Loading

அத்தியாயம் – 15

நாட்கள் கடந்து மாதங்களாய் கனிந்தது, விக்ராந்த் மற்றும் நித்திலாவின் வாழ்க்கை எந்த கலங்கலுமின்றி தூய்மையான நீரோட்டம் போல் அவர்களே எதிர்பாராத விதமாக மகிழ்ச்சியுடன் நகர்ந்தது, விக்ராந்த் அந்த ஆறுமாதம் என்ற பேச்சை எடுக்காமல் இருந்ததினாலோ என்னவோ நித்திலாவும் சிறு கஷ்டமேனும் இல்லாமல் சந்தோஷத்தில் திளைத்தாள்.

விக்ராந்த் அவளை நொடிக்கு ஒரு முறை ‘பேபி பேபி’ என்ற அழைப்பிலேயே கட்டி இழுக்க, உனக்கு நான் சளைத்தவள் இல்லை என்று அவளும்… நிமிடத்திற்கு ஒரு முறையேனும் ‘அத்து, அத்து, அத்து’ என்ற அழைப்பிலேயே அவனை வாட்டி எடுத்துக் கொண்டிருந்தாள்,.. முதலில் ‘அப்படி என்னை கூப்பிடாதே பேபி’ என்று சொல்லி சொல்லி பார்த்தவன், அவள் கேட்காத காரணத்தினால் சலித்து போய் அவனும் அவளது இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவும் பழகிக் கொண்டான்,…

அன்று விக்ராந்திற்க்கு அலுவலகத்திற்கு வேண்டிய பணிவடைகளை செய்து கொண்டிருந்த நித்திலா, தான் பல நாட்களாய் கேட்க நினைத்த கேள்வியை அன்று விக்ராந்திடம் கேட்டாள்,….

“உங்களுக்கு கல்யாணம் செஞ்சிக்கிறதுல விருப்பம் இல்லன்னு லட்சுப்பா சொன்னாருல அத்து, என்ன ரீசன்காக நீங்க அவர் கிட்ட மேரேஜ் வேணாம்னு சொன்னீங்க” நித்திலா கேட்க,…. ​தன் சட்டைக் கை பட்டனை மாட்டிக் கொண்டிருந்த விக்ராந்த், நிதானமாக அவளை நிமிர்ந்து பார்த்து,.. “கண்டிப்பா தெரிஞ்சிக்கணுமா பேபி” என்றான்
குரலில் எந்தச் சலனமும் இன்றி.

அவள் அமைதியாய் இருக்கவே,.. “நான் ஒரு பொண்ணை லவ் பண்ணேன், அவளை கட்டிக்கணும்னு ஆசை பட்டேன், அவளும் தான், பட் அவ ஃபாரிங்ல இருக்கா, ஊருக்கு வர மாதங்கள் ஆகும், அப்பாகிட்ட இதை சொல்ல முடியாதுல, சிக்ஸ் மந்த்ஸ் டைம் கேட்டேன், ஆனா அவர் அதை புரிஞ்சிக்காம வாக்குவாதம் தான் பண்ணாரு”

அவன் பேசப்பேச நித்திலாவின் இதயம் ஒரு நிமிடம் துடிக்க மறந்தது.

“அவரை என்னால சமாளிக்க முடியலன்னு தான் பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு உன்கிட்ட கல்யாணத்தை நிறுத்தும்படி சொன்னேன், ஆனா நீயும் என் அப்பா சொன்னாரு ஆட்டுக்குட்டி சொன்னாருன்னு என் அனுமதி இல்லாமலேயே  என் வாழ்க்கைக்குள்ள வந்த, ஆனா என்னால இதை எப்படி ஏத்துக்க முடியும், அதனால தான் ஆறு மாசம் கழிச்சு அவ வந்ததும், அவளை ஏத்துக்க வசதியா உன்கிட்ட டிவோர்ஸ் பேப்பர்ல சைன் வாங்கினேன்,” என அவள் தலையில் ஒரு பெரிய இடியைத் தூக்கிப் போட்டான் விக்ராந்த்.

​அவள் சாதாரணமாகக் கேட்ட கேள்விக்கு, இப்படியொரு பயங்கரமான காரணம் பின்னணியில் இருக்கும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. அவன் ஒப்பந்தம் போட்டது தெரிந்ததே தவிர, அவன் மனதில் வேறொரு பெண் இருப்பாள் என்பதை அவளால் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை…

இதனை கேட்ட காதல் கொண்ட அவளின் மனது இதனை ஏற்றுக் கொள்ள மறுத்தது,.. ‘நீ எனக்கு மட்டும் தான், நீ எனக்கு மட்டுமே சொந்தமானவன்’ என்று அவன் சட்டையைப் பிடித்துக் கத்த வேண்டும் போல ஆவேசம் வந்தது. ஆனால், அவள் எந்த உரிமையில் அதைக் கேட்க முடியும்? முதலிலேயே அவன் ‘நீ எனக்கு நிரந்தரம் இல்லை’ என்று தெளிவாகச் சொல்லிவிட்டானே!

அவளது மனப் போராட்டத்தைப் புரிந்து கொள்ளாத விக்ராந்த், வழக்கம் போலத் தன் வேலையைப் பார்க்கக் கிளம்பிச் சென்றான். அவன் சென்ற சில நிமிடங்களிலேயே நித்திலாவின் அணை உடைந்தது. அந்தத் தனிமையில் அவள் விம்மி வெடித்து அழுதாள். காதல் கொண்ட அவள் மனது, அவன் வேறொருவளுக்குச் சொந்தமாகப் போவதை ஏற்க மறுத்தது.

எத்தனை நேரம் அழுதிருப்பாளோ அது அவளுக்கே வெளிச்சம், யாராவது வந்து விடக் கூடும் என தன் வேதனையை மனதிற்குள்ளேயே புதைத்துக்கொண்டு வெளியே வந்தவளின் முகத்தில்  வாட்டத்தை கண்ட சுமித்ரா,.. ​”என்ன நித்தி… முகம் ஒரு மாதிரியா இருக்கு? என்ன ஆச்சு?” எனச்  அக்கறையுடன் விசாரிக்க, அவளிடம் தன் வேதனையை சொல்லி அழுகவா முடியும், எதுவும் இல்லை என்று சாதித்து விட்டாள்,….

​பொழுது சாய்ந்து இரவு நேரமும் வந்தது. விக்ராந்த் மெல்ல நித்திலாவை நெருங்க, பல நாட்களுக்குப் பிறகு அவனைத் தள்ளிவிட்டாள் நித்திலா. “நீங்க பண்ண வரைக்கும் போதும், இதோட இதை நிறுத்திக்கலாம்!” என்றாள் ஆவேசத்துடன்.

​”நல்லா தானே பேபி போயிட்டு இருந்தது, இன்னைக்கு என்னாச்சு உனக்கு?”  அவன் புரியாமல் கேட்க, “உங்க மனசுல தான் வேற ஒரு பொண்ணு இருக்கால்ல? அப்புறம் எப்படி உங்களால என்னைத் தொட முடியுது?” எனத் தன் அடக்கி வைத்த கோபத்தைக் கொட்டினாள்.

​விக்ராந்த் அவளது பேச்சைப் பொருட்படுத்தவில்லை. “பேபி… நான் ஆல்ரெடி சொன்னது தான், நீ என் உரிமை! என் உரிமையை என்கிட்டருந்து யாராலயும் பறிக்க முடியாது,” என்றவன், அவளது திமிறல்களைத் தன் அணைப்பால் அடக்கினான். ஒரு கட்டத்திற்கு மேல் விக்ராந்தின் தீண்டல்கலை தடுக்க முடியாமல் நித்திலாவுமே கட்டுப்பட்டுப் போனாள்.

​ அதற்கு பிறகு வந்த நாட்களில் எல்லாம், நித்திலா அவன் தீண்டல்களை புறக்கணிக்க வில்லை, அவன் ஒரு பெண்ணை நேசித்திருப்பான் என்பதை அவளால் நம்ப முடியவில்லை, அது உண்மையோ பொய்யோ நடக்கிறது நடக்கட்டும் என்ற ரீதியில் அவனுடன் தன் வாழ்க்கையை சந்தோஷமாக தான் வாழ்ந்தாள்,… அவளுக்கு வேறு வழி இல்லை என்பது ஒரு பக்கம், அவனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது, அவனை மனதார நேசிக்க ஆரம்பித்திருந்தாள் முக்கியமாக இந்த காரணத்திற்காகவே அவன் செயலுக்கு கட்டுப்பட்டு அவனுக்கு அடிமையாகி போனாள்…

​விக்ராந்த் ஒரு வெளிநாட்டுத் திட்டப் பணியில் மும்முரமாக இருந்ததால், இப்போதெல்லாம் வீட்டிற்கு வர நள்ளிரவு ஒரு மணியாகிவிடும். அவன் எவ்வளவு தான் தாமதமாக வந்தாலும், நித்திலா அவனுக்காகக் காத்திருந்து உணவு பரிமாறிய பின்னரே உண்பாள். அவன் சோர்வாக வந்தாலும், ‘உரிமை’ என்ற பெயரில் அவளிடம் தஞ்சம் அடைந்த பிறகே உறங்குவான்.

​அன்று விக்ராந்த் போனில் அழைத்து, “இன்னைக்கு நைட்டு வீட்டுக்கு வர முடியாது பேபி, நீ சாப்பிட்டுத் தூங்கு,” எனக் கூறிவிட, ஆனால் அவளுக்கு தான் அவனது அரவணைப்பு இல்லாமல் தூக்கம் வரவில்லை. அந்தச் சிறிய பிரிவே அவளை வாட்டியது.

​இரண்டு மணி வரை உறக்கம் வராமல் புரண்டு படுத்தவள், இறுதியில் விக்ராந்தின் சட்டை ஒன்றை எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டாள். அந்தச் சட்டையில் வீசிய அவனது வாசனை அவளுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத் தர, மெல்ல உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

காலையில் கண்விழித்த நித்திலா, விக்ராந்த் அவளை அணைத்துப் படுத்திருப்பதைப் கண்டு அவள் இதழ்கள் விரிந்தன. அதிகாலை ஐந்து மணிக்கே வந்தவன், அவளது தூக்கத்தைக் கெடுக்காமல் அவளோடு இணைந்துகொண்டான். நேரம் ஆவதைக் கண்டு அவள் மெல்ல எழுந்து தயாராகி வந்தாள்.

அவள் தயாராகிவிட்டு வெளியே வந்த நேரம், விக்ராந்த் தன் மடிக்கணினியுடன் அமர்ந்திருந்தான்,…

“எழுந்துட்டீங்களா,… எப்போ வந்தீங்க” நித்திலா கேட்க,….”அஞ்சு மணிக்கு வந்தேன் பேபி” என்றவன்,… மடிகணினியை வைத்து விட்டு டவலுடன் குளியலறை நோக்கி நடந்தான்….

“அதுக்குள்ள எழுந்துடீங்களா, லேட்டா தானே வந்தீங்க, இன்னும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கலாமே” அவள் அக்கறையாக சொல்ல,…”இல்ல பேபி, முக்கியமான பிராஜக்ட், நான் பிளான் பண்ண மாதிரி இன்னையோட அதை முடிக்கனும், இன்னைக்கு நைட்டும் வீட்டுக்கு வரது கஷ்டம் தான் பேபி” என சொல்லிவிட்டு குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டான்,….

நித்திலாவிற்கு தான், இன்றும் அவனை பிரிந்து இருக்க வேண்டுமா என மனம் தவித்து போனது, அவனுக்கு செய்ய வேண்டிய பணிவடைகளை செய்து, அவனை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விட்டு, சுமித்ராவுடன் சேர்ந்துக் கொண்டாள்,….

“என் தங்கச்சியோட முகம் ரெண்டு நாளாவே வாடி போய் இருக்கு, அதற்கு காரணம் என்னவோ” சுமித்ராவிற்கு அதற்கான காரணம் தெரிந்தாலும், அவளை சீண்டுவதற்காகவே கேட்டாள்,…

“ம்ம்ம்… எல்லாம் உங்க கொழுந்தன் தான் காரணம்,… நைட் வீட்டுக்கு கூட வராத அளவுக்கு அப்படி என்ன வேலையாம்” முக வாட்டத்துடன் கேட்டாள் நித்திலா…

அவளை கண்டு சிரித்தவள், “ஒரு நைட் கூட என் தங்கச்சிக்கு அவ புருஷன் இல்லாம இருக்க முடியல” என்று கலாய்த்தவள்,….”விக்ராந்த் ஒன்னு நினைச்சிட்டா அதை முடிச்சிட்டு தான் மறு வேலை பார்ப்பாரு, இது என் வீட்டுக்காரர் சொன்னது, இதுக்கு முன்னாடி கூட பல தடவை இது நடந்திருக்கு, எதாச்சும் முக்கியமான வேலை வந்தா இரவு பகல் பார்க்காம அண்ணனும் தம்பியும் தங்களோட வேலையில தான் கண்ணா இருப்பாங்களாம், என் வீட்டுக்காரர்க்க்கு கல்யாணம் ஆனதுலருந்து, இந்த மாதிரி ஏதாச்சும் முக்கியமான வேலை வந்ததுன்னா அவர் அண்ணனை நைட் டியூட்டிக்கு வர வேணாம்னு சொல்லிட்டு அவரே பார்த்துப்பாரு, தன் தம்பி கிட்ட சொல்லி போராட முடியாதுன்னு என் வீட்டுக்காரரும் அமைதியாகிடுவாரு…

இப்போ அதே மாதிரியே ஒரு பிராஜக்ட் வந்திருக்கு, டே டைம்ல விக்ராந்த்துக்கு உதவியா என் வீட்டுக்காரர் இருந்தாலும், நைட்ல நீ இருக்க வேண்டாம்னு கட்டாயப்படுத்தி அனுப்பி வச்சிடுறாராம், நேத்து சொல்லி புலம்பிக்கிட்டு இருந்தாரு,” என்றாள் சுமித்ரா….

“வித்தார்த் மாமாவும் அவர் கூட இருந்தா அவருக்கும் வேலை கொஞ்சம் குறையும்ல, ஏன் இவர் இப்படி பண்ணுறாரு” நித்திலா கேட்க,…. “எல்லாம் அண்ணன் மேல உள்ள பாசம் தான், சில மாசத்துக்கு முன்னாடி என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு, சில நேரம் என் வீட்டுக்காரக்கு நைட் தூக்கம் இல்லாட்டா ஒத்துக்காது இது தான் முக்கியமான ரீசன்,” என்றாள்,…

​சுமித்ரா சொன்னதைக் கேட்டதும் நித்திலாவிற்கு விக்ராந்தின் மீதிருந்த காதல் இன்னும் பல மடங்கு அதிகரித்தது. தன் உடன்பிறந்தவன் நலனுக்காகத் தன் தூக்கத்தையும் சுகத்தையும் தியாகம் செய்யும் அவனது உயர்ந்த குணத்தை எண்ணும்போது, அவனது பிடிவாதங்களும் ஆதிக்கமும் அவளுக்கு அழகாகத் தெரிந்தன. அவனது ‘அத்து’வின் மீதான மரியாதையும் அன்பும் அவளது இதயத்தை நிறைத்தது.

விக்ராந்த் சொல்லிவிட்டு போனது போல் அன்று இரவு அவன் வரவே இல்லை, நேற்று இரவு போலவே அவன் என நினைத்து, அவனது சட்டையை தன் மார்போடு அணைத்துக்கொண்டு தூங்கிப் போனாள் நித்திலா, உறங்கும் போது அவன் இல்லாமல் உறங்கினாலும், அவள் உறக்கத்திலிருந்து விடுபடும் போது அவனது அணைப்பில் தான்  இருந்தாள்……

“பேபி ஐம் ஸாரி, டூ டேஸ் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன்” அவளது அசைவை வைத்து அவள் விழித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை பாதி தூக்கத்திலேயே புரிந்து கொண்ட விக்ராந்த், தூக்க கலக்க குரலுடன் சொன்னான்,…

அவனது அந்தக் கள்ளமில்லாத மன்னிப்பில் நித்திலாவின் இதழ்கள் தானாக விரிந்தன. “உஷ்… தூங்குங்க அத்து,” என மென்மையாகச் சொன்னவள், அவனது கேசத்தை விரல்களால் வருடிவிட, அந்த அரவணைப்பில் விக்ராந்த் ஆழ்ந்த உறக்கத்தைத் தழுவினான்.

அன்று விடுமுறை நாள் என்பதால் ஆண்கள் அனைவரும் வீட்டில் தான் இருந்தனர்,…. அனைவரும் டைனிங்கில் கூடியிருக்க விக்ராந்த் மட்டும் அங்கு குறையாக இருந்தான்…

“நித்திலாம்மா…. விக்கி இன்னும் தூங்கிட்டு தான் இருக்கானா” லட்சுமணன் தன் மருமகளிடம் வினவ…. “ஆமாப்பா,… ஆறுமணிக்கு தான் வந்தாரு போல, அதான் அசந்து தூங்கிட்டு இருக்காரு” என்றாள் நித்திலா….

“தூங்கட்டும் தூங்கட்டும்,…ரெண்டு நாள் தூக்கம் இல்லாம நினைச்சதை முடிச்சிட்டான்ல, இனியாவது ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றார் லட்சுமணன்….

வீட்டில் பெண்கள் வீட்டு வேலையை பார்த்துக் கொண்டிருக்க,… ஆண்கள் முற்றத்தில் அமர்ந்து பிசினஸ், நாட்டுநடப்பு என்று பல பேச்சுகளில் ஈடுபட்டிருந்தனர், அவர்களுடன் மரகதமும் அன்னமும் இருந்தனர்,…

​மணி பத்தை நெருங்கியபோது விக்ராந்த் அறையை விட்டு வெளியே வந்தான். முகத்தில் இன்னமும் சோர்வின் நிழல் ஆடிக்கொண்டிருந்தது.

​”இன்னும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானேப்பா?” – அன்னம் தன் மகனிடம் அக்கறையுடன் கேட்க, “இப்போ பரவாயில்லைமா. வேலை முடிஞ்சிருச்சுல, இனி ஃபுல் ரெஸ்ட் தான்!” என்றான் விக்ராந்த்.

​”ஏய் இளைய மருமகளே! உன் புருஷனுக்குச் சாப்பாடு எடுத்து வை,” என அன்னம் ஆணை பிறப்பிக்க, நித்திலா விரைந்து சென்று பரிமாறினாள்.

​விக்ராந்த் சாப்பிடத் தொடங்கியவன், “நீயும் உட்காரு பேபி… ஒன்னா சாப்பிடலாம்,” என்றான்.

“இல்ல வேணாம்,” என நித்திலா மறுக்க, விக்ராந்தின் குரல் சட்டென்று அழுத்தம் பெற்றது. “நீ எப்படியும் சாப்பிட்டிருக்க மாட்டேன்னு எனக்குத் தெரியும்… உட்காரு!”

​அப்போது அங்கே தண்ணீர் வைக்க வந்த சுமித்ரா கிண்டலாகச் “அதான் விக்ராந்தே சொல்றார்ல நித்தி? உன் புருஷன் சாப்பிடாம நீயும் சாப்பிட மாட்டேன்னு பிடிவாதமா இருந்த… இப்போ என்ன தயக்கம்? உட்கார்ந்து சாப்பிடு!”
​சுமித்ராவின் பேச்சைக் கேட்டதும் நித்திலாவிற்கு முகம் சிவந்தது.

விக்ராந்தின் பிடிவாதத்திற்கு மேலே அவளால் மறுக்க முடியவில்லை. அவன் அருகில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினாள். சுமித்ரா அங்கிருந்து நகர்ந்ததும், யாருக்கும் தெரியாமல் டைனிங் டேபிளுக்கு அடியில் அவன் செய்த சில பல சில்மிஷங்கள் நித்திலாவின் முகத்தை மேலும் செவ்வானமாக மாற்றியது. அந்தச் சில்மிஷங்களுடன் கலந்த காலை உணவு, அவளது வயிற்றையும் மனதையும் ஒருசேர நிரப்பியது.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
15
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. இதான் காரணமா இருக்கும்னு தோணுச்சு … விக்ராந்த் நித்திலா வச்சு டிரெயிலர் பார்க்குற … பிரிஞ்ச பிறகு நிறைய கஷ்டப்பட போறது நித்திலா தான் போல …

  2. விக்ராந்த் சொல்லும் கதை நல்லா தான் இருக்கு ஆனால் எந்த அளவு உண்மை என்று தான் தெரியல.

    உன் காதலி திரும்பி வரும் போது மனைவியின் இடம் காலியா இருக்கணும்னு அக்ரிமெண்ட் போட்டியா பா விக்ராந்த்?

    தான் நினைத்தது நடக்க வேண்டும் என்ற பிடிவாதம். தன்னை மீறி எதுவும் நடக்க கூடாது என்ற அதிகாரம் எல்லாம் இருந்தாலும் குடும்ப உறுப்பினர்கள் மீது அக்கறையுடனும் அன்புடனும் நடந்து கொள்கின்றான்.

    விக்ராந்த் மீது அளவில்லாத காதலை விதைத்து விட்டால் நித்திலா.

    இவன் வீம்பிற்கென்று ஏதாவது விபரீதமாக செயல்படும் நேரம் காயப்பட்டு போவாள்.