
அத்தியாயம் – 28
நாட்கள் ஒவ்வொன்றும் ஒரு யுகமாக நகர்ந்தன. நித்திலாவின் மௌனம் விக்ராந்தைச் சித்திரவதை செய்தது. அவளிடம் பேச வேண்டும், தன் மனதில் உள்ள பாரத்தைக் கொட்ட வேண்டும் என்று அவன் துடித்த ஒவ்வொரு முறையும், நித்திலா ஒரு அந்நியரைப் போல அவனைத் தவிர்த்துச் சென்றாள். அவளது அந்தப் புறக்கணிப்பு, கோபத்தை விடக் கொடியதாக அவனுக்குத் தோன்றியது.
அன்று ஒரு நாள், இனியும் அவளை நழுவ விடக் கூடாது எனத் தீர்மானித்தான். அவனை கடந்து செல்ல முயன்றபோது, குறுக்கே கையை நீட்டி வழிமறித்தான்.
”விலகுங்க…” என நித்திலா அவனை ஏறிட்டுப் பார்க்காமல் சொல்ல, விக்ராந்தின் பிடிவாதம் கூடியது.
”முடியாது நிலா! எப்போ பார்த்தாலும் என்னைத் தவிர்த்துகிட்டே இருந்தா என்ன அர்த்தம்? நான் பேசுறதை ஒரு அஞ்சு நிமிஷம் காது கொடுத்துக் கேட்கக் கூட உனக்கு மனசில்லையா?” என அவன் இயலாமையுடன் கேட்டான்.
அவன் கையைத் தள்ளிவிட்டுப் போக முயன்றவளை, வம்புப் பிடியாகத் தடுத்து நிறுத்தினான். அவளது விழிகளில் தெரிந்த அந்த வெறுப்பு அவனைச் சுட்டெரித்தாலும், இன்று ஒரு முடிவு காணாமல் அவளை விடுவதாக இல்லை என்ற உறுதியுடன் தன் முன்னால் நின்ற விக்ராந்திடமிருந்து தப்ப வழியின்றி,.. “சரி நீங்க சொல்றதை நான் கேட்கிறேன், அதுக்கு முன்னாடி என் கேள்விக்கு பதில் சொல்லுங்க” என நித்திலா உறுதியாக நிற்க, “கேளு, சொல்றேன்,” என்றான் விக்ராந்த் ஒருவித நம்பிக்கையுடன்.
”எனக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் கொடுத்தீங்களே… அது நீங்க சுயமா எடுத்த முடிவா? இல்ல யாராவது சொல்லி அப்படிச் செஞ்சீங்களா?” லாவண்யா சொன்ன விஷயம் அவள் மனதைக் குடைந்து கொண்டிருந்தது அல்லவா! இன்று கேட்டு உறுதி படுத்திக்கொள்ள நினைத்தாள்..
விக்ராந்த் ஒரு கணம் தடுமாறினான். அந்தத் தடுமாற்றமே அவளுக்குப் பதிலைச் சொல்லிவிட்டது.
“நிலா…அது” என்று அவன் பேச முடியாமல் தடுமாற,… “சொல்லுங்க,… இந்த தயங்குறதுலாம் உங்களுக்கு செட் ஆகல, எதை பத்தியும் யோசிக்காம நினைக்கிறதை செய்றவரு தானே நீங்க, இப்போ ஏன் பேச இவ்வளவு தடுமாறுறீங்க” என்றாள்..
“ஏன்னா… உனக்காக தான், உன்னை இதுக்கு மேலும் கஷ்டப்படுத்த நான் விரும்பல,” அவன் சொல்லில், கேலியாக சிரித்தாள் அவள்….
“இதுக்கு மேலயும் கஷ்டப்படுத்த விரும்பலயா நீங்க,.. நிஜமாவே எனக்கு இதை கேட்க சிரிப்பு தான் வருது” என்றவள்,…”நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க” என்றாள்,…
“லாவண்யா சொல்லி தான் நான் உனக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் கொடுத்தேன், ஆனா அன்னைக்கு” அவன் ஏதோ விளக்க முற்பட, நித்திலா அவனை இடைமறித்து..
”போதும்! நான் கேட்ட கேள்விக்குப் பதில் கிடைச்சிருச்சு. எல்லாத்தையும் நீங்க காதலிச்ச பொண்ணு சொல்லிதான் செஞ்சிருக்கீங்க. அப்போ… என்னை நெருங்குறதைக் கூட அவ சொல்லிதான் செஞ்சீங்களா?” நித்திலாவின் கண்களில் நீர் ததும்பியது.
”ஸ்டாப் இட் நிலா! நான் யாரு பேச்சையும் கேட்டு நடக்குறவன் கிடையாது!” என விக்ராந்த் கர்ஜித்தாலும், நித்திலாவின் எள்ளல் குறையவில்லை.
“இப்போதானே சொன்னீங்க லாவண்யா சொல்லிதான் டிவோர்ஸ் பண்ணேன்னு? இப்போ என்ன மாத்திப் பேசுறீங்க?” என அவள் வாதிட,
“பச்… அது அப்போ,.. அப்போ நான் வேற மனநிலைல இருந்தேன்” அவன் நலிந்த குரலில் சொல்ல,…. “வேற மனநிலைலனா புரியல?” என்றாள்….
உணர்ச்சிவசப்பட்டு அவள் கரங்களைப் பற்றியவன்,.. “இப்போ நான் உன்னைத்தான் காதலிக்கிறேன் நிலா, உன்னை மட்டும் தான் நேசிக்கிறேன். ப்ளீஸ் புரிஞ்சுக்கோ பேபி!” விக்ராந்தின் கண்கள் கலங்கி இருந்தன.
ஆனால், அவன் சொன்ன வார்த்தைகள் நித்திலாவிற்குச் சந்தோஷத்தைத் தரவில்லை, மாறாகக் குழப்பத்தையே தந்தது.
”நீங்க என்ன சொல்றீங்க? கொஞ்ச நாளைக்கு முன்னாடி லாவண்யாவைக் காதலிக்கிறதா சொன்னீங்க… இப்போ என்னை விரும்புறதா சொல்றீங்க? அப்போ இதுக்கு முன்னாடி உங்க மனசுல யார் இருந்தது?” எனக் கேட்டாள்.
விக்ராந்த் திகைத்து நிற்க, நித்திலாவே தொடர்ந்தாள். “அப்போ லாவண்யா இருந்தா, இப்போ நான் இருக்கேன்… அப்போ இதுக்கு அப்புறம் இன்னொரு பொண்ணா? இதுக்குப் பேரு காதல் இல்லை விக்ராந்த், இதுக்கு வேற பேரு! முன்னாடி லாவண்யா கூட இருந்தீங்க, அதனால அவ மனசுல இருந்தா… இப்போ கொஞ்ச நாளா என் கூட இருக்கீங்க, அதனால நான் இருக்கேன்னு சொல்றீங்க. இன்னும் கொஞ்ச நாள்ல வேற ஒரு பொண்ணு கிடைச்சா அவளும் உங்க மனசுக்குள்ள வருவாளா!”
அருவருப்பான ஒரு பார்வையுடன் அவனைப் பார்த்த நித்திலா, “நீங்க லவ் பண்ண பொண்ணுக்காக என்னை பிரிய நினைக்கிறீங்கன்னு நினைச்சப்போ கூட உங்க மேல ஒரு மரியாதை இருந்தது. ஆனா இப்போ அவகிட்ட இருந்து என்கிட்ட தாவுறீங்களே… இதைத் தான் காதல்னு சொல்றீங்களா? சத்தியமா உங்ககிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல! உங்க மேல வச்சிருந்த கொஞ்ச நெஞ்சம் மரியாதை, பாசம், நம்பிக்கை எல்லாம் இன்னையோட செத்து போச்சு, நான் போற வரைக்கும் தயவு செஞ்சு என் பக்கமே தலை வச்சு படுக்காதீங்க” என கை கூப்பி கேட்டுக் கொண்டவள், அந்த நொடியே அவ்வறையிலிருந்து வெளியேறிவிட்டாள்….
விக்ராந்திற்கு அவளை தடுக்க முடியவில்லை, அவனுக்கு புரிந்தது தான் முழு உண்மையையும் சொல்லிருந்தால் அவள் நிச்சயம் தன்னை புரிந்து கொள்வாள் என்று, ஆனால் அவளின் அந்த வார்த்தைகள் அவனை அதற்கு மேலும் பேசமுடியாமல் செய்து விட்டது,.. அவள் தன்னை இவ்வளவு இழிவாக நினைப்பாள் என அவன் நினைக்கவே இல்லை, அவள் வார்த்தைகள் தந்த வலியில் அவளிடம் தன் மனதில் உள்ளதை முழுதாக சொல்லாமல் விட்டுவிட்டான்,….
இதற்கிடையில், பாட்டியும் லட்சுமணனும் லாவண்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவது குறித்துத் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தனர், அப்போது தற்செயலாக அவர்களின் பேச்சு காதில் விழவே அவர்கள் இருக்கும் அறைக்குள் நுழைந்தாள் நித்திலா,…
”நீங்க பேசுனது என் காதுல விழுந்தது பாட்டி, லாவண்யாவைப் பத்தி ஒரு விஷயம் பேசலாம்னு வந்தேன்,” என்றாள் நித்திலா. அம்மாவும் மகனும் புரியாமல் அவளைப் பார்த்தனர்.
”லாவண்யா எங்கேயும் போக வேண்டாம்… அவ இங்கேயே இருக்கட்டும்,” என நித்திலா தயக்கத்துடன் சொல்ல, லட்சுமணன் அதிர்ந்து போனார். “நீ என்ன சொல்றனு புரிஞ்சு தான் சொல்றியாமா நித்திலா? அவளை எப்படி இங்கே இருக்க விட முடியும்?” என அவர் கோபமாகக் கேட்க,..
“அப்பா கோவ படாம நான் சொல்ல வரதை கேளுங்க, ப்ளீஸ்” கெஞ்சலுடன் சொன்னவள்.. “உங்க பையன் அந்தப் பொண்ணைத்தான் விரும்புறாரு. அவர் சந்தோஷத்துக்காகவாச்சும் அந்தப் பொண்ணு இங்கே இருந்து தான் ஆகணும்” என அவள் சொல்ல,
“எங்க பையன் சந்தோசம் எங்களுக்கு முக்கியம் இல்லமா, எப்போ அவன் செய்ய கூடாத தவறெல்லாம் செய்தான்னு தெரிஞ்சதோ அப்போதே அவனை நான் வெறுத்துட்டேன், இனி அவன் சந்தோசமா இருந்தா என்ன இல்லாட்டி எனக்கென்ன” லட்சுமணன் ஆவேசமானார்.
“அப்படியெல்லாம் சொல்லாதீங்கப்பா, என்ன இருந்தாலும் அவர் உங்க மகன், அவர் என்ன தான் தப்பு பண்ணிருந்தாலும் அதுக்காக அவர் நல்லா இருக்க கூடாதுனுலாம் நினைக்க கூடாது, அதுவும் என்னால உங்க மகனை நீங்க இவ்வளவு தூரம் வெறுக்குறது, எனக்கு கஷ்டமா இருக்கு, இனி ஒரு தடவை இப்படிலாம் பேசாதீங்க” என்றாள் கெஞ்சுதலாய்….
“எனக்கு அந்த கடவுள் மேல ரொம்ப கோபம் வருதும்மா, அவனை மாதிரி ஒரு பையனை கொடுத்ததுக்கு பதிலா, உன்னை மாதிரி ஒரு பொண்ணை கொடுத்திருந்தா நான் காலா காலத்துக்கும் நிம்மதியா இருந்திருப்பேனே” என்றார் கலங்கிய குரலில்…
நித்திலா அவர் கரம் பற்றி, “இப்போவும் நான் உங்க பொண்ணு தானேப்பா?” எனச் சொல்ல, உணர்ச்சிவசப்பட்டு அவர் அவளை அணைத்துக் கொண்டார்.
“இந்த பொண்ணு சொன்னா நீங்க கேட்பீங்க தானேப்பா, லாவண்யாவை வெளியே அனுப்ப வேணாம், ப்ளீஸ்” அவள் மீண்டும் கெஞ்சலுடன் கேட்டுக் கொள்ள…. “என்னை மன்னிச்சிடும்மா, எனக்கு இதுல கொஞ்சமும் உடன்பாடு இல்லை” உறுதியாய் மறுத்துவிட்டார் அவர்,…
“அப்பா ப்ளீஸ் எனக்காக” அவள் விடாமல் மீண்டும் மீண்டும் கேட்க,… அத்தனை நேரம் அமைதியாய் நின்றிருந்த பாட்டி…. “நித்திலா… நீ சொல்றதுக்கு நான் சம்மதிக்கிறேன். ஆனா, இதுக்கு பிரதிபலனா நான் சொல்றதை நீ கேட்பியா?” என்றார் தீர்க்கமான குரலில்.
”கண்டிப்பா செய்றேன் பாட்டி,” என அவள் வாக்குக் கொடுக்க, பாட்டி தன் கையை நீட்டி, “எனக்குச் சத்தியம் பண்ணிக் கொடு!” என்றார். நித்திலா சற்று கலக்கத்துடன், “சத்தியம் வாங்குற அளவுக்கு அப்படி என்ன பாட்டி?” எனக் கேட்க, பாட்டியோ “அதை இப்போ சொல்ல மாட்டேன், நேரம் வரும்போது சொல்றேன். இப்போ சத்தியம் மட்டும் செய்,” என்றார்.
பாட்டி எப்போதும் தன் நலனுக்காகவே முடிவெடுப்பார் என்ற நம்பிக்கையில், நித்திலாவும் அவர் கையில் அடித்துச் சத்தியம் செய்தாள்.
அதற்குப் பிறகு லாவண்யா அந்த வீட்டில் சகஜமாக வலம் வரத் தொடங்கினாள். விக்ராந்திற்குத்தான் நடப்பதெல்லாம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. லாவண்யாவைத் துரத்தத் துடித்த பாட்டியும் அப்பாவும், இப்போது அவளை எப்படி அனுமதித்தார்கள் என்று புரியாமல் தவித்தான். யாரிடமும் கேட்கவும் அவனுக்குத் துணிவில்லை.
நிம்மதி இழந்து தவித்த விக்ராந்த், வலியப் போய் நித்திலாவிடம் பேச முயன்றாலும், அவளோ தன் கூர்மையான வார்த்தைகளால் அவனை நோகடித்து, “தயவுசெஞ்சு என்னைத் தொந்தரவு செய்யாதீங்க” என்று ஒதுங்கிவிட்டாள்.
விக்ராந்த் இப்போதெல்லாம் நித்திலாவைத் தொந்தரவு செய்ய முயற்சிப்பதில்லை. ஆனால், அவளைத் தன்னை விட்டு எக்காரணம் கொண்டும் அனுப்பிவிடக் கூடாது என்ற முடிவில் மட்டும் பாறையைப் போல உறுதியாக இருந்தான். அதே சமயம், லாவண்யாவை அவன் தன் நிழலாகக் கூடப் பக்கத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை. தன்னை விட்டுப் போகச் சொன்ன பிறகும் லாவண்யா எதற்காக இன்னும் இந்த வீட்டிலேயே ஒட்டிக் கொண்டிருக்கிறாள் என்பது புரியாமல், ஒருநாள் அவளிடமே நேரடியாகக் கேட்டுவிட்டான்.
”இன்னமும் நீ ஏன் இங்கேயே இருக்க லாவண்யா? நான் தான் என் முடிவை உன்கிட்ட சொல்லிட்டேன்ல, நீ உன் லைஃபைப் பார்த்துட்டுப் போக வேண்டியதுதானே?” என்றான் கறாராக.
லாவண்யா ஒரு கணம் தடுமாறி, “நீ அப்படிச் சொன்னாலும் என்னால உன்னை விட்டுப் போக முடியல விக்கு,” என்றவள், அவன் முறைத்த முறைப்பில் சட்டெனச் சமாளித்துக் கொண்டு.., “இல்ல… ஐ மீன், நான் கொஞ்ச நாள் உங்க வீட்ல உள்ளவங்களோட இருந்துட்டுப் போகலாம்னு நினைக்கிறேன். எனக்கு உங்க வீட்ல உள்ளவங்களை ரொம்பப் பிடிச்சுப் போச்சு, அதான் இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டுப் போகலாம்னு இருக்கேன்,” என்றாள்.
”இதுக்கு எப்படி வீட்ல உள்ளவங்க ஒத்துக்கிட்டாங்க?” என அவன் சந்தேகமாகக் கேட்க, “ஆண்ட்டி தான் காரணம், அவங்கதான் எல்லார்கிட்டயும் பேசி சம்மதம் வாங்கினாங்க,” என வாய்க்கு வந்த பொய்யை கூறிட, விக்ராந்த் அதற்கு மேல் அவளிடம் பேச விரும்பாமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.
‘விக்கு டார்லிங்…. நீ எனக்கு வேணும், அன்னைக்கு நான் சொன்ன மாதிரி நீ கிடைக்கிறதுக்காக நான் எந்த எல்லைக்கும் போவேன்னு சொன்னேன்,, பச்… ஆனா என் வேலை இவ்வளவு ஈஸியா முடியும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல, உன் பொண்டாட்டி, ஸாரி ஸாரி காண்டராக்ட் பொண்டாட்டி அவ கிட்ட அது இதுன்னு சொல்லி, அவ மூலமாவே நான் இங்கே தங்க, வீட்ல உள்ளவங்க கிட்ட அனுமதி வாங்கிட்டேன், என்ன சொன்னாலும் நம்பிடுவா போலருக்கே அவ், ம்ம்ம்… அவளுக்காக தானே என்னை விட்டு விலகுற, இப்போ நான் அவளை வச்சே உன்னை நெருங்குறேன், நீ எனக்கு மட்டும் தான் சொந்தம், இந்த லாவன்யாக்கு மட்டுமே சொந்தமானவன் நீ’ சென்று கொண்டிருந்த விக்ராந்தின் முதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த லாவண்யாவின் கண்கள் வன்மத்தில் மின்னின..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
22
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


விக்ராந்த் மனசுல என்ன இருக்குன்னு .. தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு ..
நித்திலா அவன் என்ன சொல்ல வருகின்றான் என பொறுமையாக கேட்கலாம்.
அவளே எதை எதையோ யோசித்து எல்லா முடிவுகளையும் எடுக்கின்றாள்.
வீட்டை விட்டு போவது, விக்ராந்தை விட்டு போவது எல்லாம் அவளது முடிவு சரி. ஆனால், லாவண்யாவை வீட்டில் இருக்க சொல்வது, கல்யாணம் செய்துவைக்க சொல்வது எல்லாம் கொஞ்சம் அதிகப்படி தான்.
கூடு விட்டு கூடு தாவியதைப்போல் நடந்துகொள்கின்றனர் இருவரும்.
விக்ராந்த் அமைதியாக வருவதை எதிர்கொண்டு செல்கின்றான். நித்திலா நினைத்தவற்றை யோசிக்காமல் செய்கின்றாள்.
பாட்டி எதற்காக சத்தியம் வாங்கி இருப்பார்.