Loading

அத்தியாயம் – 20

நித்திலா அன்று தன்னை எதிர்த்துப் பேசியதை அன்னலட்சுமியால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. அவளை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர் வீட்டைச் சுற்றி வலம் வந்தார். “இளைய மருமகளே” என்று அழைத்துக் கொண்டிருந்தவர் இப்போது “ஏய் இங்க வா!” என்று அதிகாரத் தோரணையில் அழைக்கத் தொடங்கினார், வழக்கமாகச் சுமித்ராவை வேலை வாங்குபவர், இப்போது வேண்டுமென்றே நித்திலாவை அலைக்கழித்தார். “அதைப் பண்ணு, இதைக் கொண்டு வா” எனத் தன்னால் இயன்றவரை அவளை வேலை வாங்கினார். ஆனால்,நித்திலா எதற்கும் கலங்கவில்லை. இன்முகத்துடனேயே அனைத்தையும் செய்தாள். அவளுக்கு ஒரு நிம்மதி என்னவென்றால், அவளை வேலை வாங்கும் சாக்கில் சுமித்ராவை அவர் வசைபாடுவது குறைந்திருந்தது தான்,..

நித்திலாவிற்கு இதில் எந்தவித கஷ்டமும் இல்லையென்றாலும், சுமித்ராவிற்கு வேதனையாக இருந்தது, சுமித்ரா உள்ளுக்குள் புழுங்கினாள். “என்னால தான் நித்தி கஷ்டப்படுறா” என வித்தார்த்திடம் சொல்லி அழுது புலம்பினாள்…

அன்று மதியம் சமையல் வேலைகளை முடித்துவிட்டு நித்திலா, சுமித்ரா மற்றும் ஊர்மிளா மூவரும் மரகத பாட்டியைச் சுற்றி அமர்ந்துகொண்டு பேச்சை வளர்த்தனர்.

​”பாட்டி… தாத்தாவைப் பத்தி ஏதாச்சும் சொல்லுங்களேன்!” நித்திலா ஆர்வமாகக் கேட்க, மரகதத்தின் முகம் பூரிப்பில் மலர்ந்தது. “என் வீட்டுக்காரர் ரொம்ப சாதுவான மனுஷன் நித்திமா, உங்க மாமா லட்சுமணன் இருக்கான்ல அவர் அப்படியே அவனை தான் உருச்சு வச்சிருப்பாரு, குணத்திலேயும் சரி முக அமைப்பிலயும் சரி” மரகதம் சொல்ல, நித்திலாவிற்கு அன்று தன் தாத்தா கூட இவ்வாறு தானே கூறினார் என்பது நினைவுக்கு வந்தது,….

“பாட்டி,.. தாத்தாவுக்கும் உங்களுக்கும் லவ் மேரேஜா?” நித்திலா கண்சிமிட்டி கேட்க,…. “ஏய் நித்தி, அந்த காலத்துல லவ் மேரேஜ் லாம் பண்ண மாட்டாங்க, கண்டிப்பா அரேஞ்ச் மேரேஜ் தான், அப்படி தானே பாட்டி” என்றாள் சுமித்ரா….

“ஆமாடா,… இந்த காலத்து பசங்களை மாதிரிலாம் அப்போ நாங்க இல்ல, எங்க அம்மா அப்பா சொல் தான் வேதவாக்கு, எங்க ரெண்டு குடும்பமும் ஒன்னு சேர்ந்து தான் எங்களுக்கு மணமுடிச்சு வச்சாங்க,

அவர்கிட்ட பேசுன முதல் சந்திப்பிலேயே அவரோட கண்ணியத்தை பத்தி நல்லா புரிஞ்சிகிட்டேன், சத்தம் போட்டு கூட பேசாத மனுஷன்,” என்றார் பாட்டி பழைய நினைவுகளுடன்..

“பாட்டி அப்படின்னா தாத்தா உங்க கிட்ட கோவமாலாம் பேச மாட்டாங்களா, லைஃப் ஸ்மூத்தா போனா போரடிக்குமே” நித்திலா கிண்டலாக முகம் சுழித்து சொல்ல,…. ஊர்மிளா சிரித்துக் கொண்டே..  “நித்திலா,…. உனக்கு ஏமா இப்படிலாம் ஆசை” என்றார்..

“சும்மா தான் அத்த, சரி நீங்க சொல்லுங்க பாட்டி” நித்திலா ஊக்க,…

“கோவமெல்லாம் அவருக்கு வராது, ஆனா நான் நல்லா கோபப் படுவேன்” பாட்டி சொல்ல,… “அச்சோ பாவம் தாத்தா”என்றாள் நித்திலா,….

அதில் நகைத்த பாட்டி…..”ஆமாடா உங்க தாத்தா பாவம் தான், நான் ஏதாச்சும் தப்பு பண்ணா கூட என்னை அதட்டி கூட பேச மாட்டார், அவர் அப்படி இருக்கிறாரேனு எனக்கு கோவம் வரும், ஒரு தடவை என் மேல கோவ படனும் அப்டிங்கிறதுக்காகவே சண்டை பிடிச்சேன், ஆனா அவர்… ‘போமா மரகதம், உன்மேல எப்படிம்மா நான் கோவ படுவேன்’ அப்படின்னு சிரிச்சிட்டு போய்டுவார்” பாட்டி சொல்ல, நித்திலாவின் மனக்கண்ணில் சட்டென்று விக்ராந்த் வந்து நின்றான். ‘நான் எப்படிப் பேபி உன் மேல கோவப்படுவேன்?’ அவன் முன்பு ஒருமுறை சொன்ன அதே வார்த்தைகள் அவளது காதுகளில் ஒலிக்க, அவளது இதழ்கள் அவளையுமறியாமல் மெல்ல விரிந்தன…

​மறுகணமே, நேற்று காரில் அவன் காட்டிய அந்த ஆவேசமும், அவன் சொன்ன கதைகளும் நினைவில் வர விரிந்த இதழ்கள் சட்டென்று சுருங்கின. அவளது முகம் வாட, ஒரு பெருமூச்சை ரகசியமாக உள்ளிழுத்துக்கொண்டாள்.

“பாட்டி,.. தாத்தாவை நீங்க ரொம்பவே மிஸ் பண்ணுவீங்கள்ல” சுமித்ரா சோகமான முகத்துடன் வினவ,… “ஆமாம்மா, அவரோட இறப்பு நான் எதிர்பார்க்காத நேரத்துல நடந்தது, கல்யாணமான நாளையிலருந்து, அவர் என்னை பிரிஞ்சு போன அந்த இரவு வரைக்கும், தூங்கும் போது கூட என் கையை அவர் கையோட சேர்த்து வச்சிக்கிட்டு தான் தூங்குவாரு,” என்றார், அவர் கண்களும் சட்டென்று கலங்கி விட்டது,..

“மன்னிச்சிடுங்க பாட்டி,… நான் இதை கேட்டு உங்களை அழவச்சுட்டேன்” சுமித்ரா வருத்தம் கொள்ள,…”அதெல்லாம் இல்லடா,” என கண்களை துடைத்தக் கொண்டவர்,….”முதல்ல கஷ்டமா தான் இருந்தது, அப்புறம் என் பிள்ளைங்களுக்காக மனசை தேத்திக்கிட்ட்டேன், அதோட உங்க தாத்தா எங்கேயும் போயிடல, அவரும் இந்த வீட்டுல தான் இருக்காரு, என்ன ஒன்னு அவர் நம்ம கண்ணுக்கு தெரியல” அவ்ளோ தான்” என்றார்,…

பாட்டியின் வேதனையை மூன்று பெண்களாலும் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது, அவரின் எண்ணத்தை மாற்றும் பொருட்டாக, இன்னும் சில கதைகளை உள்ளே இழுத்து அவரின் எண்ணவோட்டத்தை மாற்ற முயற்சி செய்தனர் மூவரும்,….

அந்த நேரத்தில் தான் அங்கு வந்து சேர்ந்தார் அன்னலட்சுமி, மூன்று பெண்களும் பாட்டியுடன் சேர்த்து அரட்டை அடிப்பதை பார்த்து வயிறு எரிந்தது,… முக்கியமாக நித்திலாவின் சிரித்த முகத்தை பார்த்து பற்றிக்கொண்டு வந்தது,…

“ஏய்…. எனக்கு கொஞ்சம் வெந்நீர் வச்சு கொண்டு வா” நித்திலாவை பார்த்து அதட்டலுடன் சொன்னவர், ஒற்றை சோபாவில் வந்து ஒய்யாரமாய் அமர்ந்தார்,…

“சரிங்கத்தை” என்ற நித்திலா, சமையலறை நோக்கி சென்றாள்,…. அதற்கு மேல் சுமித்ராவும் அங்கு இருக்காமல் எழுந்து செல்ல முற்பட,… “ஏய் நில்லு” என அவளை நிற்க சொன்னார் அன்னம்,….

தயக்கத்துடன் சுமித்ரா அவரை நோக்க,… “என் துணியெல்லாம் மாடில காயுது, எல்லாத்தையும் எடுத்து, அழகா மடிச்சு என் கப்போர்ட்ல போய் வை” அவர் ஆணையிட,… “சரிங்கத்தை” என்ற தலையசைப்புடன்அவள் மாடிப்படி ஏறினாள்,…

“நான் ரூம்ல கொஞ்சநேரம் சாஞ்சிட்டு வரேன்” பொதுவாக சொல்லிவிட்டு மரகத பாட்டி தன்னறைக்கு சென்றுவிட்டார்,… ஊர்மிளாவும் அன்னத்துடன் இருந்தால் ஏதாவது வம்பிலுப்பார் என அவரும் தன் அறை நோக்கி நடந்துவிட்டார்….

அன்னம் மட்டும் முற்றத்தில் அமர்ந்திருக்க, அவருக்கு நித்திலாவை ஏதாவது செய்ய வேண்டும் என்ற வன்மம் பெருகியது தன்னை எதிர்த்து பேசிய அவளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று மனமெல்லாம் பரபரத்தது,

‘மருமகள் மாமியாரை எதிர்த்துப் பேசினால் என்ன நடக்கும் என்று இவளுக்குப் புரிய வைக்கணும்’ என்ற வஞ்சனையுடன் சமையலறைக்குள் நுழைந்தார்.

​அங்கு நித்திலா, கொதிக்கும் வெந்நீரை டம்ளரில் ஊற்றிவிட்டுத் திரும்பியவள் அன்னத்தை அங்கு எதிர்பார்க்காததால் திடுக்கிட்டு போனாள்,.. “நீங்களா அத்தை? பயந்துட்டேன்,” என்றவாறு வெந்நீரை அவரிடம் நீட்டினாள்.

​”சூடு எந்த அளவு வச்சிருக்க?”  அன்னம் ரகசியத் திட்டத்துடன் கேட்க, “ரொம்பவே சூடாயிருக்கு அத்தை, நீங்க புக் படிச்சிக்கிட்டு மெதுவா தானே குடிப்பீங்க, அதான் எப்போதும் போல சூடாவே வச்சிருக்கேன்” என்றாள் நித்திலா எதையும் அறியாமல்…

​”நல்லது!” என்ற அன்னம், டம்ளரை வாங்கிய அடுத்த நொடி சேலையைத் தாண்டிச் சற்று வெளியே தெரிந்த நித்திலாவின் காலில், அந்தத் தகிக்கும் வெந்நீரை இரக்கமே இல்லாமல் ஊற்றினார்

நித்திலா துடித்து போய் விட்டாள், அவளது கால் சிவந்து அதிகமாக எரிந்தது, வலி பொறுக்க முடியாமல் கண்ணீர் வெளியேறியது,….

“என்னை எதிர்த்து பேசுனல்ல, அதுக்கு நான் கொடுக்கிற சின்ன தண்டனை தான் இது,” என குரூரமாக கூறிவிட்டு நகர்ந்து விட்டார் அன்னம்,….

நித்திலா காலைப் பிடித்துக்கொண்டு அந்தச் சமையலறைத் தரையிலேயே சுருண்டு விழுந்தாள். வலியால் அவளுக்குக் கத்தக் கூடத் தோன்றவில்லை. யாரையும் உதவிக்குக் கூப்பிடவும் அவளது நா எழவில்லை. தேவையில்லாமல் குடும்பத்திற்குள் பிரட்சனை வந்துவிடுமோ என்ற பயத்தில், அவள் மௌனமாகத் தரையில் அமர்ந்து அழுதாள்.

​மெல்ல எழுந்து நடக்க முயன்றபோது, காலில் ஏற்கனவே பெரிய கொப்புளங்கள் எழத் தொடங்கியிருந்தன. எரியும் காலை தூக்கி கொண்டு நடக்க முடியும் என்று தோன்றவில்லை, சற்று நேரத்திற்கு பிறகு வலி குறைந்ததும் போய் விடலாம் என்று காயத்தின் மீது ஊதிவிட்டபடியே அமர்ந்திருந்தாள், ஆனால் நேரம் கடக்க கடக்க அதிகமாக எரிந்ததே தவிர குறையவில்லை, அவளுக்கு என்ன செய்வதென்றும் தெரியாமல் அழுதுக்கொண்டிருந்த நேரம், விக்ராந்த் வீட்டினுள் நுழைந்தான்,….

வீடே அமைதியாக காணப்பட, அதனை கண்டுக்கொள்ளாமல் அவன் அறை நோக்கி நடந்தான்,… தான் வந்ததும் தன் முன்னே வந்து நிற்கும் நித்திலாவை, அன்று காணாததினால் அவளை தேடினான்,… வரும் போது அவள் கீழேயும் இருக்கவில்லை, அறையிலும் இல்லையென்றால் வேறெங்கு போயிருப்பாள் என்று அவனுக்கு தெரியும், ஒன்று சுமித்ராவின் அறையில் இருப்பாள் இல்லையென்றால் மொட்டை மாடியில் இருப்பாள்,……

தன் அலுவலக உடையை கூட மாற்றாமல் முதலில் மொட்டை மாடிக்கு தான் சென்றான், அங்கு சுமித்ரா அன்னத்தின் துணிகளை எடுத்து மடித்துக் கொண்டிருந்தாள், அவன் பார்த்தவரைக்கும் நித்திலா அங்கு இல்லை, சுமித்ராவிடமே கேட்டுவிட்டான்….”நிலா எங்கே அண்ணி” என்று,…

“நித்தி கீழே தான் இருந்தா, என்னாச்சு விக்ராந்த்” என்றாள் சுமித்ரா,…

“இல்ல… கீழேயும் இல்ல, ரூம்லையும் இல்ல, அதான்” என யோசனையுடன் இழுத்தான் விக்ராந்த்,…

“இல்லையே,… நித்தி கீழே தானே இருந்தா, நான் மாடிக்கு வரும் போது அத்தைக்கு வெந்நீர் வைக்கிறதுக்காக போனா, நீங்க கிச்சன்ல பார்த்தீங்களா” சுமித்ரா கேட்க,… “இல்ல… நான் பார்க்கிறேன்” என அவன் நித்திலாவை காண சென்றான்….

சுமித்ரா சொன்னது போல, அவன் சமையலறை நோக்கி தான் வந்தான், சமையலறைக்குள் நுழைந்த விக்ராந்தின் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. நித்திலா தரையில் அசைவற்றுச் சரிந்து கிடந்தாள். “பேபி!” என அலறியபடி  அவளருகில் சென்று மடியில் ஏந்தினான்.

​”பேபி… என்னாச்சு உனக்கு?” – அவன் அவள் கன்னங்களைத் தட்டி எழுப்ப, அரை மயக்கத்தில் இருந்த நித்திலா, “அத்து…” எனத் திக்கித் திணறியபடி விம்மினாள்.

“பேபி,… நிலா… என்னாச்சுடா” அவன் தவிப்புடன் கேட்க,… “அ.. அத்து… கால் ரொம்ப எரியுது,” என அவள் சொல்லிய பிறகுதான், விக்ராந்தின் பார்வை அவளது காலில் இருந்த அந்தப் பயங்கரமான காயத்தின் மீது விழுந்தது

“நிலா… என்னடி இது, எப்படியாச்சு,” என்று கேட்டவன், பேச கூட முடியாத நிலையில் இருந்த தன்னவளை அப்படியே கைகளில் அள்ளிக்கொண்டு காரை நோக்கி ஓடினான். காற்றை விட வேகமாகக் காரைச் செலுத்தி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றான்.

நித்திலாவைச் சிகிச்சை அறைக்குள் அழைத்துச் சென்றதும், விக்ராந்த் அங்கும் இங்கும் பித்துப்பிடித்தவன் போல அலைந்தான். மருத்துவர் சிகிச்சை முடித்து வெளியே வந்ததும், பாய்ந்து அவரரருகில் சென்றவன் மூச்சு விடாமல் கேள்விகளை அடுக்கினான்.

“டாக்டர்… அவளுக்கு ஒன்னும் இல்லையே? ஏன் மயக்கம் வந்தது? வலி அதிகமா இருக்குமா? காயம் எப்படி டாக்டர் ஏற்பட்டது? மறுபடியும் அவளுக்கு எரியுமா?”
​விக்ராந்தின் தவிப்பைக் கண்ட மருத்துவர், “ரிலாக்ஸ் மிஸ்டர் விக்ராந்த்! உங்க வொய்ஃப்க்கு ஒன்னும் இல்லை. ஹாட் வாட்டர் பட்டதால காயம் ஏற்பட்டிருக்கு. டூ டேஸ்க்கு எரிச்சல் இருக்கத்தான் செய்யும், நான் கொடுத்த ஆயின்மெண்ட் போட்டா சரியாகிடும். அவங்க இப்போ கண் முழிச்சுட்டாங்க, நீங்க பார்க்கலாம்,” என்றார்.

நொடியும் தாமதிக்காமல் அவன் நித்திலா இருக்கும் அறைக்குள் நுழைந்தான்,…. சாய்ந்த நிலையில் அவளமர்ந்திருந்த தோற்றமே அவளின் நிலையை பறைசாற்ற, தவித்து போனான் விக்ராந்த்,…

​”பேபி!” என ஓடிச் சென்று அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான். அந்த அணைப்பில் அவனது பயம், வேதனை என அனைத்தும் கலந்திருந்தது. நித்திலாவின் கண்ணீர் அவன் சட்டையை நனைக்க, விக்ராந்த் அவளது தலையை வருடி மென்மையாக முத்தமிட்டான். அவளுக்கு ஏற்பட்ட இந்தக் காயத்திற்கு யார் காரணம் என்பதை அறிய அவன் துடித்தாலும், இப்போது அவளது வலியே அவனுக்குப் பெரிய வலியாக இருந்தது.

​நித்திலாவின் காலில் வெந்நீரை ஊற்றியது தன் தாய் தான் என்பது விக்ராந்திற்குத் தெரிய வரும்போது அவனது எதிர்வினை என்னவாக இருக்கும்?

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
15
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. விக்ராந்த் என்ன பண்ணுவான் அவங்க அம்மா வை??

  2. தாத்தாவை போலவே பேரனும் அன்பை வாரி வழங்குகிறான் போல. இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பும் கணவன் மீதான காதலை சொல்லும் பொழுது எழும் பூரிப்பு அவர்களது அன்பான வாழ்க்கையை எடுத்துக்காட்டுவதாக.

    விக்ராந்த் ஆறு மாச பொண்டாட்டிக்கு கால்ல வெண்ணி தண்ணி கொட்டவும் இப்படி துடிச்சு போற!

    இந்த துடிப்பும் பதற்றமும் ஆறு மாச பொண்டாடிக்கானதுனு நீ சொல்றத தான் ஒத்துக்க முடியல.

    இவர் தான் அம்மா பையன் ஆச்சே! அதுவும் ஆறுமாத பொண்டாடிக்காக அப்படி என்ன தண்டனை தந்திடுவாறு அம்மாவிற்கு?