
அத்தியாயம் 33
லாவண்யா யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறியது அந்த குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரு பெரும் நிம்மதியைத் தந்தது. ஒரு பெரிய பாரம் குறைந்த உணர்வு அவர்களுக்குள் ஏற்பட்டது.
இதற்கிடையில், அன்னலட்சுமி தன் மகனிடம் கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டதால், விக்ராந்த் தன் தாயிடம் மீண்டும் இயல்பாகப் பேசத் தொடங்கினான். இப்போது அந்த வீட்டில் அன்னம், வித்தார்த், மற்றும் சுமித்ரா ஆகிய மூவர் மட்டுமே விக்ராந்துடன் பேசுகிறார்கள். மற்றவர்களுக்கு விக்ராந்தின் வேதனை புரிந்தாலும், அவன் நித்திலாவிற்கு இழைத்த கொடுமைக்குத் தண்டனையாகவே அவனிடம் பேசாமல் ஒதுங்கி இருந்தனர்.
விக்ராந்திற்கும் நித்திலாவிற்கும் திருமணமாகி ஐந்து மாதங்கள் உருண்டோடிவிட்டன. இடையில் இனியா வீடு திரும்பி இருக்க, நித்திலா எங்கே தங்குவது என்று தெரியாமல் தவித்தாள். அப்போது மரகதப் பாட்டி விக்ராந்தின் அறைக்கே போகும்படி கூற, அவளும் அவரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவன் அறைக்கே மீண்டும் சென்றாள்,
பாட்டி ஏன் அப்படிச் சொன்னார் என்ற காரணத்தை அவள் கேட்கவில்லை என்றாலும், மனதுக்குள் ஒரு தெளிவு இருந்தது.
’எப்படியும் இன்னும் ஒரு மாதம் தானே? அதுவரை அவன் மனைவியாக அவன் அறையில் இருப்பதுதான் எல்லாருக்கும் நல்லது’ என்று நினைத்துத் தன் தங்குமிடத்தை மாற்றிக்கொண்டாள்.
நித்திலா மீண்டும் தன் அறைக்கே வந்தது விக்ராந்திற்குப் பெரும் சந்தோஷத்தைத் தந்தது. ஆனால், அதே அறையில் இருந்தும் அவள் காட்டும் அந்தப் பாரா முகம் அவனுக்குத் தீராத வேதனையைத் தந்தது. இருவரும் பேசிக்கொள்ளாமல் இல்லை ஆனால் அவர்களின் உரையாடல்கள் மிகத் தேவையெனில் மட்டுமே இருக்கும்.
சாப்பிட்டாயா? அலுவலகம் கிளம்பியாச்சா? போன்ற பொதுவான வார்த்தைகளைத் தாண்டி அவர்களுக்குள் எந்தப் பேச்சும் இருக்காது, அந்த வார்த்தைகளிலும் உயிர்ப்பும் இருக்காது, வெறும் கடமைக்காகப் பேசும் சொற்களாகவே அவை இருந்தன.
இருவரும் ஒரே கூரையின் கீழ், ஒரே அறையில் இருந்தாலும் இதயங்களால் வெகுதூரம் விலகி இருக்கிறார்கள். இந்த உயிரற்ற மௌனம் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்? காலம் இவர்களை மீண்டும் ஒன்றிணைக்குமா?
“என்ன நித்தி, ரொம்ப டல்லா தெரியிற? உடம்பு எதுவும் சரியில்லையா?” காலையிலிருந்தே நித்திலா மிகவும் சோர்வாக இருப்பதை கவனித்த சுமித்ரா, அக்கறையுடன் வினவினாள்..
”என்னன்னு தெரியல அக்கா… கொஞ்ச நாளாவே ரொம்ப டயர்டா இருக்கு. இன்னைக்கு காலையில வாந்தி வேற எடுத்தேன்,” என்று சோர்வான குரலில் பதிலளித்தாள் நித்திலா.
அவள் சொன்னதைக் கேட்டதும் சுமித்ராவின் மூளையில் மின்னல் வெட்டியது போல ஒரு எண்ணம் தோன்றியது. “நித்தி… நீ எப்போ தலைக்குக் குளிச்ச?” என்று சாதாரணமாகக் கேட்பது போலக் கேட்டாள். சுமித்ரா கேட்ட பிறகுதான் நித்திலாவிற்கு அதைப் பற்றிய நினைவே வந்தது.
”உன்கிட்டத்தான் கேட்கிறேன்,” என்று சுமித்ரா மீண்டும் அழுத்தமாகக் கேட்க, “அது… இப்போதான்க்கா, ஒரு வாரம் இருக்கும்,” என்று நித்திலா இயல்பாக பொய் சொல்ல, சுமித்ராவிற்கு ஒரு நிமிடம் ஏமாற்றமாகப் போய்விட்டது.
”அப்படியா? சரி நித்தி… ஏதாச்சும் ஃபுட் பாய்சன் ஆகிருக்கும்னு நினைக்கிறேன். நாம எதுக்கும் டாக்டரைப் பார்த்துட்டு வந்துடலாம்,” என்றாள் சுமித்ரா. “அதெல்லாம் எதுக்கு அக்கா? சரியாயிடும்,” என்று நித்திலா மறுக்க, சுமித்ரா விடுவதாக இல்லை. “சொன்னா கேளு நித்தி, ஈவினிங் ரெடியா இரு, நாம போயிட்டு வந்திடலாம்,” என்று கண்டிப்புடன் கூறினாள்.
நித்திலாவிற்கு அப்போதுதான் சுமித்ராவின் அன்றைய திட்டம் நினைவுக்கு வர, “அக்கா… இன்னைக்கு நீங்க அப்பா அம்மாவைப் பார்க்க போறதா சொன்னீங்களே? உங்க வீட்டுப் பக்கத்து வீட்டு அக்கா பொண்ணுக்குக் காதுகுத்து ஃபங்ஷன்னு ரொம்பப் பாசமா கூப்பிட்டு போனாங்களே ! நீங்க போகாட்டி நல்லா இருக்காதுக்கா,” என்றாள்.
”ஆமாம்ல… சரி, அப்போ நான் ஊர்மி அத்தைகிட்டச் சொல்றேன், நீ அவங்க கூட போயிட்டு வா,” என்று சொல்லவும்.. “அக்கா… இப்போ நான் டாக்டரைப் பார்க்கணும், அவ்வளவுதானே? நானே போய்க்கிறேன். அத்தையை எதுக்குத் தொந்தரவு பண்ணிக்கிட்டு?” என்றாள்.
”எனக்கு உன் மேல நம்பிக்கை இல்லை. இப்போ போறேன்னு சொல்லுவ, அப்புறம் ஏதாச்சும் சாக்குப்போக்கு சொல்லி நழுவிடுவ,” என்று சுமித்ரா சந்தேகிக்க, “ஐயோ அக்கா போதும்! நிஜமா நான் டாக்டரைப் பார்க்கப் போறேன். என் அக்கா இவ்வளவு தூரம் சொல்லியும் நான் போகாம இருப்பேனா?” என்று செல்லமாகக் கொஞ்சினாள்.
”சரி, என் தங்கச்சியை இப்போ நம்புறேன். ஆனா நீ எப்படித் தனியா போவ?”
”நான் என்ன சின்னக் குழந்தையாக்கா? கோபால் அண்ணா (டிரைவர்) கூடப் போய்க்கிறேன், போதுமா?” என்று சமாதானம் செய்ய,.. ”சரி சரி… டாக்டரைப் பார்த்துட்டு வந்ததும் என்ன சொன்னாருன்னு மறக்காம சொல்லிடு,” என்று சுமித்ரா சில பல அறிவுரைகளை வழங்க, நித்திலாவும் ஒரு நல்ல பிள்ளையைப் போலத் தலையசைத்துக் கேட்டுக் கொண்டாள்…
அன்று மாலை, வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு டிரைவர் கோபாலுடன் மருத்துவமனைக்குப் புறப்பட்டாள் நித்திலா. ஊர்மிளா தானும் வருவதாக எவ்வளவோ வற்புறுத்தியும், ஏதேதோ காரணங்களைச் சொல்லி நித்திலா தடுத்துவிட்டாள். அவள் மனம் முழுக்க சுமித்ரா காலையில் கேட்ட அந்த ஒரு கேள்விதான் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.
சுமித்ராவிடம் பொய் சொல்லிச் சமாளித்துவிட்டாலும், தனக்குள் இருக்கும் அந்தச் சந்தேகம் உண்மையா என்பதைத் தெரிந்துகொள்ளவே அவள் தனியாக வந்திருந்தாள்.
மருத்துவர் சில பரிசோதனைகளை எடுக்கச் சொல்ல, அதை முடித்துவிட்டு அதன் முடிவுகளுக்காகப் படபடப்புடன் காத்திருந்தவள்,.. “மிசஸ் நித்திலா… டாக்டர் உங்களைக் கூப்பிடுறாங்க!” செவிலியரின் குரல் கேட்டு, ஒருவித நடுக்கத்துடனேயே மருத்துவரின் அறைக்குள் நுழைந்தாள்.
அவளது முகத்தில் தெரிந்த கலவரத்தைக் கவனித்த மருத்துவர், “ஏன் இவ்வளவு டென்ஷன் நித்திலா? முகம் எல்லாம் வியர்த்துப் போய் இருக்கு,” என்றார் கனிவாக.
“அது… ஒன்னுமில்ல டாக்டர், லேசான பதட்டம் அவ்வளவுதான்,” எனச் சமாளித்தாள்.
லேசாகச் சிரித்த மருத்துவர், அவளது ரிசல்ட்டைப் பார்த்தபடி, “இனி நீ டென்ஷன், பதட்டம் இதெல்லாம் படவே கூடாது,” என்றார்.
“ஏன் டாக்டர்?” என அவள் புரியாமல் கேட்க, ”கங்கிராட்ஸ் மா! நீ கன்சீவா இருக்க!” அந்த இனிப்பான செய்தியைச் சொன்னார்…
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் நித்திலாவால் அதை நம்பவே முடியவில்லை. கண்கள் சட்டெனக் குளம் ஆயின. “டாக்டர்… நீங்க என்ன சொன்னீங்க?” என மீண்டும் ஒருமுறை கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ள நினைக்க,.. “நீ அம்மாவாகப் போற மா… யூ ஆர் ப்ரெக்னன்ட்!” மீண்டும் அவர் சொல்ல, நித்திலா முகத்தை மூடிக்கொண்டு விம்மி அழுதுவிட்டாள். அதுவரை இருந்த அத்தனை வலிகளும் கரைந்து, இதழில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.
சிறிது நேரம் அவளை அழவிட்ட மருத்துவர், “நீ இதை எதிர்பார்த்துதான் வந்திருக்கேன்னு புரியுது. நினைச்சது நடந்ததும் உன்னால சந்தோஷத்தை அடக்க முடியலை, அப்படித்தானே?” எனக் கேட்க, ‘ஆமாம்’ என்பது போலத் தலையசைத்தாள்.
”ஒரு பொண்ணோட வாழ்க்கையில மிக முக்கியமான சந்தோஷமான தருணம் இதுதான்,” என்றவர், “உன்னோட ஹஸ்பண்ட் வரலையா மா? அவரும் இதைக் கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவார்ல?” இயல்பாக அடுத்த கேள்வியைக் கேட்டிட, அந்த கேள்வியால் மலர்ந்திருந்த அவளது முகம் அப்படியே வாடி, ரத்த ஓட்டமின்றி வெளிறிப் போனது.
”என்னம்மா, உன்கிட்டதான் கேட்டேன்?” என்று மருத்துவர் மீண்டும் கேட்க, நித்திலா மெதுவான குரலில், “அது… அவர் ஆபீஸ் போயிருக்காரு டாக்டர்,” என்றாள்.
”ஓ… அப்போ நீயே அவருக்கு சர்ப்ரைஸ் பண்ணிடு. கண்டிப்பா அவருக்கு இது ரொம்பப் பெரிய சர்ப்ரைஸா இருக்கும்,” என்று மருத்துவர் உற்சாகமாகக் கூற, நித்திலா சிரமப்பட்டு ஒரு புன்னகையை வரவழைத்துத் தலையசைத்தாள்.
”நீ சொன்ன தேதியை வைச்சுப் பார்த்தா ஆறு வாரங்களுக்கு மேல ஆகுதுமா. 45-50 நாட்கள்ல முதல் ஸ்கேன் பண்ணிடுவோம். நீ லேட்டா வந்திருக்கறதால நாளைக்கே வந்துடு, ஸ்கேன் பார்த்துடலாம், டிலே பண்ண வேண்டாம்” என்று கூறி சில வைட்டமின் மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். அவருக்கு நன்றி கூறிவிட்டு வெளியே வந்த நித்திலாவின் மனதில் மகிழ்ச்சியை விடக் குழப்பமே விஸ்வரூபம் எடுத்திருந்தது.
’இதைப்பற்றி வீட்டில் சொல்லலாமா? விக்ராந்த் இதை எப்படி எடுத்துக் கொள்வார், நிச்சயம் சந்தோசம் தான் படுவார்,
ஆனால், அவரிடம் இதைச் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. இன்னும் ஒரு மாதம் தான் அவரோடு இருக்க போகிறேன், இருக்கும் வரை இருந்துவிட்டு, யாரிடமும் சொல்லாமல் கிளம்பிவிடுவதுதான் நல்லது.
அவர் என்னைத் வேதனை படுத்தியதற்காக இதை நான் மறைக்கவில்லை, ஆனால், என்னால் இனி அவரோடு நிச்சயமா வாழ முடியாது. அவருடைய முதல் காதல் நான் இல்லை. அவரோட மனசுல நிரந்தரமா இடம் பிடிக்க முடியும்னு எனக்கு தோணல,
லாவண்யா எதற்காகப் போனாள் என்று தெரியாது, ஒருவேளை அவள் மீண்டும் வரலாம். அவர் அவளோடே வாழ்ந்துவிட்டுப் போகட்டும். என் வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்ல என் குழந்தை எனக்குக் கிடைத்துவிட்டது. இது எனக்குப் போதும்,’ என்று தனக்குள் ஒரு முடிவுக்கு வந்தாள்.
சிந்தனையில் மூழ்கியபடி நடந்து வந்தவள், “நிலா!” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர, அங்கே விக்ராந்த் நின்றிருந்தான்.
”நீங்களா? இங்க என்ன பண்றீங்க?” என அவள் குழப்பத்துடன் கேட்க, “அண்ணி நீ ஹாஸ்பிட்டல் வந்திருக்கறதா சொன்னாங்க. அதான் வரும்போது உன்னைக் கூட்டிட்டுப் போகலாம்னு வந்தேன்,” என்றான் விக்ராந்த் கனிவாக.
”நான் கோபால் அண்ணா கூட வந்தேனே?” என்றாள் மெதுவான குரலில்.
“அவரை நான் வண்டியை எடுத்துட்டுப் போகச் சொல்லிட்டேன். வா, கிளம்பலாம்,” என்று அவன் அழைக்க, மறுக்க முடியாமல் அவனுடன் சென்று காரில் ஏறினாள். கார் வீட்டை நோக்கி விரைந்தது.
”டாக்டர் என்ன சொன்னாங்க?” வண்டியை ஓட்டிக்கொண்டே விக்ராந்த் மெல்ல வினவ, ஒரு கணம் திடுக்கிட்டவள். “ஹாங்… அது… ஃபுட் பாய்சனிங்னு சொன்னாங்க,” என்று உண்மையை மறைத்துப் பொய் சொன்னாள்.
”ம்ம்ம்… வேற?” அவன் மீண்டும் கேட்க, “என்ன?” என்று புரியாமல் விழித்தாள்.
“இல்ல… ஃபுட் பாய்சனிங்னா சில உணவுகளை எடுத்துக்கணும், சிலதைத் தவிர்க்கணும்னு அட்வைஸ் பண்ணுவாங்களே, அதைச் சொன்னாங்களான்னு கேட்டேன்,” என்றான் விக்ராந்த்.
“ஆமாம் சொன்னாங்க,” என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டாள் நித்திலா. விக்ராந்த் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை என்றாலும், நித்திலாவின் மனதுக்குள் ரகசியத்தைச் சுமக்கும் பாரம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
அன்று மாலை, குடும்பத்தினர் அனைவரும் ஹாலில் கூடியிருந்தனர். அப்போதுதான் அலுவலக உடையை மாற்றிவிட்டு வந்த வித்தார்த், “என்ன இன்னைக்கு மொத்த ஃபேமிலியும் ஒண்ணா கூடியிருக்கீங்க?” எனக் கேட்டபடி அமர்ந்தான்.
”பெருசா ஒன்னுமில்லடா கண்ணா, இந்த வீட்ல ஆரம்பிச்ச பிரச்சனை இன்னும் ஒரு முடிவுக்கு வரல, அதைப்பத்திதான் பேசிட்டு இருக்கோம்,” என்றார் பாட்டி வருத்தத்துடன்.
”ஓஹோ… அப்போ உங்க சின்ன பேரனைப் பத்தியும் அவன் பொண்டாட்டி பத்தியும் தான் பேச்சு ஓடுதா?” என வித்தார்த் கேட்க, “உன் தம்பிக்காரன் தான்டா எல்லாத்துக்கும் காரணம்! ஏன் அவன் இப்படிப் பண்ணான்?” என்று சீறினார் சந்தானம்.
“அவன் தப்பு பண்ணலனு சொல்ல மாட்டேன் சித்தப்பா. ஆனா அவன் பண்ண தப்புக்கு ஏற்கனவே பெரிய தண்டனை அனுபவிச்சுட்டான். திரும்பவும் முதல்ல இருந்து இதையே பேசிட்டு இருந்தா பாவம் சித்தப்பா என் தம்பி,” தம்பிக்குச் சாதகமாகப் பேசிய வித்தார்த்திடம்,..
”தம்பி மேல ரொம்பத்தான் பாசம் பொங்குது அண்ணனுக்கு! என்னதான் இருந்தாலும் அவன் பண்ண தப்பு தப்புதானேடா?” என்றார் லட்சுமணன் ஆத்திரத்துடன்.
“அப்பா ப்ளீஸ்… அவன் ஏற்கனவே மனசொடஞ்சு போயிருக்கான். நித்திலாதான் அவனைப் புரிஞ்சுக்காம கஷ்டப்படுத்துறான்னா, நீங்களும் அப்படிப் பண்ணா அவன் தாங்க மாட்டான். அதோட, அவனைப் பத்தின ஒரு முக்கியமான விஷயத்தை இப்போ உங்ககிட்ட சொல்லப் போறேன். அதைத் தெரிஞ்ச பிறகு. அவன் மேல கோபப்படத் தோணுச்சுன்னா தாராளமா கோபப்படுங்க,” என்று கூறி, விக்ராந்த்தின் காதல் விஷயத்தை பற்றி குடும்பத்தினரிடம் விலாவாரியாகக் கூறினான். அன்னமும் மற்றவர்களும் திகைப்புடன் அதைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
”என்னப்பா சொல்ற? அப்போ விக்ராந்த் நித்திலாவை விரும்பித்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டானா?” என ஊர்மிளா ஆச்சரியமாகக் கேட்க, “ஆமா சித்தி!” என்றான் வித்தார்த்.
இனியாவோ உற்சாகத்த்துடன்,..
“விக்கி அண்ணாக்குள்ள இப்படி ஒரு ரோமியோ இருப்பாருன்னு நான் நினைக்கவே இல்லை. சூப்பர்!” என்றாள்…
தன் மகனைத் தவறாக நினைத்திருந்த லட்சுமணன், இப்போது பெருமிதத்துடன்… “நான் என் பையனை என்னவோ நினைச்சேன். சாகுற வரை அவனை மன்னிக்கக் கூடாதுன்னு இருந்தேன். ஆனா இப்போ அவனை அப்படியே கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கணும் போல இருக்கு!” என்றார் லட்சுமணன்…
“அண்ணனே சொல்லிட்டாரு, அப்புறம் என்ன, விக்கி வரட்டும், அவன் கிட்ட நாம எல்லாரும் பேசுனா, ரொம்ப சந்தோச படுவான்” என்றார் சந்தானம்,…
“இல்ல… அவன் கிட்ட நாம யாரும் இப்போதைக்கு பேச வேணாம், அவன் தப்பு பண்ணிருக்கான், நித்திலாவை வார்த்தையால காயப்படுத்திருக்கான், நித்திலா அவளை மன்னிச்சு, எப்போ அவன் கூட சந்தோஷமா வாழ ஆரம்பிக்கிறாளோ, அப்போ நாம அவன்கிட்ட இயல்பா பேச ஆரம்பிக்கலாம்”அ னைவரும் விக்ராந்தை ஏற்றுக்கொண்டாலும், லட்சுமணன் ஒரு கண்டிப்பு விதித்தார்.
“நீங்க அவனை மன்னிச்சுடீங்கள்ல அது போதும்பா” என்ற வித்தார்த்,…”என்ன பாட்டி நீங்க மட்டும் எதுவுமே பேச மாட்டேங்கிறீங்க,” என்றான் மரகதத்திடம்,…
“விக்கிக்கு நித்திலாவைத் தான் பிடிக்கும்னு எனக்குத் தெரியும். ஆனா அர்ஜுன்? அந்தப் பையனுக்கு என்ன பதில் சொல்றது?” எனப் பாட்டி கவலைப்பட,.. வித்தார்த் சிரித்துக்கொண்டே, “பாட்டி! அன்னைக்கு அர்ஜுன் பண்ணது வெறும் ஆக்டிங்தான்னு அப்பாவே என்கிட்ட சொல்லிட்டாரு,” என்றதும் பாட்டி திகைத்து தன் மகனை பார்க்க,..
லட்சுமணன் உடனே குறுக்கிட்டு, “மன்னுச்சிடுங்கம்மா வித்தார்த் கோபமா வந்து கேட்டப்போ உண்மையை மறைக்க முடியாம சொல்லிட்டேன்” என விளக்கினார்.
“ஆனாலும் நீங்க செம பாட்டி! உங்க குட்டி மூளையை வைச்சு என்னென்ன பிளான் பண்ணிருக்கீங்க?” வித்தார்த் இப்போது பாட்டியைக் கிண்டல் செய்ய,.. “வேற என்ன பண்றதுப்பா? அந்த லாவண்யாவைப் பார்த்து நித்திலா எவ்வளவு வேதனை பட்டிருப்பா, அந்த வலி விக்கிக்கும் புரியணும்ல! அதுக்காக தான் இப்படி ஒரு ஏற்பாட்டை பண்ணேன்,
நித்திலா இந்த வீட்டு மகாலட்சுமி. அவளை எப்படி இன்னொருத்தருக்குத் தாரை வார்த்துக்கொடுப்பேன்? லாவண்யா இந்த வீட்டுக்குள்ள வந்ததிலிருந்து விக்கி முகத்தை கணிச்சே ஏதோ தப்பா இருக்குனு புரிஞ்சது, அந்த ஆட்டக்காரி தான் அவன் கிட்ட குழைந்து குழைந்து பேசுனாளே தவிர, விக்கி பார்வை மொத்தமும் நம்ம நித்தி மேல தான் இருந்தது, இருந்தாலும் அவனும் அந்த வலியை அனுபவிக்கனும்ல அதான் இப்படி ஒரு பிளான் போட்டோம் நாங்க எல்லாரும் சேர்ந்து” என்றார். சத்தியமாக இதை அன்னம் எதிர்பார்க்கவில்லை, அதிர்ச்சியில் கண்கள் வெளியே தெறித்து விடும் நிலையில் நின்றார்,..
அன்னத்தின் அதிர்ச்சியைப் பார்த்த பாட்டி, “பார்த்து மருமகளே! கண்ணு ரெண்டும் உருண்டுகிட்டு வெளியே விழுந்துடப் போகுது,” எனச் சொல்ல, அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
“அந்த ஆட்டக்காரிகிட்ட உன் பையனுக்காக வீட்டை விட்டுலாம் போக சொன்னியாமே, ம்ம்… இப்போவாச்சும் உன் மகன் மனசு புரிஞ்சதே, இனிமேலாவது திருந்துற வழியைப் பாரு,” என அறிவுரை சொல்ல, அன்னம் தன் தவறை உணர்ந்து தலைகுனிந்தவர்.. “மன்னிச்சிடுங்க அத்தை, ஏதோ மனநிலையில என்னென்னமோ பண்ணிட்டேன்” என்றார்……
அந்த நேரம் விக்ராந்தின் கார் ஹார்ன் சத்தம் கேட்டது. வித்தார்த் உடனே அலர்ட் ஆனான். “பாட்டி… தம்பி வந்துட்டான்! நான் உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்னு அவனுக்குத் தெரியக்கூடாது. நித்திலாவும் அவனும் சேர்ற வரைக்கும் நாம பழையபடி சோகமாவே முகத்தை வைச்சுக்கலாம், நாம முகத்தை பார்த்தாவது, அவங்க சேர்ந்துட மாட்டாங்களான்னு ஒரு நப்பாசை தான்” எனச் சொல்ல, அனைவரும் சட்டென முகத்தில் இறுக்கத்தை வரவழைத்துக்கொண்டு அமர்ந்தனர்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
16
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நித்திலாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியின் காரணம் யாரும் விக்ராந்துடன் பேசுவதில்லை.
ஒரே அறையில் இருந்தும் தனி தனியே விலகி இருக்கின்றனர் நித்திலாவும் விக்ராந்தும்.
குழந்தை வர போகும் மகிழ்வான செய்தியை யாருக்கும் சொல்லாமல் ஒரு மாதத்தில் விட்டு விலகி செல்ல எண்ணி விட்டாள்.
இருவரும் மன விட்டு பேசிக்கொள்ளாமல் இன்னும் இன்னும் வேதனைகளை இழுத்துக்கொள்கின்றனர்.