
அத்தியாயம் – 32
நித்திலாவிற்கு விக்ராந்தை வார்த்தைகளால் காயப்படுத்தக் கூட மனம் வரவில்லை. அவனது அந்த வேதனை நிறைந்த முகம் அவளையும் ஒருபுறம் வதைக்கத்தான் செய்தது. இருப்பினும், அவனுடன் சேர்ந்து வாழவும் அவளுக்கு மனம் வரவில்லை. இன்னும் இரண்டு மாதங்களில் இந்த வீட்டை விட்டு நிரந்தரமாகப் போய்விட வேண்டும் என்ற முடிவில் அவள் மிக உறுதியாக இருந்தாள்.
ஆனால், அவள் இங்கிருந்து கிளம்புவதற்கு முன்னால் ஒரு முக்கியமான வேலை பாக்கி இருந்தது. அது மரகதப் பாட்டி! தன்னால் இன்னொரு திருமணத்தைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்பதை அவரிடம் தெளிவாகப் புரிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், நித்திலா பாட்டியைச் சந்திக்க வந்தாள்.
நேரடியாகவே தன் மனதிலிருப்பதை அவரிடம் சொன்னாள்… “என்னால இன்னொரு கல்யாணம் பண்ணிக்க முடியாது பாட்டி!” – அவளது குரலில் ஒருவிதமான வைராக்கியமும், அதே சமயம் சொல்ல முடியாத வலியும் கலந்திருந்தது.
”ஏன்?” என்று பாட்டி எதிர்கேள்வி கேட்க, “ஏன்னு உங்களுக்குத் தெரியாதா பாட்டி? என்னால என் அத்துவைத் தவிர வேற யாரையும் மனசால கூட நினைக்க முடியாது. அப்படி இருக்க, எப்படி பாட்டி என்னால இன்னொருத்தரை கல்யாணம் செஞ்சுக்க முடியும்?”
நித்திலா கண்ணீர் மல்க பதிலளித்தாள்.
”உன்னோட அத்துதான் உன்னைப் பத்தி கொஞ்சமும் நினைச்சுப் பார்க்கலையே?” பாட்டி அமைதியாகக் கேட்டார்.
”அதைப் பத்தி எனக்குக் கவலையில்லை பாட்டி, அதோட இனி நான் அவரோட இருக்கப்போறது கொஞ்ச நாட்கள்தான். அப்புறம் நான்…” என அவள் இழுக்க, “அப்புறம் நீ என்ன பண்ணுவ? தனியாவே வாழ்ந்துடப் போறியா? உன்னோட பாட்டி, தாத்தா உன்னை அப்படி ஒரு நிலையில பார்த்து தினம் தினம் வேதனைப்பட்டு சாகணும்னு நினைக்கிறியா?” எனப் பாட்டி கோபமாகக் கேட்டார்.
”மும்பைல என் ஃப்ரெண்ட் இருக்கா பாட்டி. நான் அங்கே போகப்போறேன். அங்கேயே வேலை பார்த்துட்டு என் மீதி வாழ்க்கையைக் கழிச்சுப்பேன். இதனால பாட்டி, தாத்தா என்னை தினம் தினம் பார்த்து கஷ்டப்பட மாட்டாங்க,” என்றாள் நித்திலா தலைகுனிந்தபடி.
”பைத்தியக்காரி மாதிரி பேசாத! சின்னப் பொண்ணு நீ, அதுக்குள்ள மீதி வாழ்க்கையாம்… மீதி வாழ்க்கை!” என அதட்டியவர், “சரி… நீ வேற கல்யாணம் பண்ணிக்க வேண்டாம், விக்ராந்த் மனைவியாவே இங்கேயே இருந்துடு,” என்றார்.
பாட்டியைத் திகைப்புடன் பார்த்த நித்திலா. “என்ன பாட்டி இப்படிப் பேசுறீங்க? அவர்தான் வேற பொண்ணைக் கட்டிக்கப் போறாருல்ல?” என்றாள்..
”அவன் வேற பொண்ணைக் கட்டிக்கப் போறேன்னு உன்கிட்ட சொன்னானா?”
”அவர் அந்தப் பொண்ணைத் தான் விரும்புறேன்னு சொன்னாரு.”
”விரும்புறேன்னு சொன்னான் சரி… ஆனா அவளைக் கட்டிக்கப் போறதா சொன்னானா?” எனப் பாட்டி மடக்க, நித்திலா படபடத்தாள். “இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு பாட்டி? அந்தப் பொண்ணு இங்க வீட்லயேதான் இருக்கா. ரெண்டு மாசம் முடியுற வரைக்கும் தான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.” என்றாள்
”எனக்கென்னவோ விக்கி உன்னைத்தான் நேசிக்கிறான்னு தோணுதுமா,” எனப் பாட்டி அழுத்தமாகச் சொல்ல,
“அதெல்லாம் எதுவும் இல்லை பாட்டி! காதல் ஒருமுறைதான் வரும். அது அந்தப் பொண்ணு மேல உங்க பேரனுக்கு வந்திருக்கு. அதுதான் உண்மை,” என்றாள் நித்திலா கோபமாக.
”நீ அவனைச் சரியா கவனிக்கலனு தோணுது நித்தி. நேத்து உன் கழுத்துல இருந்த செயினைக் கழட்டி அவன் கையில கொடுத்தியே… அப்போ அவனோட பார்வை! அதை நீ பார்க்கலனு தோணுது. அந்தப் பார்வையில உன்னோட அத்துவுக்கு உன்மேல இருக்குற அன்பு வெட்டவெளிச்சமா தெரிஞ்சது. அப்புறம் அர்ஜுனைப் பத்தி நான் சொன்னப்போ, அவனோட வலி அவன் கண்கள்ல தெளிவா தெரிஞ்சது. இதையெல்லாம் வச்சுத்தான் நான் சொல்றேன்,” என்றார் பாட்டி.
”எனக்கு அப்படித் தோணல பாட்டி. அப்படி இருந்தாலும் எனக்கு இப்போ சந்தோஷமும் இல்லை, கவலையும் இல்லை. உங்க பேரன் கூட இனி என்னால வாழ முடியாது. இதுதான் என்னோட இறுதியான முடிவு. தயவுசெஞ்சு இனி இதைப் பத்தி என்கிட்ட பேசாதீங்க பாட்டி,” எனக் கைகூப்பி வேண்டிவிட்டுக் கடகடவென அங்கிருந்து வெளியேறிவிட்டாள் நித்திலா.
‘விக்கி,.. நீ தப்பு பண்ணிட்டடா, என்னால முடிந்த உதவியை உனக்கு செய்யலாம்னு நினைச்சு தான் நித்திலா கிட்ட பேசினேன், ஆனா அவ உன் மேல ரொம்ப கோபத்துல இருக்கா, இனி நீ தான் உன் வாழ்க்கையை காப்பாத்திக்கனும்’ என போகும் நித்திலாவை பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டார் மரகதம்,….
அதேசமயம், அன்னலட்சுமி ஒரு தீர்க்கமான முடிவுடன் லாவண்யாவின் அறைக்குள் நுழைந்தார். அவரைப் பார்த்ததும் லாவண்யா உற்சாகமானாள்.
“வாங்க ஆண்ட்டி! என்ன இன்னைக்கு என் ரூம் பக்கம்? அந்தப் பொண்ணு நித்திலா வீட்டை விட்டுப் போகப்போறான்னு ஏதும் குட் நியூஸ் சொல்ல வந்தீங்களா?” எனச் சிரித்துக்கொண்டே கேட்டாள்.
ஆனால் அன்னலட்சுமியின் முகம் இன்று வழக்கத்திற்கு மாறாகச் சாந்தமாகவும், அதே சமயம் உறுதியாகவும் இருந்தது. “இல்ல லாவண்யா… நான் உன்கிட்ட ஒன்னு பேசணும். நீ என் பையனோட வாழ்க்கையை விட்டுப் போயிடுமா!” என்றார் அமைதியாக.
லாவண்யா அதிர்ச்சியில் உறைந்தாள். “வாட்! என்ன ஆண்ட்டி சொல்றீங்க?”
”ஆரம்பத்துல என் பையன் உன்னை விரும்பி இருக்கலாம். ஆனா இப்போ அவன் நித்திலா கூட வாழத்தான் ஆசைப்படுறான்,” என அன்னலட்சுமி சொல்ல, லாவண்யாவிற்குப் பித்தம் தலைக்கேறியது.
“என்ன ஆண்ட்டி, திடீர்னு உங்க மருமக பக்கம் அந்தர் பல்ட்டி அடிக்கிறீங்க? என்ன திடீர்னு அவ மேல அப்படி ஒரு பாசம்?” என எரிச்சலுடன் கேட்க,.. ”எனக்கு என் பையனோட சந்தோஷம் தான் முக்கியம் லாவண்யா. நான் கவனிச்ச வரைக்கும் அவன் உன் கூட ஆசையாப் பேசி ஒருநாளும் பார்த்ததில்லை. அவன் பார்வை முழுக்க நித்திலாவைச் சுத்தி மட்டும்தான் இருக்கு. அன்னைக்கு நான் அவளைக் காயப்படுத்தினப்போ, அவன் என்னை ஒரு பார்வை பார்த்தானே… என் உடலே நடுங்கிடுச்சு! நேத்து அவளுக்காக ஒரு மாப்பிள்ளையை நிறுத்தினப்போ அவன் பட்ட வேதனை அவன் முகத்துல அப்பட்டமா தெரிஞ்சது.
உனக்கு சாதகமா நான் நடந்துகிட்டதால என் பையனும், என் வீட்டுக்காரரும் என் முகத்தைக் கூடப் பார்க்க மாட்டேங்கிறாங்க. எனக்கு ரொம்ப வேதனையா இருக்குமா. என் பையன் நித்திலா கூட இருந்தா தான் சந்தோஷமா இருப்பான். அதனால தயவு செஞ்சு கிளம்பிடு,” என அன்னலட்சுமி கெஞ்சல் தொனியில் பேசினார்.
ஆனால் லாவண்யா இறங்கி வரவில்லை. “விக்கு என்னை விரும்புறானோ இல்லையோ, நான் அவனை விரும்புறேன். அவன் கூடத்தான் இருப்பேன். என் ஆசையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது!” எனத் தன் சுயரூபத்தைக் காட்டினாள்.
அன்னலட்சுமியின் முகம் சட்டென மாறியது. “நான் உன்கிட்ட பொறுமையாத் தான் பேசிட்டு இருக்கேன். மரியாதையா நான் சொல்றதைக் கேளு. இல்லன்னா என் வேறொரு முகத்தைப் பார்க்க வேண்டி வரும்,” என்றார் குரலை சற்று தாழ்த்தி.
”என்ன மிரட்டுறீங்களா ஆண்ட்டி? இதெல்லாம் உங்க மருமககிட்ட வச்சுக்கோங்க… என்கிட்ட வேகாது!” என லாவண்யா திமிராகப் பேசினாள்.
அன்னலட்சுமி இப்போது நெருப்புப் பார்வையால் அவளைச் சுட்டெரித்தார். “சொந்த மருமகள்னு கூடப் பார்க்காம, என்னை எதிர்த்துப் பேசினான்னு அவ கால்ல வெந்நீரை ஊத்தினவ நான்! நீ யாரோ… எவளோ… என் முன்னாடி நின்னு இப்படி ஏட்டிக்குப் போட்டியா பேசுன, வெந்நீரை எல்லாம் ஊத்த மாட்டேன்… சங்கையே நெறிச்சிடுவேன்! பார்த்துக்கோ. ஒழுங்கா மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டு வெளியேற வழியைப் பாரு… இல்லன்னா நடக்குறதே வேற!” என விரல் நீட்டி எச்சரித்துவிட்டு வெளியேறினார்.
லாவண்யா கண்கள் விரிய அதிர்ச்சியுடன் நின்றாள். ‘இந்தக் கிழவிக்கு இவ்வளவு தைரியமா? இந்த மிரட்டலுக்கெல்லாம் அசருற ஆள் நான் இல்ல. விக்குவை எப்படி டீல் பண்ணணுமோ அப்படி நான் டீல் பண்ணிக்கிறேன்,’ எனத் தீர்க்கமாக ஏதோ சதித்திட்டம் தீட்டத் தொடங்கினாள்.
”என்னடா…. நித்திலா கிட்ட பேசுனியா?” என்று வித்தார்த் அக்கறையுடன் விக்ராந்திடம் வினவினான்.
விக்ராந்த் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டு, “பச்… அவ என்னை பார்த்தாலே சிடுசிடுக்கிறாடா” சலிப்புடன் சொன்னான்..
”தப்பு பண்ணது நீதானே தம்பி, நீதான் அவளுக்குப் புரிய வைக்கணும்,” என்று வித்தார்த் சொல்ல, விக்ராந்த் மெல்லத் தலையசைத்து… “ம்ம்… பட் அவ ஏதாச்சும் பேசினாலே இப்போதெல்லாம் ரொம்ப ஹர்ட் ஆயிடுறேன். ரொம்பக் கஷ்டமா இருக்கு அண்ணா” என்று இன்று அவள் தன்னிடம் பேசிய வார்த்தைகளை எண்ணி வருந்தினான்.
”ஓகே… அப்போ கொஞ்சம் விட்டுப் பிடி,” என வித்தார்த் புது யோசனை சொல்ல, “புரியல” என்றான் விக்ராந்த்.
”கொஞ்ச நாள் அவளை எந்தவிதத் தொந்தரவும் பண்ணாத, பேசாத, பார்க்காத, அவ பக்கமே போகாத. உன் வேலைக்கும் அவளைக் கூப்பிடாத. உன்னோட இந்த பாரா முகம் அவளை உன்கிட்ட கொண்டு வந்து சேர்க்கலாம். இந்த நாட்கள்ல அவளோட கோபமும் கொஞ்சம் குறைய வாய்ப்பிருக்கு,” என வித்தார்த் சொல்ல, விக்ராந்ததிற்கும் வேறு வழி இருக்கவில்லை, “சரி” என்றான்.
வித்தார்த் சொன்னது போலவே, விக்ராந்த் நித்திலாவை எதற்கும் அழைக்கவில்லை. தன் வேலையைத் தானே பார்த்துக்கொண்டான். அலுவலகம் கிளம்பும்போதும் அவளை நாடவில்லை. விக்ராந்த் அழைக்காததால் நித்திலாவும் அவன் பக்கம் வரவில்லை.
சில நாட்கள் இப்படியே கடந்து போனது. விக்ராந்திற்கு நித்திலாவிடம் பேசாமல் இருப்பது சொல்லொணாத் துயரத்தையும், மிகுந்த வலியையும் தந்தது. ஒரு நிமிடம் கூட அவளிடம் பேசாமல் இருப்பது அவனுக்கு நரகமாகத் தோன்றினாலும், தன் நிலா மீண்டும் பழையபடி தன்னிடம் வந்து சேர வேண்டும் என்பதற்காக, எந்த எல்லைக்கும் செல்ல அவன் தயாராக இருந்தான். தன் வலியையும் தாண்டி, அவளது வரவிற்காகக் காத்திருக்கும் வைராக்கியம் அவனிடம் இருந்தது.
இந்நிலையில் அன்று விக்ராந்த் அலுவலகம் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தபோது, “விக்கு டார்லிங்!” என அழைத்தபடியே லாவண்யா அறைக்குள் நுழைந்தாள். அவள் இன்னும் இந்த வீட்டில்தான் இருக்கிறாளா? என்பதையே அப்போதுதான் விக்ராந்த் உணர்ந்தான்.
”உன்னை இங்கிருந்து போயிடுன்னு தானே சொன்னேன்? இன்னும் இங்க என்ன பண்ற லாவண்யா?” அவன் பற்களை நறநறவென்று கடித்தபடி வினவ,
“ஏன் டார்லிங் கோபப்படுற? அடுத்த வாரம் டிக்கெட் புக் பண்ணிருக்கேன். ஒரு வாரம்தானே, அதோட கிளம்பிடுவேன்,” என்றாள் லாவண்யா…
”என்னை டார்லிங்னு கூப்பிடுறதை இதோட நிறுத்திக்கோ!” என்று விக்ராந்த் மிகுந்த கடுப்புடன் எச்சரித்தான்.
அதற்கு லாவண்யாவோ நீலிக் கண்ணீர் வடித்தபடி, “ஏன் விக்கு… எப்போப் பார்த்தாலும் என் மேல இப்படி கோபப்படுற? நான் என்ன தப்பு பண்ணேன்? உன்னை மனசார நேசிச்சேன், அதைத் தவிர வேற என்ன தப்பு பண்ணேன் நான்?” என்று வினவினாள்
அவளை எரிக்கும் பார்வையுடன் பார்த்தவன்,.. “எனக்கு உன்னை பத்தி ரொம்ப நல்லாவே தெரியும், என் கூட பழகுறதுக்கு முன்னாடி நீ இன்னொருத்தனோட பழகிக்கிட்டு இருந்த, எப்போ என்னை பார்த்தியோ அப்போ என்னை வந்து ஒட்டிகிட்ட, நான் கிடைக்கலன்னா நீ வேற ஒருத்தனை தேடி போவ, அப்படி பட்ட பொண்ணு தான் நீன்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்,
ஒன் வீக் முன்னாடி தான் ஒரு விஷயம் எனக்கு தெரிய வந்தது, நான் ஃபாரிங்லருந்து வந்ததும், இன்னொருதனை உஷார் பண்ணி அவன் கூட சுத்திட்டு இருந்தியாமே..
எப்போ நீ இவ்வளவு சீப்பான பொண்ணுன்னு எனக்குத் தெரிஞ்சதோ, அப்பவே உன் மேல இருந்த கொஞ்ச நஞ்ச நல்ல எண்ணமும் போயிடுச்சு.
என்னை நினைச்சுக்கிட்டே உன் லைஃப் வீணாகக் கூடாதுன்னு லண்டன்லயே உனக்கு ஏத்த பையனாப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைச்சேன். அதற்காக எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர்கிட்ட உன்னைப் பத்திச் சொன்னப்போதான், அவருக்குத் தெரிஞ்சவங்க மூலமா உன் கதையெல்லாம் வெளிய வந்தது. நீ எப்பேர்ப்பட்டவன்னு அத்தனையையும் அவர் புட்டு புட்டு வச்சிட்டாரு. நீ எப்படிப்பட்ட பொண்ணுன்னு அப்போதான் நான் முழுசா தெரிஞ்சுக்கிட்டேன்!” என்றான் விக்ராந்த் ஆவேசமாக.
தன் குட்டு வெளிப்பட்டுவிட்டதை அறிந்த லாவண்யா, சிறிதும் கலங்காமல் தான் வந்ததிற்கான வேலையை ஆரம்பிக்க தயாரானாள்.
“ஐம் ஸாரி விக்கு… நீ இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டேன், அதனால தான் மைண்ட் அப்ஷட்ல அப்படிப் பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுடா,” என்றவள் சட்டென்று அவனை அணைத்துக்கொண்டாள்.
அந்த நேரம் பார்த்துச் சரியாக நித்திலா அறைக்குள் நுழைந்தாள். இருவரும் அணைத்தபடி இருப்பதைப் பார்த்தவளுக்கு அழுகை வரவில்லை, அருவருப்பும் கோபமும்தான் வந்தது.
“ச்சீ!” என்று ஒரே வார்த்தையில் தன் வெறுப்பைக் கொட்டிவிட்டு வெளியேறிட, லாவண்யா திடீரெனத் தன்னை அணைத்த அதிர்ச்சியில் இருந்து விக்ராந்த் மீள்வதற்குள், நித்திலாவின் எதிர்பாராத வருகை அவனை நிலைகுலையச் செய்தது.
நித்திலா தன்னைப் பார்த்த அந்தப் பார்வையும், உதிர்த்த அந்த ஒரு வார்த்தையும் அவன் இதயத்தை ஈட்டியாய் துளைத்தது.
’தன் மனைவி தன்னை இவ்வளவு கேவலமாக நினைத்துவிட்டாளே!’ என்ற வேதனை, அடுத்த நொடியே ஆக்ரோஷமான கோபமாக மாறியது. அந்தத் தர்மசங்கடமான நிலைக்கும், நித்திலாவின் அருவருப்பிற்கும் காரணமான லாவண்யா மீது அவனது மொத்தக் கோபமும் திரும்பியது. தன் வாழ்வாதாரத்தையே சிதைக்கப் பார்க்கும் லாவண்யாவை அவனால் அதற்கு மேல் ஒரு நொடி கூடப் பொறுக்க முடியவில்லை.
கட்டுக்கடங்காத ஆத்திரத்தில் லாவண்யாவின் கன்னத்திலேயே ஓங்கி ஒரு அறை விட்டான். அதோடு அவனது கோபம் தணியவில்லை, அவளது கழுத்தை இறுகப் பிடித்து நெறிக்கத் தொடங்கினான். லாவண்யா மூச்சுத் திணறித் திமிறிய போதும், விக்ராந்த் தன் பிடியைத் தளர்த்தவே இல்லை.
சரியாக அந்த நேரத்தில் அறைக்குள் வந்த வித்தார்த், அங்கு நடப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் விழி விரித்தான். நிலைமையைப் புரிந்து கொண்டவன், சிறிதும் தாமதிக்காமல் பாய்ந்து சென்று தன் தம்பியை அவளிடமிருந்து பலவந்தமாகப் பிரித்தவன்,.. ”என்னடா பண்ணிட்டு இருக்க? இவளைக் கொன்னுட்டு ஜெயில்ல போய் உட்கார்ந்துக்கலாம்னு பார்க்கிறியா?” என்று கோபமாகக் கேட்க,..
“இவ… இவளை மாதிரி பொண்ணுங்கல்லாம் இந்த உலகத்துல வாழ்றதுக்கே தகுதி இல்லாதவளுங்கடா” ஆத்திரத்தில் கத்தியவன்… தொண்டையைப் பிடித்துக்கொண்டு இருமித் தவித்துக் கொண்டிருந்த லாவண்யாவை, மீண்டும் தாக்க நெருங்கிட, அவள் மரண பயத்தில் பின்வாங்கினாள்..
விபரீதமாக எதுவும் நடந்து விடுமோ என்று உடனே அவனைத் தடுத்து நிறுத்திய வித்தார்த்.. “இன்னும் எதுக்காக இங்கே இருக்க? உயிர் மேல ஆசை இருந்தா இப்பவே இந்த வீட்டை விட்டு ஓடிப் போய்டு!” லாவண்யாவை நோக்கி இடிமுழக்கமாய் கத்தினான்,..
தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற பயத்தில், லாவண்யா எதைப் பற்றியும் யோசிக்காமல் அங்கிருந்து தலைதெறிக்க ஓடிட, அதன் பின் வித்தார்த் தன் தம்பியை மெல்ல சமாதானம் செய்யத் தொடங்கினான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
5
+1
+1

