Loading

அத்தியாயம் – 21

மருத்துவமனை அறையில் விக்ராந்த் தவிப்போடு அமர்ந்திருந்தான். “பேபி… எப்படி இந்த மாதிரி ஆனது?”  அவன் குரலில் அப்பட்டமான வலி தெரிந்தது.

​”அது வந்து… நான் தண்ணீ சூடு படுத்திட்டு இருந்த போது, தெரியாம அது கவிழ்ந்து கால்ல கொட்டிடுச்சு,” எனத் தலைகுனிந்து பொய் சொன்னாள். அத்தையின் மேல் பழி போட அவளுக்கு மனம் வரவில்லை.

​”இந்த வேலையெல்லாம் நீ எதுக்காக செய்ற நிலா? வீட்ல வேற பொம்பளைங்களே இல்லையா?” விக்ராந்த் வினவ,.. “என் வீட்டு வேலையை நானும் சேர்ந்து தான் பார்க்கணும்” என்றாள் மெல்ல..

“இதை மட்டும் நல்லா வெக்கனையா பேசு,”  என விக்ராந்த் அதட்டினாலும், அவளது காலைத் தன் மடியில் மென்மையாக ஏந்திக் கொண்டான்.

“வலிக்குதா பேபி?”  அவனது கண்களில் தெரிந்த அக்கறை நித்திலாவை நிலைகுலைய வைத்தது. தனக்கு ஒன்று என்றால் இவன் ஏன் இப்படித் துடித்துப் போகிறான்? அந்த ‘ஆறு மாத ஒப்பந்தம்’ ஒருபுறம் இருக்க, அவனது இந்த அதீத அன்பும் அக்கறையும் அவளை மேலும் குழப்பியது.

​மருத்துவர் அனுமதி கொடுத்ததும், விக்ராந்த் அவளை ஒரு குழந்தையைப் போலத் தூக்கிக் கொண்டு கார் வரை வந்தான். மருத்துவமனையில் இருந்தவர்கள் வேடிக்கைப் பார்க்க, நித்திலாவிற்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. “நானே வந்துப்பேன் அத்து” என அவள் முணுமுணுத்ததையும் அவன் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

​வீட்டில் அனைவரும் திடீரென்று காணாமல் போன இருவரையும் தேடிக்கொண்டிருந்த வேளையில், விக்ராந்த் அவளைச் சுமந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.

​”விக்கி! என்னாச்சுடா? எங்க போயிருந்தீங்க ரெண்டு பேரும்” லட்சுமணன் கேட்க,… “சொல்றேன்ப்பா,” என்றவன், நித்திலாவை மெல்ல சோஃபாவில் அமர வைத்தான்.

அப்போதுதான் அவளது காலில் இருந்த பெரிய கொப்புளங்களை அனைவரும் கண்டனர். சுமித்ராவும் ஊர்மிளாவும் பதறிப்போய் அவளைச் சூழ்ந்து கொண்டனர்.

“நித்தி என்னாச்சு, எப்படி இவ்வளவு பெரிய காயமாச்சு” சுமித்ரா பதட்டமாக கேட்க,… “அது அக்கா… டென்ஷன் ஆகாதீங்க, சின்ன காயம் தான்” என்றாள் நித்திலா….

“இது சின்ன காயமா நித்திலா,… எப்படி ஆச்சுமா,” என்றார் ஊர்மிளாவும்…

“அது வந்து அத்தை” என அவள் அவனிடம் சொல்ல அதே பொய்யை சொல்ல வர,… அந்த நேரம் ​விக்ராந்தின் கோபம் சுமித்ரா மற்றும் ஊர்மிளா பக்கம் திரும்பியது.

“ஏன் சித்தி,… இவளை எதுக்காக தனியாலாம் கிச்சன் பக்கம் அனுப்புறீங்க, சுடுதண்ணீ கால்ல கொட்டி இந்த நிலைமைக்கு வந்து நிக்கிறா, அண்ணி நீங்களாச்சும் அவ கூட இருந்திருக்கலாம்ல” என்றான் கடுகடுப்புடன்.

“இல்லைங்க, அவங்க” என நித்திலா பேச வர,… “நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு நிலா” அவனின் அதட்டலில் அரண்டு போய் வாயை மூடிக் கொண்டாள் அவள்….

“கிச்சன் வேலை எல்லாம் முடிஞ்சதுப்பா, சாயந்தரம் எல்லாரும் உட்கார்ந்து பேசிக்கிட்டு தான் இருந்தோம், அக்கா நித்திலா கிட்ட வெந்நீர் வச்சு கேட்டாங்க, அதுக்காக தான் அவ கிச்சன்குள்ள போனா, மத்தபடி அவளை ஒரு போதும் தனியா அனுமதிக்க மாட்டோம்” என்று ஊர்மிளா விளக்கம் கொடுத்தார்,….

​அவ்வளவுதான்! விக்ராந்தின் பார்வை தன் தாய் அன்னலட்சுமியின் பக்கம் திரும்பியது. “ஏம்மா… உங்களுக்கு ஏதாச்சும் வேணும்னா நீங்களே செஞ்சுக்க வேண்டியதுதானே? இல்லைன்னா சித்தி கிட்ட கேட்கலாம்ல? எதுக்காக நிலாகிட்ட இந்த வேலையெல்லாம் சொல்றீங்க?”  குரலில் அமைதி இருந்தாலும் அதில் ஒரு எச்சரிக்கை இருந்தது.

“என்னப்பா,… பொண்டாட்டி மேல ரொம்ப தான் பாசம் பொங்குது, அவ உன்னோட பொண்டாட்டி மட்டும் இல்ல, இந்த வீட்டு மருமகளும் கூட, அதனால அவளோட மருமக பொறுப்பை அவ ஏத்துகிட்டு தான் ஆகணும்,” என கறாராக கூறியவர் “அதோட அவ சின்ன குழந்தை இல்ல, செய்ற வேலையை பார்த்து பண்ணனும், ஒரு வெந்நீர் கூட வைக்க தெரியலன்னா என்ன அர்த்தம், அவ வீட்ல அவளை சரியா வளர்க்கலன்னு அர்த்தம், அது சரி அம்மா அப்பா இருந்து வளர்த்திருந்தா சரியா வளர்த்திருப்பாங்க, பாட்டி தாத்தா வளர்ப்புல வளர்ந்தவ தானே அதான் இப்படி இருக்கா” என பேசிக்கொண்டே போனவர்,… “போதும் நிறுத்துங்க அத்தை” நித்திலாவின் குரல் இடியென முழங்கியது. வலியிலும், வேதனையிலும் பொறுமை காத்தவள், தன் வளர்ப்பைப் பற்றிப் பேசியதும் விஸ்வரூபம் எடுத்தாள்…

​”என்னைப் பத்தி என்ன வேணும்னாலும் பேசுங்க, ஆனா என் வளர்ப்பு தப்புன்னு சொன்னீங்கன்னா அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்!”  வலியிலும் நித்திலாவின் குரல் உறுதியாகத் தெறித்தது.

​”என்னடி பண்ணுவ ஹாங்?” என அன்னம் திமிராகக் கேட்க, அந்த இடமே போர்க்களமாக மாறியது. “அன்னம்!” என மனைவியை அதட்டினார் லட்சுமணன்…

“என்னை ஏன் அதட்டுறீங்க, இங்க ஒருத்தி தன் மாமியார்னு கூட பார்க்காம எதிர்த்து எதிர்த்து பேசுறாளே, அவளை அடக்கணும்னு தோணல, என்கிட்ட வறீங்களாக்கும்” என்றார் கோபத்துடன்..

“நீ சரியா நடந்துகிறியான்னு பாரு முதல்ல, அவளே காயம் பட்டு போய் வந்திருக்கா, அவ கிட்ட போய் உன் திமிரை காட்டுற” என்றார் லட்சுமணன்,…

“சின்னக் காயம் தானே பட்டிருக்கு? ஏதோ உயிரே போயிட்ட மாதிரி…” என அவர் வஞ்சகமாக வார்த்தையை முடிக்கும் முன், லட்சுமணனின் கை அவர் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது!

​”வாயை அடக்கி பேசு, என்ன பேச்சு பேசிக்கிட்டு இருக்க, அவ உன் மருமக, உன் மகனோட மனைவி, இந்த வீட்டுக்கு நம்மள மட்டுமே நம்பி வாழ வந்தவ, அவளை போய் இப்படி பேசிக்கிட்டு இருக்க” ஆதங்கத்துடன் ஆரம்பித்தவர்,… “உன்னையெல்லாம் ஆரம்பத்திலேயே கண்டிச்சிருக்கணும், மூத்த மருமகளை தேள் கொட்டுற மாதிரி கொட்டுவியே அப்போவாவது கண்டிச்சிருக்கனும், இப்போ திருந்திடுவ அப்போ திருந்திடுவன்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்ல, அதான் இப்போ இளைய மருமக கிட்ட உன் திமிரை காட்டுற அளவுக்கு வந்து நிக்கிற, பெத்தா தான் புள்ளைங்க இல்ல, நம்மல நம்பி வந்த இவங்களும் நம்ம பிள்ளைங்க தான், இதை மனசுல நினைச்சிகிட்டு பழகிருந்தா உன்னால அவங்க ரெண்டு பேர் கிட்டயும் அப்படி நடந்திருக்க முடியாது” என்றார் துளிர் விட்ட கோபத்துடன்,….

“ரொம்ப தான் மருமகளுங்க மேல பாசம், மூத்தவளையாச்சும் நான் ஒரு கை சேர்த்துகிறேன், ஆனா இவ, இவ என்னையே அசிங்க படுத்துனவ, இந்த வீட்ல யாரும் என்னை எதிர்த்து ஒரு வார்த்தை பேசுனது கிடையாது, ஆனா இவ என்னை எதிர்த்து பேசுனது மட்டும் இல்லாம வீட்டை விட்டே வெளியே போக சொன்னவ, இவ மேல இருக்க கோவம் எப்போதும் தீராது” அவர் அடித்ததை கூட பொருட்படுத்தாமல் ஆவேசத்துடன் கூறினார்….

இத்தனை நேரம் அமைதியாக, ஒரு எரிமலையின் மௌனத்தோடு கேட்டுக்கொண்டிருந்த விக்ராந்த், மிக நிதானமாக… “அவ அப்படிப் பேசிட்டா… ஓகே. இப்போ நீங்க என்ன பண்ணுறதா இருக்கீங்க?”
​தன் மகனின் அந்த நிதானமானக் கேள்வியில் இருந்த ஆபத்தைப் புரியாமல், அன்னம் ஆவேசத்தில் கத்தினார், “இனி என்ன பண்ணப் போறேன்? என் கோவம் தீர அவ காலுல வெந்நீரை ஊத்திட்டேன்! இது போதும் எனக்கு!” ​சொல்லி முடித்த பிறகுதான், தான் என்ன பேசினோம் என்பது அவருக்கு உறைத்தது. தான் மறைக்க நினைத்த கொடூரமான உண்மை, தன் வாயாலேயே வெளிவந்ததை உணர்ந்து பதறினார்.

அன்னலட்சுமி மெல்லத் தலை நிமிர்ந்து விக்ராந்தைப் பார்த்தார். அங்கே அவர் கண்டது தன் மகனை அல்ல, ஒரு சீறும் சிங்கத்தை! விக்ராந்தின் கண்கள் ரத்த நிறத்தில் சிவந்திருந்தன. நரம்புகள் புடைக்க அவன் தன் தாயையே குரோதத்துடன் பார்த்த அந்தப் பார்வை, அன்னத்தைச் சில அடி பின்வாங்க வைத்தது.

​தன் மகனை இந்த நிலையில் இதற்கு முன் பார்த்திராத அன்னம், பயத்தில் உறைந்து போனார்.

அனைவருமே அன்னத்தின் சொல்லில் திகைத்து நின்றனர், நித்திலா தன்னால் இந்த குடும்பத்தில் பிரட்சனை உருவாகிவிட்டதே என்ற குற்றவுணர்வில் இருந்தாள்,…

அப்போது தான் தன் மகனை கவனித்தார் லட்சுமணன், அவன் விழிகளே சொல்லிவிட்டது அவனுக்குள்ளிருக்கும் கட்டுக்கடங்காத ஆத்திரத்தை

​தன் மகன் எங்கே அவன் தாயின் மீதே கை வைத்துவிடுவானோ என்ற அச்சத்தில், லட்சுமணன் விரைந்து சென்று அவன் தோளைப் பற்றிச் சாந்தப்படுத்தினார். விக்ராந்த் தன் கண்களை இறுக்க மூடி, தன் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தப் போராடிக்கொண்டிருந்தான்.

அன்னம் இடத்தில் வேற எவராவது இருந்திருந்தால் அங்கு நடந்திருப்பதே வேறு, அது யாருக்கு புரிந்ததோ இல்லையோ லட்சுமணனுக்கு நன்கு புரிந்து கொண்டார்….

சூழல் விபரீதமாவதை உணர்ந்த லட்சுமணன், தன் மனைவியின் கரம் பற்றி அங்கிருந்து இழுத்துச் சென்றார். விக்ராந்த் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் புயலென வெளியேறினான்.

​சுமித்ராவும் ஊர்மிளாவும் நித்திலாவைத் தாங்கிப் பிடித்து அறைக்கு அழைத்துச் சென்றனர். “அன்னம் இப்படி ஒரு காரியத்தைச் செய்தாளா?” எனத் தாளாத வேதனையில் மரகதப் பாட்டி அமர்ந்துவிட, சந்தானம் அவரைத் தேற்றினார்.

​வீட்டில் ஒரு நிசப்தமான புயல் வீசிக்கொண்டிருந்தது. நித்திலாவுக்கோ தன் கணவனுக்கும் அவனது தாய்க்கும் இடையே தான் ஒரு பிளவை ஏற்படுத்திவிட்டோமே என்ற குற்ற உணர்வு நெஞ்சை அடைத்தது.

வித்தார்த் அலுவலகத்திலிருந்து இன்னும் வீடு திரும்பவில்லை, இனியா அப்போது தான் தன் கல்லூரி முடிந்து தோழிகளுடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியிருந்தாள்,….

அதற்கு பிறகு வீடே அமைதியாக காணப்பட்டது, யாரும் தேவைக்கு அதிகமாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை, சுமித்ரா நித்திலாவிற்கு அறைக்கே சாப்பாடு கொடுத்துவிட்டு வந்தாள்,…

​விக்ராந்த் வெளியே சென்றுவிட்டு இரவு பத்து மணிக்கு மேல் தான் வீடு திரும்பினான். தந்தை மற்றும் பாட்டியின் வற்புறுத்தலால் பெயருக்கு உணவை உண்டுவிட்டு, பாரமான இதயத்துடன் தன் அறைக்குள் நுழைந்தான்.

​அங்கே நித்திலா, தன் காலில் இருந்த காயத்திற்குச் சிரமப்பட்டு மருந்து போட்டுக்கொண்டிருந்தாள். அதைக் கண்டதும் விக்ராந்தின் இதயம் துடித்தது. அவளிடமிருந்து மருந்தை வாங்கி, மிகவும் மிருதுவாக, ஒரு பூவைத் தொடுவது போல அந்த ஆயின்மென்டைத் தடவிவிட்டான்.

அவனது அந்தப் பொறுமையையும், அக்கறையையும் கண்ட நித்திலா, ‘இவன் இவ்வளவு மென்மையானவனா?’ என வியப்புடன் அவனைப் பார்த்தாள்.

​வந்ததிலிருந்து விக்ராந்த் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவனது முகத்தில் அப்பட்டமான சோர்வும் வேதனையும் தெரிந்தன. அமைதியைக் கலைக்க நித்திலா தான் முதலில் பேசினாள்.

​”எங்கே போயிருந்தீங்க அத்து?”  அவள் மெல்லக் கேட்க, “சும்மா வெளியே,” என ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டான்.

​”பார்க்கவே ரொம்ப டையர்டா இருக்கீங்க, ரெஸ்ட் எடுத்துக்கோங்க அத்து,” என அவள் சொல்லியும், அவன் மடியிலிருந்த அவளது காலை எடுக்கவுமில்லை அந்த இடத்தை விட்டு நகரவும் இல்லை.

அவனை ஒரு நாளும் அவள் இப்படி பார்த்ததில்லை, முகத்திலேயே அவனது வேதனை, வலி எல்லாம் தெரிந்தது, ‘தன்னுடைய இந்த சின்ன காயத்திற்காக இவ்வளவு தூரம் வருத்தப்படுறானா இவன்? இல்லன்னா வேறு எதுவும் காரணமா?’ அவன் முகத்தை பார்த்தவாரே யோசித்தவள் தயக்கத்துடன், “அத்து… காலை எடுத்துக்கட்டுமா?” எனக் கேட்க, அவன் “ம்ம்ம்” என முணங்கினான். அவள் காலை நகர்த்த முயல, அந்த கணம் காயம் உரசியதால் “அம்மா!” என அலறினாள்.

“பேபி,… என்னாச்சு” அவன் பதறிக்கொண்டு கேட்க,… “இல்ல… ஒன்னுமில்ல அத்து, காலை நகர்த்துனதுல எரிஞ்சது அதான்” என்றாள்

“எதுக்குடி இப்படி பண்ண, தேவை இல்லாம என் அம்மாவை எதுக்காக பகச்சிகிட்ட, வாயை மூடிக்கிட்டு இருந்திருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்குமா?” என அவளை அதட்டினான். அவளது பாதுகாப்பு குறித்த அவனது கவலை இப்படிச் சீற்றமாக வெளிப்பட்டது.

​நித்திலாவுக்கும் கோபம் பொங்கியது. “நடக்குற அநியாயத்தைப் பார்த்துட்டு இருக்க நான் ஒன்னும் உங்களைப் போலக் கல்நெஞ்சக்காரி கிடையாது! தப்புன்னு தோணுனதைக் கேட்டேன், இனியும் கேட்பேன்!” எனச் சளைக்காமல் பதில் சொன்னாள் நித்திலா…

​”என் அம்மாவைப் பத்தி உனக்குத் தெரியாது நிலா! அவங்க யாருக்கும் அடங்க மாட்டாங்க. நீ குடைச்சல் கொடுக்கக் கொடுக்க அவங்க உன்னை ஏதாவது செஞ்சு துன்புறுத்திக்கிட்டே தான் இருப்பாங்க. உன் நல்லதுக்குத் தான் சொல்றேன்,” என அவன் அவள் மீதான அக்கறையில் சொல்ல…

​நித்திலா ஒரு குரூரப் புன்னகையுடன் அவனை ஏறிட்டவள்,.. “பச்… ஏன் அத்து கவலைப்படுறீங்க? இதெல்லாம் இன்னும் வெறும் மூணு மாசத்துக்குத் தானே? அப்புறம் நான் இங்கிருந்து போயிடப் போறேன், அதுவரைக்கும் என்னால சமாளிக்க முடியாதா என்ன?” எப்போதும் அவன் அவளைத் துன்புறுத்தப் பயன்படுத்தும் அதே மூன்று மாத ஒப்பந்த வார்த்தைகளை, இன்று அவள் அவனிடமே வீசினாள். அந்த வார்த்தைகளைக் கேட்டதும் விக்ராந்தின் முகம் அப்படியே மாறிப்போனது. அதனை கண்ட நித்திலாவின் இதழில் ஒரு வெற்றிப் புன்னகை பூத்தது. ‘இத்தனை நாள் இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது எனக்கும் இப்படித்தானே வலித்திருக்கும்!’ என்பதை நினைத்து வந்த வெற்றி புன்னகை,…

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
12
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. என்ன விக்ராந்த் க்கு இவ்ளோ கோபம் வருது … அப்போ அவன் 6 மாதம் ஒப்பந்தம் போட்டது தப்பில்லையா .. விக்ராந்த் ஏன் இப்படி பண்றான் அப்படின்னு ஒரு டவுட் இருக்கு … பார்க்கலாம் நான் நினைச்சது சரியா அப்படின்னு …

  2. அன்பும் அக்கறையும் ஆறு மாச பொண்டாட்டிக்கு அளவுக்கு அதிகமாவே காட்டுகிறான்.

    நிதானமான நடவடிக்கையில் அவர் வாயாலேயே உண்மையை கூற செய்துவிட்டானே.

    அம்மாவை பற்றி தெரிந்து பாதுகாப்பாய் விலகி இருக்க கூறினால், அவனது சொற்களை அவனிற்கே திருப்பி கொடுத்துவிட்டாலே.

    என்ன விக்ராந்த் சார் முகம் மாறுது?