந்தான்! அதுவும் சாதாரணமாக அல்ல, பால்கனியின் அடிப்பகுதியின் கம்பியைப் பிடித்துத் தொங்கியவாறு ஆபத்தான நிலையில் இருந்தான்.

​”இங்க என்ன பண்ணுறீங்க?” என நித்திலா கண்கள் விரிய கேட்க, “நான் இருக்கிற ஹைட் போதாதுன்னு இப்படி தொங்கி இன்னும் உயரமாகப் போறேன்! கேட்கிற கேள்வியைப் பாரு… கை கொடுத்துத் தூக்கி விடுடி, கீழே விழுந்தேன்னா ஒரு எலும்பு கூட மிஞ்சாது!” என விக்ராந்த் கூற, “ஐயோ வாங்க” நித்திலா பதறிப்போய் கை கொடுத்து அவனை மேலே தூக்கி விட்டாள்.

​”ஏன் இப்படித் திருடன் மாதிரி வரீங்க?” என அவள் கேட்க, “சொல்லுவடி சொல்லுவ! நீ இங்க ஜாலியா இருக்க, அங்க நான் பைத்தியக்காரன் மாதிரி திரிஞ்சிக்கிட்டு இருக்கேன். வீட்ல எல்லாரும் வேற என்னைக் கலாய்ச்சுத் தள்ளுறாங்க, ச்சே.. எவ்வளவு கெத்தா இருந்த நான் இப்போ எப்படி ஆகிட்டேன்” அவன் சலிப்புடன் சொல்ல, அவளுக்கு சிரிப்பு தான் வந்தது….

“சரி வாசல் வழியா வரதுக்கு என்ன உங்களுக்கு” என்று அவள் கேட்க,..
“மணி பத்தாகுது, இந்த டைம்ல நான் வாசல் வழியா வந்தேன்னா பாட்டியும் தாத்தாவும் என்னை எந்த மாதிரி பார்வையில பார்ப்பாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும், என் வீட்டாலுங்க தான் என்னை அப்படி கலாய்ச்சு தள்ளுறாங்க, உன் வீட்டாலுங்க முன்னடியும் நான் அசிங்க படனுமா” என்றான் சலிப்புடன்…

“சரி சரி உள்ளே வாங்க, ரிது பாப்பாவை தூக்கிட்டு வரட்டுமா” அவள் கேட்க,….”அவ பாட்டி தாத்தா கூட இருக்கட்டும், அவளை ஏன் டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு…” என்றவன் நித்திலாவுடன் மெத்தையில் சரிந்தான்.

“ஓஹ்… இதுக்கு தான் வந்தீங்களா?” அவள் கேட்க…..”இதுக்காக இல்ல, உனக்காக வந்தேன்” என்றான் அவள் கன்னத்தை வருடியபடி,…
அவள் முகம் சிவக்க, அவன் அவள் இதழை நெருங்கினான்,…

“ஷ்… அத்து என்ன இது, இதெல்லாம் வேண்டாம்” என்றாள் சிணுங்கும் குரலில்….

“உன் பாஷையில வேண்டாம்னா வேணும்னு அர்த்தம் அப்படி தானே” அவன் கேட்க,…. வெட்க சிரிப்புடன் அவன் மார்பில் தலை வைத்து படுத்துக்கொண்டாள்,….

அவளை அணைத்துக் கொண்டவன்,… “பேபி,… நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்று சொல்ல,.. “என்ன” என்றாள் அவன் மார்பில் இன்னும் வாகாக படுத்துக்கொண்டு,..

“அன்னைக்கு, அதாவது நமக்கு கல்யாணம் ஆன அடுத்த நாள் என்னோட உணர்ச்சிகளை கட்டு படுத்த முடியாம தான் உன்னை கிஸ் பண்ணேன், ஆனா அதுக்கு மேல எதுவும் செய்ய கூடாதுன்ற முடிவுல தான் இருந்தேன், பட் அன்னைக்கு நான் பண்ண ஒவ்வொன்னும் உனக்கும் பிடிச்சிருந்தது, உனக்கும் அதுல சம்மதம் என தெரிஞ்ச அப்புறம் தான் முழுசா உன்னை எடுத்துகிட்டேன்” என்றான்,…

“இப்போ எதுக்காக அதை சொல்லி காட்டுறீங்க” அவள் கேட்க,…”இல்ல சொல்லணும்னு தோணுச்சு அதான்,” என்றவன்,…”அப்புறம் குழந்தை வேணாம்னு முடிவு பண்ணது என்னோட அன்பு உனக்கு முழுசா புரியனும்ங்கிற எண்ணத்துல தான், நாம ஒருதருகொருதர் புரிஞ்சிகிட்டு, எல்லா விஷயத்தையும் உன்கிட்ட சொன்னதுக்கு அப்புறம் குழந்தை பெத்துக்கலாம்னு தான் அப்போதைக்கு குழந்தை வேணாம்னு தள்ளி போட்டேன்,” என்றான்…

அவன் முகத்தைப் பார்த்தவாறு தலையைத் தூக்கிய நித்திலா…”நீங்க பண்ண ஒவ்வொரு விஷயத்துக்கு  பின்னாடியும் ஒரு காரணம் இருக்கும்னு எனக்கு தெரியும், ஆனா இப்போ அதெல்லாம் எனக்கு தேவை இல்லை, அதோட லட்சுப்பா என்கிட்ட பேசுறதுக்கு முன்னாடியே தாத்தா உங்க போட்டோவை என்கிட்ட கொடுத்து பார்க்க சொன்னாரு, எனக்கு உங்களை அப்போதே ரொம்ப பிடிச்சிருந்தது, சில நாட்கள் உங்களோட கனவுலயே வாழ ஆரம்பிச்சுட்டேன், நீங்க சொன்னீங்களே அன்னைக்கு நீங்க பண்ண ஒவ்வொன்னுக்கும் நான் சம்மதம் தந்தேன்னு, அதுக்கு காரணம் இது தான், உங்களை அப்போதே மனசார நினைச்சதால தான் என்னை தொட விட்டேன்” என்றாள்,..

விக்ராந்த் இதை எதிர்பார்க்கவில்லை, மட்டற்ற மகிழ்ச்சியுடன் “லவ் யூ பேபி” எனக் கூவியபடி அவளை இன்னும் ஆழமாக, பிரிய மனமில்லாமல் தன் அணைப்பிற்குள் இழுத்துக் கொண்டான்…

​”அத்து… உங்களுக்கு என்னை எவ்வளவு பிடிக்கும்?” என நித்திலா ஆர்வத்துடன் கேட்க, “அதையெல்லாம் அளந்து சொல்ல முடியாது பேபி! நான் இது வரைக்கும் சொர்க்கத்தைப் பார்த்ததில்ல, ஆனா அதை உன் கூட வாழ்ந்து அனுபவிச்சிருக்கேன். நீ என் வாழ்வில் வந்த வரம் பேபி… நான் தவமிருந்து கிடைக்காத வரம் நீ! இதிலிருந்தே நீ புரிஞ்சுக்கோ எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்கும்னு,” என்று உருகியவன், அவளது இதழில் தன் காதலின் முத்திரையைப் பதித்தான்.

இருவரும் தங்களது காதல் உலகில் சங்கமிக்கப் போன அந்தத் தருணத்தில், “நித்தி கண்ணு!” என்ற ஜெயமோகனின் குரல் கேட்டது. “அய்யோ… தாத்தா!” என நித்திலா அதிர்ச்சியில் கண்களை விரிக்க..”தாத்தா மாடிக்கெல்லாம் வருவாரா” என்றான் விக்ராந்த்,…

“ஏன் வர மாட்டாரு, வருவாரு, இப்போ உங்களை பார்த்து என்ன சொல்ல போறாரோ,” நித்திலா நிகத்தை கடிக்க,.. “தாத்தா முன்னாடி என்னை அசிங்கப்பட வைச்சிடாதடி! நான் எங்கேயாச்சும் ஒளிஞ்சுகிறேன், சீக்கிரம் பேசி அவரை அனுப்பி விட்டுடு” என்ற விக்ராந்த், வேகமாக ஓடி சென்று அங்கிருந்த அலமாரிக்கு பின்னால் சென்று ஒளிந்து கொண்டான்.

​உள்ளே வந்த ஜெயமோகன், “என்னமா யார்ட்ட பேசிட்டு இருந்த? நித்திமா” என அறையை நோட்டமிட்டார்.

“யார்கிட்டயும் இல்ல தாத்தா இங்கே நான் மட்டும் தானே இருக்கேன்” என்றாள் தடுமாற்றத்துடன்,..

“இன்னொரு குரல் கேட்ட மாதிரி இருந்துச்சே” அவர் அறையை நோட்டமிட்டப்படி கேட்க….”அது,… அது வந்து.. அத்து கிட்ட தான் பேசிட்டு இருந்தேன்,” அவள் உளறி கொட்ட,..  மறைந்திருந்த விக்ராந்த் ‘போச்சுடா’ எனத் தலையில் அடித்துக்கொண்டான்.

“என்னது விக்ராந்த் தம்பி வந்தாரா” தாத்தா கேட்க,…”அதில்ல தாத்தா அவர் கிட்ட ஸ்பீக்கர் போட்டு போன்ல பேசிட்டு இருந்தேன், அத தான் சொல்ல வந்தேன்” அவள் சமாளிக்க,…  “அப்படியா சரி சரி” என்றவர்,…”சரிடா நான் போறேன், நீ மெதுவா வா” என்று திரும்பி நடந்தவர், மீண்டும் அவளருகில் வந்து,…”நித்தி கண்ணு விக்ராந்த் தம்பியை போகும் போது பார்த்து போக சொல்லு, முடிஞ்சா வாசல் பக்கமே போக சொல்லு, ஏன் சொல்றேன்னா கீழே விழுந்து அடி கிடி பலமா பட்டுடுச்சுன்னா நமக்கு தானே கஷ்டம், சொல்லிடுமா”என்று கூலாகச் சொல்லிவிட்டு வெளியேறினார்.

​நித்திலாவும், மறைந்திருந்த விக்ராந்தும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். ‘தாத்தாவுக்கு எப்படித் தெரிந்தது?’ என நித்திலா விழிக்க, வெளியே வந்த விக்ராந்த், “தாத்தா எப்படி கண்டுபிடிச்சாரு?” என ஆச்சரியத்துடன் கேட்டான்,..

“எனக்கும் தெரியல அத்து, ஒரு வேளை நீங்க மறஞ்சு நின்னப்போ உங்க கை மட்டும் வெளியே தெரிஞ்சது, அதை பார்த்திருப்பாரோ, உங்க கிட்ட அப்போவே சொல்லலாம்னு தான் இருந்தேன், தாத்தா அதைலாம் கண்டுக்க மாட்டாருன்னு இருந்துட்டேன்” நித்திலா அப்பாவியாகக் கேட்க, “அடிப்பாவி! அதை முன்னாடியே சொல்றதுக்கு என்னடி?” என அவளைச் செல்லமாக அடிக்கப் பாய, நித்திலா தப்பித்து ஓடினாள்.

​அடுத்த நிமிடம், மனைவி வீட்டில் திருட்டுத்தனமாக வந்திருக்கிறோம் என்பதையும் மறந்து, அந்தச் சிறிய அறைக்குள்ளேயே இருவரும் ஒருவரையொருவர் துரத்திப் பிடித்து ‘கபடி’ ஆடத் தொடங்கினர். அவர்கள் இருவரின் சிரிப்பொலியும் காதலும் அந்த அறையெங்கும் நிறைந்திருந்தது.

​அடுத்தடுத்த நாட்களில் விக்ராந்த் ஒரு நாள் கூட விடாமல், இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக வந்து நித்திலாவைச் சந்தித்துச் சென்றான். நித்திலாவும் அவன் வருவான் என்றே மாடி அறையில் தன் குழந்தையுடன் காத்திருப்பாள். இப்படியே சில நாட்கள் நகர, ஒரு வழியாக நித்திலாவும் ரிது குட்டியும் மீண்டும் தங்கள் இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் வந்த பின்னர்தான் அந்த வீடே மீண்டும் கலகலப்பாகவும், முழுமையாகவும் மாறியது.

​அன்று நாள் முழுக்கக் குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவிட்ட நித்திலா, இரவில்தான் தனது அறைக்கு வந்தாள். குழந்தைக்குப் பசியாற்றி உறங்க வைத்துவிட்டு, தானும் சோர்வில் கண்ணயர்ந்தவளை இரண்டு வலிமையான கரங்கள் மென்மையாக அணைத்துத் தன் பக்கம் திருப்பின.

​திடுக்கிட்டு விழித்தவள், “அத்து… விடுங்க, குழந்தை இருக்கா!” எனப் பதறித் தன்னருகில் பார்த்தாள். ஆனால், அங்கிருந்த குழந்தை இப்போது சமத்தாகத் தொட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது.

குறும்பாகக் கண் சிமிட்டிய விக்ராந்த், “நாம போடப்போற சண்டையில என் குட்டி பேபி நசுங்கிட்டான்னா என்ன பண்ணுறது? அதான் பத்திரமா தொட்டில்ல தூக்கிப் படுக்க வச்சிட்டேன்,” என்று காதலோடு சொல்ல, அவளும் புன்னகையோடு அவனை அணைத்துக் கொண்டாள்…

​தன் மனைவியின் அருகாமையை இத்தனை நாட்கள் மிஸ் செய்த விக்ராந்தின் கரங்கள் அவளது மேனியில் மெல்ல அத்துமீறத் தொடங்கின. அவளது இதழின் சுவையை ருசித்தபடியே, தன்னவளைத் தனக்குள் இன்னும் ஆழமாகப் புதைத்துக்கொண்டான். நீண்ட இடைவெளிக்குப் பின், இருவரும் அந்த நிசப்தமான இரவில் காதலெனும் ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தனர்.

சுபம்,….

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
14
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. சுவாரசியமான காதல் கதை.

    விக்ராந்த் நித்திலா காதல் ரசிக்க வைத்தது. 😍😍

    இருவரும் ஒருவருக்கொருவர் காதலை சொல்லிக்கொள்ளாமல் இருந்தாலும் இருவருமே மனதினுள் ஒருவர் மீது மற்றொருவர் அளவில்லா நேசத்தினை கொண்டிருந்தனர்.

    பார்வையிலும், செயலிலும் அன்பை வெளிப்படுத்தி வார்த்தைகளில் மட்டும் விலகலை சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தனர்.

    தெளிவான உரையாடல்கள் எத்தனை முக்கியம் என்பதனை இவர்களுக்குள் வந்த பிணக்கு எடுத்துக்காட்டிவிட்டது.

    அத்து மற்றும் பேபி என்ற அழைப்புகள் நினைவில் நிற்கும்.

    எதார்த்தமான கதைநகர்வு 👌🏼

    வாழ்த்துகள் சகோதரி 🤝❤️