
அத்தியாயம் – 30
அன்றைய இரவு நித்திலா இனியாவின் அறையில் ஒதுங்கிக் கொண்டாள், பாட்டியும் இனி நீ விக்ராந்தின் அறைக்கு செல்ல வேண்டாம் என கூறி இருக்க அவளுக்கும் அதுவே சரி என பட்டது, அது மட்டும் இல்லாமல் அவளுக்கு விக்ராந்தைப் பார்க்கவும் மனப்போராட்டமாக இருந்ததால், அவளும் அதற்கு சம்மதித்தாள்.
ஆனால், விக்ராந்தின் அறையிலோ அமைதிக்குப் பதில் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருந்தது. நித்திலா இன்னொருவனைத் திருமணம் செய்ய சம்மதித்த அந்த நொடியிலிருந்து, விக்ராந்தின் ஆன்மா கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருந்தது.
நள்ளிரவு இரண்டு மணி இருக்கும், இருளில் மூழ்கியிருந்த அறைக்குள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிய விக்ராந்த். “பேபி…” என்று தன் இடதுபுறம் கை நீட்டி அழைத்தான். ஆனால் அங்கே வெறும் வெற்றிடமும், குளிர்ந்த மெத்தையும் தான் அவனுக்குப் பதிலளித்தன.
அவள் அருகில் இல்லை என்பதை உணர்ந்ததும் வலி மேலும் போட்டு அழுத்திட,.. ”ஏன் பேபி… ஏன் இப்படிப் பண்ண? பாட்டி கேட்டா உடனே சம்மதம் சொல்லிடுவியா? என்னால இதைத் தாங்கிக்க முடியல பேபி…” என்று வாய்விட்டே புலம்பினான். அந்தத் தனிமையில், ‘இதே வலியைத் தானே அவளும் ஒவ்வொரு முறையும் அனுபவித்திருப்பாள்!’ என்று அவனுக்கு உறைத்தது,
”நீயும் இப்படித்தானே கஷ்டப்பட்டிருப்ப? ஐம் ஸாரி பேபி… ரியலி வெரி ஸாரி! நான் தப்பு பண்ணியிருக்கேன் தான், ஆனா உன் மேல நான் வச்சிருக்கிற அன்பு உண்மையானது. அதை எப்படி நிரூபிக்கிறதுன்னு தெரியல. என்னை விட்டு மட்டும் போயிடாதே…” அவன் விம்மிக் கொண்டிருந்தபோது, வாசல் கதவருகே தன் அண்ணன் வித்தார்த் நிற்பதைக் கண்டதும், விக்ராந்த் கூனிப்போனான்.
தலைகுனிந்து அமர்ந்திருந்த அவனது அருகில் மெல்ல நடந்து வந்த வித்தார்த்… ”நாம ஏதாவது பாவம் செய்தோம்னா அது அடுத்த ஜென்மத்துல வந்து நிற்கும்னு சொல்லுவாங்க. ஆனா அதெல்லாம் அந்த காலம்! இப்போதெல்லாம் எந்த ஜென்மத்துல பாவம் பண்றோமோ, அந்தப் பாவம் அதே ஜென்மத்துல பண்ணவங்களுக்கே திரும்பி வந்துடுது. அதுதான் உனக்கு நடந்திருக்கு… என்ன நான் சொல்றது சரிதானே?”
வித்தார்த்தின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் விக்ராந்தின் காயத்தில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல இருந்தது.
”உன் மேல கொலைவெறியில் இருந்தேன்டா! ஆனா இப்போ நீ பேசுனதையெல்லாம் கேட்ட பிறகு, உன் மேல இருந்த கோவம் எல்லாம் மொத்தமாக் கரைஞ்சு போச்சு,” என வித்தார்த் சற்று தணிந்த குரலில் சொல்ல, அவன் மௌனத்தை மட்டுமே வழங்கினான்..
அவன் கண்களை நேராகப் பார்த்தவன்.. “ஆக… நீ நித்திலாவை நேசிக்கிற… அப்படித்தானே?” என்று கேட்க, விக்ராந்த் அப்போதும் மௌனமாக இருக்க, வித்தார்த் விடவில்லை.
“இது எப்போதுலருந்துடா? பாட்டி அவளுக்கு ஒரு மாப்பிள்ளையைக் கொண்டு வந்து நிறுத்தினாங்களே அப்போதிலிருந்தா? இல்ல அதுக்கு முன்னாடியிலிருந்தே தானா?”
விக்ராந்தின் மௌனம் அவனுக்கு கோபத்தை ஏற்படுத்த “இப்போ வாய் திறந்து பேசலைன்னு வையேன்… அப்படியே உன் கழுத்தை நெறிச்சுக் கொன்னுடுவேன்!” வித்தார்த் சீற..
தன் அண்ணனின் அந்தக் கோபத்திலும், மிரட்டலிலும் இருந்த பாசத்தைக் கண்ட விக்ராந்த், அத்தனை வேதனையிலும் ஒரு மெல்லிய சிரிப்பை உதிர்த்தான்.
”சிரிக்கிறியாடா? ஏன் சிரிக்க மாட்ட,
பண்ண மாட்டேங்கிற தைரியம் அப்படித்தானே?” என வித்தார்த் எகிற, விக்ராந்த் மெல்ல நிமிர்ந்து தன் தமையனைப் பார்த்தவன்.. “இப்போ என்ன தெரியணும் உனக்கு?” என்றான் கரகரப்பான குரலில்.
ஒரு நீண்ட நெடிய மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு அவனது அருகில் அமர்ந்தவன்… “லாவண்யாவை நீ லவ் பண்ணது உண்மையா? இல்லையா?”
தன் முதல் சந்தேகத்தை முன் வைத்தான் வித்தார்த்,…
சில நிமிடங்கள் அமைதி காத்தவன்.. “லாவண்யாவை நான் காதலிக்கிறதா தான் நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, நிலாவைப் பார்த்ததுக்கு அப்புறம் தான் அது காதலே இல்லை, வெறும் அட்ராக்ஷன் தான்னு புரிஞ்சது.” என்றவன் ஒரு பெருமூச்சோடு மேலும் தொடர்ந்தான்,..
”லாவண்யா கூட நான் நிறைய ஊர் சுத்திருக்கேன். அவ எப்போவுமே என்னைத் தொட்டு தான் பேசுவா. ஆனா, நான் அவளை விரும்பித் தொட்டதே இல்லை. அவளோட தீண்டல் எனக்குள்ள எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தினது கிடையாது. ஆனா நிலா… அவ கூட இருக்கும்போது இதுதான்னு சொல்ல முடியாத அளவு உணர்வுகள் எனக்குள்ள அலைமோதும். லாவண்யா நெருங்கி வரும்போதெல்லாம் விலகிப் போகச் சொன்ன என் மனசு, நிலா கூட இருக்கும்போது மட்டும் அவளை விட்டு ஒரு நொடி கூடப் பிரியக்கூடாதுன்னு ஏங்கும்.”
“ஒருமுறை லாவண்யா எல்லை மீற முயற்சி பண்ணா. ஆனா, என்னால அவ ஆசைக்கு இணங்க முடியல. அப்பவே எனக்கு ஒரு சந்தேகம் வந்தது, நான் அவளை உண்மையாவே காதலிக்கிறேனான்னு? பட் அப்போ நான் பெருசா அதை பத்தி யோசிக்கல..
நிலா கூட இருக்கும்போது என் உணர்வுகளை என்னால கட்டுப்படுத்தவே முடியாது, கணவன்ங்கிற உரிமையில அவகிட்ட அத்துமீறினேன்.”
”நிலாவோட இருக்கும்போது ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும், மறுபக்கம் லாவண்யா எனக்குப் பெரிய குழப்பத்தைத் தந்தா.
லாவண்யாக்கு என்ன பதில் சொல்ல போறேன்னு தெரியாம எனக்கு தலை வெடிக்கும் அளவுக்கு வலிக்கும், லாவண்யா என்னை உண்மையா காதலிச்சா, அவளுக்கு துரோகம் பண்ணுறேனோனு தாமதமா தோணுச்சு, எனக்குள்ள அவளுக்குத் துரோகம் பண்றேனோங்கிற குற்றவுணர்வு வந்தப்போ எல்லாம், அந்த ஆத்திரத்தை நிலா மேல காட்டுவேன். அந்த ‘சிக்ஸ் மந்த்ஸ்’ காண்ட்ராக்ட்டைச் சொல்லிச் சொல்லி அவளை வெறுப்பேத்துவேன், ஆனா அவ இதனால எவ்வளவு வேதனை படுவானு நான் யோசிக்காமலே விட்டுட்டேன்,…
ஒரு சில சமயம் நிலாவை நான் அந்த வார்த்தையால காயப்படுத்தினாலும், பல சமயம் அவளே எதிர்பார்க்காத அளவுக்கு அவகிட்ட அன்பையும் கொட்டுவேன். என் அன்பு பொய்யில்லைன்னு அவ நம்புனதால தான் அவளும் என்னை நேசிக்க ஆரம்பிச்சா.”
”எல்லாம் நல்லபடியா போயிட்டு இருந்தப்போ தான், அன்னைக்கு நிலாவை அம்மா காயப்படுத்தினாங்க. அம்மா மேல கொலை ஆத்திரம் வந்தது, அன்னைக்கு தான் நிலா நான் செய்ற தவறை எனக்கு உணர வச்சா,…”
‘இன்னும் மூணு மாசம் தானே நான் இங்கிருக்க போறேன், எனக்காக ஏன் கவலை படுறீங்கன்னு கேட்டா’, அவ அதை என்னை பார்த்து கேட்ட பிறகு தான் அதோட வலி என்னனு எனக்கு புரிஞ்சது, ஒவ்வொரு தடவையும் நான் அவகிட்ட இதை சொல்லும் போது அவளுக்கும் இப்படி தானே வலிச்சிருக்கும்னு எனக்கு உறைச்சது…
“இனி அவளை வேதனை பட வைக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணி, என் காதலைச் சொல்லப் போன நேரத்துல தான் லாவண்யா உள்ள வந்தா.”
”அதுக்கப்புறம் நிலைமை என் கைமீறிப் போயிடுச்சுடா. நான் அவளை நேசிக்கிறேன்னு சொன்னதுக்கு, ‘இதுக்கு பேரு காதல் இல்லை’ன்னு கேவலப்படுத்திப் பேசுனா. அதையே என்னால தாங்கிக்க முடியல… இப்போ பாட்டி அவளுக்கு மாப்பிள்ளை பார்க்குறாங்க, அவளும் அதுக்குச் சம்மதம் சொல்லிட்டா. என்னால இதைத் தாங்கிக்கவே முடியலடா!” எனத் தன் அண்ணனின் தோளில் சாய்ந்து கலங்கியவனை, வித்தார்த் அரவணைத்துத் தேற்றினான்.
”உன்னை இப்படிப் பார்க்க என்னால முடியலடா விக்ராந்த்! ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோ, நித்திலா அந்த அர்ஜுனைத் திருமணம் செஞ்சுக்கச் சம்மதிச்சது பாட்டிக்குச் செஞ்சு கொடுத்த சத்தியத்துக்காகத்தான். அவ மனசார இந்த முடிவை எடுக்கலடா,” என வித்தார்த் தன் தம்பியின் மனபாரத்தைக் குறைக்க முயன்றான்..
விக்ராந்த் கலங்கிய கண்களுடன் மெல்லிய குரலில்… “அவ சம்மதம் சொன்னான்னு எனக்கு அவ மேல கோபமெல்லம் வரலடா… அதைவிட அதிகமான வலிதான் மனசுல இருக்கு. என் நிலாவுக்கும் என்னை மாதிரிதானே வலிச்சிருக்கும்? இதை நினைச்சாலே என் நெஞ்செல்லாம் பதறுதுடா” என்றான்
“நீ நித்திலா மேல வச்சிருக்கிறதும் உண்மையான அன்பு, அவ உன் மேல வச்சிருக்கிறதும் உண்மையான அன்பு. அப்படி இருக்கும்போது உங்க ரெண்டு பேரையும் அந்த கடவுளால கூட பிரிக்க முடியாதுடா! சீக்கிரமே இதுக்கொரு விடிவுகாலம் பிறக்கும்.” வித்தார்த் அவன் தோளை அழுத்தமாகப் பற்றிக்கொண்டவன்.. “எனக்கு இன்னும் சந்தேகம் இருக்குடா, அதையும் கேட்டுடவா” என்றான்..
”என்ன?” என விக்ராந்த் எந்த உணர்ச்சியும் இல்லாமல் கேட்க, “நித்திலாவை நீ எப்போதிலிருந்து காதலிக்க ஆரம்பிச்ச? எனக்குத் தெரிஞ்சு கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கே அவ கூட நீ சந்தோஷமா வாழ ஆரம்பிச்சுட்ட. ஒரே ராத்திரியில அவளை நேசிக்க ஆரம்பிச்சு, அடுத்த நாளே அவளோட குடும்பம் நடத்த ஆரம்பிச்சிட்டியா என்ன? இது எப்படி சாத்தியம்?” என்றான்..
விக்ராந்த் அமைதி காக்க,…”இதுக்கு மேலையும் எதையும் மறைக்காத உண்மையை சொல்லு” என்று அதட்டினான் வித்தார்த்,…
வித்தார்த் கேட்ட அந்தக் கேள்வி, விக்ராந்தின் மன அடுக்குகளில் உறைந்து கிடந்த பழைய நினைவுகளைத் தட்டி எழுப்பியது.
“நிலாவை எனக்கு சில மாசத்துக்கு முன்னாடியே தெரியும்டா…” விக்ராந்த் சொன்ன அந்த ஒற்றை வார்த்தையில் வித்தார்த் திகைத்துப் போனான்.
“என்னடா சொல்ற, முன்னாடியே தெரியுமா? எப்படி?” அவன் ஆர்வமாக கேட்க,….”ஃபர்ஸ்ட் டைம் அவளை ஒரு ரெஸ்டாரண்ட்ல தான் பார்த்தேன், ஒரு க்ளைண்டை மீட் பண்ண போயிருந்தேன், அன்னைக்கு அவர் வர லேட்டானது, அவருக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்த சமயம், ஒரு பொண்ணோட சிரிப்புச் சத்தம் என் கவனத்தைத் திருப்புச்சு. அங்கதான் என் நிலாவை முதல் தடவை பார்த்தேன். ஒயிட் சல்வார்ல தேவதை மாதிரி இருந்தா,
அவளோட ஒவ்வொரு அசைவையும் அவளுக்கே தெரியாம நான் ரசிச்சேன்.”
“அவ கூட ரெண்டு பொண்ணுங்க இருந்தாங்கன்னு நினைக்கிறேன், அவங்க முகமெல்லாம் என் கவனத்துல பதியல, என் நிலா மட்டுமே என்னை ரொம்ப அட்ராக்ட் பண்ணா, ரொம்ப நேரமா சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தா, அவ ஒவ்வொரு முறை சிரிக்கும் போது பித்தாகி போன ஃபீல் எனக்கு,
அப்போ அங்க தீடீர்னு ஒருத்தன் வந்து நின்னு நிலா கூட வந்த பொண்ணுகிட்ட வம்பு பண்ணிட்டு இருந்தான், அவங்க பேசிக்கிட்டதை வச்சு அந்த பையன், நிலா கூட வந்திருந்த அந்த பொண்ணை லவ் பண்ணுறான்னு தெரிஞ்சிக்கிட்டேன், அது அந்த பொண்ணுக்கு விருப்பம் இல்லை போல, அவன் கிட்ட ஹார்ஸா ஏதேதோ பேசினா, பதிலுக்கு அந்த பையனும் ஹார்ஸா பேசி, அந்த பொண்ணோட துப்பட்டாவை பிடிச்சு இழுத்தான், அதுவரைக்கும் அமைதியா அவங்கள விலக்க முயற்சி செய்து கொண்டிருந்த நிலா, அவன் கன்னத்தியே ஒன்னு விட்டா,…
அவளோட அந்த அடி, சற்று தள்ளிருந்த என் காதையே கிழிச்சிக்கிட்டு உள்ள போச்சு, அப்படினா அந்த பையனோட நிலை எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சு பாரு..
‘பப்ளிக் பிளேஸ்ல ஒரு பொண்ணு துப்பட்டாவை பிடிச்சி இழுகிறியே நீ எல்லாம் மனுஷன் தானா’ன்னு இங்கிலீஷ் ல ரெண்டு கெட்ட வார்த்தை கூட பேசுனா, அந்த கெட்ட வார்த்தை கூட என் காதுல தேன் பாயுற மாதிரி தான் இருந்தது,..
அவளோட அந்தத் தைரியமும், ‘ஒரு பொண்ணுகிட்ட இப்படித்தான் நடந்துப்பியா?’ன்னு அவ கேட்ட கேள்விகளும் என்னை அவ பக்கம் அப்படியே கட்டிப் போட்டுடுச்சு. அன்னைக்கு நைட் முழுக்க நிலாவோட முகம் தான் என் கண்ணுக்குள்ள வந்தது. லாவண்யா என்னை ஒருபோதும் அப்படிப் புலம்ப வைத்ததே இல்லை,..”
“உண்மையைச் சொல்லணும்னா லாவண்யாவை நான் இவ்வளவு வருஷமா காதலிக்கிறேன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா அவளைப் பார்க்கும்போதெல்லாம் ஒருபோதும் எனக்குள்ளே எந்த ஒரு சிறப்பான உணர்வும் வந்ததே இல்லை. அது வெறும் பழகிய ஒரு முகமா தான் இருந்தது.”
”ஆனா நிலா அப்படி இல்லை… அவகிட்ட அப்படி என்ன வசீகரம் இருக்குனு எனக்கே தெரியல, அது ஒரு அதிசயம் தான்! ஒரு தடவை மட்டுமே நான் பார்த்த அந்தப் பொண்ணு, எனக்குள்ளே எப்படி இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினான்னு இப்போ யோசிச்சாலும் ஆச்சரியமா இருக்கு.
எத்தனையோ வேலைகளுக்கு நடுவுல கூட, அவளோட அந்தச் சிரித்த முகம் சட்டென என் கண்ணுக்குள்ள வந்து போகும். அவளோட நினைவை மறக்கணும்னு நான் ஒருபோதும் நினைச்சதே இல்லை. அவளைப் பத்தி நினைக்கும் போதெல்லாம், என் அடிமனசுல இருந்து ஒரு சொல்ல முடியாத சந்தோஷம் அப்படியே ஊற்றெடுக்கும். அது ஏதோ ஒரு மேஜிக் மாதிரி எனக்குள்ளே படரும்..
நாட்கள் இப்படியே கடந்தது,… அப்பா பொண்ணு பார்க்கப்போறோம்னு சொல்லிட்டு வந்து நின்னாரு, அப்பாவை சரி கட்டும் வழி தெரியாம, பாக்கப்போற பொண்ணுக்கிட்டயே பேசி எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்திடணும்னு முடிவு பண்ணித்தான் உங்க எல்லார் கூடவும் வந்தேன்.
போனதிலிருந்து அந்த பொண்ணோட முகத்தை நான் ஏறெடுத்தும் பார்க்கல, அவளை தனியா சந்திச்சி, நான் சொல்ல வேண்டியதை சொன்ன போதும் கூட அவளை ஏறெடுத்து பார்க்கல…
நான் அவ்வளவு தூரம் சொல்லியும், பிடிச்சிருக்குன்னு சொல்ல அவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும் அப்டின்ற ஆத்திரத்தோடு தான் அவ முகத்தை முதல் முதலா பார்த்தேன்,
பார்த்த அடுத்த நொடி நான் அப்படியே ஸ்தம்பிச்சுப் போயிட்டேன், ரெஸ்டாரண்ட்ல பார்த்து நான் ரசிச்சு என்னை ஒவ்வொரு நாளும் தூங்க விடாம புலம்ப வச்ச அவ என் முன்னாடி நின்னுட்டு இருந்தா, நான் துளியும் எதிர்பார்க்கவே இல்ல.
ஒரு மாசத்துல கல்யாணம்னு முடிவு பண்ணாங்க. என்னால அதைத் தடுக்க முடியல… தடுக்கவும் மனசில்லை. ஏன்னா, என் மனசு முழுக்க அவ நிறைஞ்சு போயிருந்தாளே, எப்படி என்னால நிறுத்த முடியும்,..
இடையில லாவண்யா வேற கல்யாணத்தை நிறுத்தச் சொல்லி ரொம்ப டார்ச்சர் பண்ணா. நான் நினைச்சிருந்தா நடக்க போற கல்யாணத்தை நிறுத்தி இருக்கலாம், ஆனா நான் அதுக்கு தயாரா இல்ல…
அதனால, ‘அப்பாவை எதிர்த்து என்னால எதுவும் செய்ய முடியல’ன்னு அப்பாவை ஒரு காரணமா அவகிட்ட சொல்லிட்டேன்.”
”என் கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி லாவண்யா போன் பண்ணி அழுதா. ‘நீ இல்லன்னா நான் செத்துடுவேன்’னு சொன்னப்போ, எனக்குப் பயங்கரமான குற்றவுணர்வு ஏற்பட்டது. இத்தனை நாட்கள் வேறொரு மனநிலையில் இருந்த நான், அப்போது தான் லாவண்யாவை பற்றி யோசித்தேன்,
பாவம், அவ என்னை நேசிச்சதைத் தவிர வேற என்ன தப்பு பண்ணான்னு தோணுச்சு.
’இப்போ நான் என்ன பண்ணட்டும்?’னு கேட்டேன். அவதான் டிவோர்ஸ் ஐடியாவைச் சொன்னா..
‘எல்லாம் கை மீறி போச்சு, ரெண்டு நாளையில உனக்கு கல்யாணம், சரி உன் குடும்பத்துக்காக இதை பண்ணிக்கோ, ஆனா எனக்காக இந்த டிவோர்ஸ்க்கும் ஒத்துக்கோ’ன்னு சொன்னா, எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல, பிரமிச்சு போய் நின்னேன், அவ ஏதேதோ பேசி அழுதா, எனக்கு ரொம்ப கில்ட்டா இருந்தது, யோசிக்க கூட முடியல, வேறு வழியே இல்லாம தான் சரி நான் சம்மதிக்கிறேன்னு சொன்னேன்,….”
”ஆனா முழு மனசோடதான் நிலா கழுத்துல தாலி கட்டுனேன். லாவண்யாவுக்கு வாக்குக் கொடுத்ததால டிவோர்ஸ் பேப்பரை ரெடி பண்ணி வச்சிருந்தாலும், அதை நிலாகிட்ட கொடுக்க எனக்கு மனசே இல்லை. ‘எனக்குப் பிடிச்சிருக்கு’ன்னு நிலா அன்னைக்குச் சொன்ன அந்த ஒரு வார்த்தைதான் என் வாழ்க்கையோட ஆகச்சிறந்த சந்தோஷமா இருந்தது.
ஆனா… முதலிரவு அன்னைக்கு எல்லாம் தலைகீழா மாறிடுச்சு. ‘நான் உங்க அப்பாக்காகத்தான் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சேன்’னு அவ சொன்ன அடுத்த நிமிஷம், என் சந்தோஷத்துல யாரோ மண்ணள்ளிப் போட்ட மாதிரி ஆயிடுச்சு.
‘என் அப்பாவுக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்க இவ யாரு? என் மேல இவளுக்குக் காதல் இல்லையா?’ங்கிற ஈகோவும் கோபமும் ஒன்னா சேர்ந்து வந்துடுச்சு.
அந்தக் கோபத்துலதான், லாவண்யாவுக்காக ரெடி பண்ணி வச்சிருந்த அந்த டிவோர்ஸ் பேப்பரை எடுத்து அவகிட்ட நீட்டுனேன். என் கோபம் தான் எல்லாத்தையும் கெடுத்துடுச்சு. நான் பண்ண தப்புக்கு இன்னைக்குத் தண்டனையை அனுபவிக்கிறேன்,” என்று கூறி கண்கலங்கி நின்றான் விக்ராந்த்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
13
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


விக்ராந்த் மனசுல இருக்கிறது வெளில வந்திருச்சு.. இனி நிலா தான் அவனை புரிஞ்சுக்கணும்..
அன்று அவளுக்களித்த வலியை இன்று வலிக்க வலிக்க அவன் அனுபவிக்கின்றான்.
விக்ராந்த் உன்னை தெளிவான ஆள் என்று நினைத்தால். ஆழம் தெரியாமல் நீரில் காலை விட்டவன் கணக்கா காதலில் விழுந்திருக்கியே பா!
நிலா! நிலா! 🤣🤣
நிலா நிலானு இப்போ இவ்ளோ உருகுறியே. ஒரு வாரம் இல்ல ஒரு மாசம் உன் கோவத்தை எல்லாம் அவகிட்ட வழக்கம் போல ஆறு மாசம் கணக்க சொல்லிக்காட்டி குறைச்சிட்டு அப்போவே உண்மைய சொல்லி உருகிருக்கலாம்ல.
காதல் எது ஈர்ப்பு எது என்று தெரியாமல் அவனே அவன் வாழ்க்கையை குழப்படி செய்து வைத்திருக்கின்றான்.
இரண்டு பக்கமும் நிலையாக நில்லாமல் இருந்தது பெருந்தவறு.
திருமணம் முன்பே லாவண்யாவிடம் தெளிவாக அவனது முடிவை கூறி உறவை துண்டித்திருக்க வேண்டும். இல்லையேல், மனம் விரும்புபவள் என்ற காரணத்திற்காக வேண்டி நித்திலாவுடனான திருமணத்தை நிறுத்தியிருக்க வேண்டும்.
இரண்டும் செய்யாமல் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என அல்லாடி அவர்களையும் அல்லாட வைத்துள்ளான்.